CNN Hero –
Maggie Doyne with the Napalese children
இமயமாகும் இளமை – இருநூறு குழந்தைகளின் தாயான இளம்பெண்
அமெரிக்க ஐக்கிய நாட்டின் நியூ ஜெர்சி மாநிலத்தில், 1986ம்
ஆண்டு பிறந்த மேகி
டோய்ன் (Maggie Doyne) அவர்கள், தன் 18வது வயதில், பள்ளிப்படிப்பை நிறைவு செய்து, கல்லூரி படிப்பைத் தொடர்வதற்குமுன், ஓராண்டு விடுமுறை எடுத்து, உலகைச் சுற்றிப்பார்க்கக் கிளம்பினார்.
இந்தியாவுக்கு வந்து சேர்ந்த இளம்பெண் மேகி அவர்கள், இமயமலை அடிவாரத்தில் தனக்கு ஏற்பட்ட ஓர் அனுபவத்தை இவ்வாறு
பகிர்ந்துள்ளார்:
"நான் ஒரு நாள், சாலையில் நடந்து சென்ற வேளையில், ஒரு சிறுமி, அவளது வயதுக்கு மீறிய சுமையை, முதுகில் சுமந்தவண்ணம்
எனக்கெதிரே வந்தாள். என்னைக் கண்டு மிக அழகாகப் புன்னகை செய்தாள். அவளது பெயர் இலக்கோரா
(Lacora) என்பதையும், அவள் ஓர் அனாதை என்பதையும் அறிந்தேன்.
அச்சிறுமி, ஒவ்வொரு நாளும் ஊருக்குள் சென்று, பேருந்தில்
வந்திறங்கும் பொருள்களை, மலையுச்சியில் இருக்கும் தன் கிராமத்திற்கு எடுத்துச் சென்றாள்.
ஒருநாளில், இரண்டு, அல்லது, மூன்று முறை அவ்வாறு சுமைகளை எடுத்துச்செல்லும்
அச்சிறுமி, தனக்குக் கிடைக்கும் 1 அல்லது 2 டாலர் ஊதியத்தைக் கொண்டு, தன் தம்பி,
தங்கைக்கு உணவளித்து வந்தாள். அவளது நிலையைக் கண்டு என் மனம் சுக்கு நூறானது. நேபாளத்தில்
நிகழ்ந்துவந்த உள்நாட்டு போரினால், இலக்கோரா போன்ற பல்லாயிரம் குழந்தைகள்,
அனாதைகளாக வாழ்கின்றனர் என்பதை அறிந்தேன். அதேபோல் உலகெங்கிலும், 8 கோடிக்கும் அதிகமான குழந்தைகள் அனாதைகளாக
வாழ்கின்றனர் என்பதையும் அறிந்துகொண்டேன். இவ்வளவு பெரிய கொடுமையை என்னால் எப்படி
தீர்க்கமுடியும் என்று மலைத்து நின்றேன்.
மற்றொரு நாள்,
ஹீமா (Hima) என்ற 7 வயது சிறுமியைச் சந்தித்தேன். அச்சிறுமி, சாலையின் ஓரத்தில் கல்லுடைத்துக் கொண்டிருந்தாள்.
என்னைக் கண்டதும் அழகியப் புன்சிரிப்புடன் என்னை வாழ்த்தினாள். அவளும் அனாதை என்பதை
அறிந்தேன். அத்தருணத்தில், எனக்குள் ஒரு தீர்மானம் உருவானது. உலகில் வாழும் 8 கோடி
அனாதைக் குழந்தைகளுக்கு என்னால் எதுவும் செய்ய இயலாமல் போகலாம். ஆனால், இந்த ஒரு குழந்தையின் வாழ்வில் என்னால்
மாற்றத்தை உருவாக்க முடியும் என்று முடிவெடுத்தேன்." இத்தீர்மானத்துடன், இளம்பெண் மேகி அவர்கள் தன் பணிகளைத் துவக்கினார்.
தான் வங்கியில் சேமித்து வைத்திருந்த 5000 டாலர்களைக் கொண்டு, நேபாளத்தின் கோப்பிலா (Kopila) பள்ளத்தாக்கில் ஓர் இடத்தை வாங்கினார்.
5 ஆண்டுகளில், அவ்விடத்தில்
ஒரு குழந்தைகள் காப்பகத்தையும், பள்ளியையும்
உருவாக்கினார்.
அவரது பணியைப் பாராட்டி, CNN செய்தி நிறுவனம், 2015ம் ஆண்டு, அவருக்கு CNN Hero அதாவது, CNN நாயகர் என்ற விருதை வழங்கியது. 32 வயதான இளம்பெண்
மேகி அவர்கள் தற்போது, 200க்கும்
அதிகமான குழந்தைகளுக்கு கல்வி வழங்கி வருகிறார். அத்துடன், பெண்கள் மையம் ஒன்றைத் துவக்கி, அதன் வழியே, பெண்கள், சுயத் தொழில் புரிவதற்கு,
உதவி செய்து வருகிறார்.
