Gautham
Sarang with his Dad and friends
பூமியில் புதுமை – “நவீன வாழ்க்கைமுறை வேண்டாம்”
கல்வி
என்பது, பாடப் புத்தகத்தில் இல்லை; அது, தீர்வுகளைக் காண்பதில் அடங்கியிருக்கிறது
என்கிறார், கெளதம் சாரங் என்ற இளையவர். பள்ளிக்கு
செல்லவில்லை, பட்டமும் வாங்கவில்லை. ஆனால், கெளதம்
அவர்களால், ஆறு மொழிகளை சரளமாகப் பேசமுடியும்,
இணையத்தளங்களை
வடிவமைக்கமுடியும், இயற்கைக்கு எந்தக் கெடுதலும் விளைவிக்காத வீடுகளைக் கட்டமுடியும்.
கெளதமின்
பெற்றோர், கோபாலகிருஷ்ணன் மற்றும் விஜயலட்சுமி இருவரும், அரசுப் பள்ளி ஆசிரியர்களாகப்
பணியாற்றியபோது, நிஜ வாழ்வின் சிக்கல்களுக்குத் தீர்வு சொல்லாமல், அதற்குத் தேவையான நம்பிக்கையை வழங்காமல், நுகர்வை மட்டும் கற்பித்துவரும்
இக்கல்விமுறைக்கு, மாற்று தேவை என்றுணர்ந்தனர். எனவே, இருவரும், தங்கள் அரசுப்பணியை
விட்டுவிட்டு, கேரள மாநிலம், அட்டப்பாடி, கூலிக்கடவு அருகே அமைந்துள்ள ஒரு காட்டுப்
பகுதியில், தொண்ணூறுகளில் குடியேறினர். தங்கள் மகனை அவர்கள் பள்ளிக்கு
அனுப்பவில்லை.
"நாம்
வாழும் இயற்கைச் சூழல் பாதுகாக்கப்பட்டால்தான் நமக்கு எதிர்காலம் என்றால், அதைக்குறித்து
சொல்லித்தருவதுதானே கல்வி?" என்று கேட்கும் கௌதம் அவர்கள்,
தன் மூன்று குழந்தைகளையும் பள்ளிக்கு அனுப்பாமல், அவர்களை, அவர்கள் சூழலில் வளரவிட்டு,
இவரே கற்பிக்கிறார். அவர் தன் குடும்பத்தோடு தங்கியிருக்கும் வீடு, அவரே வடிவமைத்துக்
கட்டியது. சூழலுக்கு எந்த ஊறும் விளைவிக்காத வகையில், மூங்கில் கொண்டு வடிவமைக்கப்பட்டிருக்கிறது,
அந்த வீடு.
"பள்ளிக்கு
செல்லாதீர்கள். பள்ளிக்கு அனுப்பாதீர்கள் என பிரச்சாரம் செய்வது என் நோக்கமல்ல. அடுத்த
தலைமுறைக்கும் இந்தப் புவி வேண்டும். அதற்கு, நம் வாழ்வு முறையில், சில மாற்றங்கள்
வேண்டும். அவற்றைச் சொல்லித் தருவதற்கு கல்விமுறையில் மாற்றங்கள் வேண்டும்
என்கிறேன். அவ்வளவுதான்" என்கிறார் கௌதம்.
கெளதம்
மற்றொரு விடயத்தையும் முன் வைக்கிறார். "கிராமத்தில் குடியேறுவது, ஒரு வித
ஃபேஷனாக, இப்போது மாறிவருகிறது. அதாவது,
நகரத்தில்
இலட்சங்கள், கோடிகள் என சம்பாதித்துவிட்டு, கிராமம் சென்று, விவசாயம் செய்கிறேன், கிராமத்தில் வாழ்கிறேன் என்கிறார்கள்.
இது வரவேற்க வேண்டிய விஷயம்தான் என்றாலும், இதில்
ஒரு பெரும் சிக்கல் உள்ளது. இவர்கள், கிராம வாழ்க்கையைப் பின்பற்றுவதற்கு பதிலாக, இவர்கள் வாழ்ந்த நுகர்வு மயமான நகர வாழ்க்கையை கிராமத்தில் திணிக்கிறார்கள்.
