The Widow of Nain
நூற்றுவர்
தலைவரின் பணியாளரை இயேசு குணமாக்கியப் புதுமையை, சென்ற இரு வாரங்கள் நாம் சிந்தித்து
வந்தோம். இப்புதுமை நிகழ்வதற்கு முன்னரும், நிகழ்ந்த பின்னரும் இயேசுவும், நூற்றுவர் தலைவரும் ஒருவர்,
ஒருவரை சந்தித்தனரா
என்பது தெரியவில்லை. அதைக் குறித்து நற்செய்தியாளர் லூக்கா ஒன்றும் சொல்லவில்லை. இயேசுவின்
மீது அசைக்கமுடியாத நம்பிக்கை கொண்டிருந்த நூற்றுவர் தலைவரும், அந்த நம்பிக்கையை மனதாரப் பாராட்டிய இயேசுவும் சந்திக்காமலேயே பிரிந்து
சென்றிருக்கக் கூடும். நல்லவர் ஒருவரின் நலமளிக்கும் ஆற்றல், தன் இல்லம் தேடிவந்தது
என்ற திருப்தி, நூற்றுவர் தலைவருக்கு. தன் மீது நம்பிக்கை
கொண்ட ஒரு நல்லவருக்கு நன்மை செய்த திருப்தி, இயேசுவுக்கு. இப்படி, காற்றோடு, காற்றாக கரைந்துபோன நூற்றுவர் தலைவர்தான், மீண்டும் கல்வாரியில், சிலுவையடியில் இயேசுவைச் சந்தித்தாரோ
என்று என் மனம் எண்ணிப் பார்க்க விழைகிறது.
சிலுவையடியில்
நின்ற நூற்றுவர் தலைவர் ஒருவரைப் பற்றி, மத்தேயு, மாற்கு, லூக்கா என்ற மூன்று நற்செய்தியாளர்களும்
கூறியுள்ளனர். கல்வாரியில், சிலுவையில், இயேசு அமைதியாக உயிர் துறந்ததைக் கண்ட நூற்றுவர்
தலைவர், "'இவர் உண்மையாகவே நேர்மையாளர்' என்று கூறி கடவுளைப் புகழ்ந்தார்" (லூக்கா 23:47) என்று லூக்கா
கூறியுள்ளார். மத்தேயு, மாற்கு இருவரும், இன்னும் ஒருபடி மேலேச் சென்று, "இம்மனிதர்
உண்மையாகவே இறைமகன்" (மத். 27:54; மாற். 15:39) என்ற விசுவாச அறிக்கையை,
நூற்றுவர் தலைவர் வெளியிட்டார் என்று கூறியுள்ளனர்.
சிலுவையைச்
சுற்றி நின்ற யூதர்களும், யூத மதத் தலைவர்களும் வெளியிடப்
பயந்த, அல்லது, வெளியிட
மறுத்த ஒரு விசுவாச அறிக்கையை, உரோமையரான நூற்றுவர் தலைவர் வெளியிட்டார்.
தன் பணியாளரின் நலம்வேண்டி நூற்றுவர் தலைவர் அனுப்பிய விண்ணப்பத்தில், "நீர் என் இல்லத்திற்கு வர நான் தகுதியற்றவன், ஒரு வார்த்தை சொல்லும், என் பணியாளர் நலம் பெறுவார்"
என்று சொன்னதைக் கேட்டு, "இஸ்ரயேலரிடத்திலும் இத்தகைய நம்பிக்கையை
நான் கண்டதில்லை என உங்களுக்குச் சொல்கிறேன்" (லூக்கா 7:9) என்ற பாராட்டை இயேசு அவருக்கு வழங்கினார் என்பதை அறிவோம். கல்வாரியில்
நூற்றுவர் தலைவர் வெளியிட்ட விசுவாச அறிக்கையைக் கேட்டு, இதே வார்த்தைகளை இயேசு, தன் உயிர் பிரிந்த நிலையிலும் கூறியிருப்பார்
என்று நாம் நம்பலாம். வேற்றினத்தார் வழியே இயேசுவுக்குக் கிடைத்த இந்த விசுவாச அறிக்கை, அவரது தியாக வாழ்வுக்குக் கிடைத்த ஓர் அற்புதச் சான்றிதழ்.
