30 April, 2021

Vine and the Branches செடியும், கொடிகளும்

 
I am the True Vine

5th Sunday of Easter

The little leaf, fluttering in the breeze, was getting impatient day by day. It was longing to fly like the little birds that came to sit close to it on the branches. ‘How long am I going to be stuck in this same place?’ lamented the leaf. On an autumn day, the leaf got its ‘freedom’ from the branch and was carried by the breeze for a brief moment. Then it came crashing to the ground and other leaves were falling over it and people were stamping on it. At that moment, the leaf realized that it was much better to have stayed on, attached to the branch itself.
As long as the leaf was attached to the tree it lived. Once it got detached, it was death. A similar statement is made by Jesus in today’s Gospel (John 15:1-8), using the imagery of the vine and the branches. Jesus tells his disciples: I am the vine, you are the branches. He who abides in me, and I in him, he it is that bears much fruit, for apart from me you can do nothing.” (John 15:5)  

With the COVID 2nd wave, snatching the lives of people without much warning, this statement of Jesus is offered to us to boost our faith and trust in Him. There are seven occasions in John’s Gospel where Jesus has made the famous ‘I am’ statements. All these statements are self-defining lines, not as a person blowing one’s own trumpet, but as someone trying to dispel darkness and resolving doubts and debates.

There are quite many hymns composed on these ‘I am’ statements of Jesus. These statements have also been used as famous quotes inscribed on trophies and imprinted on clothing. As hymns and quotes these statements sound very solemn and grand. But, we need to look at the context in which these statements were made, in order to understand them better.

Last week we considered one of these ‘I am’ statements of Jesus, - “I am the good shepherd; the good shepherd lays down his life for his sheep.” (John 10:11) This statement of Jesus was given as a reply to the debate started by the religious authorities. The curing of the visually challenged person triggered a hot debate and the Pharisees branded Jesus as a sinner and as an agent of the devil. Jesus clarified his role as the good shepherd (John 10).

It is also possible to interpret Jesus comparing himself to a Good Shepherd in order to save the person who was ‘cast out’ by the religious authorities. This could be seen as Jesus trying to help the person, healed of his physical blindness, not to be blinded in spirit, by the threats of the religious authorities. Similarly, all the ‘I am’ statements of Jesus, were statements of clarification and assurance, in the midst of doubts and debates.

Life’s trials can either break us into pieces or make us stronger. During trials, our true convictions come to light. These moments, as it were, give us an opportunity to define and re-define ourselves better. Here is a short episode from the life of a person who defined himself in the face of a great trial in his life. This episode is narrated in the first person by someone who witnessed the defining moment in the life of another person:
“A young, teenaged girl was brutally murdered on a neighbourhood bus. Cut down in the prime of life by a man suddenly gone berserk. The bus driver, struggling with her assailant, was himself injured. The morning after the tragedy, I was in a drugstore when this young lady’s father entered. I did not know him, but was told by the druggist, “That’s the girl’s father.” I immediately assumed he was in the store having a prescription filled for a sedative of some sort. I could well imagine the effects of this sudden and shocking tragedy in the family. The next day, I found out how wrong had been my assumption. Do you know what that father was doing in the drugstore the morning after his daughter’s tragic death? He was buying a get-well card for the bus driver. The father’s action was very much Christ-like. Even in personal sorrow, he was concerned about the well-being of another.”

Let us get back to the ‘self-defining’ statements of Jesus. While the first five ‘I am’ statements were spoken in public, the last two were part of the private farewell discourse of Jesus to his disciples. Today’s gospel is part of this farewell discourse during the Last Supper. The mood at the Last Supper must have been quite depressing. To add to this gloom, Jesus had predicted that one of them would betray him and another would deny him. In a close-knit group, such as the one around Jesus, such predictions must have sounded very shocking.

To assure the disciples that pain is part of a fruitful life, Jesus speaks of the vine and the branches. All of us know that the best wine that comes from the best vineyard is the final result of patience and perseverance. The idea of God as the vinedresser, Jesus as the true vine and we as branches is very consoling. Jesus has not promised only gladness right through. He speaks of branches that would be cut off and also branches that would be ‘pruned’ in order to yield better results. No one will be spared of pain. But, the end result will be excellent fruit! To produce an excellent bunch of grapes the vine and the branches will have to suffer the pruning. To produce an excellent wine, the grapes will have to be crushed. No pain… no gain. But amidst all this, the promise is – the enduring presence of Jesus and the personal care of God, the vinedresser.

The imagery of the vine and the branches reminds me of another imagery called ‘Jesus nut’ or ‘Jesus pin’, used by the American soldiers. ‘Jesus nut’ is the main rotor retaining nut (MRRN) that holds the main rotor to the mast of some helicopters, such as the UH-1 Iroquois helicopter; or more generally, is any component which represents a single point of failure with catastrophic consequences. The term ‘Jesus nut’ may have been coined by American soldiers in Vietnam; the Vietnam War was the first war to feature large numbers of soldiers riding in helicopters. If the Jesus pin were to fail in flight, the helicopter would detach from the rotors and the only thing left for the crew to do would be to "pray to Jesus." (cf. Wikipedia)

If we, the branches, are attached to the vine, we shall bear abundant fruit. If ‘Jesus nut’ is attached to the helicopter called life, we can soar higher and higher. If we detach ourselves from ‘Jesus nut’ we have no other option but to crash!
We pray that the Good Shepherd, who is also the True Vine from which life flows, and the ‘nut’ that binds the rotor of our flight, may lead us to ‘greener pastures, more fruitful life and safer flight’!

