மூன்று
வாரங்களுக்கு முன், மார்ச் 27ம் தேதி, வத்திக்கான் நாட்டின் நீதித்துறையைச் சேர்ந்தவர்கள்,
தங்கள் புதிய நீதி ஆண்டின் துவக்க விழாவைச் சிறப்பித்தனர். இத்தருணத்தையொட்டி, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இந்த நீதி
ஆண்டின் துவக்க உரையை வழங்கினார். கோவிட்-19 பெருந்தொற்று விதித்திருந்த கட்டுப்பாடுகளால், இந்த ஆரம்பவிழாக் கூட்டம், வழக்கமாக நடைபெறும் அரங்கத்தில் இடம்பெறாமல், வேறோர் அரங்கத்தில் நடைபெற்றது. இறைவனின்
உறைவிடமான புனித பேதுரு பெருங்கோவிலையும், மக்கள்
கூடிவரும் புனித பேதுரு வளாகத்தையும் இணைக்கும்வண்ணம் அமைக்கப்பட்டுள்ள 'ஆசீரின் அரங்கத்தில்' இந்த துவக்கவிழா கூட்டம் நடைபெற்றது.
பொதுவாக, கிறிஸ்து பிறப்புப் பெருவிழா மற்றும், உயிர்ப்புப் பெருவிழா ஆகிய நாள்களில், திருத்தந்தையர் வழங்கும் 'Urbi et Orbi' சிறப்புச் செய்தியும், சிறப்பு ஆசீரும் புனித பேதுரு பெருங்கோவிலின்
மேல்மாடத்திலிருந்து வழங்கப்படும். இந்த மேல்மாடத்தையொட்டி பெருங்கோவிலின் மேல் தளத்தில்
அமைந்துள்ள அரங்கம், 'ஆசீரின் அரங்கம்' என்று அழைக்கப்படுகிறது. அந்த அரங்கத்தில், நீதித்துறையினர் கூடியிருந்ததை, தன் உரையின்
துவக்கத்தில், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், சிறப்பாகக் குறிப்பிட்டுப் பேசினார்.
"உலகின்
அனைத்து நாடுகளிலும் உள்ள நீதித்துறையினருக்கும் தேவையான, உண்மை, நேர்மை, ஒளிவுமறைவற்ற தன்மை ஆகிய அனைத்து பண்புகளும், வத்திக்கான் நீதித்துறையில் பணியாற்றுவோருக்கும்
மிக, மிக அவசியம். அத்தடன், வத்திக்கான் நீதித்துறையில் பணியாற்றுவோர், செபத்திற்கும் நேரம் ஒதுக்கவேண்டும் என்பதை
நினைவுறுத்தவே, நாம் இந்த 'ஆசீரின் அரங்கத்தில்' கூடியுள்ளோம்" என்று தன் உரையைத் துவக்கினார்,
திருத்தந்தை.
தொடர்ந்து,
அவர், நீதிப்பணிக்கும், இறைவேண்டலுக்கும் உள்ள நெருங்கியத் தொடர்பைக்
குறித்துப் பேசினார்: "இறைவேண்டல் புரியும்போது கிடைக்கும் தெளிவு, உன்னதம், தொலைநோக்குடன் கூடிய கண்ணோட்டம் ஆகியவை, நீதிப்பணிகளுக்கு அவசியம். பொதுவாக, நீதியைக் குறிக்க, இவ்வுலகம் பயன்படுத்தும் அடையாளம், கட்டப்பட்டக் கண்கள். ஆனால், கிறிஸ்தவ நீதியின் அடையாளமோ, வானை நோக்கி உயர்த்தப்பட்ட கண்கள். ஏனெனில், விண்ணகத்தில் மட்டுமே, உண்மையான நீதி நிலைத்துள்ளது."
நீதித்துறையின்
பணிகள், இறைவேண்டலுடன் இணைந்து
செல்லவேண்டும் என்று திருத்தந்தை கூறிய சொற்கள், இன்றைய விவிலியத் தேடலை துவக்கிவைக்கின்றன.
