30 March, 2021

விவிலியத்தேடல்: திருப்பாடல் 5 – பாதுகாப்புக்காக மன்றாடல்

Taking refuge in the Lord…

திருப்பாடல்கள் நூலில் பதிவாகியுள்ள முதல் 10 திருப்பாடல்களில், முதல் இரு திருப்பாடல்களைத் தவிர, ஏனைய 8 திருப்பாடல்களும், இறைவனை நோக்கி எழுப்பப்படும் வேண்டுதல்களாக அமைந்துள்ளன. இவற்றில், 'காலை மன்றாட்டு' மற்றும் 'மாலை மன்றாட்டு' என்று தலைப்பிடப்பட்டுள்ள 3 மற்றும் 4ம் திருப்பாடல்களில் கடந்த வாரங்களில் நாம் தேடலை மேற்கொண்டோம்.

இவ்விருத் திருப்பாடல்களையும் தொடர்ந்து, 5 முதல் 10 முடிய உள்ள 6 திருப்பாடல்களில், 'பாதுகாப்புக்காக மன்றாடல்', இக்கட்டுக் காலத்தில் உதவுமாறு வேண்டல்', நீதி வழங்குமாறு வேண்டல்', என்ற வேண்டுதல் பாடல்கள் மூன்றும், 'இறைவனின் மாட்சியும் மானிடரின் மேன்மையும்' என்று இறைவனைப் புகழ்ந்து பாடும் பாடல், 8வது திருப்பாடலாகவும், 'நீதியின் கடவுளுக்கு நன்றி செலுத்துதல்' மற்றும், 'நீதிக்காக வேண்டல்' என்ற தலைப்புக்களில், 9 மற்றும் 10வது பாடல்களும் அமைந்துள்ளன.

திருப்பாடல்கள் நூலில் நம் விவிலியத்தேடல் பயணத்தைக் துவங்கியவேளையில், இந்நூலை, ஓர் இறைவேண்டல் கருவூலமாக விவரித்து, முன்னாள் திருத்தந்தை 16ம் பெனடிக்ட் அவர்கள் வழங்கிய புதன் மறைக்கல்வி உரையிலிருந்து சில கருத்துக்களை நினைவுகூர்ந்தோம். தற்போது நாம் சிறப்பிக்கும் புனித வார திருவழிபாட்டு நிகழ்வுகளில், திருப்பாடல்களை பெருமளவு பயன்படுத்தவிருக்கிறோம். இத்தருணத்தில், திருப்பாடல்கள் நூலை இறைவேண்டல் கருவூலம் என்று, முன்னாள் திருத்தந்தை கூறிய எண்ணங்களை, மீண்டும் ஒருமுறை அசைபோடுவது பயனளிக்கும்:
திருப்பாடல்கள் நூலில் காணப்படும் இறைவேண்டல்கள், எவ்வித வரலாற்று நிகழ்வுடனோ, சூழலுடனோ தொடர்புள்ளவை அல்ல. எனவே, இந்நூலில் காணப்படும் இறைவேண்டல்கள், ஒவ்வொருவராலும், அவரவரது தேவை, சூழல், மனநிலை ஆகியவற்றிற்கு ஏற்ப எழுப்பப்படும் இறைவேண்டல்களாக மாறுகின்றன. இவ்வகையில், திருப்பாடல்கள் நூல், இறைவேண்டலின் பள்ளியாக திகழ்கின்றது.
குழந்தையொன்று பேசப் பழகும்போது, தன் உணர்வுகளையும், எண்ணங்களையும் வெளிப்படுத்த, பெற்றோர் சொல்லித்தரும் சொற்களைப் பயன்படுத்துகிறது. நாளடைவில், அச்சொற்களின் உண்மைப் பொருளை உணர்ந்து, அவற்றை தன் சொந்த எண்ணங்களாக, சொற்களாக மாற்றுகிறது,
திருப்பாடல்களில் உள்ள இறைவேண்டல்களில் இதையொத்த அனுபவம் நமக்கு ஏற்படுகிறது. இறைவனுடன் தொடர்புகொள்ள, திருப்பாடல்களில் வழங்கப்பட்டுள்ள சொற்களை நாம் பயன்படுத்த துவக்குகிறோம். அவை, நாளடைவில், நம் உணர்வுகளையும், எண்ணங்களையும் வெளிப்படுத்தும் சொற்களாக மாறும் வலிமை பெறுகின்றன.

