Pope Francis at the Confessional
Padre Pio
and Saint Leopoldo
2013ம்
ஆண்டு, ஏப்ரல் 11, அமெரிக்க அரசுத் தலைவர் பாரக் ஒபாமா
அவர்கள், அமெரிக்க இராணுவத்தில் மிக உயரிய விருது
ஒன்றை, மறைந்த அருள் பணியாளர் Emil Kapaun அவர்களுக்கு வழங்கினார். வீரத்துடன் போரிட்டு, எதிரிகளை வீழ்த்தி, வெற்றிபெறும் வீரர்களுக்கு பொதுவாக
வழங்கப்படும் விருது இது. ஆனால், தன் இராணுவப் பணியில் ஒரு நாளும்
ஆயுதங்களைப் பயன்படுத்தாத அருள் பணியாளர் Emil
Kapaun அவர்கள் கோரிய போரில் வீரர்கள் மத்தியில்
ஆற்றிய ஆன்மீகப் பணிகளுக்காக இவ்விருது வழங்கப்பட்டது. இவ்விருது வழங்கும் நிகழ்வில், அரசுத்தலைவர் ஒபாமா தன் உரையில் கூறியது இதுதான்: "துப்பாக்கியால்
ஒரு முறை கூட சுடாத ஓர் அமெரிக்க வீரரை இன்று நாம் கௌரவப்படுத்துகிறோம். அருள் பணியாளர்
Emil Kapaun அவர்கள்,
இராணுவத்தில் பணியாற்றியபோது பயன்படுத்திய ஒரே ஆயுதம் அன்பு - தன் நண்பருக்காக உயிரைத்
தந்த அன்பு" என்று கூறினார் ஒபாமா.
அருள்
பணியாளர் Emil Kapaun அவர்கள் பணியாற்றிய அதே கொரியப் போரில்,
மற்றொரு அருள் பணியாளரைக் குறித்து சொல்லப்படும் உண்மைச் சம்பவம் இது. அப்போரில் காயப்பட்டு, உயிருக்குப் போராடிவந்த ஒரு வீரர், இறப்பதற்கு முன், ஒப்புரவு அருட்சாதனம் பெறவேண்டும்
என்ற தன் ஆவலை வெளியிட்டார். அவருக்கு மருத்துவ உதவிகள் செய்தவர், திகைத்தார். இந்தப்
போர்க்களத்தில் ஓர் அருள்பணியாளரைத் தேடி எங்கே போவது? என்று அவர் தடுமாறிக் கொண்டிருந்தபோது, அந்த வீரனுக்கு அருகில், மரணத்துடன் போராடிக் கொண்டிருந்த மற்றொரு
வீரர், "நான் ஓர் அருள்பணியாளர்" என்று தன்னையே
அறிமுகப்படுத்தினார். அவரது நிலையைக் கண்ட மருத்துவர், "நீங்கள் அசையாதீர்கள். அசைந்தால், உங்கள் உயிருக்குப் பெரும் ஆபத்து" என்று அந்த அருள்பணியாளரிடம்
எச்சரித்தார். அதற்கு அந்த அருள்பணியாளர்,
"நான் வாழப்போகும்
இந்த ஒரு சில மணித்துளிகளை விட, என் நண்பரின் ஆன்மா மிகவும் முக்கியம்."
என்று சொன்னபடி, தன்னிடம் எஞ்சியிருந்த சக்தியை எல்லாம்
திரட்டி, தரையோடு தரையாக ஊர்ந்து சென்றார். சாகும்
நிலையில் இருந்த அந்த வீரனின் இறுதி நேரத்தில், அவருக்கு ஒப்புரவு அருட்சாதனத்தை வழங்கினார்.
அந்த வீரனும், அருள்பணியாளரும் அமைதியாக இறந்தனர்.
