விதையாகும் கதைகள் : தேடுவதிலும் தெளிவு
தேவை
ஒரு நாள்
இரவில், வயதில் முதிர்ந்த ஒருவர், தெரு விளக்கின் கீழ் எதையோ தேடிக்கொண்டிருந்தார். அவ்வழியே சென்ற
ஓர் இளையவர் அவரிடம், "என்ன தேடுகிறீர்கள்?" என்று
கேட்க, அந்த முதியவர், “என் மோதிரத்தைத் தேடுகிறேன்" என்று பதில் சொன்னார். இளையவர், முதியவரோடு சேர்ந்து, சிறிது நேரம் தேடினார். பின்னர், அவர் முதியவரிடம்,
"உங்கள் மோதிரம்
இங்குதான் விழுந்ததென்று நன்கு தெரியுமா?"
என்று கேட்டார். அதற்கு
அந்த முதியவர், "என் மோதிரம் வீட்டுக்கருகே விழுந்தது"
என்று கூறினார். உடனே, அந்த இளையவர், "பின் ஏன் இங்கே தேடிக்கொண்டிருக்கிறீர்கள்?" என்று கேட்டதும், முதியவர், "என் வீட்டுக்கருகே இருட்டாக உள்ளது. இங்குதான் கொஞ்சம் வெளிச்சமாக
உள்ளது" என்று பதில் சொன்னார்.
எதை,
எங்கே, எப்போது தேடுவது என்பதில் தெளிவு வேண்டும்.
Men Like Trees Walking
ஒத்தமை நற்செய்தி – படிப்படியாக பார்வை பெற்ற புதுமை 3
இந்தியாவில், கடந்த சில வாரங்களாக, பொது
இடங்களில் எச்சில் துப்புவது குறித்த விழிப்புணர்வு, மக்கள் மத்தியில் அதிகரித்து வருவதைக்
காணமுடிகிறது. கோவிட் 19 தொற்றுக்கிருமி பல்வேறு வழிகளில் மனிதர்களை வதைத்து வந்தாலும், ஒரு சில
மறைமுகமானப் பாடங்களையும் சொல்லித்தரத் தவறவில்லை. நம் இல்லங்களையும், பொது இடங்களையும்
சுத்தமாக வைத்திருப்பது, பொது இடங்களில் எச்சில் துப்பாமல் இருப்பது
போன்றவை, கோவிட் 19 நமக்கு உணர்த்தியுள்ள ஒருசில பாடங்கள்.
சிறுவயது முதல் நமக்குச் சொல்லித்தரப்பட்டுள்ள நல்ல பழக்க
வழக்கங்களில், 'கண்ட இடத்தில் எச்சில் துப்பக்கூடாது' என்பதும்
ஒன்று. இதைக்குறித்து,
நம் அரசுகளும், அவ்வப்போது, அறிவித்து வந்துள்ளன. இருந்தாலும், இந்தியாவில்,
பொது இடங்களில், எச்சில் துப்பும் பழக்கம் பரவலாக இருந்து வந்துள்ளது. நம் குடும்பங்களால், அரசுகளால்
சொல்லித்தர இயலாத இந்த கட்டுப்பாட்டை, தற்போது, கோவிட் 19 கிருமி,
நமக்கு மீண்டும் நினைவுறுத்தியுள்ளது. இக்கிருமியி்ன் தாக்குதலையடுத்து, இந்திய நடுவண்
அரசும்,
பல்வேறு மாநில அரசுகளும், பொது இடங்களில் எச்சில் துப்புதல், புகைப்பிடித்தல், புகையிலையைப்
பயன்படுத்துதல் ஆகியவற்றை, தண்டனைக்குரிய குற்றங்களாக அறிவித்துள்ளன. இனியாகிலும்,
இந்த கட்டுப்பாடுகளைப் பின்பற்றுவோமா என்பதை, காத்திருந்து பார்க்கவேண்டும்.
