Showing posts with label Bible - Book of Psalms - Psalm 14-53 - 2. Show all posts
Showing posts with label Bible - Book of Psalms - Psalm 14-53 - 2. Show all posts

06 July, 2021

விவிலியத்தேடல்: திருப்பாடல்கள் 14,53 – இறைப்பற்று இல்லார் 2

The fool has said…

கடவுள் மறுப்பு, கடவுள் நம்பிக்கை என்ற கருத்துக்களை மையப்படுத்திய நூல்கள், பல ஆண்டுகளாக, நம் மத்தியில் வலம்வருவதை அறிவோம் என்றும், அவற்றில், கடந்த 20 ஆண்டுகளில் வெளிவந்த சில நூல்கள், 14 மற்றும் 53 ஆகிய திருப்பாடல்களில்  நாம் மேற்கொண்டுள்ள தேடலுக்கு உதவியாக இருக்கும் என்றும், சென்ற விவிலியத்தேடலில் குறிப்பிட்டோம். இந்நூல்களில், "I Don't Have Enough Faith to Be an Atheist", அதாவது, "ஒரு கடவுள் மறுப்பாளராக இருக்கத் தேவையான அளவு நம்பிக்கை என்னிடம் இல்லை" என்ற தலைப்பில், Norman Geisler, Frank Turek என்ற இரு எழுத்தாளர்கள், 2004ம் ஆண்டு வெளியிட்ட நூலின் முதல் பிரிவில் கூறப்பட்டிருந்த ஒரு சில கருத்துக்களை, சென்ற தேடலில் சிந்தித்தோம். கடவுள் மறுப்பு, கடவுள் நம்பிக்கை என்ற கருத்துக்களை இணைத்து, 2011ம் ஆண்டு வெளியான மற்றொரு நூல், இன்றைய விவிலியத்தேடலுக்கு உதவியாக உள்ளது.

'கடவுள் இறந்துவிட்டாரா?' என்ற கேள்வியுடன் வெளியான Time வார இதழைப்பற்றி சென்ற வாரம் சிந்தித்தோம். அந்த சிந்தனையில், Time இதழ் வெளியான 1966ம் ஆண்டுக்குப்பின் பிறந்த தலைமுறையினரிடம், 'கடவுள் இறந்துவிட்டாரா' என்ற கேள்வியைக் கேட்டால், 'கடவுளா, அது யார்?' என்ற பதில்கேள்வி கேட்கக்கூடிய அளவுக்கு, கடவுளைப்பற்றி அக்கறையற்றிருப்பதைப் பற்றியும் குறிப்பிட்டோம். இந்தத் தலைமுறையைச் சேர்ந்த பீட்டர் ஹிட்சென்ஸ் (Peter Hitchens) என்பவர், 2011ம் ஆண்டு, "The Rage Against God: How Atheism Led Me to Faith", அதாவது, "கடவுளுக்கு எதிரான ஆத்திரம்: எவ்விதம் கடவுள் மறுப்புக் கொள்கை, என்னை, மத நம்பிக்கைக்கு அழைத்துச் சென்றது" என்ற தலைப்பில் ஒரு நூலை வெளியிட்டார். இந்நூலின் முதல் பிரிவை, "The Generation Who Were Too Clever to Believe", அதாவது, "நம்பிக்கை கொள்வதற்கு இயலாத அளவு மிக அறிவாளியான தலைமுறை" என்ற தலைப்பில் ஹிட்சென்ஸ் அவர்கள் தன் கருத்துக்களைக் கூறியுள்ளார்.

அறிவுக்குறைவானவர்களே மத நம்பிக்கை கொண்டிருக்கமுடியும் என்றும், அந்நிலையைத் தாண்டி, தாங்கள் அறிவில் வளர்ந்துவிட்டதாக எண்ணிக்கொண்டிருக்கும் தலைமுறையே, தன் தலைமுறை என்றும் ஹிட்சென்ஸ் அவர்கள் முதல் பிரிவில் பேசுகிறார். அப்பிரிவை,  தன் வாழ்வில் நிகழ்ந்த ஓர் அனுபவத்தோடு துவக்குகிறார். அவர் தன் 15வது வயதில், கேம்பிரிட்ஜ் (Cambridge) பள்ளியை முடித்துவிட்டு வெளியேறிய வேளையில், தான் அறிவில் அதிகம் வளர்ந்தவர் என்பதையும், தனக்கு மத நம்பிக்கை தேவையில்லை என்பதையும், நண்பர்கள் நடுவே உணர்த்த விரும்பினார். எனவே, பள்ளி இறுதிநாளில், தன் நண்பர்கள் குழுவுக்கு முன், தான் பள்ளிக்கு வந்தபோது, தன் குடும்பத்தினர் தனக்கு வழங்கியிருந்த விவிலியத்தை, தீயிட்டுக் கொளுத்திய நிகழ்வை இவ்வாறு விவரிக்கிறார்:

