Amazon Forest
பூமியில் புதுமை – 'நாங்களே எதிர்காலம்!'
என்று கூறும் இளையோர்
இவ்வுலகத்தை ஓர் உடலாக நாம் உருவகித்தால், அந்த உடலுக்கு உயிர் மூச்சு வழங்கும் நுரையீரலாக, அமேசான் காடுகள் உள்ளன. இந்த நுரையீரல்,
அண்மைய ஆண்டுகளில் பல்வேறு நோய்களுக்கு உள்ளாகியிருக்கின்றது.
இந்த நோய்களை குணமாக்கும் வழிகளைப் புரிந்துகொள்ளும் நோக்கத்துடன், அக்டோபர் மாதம், 6ம் தேதி, வத்திக்கானில்,
ஆயர்களின் சிறப்பு மாமன்றம் ஒன்று துவங்கவிருக்கின்றது.
இந்த மாமன்றம் நடைபெறுவதற்கு, பல வழிகளிலும் தூண்டுதலாக இருந்த திருத்தந்தை
பிரான்சிஸ் அவர்கள், இந்த மாமன்றத்தைக்
குறித்தும், சுற்றுச்சூழல், பூமிக்கோளம், இயற்கை, இளையோரின் பங்கு ஆகியவற்றைக் குறித்தும்,
வழங்கிய கருத்துக்களைத் தொகுத்து, La Stampa என்ற இத்தாலியச்
செய்தித்தாள் ஒரு நேர்க்காணலை, ஆகஸ்ட் 9ம் தேதி வெளியிட்டிருந்தது.
அமேசான்
பகுதியை மையப்படுத்தி, நடைபெறவிருக்கும் சிறப்பு மாமன்றம், "இறைவா உமக்கேப் புகழ்" என்ற தலைப்பில், தான் 2015ம் ஆண்டு வெளியிட்ட திருமடலின் குழந்தை என்று
தன் பேட்டியில் குறிப்பிட்டத் திருத்தந்தை, தொடர்ந்து, "இந்த மாமன்றம், அறிவியலாளர்களும், அரசியல்வாதிகளும் இணைந்து மேற்கொள்ளும்
கூட்டம் அல்ல. இது, நற்செய்தியைப்
பறைசாற்றுவதற்கென்று, தூய ஆவியாரால்
கூட்டிச் சேர்க்கப்பட்டுள்ள மாமன்றம்" என்று தெளிவாகக்
கூறியுள்ளார்.
இந்த பூமிக்கோளத்தைப் பற்றி, எது உங்களை மிக அதிகமாக அச்சுறுத்துகிறது
என்ற கேள்விக்கு திருத்தந்தை வழங்கிய பதிலில்,
"உயிர் பன்முகத்தன்மையின் அழிவு, புதிதாக உருவாகிவரும் மிகக் கொடிய நோய்கள், இயற்கையின் அழிவினால், மனிதகுலத்தின் மரணம் அருகில் வந்திருப்பது, ஆகிய உண்மைகள் என்னை அதிகம் அச்சுறுத்துகின்றன" என்று
கூறினார்.