கப்பர்நாகும்
ஊரில், நூற்றுவர் தலைவரின் பணியாளரைக் குணமாக்கியபின், இயேசு, நயீன் என்ற ஊருக்குச் சென்றதாக
நற்செய்தியாளர் லூக்கா கூறுகிறார். ‘நயீன்’ என்ற இந்த ஊர், விவிலியத்தில் ஒரே ஒரு முறை மட்டுமே, அதாவது, லூக்கா நற்செய்தி, 7ம் பிரிவில் மட்டுமே குறிப்பிடப்பட்டுள்ளது. அடையாளம் ஏதுமற்ற
ஊர்களைத் தேடிச் செல்வது இயேசுவின் விருப்பச் செயலாக இருந்தது என்பதற்கு, இந்த ஊரும் ஒரு சான்று. அதுவரை யாராலும் அறியப்படாமல் இருந்த அந்த
ஊருக்கு, நற்செய்தியில் ஓர் இடம் தந்து, இத்தனை நூற்றாண்டுகளாக அந்த ஊரின்
பெயரை உலகெங்கும் அறியச் செய்துள்ளது, இயேசு அங்கு ஆற்றிய ஒரு புதுமை.
அந்த ஊரில், கைம்பெண் ஒருவரின் இறந்த மகனை இயேசு உயிர்ப்பிக்கும்
அந்தப் புதுமை, லூக்கா நற்செய்தியில் மட்டும் பதிவு செய்யப்பட்டுள்ளது.
லூக்கா
நற்செய்தி 7: 11-16
அதன்பின்
இயேசு நயீன் என்னும் ஊருக்குச் சென்றார். அவருடைய சீடரும் பெருந்திரளான மக்களும் அவருடன்
சென்றனர். அவர் அவ்வூர் வாயிலை நெருங்கி வந்தபோது, இறந்த ஒருவரைச் சிலர் தூக்கி வந்தனர். தாய்க்கு அவர் ஒரே
மகன்; அத்தாயோ கைம்பெண். அவ்வூரைச் சேர்ந்த
பெருந்திரளான மக்களும் அவரோடு இருந்தனர். அவரைக் கண்ட ஆண்டவர், அவர்மீது பரிவுகொண்டு, “அழாதீர்” என்றார். அருகில் சென்று பாடையைத் தொட்டார். அதைத் தூக்கிச்
சென்றவர்கள் நின்றார்கள். அப்பொழுது அவர், “இளைஞனே, நான் உனக்குச் சொல்கிறேன், எழுந்திடு”
என்றார்.
இறந்தவர் எழுந்து உட்கார்ந்து பேசத் தொடங்கினார். இயேசு அவரை அவர் தாயிடம் ஒப்படைத்தார்.
அனைவரும் அச்சமுற்று, “நம்மிடையே பெரிய இறைவாக்கினர் ஒருவர்
தோன்றியிருக்கிறார். கடவுள் தம் மக்களைத் தேடி வந்திருக்கிறார்” என்று சொல்லிக் கடவுளைப் போற்றிப் புகழ்ந்தனர்.
