Woman rickshaw
puller from Bangladesh
இமயமாகும் இளமை – மனதில் துணிவிருந்தால் மலையும் வழிவிடும்
அக்டோபர்
மாதத் துவக்கத்தில், பிபிசி தமிழ் வலைத்தளத்தில் ஒரு காணொளிச்
செய்தி வெளியாகியிருந்தது. பங்களாதேஷ் நாட்டின் டாக்கா நகரில் ரிக்சா ஓட்டி வாழும்
ரோஜினா பேகம் என்ற இளம் தாயைக் குறித்த காணொளிச் செய்தி அது. இக்காணொளியின் ஆரம்பத்தில், ஒரு சேரியின் குறுகலான வீதியிலிருந்து, சாலைக்கு வந்து சேரும் ரோஜினா அவர்களைக் காண்கிறோம். போலியோ நோயினால்
இரு கால்களும் பாதிக்கப்பட்டதால், தரையில் அமர்ந்தபடியே நகர்ந்து
வரும் இளம் தாய், சாலையின் ஓரத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த
ஒரு ரிக்சாவில் ஏறி, ஓட்டுநர் இருக்கையில் அமர்கிறார். அவருடன் 'காமிரா'வும் பயணிக்கிறது. ரோஜினா தன் கதையைக்
கூறுகிறார்.
சிறு
வயதில், ரோஜினா பேகம் அவர்களைத் தாக்கிய போலியோ
நோயினால் இரு கால்களும் பாதிக்கப்பட்டு, எந்த வேலையும் செய்ய இயலாமல், சாலைகளில் அமர்ந்து தர்மம் கேட்டு வாழ்ந்தார். பள்ளியில் சேர்க்கப்பட்ட
இரு குழந்தைகளையும், மற்ற குழந்தைகள், 'பிச்சைக்காரியின் பிள்ளைகள்' என்று கேலி
செய்ததால், அவர்கள் இருவரும் பள்ளிக்குச் செல்ல மறுத்தனர்.
இதை அறிந்த ரோஜினா அவர்கள், வேதனை அடைந்தார். ஏதாவது ஒரு வேலை செய்து பிழைக்கவேண்டும்
என்று தீர்மானித்தார்.
அவ்வேளையில், டாக்கா நகரில், இயந்திரம் பொருத்தப்பட்ட ரிக்சா
அறிமுகமானது. பெரும் முயற்சி எடுத்து, பணம் சேர்த்து, ரோஜினா அவர்கள் ஒரு ரிக்சாவை வாங்கி, அதை ஓட்டப் பழகினார். முதலில் அவரது ரிக்சாவில் ஏற தங்கியவர்கள்,
பின்னர், பயணம் செய்தனர். அவர் சாலையில் அமர்ந்து
தர்மம் கேட்டபோது, அவருக்கு தர்மம் கொடுத்தவர்கள், இப்போது அவரது ரிக்சாவில் ஏறி பயணம் செய்கின்றனர் என்று ரோஜினா
அவர்கள் பெருமையோடு கூறுகிறார்.
"இப்போது, ஒரு நாளில், 200 அல்லது, 250 ரூபாய் சம்பாதிக்கிறேன். நான், என் மகள், மகன் மூவருக்கும் இது போதும்.
அதைவிட முக்கியமாக, என் பிள்ளைகள் இருவரும் இப்போது, பள்ளியில் தலை நிமிர்ந்து
நடக்கின்றனர்" என்று, இளம்தாய் ரோஜினா பேகம், இக்காணொளியின்
இறுதியில் புன்சிரிப்புடன் கூறுகிறார். கடந்த மூன்று ஆண்டுகளாக ரிக்சா ஒட்டி வாழ்ந்துவரும்
இளம்தாய் ரோஜினா அவர்கள், மாலை வகுப்புக்களில் சேர்ந்து, எழுத, படிக்க கற்று வருகிறார்.
மனதில்
துணிவிருந்தால், மலையும் வழிவிடும்.