சுற்றுச்சூழல் குறித்து புதிய விழிப்புணர்வு உலகில் உருவாகி
வருகிறதா என்று, இப்பேட்டியில் கேள்வி எழுந்தபோது, திருத்தந்தை
பிரான்சிஸ் அவர்கள், இளையோரைக் குறித்துப் பேசினார்:
"சுற்றுச்சூழல் மீது ஆர்வம் கொண்ட இளையோர், உலகின் எல்லா
நாடுகளிலும், இயக்கங்களை உருவாக்கி வருகின்றனர். தங்கள் வகுப்புக்களைப் புறக்கணித்து, 'எதிர்காலத்திற்காக
வெள்ளிக்கிழமைகள்' (Fridays for Future) என்ற பெயரில்
அவர்கள் மேற்கொண்டு வரும் போராட்டங்கள் வழியே, 'நாங்களே எதிர்காலம்!' என்பதை,
இளையோர், இவ்வுலகிற்குப் பறைசாற்றுகின்றனர்" என்று, திருத்தந்தை,
இளையோரைக் குறித்து பெருமையுடன் பேசினார். (நன்றி - La Stampa)
Woman with
issue of blood
யாயிர் மகளும், யாருமறியா பெண்ணும் -
4
"அவரது
ஆடையின் ஓரங்கள் போதும் எனக்கு. குணம் பெற்றதும் கூட்டத்திலிருந்து நழுவிவிடலாம்"
என்று இயேசுவைத் தேடிவந்தார் ஒரு பெண். இரத்தப்போக்கு நோயுள்ள அப்பெண் குணமானதும்,
இயேசு, அவரை, ஓரங்களிலேயே விட்டுவிட்டுப் போயிருக்கலாம். தான் செய்யும்
நற்செயல்களுக்கு விளம்பரங்களை விரும்பாத இயேசு, கூட்டத்தில், யாருடைய கவனத்தையும்
ஈர்க்காமல் நடந்த அந்தப் புதுமையைப் பெரிதுபடுத்தாமல் போயிருக்கலாம். ஆனால், அவருக்கு வேறு எண்ணங்கள்
இருந்தன. சமுதாயத்தின் ஓரங்களில், விளிம்புகளில் உள்ளவர்களை, மையத்திற்குக் கொண்டுவரும் கலை, இயேசுவுக்கு
நன்கு தெரிந்தக் கலை.
இரத்தப்போக்கு
நோயைக் காரணம் காட்டி, சமுதாயத்தின் ஓரத்திற்கு தள்ளப்பட்ட அப்பெண்ணை,
மையத்திற்குக் கொணர்ந்தார் இயேசு. கூட்டத்தில் குணமானப் பெண், கூட்டத்தையும் குணமாக்கவேண்டும் என்று இயேசு எண்ணினார்.
இரத்தப்போக்கு நோயுள்ள பெண், இயேசுவைத் தொட்டதும், அங்கு நிகழ்ந்ததை, நற்செய்தியாளர்
மாற்கு இவ்விதம் விவரிக்கிறார்:
உடனே
இயேசு தம்மிடமிருந்து வல்லமை வெளியேறியதைத் தம்முள் உணர்ந்து மக்கள் கூட்டத்தைத் திரும்பிப்
பார்த்து, "என் மேலுடையைத் தொட்டவர் யார்?" என்று கேட்டார். அதற்கு அவருடைய சீடர்கள்
அவரிடம், "இம்மக்கள் கூட்டம் உம்மைச் சூழ்ந்து
நெருக்குவதைக் கண்டும், ‘என்னைத் தொட்டவர் யார்?’ என்கிறீரே!" என்றார்கள். (மாற்கு 5:30-32)
இயேசு
எழுப்பிய கேள்வியிலும், சீடர்கள் அளித்த பதிலிலும், பொருள் நிறைந்த வேறுபாடு ஒன்று பொதிந்துள்ளது. "என் மேலுடையைத்
தொட்டவர் யார்?" என்பது, இயேசுவின் கேள்வி. "இம்மக்கள் கூட்டம் உம்மைச் சூழ்ந்து நெருக்குவதைக் கண்டும், ‘என்னைத் தொட்டவர் யார்?’ என்கிறீரே!" என்பது, சீடர்களின் பதில். சீடர்களின் பதிலைக் கேட்ட இயேசு, வியப்புடன் புன்னகை செய்திருக்கவேண்டும். அந்த வியப்புக்கும்,
புன்னகைக்கும் பின்புலத்தில், இயேசுவின் மனதில் ஓடிய எண்ணங்களை,
நாம் இவ்வாறு கற்பனை செய்து பார்க்கலாம்:
"சீடர்களே, 'என் மேலுடையைத் தொட்டவர் யார்?' என்று நான் கேட்ட வார்த்தைகளை மாற்றி, ‘என்னைத் தொட்டவர் யார்?’ என்று நான் கேட்டதாகக் கூறினீர்களே, நீங்கள் சொன்னதுதான் முழுமையான உண்மை. இக்கூட்டத்தில் ஒருவர், என் ஆடையைத் தொட்டதன் வழியே, என்னையேத்
தொட்டுவிட்டார்" என்ற எண்ணங்கள், இயேசுவின் புன்னகை வழியே வெளிப்பட்டன. தன்னைத்
தொட்ட அந்தப் பெண்ணை, இயேசு, கூட்டத்தின் மையத்திற்குக் கொணர விழைந்தார்.