வெவ்வேறு கலாச்சாரங்களில், உமிழ்நீர், அல்லது, எச்சிலுக்கு
வேறுபட்ட அர்த்தங்கள் வழங்கப்படுகின்றன. பொது இடங்களில், எச்சில் துப்புவதை, அருவருக்கத்தக்க
பழக்கமாகவும், மற்றொருவரை நோக்கி எச்சில் துப்புவதை, அவரை அவமதிக்கும் செயலாகவும்,
பல கலாச்சாரங்கள் கருதுகின்றன. பெரும்பாலான கலாச்சாரங்களில், இத்தகைய எதிர்மறை எண்ணங்கள் உமிழ்நீருடன்
இணைக்கப்பட்டிருந்தாலும், ஒரு சில கலாச்சாரங்களில், உமிழ்நீர், தீமைகளை அகற்றும் ஓர் அடையாளமாகவும் கருதப்படுகிறது.
இன்னும் சில கலாச்சாரங்களில், ஆசீர் வழங்கும் அடையாளமாகவும் உமிழ்நீர் பயன்படுத்தப்படுகிறது.
அத்துடன்,
உமிழ்நீருக்கு, குணமளிக்கும் ஆற்றல் உண்டு என்பதையும் நாம் மறுப்பதற்கில்லை. பல விலங்குகள், தங்கள் உடலில் ஏற்படும் காயங்களை,
தங்கள் உமிழ்நீரைக் கொண்டு குணமாக்குவதை அறிவோம். நம் உடலில் ஏற்படும் சிறு, சிறு கீறல்களுக்கு நமது
உமிழ்நீரே மருந்தாக அமைவதை நாம் உணர்ந்திருக்கிறோம்.
உமிழ்நீரைப்பற்றிய
இந்த எண்ணங்களின் பின்னணியில், நாம் தற்போது சிந்தித்துவரும் புதுமையை அணுகுவோம். பெத்சாய்தா என்ற
ஊரில் பார்வையற்ற ஒருவரை இயேசு குணமாக்கும் புதுமையில், பார்வையற்ற அம்மனிதர்
இயேசுவிடம் கொண்டுவரப்பட்டதும், அங்கு நிகழ்ந்ததை மாற்கு நற்செய்தி 8ம் பிரிவில்
நாம் இவ்வாறு வாசிக்கிறோம்:
இயேசு
பார்வையற்றவரது கையைப் பிடித்து ஊருக்கு வெளியே அழைத்துச் சென்றார். அவருடைய விழிகளில் உமிழ்ந்து, கைகளை
அவர்மேல் வைத்து, "ஏதாவது பார்க்கிறீரா?" என்று கேட்டார். (மாற்கு
8:23)
நான்கு
நற்செய்திகளிலும் பதிவாகியுள்ள 20க்கும் மேற்பட்ட குணமளிக்கும் புதுமைகளில், மூன்று புதுமைகளில், இயேசு, தன் உமிழ்நீரைப் பயன்படுத்தியதாகக் கூறப்பட்டுள்ளது. அவற்றில் இரண்டு, மாற்கு நற்செய்தியிலும், ஒன்று, யோவான் நற்செய்தியிலும் இடம்பெற்றுள்ளன.
காதுகேளாதவரும், திக்கிப் பேசுபவருமான மனிதரை இயேசு குணமாக்கியபோது, "தம் விரல்களை அவர் காதுகளில் இட்டு, உமிழ்நீரால் அவர் நாவைத் தொட்டார்" (மாற்கு 7:33) என்று மாற்கு நற்செய்தி 7ம் பிரிவில் நாம் வாசித்தோம். அதேபோல், பார்வையிழந்தவருக்கு குணமளிக்கும் புதுமையில், இயேசு உமிழ்நீரைப் பயன்படுத்தினார் என்பதை, மாற்கு நற்செய்தி 8ம் பிரிவில் காண்கிறோம். இவ்விரு
புதுமைகளுடன், யோவான் நற்செய்தி
9ம் பிரிவில் கூறப்பட்டுள்ள புதுமையில், இயேசு
தரையில் உமிழ்ந்து, உமிழ்நீரால்
சேறு உண்டாக்கி, அச்சேற்றைப்
பார்வையற்றவருடைய கண்களில் பூசி, "நீர்
சிலோவாம் குளத்துக்குப் போய்க் கண்களைக் கழுவும்" என்றார் (யோவான்
9:6-7) என்ற குறிப்பைக் காண்கிறோம்.