நம் இறைவேண்டல்களில் அடிக்கடி வெளிப்படும் ஓர் எண்ணம், ஓர் உணர்வு, பாதுகாப்பு குறித்தது. பொதுவாக, நம் இல்லங்களில் சொல்லப்படும் இரவு மன்றாட்டுக்கள், அல்லது, விடியற்காலை மன்றாட்டுக்களில், இறைவன் நம்மை அந்த நாள் முழுவதும், அல்லது, அந்த இரவு முழுவதும், தன் பாதுகாப்பில் வைத்து காக்கவேண்டும் என்ற விண்ணப்பத்தை எழுப்புகிறோம்.

கடந்த ஓராண்டிற்கும் மேலாக, கண்ணால் காணமுடியாத ஒரு கிருமி, நம் வாழ்வை பல வழிகளில் சிதைத்துள்ளதால், 'பாதுகாப்பை' மையப்படுத்திய இறைவேண்டல்கள், இவ்வுலகிலிருந்து, அதிகமாக எழுந்தன என்று உறுதியாகக் கூறலாம். கோவிட்-19 பெருந்தொற்றிலிருந்து நம்மைக் காப்பதற்கு, அருள்பணியாளர்கள், துறவியர், மற்றும் இறைப்பணியாளர்கள், 91ம் திருப்பாடலின் வரிகளை அடிக்கடி பயன்படுத்தியுள்ளனர். இத்திருப்பாடலில் பதிவாகியுள்ள நம்பிக்கை தரும் இறைவாக்கியங்களில், ஒருசில இதோ:
திருப்பாடல் 91:3-7
ஆண்டவர் உம்மை வேடரின் கண்ணியினின்றும் கொன்றழிக்கும் கொள்ளை நோயினின்றும் தப்புவிப்பார். அவர் தம் சிறகுகளால் உம்மை அரவணைப்பார்; அவர் தம் இறக்கைகளின் கீழ் நீர் புகலிடம் காண்பீர்; அவரது உண்மையே கேடயமும் கவசமும் ஆகும். இரவின் திகிலுக்கும் பகலில் பாய்ந்துவரும் அம்புக்கும் நீர் அஞ்சமாட்டீர்.  இருளில் உலவும் கொள்ளை நோய்க்கும் நண்பகலில் தாக்கும் கொடிய வாதைக்கும் நீர் அஞ்சமாட்டீர். உம் பக்கம் ஆயிரம் பேர் வீழ்ந்தாலும், உம் வலப்புறம் பதினாயிரம் பேர் தாக்கினாலும், எதுவும் உம்மை அணுகாது.

இன்று நாம் தேடலை மேற்கொண்டுள்ள 5ம் திருப்பாடலிலும், இறைவனின் கருணை, நம்மைப் பாதுகாக்கும் கேடயம் என்று,  (தி.பா. 5:12) ஆசிரியர் வலியுறுத்திக் கூறியுள்ளார். 5ம் திருப்பாடல், 'பாதுகாப்புக்காக மன்றாடல்' என்று தலைப்பிடப்பட்டாலும், ஒரு சில பதிப்புக்களில், இப்பாடல், 'பாதுகாப்புக்காக காலை மன்றாட்டு' என்று, இன்னும் தெளிவாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. இப்பாடல், விடியற்காலையில் எழுப்பப்பட்ட வேண்டுதல் என்பதை, இப்பாடலின் அறிமுக வரிகளில் காண்கிறோம்:
திருப்பாடல் 5:1-3
ஆண்டவரே, என் விண்ணப்பத்திற்குச் செவி சாய்த்தருளும்; என் பெருமூச்சைக் கவனித்தருளும். என் அரசரே, என் கடவுளே, என் கெஞ்சும் குரலை உற்றுக்கேளும்; ஏனெனில். நான் உம்மை நோக்கியே மன்றாடுகின்றேன். ஆண்டவரே, விடியற்காலையில் என் குரலைக் கேட்டருளும்; வைகறையில் உமக்காக வழிமேல் விழிவைத்துக் காத்திருப்பேன்.