இயேசு
மேற்கொண்ட இம்முயற்சியை, நற்செய்தியாளர் மாற்கு இவ்வாறு பதிவுசெய்துள்ளார்: இயேசு
தம் மேலுடையைத் தொட்டவரைக் காணும்படி சுற்றிலும் திரும்பிப் பார்த்துக் கொண்டிருந்தார்.
அப்போது அப்பெண் தமக்கு நேர்ந்ததை அறிந்தவராய், அஞ்சி நடுங்கிக்கொண்டு, அவர்முன் வந்து விழுந்து, நிகழ்ந்தது அனைத்தையும் அவரிடம் சொன்னார். (மாற்கு 5:32-33)
அப்பெண், தனக்கு நிகழ்ந்ததை இயேசுவிடம் கூறியதாக மாற்கு கூறும்போது, நற்செய்தியாளர் லூக்கா இன்னும் சிறிது தெளிவாக, விவரித்துள்ளார்:
இயேசு, "யாரோ ஒருவர் என்னைத் தொட்டார்; என்னிடமிருந்து வல்லமை வெளியேறியதை உணர்ந்தேன்" என்றார்.
அப்பெண், தாம் இனியும் மறைந்திருக்க முடியாதென்று கண்டு நடுங்கிக்கொண்டே வந்து, அவர்முன்
விழுந்து, தாம் அவரைத் தொட்ட காரணத்தையும்,
உடனே தமது பிணி நீங்கியதையும் பற்றி, மக்கள் அனைவர் முன்னிலையிலும் அறிவித்தார். (லூக்கா 8:46-47)
இயேசுவின்
ஆடையைத் தொட்டதால், அப்பெண், உடலளவில் குணமானார். கூட்டத்தின் நடுவே தன்னை நிறுத்தும்வண்ணம்
இயேசு தந்த அழைப்பு, அப்பெண்ணின் மனதையும் குணமாக்கியது. பன்னிரு ஆண்டுகளாக உள்ளத்தில்
வேர்விட்டு வளர்ந்திருந்த வேதனைகள், வெறுப்புக்கள் எல்லாம் அப்போது
கரைந்தன.
இரத்தப்போக்கு
நோயுற்ற பெண் என்ற ஒரே காரணத்தால், தன்னை ஒதுக்கிவைத்த சமுதாயத்தின் மேல், அச்சமுதாயத்தை
அழுத்தி வதைத்த சட்டங்கள் மேல், அச்சட்டங்களை, இம்மியும் பிசகாமல் காப்பாற்றிய மதத்தலைவர்கள்
மேல், அப்படிப்பட்ட ஒரு மதத்தின் மையமென்று சொல்லப்பட்ட, அந்தக் கடவுள் மேல், பன்னிரு
ஆண்டுகளாய், அந்தப் பெண் வளர்த்து வந்திருந்த வெறுப்பு, வேதனை, வெறி எல்லாம், அக்கணத்தில் விடைபெற்று மறைந்தன. முழுமையான
விடுதலை பெற்றார் அவர். கூட்டத்தின் நடுவே நின்று, தன் கதையைப் பறைசாற்றினார்.