இன்று நாம் தேடலை மேற்கொண்டுள்ள 7ம் திருப்பாடல், 'நீதி வழங்குமாறு வேண்டல்' என்று
தலைப்பிடப்பட்டுள்ளது. நீதியின் ஊற்றான இறைவனிடம் தன் வழக்கை சமர்ப்பித்து, தாவீது
எழுப்பும் மன்றாட்டு இது.
தனக்கு
நீதி வழங்குமாறு தாவீது இறைவனிடம் எழுப்பும் இந்த மன்றாட்டில் நம் தேடலை இன்று மேற்கொள்வதை,
அருள்நிறைந்த தருணமாக எண்ணிப்பார்க்கலாம். ஏப்ரல் 14, இப்புதனன்று, மாமனிதர் அம்பேத்கர் அவர்களின் பிறந்தநாளைக்
கொண்டாடுகிறோம். 130 ஆண்டுகளுக்கு முன், 1891ம்
ஆண்டு ஏப்ரல் 14ம் தேதி பிறந்த அம்பேத்கர் அவர்கள், தாழ்த்தப்பட்ட தலித் மக்களின்
உரிமைகளுக்காகப் போராட, தன் வாழ்வை அர்ப்பணித்தவர். அவர் இந்தியாவில் உருவாக்க
விழைந்த சமத்துவம், இன்னும் நிறைவேறாத கனவாக உள்ளது. இருப்பினும், அவர் தந்த உத்வேகத்தின் பயனாக, ஒடுக்கப்பட்டோர்
அனைவருக்கும், நீதியின் இறைவன், உரிமைகளும், நீதியும்
வழங்கவேண்டும் என்ற வேண்டுதலுடன், 7ம் திருப்பாடலில், நம்
தேடலைத் தொடர்வோம்.
இத்திருப்பாடலுக்கு
வழங்கப்பட்டுள்ள முன்குறிப்பு, முதலில், நம் கவனத்தை ஈர்க்கிறது. "தாவீதின்
புலம்பல்: பென்யமினியனான கூசின்
சொற்களைக் கேட்டுத் தாவீது ஆண்டவரை நோக்கிப் பாடியது" என்ற இந்த முன்குறிப்பு, தாவீதின் வாழ்வில் இடம்பெற்ற ஒரு குறிப்பிட்ட
நிகழ்வை சுட்டிக்காட்டுவதுபோல் தெரிகிறது.
திருப்பாடல்
நூலில் இடம்பெற்றுள்ள 150 பாடல்களில், பெரும்பாலான பாடல்களுக்கு முன்குறிப்பு தரப்பட்டுள்ளன.
இவற்றில், 'தாவீதின் புகழ்ப்பா', 'தாவீதின் கழுவாய்ப்பாடல்', 'தாவீதின் நன்றிப்பா' என்ற பொதுவான முன்குறிப்புகளே அதிகமாக உள்ளன.
13 திருப்பாடல்களில் (3, 7, 18, 34, 51, 52, 54, 56, 57, 59, 60, 63, மற்றும் 142) மட்டுமே, அப்பாடல்கள், எத்தகையைச் சூழலில்
உருவாயின என்ற குறிப்புகளைக் காண்கிறோம்.
இப்பாடல்களுக்கு
வழங்கப்பட்டுள்ள முன்குறிப்புகள் பலவற்றை, தாவீது
வாழ்வின் நிகழ்வுகளுடன் எளிதில் தொடர்புபடுத்தமுடிகிறது. எடுத்துக்காட்டாக, 51ம் திருப்பாடலின் முன்குறிப்பில், "தாவீது பத்சேபாவிடம் முறைதவறி
நடந்தபின் இறைவாக்கினர் நாத்தான் அவரிடம் வந்தபோது அவர் பாடியது" என்ற குறிப்பை, சாமுவேல் 2ம் நூல் 12ம் பிரிவில் கூறப்பட்டுள்ள
நிகழ்வுடன் தொடர்புபடுத்திப் பார்க்கிறோம். (2 சாமுவேல் 12:1–13). ஆனால், 7ம்
திருப்பாடலின் முன்குறிப்பில் கூறப்பட்டுள்ள "பென்யமினியனான கூசின் சொற்களைக்
கேட்டுத் தாவீது ஆண்டவரை நோக்கிப் பாடியது" என்ற சொற்களை, எந்த ஒரு குறிப்பிட்ட
நிகழ்வுடனும் தொடர்புபடுத்த இயலாததால்,
இதற்கு, விவிலிய விரிவுரையாளர்கள், வேறுபட்ட விளக்கங்களைத்
தரமுயன்றுள்ளனர்.
