Nehru delivering the famous “Tryst with Destiny” speech in 1947
இமயமாகும் இளமை – நள்ளிரவில் நாம் பெற்ற சுதந்திரம்
1947ம்
ஆண்டு, ஆகஸ்ட் 14ம் தேதி, நள்ளிரவு நெருங்கிக்கொண்டிருந்த
வேளையில், இந்தியாவின் முதல் பிரதமர், ஜவகர்லால் நேரு அவர்கள்,
முதல் சுதந்திர உரையை
டில்லி சட்டப்பேரவையில் வழங்கினார். "Tryst with
Destiny" அதாவது, "இலக்குடன்
காதல் வயப்படுதல்" என்ற தலைப்பில் அவர் ஆற்றிய உரை, 20ம் நூற்றாண்டில் வழங்கப்பட்ட தலைசிறந்த உரைகளில் ஒன்றாகக் கருதப்படுகிறது.
அவ்வுரையிலிருந்து சில துளிகள்:
நள்ளிரவு
நேரத்தில், உலகம் உறங்கும் வேளையில், இந்தியா சுதந்திரத்திற்கும், வாழ்வுக்கும் விழித்தெழும். இன்று நாம் கொண்டாடும் சாதனை, நமக்காகக் காத்திருக்கும் இன்னும் பெரிய சாதனைகளுக்கு ஒரு
வாயிலாக, வாய்ப்பாக உள்ளது. இந்தியாவுக்குப் பணியாற்றுவது, அங்கு துயருறும் கோடிக்கணக்கானவர்களுக்கு பணியாற்றுவது என்று பொருள்.
வறுமை, அறியாமை, நோய், ஏற்றத்தாழ்வு அனைத்தையும் முடிவுக்குக்
கொணர்வது என்று பொருள்.
இந்தச்
சாதனைப் பயணத்தில் அனைவரும் இணைய விண்ணப்பிக்கிறோம். அற்பத்தனமாக, அழித்து ஒழிக்கும் விமர்சனங்களுக்கோ, விரக்திக்கோ, அடுத்தவரை குறை சொல்வதற்கோ இது
நேரமல்ல. நம் குழந்தைகள் அனைவரும் தங்குவதற்கேற்ற சுதந்திர இந்தியா என்ற மாண்புமிகு
மாளிகையை நாம் கட்டியெழுப்ப வேண்டும்.
இந்நாளில்
நம் சிந்தனைகள், நம் சுதந்திரத்தை வடிவமைத்த தேசத்தந்தையின்
பக்கம் முதலில் திரும்புகின்றன. நம்மைச் சூழ்ந்திருந்த இருளை விரட்டியடிக்க, அவர்,
சுதந்திர தீபத்தை உயர்த்திப் பிடித்தார். எவ்வளவுதான் கடுமையாக புயல் வீசினாலும், அது, சுதந்திர தீபத்தை அணைத்துவிட நாம் அனுமதிக்க மாட்டோம்.
அடுத்ததாக, நமது சிந்தனைகள்,
தங்கள் உயிரை
இழக்கும் வரையில், நம் சுதந்திரத்திற்காக உழைத்த தொண்டர்கள், வீரர்கள் பக்கம் திரும்புகின்றன.
நமக்கு
முன் கடினமான பணியொன்று காத்திருக்கிறது. இந்திய மக்கள் அனைவரும் தங்கள் வாழ்வின் இலக்கை
அடையும்வரை நமக்கு ஓயவில்லை.
நாம்
அனைவரும் எந்த மதத்தைச் சேர்ந்தவராக இருந்தாலும், இந்திய நாட்டின் பிள்ளைகளான நம் அனைவருக்கும் சம உரிமைகள், சிறப்பு உரிமைகள்,
கடமைகள் என
அனைத்தும் சமமாக உள்ளன. குழுவாதங்களை அல்லது குறுகிய சிந்தனைகளை என்றும் ஆதரிக்கவோ, ஊக்கப்படுத்தவோ கூடாது. குறுகிய சிந்தனைகளை, கருத்தளவிலோ, செயல்பாட்டளவிலோ,
நடைமுறைப்படுத்தும் மக்களைக் கொண்டிருக்கும் நாடு, சிறந்த நாடாக இருக்க முடியாது.
பழமையும், புதுமையும் நிரந்தரமாகக் கலந்திருக்கும் நம் தாய் நாடான இந்தியாவுக்கு
நமது வணக்கம். அவளது பணியில் நம்மையே பிணைப்போம்.
ஜெய்ஹிந்த்!
Jesus heals
on the Sabbath
புதுமைகள் : பார்வை பெறுதலும், பார்வை இழத்தலும் – பகுதி 6
யோவான்
நற்செய்தியில் காணப்படும் ஏழு புதுமைகளில், மூன்று, குணமளிக்கும் புதுமைகள்.
