21 February, 2010

Rising from the ashes… சாம்பலிலிருந்து மீண்டும்...














We have begun the Lenten Season. When I was browsing through the internet to figure out my message for Lent, I came across the idea that the word Lent comes from the Anglo Saxon word ‘Lencten’ which means Spring. Spring and Lenten Season… seemed like a good combination.
Usually, when we think of Lent, the symbols of ash and sackcloth dominate our imagination. The ideas of fasting and penance with a tinge of guilt feelings creep in. For a change, it might be better to think of this Lenten Season in terms of Spring, Phoenix and Ash.
Spring: I have experienced something like a winter for the first time in my life in Rome. Winter in Rome pales in comparison to winter elsewhere in Europe or the U.S. Still, for me coming from South India, this was a different winter! It is a season that makes one stay indoors mostly. Since this season is preceded by the Fall season, trees and plants are pretty barren, devoid of leaves. These trees and plants almost wear a dead look under the snow. But, life does not give up. Under the heavy cover of snow life begins to germinate. Come Spring… life will be in full blossom. Lenten Season is an invitation to revive, to renew life like the Spring.
Phoenix: This legendary bird is surely an excellent symbol for the season of Lent. Here is what Wikipedia says about this bird: A phoenix is a mythical bird with a colorful plumage and a tail of gold and scarlet (or purple, blue, and green according to some legends). It has a 500 to 1,000 year life-cycle, near the end of which it builds itself a nest of twigs that then ignites; both nest and bird burn fiercely and are reduced to ashes, from which a new, young phoenix or phoenix egg arises, reborn anew to live again. The new phoenix is destined to live as long as its old self…
http://en.wikipedia.org/wiki/Phoenix_(mythology)
Ash: We are so accustomed to seeing fire as a source of destruction. We forget that fire can be life-infusing. We know the clichéd phrase ‘gold in the furnace’. Many wonders like the rebirth of the phoenix and purification of gold are still possible from fire. Our idea of ash is also loaded with destruction. But we know that ash is used as manure and ash is used in cleansing metal surfaces.
We have begun the Lenten Season with Ash Wednesday… a good beginning indeed. Let us rise up from ash like the phoenix, get purified like gold and enjoy the spring called the Lent.

Picture Sources:


http://unexpressedemotions.files.wordpress.com/2008/07/phoenix-bird6.jpg
அன்புள்ளங்களே, கடந்த ஐந்து மாதங்களுக்கு மேலாக புதுமைகளைப் பற்றி பல சிந்தனைகளைப் பகிர்ந்து வந்தோம். இயேசு ஆற்றிய புதுமைகள் என்று மட்டும் பார்க்காமல், இயேசு உருமாறியது, சக்கேயு உருமாற்றம் பெற்றது, திருமுழுக்கு யோவான் பிறப்பு, கீழ்த்திசை ஞானிகளின் பயணம் என்று இன்னும் பல நற்செய்தி நிகழ்ச்சிகளைப் புதுமைகளாகச் சிந்தித்தோம். புதுமைகளைத் தொடர்ந்து சிந்திக்க நமக்குக் கிடைத்துள்ள அருமையான ஒரு வாய்ப்பு இந்த தவக்காலம். அன்பு நெஞ்சங்களே, இந்த தவக்காலம் முழுவதையுமே ஒரு புதுமையாக, புதுமைகள் நிகழும் ஒரு காலமாகச் சிந்திக்க உங்களை அழைக்கிறேன்.
தவக்காலத்தைப் பற்றிய நம் கண்ணோட்டம் என்ன? சென்ற நவம்பர் மாதம் திருவருகைக் காலத்தை நாம் ஆரம்பித்த போது, ஒரு எண்ணத்தைப் பகிர்ந்து கொண்டேன். திருவருகைக் காலம் எதிபார்க்கும் காலம். எதை எதிர்பாக்கிறோம் என்பதைப் பொறுத்து, திருவருகைக் காலம் மகிழ்வான, நம்பிக்கை வளர்க்கும் காலமாய் இருக்குமா அல்லது துயரமான, நம்பிக்கையை வேரறுக்கும் காலமாக இருக்குமா என்று முடிவு செய்யலாம் என்பதை ஓர் உதாரணத்தோடு சிந்தித்தோம். அயல் நாட்டில் வேலைசெய்யும் தந்தை கிறிஸ்மஸ் விடுமுறைக்கு வீட்டுக்கு வருகிறார் என்றால் அவர் வரவுக்காக ஆனந்தமான எதிர்பார்ப்பு இருக்கும். ஆனால், அதே தந்தை வேலையை விட்டு விலக்கப்பட்டு வீடு திரும்புகிறார், அல்லது அங்கு நடந்த ஒரு விபத்தில் உடல் ஊனமுற்று திரும்புகிறார் என்றால்... நம் மனநிலையில் எவ்வளவு வேறுபாடான உணர்வுகள் இருக்கும்.
திருவருகைக் காலத்தைப் போலவே, தவக்காலத்தையும் பல கோணங்களில் நாம் பார்க்கலாம். தவக்காலத்தைப் பற்றிய வரலாற்றுத் தெளிவு பெற இந்த விவிலியத் தேடலில் முயல்வோம். தமிழில் நாம் தவக்காலம் என்று அழைப்பதை ஆங்கிலத்தில் Lenten Season என்று அழைக்கிறோம். Lencten என்ற வார்த்தை ஒரு Anglo Saxon வார்த்தை. அதன் பொருள் வசந்தம். வசந்த காலம் தவக்காலம் இரண்டையும் இணைப்பதே ஒரு அழகான எண்ணம். புதுமையான எண்ணம்.

