‘Father, into
your hands I commit my spirit!’
மனித
வாழ்வை, சிறப்பாக, வாழ்வின் முடிவை கணக்கு வழக்கோடு ஒப்பிட்டு அவ்வப்போது பேசுகிறோம்.
ஒருவரது கணக்கை கடவுள் முடித்துவிட்டார் என்றும், மனிதன் போட்ட
கணக்கு வேறு, இறைவன் போட்ட கணக்கு வேறு என்றும் மரணத்தைப்
பற்றி பேசுகிறோம்.
வாழ்வில்
கணக்கு வழக்குகளை நேர்மையாய் முடித்துள்ளவர்கள், நிம்மதியாய் உறங்கப்போவார்கள். தப்புக்
கணக்குகள் எழுதியவர்கள், உறக்கமின்றி தவிக்க வேண்டியிருக்கும். வாழ்வின் இறுதியில்,
நித்திய உறக்கத்திற்குப் போகிறவர்களும், வாழ்க்கைக் கணக்குகளை ஒழுங்காக
முடித்திருந்தால், நிம்மதியாக, நித்திய உறக்கத்தில் ஆழ முடியும். வாழ்க்கைக் கணக்கு தாறுமாறாக
இருந்தால், தவிக்க வேண்டியிருக்கும். அந்தத் தவிப்பு, சில நேரங்களில், மரணப் படுக்கையிலும்
வெளிப்படும்.
ஓர் அருள்பணியாளர்
என்ற முறையில், ஒரு சிலரது வாழ்வின் இறுதிக் கட்டத்தில், ஆன்மீக அளவில் உதவிகள் செய்திருக்கிறேன்.
ஒரு முறை, 80 வயதைத் தாண்டிய ஒருவருக்கு அவ்வகையில்
உதவி செய்ய வேண்டிய சூழ்நிலை. நான் அவர் வீட்டுக்குச் சென்றபோது, அவர் ஏற்கனவே சுயநினைவிழந்திருந்தார். மிகக் கடினப்பட்டு மூச்சு
விட்டுக் கொண்டிருந்தார். நான் அவர் தலைமீது கைகளை வைத்து வேண்டினேன். சிறிது நேரம்
கழித்து அவரது உயிர் பிரிந்தது.
அப்போது
சூழ இருந்தவர்கள், "நீங்க வந்து கை வைக்கணும்னு காத்திருந்தது
போல இருந்துச்சு..." என்று சொன்னார்கள். அவர் ஏறக்குறைய மூன்று நாட்கள் சுய நினைவை
இழந்திருந்தார், கடைசி ஒரு நாள் மூச்சுவிடவும் இயலாமல்
துன்புற்றார் என்றெல்லாம் அறிந்தேன். அவரது இறுதி சடங்குகள் முடிந்து நான் என் அறைக்கு
வந்து, அதைப்பற்றி சிந்தித்தேன். இறக்கும் நிலையில்
உள்ளவர்கள், இறுதி நேரத்தில் சந்திக்கும் போராட்டம் பற்றி சிந்தித்தேன். என் இந்த போராட்டம்? ஒரு வேளை, இறுதி நேரத்தில் எதையாவது சொல்ல
நினைத்தார்களோ? அந்த இறுதி மூச்சு போகுமுன் அவர்கள் மனம், சிந்தனை இவற்றில் எவ்வித எண்ணங்கள் ஓடும்? யாராலும் கண்டுபிடிக்க முடியாது.
