18 September, 2018

விவிலியத்தேடல் : புதையுண்டவர் புதுவாழ்வு பெற்ற புதுமை – பகுதி 3


My Story – Chuma Somdaka

இமயமாகும் இளமை காலை இழந்தாலும், கனவை இழக்காமல்...

இளம்பெண் கூமா சொம்டகா (Chuma Somdaka) அவர்கள், தென்னாப்பிரிக்காவின், கேப் டவுன் நகரில் வாழ்பவர். வீடற்ற நிலையில் வாழும் கூமா அவர்களுக்கு, அந்நகரின் கம்பெனி பூங்கா கடந்த சில ஆண்டுகளாக, புகலிடமாய் இருந்து வருகிறது. 2007ம் ஆண்டு நிகழ்ந்த ஒரு விபத்தில், கூமா அவர்கள், தன் வலது காலை பாதி இழந்தார். இதைத் தொடர்ந்து, அவர், தன் தாயையும், அவர்கள் வாழ்ந்துவந்த இல்லத்தையும் இழந்தார். அவரது புகலிடமாக மாறிய கம்பெனி பூங்காவில், கூமா அவர்கள், ஒரு நாள், ஒரு குச்சியை எரித்து, அதிலிருந்து உருவான கரித்துண்டைக் கொண்டு, தன் முதல் ஓவியத்தை வரைந்தார்.
நகரின் குப்பைத் தொட்டிகளில் அவர் திரட்டிய வண்ணங்களைக் கொண்டு, கடந்த 10 ஆண்டுகளாக பல ஓவியங்களை அவர் தீட்டியுள்ளார். வாழ்வில் தான் சந்திக்கும் பலரை, தன் ஓவியங்களின் கதாநாயகர்களாக தீட்டியுள்ளார். அவர் பூங்காவில் உறங்கிய வேளையில், அவரது ஓவியங்களில் சிலவற்றை யாரோ எடுத்துச் சென்றனர். எனவே, அன்றுமுதல், அவர் தன் ஓவியங்கள் மீது படுத்துறங்கி, அவற்றைக்  காத்து வந்தார். 2017ம் ஆண்டின் துவக்கத்தில், அவரது ஓவியங்களைக் கண்ட ஒரு சில இளையோர், அந்த ஓவியங்களைக் கொண்டு, ஒரு கண்காட்சியை உருவாக்கினர்.
தன் ஓவியங்கள், கண்ணாடிச் சட்டங்களில் மாட்டப்பட்டு, அழகானதோர் அறையில் கண்காட்சியாக மாறியதைக் கண்ட கூமா அவர்கள், ஆனந்த கண்ணீர் வடித்தார். தற்போது, ஓர் ஓவியப் பள்ளியில் பயின்றுவரும் இளம்பெண் கூமா அவர்கள், "நான் காலை இழந்தேன்; தாயை இழந்தேன்; வீட்டை இழந்தேன். ஆனால், கனவை இழக்காமல் வாழ்ந்தேன். அதன் பயனை இன்று காண்கிறேன். என் ஓவியங்களின் விற்பனை வழியே வரும் தொகையைக் கொண்டு, வீடற்றவர்களுக்கு உதவப் போகிறேன்" என்று தன் ஊடகப் பேட்டிகளில் கூறிவருகிறார்.
இளம்பெண் கூமா அவர்களின் பெயரால் ஒரு வலைத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது. இவ்வலைத்தளத்தின் விருதுவாக்காக வழங்கப்பட்டுள்ள சொற்கள் - Take your broken heart, make it into art. அதாவது, உன் உடைந்த இதயத்தை எடுத்து, அதை கலையாக உருவாக்கு.