"நிகழ்ந்தது
அனைத்தையும் அவர் சொன்னார்" (மாற்கு 5:33) என்று மாற்கு நற்செய்தியும், தாம் அவரைத் தொட்ட காரணத்தையும் உடனே தமது
பிணி நீங்கியதையும் பற்றி மக்கள் அனைவர் முன்னிலையிலும் அறிவித்தார் (லூக்கா 8:47) என்று லூக்கா நற்செய்தியும்,
கூறுகின்றன. அவரது
கதையைக் கேட்ட கூட்டம், அதிர்ச்சியில் உறைந்திருக்கவேண்டும். தங்கள் அனைவரையும் தீட்டுப்படுத்திய
அந்தப் பெண்ணை கல்லெறிந்து கொல்லவேண்டும் என்ற வெறியில், மதத் தலைவர்கள், கற்களைத் தேடியிருக்கவேண்டும். தங்கள் தலைவரின்
ஆடையைத் தொட்டதால், அவரையேத் தீட்டுப்படுத்திவிட்ட அப்பெண்
மீது, சீடர்களுக்கும் கோபம் எழுந்திருக்க வேண்டும்.
கோபமும், கொலைவெறியும் தலைதூக்கிய அவ்வேளையில், அங்கு நிகழ்ந்ததை, நற்செய்தியாளர் மாற்கு, இவ்விதம் கூறியுள்ளார்:
இயேசு அவரிடம், "மகளே, உனது நம்பிக்கை உன்னைக் குணமாக்கிற்று. அமைதியுடன் போ. நீ
நோய் நீங்கி நலமாயிரு" என்றார். (மாற்கு 5:34)
இச்சொற்களை,
இயேசு கூறிய வேளையில், அவரது மனதில், மேலும் பல வார்த்தைகள் எதிரொலித்திருக்கவேண்டும்.
"உன்னால் இன்று இக்கூட்டத்தில் பலர் குணம்
பெற்றுள்ளனர். சட்டங்களுக்கும், சம்பிரதாயங்களுக்கும் அடிமையாகி, மனிதரை மதிக்கத்தெரியாமல் மக்கிப்போயிருந்த பலர், இன்று உன்னால் குணம் பெற்றனர். அமைதியுடன் போ!" என்று அசீர் வழங்கினார் இயேசு.
அப்பெண்ணின்
நம்பிக்கையை இயேசு கூட்டத்தின் நடுவே பாராட்டியதைத் தொடர்ந்து, கூட்டத்தின் நம்பிக்கையைக் குலைக்கும் வகையில், அங்கு ஒரு நிகழ்ச்சி இடம்பெற்றது.
மாற்கு
5:35-36
இயேசு
தொடர்ந்து பேசிக்கொண்டிருந்தபோது, தொழுகைக்கூடத் தலைவருடைய வீட்டிலிருந்து ஆள்கள் வந்து, அவரிடம், "உம்முடைய மகள் இறந்துவிட்டாள். போதகரை ஏன் இன்னும் தொந்தரவு செய்கிறீர்?" என்றார்கள். அவர்கள் சொன்னது இயேசுவின்
காதில் விழுந்ததும், அவர் தொழுகைக்கூடத் தலைவரிடம், "அஞ்சாதீர், நம்பிக்கையை மட்டும் விடாதீர்" என்று கூறினார்.
இயேசுவின்
சொற்களில் நம்பிக்கை கொண்டு தன் இல்லத்தை அடைந்த யாயிருக்கு மீண்டும் ஒரு சவால் அங்கு
காத்திருந்தது. சிறுமியின் மரணம் குறித்து கேள்விப்பட்டு அங்கு கூடியிருந்தவர்கள், சிறுமியின் அடக்கத்திற்கு ஏற்பாடுகளை துவக்கியிருந்தனர். அவ்வேளையில்
அங்கு சென்ற இயேசு, “சிறுமி இறக்கவில்லை, உறங்குகிறார்” என்று சொன்னதும், ‘அவர்கள் நகைத்தார்கள்’ என்பதை, மூன்று நற்செய்தியாளர்களும் கூறுகின்றனர்.
