09 February, 2021

விவிலியத்தேடல்: திருப்பாடல் 1 – நற்பேறு பெற்றோர்

Blessed is the one

ஆங்கில எழுத்தாளர் சார்ல்ஸ் டிக்கன்ஸ் (Charles Dickens) அவர்கள், "இரு நகரங்களின் கதை" (A Tale of Two Cities) என்ற தலைப்பில், 1859ம் ஆண்டு, நெடுங்கதை ஒன்றை வெளியிட்டார். 18ம் நூற்றாண்டில் நிகழ்ந்த 'பிரெஞ்சு புரட்சி'யை, பின்னணியாகவும், இலண்டன், பாரிஸ் ஆகிய இரு நகரங்களை, கதைக்களமாகவும் கொண்டு, இந்த நெடுங்கதை உருவாக்கப்பட்டது. இந்த நெடுங்கதையின் முதல் வரிகள், இலக்கிய உலகில் புகழ்பெற்ற வரிகளாக கருதப்படுகின்றன. நன்மையும், தீமையும் இவ்வுலகில் நடமாடுவதை, இவ்வரிகள் அழகாகக் கூறியுள்ளன:
"அது, மிகச்சிறந்த காலமாக இருந்தது, மிக மோசமான காலமாக இருந்தது; அது ஞானம் நிறைந்த யுகமாக இருந்தது, அறிவற்ற யுகமாக இருந்தது; அது, நம்பிக்கையின் சகாப்தமாக இருந்தது, நம்ப இயலாத சகாப்தமாக இருந்தது; அது, ஒளியின் பருவக்காலமாக இருந்தது, இருளின் பருவக்காலமாக இருந்தது; அது, நம்பிக்கையின் வசந்தகாலமாக இருந்தது, விரக்தியின் குளிர்காலமாக இருந்தது; எங்கள் முன் அனைத்தும் இருந்தன, எங்கள்முன் எதுவும் இல்லை; நாங்கள் அனைவரும் நேராக விண்ணகம் சென்றுகொண்டிருந்தோம், நாங்கள் அனைவரும் நேராக வேறொரு வழியில் சென்றுகொண்டிருந்தோம்; சுருங்கச் சொன்னால், அந்தக் காலம், தற்போதையக் காலம் போலவே இருந்தது."

மனித இனம் தோன்றியது முதல், இன்றுவரை, நன்மையும், தீமையும், இருளும், ஒளியும், நம்பிக்கையும், விரக்தியும் உலகில் பரவியிருப்பதை உணர்கிறோம். "இதோ பார், வாழ்வையும் நன்மையையும், சாவையும் தீமையையும் இன்று நான் உனக்கு முன்பாக வைத்துள்ளேன்" (இணைச்சட்டம் 30:15) என்று, கடவுளாகிய ஆண்டவர், இஸ்ரயேல் மக்களிடம் கூறியது, நம் நினைவில் நிழலாடுகிறது. இன்று நாம் தேடலை மேற்கொண்டுள்ள முதல் திருப்பாடல், நன்மையும், தீமையும் இணைந்திருக்கும் வேளையில், நமது கடமை என்ன என்பதைப்பற்றி சிந்திக்க, நமக்கு வாய்ப்பளிக்கிறது.

இத்திருப்பாடலின் ஆசிரியரான தாவீது, நல்லவர், பொல்லாதவர் என்ற இரு குழுவினரைக் குறித்து, தன் கருத்துக்களைப் பதிவு செய்துள்ளார். ஆறு இறை வாக்கியங்களாக பிரிக்கப்பட்டுள்ள இத்திருப்பாடலில், முதல் இரு இறை வாக்கியங்களில் நல்லவர் எதை, எதைச் செய்வார், எதை, எதைச் செய்யமாட்டார் என்பதை, இவ்வாறு சித்திரித்துள்ளார்:
நற்பேறு பெற்றவர் யார்? - அவர் பொல்லாரின் சொல்லின்படி நடவாதவர்; பாவிகளின் தீயவழி நில்லாதவர்; இகழ்வாரின் குழுவினில் அமராதவர்; ஆனால், அவர் ஆண்டவரின் திருச்சட்டத்தில் மகிழ்ச்சியுறுபவர்; அவரது சட்டத்தைப்பற்றி இரவும் பகலும் சிந்திப்பவர். (திருப்பாடல் 1:1-2)