"அன்று பிற்பகலில் என் விவிலியத்தை தீயிட்டுக் கொளுத்தினேன். அப்போது எனக்கு 15 வயது. நான் பற்றவைத்ததும், விவிலியம், சட்டென தீப்பிடித்து, ஒளிமயமாய் எரிந்து, சாம்பலாகும் என்று நான் எதிர்பார்த்தேன். அவ்வாறு நடக்கவில்லை. மாறாக, அந்த விவிலியம், மெதுவாக எரிந்தது. எவ்வளவோ பலமாக ஊதியும், நான் பற்றவைத்த நெருப்பு, கொழுந்துவிட்டு எரியவில்லை. என்னைச் சுற்றிநின்ற நண்பர்கள், பொறுமை இழந்து, ஒவ்வொருவராகச் கலைந்துசென்றனர். அவர்கள் அவ்வாறு கலைந்துசென்றது, நான் செய்த விடயம் எவ்வளவு சின்னத்தனமான முயற்சி என்பதை, சொல்லாமல் சொன்னது. இறுதியில், அந்த இடத்தில், நான் இருந்தேன். எனக்குமுன், பாதி எரிந்து கருகிப்போயிருந்த விவிலியம் இருந்தது" என்று பீட்டர் ஹிட்சென்ஸ் அவர்கள், முதல் பிரிவின் துவக்கத்தில் கூறியுள்ளார்.

அறிவில் வளர்ந்துவிட்டதாக எண்ணும் பலர், 'கடவுள் இல்லை' என்றும், மத நம்பிக்கை, அறிவில் குறைந்தவர்களுக்கே தேவை என்றும் கூறுவது, தான் மேற்கொண்ட விவிலிய எரிப்பு முயற்சியைப் போன்று அரைகுறையானது, என்று கூறும் ஹிட்சென்ஸ் அவர்கள், இந்த பரிதாப நிலையிலிருந்து தான் எவ்வாறு மீண்டும் கிறிஸ்தவ நம்பிக்கைக்கு திரும்பினார் என்பதை, தன் நூலில் விளக்கிக் கூறியுள்ளார்.

கடவுள் மறுப்பு நிலையிலிருந்து, மத நம்பிக்கைக்கு, அதுவும் கிறிஸ்தவ நம்பிக்கைக்கு திரும்பிவர தனக்குக் கிடைத்த வாய்ப்பு, இங்கிலாந்தில் பல இளையோருக்குக் கிடைப்பதில்லை என்பதை, ஹிட்சென்ஸ் அவர்கள், இந்நூலில், வருத்தத்துடன், ஏக்கத்துடன், குறிப்பிடுகிறார். அத்தகைய வருத்தமும், ஏக்கமும், 14ம் திருப்பாடலின் முதல் வரிகளில் ஒலிப்பதை நாம் உணரலாம். “கடவுள் இல்லை” என அறிவிலிகள் தம் உள்ளத்தில் சொல்லிக் கொள்கின்றனர்; அவர்கள் சீர்கெட்டு அருவருப்பான செயல்களில் ஈடுபடுகின்றனர். நல்லது செய்வோர் எவருமே இல்லை. (திபா 14:1) என்று 14ம் திருப்பாடல் ஆரம்பமாகிறது.
இதே எண்ணம், ஒரு சில வார்த்தை மாற்றங்களுடன் 53ம் திருப்பாடலின் முதல் வரிகளிலும் ஒலிக்கிறது. “கடவுள் இல்லை” என அறிவிலிகள் தம் உள்ளத்தில் சொல்லிக் கொள்கின்றனர்; அவர்களுள் சிலர் கெட்டு அருவருப்பான செயல்களில் ஈடுபடுகின்றனர்; நல்லது செய்வார் யாரும் இல்லை. (திபா 53:1)