நம்பிக்கை இழந்து நகைத்த அக்கூட்டத்தை வெளியேற்றிவிட்டு, இயேசு, அச்சிறுமியின் கரங்களைப் பற்றி உயிர் கொடுத்து, அவரை
எழச் செய்தார்.
இரத்தப்போக்கு
நோயுள்ள பெண் நலமடைந்த புதுமையிலும், யாயிரின் மகள் உயிர்பெற்ற புதுமையிலும்
'தொடுதல்' என்பது மையமான நிகழ்வாகிறது. இஸ்ரயேல்
சட்டங்களின்படி, நோயுள்ள பெண்ணைத் தொடுவதும், அவரால் தொடப்படுவதும் பிறரைத் தீட்டுப்படுத்தும். அதேபோல்,
இறந்த உடலைத் தொடுவதும், ஒருவரைத் தீட்டுப்படுத்தும். யாயிர் இல்லத்திற்கு வரும்
வழியில், கூட்டத்தில், தன்னைத் தொட்டு, தீட்டுப்படுத்திய பெண்ணை, கடிந்துகொள்வதற்குப்
பதில், அவரை 'மகளே' (மாற்கு 5:34) என்று பரிவுடன் அழைத்ததன் வழியே, சட்டத்தைத் தாண்டிய மனிதாபிமானத்திற்கு இயேசு முதலிடம்
தருகிறார் என்பது தெளிவாகிறது. அதேபோல், யாயிரின் மகளை, கையைப்பிடித்து எழுப்பியதன் (லூக்கா 9:54) வழியே, இறந்த உடலைத் தொடுவது கூடாது என்று கூறும் சட்டத்தை, இயேசு,
கேள்விக்குள்ளாக்குகிறார்.
யாயிரின்
மகளை இயேசு குணமாக்கும் புதுமையைக் காண்பதற்காக, பெருந்திரளாக, ஊர்வலமாகப்
புறப்பட்ட கூட்டம், ஐந்து பேர் மட்டுமே கொண்ட ஒரு சிறு குழுவாக
மாறியது. பேதுரு, யாக்கோபு, யோவான் என்ற மூன்று சீடர்கள், சிறுமியின்
தாய், தந்தை என்ற ஐந்து பேர் மட்டுமே இந்தப் புதுமையைக்
கண்டனர். தனிப்பட்ட வகையில் இந்தப் புதுமை நிகழ்ந்திருந்தாலும், தொழுகைக் கூடத் தலைவரின் மகள் உயிர்பெற்ற
நிகழ்வு, அடுத்தநாள் தலைப்புச் செய்தியாக, ஊரெங்கும் பேசப்பட்டிருக்க வேண்டும். ஆனால், இயேசு, “‘இதை யாருக்கும் தெரிவிக்கக்கூடாது' என்று அவர்களுக்குக் கண்டிப்பாய்க் கட்டளையிட்டார்"
(மாற்கு 5:43) என்று இப்புதுமை முடிவடைகிறது.
இயேசுவின்
சக்தி அனைவருக்கும் தெரியப்போகிறது என்ற ஆவலுடன், ஆரவாரமாக, கூட்டமாக ஆரம்பித்த ஒரு நிகழ்வு, யாருக்கும் தெரியக்கூடாது என்ற
கட்டளையுடன் முடிகிறது. ஆனால், யாருக்கும் தெரியக்கூடாது என்ற
எண்ணத்தில், இரத்தப்போக்கு நோயுள்ள பெண் ஆரம்பித்த ஒரு முயற்சியை புதுமையாக்கி,
அப்புதுமையை, இயேசு, ஊரறியச் செய்கிறார். ஓரங்கள் மையமாவதும், மையங்கள் ஓரமாவதும் இறைவனின் கணக்கு.
No comments:
Post a Comment