பொதுவாகவே, எதையாவது சொல்ல வந்துவிட்டு, சூழ்நிலையால், அதைச் சொல்ல முடியாமல்
போகும்போது, அந்த வார்த்தைகள் தொண்டைக் குழிக்குள் சிக்கிக்
கொண்டதாகச் சொல்கிறோம் இல்லையா? அவ்விதம், வார்த்தைகள், எண்ணங்கள், தொண்டைக்குள், அல்லது, சிந்தைக்குள் சிக்கிக் கொள்ளும்போது, அதுவும் வாழ்வின் இறுதிக் கட்டத்தில் அப்படி சிக்கிக் கொள்ளும்போது, அந்த உயிர் பிரிவதற்கு போராடுகிறது என்று நாம் எண்ணுகிறோம். இல்லையா? அதற்கு மாறாக, வாழ்வின் எல்லா பிரச்சனைகளையும்
தீர்த்துவிட்டவர்கள், எல்லா வகையிலும் ஒரு நிறைவைக் கண்டவர்கள், எவ்வித ஏக்கமும் இல்லாமல் இறுதி நேரத்தை எதிர்பார்ப்பவர்கள், அமைதியாக
உலகைவிட்டுப் பிரிவதையும் நாம் பார்த்திருக்கிறோம். அப்படி ஒரு நிறைவோடு, அமைதியோடு இயேசு இவ்வுலக வாழ்விலிருந்து விடைபெற்றுச் சென்றார்.
துன்பம்
ஏன் என்ற கேள்விக்கு விடை தேடி நாம் கல்வாரிக்கு வந்தோம். அங்கு, சிலுவையில் இயேசு
கூறிய அற்புத சொற்கள் வழியே துன்பம் குறித்த சில பாடங்களைப் பயின்றோம். இன்று, அவர்
சிலுவையில் சொன்ன இறுதிச் சொற்களான "எல்லாம் நிறைவேறிற்று" (யோவான்
19: 30) மற்றும், "தந்தையே, உம் கையில் என் உயிரை ஒப்படைக்கிறேன்" (லூக்கா 23: 46) ஆகியவற்றை சிந்திக்க
வந்திருக்கிறோம். இந்த அமைதியான, நிறைவான முடிவுக்கு வருவதற்கு முன்,
சிலுவையில் இயேசுவும் போராடினார்.
யோவான், லூக்கா இருவரும் இயேசுவின் இறப்பு அமைதியாக இருந்ததென்று குறிப்பிடும்போது, மத்தேயு, மாற்கு இருவரும் “இயேசு உரக்கக் கத்தி உயிர் நீத்தார்” (மத். 27: 50 மாற். 15: 37 )
என்று கூறியுள்ளனர். இயேசு இறுதியாகச் சிலுவையில் சொன்னதாக இவர்கள் இருவரும்
குறிப்பது, போராட்டத்தின் உச்சியில் ஓர் உள்ளம் கதறிச் சொல்லும் வார்த்தைகள்: "எலோயி, எலோயி,
லெமா
சபக்தானி?... என் இறைவா, என் இறைவா, ஏன் என்னைக் கைவிட்டீர்?"
(மத். 27: 46 மாற். 15: 34)
நான்கு
நற்செய்திகளையும் ஒரு சேரப் பார்க்கும்போது,
முழுமையான ஒரு காட்சி
நமக்குக் கிடைக்கிறது. இயேசுவும் தன் இறுதி கணக்கை முடிக்கும்போது, தடுமாறினார், போராடினார், தந்தையை நோக்கி "ஏன் என்னைக் கைவிட்டீர்?" என்று கதறினார். ஆனால், இறுதி நேரத்தில், தன் பணி முழுமை
பெற்றது, தன் கணக்கு சரிவர முடிந்தது என்ற திருப்தியுடன்
அவர் விடை பெற்றார். சாகும் நேரத்தில், இப்படி ஓர் அமைதியை, நிறைவை அடைவதற்கு பல நிலைகளைக் கடந்து வர வேண்டும்.
இந்நிலைகளைப்
புரிந்துகொள்ள, Elizabeth Kubler Ross என்ற மனநல மருத்துவர் எழுதிய நூல் ஒன்று உதவியாக இருக்கும். புற்று
நோய் முற்றிய நிலையில், தங்கள் இறுதி நாட்களை எண்ணிக் கொண்டிருக்கும்
நோயாளிகள் நடுவே, பல ஆண்டுகள் பணியாற்றிய எலிசபெத் அவர்கள், 1969ல் எழுதிய "On Death and
Dying" என்ற நூல், இன்றும், பலராலும் போற்றப்படுகிறது.