ஏறத்தாழ ஒத்த கருத்துக்களையும், ஒரே விதமான சொற்களையும் கொண்டுள்ள 14 மற்றும் 53ம் திருப்பாடல்களில், ஒரு சில வேற்றுமைகளை நாம் காணலாம். 14ம் திருப்பாடல், 7 இறைவாக்கியங்களையும், 53ம் திருப்பாடல், 6 இறைவாக்கியங்களையும் கொண்டுள்ளன. இத்திருப்பாடல்களின் முதல் நான்கு இறைவாக்கியங்களில் கூறப்பட்டுள்ள சொற்கள், ஒரு சில இடங்களில் மட்டுமே வேறுபடுகின்றன. நான்காம் இறைவாக்கியத்தைத் தொடர்ந்து, 14ம் திருப்பாடலில் 5 மற்றும் 6 ஆகிய இரு இறைவாக்கியங்களில் கூறப்பட்டுள்ள சொற்களும், கருத்துக்களும், 53ம் திருப்பாடலில் இடம்பெறும் 5ம் இறைவாக்கியத்தில் கூறப்பட்டுள்ள சொற்கள் மற்றும் எண்ணங்களிலிருந்து வேறுபட்டுள்ளன.

இவ்விரு திருப்பாடல்களில், 'கடவுள் இல்லை' என்று சொல்லும் அறிவிலிகளின் சிந்தனைகள், மற்றும், செயல்கள் ஒரு புறமும், அனைத்தையும் அறிந்த இறைவன் விண்ணிலிருந்து பார்க்கிறார் என்று மறுபுறமும், கூறப்பட்டுள்ளன. இடையிடையே, தாவீதின் உள்ளத்திலிருந்து எழும் கேள்விகளும், கவலைகளும் இப்பாடல்களில் இடம்பெற்றுள்ளன. இறுதியில், இஸ்ரயேல் மக்களுக்கு இறைவனின் ஆசீரும், மீட்பும் கிடைக்கட்டும் என்ற வேண்டுதலுடன் இவ்விரு திருப்பாடல்களும் நிறைவடைகின்றன.
சீயோனிலிருந்து இஸ்ரயேலருக்கு மீட்பு வருவதாக! ஆண்டவர் (கடவுள்) தம் மக்களுக்கு மீண்டும் வளமான வாழ்வை அருளும்போது, யாக்கோபின் இனத்தார் களிகூர்வராக! இஸ்ரயேல் மக்கள் அகமகிழ்வராக! (திபா 14:7, 53:6)

கடவுள் இல்லை என்று தங்கள் உள்ளத்தில் சொல்லிக்கொள்வோரை, தாவீது, 14 மற்றும் 53ம் திருப்பாடல்களின் ஆரம்பத்தில், 'அறிவிலிகள்' என்று அடையாளப்படுத்துகிறார். விவிலியத்தில் 'அறிவிலிகள்' என்ற சொல் எவ்வாறு பயன்படுத்தப்பட்டுள்ளது என்பதைப் புரிந்துகொள்வது, பயனுள்ள ஒரு முயற்சியாக நமக்கு அமையும்.
'அறிவிலிகள்' என்ற சொல், விவிலியத்தில் 110 முறை பயன்படுத்தப்பட்டுள்ளது. இவற்றில், இச்சொல், புதிய ஏற்பாட்டில், 12 முறையும், பழைய ஏற்பாட்டில் 98 முறையும் பயன்படுத்தப்பட்டுள்ளது. அதிலும் குறிப்பாக, பழைய ஏற்பாட்டின் 'நீதிமொழிகள்' நூலில் மட்டும், இச்சொல் 71 முறை இடம்பெற்றுள்ளது.

நீதிமொழிகள் நூலின் 10ம் பிரிவில், ஞானமுள்ள பிள்ளைகளுக்கும், அறிவற்ற மக்களுக்கும் உள்ள வேறுபாடுகள் வெளிச்சமிட்டு காட்டப்பட்டுள்ளன.
ஞானமுள்ள பிள்ளைகள் தம் தந்தையை மகிழ்விக்கின்றனர்; அறிவற்ற மக்களோ தம் தாய்க்குத் துயரமளிப்பர்.
ஞானமுள்ளோர் அறிவுரைகளை மனமார ஏற்பர்; பிதற்றும் மூடரோ வீழ்ச்சியுறுவர்.
ஞானமுள்ளோர் அறிவைத் தம்மகத்தே வைத்திருப்பர்; மூடர் வாய் திறந்தால் அழிவு அடுத்து வரும்.
தீங்கிழைப்பது மதிகெட்டோர்க்கு மகிழ்ச்சிதரும் விளையாட்டு; ஞானமே மெய்யறிவு உள்ளோர்க்கு மகிழ்ச்சி தரும். (நீதிமொழிகள் 10:1,8,14,23)