முதல் இறைவாக்கியத்தில், திருப்பாடலின் ஆசிரியர், தன் விண்ணப்பத்தை, சொற்களால் வெளிப்படுத்துவதோடு நின்றுவிடாமல், சொற்களில் வெளியிடமுடியாத உணர்வுகளை, பெருமூச்சாக வெளிப்படுத்துவதையும் கூறியுள்ளார். 'என் விண்ணப்பத்திற்குச் செவி சாய்த்தருளும்' என்று கூறும் மன்னன் தாவீது, என் பெருமூச்சைக் கேட்டருளும் என்று கூறுவதற்குப் பதில், 'என் பெருமூச்சைக் கவனித்தருளும்' என்று கூறுவது, நம் சிந்தனைகளைத் தூண்டுகின்றது. இந்த சொற்றொடர், நம் இல்லங்களில் நிகழும் ஓர் அழகிய காட்சியை, நம் மனக்கண்முன் கொணர்கிறது. ஒரு குழந்தை விடும் ஒவ்வொரு மூச்சையும், அதன் தாய் புரிந்துகொள்கிறார். குறிப்பாக, இரவில், அக்குழந்தை விடும் மூச்சில் வேறுபாடுகள் தெரிந்தால், தாய் உடனே எழுந்து, குழந்தையை கவனிக்கிறார். ஒரு தாயைப்போல, இறைவன் தன் பெருமூச்சைக் கவனிக்கவேண்டுமென, தாவீது, இத்திருப்பாடலின் முதல் இறைவாக்கியத்தின் வழியே, வேண்டுகிறார்.

இறைவேண்டல்கள் எப்போதும், சொல்வடிவில் இருக்கவேண்டும் என்ற அவசியம் இல்லை, பலவேளைகளில், நம் உள்ளங்களிலிருந்து எழும் பெருமூச்சுகள், நம் உணர்வுகளை, இன்னும் ஆழமாக வெளிப்படுத்தும். இந்த எண்ணத்தை, திருத்தூதர் பவுல், உரோமையருக்கு எழுதிய திருமுகத்தில் அழகாகக் கூறியுள்ளார்:
உரோமையர் 8:26-27
தூய ஆவியார் நமது வலுவற்ற நிலையில் நமக்குத் துணைநிற்கிறார்; ஏனெனில், எதற்காக, எப்படி நாம் இறைவனிடம் வேண்டுவது என்று நமக்குத் தெரியாது; தூய ஆவியார் தாமே சொல்வடிவம் பெறமுடியாத நம்முடைய பெருமூச்சுகளின் வாயிலாய் நமக்காகப் பரிந்துபேசுகிறார். உள்ளங்களைத் துருவி ஆயும் கடவுள், தூய ஆவியாரின் மனநிலையை அறிவார். தூய ஆவியாரும் கடவுளுக்கு உகந்த முறையில் இறைமக்களுக்காகப் பரிந்துபேசுகிறார்.

5ம் திருப்பாடலின் 3வது இறைவாக்கியத்தில் வைகறையில் உமக்காக வழிமேல் விழிவைத்துக் காத்திருப்பேன் என்று மன்னன் தாவீது பயன்படுத்தும் சொற்கள், நம் குடும்பங்களில் நிகழும் மற்றொரு காட்சியை மனதில் பதிக்கின்றன. வேற்று ஊருக்கோ, வேற்று நாட்டுக்கோ சென்ற தன் மகளோ, மகனோ, விடியற்காலையில் வீட்டுக்குத் திரும்பிவருகிறார் என்பதை அறியும் அன்னையும், தந்தையும், இரவெல்லாம் உறங்காமல் காத்திருப்பர். வைகறையில், அவர்கள், வாசலில் வந்து நின்று, வழிமேல் விழிவைத்து காத்திருப்பர். அத்தகைய ஓர் ஆவலுடன், தாவீது, விடியற்காலை எழுந்ததும், இறைவனின் வரவுக்காக தான் காத்திருப்பதை உணர்த்துகிறார்.