அவற்றில் இரண்டு, ஓய்வுநாளில் இடம்பெறுகின்றன. நாம் சென்ற விவிலியத் தேடலில்
குறிப்பிட்டதுபோல், ஓய்வுநாள் புதுமைகள், ஊருக்கு வெளியிலோ, தனிப்பட்டவர்
இல்லத்திலோ நிகழவில்லை. பலரும் கூடிவரும் பொதுவான இடங்களில், நிகழ்ந்தன. எனவே
இவற்றை வெறும் நிகழ்வுகளாக மட்டும் அல்லாமல், பாடங்களாகவும் வழங்கினார், இயேசு.
இவ்விரு
புதுமைகளில், நற்செய்தியாளர் யோவான், சொல்லாமல் சொல்லித்தரும் மற்றொரு பாடம்
என்னவெனில், அதுவரை மனிதர்களின் கவனத்தைப் பெறாமல், சமுதாயத்தின் விளிம்பில்
வாழ்ந்த இருவர், குணமடைந்தபின், இயேசுவின் நற்செய்தியைப் பறைசாற்றும் சாட்சிகளாக
மாறினர் என்பது.
பெத்சதா
குளத்தருகே நிகழ்ந்த புதுமையில், 38 ஆண்டுகள், யாருடைய கவனத்தையும் ஈர்க்காமல்,
அந்த குளத்தருகிலேயே கிடந்தவர், குணமடைந்த அன்றே, மக்களின் கவனத்தை ஈர்க்கிறார். அத்தனை
ஆண்டுகளாக, தரையோடு, தரையாகக் கிடந்த அந்த மனிதருக்கு, இயேசு வழங்கிய ஒரு கட்டளையை அவர் தட்டாமல் பின்பற்றியது, பிரச்சனைகளை உருவாக்கியது. குணமானவர், 38 ஆண்டுகளாக படுத்திருந்த அந்தப் படுக்கையை, குளத்தருகே விட்டுவிட்டு, அவர் மட்டும் நடந்து சென்றிருந்தால், யாருடைய கவனத்தையும் ஈர்த்திருக்க மாட்டார். எந்த பிரச்சனையும்
எழுந்திருக்காது. ஆனால், 'எழுந்து உம்முடைய படுக்கையை எடுத்துக்கொண்டு
நடந்து செல்லும்' (யோவான் 5:8) என்று இயேசு கூறியதை தட்டாமல் பின்பற்றியதால், அவர் மற்ற யூதர்களின் கவனத்தை ஈர்த்தார்.
பெத்சதா
குளத்தைச் சுற்றியிருந்த மண்டபங்களில், அடைபட்டுக்கிடந்த மனிதர், தன் படுக்கையை எடுத்துக்கொண்டு வெளி உலகில் அடியெடுத்து வைத்தபோது,
அவரைச் சந்தித்த யூதர்களின் கண்ணில் முதலில் பட்டது, அவர் படுக்கையைச்
சுமந்து சென்ற குற்றம். யூதர்களில் ஒருசிலர்,
அந்தக் குளத்தினருகே
அவர் படுத்துக்கிடந்ததைப் பார்த்திருக்கக்கூடும். இன்று அவர் நடந்துவந்ததைக் கண்ட அவர்கள், அவர் குணமடைந்ததை
எண்ணி மகிழ்ந்திருக்க வேண்டும். ஆனால், அவர்கள் கவனத்தை முதலில் ஈர்த்தது, அவர் குணம் அடைந்த அற்புதம் அல்ல, மாறாக, அவர் படுக்கையைச் சுமந்து சென்றார்
என்ற குற்றம் மட்டுமே. உடனே அவர்கள் தங்கள் கண்டனத்தை வெளியிடுகின்றனர்: "ஓய்வு நாளாகிய இன்று படுக்கையை எடுத்துச்
செல்வது சட்டத்திற்கு எதிரான செயல்" (யோவான் 5:10) என்று கூறுகின்றனர்.
இத்தனை
ஆண்டுகள், தன் படுக்கையிலேயே சிறைப்பட்டிருந்தவருக்கு, ஒய்வு நாளும், மற்ற நாள்களும் ஒன்றுபோலவே இருந்திருக்கும்.
எனவே, யூதர்கள் கூறியதை அவர் பெரிதுபடுத்தாமல், தன்னை குணமாக்கியவர், படுக்கையை எடுத்துக்கொண்டு போகச்
சொன்னதால், தான் அவ்வாறு செய்வதாகக் கூறினார். உடனே, அங்கு ஒரு வழக்கு ஆரம்பமாகிறது. இயேசுவின் மீது குற்றங்கள்
சுமத்தப்படுகின்றன.