புதிய  ஏற்பாட்டில், இறைவனின் வார்த்தைகளைக் கேட்டு செயல்படாதவர்களை, இயேசு 'அறிவிலிகள்' என்று கூறியுள்ளார் (மத்தேயு 7:26). லூக்கா நற்செய்தியில் இயேசு கூறும் 'அறிவற்ற செல்வன் உவமையில், அச்செல்வனை, அறிவிலியே என்று கடவுள் அழைப்பது, ஓர் எச்சரிக்கையாக ஒலிக்கிறது: (லூக்கா 12:20)
இவ்வுலகம் 'ஞானம்' என்று கருதுவது, இறைவனுக்குமுன் 'மடமை'யாகக் கருதப்படுவதைச் சுட்டிக்காட்டி, திருத்தூதர் பவுல், கொரிந்து நகர மக்களுக்கு, பின்வரும் அறிவுரையைப் பதிவு செய்துள்ளார்: இவ்வுலகில் தங்களை ஞானிகள் என்று கருதிக் கொள்வோர் தாங்களே மடையராகட்டும். அப்போது அவர்கள் ஞானிகள் ஆவார்கள். இவ்வுலக ஞானம் கடவுள்முன் மடமையாய் உள்ளது. (1 கொரி. 3:18-19)

இவ்வுலகின் ஞானத்தால் நிறைந்திருப்பவர்கள், 'கடவுள் இல்லை' என்று சொல்லும்போது, அவர்களை, தாவீது, 'அறிவிலிகள்' என்றழைப்பதில் வியப்பேதும் இல்லை. தாங்கள் பெற்றுள்ள அறிவுத்திறனை கடவுளுக்கும் மேலாக பெரிதென எண்ணி, தடம்புரண்டு, வழிதவறிச் செல்வோரின் இழிநிலையை, அவர்கள் சீர்கெட்டு அருவருப்பான செயல்களில் ஈடுபடுகின்றனர்.... தீங்கிழைக்கும் யாவரும் அறிவை இழந்துவிட்டார்களோ? உணவை விழுங்குவதுபோல் என் மக்களை விழுங்கப்பார்க்கிறார்களே! (திபா 14:1, 53:4) என்று 14, மற்றும் 53 ஆகிய இரு திருப்பாடல்கள் விவரிக்கின்றன.

இறைப்பற்று இல்லார் என்ற தலைப்பில் வெளியாகியிருக்கும் 14, மற்றும் 53 ஆகிய இவ்விரு திருப்பாடல்களில் நாம் மேற்கொண்ட தேடலை, வேதனை நிறைந்த ஒரு செய்தியுடன் இன்று நிறைவு செய்வோம்.
கடவுள் இல்லை, அல்லது, தாங்களே கடவுள் என்ற அகந்தையில், இந்திய பிரதமர் நரேந்திர மோடி அவர்களும், உள்துறை அமைச்சர் அமித் ஷா அவர்களும், மக்களின் நலனுக்காகப் போராடிவரும் நீதிமான்கள் பலரை, சிறையிலடைத்து, கொடுமைப்படுத்தி வருவதை நாம் அறிவோம். இவர்களது சித்ரவதைகளுக்கு உள்ளானவர்களில் ஒருவரான, இயேசுசபை அருள்பணி ஸ்டான் சுவாமி அவர்கள், ஜூலை 5, இத்திங்களன்று இறையடி சேர்ந்தார்.
தங்களை கடவுளாக எண்ணிபிருக்கும் இவ்விரு இந்தியத் தலைவர்களையும், அவர்களுக்கு சாமரம் வீசும் இந்தியப் புலனாய்வுத் துறை போன்ற கூலிப்படைகளையும், கடவுள் விண்ணகத்தினின்று உற்றுநோக்குகின்றார் (திபா 53:1) என்பதை நம்புகிறோம். இத்தலைவர்கள், தங்கள் தவறுகளை உணர்ந்து, உண்மையை ஏற்றுக்கொண்டு, தங்கள் மனசாட்சிக்கு செவிமடுத்து வாழ, இறைவன், அவர்களுக்கு உள்ளொளி வழங்கவேண்டும் என்ற வேண்டுதலுடன், 14 மற்றும் 53ம் திருப்பாடல்களில் நாம் மேற்கொண்ட தேடலை நிறைவு செய்வோம்.