பொதுவாக, தவக்காலம் என்றதும் சாம்பல், சாக்குத்துணி, சாட்டையடி என்று வருத்தத்தில் ஆழ்த்தும் அடையாளங்கள் மனதை நிரப்பும். சோகம், துயரம், மன வருத்தம், ஒருவகை குற்ற உணர்வு, உடல் ஒறுத்தல் என்ற பாரமான எண்ணங்கள் மேலோங்கும். ஆனால், தவக்காலம் வசந்தத்தைக் கொண்டு வரும் புதியதொரு ஆரம்பம் என்ற பொருளிலும் பாப்பது நல்லது. ‘வசந்தம்’ கேட்பதற்கு அழகான சொல், அழகான எண்ணம். உண்மைதான். ஆனால், அந்த வசந்தம் வருவதற்கு முன் மாற்றங்கள், வேதனைக்குரிய மாற்றங்கள் நடைபெற வேண்டும். சாம்பலிலிருந்து மீண்டும் உயிர் பெற்று எழும் Phoenix பறவையைப் பற்றி கேள்விபட்டிருக்கிறோம். இல்லையா? அந்தப் பறவையைத் தவக்காலத்தின் ஒரு அடையாளமாக நாம் சிந்திக்கலாம்.
தவக்காலத்திற்கும் வசந்த காலத்திற்கும் என்ன தொடர்பு? தவக்காலத்திற்கு Phoenix பறவை எப்படி ஓர் அடையாளமாகும்? சிந்திக்க வேண்டிய கேள்விகள். உலகின் பல நாடுகளில் அக்டோபர் அல்லது நவம்பர் மாதம் முதல் பிப்ரவரி வரை கடும் குளிர் காலம். இந்தக் குளிர் காலத்திற்கு முன்னால் மூன்று மாதங்கள் இலையுதிர் காலம். எனவே, இந்த இரு காலங்களிலும் மரங்கள் செடிகள் எல்லாம் தங்கள் இலைகளை இழந்து பனியில் உறைந்து போயிருக்கும். பனியில் உறைந்து போன தாவர உயிரினங்களைப் பார்க்கும் போது, இதற்கு மேல் ஒன்றும் இல்லை என்ற எண்ணம் தான் மேலோங்கும். ஆனால், அந்த பனிக்குள்ளும் சிறு துளிர்கள் கண்ணுக்குத் தெரியாதபடி வளர்ந்திருக்கும். பனி விலகியதும் அந்தத் துளிர்கள் தலை நிமிரும். மீண்டும் தாவர உலகம் தழைத்து வரும். அதுதான் Lenten Season எனப்படும் வசந்த காலம்.
Phoenix பறவையும் அப்படியே. 500 அல்லது 1000 ஆண்டுகள் வாழ்ந்ததாய் சொல்லப்படும் இந்தப் பறவை அந்த வாழ்நாள் முடியும் வேளையில், தனக்கென கூடு ஒன்றைக் கட்டி அதற்குள் அமர்ந்துகொண்டு தன் கூட்டுக்குத் தீ மூட்டும். தீயில் எரிந்து அந்தப் பறவை சாம்பலாகும் போது, அதன் அடுத்தத் தலைமுறையான பறவை வெளி வரும். இந்தப் பறவை, இந்தக் கதை உண்மையா இல்லையா என்ற ஆராய்ச்சிகளை விலக்கி விட்டு சிந்தித்தால், கற்பனையில் பார்க்க அழகான ஒரு காட்சி இது. நெருப்புக்குள் நிகழும் புதுமைகள் தான் எத்தனை எத்தனை. நெருப்பை அழிக்கும் கருவியாகப் பார்த்து பழகி விட்ட நமக்கு, பல சமயங்களில் இந்த நெருப்புக்குள் நிகழும் புதுமைகள் மறந்து போக வாய்ப்புண்டு.
தீயில் இடப்படும் பொன் இன்னும் கூடுதலாக மின்னுவதைப் போல், தன்னையே தீயிட்டு கொளுத்திக்கொள்ளும் Phoenix மறுபிறவி எடுத்து வருவது போல் இந்த தவக்காலம், அங்கு நாம் மேற்கொள்ளும் முயற்சிகள் நம்மையும் புதுபிறப்பாக மாற்ற வேண்டும். நம்மையும் புடமிட்டு மெருகேற்ற வேண்டும். தவக் காலத்தை திருநீற்று புதன், அல்லது சாம்பல் புதனோடு நாம் ஆரம்பிக்கிறோம். சாம்பலையும் நாம் அடிக்கடி அழிவின் அடையாளமாகவே பார்க்கிறோம். சாம்பல் உயிர் வளர்க்கும் உரமாக பயன்படுவதையும் நினைத்துப் பார்க்க வேண்டும். பொன்னைப் புடமிட நெருப்பு பயன்படுவது போல், இன்னும் பல உலோகங்களை சுத்தமாக்க சாம்பலும் பயன்படுகிறது இல்லையா? நெருப்பு, சாம்பல், Phoenix பறவை, வசந்தம் என்ற எண்ணங்களோடு நம் தவக்கால முயற்சிகள் ஆரம்பமாகட்டும்.