A closing thought on the world-wide recital of the Rosary inaugurated on May 1, Saturday, at 6 p.m. local time in Rome, by Pope Francis. Many Marian shrines around the world are joining in this month-long effort to pray for the end of the pandemic. The world-famous shrines of our Lady - in Lourdes – France, Fatima – Portugal, Velankanni – India, Guadalupe – Mexico, Loretto – Italy, Pompeii – Italy, as well as Shrines in Poland, Ireland, Holy Land, some African countries, the Philippines, Japan and South Korea are joining in this global effort. Let us unite ourselves with this worldwide effort invoking the intercession of Mother Mary, for the end of the pandemic, during the special month of May dedicated to her. 
Let us pray in a special way for India which is the most affected country in the world right now due to the second wave of COVID.

Abiding in Christ
 
உயிர்ப்புக்காலம் 5ம் ஞாயிறு

மரக்கிளையில் தொங்கிக்கொண்டிருந்த இலைக்கு 'போர்' அடித்தது. இன்னும் எத்தனை நாள், இப்படி, ஒரே இடத்திலேயே தொங்கிக்கொண்டிருப்பது என்ற சலிப்பு அதற்கு. பரந்து விரிந்த வானில் சிறகடித்துப் பறந்த பறவைகளைப் பார்த்து, ஏக்கப் பெருமூச்சு விட்டது. இந்தப் பாழாய்போன மரத்திலிருந்து எப்போதுதான் தனக்கு விடுதலை கிடைக்குமோ என்று புலம்பித் தீர்த்தது.
இலை, ஏங்கிக் காத்திருந்த அந்த விடுதலை நாள் வந்தது. இலையுதிர் காலத்தில் ஒருநாள், மரத்திலிருந்து விடுதலை பெற்ற இலை, தன்னை அதுவரைத் தாங்கி, வளர்த்துவந்த மரத்திற்கு விடைகூடச் சொல்லாமல், வீசியத் தென்றலில் மிதந்து சென்றது. ஒரு பறவையைப்போல தானும் பறக்கமுடிகிறதே என்று, இலைக்கு நிலைகொள்ளா மகிழ்ச்சி. அந்த மகிழ்ச்சி, ஒரு சில நொடிகளே நீடித்தது.
உதிர்ந்த இலை, இறுதியில் தரையில் விழுந்தது. என்னதான் முயன்றாலும், அதனால் மீண்டும் பறக்கமுடியவில்லை. தான் பறந்தபோது, தன்னைத் தாங்கியதுபோல் தெரிந்த காற்று, இப்போது, தன் மீது புழுதியை வாரி இறைத்தது. காய்ந்து விழுந்த மற்ற இலைகள் அதன் மீது விழுந்து மூடின. மனிதர்கள் அதனை மிதித்துச்சென்றனர். இலைக்கு மூச்சுத்திணறியது.
கண்களில் நீர் பொங்க, அண்ணாந்து பார்த்தது இலை. தான் வாழ்ந்த மரக்கிளையில் அசைந்தாடிய மற்ற இலைகள், தன்னைப்பார்த்து கைகொட்டிச் சிரிப்பதைப்போல் இருந்தது. "நான் அங்கேயே தங்கியிருந்தால் நன்றாக இருந்திருக்குமே" என்ற ஏக்கம் இலையைச் சூழ்ந்தது.

மரத்துடன் இணைந்திருந்தபோது, இலைக்கு வாழ்வு. பிரிந்தபின், தாழ்வு, மரணம். இதையொத்த கருத்தை இன்றைய நற்செய்தியில் வலியுறுத்துகிறார் இயேசு: நானே திராட்சைக் செடி; நீங்கள் அதன் கொடிகள். ஒருவர் என்னுடனும் நான் அவருடனும் இணைந்திருந்தால் அவர் மிகுந்த கனி தருவார். என்னைவிட்டுப் பிரிந்து உங்களால் எதுவும் செய்ய இயலாது. (யோவான் 15:5)

இயேசு கூறும் இச்சொற்களை இன்றைய கோவிட் பெருந்தொற்றுச் சூழலில் கேட்கும்போது, 'இணைந்திருத்தல்' என்ற சொல், நம் உள்ளத்தில் முள்ளாகத் தைக்கிறது. 'விலகியிருத்தல்' என்ற சொல்லை, பல்லாயிரம் முறை கேட்டுக் கேட்டு, அச்சத்தில் வாழும் நாம், நேரடியாக, இறை சமுதாயமாக, இறைவனைச் சந்திக்க வழியின்றி, உறவுகளின் நேரடித் தொடர்பின்றி, விலகியிருக்கப் பழகிவருகிறோம். இத்தருணத்தில், இயேசு, தன்னுடன் 'இணைந்திருக்க' விடுக்கும் அழைப்பை, தகுந்தமுறையில் புரிந்துகொள்ள இந்த ஞாயிறு வாசகங்கள் நமக்கு உதவட்டும்.

நானே வாழ்வு தரும் உணவு, நானே உலகின் ஒளி, நல்ல ஆயன் நானே என்று, இயேசு, தன்னை, உருவகப்படுத்திக் கூறியுள்ள வாக்கியங்கள், யோவான் நற்செய்தியில் ஏழுமுறை இடம்பெற்றுள்ளன. உவமைகளிலும், உருவகங்களிலும் பேசுவது, இயேசுவின் தலைசிறந்த பாணி என்று நமக்குத் தெரியும். ஆனால், தன் சொல்த்திறனை வெளிப்படுத்த, இயேசு, 'நானே' என்ற உருவகங்களைப் பயன்படுத்தவில்லை என்பதை புரிந்துகொள்ளவேண்டும். எதிர்ப்புகள், குழப்பங்கள் என்று, கடினமானச் சூழல்களைச் சந்தித்த வேளையில், தான் எப்படிப்பட்டவர் என்ற உண்மை இயல்பை உணர்த்த, இயேசு, இந்த 'நானே' வாக்கியங்களைக் கூறினார்.