மரணத்திற்காக காத்திருக்கும் இவர்களை Terminally
Ill Patients, அதாவது,
வாழ்வின் இறுதிநிலையில் இருக்கும் நோயாளிகள் என்று சொல்கிறோம். இந்நிலையில் உள்ள பல
நூறு நோயாளிகளைச் சந்தித்து, மரணத்தை எதிர்கொள்ள அவர்கள் நிகழ்த்தும்
போராட்டங்களை அறிந்து, அவர்களுக்குப் பல ஆண்டுகள் உதவியபின், எலிசபெத் அவர்கள், தன் அனுபவங்களைத் தொகுத்து எழுதிய நூல் "On Death and
Dying". மரணம் நிச்சயம் என்பது தெரிந்த அந்த நேரத்திலிருந்து
இந்த நோயாளிகள் மேற்கொள்ளும் இறுதி பயணத்தை அவர் ஐந்து நிலைகளாக விளக்கியுள்ளார். அந்த
ஐந்து நிலைகள் நம் சிந்தனைகளுக்கு உதவும்.
புற்று
நோய் தன் மரணத்திற்கு நாள் குறித்துவிட்டது என்பதை உணர்ந்தவர்கள் முதலில் மறுப்பு நிலையில்
இருப்பதாக Elizabeth அவர்கள் கூறுகிறார். “இல்லை, இல்லை... இப்படி இருக்காது, நடக்காது, அதுவும் எனக்கு இப்படி நடக்காது” என்று பல வழிகளில் இவர்கள் அந்த செய்தியை ஏற்றுக்கொள்ள மறுப்பார்கள்.
இரண்டாம்
நிலையில், கோபம் எழும். “ஏன் எனக்கு? நான் என்ன செய்தேன்? இது அநியாயம்.” என்று கோபப்படுவார்கள்.
மூன்றாம்
நிலையில், பேரம் பேசுவார்கள். கடவுளோடு, வாழ்க்கையோடு பேரங்கள் நடக்கும். “என் மகள் கல்யாணம் வரைக்கும் என்னை வாழவைத்துவிடு... எனக்கு குணமானால், உன்னுடைய கோவிலுக்கு நடந்தேவருகிறேன்… எனக்குக் குணமானால், எக்காரணத்தைக் கொண்டும் மது அருந்தமாட்டேன்… என் சொத்தெல்லாம் எடுத்துக் கொள். எனக்கு நலம் தா”...
என்பன போன்ற பேரங்கள்.
நான்காம்
நிலை - ஆழ்ந்த வருத்தத்தில் மூழ்குதல். எதிலும் பற்றற்ற நிலை. எல்லாரையும், எல்லாவற்றையும் விட்டு விட்டு ஒதுங்கும்
நிலை.
ஐந்தாம்
நிலை - தன் சாவை, முடிவை ஏற்கும் நிலை. “சாவு நிச்சயம் என்பது தெரிந்து விட்டது. அதை எப்படி சந்திப்பது
எனக் கற்றுக்கொள்ள ஆசைப்படுகிறேன்” என்று சொல்லும் அளவுக்குப் பக்குவம்
பெறுவது.
எல்லா
நோயாளிகளும், எல்லா நிலைகளையும் வரிசையாகக் கடக்கவேண்டும்
என்று அவசியமில்லை. ஒரு சிலர் ஓரிரு நிலைகளிலேயே இறந்து போகும் வாய்ப்புண்டு. ஒரு சிலர்
முதல் நிலைக்குப் பின் ஐந்தாம் நிலைக்கு நேரடியாகச் செல்லும் பக்குவமும் பெறுகிறார்கள்.
எல்லாரும் இறுதி நிலையை அடைகிறார்கள் என்றும் சொல்லமுடியாது... இது போன்ற கருத்துக்களை
எலிசபெத் அவர்கள், தன் நூலில் குறிப்பிட்டுள்ளார்.