எந்த ஒரு முயற்சியுமே நம்பிக்கை இருந்தால் மட்டுமே மேற்கொள்ளப்படும். சீனாவின் பீஜிங்கில் 2008ஆம் ஆண்டு நடந்த ஒலிம்பிக் போட்டிகளில் உசேன் போல்ட் என்ற தடகள வீரர் பெற்ற தங்கப் பதக்கங்களின் செய்திகளையும், நீச்சல் போட்டிகளில் Michael Phelpsன் உலக சாதனைகளையும் பார்த்தோம், கேட்டோம். போட்டிகளின் போது கிடைக்கும் புகழ், ஆரவாரம் இவைகளின் பின்னணியில் அந்த வீரர்கள் எடுத்துக் கொண்ட முயற்சிகள்... பல ஆண்டுகளாய் நடந்த கடினமான முயற்சி, பயிற்சி இவைகள் கண்ணுக்குத் தெரியாத கடும்தவங்கள் என்பதையும் மறந்துவிடக் கூடாது.
உடல் பயிற்சி முயற்சி போலவே, தவ முயற்சிகளும் நம்பிக்கையின் அடிப்படையில் மேற்கொள்ளப்படுபவைகளே. இறைவனை நேரில் காண்பதற்கு, அல்லது அவரது சிறப்பான அருள் ஒன்றைப் பெறுவதற்கு கடுமையான தவ முயற்சிகளை மேற்கொண்ட ஞானிகளைப் பற்றி நம் இந்திய பாரம்பரியத்தில் பல கதைகள் உண்டு. பந்தயத்திற்கான பயிற்சிகளையும், நற்செய்தியை அறிவிக்க தேவையான தன்னடக்கம், தவ முயற்சிகளையும் இணைத்து பவுல் அடியார் கூறும் அழகான வரிகள் இவை:

கொரிந்தியருக்கு எழுதிய முதல் திருமுகம் 9: 24-27
பந்தயத்திடலில் ஓட வந்திருப்போர் பலர் ஓடினாலும் பரிசு பெறுபவர் ஒருவரே... பந்தயத்தில் போட்டியிடுவோர் யாவரும் அழிவுறும் வெற்றி வாகை சூடுவதற்காகத் தன்னடக்கப் பயிற்சிகளில் ஈடுபடுவர். நாமோ அழிவற்ற வெற்றி வாகை சூடுவதற்காக இப்படிச் செய்கிறோம். நான் குறிக்கோள் இன்றி ஓடுபவரைப்போல ஓடமாட்டேன். காற்றைக் குத்துபவரைப்போலக் குத்துச் சண்டை இடமாட்டேன். பிறருக்கு நற்செய்தியை அறிவிக்கிற நானே தகுதியற்றவனாக மாறிவிடாதவாறு என் உடலை அடக்கிக் கட்டுப்படுத்துகிறேன்.
திமொத்தேயுவுக்கு எழுதிய இரண்டாம் திருமுகம் 4: 7-8
நான் நல்லதொரு போராட்டத்தில் ஈடுபட்டேன். என் ஓட்டத்தை முடித்து விட்டேன். விசுவாசத்தைக் காத்துக் கொண்டேன். இனி எனக்கென வைக்கப்பட்டிருப்பது நேரிய வாழ்வுக்கான வெற்றி வாகையே. அதை இறுதி நாளில் ஆண்டவர் எனக்குத் தருவார்: நீதியான அந்த நடுவர் எனக்கு மட்டுமல்ல, அவர் தோன்றுவார் என விரும்பிக் காத்திருக்கும் அனைவருக்குமே தருவார்.

கடந்த ஞாயிறு கானடாவின் Vancouverல் குளிர்கால ஒலிம்பிக் போட்டிகள் ஆரம்பமாகி யிருக்கும் இந்த நேரத்தில் பந்தய வீரர்கள் மேற்கொள்ளும் முயற்சிகளையும், நம் தவ முயற்சிகளையும் இணைத்து சிந்திப்பது நல்லது. உடல் ரீதியாகவோ, மன ரீதியாகவோ, அறிவு ரீதியாகவோ, பயிற்சிகள், முயற்சிகள் இருந்தால் நல்ல பலனும் உண்டு.
உடல், மனம், அறிவு இவை ஒவ்வொன்றையும் கட்டுப்படுத்த, மேம்படுத்த மேற்கொள்ளப்படும் பயிற்சிக்கும் முயற்சிக்கும் வழிமுறைகள் உண்டு. தவக்கால முயற்சிகளுக்கும் நல்ல வழிமுறைகள் உண்டு. நாம் இந்த ஏழு வாரங்களிலும் இந்த வழி முறைகளைக் கற்றுக்கொள்ள கல்வாரி போகலாம். அங்கு சிலுவையில் தொங்கிய படி தன் போதனைகளை நடத்திய இறைமகன் இயேசுவின் காலடியில் அமர்ந்து தவக்கால பாடங்களைப் பயில ஆரம்பிப்போம்.