Lazarus
already in the tomb for four days - John 11,17
புதையுண்டவர் புதுவாழ்வு பெற்ற புதுமை – பகுதி 6
இயேசு
இலாசரை உயிர்பெற்றெழச் செய்யும் புதுமை, யோவான் நற்செய்தி 11ம் பிரிவில், முதல் 44 இறைவாக்கியங்களில் பதிவு செய்யப்பட்டுள்ளது. இவற்றில், முதல் 16 இறை வாக்கியங்கள்,
இப்புதுமைக்கு ஓர்
அறிமுகமாக, பெத்தானியாவுக்கு வெளியே நிகழ்ந்தவற்றைக்
கூறுகின்றன. இந்த அறிமுகப் பகுதியில் நாம் கடந்த ஐந்து வாரங்கள் தேடல்களை மேற்கொண்டோம்.
இன்று இப்புதுமையின் இரண்டாம் பகுதியாக, இயேசு பெத்தானியாவிற்கு வந்ததும்
நிகழ்ந்தவற்றை, சிந்திக்க வந்திருக்கிறோம். இப்பகுதியின்
ஆரம்ப வாக்கியங்கள் பின்வருமாறு அமைந்துள்ளன:
யோவான்
11: 17-19
இயேசு
பெத்தானியா வந்தபோது இலாசரைக் கல்லறையில் வைத்து ஏற்கெனவே நான்கு நாள் ஆகியிருந்தது.
பெத்தானியா எருசலேமுக்கு அருகில் ஏறக்குறைய மூன்று கிலோ மீட்டர் தொலையில் இருந்தது.
சகோதரர் இறந்ததால் மார்த்தா, மரியா இவர்களுக்கு ஆறுதல் சொல்லப்
பலர் அங்கே வந்திருந்தனர்.
இலாசர்
அடக்கம் செய்யப்பட்டு, ஏற்கெனவே நான்கு நாள் ஆகியிருந்தது என்பதை, யோவான் குறிப்பிட்டுச் சொல்வது, நம் கவனத்தை முதலில் ஈர்க்கிறது. ஒருவர் இறந்ததும் அவரை உடனே அடக்கம்
செய்வது, யூதர்களிடையே நிலவிவந்த வழக்கம். திருத்தூதர்
பணிகள் நூலில் கூறப்பட்டுள்ள இரு நிகழ்வுகள், இந்த வழக்கத்தை
உறுதிப்படுத்துகின்றன.
முதல்
கிறிஸ்தவ சமுதாயத்தில் வாழ்ந்த அனைவரும், தங்கள் உடமைகளையெல்லாம் அனைவரோடும்
பகிர்ந்து வாழ்ந்தனர். நிலபுலன்களை அல்லது வீடுகளை உடையோர் அவற்றை விற்று, அந்தத் தொகையைக் கொண்டுவந்து திருத்தூதர்களுடைய காலடியில்
வைப்பர்; அது அவரவர் தேவைக்குத் தக்கவாறு
பகிர்ந்து கொடுக்கப்படும் (தி.பணிகள் 4:34-35) என்று திருத்தூதர் பணிகள் நூலில் கூறப்பட்டுள்ளது.
அச்சமுதாயத்தில்
வாழ்ந்த அனனியாவும், அவரது மனைவி சப்பிராவும் தங்கள் நிலத்தை
விற்றபோது, ஒரு பகுதியை தங்களுக்கென வைத்துக்கொண்டனர்.
ஆனால், திருத்தூதர் பேதுருவிடம், தாங்கள் விற்ற
பணத்தை முழுவதும் கொணர்ந்துவிட்டதாக அனனியா பொய் சொன்னார். அவர், 'மனிதரிடமல்ல, கடவுளிடம் பொய் சொன்னார்' (தி.பணிகள் 5:4) என்று அவரை பேதுரு கடிந்துகொண்டார்.
