Tuesday, December 11, 2018

விவிலியத்தேடல் : யோவான் நற்செய்தி புதுமைகள், மீள்பார்வை – 2


‘Nel Jayaraman’ being felicitated – Centre: Nammazhvar

இமயமாகும் இளமை – நெஞ்சில் வாழும் நெல் ஜெயராமன்

டிசம்பர் 6, கடந்த வியாழனன்று, தமிழகம், ஒரு நல்ல மனிதரை இழந்தது. பொதுவாக, சமுதாயத்தில் புகழ்பெற்றவர் ஒருவர் மரணமடைந்தால், அதை, “ஈடு செய்ய இயலாத ஓர் இழப்பு என்று சொல்வது, ஒரு பாரம்பரியக் கூற்று. பல நேரங்களில், அந்தக் கூற்று, பொருளற்றதாக, போலியாக ஒலிக்கும். ஆனால், கடந்த வியாழனன்று கே.ஆர்.ஜெயராமன் என்பவர், மரணமடைந்தது, உண்மையிலேயே ஈடு செய்ய இயலாத ஓர் இழப்பு.
இன்றைய தலைமுறை இழந்துகொண்டிருக்கும் விஷயங்களில் முக்கியமானது, மண் சார்ந்த பாரம்பரிய அறிவு. தமிழ்நாட்டு விவசாயிகளின் கவனத்தை இயற்கை வேளாண்மை நோக்கித் திருப்பிய நம்மாழ்வார் என்ற ஆலமரத்தின் விழுதுகளில், ஜெயராமன் அவர்களும் ஒருவர். 174 நெல் ரகங்களை மீட்டெடுக்க, இவர் அயராது உழைத்ததால், நம்மாழ்வார் அவர்கள், இவருக்கு, நெல் ஜெயராமன் எனப் பெயர் சூட்டினார்.
திருத்துறைப்பூண்டியை அடுத்த கட்டிமேடு கிராமத்தில் பிறந்த ஜெயராமன் அவர்கள், பத்தாம் வகுப்புத் தேர்வில் தோல்வியடைந்ததையடுத்து, விவசாயத்தின் பக்கம் தன் கவனத்தைத் திருப்பினார். வேதியல் உரங்களைத் தவிர்த்து, இயற்கை வழி விவசாயத்தை வளர்க்கவேண்டும் என்ற பிரச்சாரத்தைத் தொடங்கியிருந்த நம்மாழ்வார் அவர்களுடன் இவருக்குத் தொடர்பு ஏற்பட்டது. அவருடன் இணைந்து, விவசாயிகள், மாணவர்கள், அனைவருக்கும், பாரம்பரிய நெல் சாகுபடி குறித்து பல்வேறு விழிப்புணர்வு கருத்தரங்குகளை நடத்தி, நேரம் காலம் பார்க்காமல் உழைத்து வந்தவர், நெல் ஜெயராமன். காவிரி உரிமை மீட்கும் போராட்டங்களிலும், விதைகளை மரபணு மாற்றம் செய்யும் நடவடிக்கைகளுக்கு எதிரான போராட்டங்களிலும் தன்னை ஈடுபடுத்திக் கொண்டவர்.
தமிழகம் முழுவதும், நெல் திருவிழாக்களை நடத்தி, 41,000த்திற்கும் அதிகமான விவசாயிகளுக்கு, 174 பாரம்பரிய நெல் ரகங்களை வழங்கியுள்ளார் என்பது மிகப்பெரும் சாதனை. இவர், வழங்கிய இறுதி நேர்காணலில் கூறியுள்ள நம்பிக்கை தரும் சிந்தனைகள் இதோ: எனக்கு இளைய தலைமுறை மீது நம்பிக்கை இருக்கிறது. என்னுடைய நம்பிக்கை என்னவென்றால், கொஞ்சம் கொஞ்சமாக நாம் மரபில் இழந்த விஷயங்களையெல்லாம் மீட்டெடுத்தால், அடுத்த பத்து, இருபது வருடங்களுக்குள், காவிரி விவசாயிகள், மீண்டும் தலைநிமிர்ந்துவிடுவார்கள். அதோடு, நம் தமிழ் மக்களும் நஞ்சில்லா உணவைச் சாப்பிடுவார்கள். இயற்கை வேளாண்மை இதற்கு நிச்சயம் வழிகாட்டும்.
புற்றுநோயால் பாதிக்கப்பட்ட வேளாண் அறிவியலாளர் நெல் ஜெயராமன் அவர்கள், டிசம்பர் 6, கடந்த வியாழன் அதிகாலையில் மரணம் அடைந்தார். நம் நெஞ்சங்களில் தொடர்ந்து வாழும் நெல் ஜெயராமன் அவர்களுக்கு வத்திக்கான் வானொலி குடும்பத்தாரின் கண்ணீர் அஞ்சலி (தி இந்து)