நமது உண்மையான இயல்பு எப்போது அதிகம் வெளிப்படுகின்றது? எதிர்ப்பு, குழப்பம், போராட்டம் இவை பெருகும்போது, நமது உண்மை இயல்பு வெளிப்படும். வாழ்க்கை, மிகச் சீராக, சுமுகமாகச் செல்லும்போது, நாம் எதை நம்புகிறோம், எது நமது வாழ்வின் அடித்தளம் என்ற கேள்விகளெல்லாம் எழாது. ஆனால், போராட்டங்களில், சங்கடங்களில் நாம் சிக்கிக்கொள்ளும்போது, நாம் எப்படிப்பட்டவர்கள், எதை நம்பி வாழ்கிறோம் என்ற உண்மைகள் வெளிப்படும். உண்மைத் தங்கமோ, போலித் தங்கமோ அழகியதொரு கண்ணாடி பேழைக்குள் இருக்கும்போது, ஒரே விதத்தில் மின்னும். வேறுபாடு தெரியாது. தீயில் இடப்பட்டால் தான், உண்மைத் தங்கமும், போலித் தங்கமும் தங்கள் உண்மை நிலைகளை வெளிப்படுத்தும்.

மிகக் கொடிய சூழல்களில் நமது உண்மையான இயல்பு வெளிச்சத்திற்கு வரும் என்பதை, பின்வரும் நிகழ்வின் வழியே ஓரளவு புரிந்துகொள்ள முயல்வோம். இந்நிகழ்வை, செய்தியாளர் ஒருவர் இவ்வாறு பகிர்ந்துள்ளார்:
நான் பணிபுரியும் ஊரில் நடந்த அந்நிகழ்வு, பலரை வேதனையில் ஆழ்த்தியது. பேருந்தில் பயணம் செய்த ஓர் இளம்பெண், வேறொரு மனிதனால் கொடூரமாகத் தாக்கப்பட்டார். பேருந்தின் ஓட்டுனர், அப்பெண்ணைக் காப்பாற்ற முயன்றவேளையில், அவரும் கடுமையாகத் தாக்கப்பட்டார். அவ்விளம்பெண், மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்ட வழியில் இறந்தார்.
சில நாள்களுக்குப்பின், அப்பகுதியிலிருந்த பல்பொருள் அங்காடிக்கு நான் சென்றிருந்தேன். அப்போது, மற்றொருவர் அங்காடிக்குள் நுழைந்தார். கடையின் உரிமையாளர் என் நண்பர். அவர் என்னிடம், அம்மனிதரைச் சுட்டிக்காட்டி, "அவர்தான் இறந்த இளம்பெண்ணின் தந்தை" என்று சொன்னார். தன் மகளின் மரணத்தால் மனமுடைந்து போயிருக்கும் தந்தை, தன் உணர்வுகளை இதப்படுத்த, தூக்க மாத்திரை போன்ற ஒரு மருந்தைத் தேடி, கடைக்கு வந்திருப்பார் என்று, நானாகவே நினைத்துக்கொண்டேன். ஆனால், அவரோ, கடையில், மருந்துகள் வைக்கப்பட்டிருந்த பகுதிக்குச் செல்லாமல், வாழ்த்து அட்டைகள் வைக்கப்பட்டிருந்த பகுதிக்குச் சென்றது, எனக்கு வியப்பைத் தந்தது. "விரைவில் குணம் பெறுங்கள்" என்ற சொற்கள் அடங்கிய வாழ்த்து மடலை அவர் எடுத்துக்கொண்டு, பணம் செலுத்தவந்தார். அவரும், கடை உரிமையாளரின் நண்பரானதால், அவர், உரிமையாளரிடம், "என் மகளைக் காக்கப் போராடிய அந்த ஓட்டுனரை மருத்துவமனையில் காணச்செல்கிறேன்" என்று கூறியபடி, பணத்தைச் செலுத்தினார். அருகில் நின்று, இதைப் பார்த்துக்கொண்டிருந்த நான், அவரது உயர்ந்த உள்ளத்திற்கு, மனதார வணக்கம் செலுத்தினேன்.
தன்னுடைய இழப்பு, வேதனை ஆகியவை நடுவிலும், மற்றொருவரின் வேதனையைத் துடைக்க நினைப்பது, ஒருவரின் உண்மை இயல்பை வெளிச்சத்திற்குக் கொணர்கிறது.

இயேசு பயன்படுத்திய 'நானே' வாக்கியங்கள், எத்தகைய கடினமானச் சூழல்களில் சொல்லப்பட்டவை என்பதைப் புரிந்துகொள்வது, பயனுள்ள முயற்சி. "நல்ல ஆயன் நானே" என்று இயேசு கூறியதை, சென்ற வார நற்செய்தியாக நாம் கேட்டோம். "உண்மையான திராட்சைச் செடி நானே" என்று, இயேசு, இன்றைய நற்செய்தியில் சொல்கிறார்.

"நல்ல ஆயன் நானே" என்று இயேசு சொன்னது, தன் புகழைப் பறைசாற்ற, அவர் சொன்ன வார்த்தைகள் அல்ல. ஒரு நெருக்கடியான நேரத்தில், அதுவும், தன்னால் நன்மைபெற்ற ஒருவர், மதத்தலைவர்களால் சமுதாயத்திலிருந்து விலக்கி வைக்கப்பட்டார் என்பதை அறிந்ததும் ஒரு நல்லாயனாக அவரைத் தேடிச்சென்ற இயேசு, அதைத் தொடர்நது இவ்வார்த்தைகளைச் சொன்னார்.