"பேதுரு கூறியதைக் கேட்டதும், அனனியா கீழே விழுந்து உயிர் விட்டான்.... இளைஞர்கள் எழுந்துவந்து
அவனைத் துணியால் மூடிச் சுமந்துகொண்டுபோய் அடக்கம் செய்தார்கள்." (தி.பணிகள் 5:5-6) மூன்று மணி நேரம் கழித்து, அங்கு
வந்து சேர்ந்த சப்பிராவும் பேதுருவிடம் பொய் சொல்லவே, அவரையும் பேதுரு கடிந்துகொண்டார். "உடனே அவள் அவர் காலடியில்
விழுந்து உயிர்விட்டாள். இளைஞர்கள் உள்ளே வந்து அவள் இறந்துகிடப்பதைக் கண்டு வெளியே
சுமந்துகொண்டு போய் அவள் கணவனுக்கு அருகில் அடக்கம் செய்தார்கள்." (தி.பணிகள்
5:10) இறந்தோரை உடனுக்குடன் அடக்கம் செய்வது யூதரிடையே நிலவிவந்த வழக்கம் என்பதற்கு
இவ்விரு நிகழ்வுகளும் எடுத்துக்காட்டுகள்.
பெத்தானியாவுக்குத்
திரும்புவோம். இலாசர் நோயுற்றிருக்கிறார் என்ற செய்தி இயேசுவைச் சென்றடைந்த அன்றே, பெத்தானியாவில் இலாசர் இறந்திருக்கக்கூடும் என்பது விவிலிய விரிவுரையாளர்களின்
கணிப்பு. அச்செய்தியைக் கேட்டபின், இயேசு கூடுதலாக இரண்டு நாட்கள்
அதே ஊரில் தங்கியபின், (யோவான் 11:6) மூன்றாம் நாள் தம் சீடரையும் அழைத்துக்கொண்டு
பெத்தானியாவுக்குப் புறப்பட்டார். அவர் அங்கு சென்றடைந்த போது, அடக்கம் முடிந்து 4 நாள்கள் ஆகியிருந்தன.
'நான்கு நாள்கள்' என்ற கணக்கு, யூதர்கள் மத்தியில் நிலவிவந்த மற்றோர்
எண்ணத்தை நமக்கு உணர்த்துகிறது. இறந்த ஒருவரின் ஆன்மா, அவருடன் கல்லறையில் 3 நாள்கள் தங்கியிருக்கும். ஒருவேளை, மீண்டும்
அந்த உடலோடு இணைந்து வாழமுடியும் என்ற நம்பிக்கையில், அந்த ஆன்மா அங்கு இருந்ததாக யூதர்கள்
நம்பினர். நான்காம் நாள், அவரது ஆன்மா அவ்வுடலைவிட்டு, கல்லறையைவிட்டு நிரந்தரமாகப் பிரிந்துவிடும். உடல் அழுகத்தொடங்கும்.
யூதர்களிடையே
நிலவிவந்த இந்த மரபுவழி எண்ணத்தை நன்கு அறிந்திருந்த நற்செய்தியாளர் யோவான், 'நான்கு நாள்' ஆனதை சிறப்பாகக் குறிப்பிடுகிறார்.
அதாவது, இயேசு பெத்தானியாவுக்கு வந்து சேர்ந்த வேளையில், இலாசரின் உயிர், மீண்டும் அவரது உடலில் இணைய முடியாத
வண்ணம் கல்லறையைவிட்டு நிரந்தரமாக வெளியேறிவிட்டது என்பதை வலியுறுத்திக் கூறவே, இயேசு பெத்தானியா வந்தபோது இலாசரைக் கல்லறையில் வைத்து ஏற்கெனவே
நான்கு நாள் ஆகியிருந்தது என்ற குறிப்பை யோவான் பதிவு செய்துள்ளார்.
இறந்தோரை
உயிர் பெற்றெழச் செய்த நிகழ்வுகள், நற்செய்தியில் மும்முறை கூறப்பட்டுள்ளன.