பெத்சதா
குளத்தருகே உருவான பிரச்சனையை 9 இறைவாக்கியங்களில் விவரிக்கும் நற்செய்தியாளர்
யோவான், சிலோவாம் குளத்தருகே உருவான பிரச்சனையை 34 இறைவாக்கியங்கள் வழியே
விவரித்துள்ளார். அது ஓர் இறையியல் பாடமாக அமைந்துள்ளது என்பது, பல விவிலிய
ஆய்வாளர்களின் கருத்து.
இயேசு
உமிழ் நீரால் சேறு உண்டாக்கி, பார்வையற்றவர் கண்களில் பூசினார்.
சிலோவாம் குளத்தில் கண்களைக் கழுவச் சொன்னார். அவரும் போய் கழுவினார். பார்வை பெற்றார்.
பார்வை பெற்றவர், நேராக தன் இல்லம் சென்றிருந்தால், அத்துடன்,
இப்புதுமை அமைதியாக முடிந்திருக்கும், சுபம் போட்டிருக்கலாம். புகழை விரும்பாத
இயேசுவுக்கும் அது மிகவும் பிடித்த செயலாக இருந்திருக்கும். ஆனால், நடந்தது வேறு. "அவரும் போய் கழுவி, பார்வை பெற்றுத் திரும்பிவந்தார்" (யோவான் 9:7)
அவர்
திரும்பிவந்ததால், பிரச்சனைகள் ஆரம்பமாயின. இந்தப்
பிரச்சனையை ஒரு வழக்கைப்போல் யோவான் பதிவுசெய்துள்ளார். எந்த ஒரு வழக்கிலும், இருபுறமும் சொல்லப்படும் கருத்துக்களுக்குச் செவிமடுத்து, தீர்ப்பு வழங்கப்படும். ஆனால், இந்த வழக்கிலோ, இயேசு ஒரு குற்றவாளி என்ற தீர்ப்பு, ஏற்கனவே எழுதப்பட்டபின், வழக்கு
ஆரம்பமானது.
பார்வை
பெற்றவர், கோவில் வாசலில் அமர்ந்து பிச்சையெடுத்தவர். அவர் பிறவியிலேயே பார்வைத்திறன்
இன்றி பிறந்தவர் என்று கூறப்பட்டிருப்பதால்,
அவர், பல ஆண்டுகள்,
கோவில் அருகே அமர்ந்து தர்மம் கேட்டு வாழ்ந்திருக்க வேண்டும். அத்தனை ஆண்டுகளாக,
அவரைக் கண்டும் காணாமல் வாழ்ந்தனர் யூதர்கள். அவர், பார்வை பெற்றதும், மற்றவர் கண்களும், அவரை ஒரு மனிதராகப் பார்க்கும் வண்ணம்
திறக்கப்படுகின்றன.
பார்வை
பெற்றவர் தான் தர்மம் கேட்டு வாழ்ந்த இடத்திற்கு திரும்பி வர காரணம் என்ன? தனக்கு இந்தப் புதுமையை,
பெரும் நன்மையைச்
செய்தவர் யார் என்பதைத் தெரிந்துகொள்ள, அவருக்கு தன் நன்றியைக் கூற, அவர்
திரும்பி வந்திருக்க வேண்டும். உடல் குறைகளின் காரணமாக, கோவில் வாசலில், தன்னோடு
அமர்ந்து, பிச்சை எடுத்துவந்த தன் நண்பர்களிடம், தனக்கு நடந்ததை எடுத்துச்சொல்லி, மகிழ்வைப் பகிர்ந்து கொள்ளவும், முடிந்தால்,
அவர்களையும், புதுமை செய்யும் அந்த மகானிடம் அழைத்துச் செல்லவும், அவர் திரும்பி வந்திருக்க
வேண்டும். இவ்வகை நல்ல எண்ணங்களுடன் வந்தவர்,
தான் பெரியதொரு பிரச்சனையில்
சிக்கிக் கொள்வோம் என்று கொஞ்சமும் எதிர்பார்த்திருக்க மாட்டார். புதுமை நடந்தது, ஓர்
ஒய்வு நாள் என்பதுதான் பிரச்சனை.
வாழ்க்கையில்
மலைபோல் குவிந்திருக்கும் பிரச்சனைகளில் தினமும் வாழ்ந்தவர்கள் அந்தப் பிச்சைக்காரர்கள்.
அவர்களுக்கு, நல்ல நாள், பெரிய நாள், ஒய்வு நாள் என்றெல்லாம் பாகுபாடுகள்
இருந்ததில்லை. எனவே, கண் பார்வை பெற்றவருக்கு அது ஒய்வு நாள்
என்பதே தெரிந்திருக்க நியாயமில்லை.