Mary and Martha with their sick brother Lazarus

புதையுண்டவர் புதுவாழ்வு பெற்ற புதுமை பகுதி 3

யோவான் நற்செய்தியில் பதிவு செய்யப்பட்டுள்ள இறுதி அரும் அடையாளம், இலாசரை உயிர்பெற்றெழச் செய்யும் புதுமை. இப்புதுமையில் பங்கேற்கும் இலாசர், மரியா, மார்த்தா என்ற மூவரைக் குறித்து, நற்செய்தியாளர் யோவான், 11ம் பிரிவின் முதல் இரு இறைவாக்கியங்களில், வழங்கிய அறிமுகத்தை, சென்றவாரத் தேடலில் சிந்தித்தோம். இந்த அறிமுகத்தைத் தொடர்ந்துவரும் இறைவாக்கியத்தில் இன்று நம் தேடல் தொடர்கிறது: இலாசரின் சகோதரிகள் இயேசுவிடம் ஆளனுப்பி, "ஆண்டவரே, உம் நண்பன் நோயுற்றிருக்கிறான்" என்று தெரிவித்தார்கள். (யோவான் 11:3)

அச்சகோதரிகள் அனுப்பியச் செய்தியை, பல விவிலிய விரிவுரையாளர்கள், அழகியதொரு செபம் என்று கூறியுள்ளனர். அவர்களில், ஜோஹான் ஆல்ப்ரெக்ட் (Johann Albrecht Bengel) என்ற விரிவுரையாளர், இச்சகோதரிகளின் சொற்களையும், அன்னை மரியா கானா திருமணத்தில் கூறிய சொற்களையும் ஒப்புமைப்படுத்தியுள்ளார்.
"திராட்சை இரசம் தீர்ந்துவிட்டது" (யோவான் 2:3) "ஆண்டவரே, உம் நண்பன் நோயுற்றிருக்கிறான்" (யோவான் 11:3) என்ற இவ்விரு வாக்கியங்களையும் மேலோட்டமாகப் பார்க்கும்போது, அவை இரண்டும், குறையொன்றை வெளிச்சமிட்டுக் காட்டும் தகவல்களைப்போல் தோன்றுகின்றன. ஆனால், இவ்விரண்டுமே அழகிய செபங்கள் என்பதை நாம் புரிந்துகொள்ளலாம். கானா திருமணப் புதுமையில், "திராட்சை இரசம் தீர்ந்துவிட்டது" என்று அன்னை மரியா கூறியதை சிந்தித்தபோது பகிர்ந்துகொண்ட ஒரு சில கருத்துக்களை மீண்டும் நினைவுக்குக் கொணர்வோம்.

அன்னை மரியா, கானா திருமண வீட்டில் எழுந்த குறையை உணரந்ததும், தன் மகனிடம் சென்று, "திராட்சை இரசம் தீர்ந்துவிட்டது" என்றார். இரசம் தீர்ந்துவிட்டது என்ற சாதாரணமான, எதார்த்தமான கூற்றை, செபம் என்ற கொணத்தில் எண்ணிப்பார்க்க நாம் தயங்கலாம். ஆனால், ஆழமாகச் சிந்தித்தால், இது ஓர் அழகிய செபம் என்பதைப் புரிந்துகொள்ளலாம்.
செபம் என்றதும், இது வேண்டும், அது வேண்டும் என்ற நீண்ட பட்டியல் ஒன்று நம் உள்ளத்தை நிறைக்க வாய்ப்புண்டு. இல்லையா? கடவுளிடம் நீண்ட பட்டியல்களை அனுப்புவதற்கு பதில், ஒளிவு மறைவு ஏதுமின்றி, நம் உண்மை நிலையைச் சொல்வது, இன்னும் அழகானதொரு செபம். நமது தேவைகளை, நம்மைவிட, நம் இறைவன் நன்கு அறிவார்; அவரிடம் குறையைச் சொன்னால் போதும்; மற்றவை அனைத்தையும் அவர் நிறைவேற்றுவார் என்று எண்ணுவதற்கு, ஆழமான நம்பிக்கை வேண்டும். உண்மை நிலையை வெளிப்படுத்துவது எவ்விதம் செபமாக மாறும் என்பதை, ஒரு கற்பனைக்காட்சியின் வழியே புரிந்துகொள்ள முயல்வோம்.