மாற்கு நற்செய்தி 8ம் பிரிவில் கூறப்பட்டுள்ள புதுமையில்,
மற்றொரு தனித்துவமும் உள்ளது. இயேசு ஆற்றிய குணமளிக்கும் புதுமைகள் அனைத்திலும், அவரது தொடுதலால், அல்லது, சொல்லால், அப்புதுமைகள்
உடனடியாக நிகழ்ந்ததாகக் கூறப்பட்டுள்ளன. ஆனால்,
இந்த ஒரு புதுமையில் மட்டும், பார்வையற்றவர், உடனடியாக, முழுமையாகக் குணமாகாமல், படிப்படியாகக் குணமடைந்தார்
என்று கூறப்பட்டுள்ளது:
மாற்கு 8:23-25
இயேசு அவருடைய விழிகளில் உமிழ்ந்து கைகளை அவர்மேல் வைத்து, "ஏதாவது
பார்க்கிறீரா?" என்று கேட்டார்.
அவர் நிமிர்ந்து பார்த்து, "மனிதரைப் பார்க்கிறேன்.
அவர்கள் மரங்களைப் போலத் தோன்றுகிறார்கள். ஆனால் நடக்கிறார்கள்" என்று சொன்னார்.
இயேசு மீண்டும் தம் கைகளை அவருடைய கண்களின்மீது வைத்தார். அப்போது அவர் நலமடைந்து முழுப்
பார்வை பெற்று அனைத்தையும் தெளிவாகக் கண்டார்.
இப்புதுமை, இரு நிலைகளில் நடைபெற்றதாக,
நற்செய்தியாளர் மாற்கு கூறுவதற்கு, விவிலிய விரிவுரையாளர்கள் சில விளக்கங்கள்
வழங்கியுள்ளனர். ஒருவர் உடலிலும், உள்ளத்திலும் பார்வைத்திறன் பெறுவதைப்பற்றிய
பாடங்கள், 8ம் பிரிவில் கூறப்பட்டுள்ளன. பார்வையற்ற ஒருவர் நலமடையும்
இப்புதுமைக்கு முன்னும், பின்னும், கூறப்பட்டுள்ள சில நிகழ்வுகள் வழியே, நற்செய்தியாளர்
மாற்கு, பார்க்கும் திறனைப்பற்றிய பல்வேறு கோணங்களை உணர்த்துகிறார் என்று விவிலிய விரிவுரையாளர்கள்
கூறுகின்றனர்.
இப்பிரிவின் முதல் 10 இறைவாக்கியங்களில், இயேசு
4000த்திற்கும் அதிகமான மக்களுக்கு உணவு வழங்கிய புதுமை கூறப்பட்டுள்ளது. அதைத்
தொடர்ந்துவரும் நிகழ்வுகள் அனைத்துமே, பார்க்கும் திறனை மையப்படுத்தி எழுதப்பட்டுள்ளதை
உணர்கிறோம்.
இப்பிரிவின், 11 முதல் 13 முடிய உள்ள இறைவாக்கியங்களில், ஓர் அடையாளத்தைக்
காட்டும்படி இயேசுவைச் சோதித்த பரிசேயரைக் குறித்து பேசப்பட்டுள்ளது. அடையாளங்கள் ஆயிரம்
காட்டப்பட்டாலும், அவற்றைக் காணமறுத்த பரிசேயர்களைக் குறித்து, இயேசு,
தன் வேதனையை, பெருமூச்சுடன் (மாற்கு 8:12) வெளிப்படுத்துவதை நற்செய்தியாளர் மாற்கு
குறிப்பிட்டுள்ளார்.