“Rise, take up thy bed, and walk.” John 5:8

யோவான் நற்செய்தி புதுமைகள், மீள்பார்வை 2

இயேசு ஆற்றியதாக, நான்கு நற்செய்திகளில் பதிவு செய்யப்பட்டுள்ள புதுமைகளின் எண்ணிக்கை 35 என்பது, பொதுவான கருத்து. இவற்றில் 27 புதுமைகள், குணமளிக்கும், மற்றும் உயிரளிக்கும் புதுமைகள். யோவான் நற்செய்தியில் 3 குணமளிக்கும் புதுமைகள் இடம்பெற்றுள்ளன. இம்மூன்று குணமளிக்கும் புதுமைகளையும் ஒன்றாகச் சிந்திக்கும்போது, ஒரு சில ஒப்புமைகளும், வேற்றுமைகளும் தெளிவாகின்றன.
அரச அலுவலர் மகனை இயேசு குணமாக்கும் புதுமையில், (யோவான் 4:46-54) நோயுற்ற மகனின் சார்பாக, அவனது தந்தை இயேசுவிடம் விண்ணப்பித்தார் என்பதையும், இயேசு, அந்த அலுவலர் மகனை நேரில் சந்திக்காமலேயே தன் சொற்களின் வல்லமையால் அவனைக் குணமாக்கினார் என்பதையும் காண்கிறோம்.
இதற்கு மாறாக, 'பெத்சதா' குளத்தருகே நிகழ்ந்த புதுமையிலும் (யோவான் 5:1-18), பார்வையற்றவரைக் குணமாக்கியப் புதுமையிலும் (யோவான் 9:1-41), விண்ணப்பம் ஏதுமின்றி, இயேசு தானாகவே முன்வந்து, இப்புதுமைகளை நிகழ்த்தினார். மேலும், இவ்விரு புதுமைகளில், நோயுற்ற இருவரையும் இயேசு தேடிச்சென்றார்.

இவ்விரு புதுமைகளில், இன்னும் இரு ஒப்புமைகளையும் நாம் காணலாம். ஒன்று, இவ்விரு புதுமைகளும், ஒய்வு நாளில் நிகழ்ந்தன என்பதால், அதன் எதிரொலியாக, இயேசுவைக் குறித்து கண்டனங்கள் எழுவதையும், அக்கண்டனங்களுக்குப் பதில் கூறும் வகையில், இயேசு, ஓய்வு நாளைக் குறித்தும், இன்னும் சில உண்மைகளைக் குறித்தும் சொல்லித்தரும் இறையியல் பாடங்களையும் காண்கிறோம்.
இரண்டாவதாக, இவ்விரு புதுமைகளில், இரு குளங்கள் குறிக்கப்பட்டுள்ளன. 38 ஆண்டுகள் நோயுற்றிருந்தவர், 'பெத்சதா' குளத்தருகே இருந்தார் என்று கூறப்பட்டுள்ளது. பார்வையற்றவரை குணமாக்கும்போது, அவரை, "சிலோவாம் குளத்திற்குப் போய்க் கண்களைக் கழுவும்படி" (யோவான் 9:7) இயேசு கூறுவதைக் காண்கிறோம்.