இந்தப்
புதுமையில் முதலில் மனதில் பதியும் ஒரு சிறப்பு அம்சம் - இயேசு தானாக முன்வந்து இந்தப்
புதுமையை ஆற்றுகிறார் என்ற அம்சம். லூக்கா நற்செய்தியில், இயேசு நலம் நல்கும் புதுமைகள் 17 பதிவு செய்யப்பட்டுள்ளன. அவற்றில்
11 புதுமைகளில், நோயுற்றோர், அல்லது, அவர் சார்பாக வேறொருவர் விண்ணப்பிக்கும்போது இயேசு
குணமளிக்கிறார். மீதமுள்ள ஆறு புதுமைகள், விண்ணப்பங்கள் ஏதும் இல்லாமல் நிறைவேற்றப்பட்டப்
புதுமைகள். நயீன் கைம்பெண்ணுக்கு இயேசு ஆற்றிய புதுமை இவற்றில் ஒன்று. இஸ்ரயேல்
சமுதாயத்தில் ஒரு கைம்பெண்ணின் நிலை என்ன என்பதை, அன்னை மரியாவின் வழியாக நன்கு உணர்ந்த
இயேசு, இப்புதுமையை எவ்வித அழைப்போ, விண்ணப்பமோ இன்றி ஆற்றுகிறார்.
யூத
சமுதாயத்தில், பொதுவாகவே, பெண்கள் இரண்டாம் நிலை குடிமக்கள். அதிலும் கைம்பெண்களின்
நிலை இன்னும் பரிதாபமானது. நிலம், வீடு, சொத்து என்று எவ்வகையிலும் உரிமை கொண்டாட முடியாதவாறு, கணவரைச் சார்ந்தே, ஒரு பெண்ணின் வாழ்வு
அமைந்திருந்தது. கணவனின் மறைவுக்குப் பின், சமுதாயத்தின் கருணையால் வாழவேண்டிய
நிலைக்கு கைம்பெண்கள் தள்ளப்பட்டனர். எனவேதான்,
அறுவடை நேரத்தில்,
நிலத்தின் உரிமையாளர், தன் நிலத்தையோ, திராட்சைத் தோட்டத்தையோ முழுக்க, முழுக்க
அறுவடை செய்யக்கூடாது என்று, சட்டம் இயற்றப்பட்டது. காரணம், நிலத்திலோ, தோட்டத்திலோ அறுவடைக்குப்பின் விழுந்து
கிடக்கும் தானியங்களும், பழங்களும் அன்னியருக்கு, அனாதைகளுக்கு, கைம்பெண்களுக்கு விட்டுவைக்கப்பட
வேண்டும் என்று காரணமும் சொல்லப்பட்டது.
இணைச்சட்டம்
24: 19-22
உன்
வயலில், விளைச்சல் அறுவடை செய்யும்போது, அரிக்கட்டினை மறந்து வயலிலே விட்டு வந்தால், அதை எடுக்கத் திரும்பிப் போகாதே. அதை அன்னியருக்கும் அனாதைக்கும்
கைம்பெண்ணுக்கும் விட்டுவிடு. அப்போது நீ மேற்கொள்ளும் செயல்கள் அனைத்திலும் உன் கடவுளாகிய
ஆண்டவர் உனக்கு ஆசி வழங்குவார். நீ உன் ஒலிவ மரத்தை அடித்து உதிர்க்கும்போது, உதிராததைப் பறிக்காதே. அதை அன்னியருக்கும் அனாதைக்கும் கைம்பெண்ணுக்கும்
விட்டுவிடு. நீ உன் திராட்சைத் தோட்டக் கனிகளைச் சேகரித்தபின், பொறுக்காமல் கிடப்பதை எடுக்கச் செல்லாதே. அதை அன்னியருக்கும்
அனாதைக்கும் கைம்பெண்ணுக்கும் விட்டுவிடு. எகிப்து நாட்டில் நீ அடிமையாய் இருந்ததை
நினைவிலிருத்தி, இவற்றைச் செய்யும்படி, நான் உனக்குக் கட்டளையிடுகிறேன்.