நற்பேறு பெற்றவரின் முதல் இலக்கணமாக தாவீது கூறும், அவர் பொல்லாரின் சொல்லின்படி நடவாதவர் (தி.பா. 1:1) என்ற சொற்கள், விவிலியத்திலும், இலக்கியத்திலும் காணப்படும் ஒரு சில நிகழ்வுகளை நினைவுறுத்துகின்றன.
தொடக்க நூலில் முதல் பெண்ணுக்கும், பாம்புக்கும் இடையே நிகழ்ந்த சந்திப்பு நினைவுக்கு வருகிறது. நல்ல ஆலோசனையைத் தருவதுபோல், பேசிய பாம்பின் சொல்லைப் பின்பற்றியதால், முதல் பெண், கடவுளின் கட்டளையை மீறினார் (காண். தொடக்க நூல் 3:1-6).
தாவீது, இத்திருப்பாடலின் வரிகளை எழுதிய வேளையில், தன் வாழ்விலும், தன் மகன் அப்சலோம் வாழ்விலும் தீமை விளைவித்த அகிதோபல்லை எண்ணியிருக்கவேண்டும். தாவீதும், அப்சலோமும் அகிதோபல்லை மிக உயர்வானவர் என்று நம்பி அவரது ஆலோசனைகளைக் கேட்டு, தங்கள் வாழ்வைச் சீரழித்தனர் என்பதை, நாம் சாமுவேல் 2ம் நூலில் காண்கிறோம்: (காண். 2 சாமுவேல் 15:12 - 16:23).
இராமாயணத்தில், மந்தரையின் சூழ்ச்சி மிக்க சொற்கள், கைகேயியின் மனதைக் கலைத்து, பல துன்பங்களைக் கொணர்ந்தன என்பதை நாம் அறிவோம். அதேவண்ணம், மகாபாரதத்தில், சகுனியின் சூழ்ச்சி நிறைந்த ஆலோசனை, கௌரவர்களுக்கும், பஞ்ச பாண்டவர்களுக்கும் இடையே, சூதாட்டத்தைத் துவக்கி, அவர்களை, போருக்கு இட்டுச்சென்றது.  இவ்வாறு, நல்லவர்கள் பலர், 'பொல்லாரின் சொல்லின்படி' நடந்ததால், துன்புற்றனர் என்பது, அன்று முதல் இன்று வரை உண்மையாகிறது.

நாம் வாழும் இந்த 21ம் நூற்றாண்டில், 'பொல்லாரின் சொல்' நம் இல்லம் தேடி, நம் கரங்களில் தவழும் செல்லிடப்பேசிகளைத் தேடி வந்துசேர்கிறது என்பதை நாம் புரிந்துகொள்வது அவசியம்.

முதல் திருப்பாடலை மையப்படுத்தி, Darryl Dash என்ற இறைப்பணியாளர் வழங்கும் சில தியானக் கருத்துக்கள், நம் சிந்தனைகளைத் தூண்டுகின்றன. கனடா நாட்டின் டொரான்டோ நகரில் இறைப்பணியாற்றும் Darryl அவர்கள், 'வாழ்வுக்காக நற்செய்தி' (Gospel for Life) என்ற அமைப்பை உருவாக்கியவர்களில் ஒருவர். இவர், முதல் திருப்பாடலையொட்டி வழங்கியுள்ள தியானச் சிந்தனையில், நம் ஒவ்வொருவருக்கும் வழங்கப்பட்டுள்ள மூளை, எவ்வளவு வியத்தகு கொடை என்பதை, தன் முதல் எண்ணமாகக் கூறியுள்ளார்.