'பெத்சதா' என்ற எபிரேயப் பெயர், 'பெத் ஹெஸ்தா' (Beth hesda) என்ற இரு சொற்களை இணைத்து உருவானப் பெயர். 'பெத் ஹெஸ்தா' என்றால், 'இரக்கத்தின் இல்லம்', அல்லது, 'அருளின் இல்லம்' என்று பொருள். ஐந்து மண்டபங்கள் கொண்ட 'பெத்சதா' குளத்தின் நீர், நோய்களைக் குணமாக்கும் சக்தி பெற்றது என்பது, அன்று நிலவிவந்த ஒரு நம்பிக்கை. குறிப்பாக, "ஆண்டவரின் தூதர் சில வேளைகளில் அக்குளத்தினுள் இறங்கி, தண்ணீரைக் கலக்குவார். தண்ணீர் கலங்கியபின், முதலில் இறங்குபவர், எவ்வித நோயுற்றிருந்தாலும் நலமடைவார்" (யோவான் 5:3-4) என்ற நம்பிக்கை இருந்ததால், அக்குளத்தைச் சுற்றி, நூற்றுக்கணக்கான மக்கள் காத்திருந்தனர் என்று, நற்செய்தியாளர் யோவான் இச்சூழலை விவரிக்கின்றார்.

கானா திருமணத்தில், தண்ணீரை, திராட்சை இரசமாக மாற்றியப் புதுமையில், படைக்கப்பட்டப் பொருள்கள் மீதும், காலத்தின் மீதும் இயேசு கொண்டிருந்த சக்தி வெளியானது என்றும், அரச அலுவலர் மகனைக் குணமாக்கியப் புதுமையில், தூரத்தின் மீது இயேசு கொண்டிருந்த சக்தி வெளியானது என்றும் சென்ற வாரத் தேடலில் சிந்தித்தோம். பெத்சதா குளத்தருகே படுத்திருந்தவரை இயேசு குணமாக்கிய புதுமையில், பாரம்பரியங்களில் கூறப்பட்டுள்ள சக்தியைத் தாண்டி, இயேசுவால் குணமளிக்க முடியும் என்பது வெளிச்சமாகிறது.
பெத்சதா குளத்தின் நீருக்கு குணமளிக்கும் சக்தி இருந்ததென்பது பாரம்பரிய நம்பிக்கை. அந்த பாரம்பரியத்தை நம்பியிருந்த மக்களிடம், அந்த நீரிலோ, அதன் அசைவுகளிலோ குணமளிக்கும் சக்தி இல்லை; மாறாக, அக்குளத்தில் இறங்குவதாகக் கூறப்படும் வானதூதர், இறைவனின் வல்லமையைக் கொணர்கிறார் என்ற நம்பிக்கையே, மக்களுக்கு நலமளிக்கிறது என்பதை, இயேசு வலியுறுத்த விரும்பினார். அத்தகைய நம்பிக்கை இருந்தால், குளத்தில் இறங்காமலேயே குணம் பெறலாம். இந்த உண்மையை உணர்த்தவே, குளத்தில் இறங்கமுடியாமல் 38 ஆண்டுகளாக, அங்கு படுத்திருந்தவரை, இயேசு குணமாக்கினார் என்ற கோணத்தில், இப்புதுமையை நாம் எண்ணிப்பார்க்கலாம்.

இவ்விரு புதுமைகளும், ஓய்வு நாளில் நிகழ்ந்தன என்பதில், நற்செய்தியாளர் யோவான் கூடுதல் கவனம் செலுத்தியிருப்பதுபோல் தோன்றுகிறது. ஒய்வு நாளில் எதுவுமே செய்யக்கூடாது என்ற கடுமையான தடையை பொய்யாக்குமாறு, இயேசு இவ்விரு புதுமைகளையும் ஒய்வு நாளில் நிகழ்த்துகிறார். ஓய்வுநாளின் மீதும் இயேசு கொண்டிருந்த சக்தி இவ்விரு புதுமைகளில் வெளியாகிறது. ஓய்வுநாள் பற்றிய தன் கருத்துக்களை இயேசு திட்டவட்டமாகக் கூறியுள்ளார்: "ஓய்வுநாள் மனிதருக்காக உண்டாக்கப்பட்டது; மனிதர் ஓய்வு நாளுக்காக உண்டாக்கப்படவில்லை. ஆதலால் ஓய்வு நாளும் மானிட மகனுக்குக் கட்டுப்பட்டதே" (மாற்கு 2: 27-28)