இயேசு சிலுவையில் கூறியதாய் சொல்லப்படும் ஏழு வாக்கியங்களை நம் தவக்காலத்தின் ஏழு வாரங்களுக்கான பாடங்களாக எடுத்துக் கொள்வோம். இந்த வாக்கியங்களைச் சிந்திப்பதற்கு முன், இந்த வாக்கியங்களை சொன்ன அந்தச் சூழலைக் கொஞ்சம் சிந்தித்துப் பார்ப்போம். எந்த ஒரு மனிதனும் சாகப்போகும் நேரத்தில் சொல்வதை மிகக் கவனமாகக் கேட்போம். மறு வாழ்வின் வாசலில் நிற்கும் அந்த மனிதரின் வார்த்தைகளில் ஆழமான அர்த்தங்கள் இருக்கும் என்று நம்புகிறோம். இறுதி மூச்சு போகும் வேளையில் அவர் சொல்வது மிக முக்கியமான ஒரு செய்தியாக இருக்கும் என்று நம்புகிறோம். அதுவும் இறக்கும் நிலையில் இருப்பவர் அதிக உடல் வேதனைப் படுகிறார் என்று தெரிந்தால், அந்த நேரத்தில் தன் வேதனையையும் பொறுத்துக் கொண்டு அவர் சொல்லும் வார்த்தைகள் இன்னும் அதிக மதிப்பு பெறும். இயேசு வேதனையின் உச்சியில் அந்த சிலுவையில் இந்த தவக்காலத்திற்கான நம் பாடங்களைச் சொல்லித் தருகிறார்.
இயேசுவின் வேதனையைக் கொஞ்சமாகிலும் உணர முயல்வோம். ரோமையர்கள் கண்டு பிடித்த சித்தரவதைகளின் கொடுமுடியாக, சிகரமாக அவர்கள் கண்டுபிடித்தது சிலுவை மரணம். சிலுவையில் அறையப்பட்டவர்கள் எளிதில் சாவதில்லை. அணு அணுவாக சித்ரவதை பட்டு சாவார்கள். கைகளில் அறையப்பட்ட இரு ஆணிகளால் உடல் தாங்கப்பட்டிருப்பதால், உடல் தொங்கும். அந்த நிலையில் மூச்சுவிட முடியாமல் திணறுவார்கள். மூச்சு விடுவதற்கு உடல் பாரத்தை மேலே கொண்டுவர வேண்டியிருக்கும். அப்படி கொண்டு வருவதற்கு அந்த இரு ஆணிகளில் அறைந்த கைகளையே பயன்படுத்த வேண்டியிருக்கும். இப்படி விடும் ஒவ்வொரு மூச்சுக்கும் மரண வேதனை அனுபவிப்பார்கள். ஒரு சிலர் இப்படி உயிரோடு போராடி எழுப்பும் மரண ஓலம் எருசலேம் நகருக்கும் கேட்கும் என்று விவிலிய ஆராய்ச்சியாளர்கள் சொல்கின்றனர். இந்த மரண ஓலத்தை நிறுத்தவே, அவர்கள் மூச்சடைத்து விரைவில் இறக்கட்டும் என்பதற்காகவே அவர்கள் மீண்டும் மேலே எழுந்து வர முடியாதபடி அவர்கள் கால்களை முறித்துவிடுவார்கள். இதையே நாம் நற்செய்தியில் வாசிக்கிறோம்.
இந்த மரண ஓலத்தில், வேதனைக் கதறலில் சிலுவையில் அறையப்பட்டவர்கள் சொல்லும் வார்த்தைகள் எல்லாம் வெறுப்புடன் வெளி வரும். தங்களை இந்த நிலைக்குக் கொண்டு வந்த தங்களை, பிறரை, தங்கள் கடவுள்களைச் சபித்துக் கொட்டும் வார்த்தைகளே அங்கு அதிகம் ஒலிக்கும். அப்படிப்பட்ட ஒரு வேதனையின் கொடுமுடியிலும், தான் விடும் ஒவ்வொரு மூச்சுக்கும் மரண போராட்டம் நிகழ்த்தி வந்த இயேசு சிலுவையில் சொன்ன வார்த்தைகள் அவரது மரண சாசனம். அந்த மரண சாசனத்தின் முதல் வரிகள் இவை: "தந்தையே, இவர்களை மன்னியும். தாங்கள் செய்வது இன்னதென்று அறியாமல் செய்கிறார்கள்."
தவக்காலத்தில் நாம் மேற்கொள்ளும் பல முயற்சிகளுக்கு, அடிப்படையாக நமக்குத் தேவையானது, மன்னிப்பு. மன்னிப்பு பெறுவது, மன்னிப்பு வழங்குவது. இந்த கருத்துக்களை வரும் விவிலியத் தேடலில் சிந்திப்போம். நாம் ஆரம்பித்துள்ள இந்த தவக்காலம் புதுமைகளால், புதிய வாழ்வளிக்கும் வசந்தத்தால் நம்மை நிறைக்க வேண்டுமென ஒருவர் ஒருவருக்காய் வேண்டிக்கொள்வோம்.




No comments:

Post a Comment