அதுவரை
அவரது குறையைப் பார்த்து, தர்மம் செய்து வந்த பலர், அவர்
குணமான பின் அவரை அடையாளம் கண்டுகொள்ள முடியாமல் சந்தேகப்பட்டனர். இவர் அவரல்ல, அவரைப் போல் இருக்கிறார் என்ற பல சந்தேகங்களை எழுப்பினர். (யோவான்
9:8-9)
உள்ளத்தில்
ஏற்படும் மாற்றத்தால், உடலில், முக்கியமாக, முகத்தில் ஏற்படும் மாற்றங்களை
நாம் பார்த்திருக்கிறோம். லியொனார்தோ தா வின்சி என்ற உலகப்புகழ் பெற்ற ஓவியரின்
வாழ்வில் நிகழ்ந்ததாகச் சொல்லப்படும் சம்பவம் நினைவுக்கு வருகிறது.
தா வின்சி
அவர்கள், "இறுதி இரவுணவு" என்ற உலகப் புகழ் மிக்க ஓவியத்தை வரைவதற்கு ஆட்களைத்
தேடுகிறார் என்று அறிந்ததும், நூற்றுக்கணக்கான இளைஞர்கள் அவரது
இல்லம் நோக்கி படையெடுத்தனர். அந்தக் கூட்டத்தில், அமைதியாக, கொஞ்சம் ஒதுங்கியே நின்ற 20 வயது இளைஞன் ஒருவரை, தா வின்சி
அவர்கள் முதலில் தெர்தேடுத்தார். அவரை அமரவைத்து, இயேசுவை
வரைந்து முடித்தார். பின்னர், ஒவ்வொரு சீடரையும் வரைவதற்கு ஆட்களைத் தேர்ந்தெடுத்து, வரைந்து கொண்டிருந்தார். ஆறு ஆண்டுகளாய்த் தீட்டப்பட்ட இந்த ஓவியத்தின்
இறுதி கட்டமாக, யூதாஸை வரைய ஆரம்பித்தார், தா வின்சி. உரோமையச் சிறையிலிருந்து அனுப்பப்பட்ட
ஓர் இளைஞனை வைத்து, தா வின்சி அவர்கள் யூதாஸை வரைந்துகொண்டிருந்தபோது, அங்கு
அமர்ந்திருந்த கைதி கதறி அழுதான். தான் வரைவதை நிறுத்திவிட்டு, தா வின்சி அவர்கள்,
அந்த இளையவரிடம் அமர்ந்து, அவரது கண்ணீருக்குக் காரணம் கேட்டார். “ஐயா, ஆறு வருடங்களுக்கு முன் நீங்கள் தீட்டிய இயேசுவும் நான்தான்” என்று அந்த இளையவர் சொன்னார்.
நம்மில்
பலருக்குத் தெரிந்த கதை இது. இந்நிகழ்வு உண்மையாக நடந்ததா என்பது தெரியவில்லை. ஆனால், ஓர் இளைஞன் தன் பழக்க வழக்கங்களில் மாறும்போது, அவரது
வெளித்தோற்றமும் வெகுவாக மாறிவிடுவதை எல்லாருமே பார்த்திருக்கிறோம், உணர்ந்திருக்கிறோம். அகத்தின் அழகு முகத்தில் தெரியும் என்பது
அனைவரும் அறிந்த பழமொழி. பார்வையிழந்து, பரிதாபமாய் அமர்ந்து பிச்சை எடுத்துக்
கொண்டிருந்தவர், இயேசுவின் அருளால் பார்வை பெற்றதும், அடையாளம் தெரியாத அளவு மாறியிருந்தார்.
பார்வை
பெற்றவர், சந்தேகத்தோடு தன்னைப் பார்த்தவர்களிடம் "நான்தான் அவன்" என்று
பெருமையோடு, பூரிப்போடு சொன்னார் (யோவான் 9:9). 'நான்தான் அவன்' என்று அவர் கூறிய அந்த நேரத்திலிருந்து,
இறைவனின் கருணைக்கு, புதுமைக்கு, தான் ஒரு சாட்சி என்று, புதிய
வாழ்வை ஆரம்பித்தார். சிலோவாம், அதாவது, அனுப்பப்பட்டவர் என்ற பொருள்படும்
குளத்தில் கண்களைக் கழுவி பார்வை பெற்ற அவர், இறைவனின் கருணையை எடுத்துரைக்க
அனுப்பப்பட்டவராக மாறினார். அனுப்பப்பட்டவரின் சாட்சிய வாழ்வு, பிரச்சனையோடு ஆரம்பித்தது.
இந்தப் பிரச்சனை சென்ற திசையில், நாம் அடுத்த வாரம் பயணிப்போம்.
No comments:
Post a Comment