இக்குறிப்பில்
காணப்படும் 'பென்யமினியனான கூஸ்' என்பவர்
யார் என்ற கேள்விக்கு, ஒரு சில விளக்கங்கள் கூறப்பட்டுள்ளன. தாவீதுக்கு முன்னதாக இஸ்ரயேல்
மக்களின் அரசனாக இருந்த சவுல், 'பென்யமின் குலத்தவர்' என்பதாலும், அவர், தாவீதின் மீது பொறாமை கொண்டு, அவரைக் கொல்வதற்கு முயற்சிகள் செய்ததாலும், தாவீது, இறைவனிடம் நீதி கேட்டு இந்தப் பாடலைப்
பாடினார் என்பதும், பென்யமின் குலத்தவரான சவுலைச் சுட்டிக்காட்ட, 'பென்யமினியனான கூஸ்' என்ற சொற்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன
என்பதும், சில விரிவுரையாளர்களின் விளக்கம்.
'கருப்பு' என்று பொருள்படும் 'கூஸ்' என்ற சொல்லுக்கு, 'ஒற்றன்' அல்லது 'காட்டிக்கொடுப்பவன்' என்றும் பொருள். எனவே, மன்னன் சவுலைப் போல, 'பென்யமின்' இனத்தைச் சேர்ந்த ஒருவர், சவுலின் ஒற்றனாக, தாவீதுடன் இருந்ததையும், பின்னர், தாவீதுக்கு எதிராக அவர் மாறியதையும் 7ம்
திருப்பாடலின் முன்குறிப்பு உணர்த்துகிறது என்பது மற்றொரு விளக்கம்.
அடுத்து,
'பென்யமினியனான கூஸ்' என்பவர் கூறிய சொற்களைக் கேட்டு, தாவீது
இப்பாடலைப் பாடியதாகக் கூறப்பட்டுள்ளது. அம்மனிதர் கூறிய சொற்கள் எவை என்ற
கேள்விக்கு பதிலளிக்க முயலும் விரிவுரையாளர்கள், தாவீதை பழித்து, சபித்து பேசிய ‘சிமயி’ என்ற மனிதரைப் பற்றி, சாமுவேல் 2ம்
நூலின் 16ம் பிரிவில் நாம் வாசிக்கும் ஒரு நிகழ்வைச் சுட்டிக்காட்டியுள்ளனர்.
அதற்குமுன், சாமுவேல் 2ம் நூலின் 15ம் பிரிவில் கூறப்பட்டுள்ள நிகழ்வை
நினைவுகூர்வது உதவியாக இருக்கும்.
3ம்
திருப்பாடலின் முன்குறிப்பில், தாவீதின் புகழ்ப்பா; தம் மகன் அப்சலோமிடமிருந்து தப்பியோடிய போது
அவர் பாடியது
என்று கூறப்பட்டுள்ளதை அறிவோம். தாவீது தப்பியோடிய நிகழ்வு, சாமுவேல் 2ம் நூல் 15ம் பிரிவில் பதிவாகியுள்ளது.
(2 சாமு. 15:13-23) இதைத் தொடர்ந்துவரும் 16ம் பிரிவில், தாவீதுக்கு எதிரே வந்த 'சிமயி' என்பவர், இவ்வாறு அறிமுகம் செய்து
வைக்கப்படுகிறார்:
2
சாமுவேல் 16:5-8
தாவீது
பகூரிம் வந்தபோது சவுலின் குடும்பத்தையும் வீட்டையும் சார்ந்த ஒருவன் அவரை எதிர்கொண்டான்.