14 முதல் 21 முடிய உள்ள 8 இறைவாக்கியங்களில், இயேசு
செய்த அடையாளங்களைக் கண்டும், அவற்றை உணர்ந்துகொள்ளாமல்,
புரிந்துகொள்ளாமல், சீடர்கள் வாழ்வதை, "கண்ணிருந்தும்
நீங்கள் காண்பதில்லையா?" (மாற்கு 8:18) என்ற
சொற்களில், இயேசு வெளிப்படுத்துவதைக் காண்கிறோம்.
22 முதல் 26 முடிய உள்ள இறைவாக்கியங்களில்,
பார்வைத் திறனற்ற ஒருவருக்கு, இயேசு பார்வை வழங்கும் புதுமையில், பார்வைத் திறனற்றவர்,
படிப்படியாகப் பார்வை பெறுவதாக நற்செய்தியாளர் மாற்கு விவரித்துள்ளார்.
இப்புதுமைக்குப் பின்னரும், 8ம் பிரிவில் கூறப்பட்டுள்ள
மற்றொரு நிகழ்வின் வழியே, இயேசுவைக்குறித்து பேதுரு பெற்றிருந்த நிறைவான, மற்றும்
குறைவான பார்வைப்பற்றிய நிகழ்வு கூறப்பட்டுள்ளது. பிலிப்பு செசரியா பகுதிக்குப்
போகும் வழியில், இயேசு தன் சீடரோடு மேற்கொண்ட உரையாடல், மாற்கு நற்செய்தி, 8ம்
பிரிவின் 27ம் இறைவாக்கியம் முதல் அப்பிரிவின் இறுதி வரை, பதிவாகியுள்ளது.
தன்னைப்பற்றி
மக்கள் என்ன சொல்கிறார்கள் என்றும், சீடர்கள் என்ன சொல்கிறார்கள் என்றும் இயேசு
கேட்ட கேள்விகளுக்கு, பேதுரு, தெளிவான கண்ணோட்டத்துடன், "நீர் மெசியா"
(மாற்கு 8:29) என்று சொல்வதையும், அடுத்த சில
நிமிடங்களில், இயேசு தன் பாடுகளைப் பற்றி கூறியதும், அதை, பேதுரு தடுக்க
முயன்றதால், "என் கண் முன் நில்லாதே, சாத்தானே. ஏனெனில் நீ கடவுளுக்கு
ஏற்றவை பற்றி எண்ணாமல் மனிதருக்கு ஏற்றவை பற்றியே எண்ணுகிறாய்" (மாற்கு 8:33) என்று
இயேசு கடிந்துகொண்டதையும் காண்கிறோம்.
எனவே, 8ம் பிரிவின் 11ம் இறைவாக்கியம் முதல், இறுதி
இறைவாக்கியம் முடிய உள்ள 28 இறைவாக்கியங்களில், காணும் திறன் பெற்றிருந்தும் காண
மறுத்த பரிசேயர், காணும் திறன் பெற்றிருந்தும், காணமுடியாமல் தவித்த சீடர்கள், மற்றும்,
பேதுரு, காணும் திறனை படிப்படியாகப் பெற்ற மனிதர் என்ற பலர் வழியே, பார்வை
பெறுவதில் உள்ள பல நிலைகள் விளக்கப்பட்டுள்ளன.
இப்புதுமையில், பார்வைத்திறனற்றவர் கூறும் சொற்கள் நம்
வாழ்வுக்குத் தேவையான பாடங்களை வழங்குகின்றன. "ஏதாவது பார்க்கிறீரா?" என்று
கேட்கும் இயேசுவிடம், அவர் நிமிர்ந்து பார்த்து, "மனிதரைப்
பார்க்கிறேன். அவர்கள் மரங்களைப் போலத் தோன்றுகிறார்கள். ஆனால் நடக்கிறார்கள்"
என்று சொன்னார். (மாற்கு 8:24)
உடலளவிலோ, உள்ளத்தளவிலோ அரைகுறையான பார்வை
பெற்றிருந்தால், மனிதருக்கும், மரங்களுக்கும் இடையே, வேறுபாடு காணமுடியாமல்
தடுமாறுவோம் என்ற பாடத்தை பார்வையற்றவரின் இச்சொற்கள் உணர்த்துகின்றன.
