Mary Kom
wins record sixth gold medal
இமயமாகும் இளமை - உலக சாதனை படைத்த இந்திய
இளம் தாய்
இந்தியாவின்
மணிப்பூர் மாநிலத்தைச் சேர்ந்த இளம்பெண் மேரி கோம் (Mary Kom Hmangte) அவர்கள், அனைத்துலக மகளிர் குத்துச்சண்டை
போட்டியில், ஆறாவது முறையாக தங்கம் வென்று, உலக சாதனை படைத்துள்ளார்.
டெல்லியில்
நடைபெற்ற அனைத்துலக மகளிர் குத்துச்சண்டை போட்டியில், இந்திய வீராங்கனை மேரி கோம் அவர்கள்,
ஆறாவது முறையாக தங்கப் பதக்கம் வென்றதன் வழியே, உலக அளவில், ஆறு முறை தங்கப் பதக்கத்தை
வென்றுள்ள முதல் பெண் என்ற உயர்ந்த நிலையை அடைந்துள்ளார்.
இதற்கு
முன்னதாக, மேரி கோம், மற்றும், அயர்லாந்து நாட்டைச் செர்ந்த, கேட்டி டெய்லர் (Katie Taylor) ஆகிய இரு பெண்களும், ஐந்து
தங்கப் பதக்கங்களை வென்றதே, உலக சாதனையாக இருந்தது.
அனைத்துலக
மகளிர் குத்துச்சண்டை போட்டியில், 2002ம் ஆண்டு, தன் 19வது வயதில், முதல்முறையாக தங்கம்
வென்ற கோம் அவர்கள், அதற்குப் பின்னர், 2005, 2006, 2008 மற்றும் 2010 ஆகிய ஆண்டுகளில்
தங்கம் வென்றுள்ளார்.
நவம்பர் 24ம் தேதி, சனிக்கிழமை நடந்த போட்டியில், மேரி
கோம் அவர்கள், உக்ரைன் வீராங்கனை ஹன்னா ஒகோடா (Hanna
Okhota) அவர்களை, வென்று
ஆறாவது தங்கப்பதக்கத்தைப் பெற்றார். 35 வயதாகும் மேரி கோம் அவர்கள், 22 வயதாகும்
ஹன்னா அவர்களைவிட 13 வயது மூத்தவர் என்பதும், அவர்,
மூன்று குழந்தைகளின் தாய் என்பதும், குறிப்பிடத்தக்கன.
மணிப்பூரைச்
சேர்ந்த, டிங்கோ சிங் (Dingko Singh) என்ற இளையவர், 1998ம் ஆண்டு, பாங்காக்கில் நடைபெற்ற ஆசிய விளையாட்டு போட்டியில், குத்துச் சண்டையில் தங்கம் வென்றது, குத்துச் சண்டை பயிலவேண்டும்
என்ற ஆர்வத்தை, தனக்குள் உருவாக்கியது என்பதை, மேரி கோம் அவர்கள், பலமுறை, வெளிப்படையாகத்
தெரிவித்துள்ளார்.
இலண்டனில்,
2012ம் ஆண்டு நடைபெற்ற ஒலிம்பிக் போட்டியில் வெண்கலப் பதக்கம் வென்ற மேரி கோம்
அவர்கள், 2014ம் ஆண்டு, தென் கொரியாவில் நடைபெற்ற ஆசிய விளையாட்டுப் போட்டிகளில், தங்கம்
வென்றார்.
இந்தியாவில்
விளையாட்டுத்துறைக்காக வழங்கப்படும் உயரிய வருதான ராஜிவ் காந்தி கேல் இரத்னா விருதையும், பத்மபூஷன் விருதையும், மேரி கோம் அவர்கள் பெற்றுள்ளார். (பி.பி.சி. தமிழ்)
Death Does
Not End It All!
புதையுண்டவர் புதுவாழ்வு பெற்ற புதுமை
– பகுதி 12
உலகைச்
சுற்றிவந்த இரு வானதூதர்களைப் பற்றிய ஒரு பாரம்பரியக் கதையுடன் இன்றைய விவிலியத்
தேடலைத் துவக்குவோம். இவ்விரு தூதர்களும், ஒருநாள், தனித்தனியே சுமந்து சென்ற கூடைகளில், உலகிலிருந்து எழுப்பப்படும் செபங்களை சேகரித்தனர். அந்த நாள் இறுதியில், ஒரு வானதூதரின் கூடையில் செபங்கள் நிறைந்து வழிந்ததால், அதைச் சுமக்கமுடியாமல் அவர் தடுமாறினார். மற்றொருவரின் கூடையிலோ
மிகக் குறைந்த செபங்களே இருந்தன.