அதுதான் பெரும் சிக்கல். இயற்கையுடன் இணைந்த வாழ்வை வாழ நீங்கள் கிராமத்திற்குதான்
செல்லவேண்டும் என்பது இல்லை. நீங்கள் இருக்கும் இடத்திலேயே இயன்ற வரை நுகர்வை குறைத்து
வாழுங்கள்" என்கிறார் கௌதம்.
இயற்கையைச்
சிதைக்காமல், மனிதத்துடன் வாழ்வதே, கெளதம் சாரங் அவர்களின் வாழ்க்கைத் தத்துவம். (பி.பி.சி. தமிழ்)
பி.பி.சி.
தமிழ் இணையத்தில் மு.நியாஸ் அகமது அவர்கள் எழுதிய கட்டுரையிலிருந்து...
There was
no longer room for them – Mark 2:2
ஒத்தமை நற்செய்தி – முடங்கியவருக்கு முழு விடுதலை - 1
“இவ்வுலகத்தில் உங்களை எது அதிக
ஆச்சரியத்தில் ஆழ்த்துகிறது?” என்று ஒரு முறை தலாய்லாமா
அவர்களிடம் செய்தியாளர்கள் கேட்டனர். அவர் சொன்ன பதில், நமது விவிலியத்தேடலை,
இன்று ஆரம்பித்து வைக்கிறது:
"இவ்வுலகில்
என்னை அதிகம் ஆச்சரியத்தில் ஆழ்த்துவது, மனிதர்களே. அவர்கள் தங்கள் உடல்நலனைத் தியாகம்
செய்து, பணம் திரட்டுகிறார்கள். பின்னர் திரட்டிய பணத்தைத் தியாகம் செய்து, உடல்நலனை
மீண்டும் பெற முயற்சி செய்கிறார்கள்.
எதிர்காலத்தைப்
பற்றிய கவலையால், மனிதர்கள், நிகழ்காலத்தை அனுபவிக்காமல் போகிறார்கள். இதன் விளைவாக, அவர்கள் நிகழ்காலத்திலும் வாழ்வதில்லை... எதிர்காலத்திலும்
வாழ்வதில்லை. இறக்கவே போவதில்லை என்ற கற்பனையில் மனிதர்கள் வாழ்கிறார்கள்... இறுதியில்
வாழாமலேயே இறந்துவிடுகிறார்கள்" என்று, தலாய்லாமா அவர்கள் சொன்னார்.
இயேசுவின்
குணமளிக்கும் புதுமைகளை சிந்தித்துவரும் இவ்வேளையில், தலாய்லாமா அவர்களின் கூற்று, உடல் நலத்தை இழப்பது, மீண்டும்
பெறுவது ஆகியவற்றைக் குறித்து வெகு ஆழமான சிந்தனைகளை உருவாக்குகிறது.
ஒத்தமை
நற்செய்திகள் என்றழைக்கப்படும் மத்தேயு, மாற்கு, லூக்கா ஆகிய மூன்று நற்செய்திகளில், இடம்பெற்றுள்ள பொதுவான புதுமைகளில், முதல் மூன்று புதுமைகளை, கடந்த 5 வாரங்களாக சிந்தித்து வந்துள்ள
நாம், இன்று, நான்காவது
பொதுவானப் புதுமையில் அடியெடுத்து வைக்கிறோம். அதுதான், இயேசு, முடக்குவாதமுற்ற
ஒருவரை குணமாக்கும் புதுமை.
இயேசு
ஆற்றியப் புதுமைகளில், அவரை மையப்படுத்தி சிந்தனைகளை எழுப்புவது, நம் வழக்கம். அதே
நேரத்தில், இயேசு, அந்தப் புதுமைகளை ஆற்றியபோது இருந்தச்
சூழல், அப்புதுமைகளில் பங்கு பெற்றோர், போன்ற
அம்சங்களையும் சிந்திப்பது பயனளிக்கும். இன்று, அந்தக் கோணத்தில், நமது தேடலைத்
துவக்குவோம்.