அருள்
பணியாளர்களைப் பற்றிச் சொல்லப்படும் பல உன்னத நிகழ்வுகளில் இரண்டை இன்று நாம் அசைபோடக்
காரணம் உள்ளது. இறை இரக்கத்தின் சிறப்பு யூபிலி ஆண்டின் ஒரு சிறப்பு நிகழ்வாக, பிப்ரவரி
10, நாம் கொண்டாடும் 'திருநீற்றுப் புதனன்று' திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், 1000க்கும்
மேற்பட்ட அருள் பணியாளரை 'இரக்கத்தின் மறைப்பணியாளர்களாக' (Missionaries
of Mercy) உலகெங்கும் அனுப்பி வைக்கிறார். தேர்ந்தெடுக்கப்பட்ட
இம்மறைப்பணியாளர்களில் 700 பேர், இப்புதனன்று மாலை 5 மணிக்கு, புனித பேதுரு பசிலிக்காவில் திருத்தந்தை நிறைவேற்றும் சிறப்புத்
திருப்பலியில் பங்கேற்கின்றனர்.
இச்சிறப்பு
நிகழ்வையொட்டி, புனித பேதுரு பசிலிக்காவில், இரு புனிதர்களின் திருப்பண்டங்கள் கொண்டுவரப்பட்டுள்ளன. 'பாத்ரே பியோ' என்று மக்களிடையே அன்புடன் அழைக்கப்படும்
பியத்ரெல்சினொ நகர் புனித பயஸ், மற்றும், புனித லியோபோல்தோ மாண்டிச் என்ற இவ்விரு புனிதர்களின் திருப்பண்டங்கள்
பிப்ரவரி 3ம் தேதி முதல், உரோம் நகரின் கோவில்களில் மக்களின்
வணக்கத்திற்கென வைக்கப்பட்டிருந்தன. ஒவ்வொரு நாளும் 14 மணி நேரங்கள் ஒப்புரவு அருள்
அடையாளம் வழங்கும் பணியில் ஈடுபட்டிருந்த இவ்விரு புனிதர்களும், 'ஒப்புரவு அருள் அடையாளத்தின் தூதர்கள்' என்று வணங்கப்படுகின்றனர். கப்பூச்சின் துறவுசபையைச் சேர்ந்த இவ்விரு
புனிதர்களின் முன்னிலையில், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், 'இரக்கத்தின் மறைப்பணியாளர்களை' ஒப்புரவு
அருள் அடையாளத்தை வழங்க, உலகெங்கும் அனுப்பி வைப்பது பொருத்தமாக உள்ளது.
இரக்கத்தின்
சிறப்பு யூபிலியையொட்டி, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள்
வெளியிட்டுள்ள 'இரக்கத்தின் முகம்' என்ற அதிகாரப்பூர்வ அறிவிப்பு மடலில், (எண் 18) 'இரக்கத்தின் மறைப்பணியாளர்களை'க்
குறித்து இவ்வாறு எழுதியுள்ளார்:
"இந்தப்
புனித ஆண்டின் தவக்காலத்தையொட்டி, 'இரக்கத்தின் மறைப் பணியாளர்களை' அனுப்ப நான் தீர்மானித்துள்ளேன். இறைமக்கள் மீது, தாய்க்குரிய பாசத்தைக் காட்டும் திருஅவையின் அடையாளங்களாக இவர்கள்
இருப்பர். நமது கிறிஸ்தவ நம்பிக்கை என்ற மறைப்பொருளின் அடித்தளமாக விளங்கும் இரக்கத்திற்குள்
இறைமக்கள் நுழைவதற்கு, இவர்கள் வழிவகுப்பர்" என்று இம்மறைப்பணியாளர்களைப் பற்றி
அறிமுகப்படுத்தும் திருத்தந்தை, அவர்கள் ஆற்றப்போகும் ஒரு சிறப்பானப்
பணியைக் குறித்துப் பேசுகிறார். அதாவது, இவ்வருள் பணியாளர்கள், ஒப்புரவு அருள் அடையாளத்தில் தங்களை நாடிவருவோரின், அனைத்துப் பாவங்களையும் மன்னிக்கும் அதிகாரம் பெற்றுள்ளனர் என்று, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் குறிப்பிடுகின்றார். பாவங்களை மன்னிக்க
அனைத்து அருள் பணியாளர்களுமே அதிகாரம் பெற்றுள்ளனரே, இவர்களுக்கு
வழங்கப்படும் புதிய அதிகாரம் என்ன? என்ற கேள்வி எழலாம். 'இரக்கத்தின் மறைப்பணியாளர்களுக்கு' வழங்கப்பட்டுள்ள இந்தச் சிறப்பான அதிகாரத்தைப் புரிந்துகொள்வதற்கு, ஒப்புரவு அருள் அடையாளத்தை வழங்கும் அருள் பணியாளர்கள் அனைவருமே
பெற்றுள்ள அதிகாரங்களைத் தெளிவுபடுத்துவது நல்லது.