வீட்டுத்தலைவர் ஒருவர், காலையில், செய்தித்தாளைப் படித்தபடி, வீட்டில் அமர்ந்திருக்கிறார். வீட்டுத்தலைவி, அவருக்கு காப்பி கலக்க சமையலறைக்குள் செல்கிறார். சர்க்கரை தீர்ந்துவிட்டது என்பதை உணர்கிறார். சமையலறையில் இருந்தபடியே, "என்னங்க, சக்கர தீந்துடுச்சுங்க" என்கிறார். இதன் பொருள் என்ன? ‘தயவு செய்து, செய்தித்தாளை கீழே வைத்துவிட்டு, கடைக்குப் போய், சர்க்கரை வாங்கி வாருங்கள் என்பதுதானே? அவர் அதைப் புரிந்துகொண்டு, கடைக்குச் செல்வதற்காக சட்டையை மாட்டிக்கொண்டிருக்கும்போது, "ஆங்... சொல்ல மறந்துட்டேன். அரிசியும் தீந்துடுச்சுங்க" என்று சொல்கிறார் வீட்டுத்தலைவி. தலைவர் இந்தத் தேவைகளுக்கு என்ன செய்வார் என்று தலைவிக்குத் தெரியும். அந்த நம்பிக்கையில் சொல்லப்பட்ட உண்மைகள் இவை. "திராட்சை இரசம் தீர்ந்துவிட்டது" என்று சொன்னபோது, மரியாவும் இத்தகையதோர் உண்மையை இயேசுவுக்கு முன்னால் வைக்கிறார். இலாசரின் சகோதரிகளும், இயேசுவின் மீது கொண்டிருந்த நம்பிக்கையால், "ஆண்டவரே, உம் நண்பன் நோயுற்றிருக்கிறான்" என்ற உண்மையை, ஒரு மறைமுகமான செபமாக அனுப்பி வைக்கின்றனர்.

செபத்தைக் குறித்து, செபிப்பதைக் குறித்து பல நூறு கதைகள் உள்ளன. நம் தேவைகளை, நம்மைவிட இறைவன் நன்கறிவார் என்ற நம்பிக்கையை வெளிப்படுத்தும் ஒரு கதை இது. செபத்தின் எடை (The Weight of Prayer) என்ற இக்கதையின் தலைப்பு நம் கவனத்தை முதலில் ஈர்க்கின்றது. மளிகைக்கடை ஒன்றில் நடப்பதாக இக்கதை கூறப்பட்டுள்ளது.
மளிகைக்கடை முதலாளியிடம் ஓர் ஏழைப்பெண் வந்து, தன் குடும்பத்திற்கு அன்றிரவு மட்டும் உணவு தயாரிக்கத் தேவையான பொருள்களை, கடனாகத் தரும்படி கெஞ்சினார். அப்பெண்ணின் கணவர், உடல்நலமின்றி இருந்ததால், வேலையிலிருந்து அனுப்பப்பட்டுவிட்டார். அவர்களுக்கு ஏழு குழந்தைகள். அவர்கள் அனைவரும் கடந்த சில நாட்களாக பட்டினியால் தவித்தனர் என்பதைக் கூறி, உதவிகேட்ட அப்பெண்ணை, அவ்விடத்தைவிட்டு துரத்திக் கொண்டிருந்தார், கடை முதலாளி.
கடையில் பொருள்கள் வாங்கிவிட்டு, அதற்குரிய பணத்தைச் செலுத்த வந்த ஒருவர், இந்தக் காட்சியைக் கண்டு மனமிரங்கி, அந்த முதலாளியிடம், "அந்தப் பெண்ணுக்குத் தேவையானதைக் கொடுங்கள். நான் அதற்குரிய பணத்தைத் தருகிறேன்" என்று சொன்னார். முதலாளி சலிப்புடன் அந்தப் பெண்ணிடம், "சரி, உனக்குத் தேவையான பொருள்களை இந்தக் காகிதத்தில் எழுதி, தராசில் வை. அந்தக் காகிதத்திற்கு ஈடான எடைக்கு நான் பொருள்களைத் தருகிறேன்" என்று ஏளனமாகச் சொன்னபடி, அப்பெண்ணிடம் ஒரு காகிதத்தைக் கொடுத்தார். காகிதத்தைப் பெற்றுக்கொண்ட அப்பெண், ஒரு நிமிடம் கண்களை மூடி செபித்தார். பின்னர், அந்தக் காகிதத்தில் எதையோ எழுதி, தராசில் அதை வைத்தார். காகிதத் துண்டு வைக்கப்பட்ட தராசுத்தட்டு கீழிறங்கியது. இதைப் பார்த்த முதலாளிக்கு அதிர்ச்சியாக இருந்தது. அப்பெண்ணுக்கு பணவுதவி செய்ய வந்திருந்தவரும் இதைக் கண்டு ஆச்சரியம் அடைந்தார்.