எலிசபெத் அவர்கள் கூறியுள்ள இந்த ஐந்து நிலைகள்,
முதலில், தீராத நோயினால், மரணத்தை எதிர்கொள்ளும் நோயாளிகளை மையப்படுத்தி
கூறப்பட்டன. ஆனால், வாழ்வில் பல்வேறு இழப்புகளைச்
சந்திக்கும் நாம் ஒவ்வொருவரும் இந்நிலைகளை கடந்து செல்கிறோம் என்று எலிசபெத் அவர்கள் கூறியுள்ளார். நமக்கு நெருங்கிய
ஒருவர் இறக்கும்போது, அந்த இழப்பை முதலில் ஏற்க மறுக்கிறோம், பின்னர் கோபப்படுகிறோம்... இவ்விதம், அந்த இழப்பை ஏற்றுக் கொள்வதற்கு
முன், வெவ்வேறு நிலைகளை கடக்க வேண்டியுள்ளது. இதைப்போலவே, வேலையை இழக்கும்போது, பொருள்களை, உடைமைகளை, இழக்கும்போது, அல்லது, நம் நெருங்கிய
உறவினரோ, நண்பரோ பிரிந்து செல்லும்போது... என்று, எல்லா இழப்புகளிலும், இந்த நிலைகளை
நாம் உணரமுடியும். எனவேதான், Elizabeth அவர்கள் எழுதிய இந்நூல், இன்னும் பலருக்கு பல இழப்புகளில் உதவியாக உள்ளது.
இயேசு,
சிலுவையில், அத்தனை போராட்டங்களையும் தாண்டி 5ஆம் நிலையை அடைந்து தன் உயிரை நம்பிக்கையோடு
இறைவனிடம் ஒப்படைத்தார். அவர் விண்ணகம் சென்றதை நாம் இப்படி கற்பனை செய்து பார்க்கலாம்.
வீட்டைத் திறந்து வைத்து, வாசலுக்கு வந்து வழிமேல் விழி வைத்துக்
காத்திருக்கும் ஒரு தாயை, தந்தையைச் சந்தித்து, அவர்கள் அணைப்பில்
தன்னையே முழுவதும் கரைத்துக் கொள்ளும் குழந்தையைப் போல், இயேசு, தன் வானக வீட்டை அடைந்தார்.
"தந்தையே, உம் கையில் என் உயிரை ஒப்படைக்கிறேன்"
என்று வாயார, மனதார சொல்லி உயிர் நீத்தார்.
யோபும்
தன் உடைமைகள், புதல்வர், புதல்வியர், உடல்நலம் அனைத்தையும் இழந்தபின், எலிசபெத் அவர்கள் கூறியுள்ள இந்த ஐந்து நிலைகளில் பலவற்றைக் கடந்தார்
என்பதை யோபு நூல் கூறுகிறது. உச்சநிலை வேதனை, கோபம், என்று பல உணர்வுகளுடன்
போராடிய யோபு, இறுதியில் ஆழ்ந்த அமைதியில் தன் துன்பத்தை ஏற்றுக்கொண்ட வேளையில்,
இறைவனை நேருக்கு நேர் சந்தித்தார் என்பதையும், அவர் இறைவனிடம் சரணடைந்ததும், அவரது
உடைமைகள் இரு மடங்காக திரும்பப் பெறுகிறார் என்பதையும் யோபு நூல், 40 மற்றும் 42
ஆகிய பிரிவுகளில் உணர்கிறோம்.
வாழ்க்கையில்
சந்திக்கும் பல இழப்புகளின் போது அவற்றை சரியான வகையில் ஏற்றுக்கொள்ளும் பக்குவம் பெறவும், நமது இறுதி நேரம் நெருங்கிவரும்போது, நிறைவாக, அமைதியாக, இவ்வுலகை விட்டு விடைபெற்றுச் செல்லும் விதமாக நம் வாழ்க்கை
அமையவும், சிலுவையில் அமைதியாய் உலகினின்று விடைபெற்ற இயேசுவும், தன் துன்பங்களை
உறுதியுடன் தாங்கி போராடிய யோபும், நமக்குத் தேவையானப் பாடங்களைச் சொல்லித்தருவார்களாக!
No comments:
Post a Comment