இவ்விரு புதுமைகளிலும், நோயுற்றவர் இருவரும், பல ஆண்டுகள் கவனிப்பாரற்று கிடந்தனர் என்பதையும், நலமடைந்த அன்றே அவர்களைச் சுற்றி பிரச்சனைகள் எழுந்தன என்பதையும் எண்ணும்போது, சில பாடங்களைக் கற்றுக்கொள்ளலாம்.
பெத்சதா குளத்தருகே, 38 ஆண்டுகளாக நோயுற்று கிடந்த மனிதர், தன் படுக்கையை எடுத்துக்கொண்டு வெளி உலகில் அடியெடுத்து வைத்தார். தனக்கு நிகழ்ந்த அற்புதத்தை, அதிசயத்தை ஒவ்வொருவரிடமும் சொல்லவேண்டும் என்று அவர் எண்ணியிருக்கலாம். ஆனால், அவரைச் சந்தித்த யூதர்களுக்கு முதலில் கண்ணில் பட்டது, அவர் படுக்கையைச் சுமந்து சென்ற குற்றம். அவர்கள்,"ஓய்வு நாளாகிய இன்று படுக்கையை எடுத்துச் செல்வது சட்டத்திற்கு எதிரான செயல்" என்று தங்கள் கண்டனத்தை வெளியிடுகின்றனர். உடனே, அங்கு ஒரு வழக்கு ஆரம்பமாகிறது.
ஓய்வுநாளில் இயேசு இந்தப் புதுமையைச் செய்ததால், யூதர்கள் அவரைத் துன்புறுத்தினார்கள் என்று யோவான் தெளிவாகக் கூறியுள்ளார். இன்னும் சில இறைவாக்கியங்களுக்குப் பின், யூதர்கள் அவரைக் கொல்ல இன்னும் மிகுந்த முயற்சி செய்தார்கள் என்றும் கூறப்பட்டுள்ளது.
மக்களுக்கு நல்லவை நிகழும்போது, அந்த நன்மையால் உள்ளம் மகிழ்வதற்குப் பதில், என்ன குறை கண்டுபிடிக்கலாம் என்று காத்திருப்போர், எதிலும் குறை காண்பதிலேயே குறியாய் இருப்பர். தாங்களும் நன்மை செய்வது கிடையாது, செய்பவர்களையும் அமைதியாய் விடுவது கிடையாது.
Jesus healing the blind person

 அதேபோல், பிறவியிலேயே பார்வையற்ற ஒருவருக்கு இயேசு பார்வை வழங்கும் புதுமையிலும், இதே பிரச்சனை எழுகிறது. இப்புதுமை, யோவான் நற்செய்தி, 9ம் பிரிவின் முதல் ஏழு இறைவாக்கியங்களில் நிறைவடைகிறது. தன் கண்களில் இயேசு பூசிய சேற்றுடன், பார்வையற்றவர், 'சிலோவாம்' குளத்திற்குச் சென்றார். "அவரும் போய் கழுவி, பார்வை பெற்றுத் திரும்பிவந்தார்" (யோவான் 9:7). என்ற சொற்களுடன், நற்செய்தியாளர் யோவான், இப்புதுமையின் முதல் பகுதியை நிறைவு செய்துள்ளார்.

பார்வை பெற்றவர், திரும்பிவந்ததால், பிரச்சனைகள் ஆரம்பமாயின. இந்தப் பிரச்சனையை ஒரு வழக்கைப்போல் பதிவுசெய்துள்ள யோவான், 34 இறைவாக்கியங்கள் வழியாக, ஓர் இறையியல் பாடத்தை நடத்துகிறார். பிறவியிலிருந்து பார்வைத் திறனின்றி வாழ்ந்தவர், உடலளவில் மட்டுமல்லாமல், உள்ளத்தில் படிப்படியாக பார்வை பெறும் அழகையும், யூதர்களும், பரிசேயர்களும் தங்கள் உள்ளத்தில் படிப்படியாக பார்வை இழக்கும் சோகத்தையும், ஓர் இறையியல் பாடமாக, நற்செய்தியாளர் யோவான் வழங்கியுள்ளார்.