பொதுவாக, பாவங்களை மன்னிக்கும் அதிகாரம், அனைத்து
அருள் பணியாளர்களுக்கும் வழங்கப்பட்டுள்ளது. ஆயினும், ஒரு சில குற்றங்களுக்கு, அனைத்து அருள் பணியாளர்களாலும் மன்னிப்பு வழங்க இயலாது. எடுத்துக்காட்டாக, கருக்கலைப்பு செய்துவிடும் ஒரு பெண், அல்லது, கருகலைப்புக்கு துணைபோகும் மற்றவர்கள் மனம் வருந்தி, அதை ஒப்புரவு அருள் அடையாளத்தில் வெளியிட்டால், அப்பாவத்தை மன்னிக்கும் அதிகாரம் அனைத்து அருள் பணியாளர்களுக்கும்
பொதுவாக வழங்கப்படுவதில்லை. ஒரு சில நாடுகளில் பணியாற்றும் அருள்பணியாளர்கள், ஒரு சில துறவு சபைகளைச் சேர்ந்த அருள் பணியாளர்கள் ஆகியோருக்கே
இந்தச் சிறப்பு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது.
இரக்கத்தின்
சிறப்பு யூபிலி ஆண்டையொட்டி, இந்த அதிகாரத்தை, அனைத்துப் பணியாளருக்கும் தான் வழங்குவதாக, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் அறிவித்துள்ளார். இரக்கத்தின் சிறப்பு
யூபிலி ஆண்டின் நிகழ்வுகளை ஒருங்கிணைக்கும் திருப்பீட அவையின் தலைவர், பேராயர், ரீனோ பிசிக்கெல்லா (Rino Fisichella) அவர்களுக்கு, 2015ம் ஆண்டு, செப்டம்பர் 1ம் தேதி திருத்தந்தை
அனுப்பிய மடலில், அனைத்து அருள் பணியாளருக்கும், இந்த அதிகாரம், இரக்கத்தின் சிறப்பு யூபிலி
ஆண்டில் மட்டும் வழங்கப்பட்டுள்ளது என்று தெளிவுபடுத்தியுள்ளார்.
கருக்கலைப்பு
என்ற பாவத்தின் கொடுமைகளை, இம்மடலில், வருத்தத்தோடு குறிப்பிடும் திருத்தந்தை, இக்கொடுமையைச் செய்துள்ள பலர், முழு உள்ளத்துடன்
மீண்டும் இறைவனுடன் ஒப்புரவாக விழைவதையும் சுட்டிக்காட்டியுள்ளார். இறைவனிடம் திரும்பிவர
நினைக்கும் இவர்களுக்கு, சட்டம் என்ற பெயரில், தடைச்சுவர்களையும் மூடியக்
கதவுகளையும் காட்டுவதற்குப் பதில், மன்னிப்பு வெள்ளத்தில் மக்கள்
மூழ்கித் திளைக்கவேண்டும் என்ற ஆவலில், திருத்தந்தை இந்த அதிகாரத்தை அனைத்து அருள்
பணியாளர்களுக்கும் வழங்கியுள்ளார்.
இறை இரக்கத்திற்கு
முன், மன்னிக்க முடியாத பாவங்களே இல்லை என்பதை
உணர்த்த, அனைத்துப் பாவங்களையும் மன்னிக்கும் அதிகாரம்
பெற்ற ‘இரக்கத்தின் மறைப்பணியாளர்களை’ திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், உலகெங்கும் அனுப்பிவைக்கிறார். ஒரு சாதாரண அருள் பணியாளரால் மன்னிக்க
முடியாத குற்றங்களென ஒரு சில குற்றங்கள் கருதப்படுகின்றன. எடுத்துக்காட்டாக, ஒப்புரவு அருள் அடையாளத்தில் கடைபிடிக்க வேண்டிய இரகசியத்தை வெளியிடும்
குற்றம், திரு நற்கருணையை அவமதிக்கும் குற்றம், திருத்தந்தையின் தெளிவான ஒப்புதல் இன்றி, ஓர் ஆயர், மற்றொருவரை ஆயராகத் திருநிலைப்படுத்தும்
குற்றம், திருத்தந்தையை நேருக்கு நேர் உடலளவில் தாக்கும்
குற்றம் போன்ற குற்றங்களை மன்னிக்கும் அதிகாரம், திருப்பீடத்திற்கென
ஒதுக்கி வைக்கப்பட்டுள்ளது. திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், 'இரக்கத்தின் மறைப் பணியாளர்களுக்கு' இந்த சிறப்பு அதிகாரத்தை வழங்கி, அவர்கள்
உலகின் அனைத்து மறை மாவட்டங்களுக்கும் சென்று,
இந்த மன்னிப்புப்
பணியை ஆற்ற அனுப்பி வைக்கிறார்.