உடலளவில்
பார்க்கும் திறன் இருந்தால் மட்டும் போதாது. உள்ளத்திலும் முற்சார்பு எண்ணங்கள்
அற்ற, சரியான பார்வை பெறவேண்டும் என்பதை உணர்த்தும் ஒரு கதை இது: கணவனும், மனைவியும் ஒரு வீட்டில்
புதிதாகக் குடியேறினர். வீட்டுத்தலைவி, அடுத்தநாள் காலையில், காபி அருந்திக்கொண்டே, தன் வீட்டு கண்ணாடி சன்னல் வழியே, அடுத்த
வீட்டில் வேலை செய்யும் பெண், துணிகளைக் காயவைப்பதைப் பார்த்தார். "ச்சே, அந்தம்மாவுக்கு சரியா துணி துவைக்கத் தெரியல. துவச்ச பிறகும் பாருங்க, அந்தத் துணியெல்லாம் எவ்வளவு அழுக்கா இருக்கு" என்று அப்பெண்
தன் கணவனிடம் முறையிட்டார். இந்த முறையீடு, மூன்று நாட்கள் தொடர்ந்தன.
நான்காம்
நாள் காலையில், வழக்கம்போல், சன்னல் வழியே பார்த்து குறை சொல்ல நினைத்த வீட்டுத்தலைவிக்கு ஒரே
ஆச்சரியம். "இந்தாங்க, இங்க வாங்களேன்" என்று கணவனை
அவசரமாக அழைத்து, "அங்க பாருங்க. நான் மூணு நாளா சொல்லிகிட்டிருந்தது
அந்த அம்மா காதுல விழுந்திருச்சின்னு நினைக்கிறேன். இன்னக்கி அந்தத் துணியெல்லாம் எவ்வளவு
சுத்தமா இருக்கு, பாருங்க" என்று வியந்து பாராட்டினார். கணவன் அமைதியாக, "அடுத்த வீட்டுல ஒன்னும் குறை இல்ல. இன்னக்கி, நம்ம வீட்டு சன்னல்
கண்ணாடியை நான் சுத்தமாக்கினேன்" என்று சொன்னார்.
பார்வை
பெறவேண்டும்... அழுக்கில்லாத, களங்கமில்லாத, பார்வை பெறவேண்டும்... தெளிவான, சரியான பார்வை
பெறவேண்டும். நம் உள்ளங்களை அழுக்காக்கும் முற்சார்பு எண்ணங்களுடன் மற்றவர்களைப்
பார்க்காமல், தெளிவான, உண்மையான பார்வை பெறவேண்டும்.
மனிதர்களை,
மரங்களைப்போல் கண்ட அம்மனிதருக்கு, இயேசு, முழுமையான பார்வை வழங்கியதை,
நற்செய்தியாளர் மாற்கு இவ்வாறு கூறியுள்ளார்:
இயேசு மீண்டும்
தம் கைகளை அவருடைய கண்களின்மீது வைத்தார். அப்போது அவர் நலமடைந்து முழுப் பார்வை பெற்று,
அனைத்தையும் தெளிவாகக் கண்டார். (மாற்கு 8:25)
நம் அகம், புறம் இரண்டிலும், சரியான, முழுமையானப் பார்வை பெறுவதற்கு, இயேசு நம்மைத்
தொடும்படி வேண்டிக்கொள்வோம். குறிப்பாக, இந்த தொற்றுக்கிருமியின் பிடியிலிருந்து
விலகி, மறுபடியும் நம் வாழ்வைத் தொடரும் வேளையில், அடுத்தவரைப்
பற்றி, இவ்வுலகைப்பற்றி, சரியான, தெளிவான பார்வையை நாம் பெறுவதற்கு
வேண்டிக்கொள்வோம்.
No comments:
Post a Comment