பார்வை இழந்த ஒருவரை இயேசு குணமாக்கினார். அப்புதுமை ஓய்வுநாளில் நடந்தது என்பதால், அந்த அன்பான, அற்புதமானச் செயலுக்குத் தவறானக் காரணங்கள் சொல்லி, இயேசுவை பாவி என்று முத்திரை குத்தினர், பரிசேயர்களும், மதத்தலைவர்களும் (யோவான் 9:24); அது மட்டுமல்ல, இயேசுவின் புதுமையால் பார்வை பெற்றவரையும், யூத சமுதாயத்திலிருந்து வெளியேத் தள்ளினர் (யோவான் 9:34) என்று வாசிக்கிறோம். இந்நேரத்தில் இயேசு அங்கு சென்றார்.
பிறவியிலேயே பார்வை இழந்ததால், தன்னை ஒரு பாவி என்று முத்திரை குத்தி, வெறுத்து ஒதுக்கிய சமுதாயம், தான் பார்வை பெற்றபிறகும் தன்னை ஒதுக்கிவைத்ததை அறிந்து, அம்மனிதரின் உள்ளம் வேதனையில் வெந்து போயிருக்கும். அவர் உள்ளத்தை நிறைத்த அந்த வேதனையால், அவர் மீண்டும் தன் பார்வையை இழந்துவிடக்கூடாது என்ற பரிவினால், இயேசு, ஒரு நல்லாயனாக, அவரைத் தேடிச்சென்றார். யோவான் நற்செய்தி 9ம் பிரிவில் கூறப்பட்டுள்ள இந்நிகழ்வைத் தொடர்ந்து, 10ம் பிரிவில், இயேசு, 'நல்ல ஆயன் நானே' (யோவான் 10:14) என்று, தன்னையே அடையாளப்படுத்துகிறார்.

இதைவிட நெருக்கடியான ஒரு சூழலில், தன் சீடர்கள் தவித்தபோது, இயேசு, தன்னை ஒரு திராட்சைச் செடியாகவும், அவர்களை, கொடிகளாகவும் ஒப்புமைப்படுத்திப் பேசினார். தன் சீடர்களுடன் இறுதி இரவுணவைப் பகிர்ந்தபோது, இயேசு, இவ்வார்த்தைகளைச் சொன்னார். அந்த இறுதி இரவுணவு, கலகலப்பான, மகிழ்வானச் சூழலில் பகிரப்பட்ட உணவு அல்ல என்பது நமக்குத் தெரியும். பயம், கலக்கம், சந்தேகம் என்ற எதிர்மறை உணர்வுகளில் மூழ்கிக்கொண்டிருந்த சீடர்களிடம் இயேசு இவ்வார்த்தைகளைச் சொன்னார்.
பன்னிரு சீடர்களில் ஒருவர் அவரைக் காட்டிக்கொடுப்பார்; மற்றொரு சீடர், இயேசுவை மறுதலிப்பார் என்ற இரு பெரும் கசப்பான உண்மைகளை, இறுதி இரவுணவின்போது, இயேசு பகிர்ந்துகொண்டார். இயேசு கூறிய கசப்பான உண்மைகளால், நம்பிக்கை இழந்து, பயத்தில் மூழ்கிக்கொண்டிருந்த சீடர்களிடம், தன்னை, ஒரு திராட்சைச் செடியாக ஒப்புமைப்படுத்தி இயேசு பேசுகிறார். அந்தச் செடியின் கொடிகளாக, தன் சீடர்கள் வாழவேண்டும் என்பதை அவர்கள் உள்ளத்தில் ஆழமாய்ப் பதிப்பதற்காக இயேசு இவ்வுருவகத்தைப் பயன்படுத்துகிறார்.

திராட்சைச் செடியும், கொடியும், பல சவால்களை நமக்கு முன் வைக்கின்றன. செடியுடன் கொடிகள் இணைந்துவிட்டால், எல்லாம் சுகமாக இருக்கும் என்ற தவறான கற்பனையை இயேசு தரவில்லை. என்னிடமுள்ள கனிகொடாத கொடிகள் அனைத்தையும் என் தந்தை தறித்துவிடுவார். கனிதரும் அனைத்துக் கொடிகளையும் மிகுந்த கனி தருமாறு கழித்துவிடுவார். (யோவான் 15:2) என்று இயேசு கூறினார். கனிகொடாத கொடிகள் வெட்டப்படும். கனிதரும் கொடிகளும், கூடுதல் கனி தரவேண்டுமெனில், துன்பங்களைச் சந்திக்க வேண்டியிருக்கும் என்று இயேசு தெளிவாகக்கூறியுள்ளார்.

உயிர்ப்புக்குப்பின், இயேசு என்ற செடியைச் சுற்றி, சீடர்களும், அவர்களால் ஈர்க்கப்பட்ட மக்களும், கொடிகளாக, படர்ந்து வளர்ந்துவந்த வேளையில், அந்தச் செடியையும், கொடிகளையும் வேரோடு அழிக்கப் புறப்பட்டவர், சவுல் என்ற இளைஞர். அந்த இளைஞரை, தமஸ்கு செல்லும் வழியில் தடுத்தாட்கொண்ட இயேசு, அவரை, தனிச்சிறப்பு மிக்க கொடியாக தன்னுடன் இணைத்துக்கொண்டார். கொடியாக இணைந்த சவுல், சீடர்களிடமும், அதைத் தொடர்ந்து, எருசலேம் நகர் மக்களிடமும் சந்தித்தத் துன்பங்களை, இன்றைய முதல் வாசகம் (திருத்தூதர் பணிகள் 9 26-31) தெளிவாக்குகிறது. அச்சம், கொலைமுயற்சி என்ற பாணியில் பேசும் இந்த முதல் வாசகம், இறுதியில் நம்பிக்கை தரும் சொற்களுடன் நிறைவடைகிறது: யூதேயா, கலிலேயா, சமாரியா ஆகிய பகுதிகளிலெல்லாம் திருச்சபை வளர்ச்சியுற்று, ஆண்டவருக்கு அஞ்சி நடந்து, அமைதியில் திளைத்து, தூய ஆவியாரின் துணையால் பெருகிவந்தது. (தி.ப. 9:31)