'இரக்கத்தின் முகம்' என்ற தன் அறிவிப்பு மடலில்,
இரக்கத்தின் மறைப்பணியாளர்கள்
பற்றி குறிப்பிடும்போது, இந்தச் சட்ட நுணுக்கங்களைப் பற்றி
திருத்தந்தை எதுவும் குறிப்பிடாமல் இருப்பது,
அழகு. "திருப்பீடத்திற்கென
ஒதுக்கப்பட்டுள்ள குற்றங்களையும் மன்னிக்கும் அதிகாரத்தை இவ்வருள் பணியாளர்களுக்கு
நான் வழங்குகிறேன்" என்று ஒரே ஒரு வாக்கியத்தில், தான் சிறப்பு அதிகாரம் வழங்கவிருப்பதைக்
குறிப்பிடுகிறார் திருத்தந்தை.
திருத்தந்தை
வழங்கும் இந்தச் சிறப்பான அதிகாரம் பெற்றவர்கள், வத்திக்கானிலிருந்து
வெளியேச் செல்லும் உயர் அதிகாரிகள் போல், உலகெங்கும் வலம் வரும் ஆபத்து
உள்ளது. இதை உணர்ந்தவர்போல், திருத்தந்தை, இந்த 'இரக்கத்தின் மறைப் பணியாளர்களுக்கு' வழங்கப்படும் சிறப்பு அதிகாரத்தைக் குறித்து அதிகம் பேசாமல், அவர்கள் இரக்கத்தின் வாய்க்கால்களாய் இருப்பதே, உலகெங்கும் சென்று ஆற்றவேண்டிய முக்கியப் பணி என்பதை விளக்கமாகக்
கூறியுள்ளார்.
"மன்னிப்பைத்
தேடுவோரை வரவேற்கக் காத்திருக்கும் இறை தந்தையின் வாழும் அடையாளங்களாக, இம்மறைப் பணியாளர்கள் வருகின்றனர். அனைத்திற்கும் மேலாக, விடுதலையை வழங்கக்கூடிய ஓர் உண்மையான சந்திப்பை எளிதாக்குவதற்கு
இம்மறைப் பணியாளர்கள் வருகின்றனர். ‘அனைவருக்கும் இரக்கம் காட்டுவதற்காகவே
கடவுள் அனைவரையும் கீழ்ப்படியாமைக்கு உட்படுத்தினார்’ (உரோமையர் 11:32) என்று திருத்தூதர் பவுல் கூறும் வார்த்தைகள், இம்மறைப் பணியாளர்களின் பணிக்குப் பின்னணியாக அமைகிறது" என்று இவர்கள் பணியை விளக்கிக்
கூறும் திருத்தந்தை, இவர்கள், உலகெங்கும்
செல்லும்போது நிகழக்கூடிய மாற்றத்தை ஓர் எதிர்பார்ப்பாக, தன் சகோதர ஆயர்களுக்கு விடுக்கும் ஒரு விண்ணப்பமாகக் கூறியுள்ளார்:
“இரக்கத்தின் மறைப் பணியாளர்களை
வரவேற்று, உற்சாகப்படுத்த, என் சகோதர ஆயர்களைக் கேட்டுக்கொள்கிறேன். மகிழ்வையும், மன்னிப்பையும் கொணரும் தூதர்களாக இவர்கள் செயலாற்ற, ஒவ்வொரு மறை மாவட்டத்திலும் 'இரக்கத்தின் சிறப்பு நாட்களை' மக்களுக்கு ஏற்பாடு செய்யுங்கள். இறைவனின் குழந்தைகள் அனைவரும்
மீண்டும் தந்தையின் இல்லத்திற்குத் திரும்பிவர, இத்தவக்காலம் நல்ல தருணமாக அமையட்டும். இந்தச் சிறப்பு யூபிலி ஆண்டின் தவக்காலத்தில், 'நாம்
இரக்கத்தைப் பெறவும், ஏற்ற வேளையில் உதவக் கூடிய அருளைக்
கண்டடையவும், அருள் நிறைந்த இறை அரியணையைத் துணிவுடன்
அணுகிச் செல்வோமாக' (எபிரேயர் 4:16) என்ற அழைப்பை, அனைத்து
அருள் பணியாளர்களும் மக்களுக்கு விடுப்பார்களாக” என்று திருத்தந்தை தன் அறிவிப்பு மடலில் எழுதியுள்ளார்.