அகமும், புறமும் பார்வைபெற்ற அந்த ஏழைக்கு நேர் மாறாக, பரிசேயர்கள் படிப்படியாக பார்வை இழக்கின்றனர். அவர்கள் பார்வைக்குத் திரையிட்டது ஒரே ஒரு பிரச்சனை. இந்தப் புதுமை, ஒய்வு நாளன்று நடந்தது என்ற பிரச்சனை. ஒய்வு நாள் என்ற பூட்டினால் இறுக்கமாக மூடி வைக்கப்பட்ட அவர்களது மனதில் ஒளி நுழைவதற்கு வாய்ப்பே இல்லாமல் போனது. தங்களை வெளிச்சத்திற்கு கொண்டு வர முயன்ற அந்தப் பார்வையற்ற மனிதரைக் கண்டு பயப்பட ஆரம்பித்தனர். இருளுக்கு பழகிப்போன அவர்கள் கண்களுக்கு, பார்வையற்றவர் கொண்டு வந்த ஒளி, எரிச்சலை உண்டாக்கியது. அவர்களது எரிச்சல், கோபமாக மாறி, அவர்கள், இயேசுவின் சாட்சியாக மாறியிருந்த பார்வை பெற்றவரை, தங்கள் சமுதாயத்திலிருந்து வெளியே தள்ளினர்.

உள்ளத்தில் ஏற்படும், உணர்வுகளால், நாம் எப்படி பார்வை இழக்கிறோம் என்பதை பலவாறாக நாம் கூறுகிறோம். பொதுவாக, எந்த ஓர் உணர்ச்சியுமே ஓர் எல்லையைத் தாண்டும்போது, அந்த உணர்ச்சி, நம்மைக் குருடாக்கிவிடுவதாக அடிக்கடி கூறுகிறோம். "தலை கால் தெரியாமல்" ஒருவர் மகிழ்ந்திருப்பதாகக் கூறுகிறோம். கோபத்திலோ, வேறு உணர்ச்சிகளின் கொந்தளிப்பிலோ செயல்படுவோரை, "கண்ணு மண்ணு தெரியாமல்" செயல்படுவதாகக் கூறுகிறோம். ஆத்திரம் கண்களை மறைக்கிறது... எனக்குக் கோபம் வந்தா என்ன நடக்கும்னு எனக்கேத் தெரியாது... சந்தேகக் கண்ணோடு பார்க்காதே... இப்படி எத்தனை விதமான கூற்றுகள், நம் பேச்சு வழக்கில் உள்ளன.
உள்ளத்து உணர்வுகளுக்கும், கண்களுக்கும் நெருங்கிய உறவு உண்டு என்பதால்தான், ‘ஆன்மாவின் சன்னல்கள் நம் கண்கள் என்று சொல்வார்கள். இதையே, இயேசு தன் மலைப்பொழிவில் அழகாய் கூறியுள்ளார். கண்தான் உடலுக்கு விளக்கு. கண் நலமாயிருந்தால் உங்கள் உடல் முழுவதும் ஒளி பெற்றிருக்கும். (மத்தேயு 6 : 22)

உடலளவில் பார்வை பெற்றால் போதாது, அகத்திலும் பார்வை பெற வேண்டும் என்ற பாடத்தை இறைவன் நம் அனைவருக்கும் சொல்லித்தருகிறார். அக ஒளி பெறுவோம். அகிலத்திற்கு ஒளியாவோம். உடலளவில் பார்வைத்திறன் குறைந்தோரின் வாழ்வில் இறைவன் உள்ளொளி பெருக்கவேண்டுமென செபிப்போம்.


Saturday, December 8, 2018

Christmas with a difference வேறுவிதமான கிறிஸ்மஸ்


John the Baptist Prepares the Way

Second Sunday of Advent

We begin our Sunday reflection with some thoughts on Monday, December 10. On December 10, in Oslo, Norway, two persons will be honoured with the Nobel Peace Prize. For this year the recipients of this Prize are – Nadia Murad and Denis Mukwege. Here are some excerpts from the announcement made by the Norwegian Nobel Committee on October 5, 2018:

The Norwegian Nobel Committee has decided to award the Nobel Peace Prize for 2018 to Denis Mukwege and Nadia Murad for their efforts to end the use of sexual violence as a weapon of war and armed conflict. Both laureates have made a crucial contribution to focusing attention on, and combating, such war crimes. Denis Mukwege is the helper who has devoted his life to defending these victims. Nadia Murad is the witness who tells of the abuses perpetrated against herself and others. Each of them in their own way has helped to give greater visibility to war-time sexual violence, so that the perpetrators can be held accountable for their actions.