Jesus and
Martha at Lazarus grave
புதையுண்டவர்
புதுவாழ்வு பெற்ற புதுமை – பகுதி 11
இலாசரின்
கல்லறைக்கு முன், இயேசு, கட்டளை வடிவில்
கூறிய சொற்களில் நம் தேடலை சென்ற வாரம் துவங்கினோம். இன்று தொடர்கிறோம். “கல்லை அகற்றிவிடுங்கள்” என்பது, இயேசு வழங்கிய முதல் கட்டளை. "கல்லே அகன்று போ" என்று இயேசு சொல்லியிருந்தால், ஏன், நினைத்திருந்தாலே போதும்.. அந்தக் கல் அகன்று போயிருக்கும்.
ஆனால், தான் ஆற்றப்போகும் புதுமையில் கல்லறையைச் சுற்றியிருந்தோரையும் ஈடுபடுத்த
விரும்பினார் இயேசு. கல்லறையிலிருந்து இலாசரை உயிரோடு எழுப்ப, அம்மக்களுக்குச் சக்தி
இல்லாமல் இருக்கலாம். ஆனால், கல்லறையை மூடியிருந்த கல்லை அகற்றும்
சக்தி அவர்களுக்கு உண்டு என்று இயேசுவுக்குத் தெரியும். எனவே, மனிதர்களால் முடிந்தவற்றை மனிதர்களே செய்யட்டும் என்றுணர்ந்தவராய்,
“கல்லை அகற்றிவிடுங்கள்” என்ற கட்டளையைத் தருகிறார். நம்மால் முடிந்ததை நாமே செய்வதைத்தான்
இறைவன் விரும்புகிறார்.
நம் இல்லங்களில்
இடம்பெறும் ஓர் அழகான நிகழ்வை, கற்பனையில் அசைபோடுவோம். இரு கைகளையும்,
கால்களையும் கொண்டு தரையில் தவழும் குழந்தை, முதல் முறையாக, தட்டுத் தடுமாறி, எழுந்து
நிற்பதும், நடப்பதும், குடும்பத்தினர் அனைவரையும் மகிழ்வில் ஆழ்த்தும் ஓர் அனுபவம்.
அக்குழந்தை, கீழே விழுந்து அழுவதும், இந்த முயற்சியின் ஒரு பகுதி. கீழே விழும் குழந்தையைத்
தூக்கிவிட்டு, அதைத் தேற்றி, மகிழ்வித்து, மீண்டும் நடக்கச்சொல்லி
பெற்றோர் தூண்டுவார்கள். அதற்கு மாறாக, குழந்தை விழுந்துவிட்டதென பரிதாபப்பட்டு, தாயோ, தந்தையோ, அக்குழந்தையை நடக்கவிடாமல், தூக்கிச் சுமந்தால், குழந்தை, நடை பழகவே பழகாது. அதுபோலத்தான், கடவுளும். நம்மால் இயன்றதை
நாம் செய்யவேண்டும் என்று விரும்புகிறார்.
பல
வழிகளில் செயலாற்றும் இறைவனோடு, நமது முயற்சிகளும் இணையவேண்டும் என்பதை
வலியுறுத்தும் ஒரு கதை இது. ஊருக்குள் வெள்ளம் வந்தது. மக்களெல்லாம் வெள்ளத்திலிருந்து
தப்பிக்க வழிகளைத் தேடிக்கொண்டிருந்தனர். ஒருவர் மட்டும் தன் வீட்டுக் கூரை மேல் ஏறி
நின்று, தன்னை அந்த வெள்ளத்திலிருந்து காப்பாற்றும்படி
கடவுளிடம் வேண்ட ஆரம்பித்தார். வெள்ளத்தில் சிக்கிய ஒவ்வொருவரும் தங்களிடமிருந்த பிளாஸ்டிக்
பொருட்கள், கட்டுமரம் என்று பல பொருட்களைப் பயன்படுத்தி, வெளியேறினர். கடவுளுக்காக காத்துக்கொண்டிருந்தவரையும் தங்களுடன்
வரும்படி அழைத்தனர். அவரோ, அவர்கள் தந்த அழைப்பை மறுத்துவிட்டு, தன்னை கடவுள்
வந்து காப்பாற்றுவார் என்று சொல்லிக்கொண்டிருந்தார்.
வெள்ள
நிலைமை மோசமானதை அறிந்த அரசு, விரைவில் இராணுவத்தை அனுப்பி, மக்களை வெளியேற்றும் முயற்சிகளை மேற்கொண்டது. இவர் மட்டும், எந்த
உதவியையும் பெறாமல், கடவுள் வருவார் என காத்துக்கொண்டிருந்தார்.