5ம் திருப்பாடலின் முதல் மூன்று இறைவாக்கியங்களைத் தொடர்ந்து, 4 முதல் 10 முடிய உள்ள 7 இறைவாக்கியங்களில், தனக்கு தீங்கிழைக்க விழையும் பகைவர்களைக் குறித்து, திருப்பாடல் ஆசிரியர் பேசுகிறார். அழிவை விரும்பும் அவர்களது உள்ளம், மற்றும், வஞ்சகம் பேசும் அவர்களின் நாவு, ஆகியவற்றைப் பற்றி கூறும் தாவீது, "அவர்கள் தொண்டை திறந்த பிணக்குழி" (தி.பா. 5:9) என்று கூறுவது, மிகவும் சக்திவாய்ந்த ஓர் உருவகமாக உள்ளது.

5ம் திருப்பாடலைப் போலவே, 'பாதுகாப்புக்காக மன்றாடல்' என்று தலைப்பிடப்பட்டுள்ள 140வது திருப்பாடலில், தீயோரிடமிருந்து தன்னை இறைவன் விடுவிக்கவேண்டும் என்று மன்றாடும் வேளையில், ஆண்டவரே! தீயோரிடமிருந்து என்னை விடுவியும்... அவர்கள் பாம்பெனத் தம் நாவைக் கூர்மையாக்கிக்கொள்கின்றனர்; அவர்களது உதட்டில் உள்ளது விரியன் பாம்பின் நஞ்சே!(தி.பா. 140:1,3) என்ற உருவகத்தை ஆசிரியர் பயன்படுத்தியுள்ளார். தீயோரைப்பற்றி இவ்விரு திருப்பாடல்களில் கூறப்பட்டுள்ள உருவகங்களை இணைத்து, திருத்தூதர் பவுல், நாம் அனைவருமே பாவிகள் என்பதை உணர்த்த, உரோமையருக்கு எழுதிய திருமுகத்தில் இவ்வாறு கூறியுள்ளார்:
உரோமையர் 3:9,10,13
யூதர், கிரேக்கர் யாவரும் பாவத்துக்கு உட்பட்டிருப்பதாக ஏற்கெனவே எடுத்துரைத்தாயிற்று. அவ்வாறே மறைநூலிலும் எழுதியுள்ளது: "நேர்மையாளரே இல்லை, ஒருவர் கூட இல்லை... அவர்களது தொண்டை திறந்த பிணக்குழி; அவர்களது நாக்கு வஞ்சகமே பேசும். அவர்கள் உதட்டில் உள்ளது விரியன் பாம்பின் நஞ்சு."

5ம் திருப்பாடலின் இறுதி இரு இறைவாக்கியங்கள், நம்பிக்கை தரும் ஆசியுடன் நிறைவு பெறுகின்றன. இறைவனின் கருணை எனும் கேடயம் ஆண்டவரில் அடைக்கலம் புகுவோரைக் காக்கும் என்று தாவீது கூறும் சொற்களுடன் நம் வேண்டுதலையும் இணைப்போம். நோயினாலும், ஏனைய வேதனைகளாலும் வாடும் அனைவரையும் இறைவனின் கருணைக் கேடயம் பாதுகாக்கவேண்டும் என்ற வேண்டுதலுடன், இத்திருப்பாடலின் இறுதி ஆசி மொழிகளுக்கு செவிமடுப்போம்:
திருப்பாடல் 5:11-12
ஆண்டவரே, உம்மிடம் அடைக்கலம் புகுவோர் அனைவரும் மகிழ்வர்; அவர்கள் எந்நாளும் களித்து ஆர்ப்பரிப்பர்; நீர் அவர்களைப் பாதுகாப்பீர்; உமது பெயரில் பற்றுடையோர் உம்மில் அக்களிப்பர். ஏனெனில், ஆண்டவரே, நேர்மையாளர்க்கு நீர் ஆசிவழங்குவீர்; கருணை என்னும் கேடயத்தால் அவரை மறைத்துக் காப்பீர்.


No comments:

Post a Comment