அவன் கேராவின் மகனான சிமயி. அவன் பழித்துக் கொண்டே எதிரே வந்தான். அவன் தாவீது மீதும், தாவீது அரசரின் எல்லாப்
பணியாளர் மீதும் எல்லா மக்கள் மீதும், அவர்தம் வலமும் இடமும் இருந்த வீரர்கள்மீதும்
கல்லெறிந்தான். சிமயி பழித்துக் கூறியது: “இரத்த வெறியனே! பரத்தை மகனே! போ! போ!.
நீ சிந்திய சவுல் வீட்டாரின் இரத்தப் பழி அனைத்தையும் ஆண்டவர் உன்மீது வரச்செய்துள்ளார்.
சவுலுக்குப் பதிலாக நீ ஆட்சி செய்தாய் அன்றோ! ஆண்டவர் உன் மகன் அப்சலோமின் கையில் அரசைத்
தருவார்! இரத்த வெறியனான நீ உன் தீமையிலேயே அழிவாய்” என்றான்.
பென்யமின்
குலத்தைச் சேர்ந்த சிமயி பேசுவதைத் தடுக்கவும், அவரைக் கொல்லவும், தாவீதின் படைவீரர்களில்
ஒருவர் அவரிடம் அனுமதி கேட்கிறார். அப்போது தாவீது அபிசாயிடமும் தம் பணியாளர்
அனைவரிடமும் கூறியது:
“இதோ
எனக்கு பிறந்த என் மகனே என் உயிரைப் பறிக்கத் தேடுகிறான். பென்யமின் குலத்தைச் சார்ந்த
இவன் செய்யலாகாதோ? அவனை விட்டுவிடு! அவன்
பழிக்கட்டும்! ஏனெனில் ஆண்டவரே அவனைத் தூண்டியுள்ளார். ஒருவேளை ஆண்டவர் என் துயரத்தை
காண்பார். இன்று அவன் பழித்து பேசியதற்காக எனக்கு அவர் நன்மை செய்வார். அவன் பழிக்கட்டும்"
(2
சாமு. 16:11-12) என்று கூறுகிறார்.
இதைத்
தொடர்ந்து, தாவீது தன் ஆள்களோடு பயணத்தை
தொடர்ந்தார். சிமயி அவருக்கு எதிராகப் பழித்துரைத்து கல்லெறிந்து, புழுதியை வாரித் தூற்றிக்கொண்டு
மலையோரமாகச் சென்றான். (2 சாமு. 16:13) என்று இந்நிகழ்வு முடிவடைகிறது.
தாவீதின்
மீதும், அவரைச் சார்ந்தவர்கள்
மீதும் கல்லெறிந்து, புழுதியை வாரித் தூற்றிக்கொண்டு, தாவீதின் மீது பழிகளைச் சுமத்திய சிமயி என்பவரின்
செயல், தாவீதை பெருமளவு பாதித்திருக்கவேண்டும்.
தான் குற்றமற்றவர் என்பதை இறைவன் அறிவார் என்ற நம்பிக்கையில், அவர் எழுப்பும் மன்றாட்டு, 7ம் திருப்பாடலாக உருவெடுத்துள்ளது. இப்பாடலின்
முன்குறிப்பில், இப்பாடலை, 'தாவீதின் புலம்பல்' என்று
குறிப்பிட்டிருந்தாலும், இப்பாடலின் 17 இறை வாக்கியங்களில்
இறை நம்பிக்கை, பொல்லாருக்கு எச்சரிக்கை, தனக்கு நீதி வழங்கும் இறைவனுக்கு நன்றி என்ற
பல்வேறு உணர்வுகள் வெளிப்படுகின்றன. இந்த பாடலில் கூறப்பட்டுள்ள எண்ணங்களை நாம் அடுத்தத்
தேடலில் தொடர்ந்து சிந்திப்போம்.
No comments:
Post a Comment