The physician Denis Mukwege has spent large parts of his adult life helping the victims of sexual violence in the Democratic Republic of Congo. Since the Panzi Hospital was established in Bukavu in 1999, Dr. Mukwege and his staff have treated thousands of patients who have fallen victim to such assaults. Most of the abuses have been committed in the context of a long-lasting civil war that has cost the lives of more than six million Congolese.
Denis Mukwege is the foremost, most unifying symbol, both nationally and internationally, of the struggle to end sexual violence in war and armed conflicts. His basic principle is that “justice is everyone’s business”… He has repeatedly condemned impunity for mass rape and criticised the Congolese government and other countries for not doing enough to stop the use of sexual violence against women as a strategy and weapon of war.

Nadia Murad is herself a victim of war crimes. She refused to accept the social codes that require women to remain silent and ashamed of the abuses to which they have been subjected. She has shown uncommon courage in recounting her own sufferings and speaking up on behalf of other victims.
Nadia Murad is a member of the Yazidi minority in northern Iraq, where she lived with her family in the remote village of Kocho. In August 2014 the Islamic State (IS) launched a brutal, systematic attack on the villages of the Sinjar district, aimed at exterminating the Yazidi population. In Nadia Murad’s village, several hundred people were massacred. The younger women, including underage children, were abducted and held as sex slaves. While a captive of the IS, Nadia Murad was repeatedly subjected to rape and other abuses. Her assaulters threatened to execute her if she did not convert to their hateful, inhuman version of Islam.

Nadia Murad is just one of an estimated 3 000 Yazidi girls and women who were victims of rape and other abuses by the IS army. The abuses were systematic, and part of a military strategy. Thus they served as a weapon in the fight against Yazidis and other religious minorities.
After a three-month nightmare Nadia Murad managed to flee. Following her escape, she chose to speak openly about what she had suffered. In 2016, at the age of just 23, she was named the UN’s first Goodwill Ambassador for the Dignity of Survivors of Human Trafficking.

This year’s Nobel Peace Prize is firmly embedded in the criteria spelled out in Alfred Nobel’s will. Denis Mukwege and Nadia Murad have both put their personal security at risk by courageously combating war crimes and seeking justice for the victims. They have thereby promoted the fraternity of nations through the application of principles of international law.

Dr Mukwege has launched scathing attacks about the world's lacklustre response to sexual violence in conflict. "We have been able to draw a red line against chemical weapons, biological weapons and nuclear arms," he told AFP in 2016. "Today we must also draw a red line against rape as a weapon of war."

Nobel Peace Prize will be awarded on December 10, Monday. On the same day we commemorate the Human Rights Day. This year we celebrate the 70th Anniversary of the Universal Declaration of the Human Rights. The Universal Declaration of Human Rights (UDHR)… was proclaimed by the United Nations General Assembly in Paris on 10 December 1948 as a common standard of achievements for all peoples and all nations.
In stark contrast to this declaration, today’s world is witnessing horrible violation of human rights in almost all the countries. We pray that those in power, wake up to this great injustice and help pave the way of justice and peace – the way of the Lord. Today’s liturgy is an invitation to “prepare the way of the Lord” (Luke 3: 4-6)

Preparations are in full swing for Christmas. But, what kind of preparations? Gifts, decorations, cakes and greeting cards… Here is a story shared by Father Joseph Pellegrino in his homily for the 2nd Sunday of Advent.
I heard a story about a man in one of those high price shopping malls, the Galleria.  He caused quite a commotion among those doing their Christmas shopping.  He would sit near a beautifully decorated fountain near the mall's food court and would talk to people who would relax on the benches next to him. He wasn't offensive, not really.  In fact, there was a certain kindness and sincerity about him that drew people to him.
But he was not good for business. He would ask people why they spent so much money for Christmas, and why they allowed themselves to become so obsessed and stressed over this tinselled holiday. Sometimes he would tease, "We like our Christmas with a lot of sugar on it, don't we?" Then he would say, "Christmas is about hope and love, isn't it?  The best gifts we can give is to give kindness and compassion to each other.  Why don't you forgive or reconcile with family or friends you've lost over the years?  The Spirit of the Christ child should embrace the entire year, not just Christmas."
Many of the people who listened to him would nod in agreement.  Some decided to quit shopping for the time being and go home to be with their families. Others went and bought an extra toy or some clothes for charity.  Some even left the mall to find a quiet place for a few moments of prayer.
Soon, word got out to the store managers about this man.  They had security escort him from the premises.  They realized that he wasn't really hurting anyone.  But he had to go, they said.  He was ruining everyone's Christmas.