வெள்ளம் கூரையைத் தொட்டது. இறுதியில் கூரை மீது நின்று கொண்டிருந்தவரைக் காப்பாற்ற
ஹெலிகாப்டர் வழியாக முயற்சிகள் நடந்தன. கடவுள் தன்னைக்
காப்பாற்றுவார் என்று கூறி, அவர் அந்த உதவிகளைப் பெற மறுத்தார். இறுதியில் வெள்ளத்தில்
மூழ்கி இறந்தார். மறு உலகில், அவர், கடவுளைச் சந்தித்தபோது, “கடவுளே, ஏன் என்னைக் காப்பாற்ற வரவில்லை?” என்று அவர் முறையிட்டார். அப்போது, கடவுள், “நான் அனுப்பிய அத்தனை உதவிகளையும்
மறுத்துவிட்டாய். பின்பு, உன்னை என்னால் எப்படி காப்பாற்ற முடியும்?” என்று கேட்டார்.
முன்பு
ஒரு முறை பார்த்த ஓர் அழகான பழமொழி நினைவுக்கு வருகிறது. “God could not be present everywhere, so he created
mothers.” அதாவது, “கடவுள் எல்லா இடங்களிலும் பிரசன்னமாக முடியாது என்பதால், அன்னையரைப்
படைத்தார்.”
அன்னையரின்
அன்பை அழுத்தந்திருத்தமாய் உணர்த்துவதற்கு சொல்லப்பட்டுள்ள ஒரு யூதப் பழமொழி இது. இந்தப் பழமொழி,
ஒரு கோணத்தில், அழகானதொரு
பொருளை உணர்த்துகிறது. கடவுள் நீக்கமற எங்கும் நிறைந்திருப்பவர் என்பது அனைவரும் அறிந்த
உண்மை. இருந்தாலும், அன்னையர்கள் செய்யக்கூடியவற்றை, பொதுவாகவே, மனிதர்கள் செய்யக்கூடியவற்றை அவர்களே செய்யவேண்டும் என்று
இறைவன் விட்டுவிடுகிறார். அவற்றில், கடவுள் தலையிடுவதில்லை.
இலாசரின்
கல்லறைக்கருகே திரும்புவோம். யூதக் கல்லறைகள் மேல் வைக்கப்படும் கல், மிகவும் கனமானது.
பலர் சேர்ந்து உருட்டினால்தான், அது நகரும். இயேசு, கல்லை அகற்றச் சொன்னதும்,
அவரது கட்டளையை நிறைவேற்ற ஒருசிலர் முன்வந்த வேளையில், கல்லை நகர்த்தினால்
உருவாகக்கூடிய ஒரு பிரச்சனையை, மார்த்தா, இயேசுவிடம் கூறுகிறார். மார்த்தா அவரிடம், “ஆண்டவரே, நான்கு நாள் ஆயிற்று; நாற்றம் அடிக்குமே!” என்றார். மார்த்தா இறந்த காலத்தில் வாழ்ந்தார். இயேசு
அவரை நிகழ் காலத்திற்கும், எதிர் காலத்திற்கும் வரும்படி அழைத்தார்.
இறந்த காலம் அழிந்து, அழுகி, நாற்றம் எடுக்கும். அங்கேயே தங்கிவிடுவது
நல்லதல்ல.
புகழ்பெற்ற
உரோமையக் கவிஞர் வெர்ஜில் (Virgil) அவர்கள், ஓர் அரசரைப்பற்றிக் கூறும் கதை
இது. அதிர்ச்சியும், அருவருப்பும், தரும் கதை என்றாலும், சொல்லியாக வேண்டும். ஏனெனில், இங்கு நல்லதொரு
பாடம் நமக்காகக் காத்திருக்கிறது. அந்த உரோமைய அரசர், பல பயங்கரமான சித்திரவதைகளைக் கண்டுபிடித்தவர். அந்தச் சித்ரவதைகளில்
மிகக் கொடுமையான ஒன்று இது: மரண தண்டனை பெற்ற குற்றவாளியை ஒரு பிணத்தோடு கட்டிவிடுவார்கள்.
அதுவும் முகத்துக்கு நேர் முகம் வைத்து, குற்றவாளியையும், பிணத்தையும் கட்டி, ஓர் இருண்ட குகையில் தள்ளிவிடுவார்கள்.
குற்றவாளி, அந்தப் பிணத்தோடு தன் எஞ்சிய வாழ்நாட்களைக் கழிக்கவேண்டும். இதற்கு மேல்
இத்தண்டனையை விவரிப்பது நல்லதல்ல.