திராட்சைச் செடியும், கொடியும் பல வேதனைகளைத் தாங்கினால் மட்டுமே, தரமானக் கனிகள் தோன்றும். அதேபோல், சுவையுள்ள இரசமாக மாறுவதற்கு, திராட்சைக் கனிகள் கசக்கிப் பிழியப்படவேண்டும். இத்துன்பங்களில் எல்லாம் இயேசு தரும் ஆறுதலான எண்ணங்கள் எவை? திராட்சைத் தோட்டத்தை கவனத்தோடு, கரிசனையோடு நட்டு வளர்ப்பவர் விண்ணகத் தந்தை என்பதும், கிளைகள் அனுபவிக்கும் துன்பங்களில் இயேசுவும் உடனிருப்பார் என்பதும், இயேசு தரும் ஆறுதலான எண்ணங்கள்.

இயேசுவுடன் இணையும் வாழ்வு, பயன்தரும் வாழ்வாக, உயர்ந்து செல்லும் வாழ்வாக அமையும் என்பதை விளக்க, மற்றோர் உருவகம் உதவியாக இருக்கும். அமெரிக்க இராணுவத்தில், பயன்படுத்தப்பட்ட ஹெலிகாப்டர்களில், மேலே சுழலும் இறக்கைகளை ஹெலிகாப்டருடன் பிணைக்க, MRRN என்ற திருகாணிகளைப் பயன்படுத்தினர். MRRN என்றால், Main Rotor Retaining Nut, அதாவது, ‘மையச் சுழல் விசையுடன் பிணைத்து வைக்கும் திருகாணி என்று பெயர். இப்பெயர், சொல்வதற்கு, நீளமாக, கடினமாக இருந்ததால், இதற்குப் பதில், இராணுவ வீரர்கள், இந்தத் திருகாணியை, 'இயேசு திருகாணி' (Jesus Nut) என்று பெயரிட்டனர். இந்தப் பெயர் வைக்கப்பட்டதன் காரணத்தை வீரர்களிடம் கேட்டபோது, அவர்கள் தந்த விளக்கம், அழகான உருவகமாகத் தெரிந்தது.
ஹெலிகாப்டர் பறந்துகொண்டிருக்கும்போது, இந்த MRRN, அல்லது, 'இயேசு திருகாணி' கழன்றுவிட்டால், மேலே சுற்றும் இறக்கைகள் ஹெலிகாப்டரிலிருந்து பிரிந்துவிடும். அந்த இறக்கைகளின் சுழற்சியால் அதுவரை வானத்தில் தாங்கப்பட்ட ஹெலிகாப்டர், நேரே பூமியில் விழுந்து நொறுங்கவேண்டியதுதான். அந்நேரத்தில், ஹெலிகாப்டரில் இருப்பவர்களை, இயேசு மட்டுமே காப்பாற்றமுடியும் என்பதை வீரர்கள் உணர்ந்ததால், அந்த மையத் திருகாணிக்கு, 'இயேசு திருகாணி' என்று பெயரிட்டனர்.

ஹெலிகாப்டரின் இறக்கைகள் போல சுற்றிச் சுழலும் நமது வாழ்வை, இறுகப் பிணைப்பதற்கு, இயேசு என்ற திருகாணி இல்லையெனில், வானில் பறப்பதாய் நாம் நினைக்கும் வாழ்வு, பாதாளத்தில் மோதி, சிதற வேண்டியிருக்கும்.
இயேசு என்ற செடியுடன் இணைந்திருக்கும் வரை, நாம் மிகுந்த கனி தருவோம்.
இயேசு என்ற திருகாணியுடன் இணைந்திருக்கும் வரை, வானில் உயரப் பறப்போம்.

இறுதியாக, ஒரு சிறப்பான வேண்டுதல்... பொதுவாக, ஒவ்வோர் ஆண்டும், ஏப்ரல், மே மாதங்கள், ஊர் மாற்றம், வீடு மாற்றம், வேலை மாற்றம் என்ற மாற்றங்களைக் கொணரும் மாதங்கள். ஆனால், சென்ற ஆண்டும், அதைவிடக் கூடுதலாக, இவ்வாண்டும், ஏப்ரல், மே மாதங்கள், மேலோட்டமான மாற்றங்களைக் கொணரவில்லை; மாறாக, நம்மில் பலரது வாழ்வைத் தலைகீழாகப் புரட்டிப்போட்ட மாற்றங்களைக் கொணர்ந்துள்ளன. இத்தகைய ஒரு சூழலில், இயேசு நம் வாழ்வின் வேராக, செடியாக விளங்கவேண்டும் என்று மன்றாடுவோம். இன்னும் குறிப்பாக, கோவிட்-19 பெருந்தொற்றினால், தங்கள் வாழ்வு, வேரோடு வீழ்த்தப்பட்டுள்ளதைப்போல் உணர்ந்து, நம்பிக்கை இழந்திருப்போர், மீண்டும், இயேசு என்ற செடியிலிருந்து, வாழும் சக்தியைப் பெறவேண்டுமென, சிறப்பாக செபிப்போம்.