When I read the last line of this story, I was struck by what the managers said… They said that the man was ‘ruining everyone’s Christmas’. Who is this ‘everyone’? The managers could have spoken for themselves saying that the man was ruining ‘their’ Christmas. Instead, they spoke for all of us… They spoke of everyone’s Christmas. This is a well cultivated strategy of the business people. They would speak for us… think for us… Thus, they would try to define for us what Christmas is… We can easily pick up the false façade they were putting up to hide their selfish interest. When we think of the man, we can also sense that he had no selfish motives to question the customers coming to the mall. I felt as if this man was the modern ‘avatar’ of John the Baptist.

If John the Baptist had come to our shopping malls, he would have raised similar questions. Being the firebrand that he was, he would have ventured further to question the motives of the managers too. His confrontation would have been more dramatic… More about John the Baptist, in the 3rd week of Advent!
For the time being, let’s turn our attention to the managers. Although the hidden agenda of these managers do not deserve our attention, we need to learn a lesson or two from their dedication in making every festival count.

For the business people, Christmas arrived in October… Yes, most of the business centres in Europe began celebrating Christmas in October. In the U.S., it was soon after the Thanksgiving Day. In India, soon after Deepavali. Rain or shine, floods or draught, their business plans do not change much. For them, extending festivities is a sure way to make more money. The list of official festivals released by the government and other religious institutions are not enough for them. They would surely add some more… Mother’s Day, Father’s Day, Valentine’s Day… For the business people every day offers a chance to celebrate. Given a chance, they would be happy to have even 400 days per year and all of them… festival days! The more, the merrier…

We can surely learn a lesson or two from the business people.
Lesson number one:  If they can extend the festival season, if they can invent festival days for their own end, we can as well convert our dull dreary days into days of celebration. It just requires a change in perspective, a change in attitude and a change of heart - a heart that is willing to celebrate even the small miracles of daily life!
Lesson number two: I am sure we have heard of brainstorming sessions. Business people make use of this more often. They spend lots of time and energy in these sessions to come up with their campaigns for the festival. This session also talks of innovations. No two festivals, no two seasons can be the same. Every festival, every season should be unique, special.

How great it would be if all of us sat down to do some brainstorming before every festival we celebrate. Such brainstorming will help us celebrate these festivals in unique, special, meaningful ways. Probably we don’t have the time for such sessions. We need to buy things, decorate the house, entertain guests… Hence, no time for innovations… just take the beaten track. As long as we take this safe route, the business world will win. If we sit down and look at these festivals from different perspectives, we can surely bring more meaning to these special days, as the man in the mall was trying to do.

Whether we like it or not, the business world, especially the advertising world imposes itself on us day after day with its messages – the ‘what’ and ‘how’ of every festival. Instead of accepting such impositions passively, we can approach these festivals on our terms. We can surely make every day of the year special… every day can become Christmas. Christmas can start in October… no, no, even earlier. This Christmas is not about decorations and gifts! This Christmas is about recognising Emmanuel, God-with-us, especially in those who are denied their human rights!

Nobel Peace Prize
Dr Denis Mukwege and Ms Nadia Murad

திருவருகைக் காலம் 2ம் ஞாயிறு

இவ்வாண்டு, நொபெல் அமைதி விருதுக்கு, ஈராக் நாட்டின், யாசிதி (Yazidi) என்ற சிறுபான்மை இனத்தைச் சேர்ந்த, நாடியா முராட் (Nadia Murad) என்ற இளம்பெண்ணும், காங்கோ ஜனநாயக குடியரசில் பணிபுரியும் டென்னிஸ் மக்வெகே (Denis Mukwege) என்ற மருத்துவரும் தெரிவு செய்யப்பட்டுள்ளனர். "பெண்களை, பாலியல் வன்கொடுமைகளுக்கு உள்ளாக்கும் போர்க்குற்றத்தை, உலகின் கவனத்திற்குக் கொணர்ந்ததன் வழியே, இவ்விருவரும் உலக அமைதிக்கு வழி வகுத்துள்ளனர்" என்று, நொபெல் விருதுக்குழு அறிவித்தது.