"சரி, உனக்குத் தேவையானப் பொருள்களை மற்றொரு தட்டில் வை" என்று எரிச்சலுடன் சொன்னார் முதலாளி. தனக்குத் தேவையான அரிசி, பருப்பு, எண்ணெய், ஆகியவற்றை அந்தப் பெண் அடுத்தத் தட்டில் வைத்தார். அவர் எவ்வளவு வைத்தாலும், காகிதம் வைத்திருந்த தட்டு மேலே எழவில்லை. அந்தப் பெண் தராசில் வைத்த பொருள்களை வேண்டா வெறுப்பாக அவரிடம் கொடுத்தார் முதலாளி. அருகில் இருந்தவர், ‘நான் கண்ட இப்புதுமைக்கு எவ்வளவு கொடுத்தாலும் தகும் என்று சொல்லியபடியே, மகிழ்ச்சியுடன் அதற்குரிய பணத்தைக் கொடுத்தார். அந்த ஏழைப்பெண் சென்றபின், கடை முதலாளி தராசைச் சோதித்துப் பார்த்தபோது, அது பழுதடைந்து விட்டதென்பதைப் புரிந்துகொண்டார். பின்னர், அந்த ஏழைப்பெண் தராசில் வைத்த காகிதத் துண்டை எடுத்துப் பார்த்தார், முதலாளி. அந்தக் காகிதத்தில், பொருள்களின் பட்டியல் எதுவும் எழுதப்படவில்லை. மாறாக, அப்பெண் காகிதத்தில் ஒரு சிறு செபத்தை எழுதியிருந்தார். "இறைவா, எங்கள் தேவை என்னவென்று உமக்கு நன்றாகத் தெரியும். எங்கள் தேவையை நிறைவு செய்தருளும்" என்பதே அந்தச் செபம்.

இக்கதையை கேட்கும்போது, காகிதம் வைக்கப்பட்டத் தராசுத் தட்டு கீழிறங்கி நின்றது, கடை முதலாளி அதிர்ச்சியில் உறைந்துபோனது, என்ற இரு காட்சிகள், நம் மனதில் ஆழமாய் பதிகின்றன. காற்றில் பறக்கும் அளவுக்கு கனமற்ற காகிதம், கனமான உலோகத்தால் ஆன தராசையும் கட்டி வைக்கும் திறன் பெறுகிறது. எதனால்? அப்பெண் காகிதத்தில் பதித்த செபத்தால்; கடவுளின் கருணையால்! ‘செபத்தின் எடை என்ற இக்கதையின் தலைப்பிற்கு நாம் தரக்கூடிய விளக்கம் இதுதான்: செபம் வெளியாகும் மனதில் உள்ள பாரத்தைப் பொருத்து, செபத்தின் எடையும் கூடும்.

நம்மைவிட, நம் தேவைகளை இறைவன் நன்கு அறிவார் என்ற நம்பிக்கையில் அன்னை மரியாவும், இலாசரின் சகோதரிகளும் எழுப்பிய செபங்கள், நமக்கு செபத்தின் அழகைச் சொல்லித் தருகின்றன. 