இந்த மூன்று நிகழ்வுகளிலும், மரணம் நிகழ்ந்த நேரத்திற்கும், இயேசு அங்கு சென்றடைந்த நேரத்திற்கும் இருந்த இடைவேளி கூடிவருவது
உணர்த்தப்படுகிறது.
தொழுகைக்கூடத்
தலைவர் யாயீரின் மகள் இறந்த சில மணித் துளிகளில் இயேசு அவ்விடம் சென்று, அச்சிறுமிக்கு உயிரளிக்கிறார் (மத். 9:25; மாற். 5:41-42; லூக். 8:54-55). நயீன் நகரில், கைம்பெண்ணின் மகன் இறந்து சில மணி நேரங்கள் சென்று, அவரை அடக்கம் செய்ய ஊருக்கு வெளியே கொண்டுசென்ற வேளையில், இயேசு
அங்கு சென்று, இறந்த மகனுக்கு உயிரளிக்கிறார் (லூக்.
7:14-15). இலாசர் இறந்த நிகழ்விலோ, 4 நாள்கள் ஆனபின், இயேசு அவருக்கு உயிரளிக்கிறார்.
நான்கு
நாள்கள் என்ன, நானூறு நாள்கள் சென்றாலும், இறந்த ஒருவரை உயிர்பெற்றெழச் செய்யும் வல்லமை இயேசுவுக்கு உண்டு
என்பதை, இப்புதுமை வழியே நிலைநாட்டுவதே, யோவானின் நோக்கம். இவை அனைத்திற்கும் மேலாக, கல்லறையில் அடக்கம் செய்யப்பட்ட இயேசு, உயிர்த்து எழுந்தது, அவர் ஆற்றிய அனைத்துப் புதுமைகளுக்கும்
மகுடமாக விளங்குகிறது.
இயேசு
பெத்தானியாவை அடைந்தபோது, அங்கு துக்க நாள்கள் கடைபிடிக்கப்பட்டு
வந்தன என்பதை நற்செய்தியாளர் யோவான் குறிப்பிட்டுள்ளார். மரியா, மார்த்தா ஆகிய இருவருக்கும் ஆறுதல் சொல்ல பலர் அங்கே வந்திருந்தனர் (யோவான் 11:19) என்று கூறப்பட்டுள்ளது. ஒருவருடைய
மரணம் உருவாக்கும் வேதனையைப் போக்க, காலமே சிறந்த மருந்து. எனவேதான், துக்கநாள்கள் என்ற சடங்கின் வழியே, அழுது புலம்பும் வாய்ப்பு, ஒவ்வொரு
கலாச்சாரத்திலும் உருவாக்கப்பட்டுள்ளது.
யூதர்களிடம்
இருந்த துக்க நாள் கடைபிடித்தலைக் குறித்து,
Alfred Edersheim என்பவர் தன் நூலில் விவரமாகக் கூறியுள்ளார். யூத குடும்பத்தில்
பிறந்து, பின்னர் கிறிஸ்தவ மறையைத் தழுவிய Edersheim அவர்கள், "Sketches
of Jewish Life in the Days of Christ"
அதாவது, "கிறிஸ்துவின் காலத்தில் யூத வாழ்வின் குறிப்புகள்" என்ற நூலை,
1876ம் ஆண்டு வெளியிட்டார். இந்நூலில், அவர், இயேசுவின் காலத்தில் மரணம் நிகழ்ந்த ஓர் இல்லத்தில் கடைப்பிடிக்கப்பட்ட
துக்க நாள்களைக் குறித்து இவ்வாறு கூறியுள்ளார்:
"மரணத்திற்குப்
பின்வரும் முதல் ஏழு நாள்கள் ஆழமான துக்க நாள்களாக கடைபிடிக்கப்படும். அந்நாள்களில், குளித்தல், வீட்டைச் சுத்தம் செய்தல், சமைத்தல், வெளியில் சென்று வேலை செய்தல் போன்றவை
நடைபெறக்கூடாது. அதன்பின், 30வது நாள் வரை, அவ்வில்லத்தில் துக்கம் ஓரளவு கடைபிடிக்கப்படும்" என்பது, Edersheim அவர்களின் விளக்கம்.