கப்பர்நாகும்
ஊரில், இயேசு, சீமோனுடைய மாமியாரைக் குணமாக்கிய புதுமையைத் தொடர்ந்து, அங்கு நடந்ததை,
நற்செய்தியாளர் மாற்கு இவ்வாறு கூறினார்: மாலை வேளையில், கதிரவன் மறையும் நேரத்தில் நோயாளர்கள், பேய்பிடித்தவர்கள் அனைவரையும் மக்கள் அவரிடம் கொண்டுவந்தார்கள்.
நகர் முழுவதும் வீட்டு வாயில்முன் கூடியிருந்தது. (மாற்கு
1: 32-33)
இவ்வார்த்தைகளின்
எதிரொலியாக, இன்று நாம் சிந்திக்கும் புதுமையின் துவக்க வரிகள் ஒலிக்கின்றன.
சில
நாள்களுக்குப்பின் இயேசு மீண்டும் கப்பர்நாகுமுக்குச் சென்றார். அவர் வீட்டில் இருக்கிறார்
என்னும் செய்தி பரவிற்று. பலர் வந்து கூடவே, வீட்டு வாயிலருகிலும் இடமில்லாமல் போயிற்று. (மாற்கு 2: 1-2)
மாற்கு
கூறும் இவ்விரு நிகழ்வுகளிலும் இயேசுவை நாடி கூட்டமாய் வந்தவர்களில் பெரும்பாலானோர்
நோயுற்ற ஏழைகள் என்பதைப் புரிந்துகொள்கிறோம். அந்தக் கூட்டத்தில் ஒரு சில மறைநூல் அறிஞர்களும்
இருந்தனர் என்பதை, இந்தப் புதுமையின் பிற்பகுதியில் வாசிக்கிறோம். (மாற்கு 2: 6-7)
ஆனால்,
நற்செய்தியாளர் லூக்காவோ, இப்புதுமையின் ஆரம்பத்திலேயே, பரிசேயர்களும், திருச்சட்ட ஆசிரியர்களும் அங்கிருந்தனர்
என்று அறிமுகம் செய்து வைக்கிறார்:
லூக்கா, 5: 17
ஒரு
நாள் இயேசு கற்பித்துக் கொண்டிருந்தபோது. கலிலேய, யூதேயப் பகுதிகளிலுள்ள எல்லா ஊர்களிலிருந்தும், எருசலேமிலிருந்தும்
வந்திருந்த, பரிசேயரும், திருச்சட்ட ஆசிரியர்களும் அமர்ந்திருந்தார்கள்.
லூக்கா
நற்செய்தியில் கூறப்பட்டுள்ள இந்த அறிமுக வரிகளை சிறிது ஆழமாகச் சிந்திக்கும்போது,
சில நெருடலான எண்ணங்கள் தோன்றுகின்றன. இயேசுவின் வல்லமை, ஒரு சில புதுமைகளின் வழியே, அதிலும் சிறப்பாக, குணமளிக்கும் புதுமைகளின் வழியே,
பல இடங்களிலும் பேசப்பட்டு வந்தது. இதைக் கேள்விப்பட்டு, பலர், இயேசுவிடம் என்னதான் நடக்கிறதென்பதைக் காணும் ஆர்வத்தில்
அங்கு வந்தனர். ஏராளமான எளிய மக்கள், இது போன்ற புதுமை தங்கள் வாழ்விலும் நடக்காதா
என்ற ஏக்கத்தோடு, நம்பிக்கையோடு, இயேசுவைத் தேடி வந்தார்கள்.