1,300 முதல் 1,400 கிராம் வரை (ஏறத்தாழ 3 பவுண்டு) எடையுள்ள நமது மூளையில், பலநூறு கோடி உயிரணுக்கள் உள்ளன. இந்த உயிரணுக்கள், ஒன்றோடொன்றும், உடலின் ஏனைய உயிரணுக்களோடும் வாழ்நாளின் ஒவ்வொரு நொடியும் தொடர்புகொண்டு தகவல்களைப் பரிமாறிவருகின்றன. பல கணணிகள் இணைந்து சேகரித்து வைக்கும் தகவல்கள், நம் ஒவ்வொருவருடைய மூளையிலும் பதிவாகி, பாதுகாக்கப்படுகின்றன. பல கணணிகள் இணைந்து பெற்றிருக்கும் ஞாபகத்திறன், நம் மூளைக்கு உள்ளது. அத்துடன், கணணிகளில் இல்லாத 'உணர்வுகள்' என்ற கூடுதல் திறமை, நம் மூளைக்கு உண்டு... இவ்வாறு, நமது மூளை என்ற வியத்தகு கொடையில் உள்ள சிறப்பு அம்சங்களை, இந்த தியானத்தின் துவக்கத்தில் கூறியுள்ளார், Darryl.

இறைவன் நம் ஒவ்வொருவருக்கும் வழங்கியுள்ள இந்த வியத்தகு கொடையைப் பாதுகாக்க வேண்டியது நம் கடமை. ஆனால், நம்மில் பலர், இந்தக் கொடையைப் பாதுகாப்பதற்குப் பதில், நம் கவனக்குறைவால் அல்லது, நம் பழக்க வழக்கங்களால், அதை, பழுதடைய விட்டுவிடுகிறோம். Hacking என்ற 'ஊடுருவல்', கணணிகளைச் சிதைப்பதுபோல, நாமும், நம் மூளைகளில் ஊடுருவல்கள் நிகழ வழிவகுத்துத் தருகிறோம். 'முகநூல்' (Facebook) போன்ற சமுதாய ஊடகங்களில் நம் தினசரி வாழ்வின் பெரும் பகுதியை செலவழித்து, அங்கு பரிமாறப்படும் தகவல்கள், நம் மூளையை ஊடுருவல் செய்ய நாம் அனுமதி தருகிறோம்.

'முகநூல்' செயலியை உருவாக்கியவர்களில் ஒருவரான Sean Parker என்பவர், வலைத்தளம் வழியே செய்திகளை வழங்கும் Axios என்ற நிறுவனத்திற்கு, 2017ம் ஆண்டில் வழங்கிய ஒரு நேர்காணலில், Facebook, Twitter, Instagram போன்ற செயலிகள் வழியே அவர்கள், வாடிக்கையாளர்களை, குறிப்பாக, இளையோரை எவ்வாறு கட்டிப்போட்டு வைத்திருக்கிறார்கள் என்பதை, சற்று வெளிப்படையாகவேக் கூறினார்:
இச்செயலிகளில் இளையோர் ஈடுபடும்போது, அவர்களது பதிவை, மற்றவர்கள் காண்கிறார்கள், அதை விரும்புகிறார்கள் என்ற செய்தி மீண்டும் அவர்களை அடையும் வேளையில், dopamine என்ற நரம்பு மண்டல பரிமாற்றம் அவர்களுக்குள் ஒருவித பரபரப்பை உருவாக்குகிறது. இத்தகைய பரபரப்பை அடிக்கடி பெறவேண்டும் என்ற தூண்டுதலால், வாடிக்கையாளர்கள் மீண்டும், மீண்டும் இந்த செயலிகளைப் பயன்படுத்துகின்றனர். நாளடைவில், போதைப்பொருள் பயன்பாட்டிற்கு ஒருவர் அடிமையாவதுபோல், செயலிகளின் பயன்பாட்டிற்கும் அவர்கள் அடிமையாகிவிடுகின்றனர். இதுதான் எங்கள் வர்த்தக யுக்தி என்று, இச்செயலிகளை உருவாக்கிய Sean Parker அவர்கள் கூறியுள்ளார்.

'முகநூல்' குழுமத்தில் நம்மை விரும்புகிறவர்களின் எண்ணிக்கை கூடுதலாகவேண்டும் என்ற ஆசையில், சுயமாகச் சிந்திக்கவும், முடிவெடுக்கவும் பயந்து, முகநூல் கூறும் கருத்துக்களை ஆமோதித்து, அவை நம் மூளையை 'ஊடுருவிச்செல்ல அனுமதிக்கிறோம்.