யூத சமுதாயத்தில்
மட்டுமல்ல, உலகின் பல்வேறு நாடுகளிலும் கைம்பெண்களின்
நிலை இன்றும் பரிதாபமான நிலையிலேயே உள்ளது. நல்ல நிகழ்வுகள் நடைபெறும் வேளையில், அங்கு கைம்பெண்களுக்கு இடமில்லை, அப்படியே
அவர்கள் அங்கு வந்தாலும், ஒதுங்கி நிற்கவேண்டும் என்ற
பல்வேறு கொடுமையான கட்டுப்பாடுகள் இன்னும் நம் பழக்கத்தில் இல்லையா?
இவ்விதம், யூத சமுதாயத்தால் ஒதுக்கிவைக்கப்பட்டிருந்த நயீன் கைம்பெண்ணுக்கு
இருந்த ஒரே நம்பிக்கை, அவரது மகன் மட்டுமே. அவரை, அந்தத் தாய்
எவ்வளவு அன்போடு, நம்பிக்கையோடு வளர்த்திருக்க வேண்டும்? தனி ஒரு பெண்ணாய் பிள்ளைகளை வளர்ப்பது எவ்வளவு கடினம் என்பது, நாம்
வாழும் இக்காலத்தில் கண்ணால் காணும் ஓர் எதார்த்தம். இத்தனைச் சவால்களையும், பயங்கரமான சூழல்களையும் சமாளித்து, அந்தக் கைம்பெண் வளர்த்த அந்த நம்பிக்கைக்குரியவர்... இதோ, பிணமாக எடுத்துச் செல்லப்படுகிறார்.
தான்
பெற்ற பிள்ளையைப் புதைப்பதுதான் பெற்றோருக்குப் பெரும் வேதனை, பெரும் தண்டனை. தான் பெற்ற பிள்ளை, சாகும் நிலையில் இருக்கும்போது, எத்தனை பெற்றோர், அந்த பிள்ளைக்குப் பதிலாகத் தங்கள் உயிரை எடுத்துகொள்ளுமாறு
இறைவனிடம் வேண்டுவதை நாம் பார்த்திருக்கிறோம். இந்த நயீன் கைம்பெண்ணும் இப்படி வேண்டியிருப்பார்.
தன் ஒரே மகனைக் காப்பாற்ற, சாவோடு போராடியிருப்பார். அவரது வேண்டுதல்கள், போராட்டங்கள் எல்லாம் தோல்வியடைந்து, இப்போது அந்தப் பெண், வாழ்வின் விளிம்புக்கு, விரக்தியின் எல்லைக்குத் தள்ளப்பட்டிருந்தார். மகனது அடக்கத்தை
முடித்துவிட்டு, தன் வாழ்வையும் முடித்துக் கொள்ளலாம் என்ற
எண்ணத்துடன், ஒரு நடைபிணமாக, அந்த சவ ஊர்வலத்தில், நடந்து
சென்றிருக்கலாம், அந்தக் கைம்பெண்.
அவ்வேளையில்
அங்கு வந்த இயேசு என்ன செய்தார் என்பதை, நற்செய்தியாளர் லூக்கா இவ்விதம்
கூறுகிறார்:
அவரைக்
கண்ட ஆண்டவர், அவர்மீது பரிவுகொண்டு, “அழாதீர்” என்றார். அருகில் சென்று பாடையைத் தொட்டார். அதைத் தூக்கிச்
சென்றவர்கள் நின்றார்கள். அப்பொழுது அவர், “இளைஞனே, நான் உனக்குச் சொல்கிறேன், எழுந்திடு”
என்றார்.
இறந்தவர் எழுந்து உட்கார்ந்து பேசத் தொடங்கினார். இயேசு அவரை அவர் தாயிடம் ஒப்படைத்தார். (லூக்கா 7: 13-15)
மிக எளிமையாகச்
சொல்லப்பட்டுள்ள இந்த வார்த்தைகளில் பொதிந்துள்ள பாடங்களை, நாம் அடுத்தத் தேடலில் கற்றுக்கொள்ள முயல்வோம்.
No comments:
Post a Comment