இவர்களெல்லாம்
வந்தது சரிதான். ஆனால், மறைநூல் அறிஞர்கள், பரிசேயர்கள்,
திருச்சட்ட ஆசிரியர்கள் ஆகியோருக்கு அங்கே என்ன வேலை? அதுவும் யூதேயாப் பகுதியில் உள்ள எல்லா ஊர்களிலிருந்தும், எருசலேமிலிருந்தும் அவர்கள் வந்திருந்ததாக நற்செய்தியாளர் லூக்கா
சிறப்பான முறையில் குறிப்பிட்டுள்ளார்.
அன்பர்களே, ஒரு கற்பனை நிகழ்வுடன் இதைப் புரிந்துகொள்ள முயல்வோம். தமிழ்நாட்டில்,
மதுரை, அல்லது, திருநெல்வேலிக்கு அருகே, ஒரு சிற்றூரில் வாழும் தனி மனிதர் ஒருவரிடம்,
அசாத்திய சக்திகள் வெளிப்படுவதாகவும், அவர் வழியாக, நல்ல காரியங்கள் நடப்பதாகவும், அந்த ஊரை நோக்கி ஆயிரக்கணக்கான மக்கள் போகின்றனர் என்றும் செய்திகள்
வருகின்றன என்று வைத்துக்கொள்வோம்.
விரைவில்,
அந்த ஊருக்கு, சென்னையிலிருந்து, அல்லது, டெல்லியிலிருந்து, அரசு அதிகாரிகளும், மதத் தலைவர்களும் போக வேண்டிவரும். இவர்கள் ஏன் அங்கு போக வேண்டும்? அந்நிகழ்வுகளில் பங்கேற்கவா? பயன் பெறவா? இல்லை. அந்த சம்பவத்தைப் பற்றி மேலிடத்திற்கு விவரங்கள் சொல்ல வேண்டும்...
அல்லது அந்த சம்பவத்தின் மையமாக இருப்பவர் எப்படிப்பட்ட ஆள், அவர் செய்யும் காரியங்கள் சட்டபூர்வமானவைதானா என்ற கேள்விகளுக்கு
விடை தேடவேண்டும்... இவையே, இந்த அரசு அதிகாரிகளின் முக்கிய நோக்கம். மேலிடத்தின் கை
பொம்மைகள் இவர்கள்.
நலம்
நாடிவந்த ஏழைகள், குறை காணவந்த அறிஞர்கள் என்ற இந்த இருவேறு
வகைப்பட்டவர்களை இணைத்து நாம் சிந்திக்கும்போது, இந்தியாவிலும்,
உலகின் பல்வேறு வறுமைப்பட்ட நாடுகளிலும், நிலவும் மருத்துவ உலகத்தைப் பற்றி எண்ணிப்பார்க்க
நமக்கு ஒரு வாய்ப்பு உருவாகியுள்ளது.
இந்தியாவில்
பலகோடி ஏழை மக்கள் நாடிச்செல்லும் மருத்துவ உதவிகளைப் பற்றி நாம் எண்ணிப்பார்க்கலாம்.
ஆஸ்துமா நோயினால் துன்புறும் ஆயிரக்கணக்கான மக்கள் ஒவ்வோர் ஆண்டும் ஒரு குறிப்பிட்ட
நாளன்று ஆந்திராவின் ஐதராபாத் நகரில் நடைபெறும் மீன் மருத்துவத்தைத் தேடிச்
செல்வதுபற்றி நமக்குத் தெரியும். அதேபோல், எலும்பு முறிவுக்கு தமிழ்நாட்டில்
புத்தூர் எனுமிடத்தில் கிடைக்கும் மருத்துவ உதவிகள் பற்றியும் நமக்குத் தெரியும். கை, கால் இழந்தோருக்குச் செயற்கை உறுப்புக்களைப் பொருத்துவதில் புகழ்பெற்ற
ஜெய்ப்பூர், வேலூரில் புகழ்பெற்ற கிறிஸ்தவ மருத்துவக் கல்லூரி (Christian
Medical College) மருத்துவமனை என்று பல இடங்கள் நம் மனக்கண் முன் விரிகின்றன.