உலகெங்கும் பரவியுள்ள கோவிட்-19 பெருந்தொற்று முடிவுக்கு வரவேண்டும் என்ற வேண்டுதலுடன், மே மாதம் முழுவதும், உலகின் அனைத்து திருத்தலங்களிலும், செபமாலை பக்தி முயற்சி மேற்கொள்ளப்படுகின்றது. மே மாதத்தின் முதல் நாளான இச்சனிக்கிழமை, உரோம் நேரம் மாலை 6 மணிக்கு, வத்திக்கானின் புனித பேதுரு பெருங்கோவிலில் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இப்பக்தி முயற்சியை துவக்கி வைத்துள்ளார். மீண்டும் அவர், மே மாதம் 31ம் தேதி, இந்த பக்தி முயற்சியை நிறைவு செய்துவைப்பார்.

தமிழ்நாட்டின் வேளாங்கண்ணி ஆரோக்கிய அன்னை திருத்தலம், பிரான்ஸ் நாட்டின் லூர்து நகர் அன்னை மரியா திருத்தலம், போர்த்துக்கல் நாட்டின் பாத்திமா அன்னை மரியா திருத்தலம், மெக்சிக்கோவின் குவாதலூப்பே அன்னை மரியா திருத்தலம்  உட்பட, உலகின் அனைத்து கண்டங்களின் முப்பது திருத்தலங்களில், இந்த பக்தி முயற்சி இணைந்து நடக்கிறது. அன்னை மரியாவின் பரிந்துரையை நாடி மேற்கொள்ளப்பட்டுள்ள இந்த உலகளாவிய பக்தி முயற்சியில், நாமும், குடும்பமாக இணைந்து, நம்மைச் சூழ்ந்துள்ள பெருந்தொற்று நீங்கவேண்டுமென்று உருக்கமாகச் செபிப்போம். 


27 April, 2021

விவிலியத்தேடல்: திருப்பாடல் 8 – இறை மாட்சியும் மானிட மேன்மையும் 1

Psalm 8:1

வானியலில் மிகவும் புகழ்பெற்ற அறிவாளி ஒருவர், ஆடுமேய்க்கும் ஆயர் ஒருவரைச் சந்தித்தார். தன்னிடம் இருக்கும் வானியல் தொலைநோக்கு கருவியின் சக்தியைப்பற்றி, அவர், ஆயரிடம், நீண்டநேரம் பேசிக்கொண்டிருந்தார். "என் தொலைநோக்கியின் வழியாக, பல்லாயிரம் விண்மீன்களை என்னால் துல்லியமாக அடையாளம் கண்டுகொள்ளமுடியும்" என்று, அந்த வானியல் ஆய்வாளர் சொன்னார். ஆயர் அவரிடம், "நீங்கள் பல்லாயிரம் விண்மீன்களை மட்டுமே காண்கிறீர்கள். நானோ, ஒரு சில விண்மீன்களையும், அவற்றிற்குப் பின்னிருக்கும் கடவுளையும் காண்கிறேன்" என்று சொன்னார்.

பாலஸ்தீனாவின் பெத்லகேமில், தன் தந்தையின் ஆடுகளை மேய்த்துக்கொண்டிருந்த இளைஞர் தாவீது, இரவு வானில் தெரிந்த விண்மீன்களைக் கண்டபோது, அவற்றின் பின்புலத்தில், அவற்றைப் படைத்த இறைவனையும் கண்டார். வானத்தில் ஆண்டவரின் மாட்சியைக் கண்ட அந்த அனுபவம், பின்னொரு காலத்தில் அவர் உருவாக்கிய ஒரு பாடலில் வெளிப்பட்டது. தாவீது உருவாக்கிய அந்தப் பாடலில், இன்று நாம் விவிலியத் தேடலை மேற்கொண்டுள்ளோம்.

இதுவரை நாம் சிந்தித்து வந்துள்ள 7 திருப்பாடல்களில் இல்லாத மகிழ்வு, "இறைவனின் மாட்சியும், மானிடரின் மேன்மையும்" என்று தலைப்பிடப்பட்டுள்ள 8ம் திருப்பாடலில் வெளிப்படுகிறது. 9 இறைவாக்கியங்களைக் கொண்ட இத்திருப்பாடல், ஒரு பாடலாகப் பயன்படுத்தப்பட்டுள்ளது என்பதற்கு, இப்பாடலின் முன்குறிப்பு ஒரு காரணம். பாடகர் தலைவர்க்கு: ‘காத்து’ நகர்ப் பண்; தாவீதின் புகழ்ப்பா என்ற முன்குறிப்பில் கூறப்பட்டுள்ள 'காத்து' என்ற சொல்லுக்கு, விவிலிய விரிவுரையாளர்கள் இருவேறு விளக்கங்கள் கூறியுள்ளனர். 'காத்து' என்பது ஒரு நகரம் என்று கூறுவோரும் உண்டு. அல்லது, 'காத்து' என்பது, ஓர் இசைக்கருவி என்று கூறுவோரும் உண்டு. எனவே, இந்தப் பாடல், 'காத்து' என்ற நகரில் பயன்படுத்தப்பட்ட ஒரு இராகத்தின் அடிப்படையில் பாடப்பட்ட ஒரு பாடலாகவோ, அல்லது, 'காத்து' என்ற இசைக்கருவியின் உதவியுடன் பாடப்பட்ட ஒரு பாடலாகவோ இருந்தது என்பது விரிவுரையாளர்கள் தரும் விளக்கம்.

8ம் திருப்பாடல், யூதர், கத்தோலிக்கர், லூத்தரன், ஆங்கிலிக்கன் ஆகிய அனைத்துப் பிரிவினராலும் பாடலாக வடிவமைக்கப்பட்டுள்ளது. இத்திருப்பாடலை அடித்தளமாகக் கொண்டு, ஆங்கில மொழியில் எழுதப்பட்ட "How Great Thou Art" என்ற பாடல், "Amazing Grace" என்ற ஆங்கிலப்பாடலுக்கு அடுத்தபடியாக, அதிகப் புகழ்பெற்ற பாடலாக இருந்து வருகிறது.