இத்தகைய பொல்லார்நம்மைச் சுற்றி வலம்வரும் வேளையில், ‘பொல்லாரின் சொல்நம் கைபேசி வழியே நம் சிந்தனைகளையும், உள்ளங்களையும் ஊடுருவிச் செல்லும் வேளையில், கூட்டத்திலிருந்து தனித்து நிற்பது எவ்வாறு, 'பொதுக்கருத்து' என்ற வெள்ளத்தோடு அடித்துச் செல்லப்படாமல், எதிர்நீச்சல் போடுவது எவ்வாறு என்பதை, முதல் திருப்பாடல் நமக்கு அறிவுறுத்துகிறது:
திருப்பாடல் 1:1
நற்பேறு பெற்றவர் யார்? - அவர் பொல்லாரின் சொல்லின்படி நடவாதவர்; பாவிகளின் தீயவழி நில்லாதவர்; இகழ்வாரின் குழுவினில் அமராதவர்;

இந்த இறைவாக்கியத்தில் மூன்று செயல்பாடுகள் கூறப்பட்டுள்ளன. நடப்பது, நிற்பது, அமர்வது. படிப்படியாக, தீமையில் ஊறிப்போவதைக் குறிக்கும் மூன்று செயல்பாடுகள் இங்கு கூறப்பட்டுள்ளன. தீமையின் ஆதிக்கத்திற்கு உட்பட்டு நடக்கத் துவங்கினால், விரைவில், அந்தப் பாதையில் நிற்கவும், அமரவும், ஏன், படுக்கவும் தோன்றும்.

நடப்பது, நிற்பது, அமர்வது, படுப்பது என்று, படிப்படியாக தீமையில் நாம் ஊறிப்போகும் ஆபத்து உள்ளது என்பதை எண்ணிப்பார்க்கும்போது, தவளைகளைப் பற்றி சொல்லப்படும் ஒரு தகவல் நினைவுக்கு வருகிறது. இது அறிவியல் சார்ந்த உண்மையா என்பது தெரியவில்லை, ஆனால், இது ஓர் உவமையாக நமக்கு உதவமுடியும்.
கொதிக்கும் நீரில், ஒரு தவளையைப் போட்டால், அது, துள்ளி குதித்து வெளியேறும். அதே தவளையை, குளிர்ந்த நீருள்ள ஒரு பாத்திரத்தில் போட்டால், அது, ஆனந்தமாக நீந்தி வரும். அவ்வேளையில், அந்தப் பாத்திரத்தை நாம் மெதுவாகச் சூடாக்கினால், நீரின் வெப்பம் சிறிது சிறிதாகக் கூடும். உள்ளே நீந்திவரும் தவளை, வெப்பமாகிவரும் நீருக்கு, கொஞ்சம் கொஞ்சமாகப் பழகிப் போவதால், தொடர்ந்து நீந்திக்கொண்டிருக்கும். வெப்பம் கூட, கூட தவளை மெதுவாக செயலிழக்கும். ஒரு குறிப்பிட்ட அளவு வெப்பத்தில், தண்ணீர் கொதிக்க ஆரம்பிக்கும். அவ்வேளையில், அந்தத் தவளையால் தண்ணீரைவிட்டு வெளியேற முடியாமல், முற்றிலும் செயலிழந்து, இறந்துபோகும். இதேபோல், தீயோருடன் நடப்பது, நிற்பது, அமர்வது என்று நாம் கொள்ளும் தொடர்புகள், நம்மை, சிறிது சிறிதாக, தீமையில் ஊறிப்போகச் செய்துவிடும்.

'நற்பேறு பெற்றவர்' எவற்றை செய்யமாட்டார் என்பது மட்டும் அவரது இலக்கணம் அல்ல. அவர், எவற்றை, மிகுந்த ஈடுபாட்டுடன் செய்வார் என்பதையும், திருப்பாடல் ஆசிரியர், உடனடியாக இணைத்துள்ளார்.
ஆனால், அவர் ஆண்டவரின் திருச்சட்டத்தில் மகிழ்ச்சியுறுபவர்; அவரது சட்டத்தைப்பற்றி இரவும் பகலும் சிந்திப்பவர். (திருப்பாடல் 1:2)

நற்பேறு பெற்றோர் ஆக்கப்பூர்வமாக மேற்கொள்ளும் இச்செயல்பாடுகளைக் குறித்தும், இவற்றின் பயனாக, நல்லவர்கள் அடையும் நன்மைகளைக் குறித்தும், நாம் அடுத்தத் தேடலில் புரிந்துகொள்ள முயல்வோம்.


No comments:

Post a Comment