மேலே
குறிப்பிட்ட இந்த மருத்துவ உதவிகள் அனைத்திற்கும் ஒரு பொதுவான அம்சம் உண்டு. இவை அனைத்துமே
இலவசமாக, அல்லது, மிகக்குறைந்த விலையில் கிடைக்கும்
மருத்துவ வசதிகள். அமெரிக்கா, ஐரோப்பா, இன்னும் பல நாடுகளில் மருத்துவத்திற்கு ஆகும் செலவைவிட, ஆசியாவில், குறிப்பாக, இந்தியாவில் ஆகும் செலவு, மிக மிகக் குறைவு. இதைக்குறித்து நாம்
பெருமைப்பட வேண்டும்.
அதேநேரம்,
இயேசுவின் குணமளிக்கும் செயல்களைக் குறை கூறுவதற்கென்றே வந்திருந்த மறைநூல் அறிஞர்களைப்
போல், செலவு குறைந்த இந்த மருத்துவ உலகின் உதவிகளை குறைகூற, அல்லது, இவற்றைத் தடுக்க, அண்மையக் காலங்களில், ஆசிய நாடுகளில்
படையெடுத்திருக்கும் பன்னாட்டு மருத்துவ நிறுவனங்களையும் எண்ணிப்பார்க்க வேண்டும்.
மருந்துகள்
தயாரிப்பதில் யாருக்கு உரிமம் உண்டு என்பதைக் குறித்து, இந்தியாவில் சில ஆண்டுகளுக்கு
முன் ஒரு வழக்கு நடைபெற்றது. நோவார்டிஸ் (Novartis) என்ற வெளிநாட்டு மருத்துவ நிறுவனம் தொடுத்த அந்த வழக்கு வேதனையும்,
அதிர்ச்சியும் தந்தது. அந்நிறுவனம் தொடுத்த வழக்கின் முக்கிய வாதம் இதுதான். இந்திய
மருத்துவ நிறுவனங்கள் தாயரிக்கும் குறைந்த விலை மருந்துகளுக்கு, குறிப்பாக,
புற்றுநோய்க்கென இந்திய நிறுவனங்கள் தயாரிக்கும் மருந்துகளுக்கு வழங்கப்பட்டுள்ள
உரிமத்தை உச்சநீதி மன்றம் தடைசெய்ய வேண்டும் என்பதே, நோவார்டிஸ் நிறுவனத்தின் வாதம்.
ஏறத்தாழ பத்து ஆண்டுகளாக நடந்த இந்த வழக்கில், நல்ல வேளையாக, இந்திய உச்ச நீதி
மன்றம், 2013ம் ஆண்டு, ஏப்ரல் 1ம் தேதி, நோவார்டிஸ் நிறுவனத்திற்கு எதிராக தீர்ப்பு
வழங்கியது.
வீடு
தீப்பற்றி எரியும்போது, தண்ணீர் ஊற்றி அணைப்பதற்குப் பதில், தண்ணீர் ஊற்றுபவர்களைத் தடை செய்யவேண்டும் என்று கூச்சலிடும் இந்த
நோவார்டிஸ் போன்ற பன்னாட்டு நிறுவனங்களின் ஒரே குறிக்கோள்
என்ன?... எரியும் வீட்டிலிருந்து என்னென்ன பறிக்க
முடியும் என்பது ஒன்றே.
இயேசுவைச்
சுற்றி கூடியிருந்த மதத் தலைவர்கள், அவரிடம் குற்றம் காணவேண்டும், அவர்மீது குற்றப் பத்திரிகை பதிவுசெய்ய வேண்டுமென வந்திருந்தனர்.
அந்நேரத்தில், இன்னும் நான்கு பேர், தங்கள் நண்பனைக் கட்டிலோடு சுமந்தவண்ணம் அங்கு
வந்து சேர்ந்தனர். ஒரு வகையில் சொல்லப்போனால்,
இவர்கள்தாம் இப்புதுமையின்
நாயகர்கள். இவர்கள் நமக்குச் சொல்லித்தரும் பாடங்களைப் பயில, அடுத்தத் தேடலில்
முயல்வோம்.
No comments:
Post a Comment