முதல்
தூதர், இவ்வுலகிலிருந்து விண்ணப்பங்களாக எழுந்த
செபங்களைத் திரட்டினார். மற்றொருவரோ, இவ்வுலகிலிருந்து நன்றியாக எழுந்த
செபங்களைத் திரட்டினார். 'இது வேண்டும், அது வேண்டும்' என்று கூறும் வேண்டுதல்கள் திரட்டப்பட்டக்
கூடை நிரம்பி வழிய, 'நன்றி' என்று
கூறும் செபங்கள் திரட்டப்பட்டக் கூடையோ, ஏறத்தாழ காலியாக இருந்தது.
கத்தோலிக்க
மறைக்கல்வியில், ஐந்து வகை செபங்கள் குறித்து விளக்கம் வழங்கப்பட்டுள்ளது.
ஆசீருடன் கூடிய ஆராதனை செபம், விண்ணப்ப செபம், பரிந்துரை செபம், நன்றியறிதல் செபம் மற்றும் புகழுரை
செபம் என்ற ஐந்து வகை செபங்கள் உள்ளன. இவற்றில், நாம் பெரும்பாலான
நேரங்களில் பயன்படுத்துவன, விண்ணப்பம், மற்றும், பரிந்துரை செபங்கள்.
கிடைத்த
நன்மைகளுக்காக இறைவனிடம் நன்றி சொல்லும் நேரங்களைவிட, நமக்காகவோ, பிறருக்காகவோ தேவைகள் உள்ளன என்று விண்ணப்பிக்கும் நேரங்களே
நம்வாழ்வில் அதிகம் என்பதை நாம் அறிவோம். மனித உணர்வுகளில், மிக அரிதாகிவரும் நன்றி உணர்வைக் குறித்து சிந்திக்க, இலாசரின்
கல்லறைக்குமுன், இயேசு எழுப்பிய செபம் நமக்கு ஓர் எடுத்துக்காட்டாக அமைந்துள்ளது.
யோவான்
நற்செய்தி 11: 41-42
இயேசு
அண்ணாந்து பார்த்து, “தந்தையே, நீர் என் வேண்டுதலுக்குச் செவிசாய்த்ததற்காக உமக்கு நன்றி
கூறுகிறேன். நீர் எப்போதும் என் வேண்டுதலுக்குச் செவிசாய்க்கிறீர் என்பது எனக்குத்
தெரியும். எனினும் நீரே என்னை அனுப்பினீர் என்று சூழ்ந்து நிற்கும் இக்கூட்டம் நம்பும்
பொருட்டே இப்படிச் சொன்னேன்”
என்று
கூறினார்.
இலாசரை
உயிர்பெற்றெழச் செய்யும் புதுமை நிகழ்வதற்கு முன்னதாகவே, இயேசு, தன் தந்தைக்கு நன்றி
கூறியதை, அவர் எழுப்பிய செபத்தில் உணர்கிறோம். அத்துடன், அவர், இச்செபத்தை, சூழ்ந்து நிற்கும் கூட்டம் நம்பும் பொருட்டே
எழுப்பியதாகக் கூறினார். இலாசரின் கல்லறையைச் சுற்றி நின்ற கூட்டத்திற்கும், அவர்கள் வழியே நமக்கும் இயேசு சொல்லித்தரும் பாடம், நாம் செபத்தின் வழியே கேட்பதை பெற்றுவிட்டதாகக் கருதி, இறைவனுக்கு நன்றி சொல்லவேண்டும் என்ற பாடம்.
விவசாயத்தை
நம்பிவாழும் ஒரு கிராமத்தில், ஒரு சில மாதங்களாக மழை பெய்யாமல், பயிர்கள் வாடி வதங்கின. செபத்தின் வல்லமையை நம்பிய சில விவசாயிகள்
பங்குத்தந்தையை அணுகி, மழைக்காக செபிக்கும்படி கேட்டுக்கொண்டனர்.
கிராம மக்கள் அனைவரும், அடுத்த நாள், கோவிலில்,
மழைக்காக செபிக்க
வரும்படி, பங்குத்தந்தை அழைப்பு விடுத்தார்.