அதிர்ச்சியூட்டும், அருவருப்பூட்டும் இத்தகைய சித்ரவதையை, நம்மில் பலர், நமக்கே கொடுத்துக்
கொள்கிறோம்.. இறந்த காலம், பழைய காயங்கள் என்ற பிணங்களைச்
சுமந்துவாழும் எத்தனை பேரை நாம் அறிவோம்! அல்லது, எத்தனை முறை, நாம், இறந்தகாலம் என்ற பிணத்துடன், இருளில் வாழ்ந்திருக்கிறோம்! நாமாகவே
நமக்கு விதித்துக்கொண்ட இந்தச் சித்ரவதைகளிலிருந்து நம்மை வெளியேற்ற, கல்லறையை
மூடியிருக்கும் கல்லை அகற்றும்படி இயேசு கட்டளையிடுகிறார். இறந்த காலத்தை மூடியிருப்பது
பெரும் கல்லானாலும், ஏன், பெரும் மலையே ஆனாலும் சரி, அதை அகற்றி, அடுத்த அடி எடுத்துவைக்க இயேசு
அழைக்கிறார். இயேசு மார்த்தாவிடம், “நீ நம்பினால் கடவுளின் மாட்சிமையைக் காண்பாய் என நான் உன்னிடம்
கூறவில்லையா?” என்று கேட்டார்.
மார்த்தாவிடம்
இயேசு கூறிய நம்பிக்கைச் சொற்களைக் கேட்டுக்கொண்டிருந்த யூதர்கள், கல்லறையை அடைத்திருந்த கல்லை அகற்றினார்கள். அதைத் தொடர்ந்து, இயேசு
விண்ணகத் தந்தையை நோக்கி ஒரு செபத்தை எழுப்பினார் என்று நற்செய்தியாளர் யோவான்
கூறியுள்ளார். தன் வாழ்நாளின் ஒவ்வொரு கணமும் தந்தையுடன் தொடர்புகொண்டு வாழ்ந்த
இயேசு, ஒரு சில புதுமைகளில், இறைவனோடு சிறப்பான தொடர்பு கொண்டபின், அப்புதுமைகளை ஆற்றியதாக நாம் நற்செய்திகளில் வாசிக்கிறோம்.
மாற்கு
7: 32-35
காது
கேளாதவரும் திக்கிப்பேசுபவருமான ஒருவரை, சிலர், இயேசுவிடம் கொண்டு வந்து, அவர்மீது கைவைத்து குணமாக்குமாறு, அவரை வேண்டிக் கொண்டனர்.
இயேசு அவரைக் கூட்டத்திலிருந்து தனியே அழைத்துச் சென்று, தம் விரல்களை அவர் காதுகளில் இட்டு, உமிழ்நீரால் அவர் நாவைத் தொட்டார். பிறகு வானத்தை அண்ணாந்து
பார்த்து, பெருமூச்சு விட்டு, அவரை நோக்கி "எப்பத்தா" அதாவது "திறக்கப்படு"
என்றார். உடனே அவருடைய காதுகள் திறக்கப்பட்டன; நாவும் கட்டவிழ்ந்தது. அவர் தெளிவாகப் பேசினார்.
ஐயாயிரத்திற்கும்
அதிகமான மக்களுக்கு இயேசு உணவளித்த புதுமையில்,
"இயேசு அப்பங்களை எடுத்து, கடவுளுக்கு நன்றி செலுத்தி, அமர்ந்திருந்தோருக்குக் கொடுத்தார்" என்று யோவான் நற்செய்தியில் (யோவான்
6: 11) வாசிக்கிறோம்.
அதேபோல், இலாசரை உயிர்பெற்றெழச்செய்த புதுமையிலும், இயேசு, விண்ணகத் தந்தையிடம் செபித்தார்
என்று கூறப்பட்டுள்ளது. மற்ற புதுமைகளில், இயேசு செபித்தார் என்று மட்டும்
கூறியுள்ள வேளையில், இந்தப் புதுமையில், அவர் என்ன சொல்லி செபித்தார்
என்பதும் பதிவு செய்யப்பட்டுள்ளது.
யோவான்
நற்செய்தி 11: 41-42
இயேசு
அண்ணாந்து பார்த்து, “தந்தையே, நீர் என் வேண்டுதலுக்குச் செவிசாய்த்ததற்காக உமக்கு நன்றி
கூறுகிறேன். நீர் எப்போதும் என் வேண்டுதலுக்குச் செவிசாய்க்கிறீர் என்பது எனக்குத்
தெரியும். எனினும் நீரே என்னை அனுப்பினீர் என்று சூழ்ந்து நிற்கும் இக்கூட்டம் நம்பும்
பொருட்டே இப்படிச் சொன்னேன்”
என்று
கூறினார்.
No comments:
Post a Comment