இத்தகைய
துக்க நாள் பாரம்பரியங்கள் இன்றும் நம் மத்தியில் நிலவி வருவதைக் காண்கிறோம். மிகத்
துரிதமாகச் செல்லும் இன்றைய உலகில், துக்க நாள்களின் அளவு குறைந்து
வருவதை உணர்கிறோம். துக்க நாள்களை விரைவில் முடித்துவிட எண்ணும் இந்தப் போக்கு, வேறு பக்க விளைவுகளை உருவாக்கும் ஆபத்து உள்ளது. யூத மத குருவும், பல நூல்களின் ஆசிரியருமான ஹெரால்டு குஷ்னர் அவர்கள், "ஆண்டவர் என் ஆயர்" என்ற நூலில், இந்த அவசரப் போக்கைக்
குறித்து தன் கருத்தைப் பகிர்ந்துள்ளார்.
குஷ்னர்
அவர்கள் ஒரு யூத குரு என்பதால், வியாபாரம், வேலை, என்று, எப்போதும் பரபரப்பான
வாழ்க்கை நடத்தும் ஒரு சிலர், துக்கத்திற்காக ஒதுக்கப்படும் ஏழு நாட்களைக் குறித்து
அவரிடம் கேள்வி எழுப்புவர். ஆலோசனை கேட்பர். தங்களுக்குத் தலைக்கு மேல் வேலைகள் இருப்பதால்,
இந்த ஏழு நாள் சடங்குகளை சுருக்கி, ஓரிரு நாட்களில் நிறைவேற்ற முடியாதா? என்று அவரிடம் ஆலோசனை கேட்பர்.
அவர்களுக்கு குஷ்னர் அவர்கள் அளிக்கும் பதில் பொருள் நிறைந்த பதில்: “இந்த இழப்பால் உங்கள் உள்ளத்தில் ஏற்பட்டுள்ள
வலிகளைப் போக்கவே இந்த ஒரு வாரச் சடங்குகள் நிர்ணயிக்கப்பட்டுள்ளன. இந்த துக்க
நாள்களை அவசரப்பட்டு முடித்தால், உங்கள்
உள்ளத்தின் வேதனைகளை ஆற்றுவதற்கு, குணமாக்குவதற்கு,
நீங்கள் நேரம் கொடுக்காமல் போய்விடுவீர்கள். இதனால் பாதிப்புக்கள் தொடரும். ஆறாத இந்த
வேதனைகள், மீண்டும், மீண்டும், தலைதூக்கி, உங்கள் வாழ்வை இன்னும் நீண்ட காலம் பாதிக்கும்.
இந்த ஏழு நாட்கள் நீண்டதொரு பயணம் என்று நினைத்து, நீங்கள் சுருக்கினால், உங்களைத் தொடரும் வேதனைப் பயணம் மிக நீண்டதாய், சிக்கலானதாய் இருக்கும்” என்று
குஷ்னர் அவர்கள், அவர்களை எச்சரிப்பாராம்.
தங்கள்
சகோதரன் இலாசரின் மரணம் உருவாக்கிய ஈடு செய்ய இயலாத இழப்பை, உறவுகள், நண்பர்களுடன் கண்ணீர் வழியே பகிர்ந்துவந்த
மரியாவும், மார்த்தாவும், இயேசு, பெத்தானியாவுக்கு வந்து சேர்ந்ததை
அறிந்தனர். இதைத் தொடர்ந்து, இயேசு, மார்த்தா, மரியா ஆகிய மூவருக்கும் இடையே நிகழும் உணர்வுப் பரிமாற்றங்களையும், கருத்துப் பரிமாற்றங்களையும் நம் அடுத்தத் தேடலின்
மையமாக்குவோம்.
No comments:
Post a Comment