இதுவரை நாம் சிந்தித்த 7 திருப்பாடல்களில், முதலிரு திருப்பாடல்களைத் தவிர, ஏனைய 5 திருப்பாடல்களும், 'ஆண்டவரே', அல்லது 'கடவுளே' என்ற விளிச்சொற்களுடன், இறைவனிடம் நேரடியாகப் பேசுவதுபோல் துவங்குகின்றன. ஆயினும், இந்த 5 திருப்பாடல்களிலும், தாவீது, ஆங்காங்கே, தன் உள்ளத்தில் எழுந்த எண்ணங்களை, ஓர் அறிக்கையாக, ஓர் எச்சரிக்கையாக வழங்கியுள்ளதையும் நாம் காணலாம். எடுத்துக்காட்டாக,
"நான் படுத்துறங்கி விழித்தெழுவேன்; ஏனெனில், ஆண்டவரே எனக்கு ஆதரவு. என்னைச் சூழ்ந்திருக்கும் பல்லாயிரம் பகைவருக்கு நான் அஞ்சமாட்டேன்." (தி.பா. 3:5-6) என்பது, ஓர் அறிக்கையாக,
"சினமுற்றாலும் பாவம் செய்யாதிருங்கள்; படுக்கையில் உங்கள் உள்ளத்தோடு பேசி அமைதியாயிருங்கள். முறையான பலிகளைச் செலுத்துங்கள்; ஆண்டவரை நம்புங்கள்." (தி.பா.4:4-5) என்பது, ஓர் அறிவுரையாக,
"தீங்கிழைப்போரே! நீங்கள் அனைவரும் என்னை விட்டு அகன்று போங்கள்; ஏனெனில், ஆண்டவர் என் அழுகுரலுக்குச் செவி சாய்த்துவிட்டார்." (தி.பா. 6:8) என்பது, ஓர் எச்சரிக்கையாக ஒலிக்கின்றன. 8ம் திருப்பாடல் முழுவதுமே, இறைவனிடம் நேரடியாகப் பேசப்படும் உரையாடலாக, இறைவேண்டலாக அமைந்துள்ளது.

இப்பாடலின் ஆரம்பத்தில், இறைவனை, தாவீது, "ஆண்டவரே!" என்றும், "எங்கள் தலைவரே!" என்றும் அழைக்கிறார். இஸ்ரயேல் மக்கள், இறைவனைக் குறிக்க பயன்படுத்திய 'Yahweh' மற்றும் 'Adonai' என்ற இருவகை சொற்கள் இந்த வரியில் பயன்படுத்தப்பட்டுள்ளன. இவற்றில், 'Yahweh' என்பது, 'உடன்படிக்கையின் கடவுள்' என்ற கருத்தை வலியுறுத்தும் சொல். 'Adonai' என்பது, 'மாட்சியுடன் வீற்றிருக்கும் கடவுள்' என்ற கருத்தை வெளிப்படுத்தும் சொல்.

இறைவனை, இவ்வாறு, உறவுகொள்ளும் உடன்படிக்கையின் கடவுளாகவும், அனைத்து மாட்சிக்கும் உரிய மேன்மை மிகு கடவுளாகவும் அழைத்து, தாவீது துவங்கும் இந்த இறைவேண்டல் கவிதையின் முதல் இறைவாக்கியம் இதோ:
ஆண்டவரே! எங்கள் தலைவரே! உமது பெயர் உலகெங்கும் எவ்வளவு மேன்மையாய் விளங்குகின்றது! உமது மாட்சி வானங்களுக்கு மேலாகவும் உயர்ந்துள்ளது. (திருப்பாடல் 8:1)

ஆடுகளை மேய்த்துவந்த இளைஞனாக, தாவீது, பெரும்பாலான நேரங்களில் இயற்கையுடன் இணைந்த வாழ்வை அனுபவித்தவர். மலைகள், பள்ளத்தாக்குகள், பசும்புல்வெளிகள், தெளிந்த நீரோடைகள் என்று, இறைவனின் கைவண்ணத்தை பல வழிகளில் உணர்ந்த தாவீது, "உமது பெயர் உலகெங்கும் எவ்வளவு மேன்மையாய் விளங்குகின்றது!" என்று தன் இறைவேண்டல் கவிதையைத் துவங்குவதில் வியப்பு எதுமில்லை.
அடுத்த வரியில், தாவீதின் உள்ளம் இவ்வுலகைத் தாண்டி, வானங்களைக் கடந்துசெல்கிறது. பகல் நேரங்களைவிட, இரவு நேரங்களில் விண்மீன்களும், நிலவும் ஒளிரும் வானத்தைக் கண்டு தாவீது வியந்திருக்கவேண்டும். அந்த வியப்பு, "உமது மாட்சி வானங்களுக்கு மேலாகவும் உயர்ந்துள்ளது" என்ற சொற்களில் வெளிப்படுகிறது.

Steven J.Cole என்ற விவிலிய விரிவுரையாளர், இத்திருப்பாடலின் முதல் இறை வாக்கியத்தைக் குறித்து தன் கருத்துக்களைத் தொகுத்து வழங்கியுள்ளார். அங்கு அவர் கூறும் அழகிய எண்ணங்கள் இதோ:
"கண்ணுக்கெட்டிய தூரம் வரை நிலப்பரப்பின் மீது காணப்படும் இயற்கையின் அழகை, தன் ஊனக்கண்களால் கண்டு இரசித்ததோடு நில்லாமல், தாவீது, தன் விசுவாசக் கண்கொண்டு, வானத்தையும் கடந்து பார்க்கிறார். இந்த வான்வெளி எவ்வளவு பெரியதென்று காண்பதற்கு, அவரிடம், தொலைநோக்கு கருவி எதுவும் இல்லை. இன்று, வான்வெளியைக் குறித்து நமக்குத் தெரிந்தவை, அவருக்குத் தெரிந்திருந்தால், அவர் இன்னும் எவ்வாறெல்லாம் நினைத்திருப்பார்!" என்ற வியப்பை, Cole அவர்கள் வெளிப்படுத்தியுள்ளார்.