பிப்ரவரி
10,11,12 ஆகிய மூன்று நாட்கள் நடைபெறும்
நிகழ்வுகள், 'இரக்கத்தின் சிறப்பு யூபிலி' ஆண்டை இன்னும் பொருளுள்ளதாக மாற்றவுள்ளன. பிப்ரவரி 10ம் தேதி, திருநீற்றுப் புதனன்று,
'இரக்கத்தின் மறைப்
பணியாளர்களை' உலகெங்கும் அனுப்பி வைக்கிறார் திருத்தந்தை.
பிப்ரவரி
11ம் தேதி, லூர்து அன்னை திருநாளன்று, 24வது உலக நோயாளர் நாள் கடைபிடிக்கப்படுகிறது. இரக்கத்தின் சிறப்பு
யூபிலி ஆண்டில் கொண்டாடப்படும் இந்த உலக நாளுக்கென திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள்
வழங்கியுள்ள செய்தியில், கானா திருமணத்தில், "அவர் உங்களுக்குச் சொல்வதெல்லாம் செய்யுங்கள்"
(யோவான்
2:5) என்று அன்னை
மரியா சொன்ன வார்த்தைகளை, தன் செய்தியின் மையப் பொருளாகப்
பகிர்ந்துள்ளார், திருத்தந்தை.
அதற்கு
அடுத்த நாள், பிப்ரவரி 12, வெள்ளியன்று, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், மெக்சிகோ நாட்டிற்கு திருத்தூதுப் பயணம் மேற்கொள்கிறார். அதைவிடச்
சிறப்பான ஒரு வரலாற்று நிகழ்வு, பிப்ரவரி 12ம் தேதி நடைபெறவுள்ளது. கத்தோலிக்கத் திருஅவையின்
தலைவரான திருத்தந்தை ஒருவரும், இரஷ்ய ஆர்த்தடாக்ஸ் முதுபெரும்
தந்தை ஒருவரும் வரலாற்றில் முதன்முதலாகச் சந்திக்க உள்ளனர். திருத்தந்தை
பிரான்சிஸ் அவர்களும், இரஷ்ய ஆர்த்தடாக்ஸ் முதுபெரும்
தந்தை, கிரில் அவர்களும், கியூபா நாட்டுத் தலைநகர் ஹவானாவின் விமான நிலையத்தில் சந்தித்து, ஓர் இணைந்த அறிக்கையை வெளியிட உள்ளனர். பல்வேறு கொள்கை
வேறுபாடுகளால், 800 ஆண்டுகளுக்கும் மேலாகப் பிரிந்து கிடக்கும் கத்தோலிக்கத் திருஅவையும், இரஷ்ய ஆர்த்தடாக்ஸ் அவையும் முதல் முறையாகச் சந்திக்கும் இந்நிகழ்வு
உலக அரங்கில் அதிர்வுகளை உருவாக்கியுள்ளது.
பிப்ரவரி 10, 11, 12 ஆகிய மூன்று
நாட்களும், இரக்கத்தின் சிறப்பு
யூபிலி ஆண்டில் தனித்துவமிக்க முத்திரைகளைப் பதிக்கும் நாட்கள். இவற்றில், பிப்ரவரி 10ம்
தேதி நடைபெறும் நிகழ்வுகளை இந்தத் தேடலில் சிந்தித்ததுபோல், அடுத்தத் தேடலில், பிப்ரவரி 11, 12 தேதிகளில் நடைபெறும் நிகழ்வுகளைச் சிந்திக்க முயல்வோம்.
No comments:
Post a Comment