இலாசரின் சகோதரிகள் அனுப்பியச் செய்தியில், அவர்கள் தங்கள் சகோதரனுக்கும், இயேசுவுக்குமிடையே நிலவும் உறவை அழகாகக் கூறியுள்ளனர். "உம் நண்பன். நோயுற்றிருக்கிறான்" என்று நாம் வாசிக்கும் இச்சொற்கள், வேறு பதிப்புகளில், "ஆண்டவரே, நீர் அன்பு செய்பவன் நோயுற்றிருக்கிறான்" என்று கூறப்பட்டுள்ளன. இந்த உறவில், 'உம்மை அன்பு செய்பவன்' என்று, தங்கள் சகோதரனை முன்னிலைப்படுத்தாமல், "நீர் அன்பு செய்பவன்" என்று, அச்சகோதரிகள், இயேசுவை முன்னிலைப்படுத்தியுள்ளனர்.

இயேசுவால் தனிப்பட்ட முறையில் அன்புகூரப்பட்ட யோவான், எந்த ஓர் உறவையும் துவக்கி வைப்பது இறைவனே என்பதை, தன் திருமடலில் அழகாகக் கூறியுள்ளார். "நாம் கடவுள்மீது அன்பு கொண்டுள்ளோம் என்பதில் அல்ல, மாறாக அவர் நம்மீது அன்புகொண்டு தம் மகனை நம் பாவங்களுக்குக் கழுவாயாக அனுப்பினார் என்பதில்தான் அன்பின் தன்மை விளங்குகிறது." (1 யோவான் 4:10)
இதே அழகான எண்ணத்தை, இலாசரின் சகோதரிகள் இந்தக் கூற்றில் வெளிப்படுத்தியுள்ளனர். இயேசுவுடன் கொண்டிருந்த நட்பில், அவரே இந்த அன்புக்கு அடித்தளம் என்பதை, இலாசரின் சகோதரிகள், நிச்சயம் சுவைத்திருப்பர். எனவேதான், "நீர் அன்பு செய்பவன்" என்று இலாசரைக் குறித்து தெளிவாகக் கூறியுள்ளனர்.

"ஆண்டவரே, நீர் அன்பு செய்பவன் நோயுற்றிருக்கிறான்" என்று அச்சகோதரிகள் அனுப்பிய செய்தியில், மற்றோர் எண்ணமும் தெளிவாகிறது. அதாவது, இயேசுவால் அன்பு செய்யப்பட்டவர்கள் என்ற காரணத்தால், ஒருவர் துன்பம் அடையமாட்டார் என்பது நிச்சயம் அல்ல. இன்னும் சொல்லப்போனால், இயேசுவால் அன்பு செய்யப்பட்டவர்கள் அனைவருமே, கூடுதலான துன்பத்தைத் தாங்க அழைப்பு பெற்றிருந்தனர் என்பதை நாம் உணரலாம்.

மார்த்தாவும், மரியாவும், இயேசுவின் நெருங்கிய நண்பர்கள் என்பதால், இயேசுவைச் சூழ்ந்து எழுந்த எதிர்ப்புக்களை, அவர்களும் உணர்ந்திருப்பர். இந்த எதிர்ப்புக்களிலிருந்து சிறிது காலம் விலகி இருப்பதற்காக இயேசு யோர்தான் பகுதிக்கு சென்றுள்ளார் என்பதையும் அவர் எருசலேம் நகருக்கருகே உள்ள பெத்தானியாவுக்கு வருவது ஆபத்து என்பதையும், அவர்கள் கட்டாயம் அறிந்திருப்பர். இருப்பினும், அவர்களால், தங்கள் சகோதரனின் நிலையை இயேசுவிடம் கூறாமலும் இருக்க முடியவில்லை. எனவே, இயேசுவை எவ்விதத்திலும் வற்புறுத்த விழையாமல், அதே நேரம், தங்கள் மனதின் கவலைகளை வெளிப்படுத்தும் வண்ணம், "ஆண்டவரே, உம் நண்பன் நோயுற்றிருக்கிறான்" என்ற செய்தியை, செபத்தை அவர்கள் அனுப்பி வைத்தனர். இச்செய்தியைக் கேட்டபின், இயேசு செய்தது புதிராக உள்ளது. இந்தப் புதிரைப் புரிந்துகொள்ள அடுத்தத் தேடலில் முயல்வோம்.


No comments:

Post a Comment