இதைத் தொடர்ந்து, வானியல், புவியியல் ஆய்வுக்கட்டுரைகளை வெளியிடும் 'National Geographic' என்ற நிறுவனம், சில ஆண்டுகளுக்கு முன், விண்வெளியைக் குறித்து வெளியிட்ட ஒரு கட்டுரையின் சில கருத்துக்களை, Cole அவர்கள் தொகுத்து வழங்கியுள்ளார். 8ம் திருப்பாடலின் ஆழத்தைப் புரிந்துகொள்ள, இந்தக் கருத்துக்களை நாமும் அசைபோடுவது பயனளிக்கும்.

ஒளியானது, ஒரு நொடிக்கு, 186,000 மைல்கள், அல்லது, 300,000 கி.மீ.கள் வேகத்தில் பயணம் செய்கிறது என்பதை நாம் அறிவோம். இத்தகவலின் அடிப்படையில், வான்வெளி எவ்வளவு விரிவானது என்பதை 'National Geographic' இதழ் இவ்வாறு விவரித்துள்ளது:
"ஒளியின் வேகத்தில் நாம் பயணித்தால், பூமியின் மையத்திலிருந்து, சூரியனை அடைவதற்கு 8 நிமிடங்கள், அதாவது, 480 நொடிகள் ஆகும். சூரியனின் மையத்திலிருந்து, 'Milky Way' என்றழைக்கப்படும் 'பால்வெளி' மையத்தை ஒளியின் வேகத்தில் அடைய 33,000 ஆண்டுகள் ஆகும். இதை நாம் 33,000 ஒளி ஆண்டுகள் என்று கூறுகிறோம். 'பால்வெளி'யைப்போல 20 விண்மீன் தொகுப்புகள் உள்ளன. அவை அனைத்தும் சேர்ந்த அமைப்பை, 'Local Group', அதாவது, 'அண்மையக் (உள்ளூர்) குழு' என்றழைக்கிறோம். இந்த 'அண்மையக்குழு'வைக் கடந்து செல்ல, 20 இலட்சம் ஒளி ஆண்டுகள் ஆகும்...."

இவ்வாறு, தன் விளக்கங்களைக் கூறும் 'National Geographic' கட்டுரை, தொடர்ந்து, அண்மையக்குழு, 'Virgo Cluster' என்ற குழுவின் ஓர் அங்கம் என்றும், அக்குழு, 'Local Supercluster' என்ற குழுவின் அங்கம் என்றும், தன் விளக்கங்களைத் தொடர்கிறது. இந்தக் குழுக்களையெல்லாம் கடந்து செல்ல, 2000 கோடி ஒளி ஆண்டுகள் ஆகலாம் என்று இக்கட்டுரையில் கணிக்கப்பட்டுள்ளது.

இவ்வளவு பிரம்மாண்டமாக பரந்து விரிந்திருக்கும் வான்வெளியைப்பற்றி, ஆயிரக்கணக்கான வானியல் ஆய்வாளர்கள் பல்வேறு கருத்துக்களை வெளியிட்டு வருகின்றனர். அவர்களில் வெகு சிலரே, இந்த அற்புதப் படைப்பிற்குப் பின்புலத்தில், இதை உருவாக்கியவர் ஒருவர் இருக்கிறார் என்ற உண்மையை உணர்ந்துள்ளனர். அவ்வாறு உணர்ந்தவர்களில், அந்தப் படைப்பாளி கடவுள் என்று கூறத்துணிந்தவர்கள் மிக, மிகக் குறைவானவர்கள். அத்தகைய துணிவு கொண்டவர்களில் ஒருவர், உலகப் புகழ்பெற்ற இயற்பியல் மேதை, ஆல்பர்ட் ஐன்ஸ்டைன் அவர்கள். இவர், அறிவியலையும், வான்வெளியையும் இணைத்துக் கூறிய ஒரு கூற்று இது:
"இந்த வான்வெளியின் விதிகளுக்குப் பின்புலத்தில், மனிதரைக் காட்டிலும் மிக, மிக உயர்ந்த ஓர் ஆன்மா உள்ளது என்பதை, அறிவியலை ஆர்வமுடன் தொடரவிழைவோர் உணர்கின்றனர். இந்த சக்திக்குமுன் நாம் பணிவு கொள்வது மட்டுமே தகுதியான பதில்"

இத்தகையப் பணிவுடன் வான்வெளி அதிசயங்களைக் காண, குழந்தைகளின் உள்ளம் தேவை. அதையே, தாவீது இத்திருப்பாடலின் 2வது இறைவாக்கியத்தில் இவ்வாறு கூறியுள்ளார்: பாலகரின் மழலையிலும் குழந்தைகளின் மொழியிலும் வலிமையை உறுதிப்படுத்தி உம் பகைவரை ஒடுக்கினீர்; எதிரியையும் பழிவாங்குவோரையும் அடக்கினீர். (திருப்பாடல் 8:2)
இத்திருப்பாடல் வழியே, தாவீது நமக்கு உணர்த்த விழையும் ஆழமான உண்மைகளை நாம் அடுத்தத் தேடலில் தொடர்ந்து சிந்திப்போம்.