அடுத்த
நாள் காலை, நீல நிற வானில், சூரியன், பளீரென ஒளி வீசிக்கொண்டிருந்தது. மழையின் அறிகுறி
ஏதுமில்லை. கோவிலுக்குள் நுழைந்த பங்குத்தந்தை,
செபத்தைத்
துவக்குவதற்குமுன், முதல் வரிசையில் அமர்ந்திருந்த சிறுமி மிரியத்தைக் கண்டதும், ஆனந்த
அதிர்ச்சி அடைந்தார். அச்சிறுமி மட்டும், அந்த செப வழிபாட்டிற்கு குடை ஒன்றை எடுத்து
வந்திருந்தார். அச்சிறுமியின் நம்பிக்கை, கோவிலுக்கு வந்திருந்த பெரியவர்களையும்,
பங்குத்தந்தையையும் வெட்கமடையச் செய்தது.
மழை
பொழியப் போகிறது என்ற நம்பிக்கையில், குடையுடன் வந்திருந்த அச்சிறுமியின்
மனநிலையே, செபிக்கும்போது இருக்கவேண்டும் என்பதை, இயேசு, தன் சீடர்களுக்குச் சொல்லித்தந்தார்
என்று, நற்செய்தியாளர் மாற்கு கூறியுள்ளார்.
மாற்கு
11:24
இயேசு
தன் சீடர்களைப் பார்த்து,
"ஆகவே உங்களுக்குச் சொல்கிறேன்; நீங்கள் இறைவனிடம் வேண்டும்போது எவற்றையெல்லாம் கேட்பீர்களோ அவற்றைப் பெற்று
விட்டீர்கள் என நம்புங்கள்; நீங்கள் கேட்டபடியே நடக்கும்"
என்று கூறினார்.
தான்
இறைவனிடம் கேட்பதை அவர் நிறைவேற்றியுள்ளார் என்ற நம்பிக்கையுடன் அவருக்கு நன்றி கூறிய
இயேசு, இலாசரை கல்லறையிலிருந்து வெளியே வரும்படி
கட்டளையிடுகிறார்.
யோவான்
11:43-44
இவ்வாறு
சொன்ன பின் இயேசு உரத்த குரலில்,
“இலாசரே, வெளியே வா” என்று கூப்பிட்டார். இறந்தவர் உயிரோடு வெளியே வந்தார். அவருடைய
கால்களும் கைகளும் துணியால் சுற்றப்பட்டிருந்தன. முகத்தில் துணி சுற்றப்பட்டிருந்தது.
“கட்டுகளை அவிழ்த்து அவனைப் போகவிடுங்கள்” என்று இயேசு அவர்களிடம் கூறினார்.
இலாசரின்
கல்லறைக்கு முன், "கல்லை அகற்றிவிடுங்கள்" என்று, சூழ நின்ற மக்களுக்கு இயேசு
வழங்கிய முதல் கட்டளையைத் தொடர்ந்து, அவர், “இலாசரே, வெளியே வா” என்ற இரண்டாவது கட்டளையைக் கொடுத்தார். இந்தக் கட்டளையை, இயேசு
உரத்தக் குரலில் கூறினார் என்று, நற்செய்தியாளர் யோவான் சிறப்பான முறையில் பதிவு
செய்துள்ளார்.
38 ஆண்டுகளாக
நோயுற்றிருந்த ஒருவரை இயேசு குணமாக்கிய நிகழ்வை நாம் ஏற்கனவே சிந்தித்தோம். அப்புதுமை,
ஒய்வு நாளில் நடந்ததென்ற காரணத்தைக் கூறி, இயேசுவுக்கு எதிராக கண்டனம் எழுந்தபோது, இயேசு அவர்களிடம் தனக்கு வழங்கப்பட்டுள்ள வல்லமையைக் குறித்துப்
பேசுகிறார். அவ்வேளையில், “காலம் வருகிறது; ஏன்,
வந்தே
விட்டது. அப்போது இறைமகனின் குரலை இறந்தோர் கேட்பர்; அதைக் கேட்போர் வாழ்வர் என உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன்” (யோவான் 5:25) என்று தெளிவாகக் கூறினார். அவர்
கூறியதை நடைமுறையில் காட்டும்வண்ணம், இயேசுவின் குரலைக் கேட்ட இலாசர்,
கல்லறையிலிருந்து உயிருடன் வெளியேறினார்.
நற்செய்தியில்,
இயேசு சப்தமாகக் குரல் எழுப்பிய மற்றொரு நிகழ்வு, நம் நினைவுகளில் நிழலாடுகிறது. அது, கல்வாரியில், சிலுவையில் தொங்கிய வேளையில் நிகழ்ந்தது. இயேசு
மீண்டும் உரத்த குரலில் கத்தி உயிர்விட்டார் (மத்தேயு 27:50) என்று நற்செய்தியாளர்
மத்தேயு பதிவு செய்துள்ளார். கல்வாரியில், உரத்தக் குரலில் கத்தி, தன் உயிரைக் கையளித்த இயேசு, இங்கு, இலாசரின் கல்லறைக்கு முன்,
உரத்தக் குரலில் கத்தி,
தன் நண்பனுக்கு உயிரளித்தார்.
இறந்த
பிணமாய், கட்டுண்டு கிடந்த இலாசர், இயேசுவின் குரல்கேட்டு, கட்டுகளோடு வெளியே வந்தார். எல்லாம்
முடிந்துவிட்டது, அழிந்துவிட்டது என்று புதைக்கப்பட்டுள்ள
நம் கனவுகளும், கடவுளின் குரல் கேட்டால், மீண்டும் உயிர்பெறும்.
கல்லறையிலிருந்து
வெளியே வரும் லாசரைக் கண்டதும் இயேசு மக்களுக்குத் தரும் அடுத்தக் கட்டளை: "கட்டுகளை
அவிழ்த்து அவனைப் போக விடுங்கள்."
இலாசரின்
கல்லறைக்கு முன் இயேசு வழங்கிய மூன்று கட்டளைகளில் இரண்டு, சூழ இருந்த மக்களுக்கும்,
ஒன்று இலாசருக்கும்
வழங்கப்பட்டன. கல்லறையை மூடியிருந்த கல்லை அகற்றுதல், கட்டுகளை அவிழ்த்தல் என்ற இரு செயல்களை செய்யும்படி மக்களிடமும், கல்லறையைவிட்டு வெளியே வரும்படி இலாசரிடமும் இயேசு கட்டளைகளை வழங்கினார்.
உயிர்
பெற்று வந்துள்ள இலாசரால் தன் கட்டுகளை தானே அவிழ்த்துக் கொள்ளமுடியாது. அந்த நல்ல
காரியத்தை, அவரைச் சுற்றி இருப்பவர்களே செய்யமுடியும். நடை பிணங்களாக வாழும் பலரை நாம்
பார்த்திருக்கிறோம். ஒருவேளை, அந்த நிலையில் நாமும் அவ்வப்போது
இருந்திருக்கிறோம். அந்நேரங்களில் இந்த நடை பிணங்களைக் கட்டியிருக்கும் கட்டுகளை அவிழ்க்க
இறைவன் நமக்கு கட்டளைகள் இடுகிறார்.
நாம்
வாழும் சமுதாயத்தில், கட்டுகளை அவிழ்ப்பதற்கு பதில், மேலும் மேலும்
மக்களைப் பலவகைகளில் கட்டிப்போடும் மனசாட்சி அற்றவர்களின் எண்ணிக்கை பெருகி
வருகிறதோ என்ற கவலை உருவாகிறது. கருவில் வளரும் குழந்தைக்குக் கல்லறை கட்டும் முயற்சிகளில்
துவங்கி, உலகில் இன்று பல வழிகளில் கல்லறைகளை உருவாக்கிவரும்
நிகழ்வுகள், நம் நம்பிக்கையை நொறுக்கிவிடுகின்றன.
நம்பிக்கையைக்
குலைக்கும் செய்திகளை, ஒவ்வொரு நாளும் கேட்பதாலும், நம் கடந்த காலக் காயங்களை ஆற்றமுடியாத தவிப்பினாலும், நாம், கசப்பிலும், வெறுப்பிலும், நம்மையே புதைத்துக்கொள்ள விரும்புகிறோம். நமக்கு
நாமே உருவாக்கிக்கொள்ளும் கல்லறைகளில் சுகம் காண விழையும் நம்மை, இறைவன் வெளிக் கொணரவேண்டும் என்று மன்றாடுவோம். சமுதாயத்தால் உருவாக்கப்பட்டுள்ள பல கல்லறைகளை விட்டு
வெளியேறும் பலரது கட்டுகளை அவிழ்த்து, அவர்களை விடுவிக்கும் பணியில், இன்னும் ஆர்வமாய் ஈடுபடவும், இறையருளை
இறைஞ்சுவோம்.
இயேசு,
இலாசரை உயிர் பெற்றெழச்செய்த இந்தப் புதுமை, கல்லறை, அதை மூடிய
கல், கட்டுகள் என்று பல கோணங்களில் நம் சிந்தனைகளைத்
தூண்டியுள்ளது. கல்லறை, கல், கட்டுகள் இவற்றையெல்லாம் தாண்டி, இறைவனின் கட்டளை, இறைவனின் குரல், நமக்கும், நாம் வாழும் உலகிற்கும், உயிர் கொடுக்க
மன்றாடுவோம்.