25 வயதான இளம்பெண் நாடியா முராட் அவர்கள், 2014ம் ஆண்டு, இஸ்லாமிய அரசு என்று தங்களையே அழைத்துக்கொள்ளும் ISIS எனப்படும் தீவிரவாதக் குழுவினரால் பிடிபட்ட பல்லாயிரம் இளம்பெண்களில் ஒருவர். பாலியல் அடிமையாக, மூன்று மாதங்கள், பல்வேறு கொடுமைகளை அடைந்த இவர், தீவிரவாதிகளின் பிடியிலிருந்து தப்பித்து, தற்போது, ஜெர்மனியில் வாழ்ந்துவருகிறார். ISIS குழுவினரின் கொடுமைகளைப் பற்றியும், யாசிதி இனத்தவருக்கு எதிராக நிகழும் அநீதிகள் குறித்தும், நாடியா அவர்கள், உலக அரங்குகளில் பேசிவருகிறார். 2017ம் ஆண்டு, மே மாதம், இளம்பெண் நாடியா அவர்கள், வத்திக்கானுக்குச் சென்று, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களை நேரில் சந்தித்து, தன் யாசிதி இனத்தவர் சார்பில், விண்ணப்பம் ஒன்றை சமர்ப்பித்தார். "கடைசிப் பெண்: என் சிறைவாசத்தின் கதையும், இஸ்லாமிய அரசுக்கு எதிராக என் போராட்டமும்" என்ற தலைப்பில், நாடியா அவர்கள், தன் நினைவுகளைத் தொகுத்து, நூலொன்றை வெளியிட்டுள்ளார்.

63 வயது நிறைந்த மருத்துவர், டென்னிஸ் மக்வெகே அவர்கள், காங்கோ ஜனநாயக குடியரசில், புக்காவு (Bukavu) என்ற நகரில், மருத்துவமனை ஒன்றை நிறுவி, கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாகப் பணியாற்றி வருகிறார். தன் நாட்டில் நிகழ்ந்த உள்நாட்டு மோதல்களாலும், தற்போது அந்நாட்டில் இயங்கிவரும் போராட்டக் குழுக்களாலும் பாலியல் வன்கொடுமைகளை அடைந்த ஆயிரமாயிரம் பெண்களுக்கு, டென்னிஸ் அவர்கள், மருத்துவ உதவிகள் செய்து வருகிறார். இவர் மீது கொலை முயற்சிகள் நடந்தாலும், தன் பணியைத் தொடர்ந்து வருகிறார்.

அக்டோபர் 5ம் தேதி, நொபெல் அமைதி விருது அறிவிக்கப்பட்ட வேளையில், டென்னிஸ் அவர்கள், நார்வே நாட்டு ஊடகம் ஒன்றுக்கு அளித்த பேட்டியில், பெண்களுக்கு ஓர் அழைப்பை விடுத்தார்: "உலகெங்கும் கொடுமைகளை அடைந்துவரும் பெண்களே, நான் உங்களுக்குக் கூறவிழைவது இதுதான்: உங்களுக்குச் செவிசாய்க்க இவ்வுலகம் தயாராக உள்ளது என்பதற்கு, இவ்விருது ஓர் அடையாளமாக விளங்குகிறது. மனிதம் இவ்வுலகில் தொடர்ந்து வாழ்வதற்கு, மனிதக்கருவைத் தாங்கும் பெண்களே உதவமுடியும்".
மருத்துவர் டென்னிஸ் அவர்கள் மற்றொரு நாளிதழுக்கு வழங்கிய பேட்டியில், பெண்களுக்கு இழைக்கப்படும் இந்தக் கொடுமைகளைத் தடுக்க, உலக அரசுகள் தகுந்த முயற்சிகள் எடுக்கவில்லை என்ற கடுமையானக் கண்டனத்தை வெளியிட்டார். "போர்களில், வேதியல் ஆயுதங்களையும், நுண்ணுயிர் ஆயுதங்களையும், அணு ஆயுதங்களையும் தடைசெய்ய, அரசுகள், பல்வேறு முயற்சிகள் மேற்கொண்டுள்ளன. ஆனால், பெண்களுக்கு இழைக்கப்படும் பாலியல் வன்கொடுமைகள், போர்களில், ஓர் ஆயுதமாகப் பயன்படுத்தப்படுவதைத் தடுக்க எந்த ஓர் அரசும் இதுவரை முன்வரவில்லை" என்று கூறியுள்ளார்.

இளம்பெண் நாடியா அவர்களுக்கும், மருத்துவர் டென்னிஸ் அவர்களுக்கும், டிசம்பர் 10, இத்திங்களன்று, நார்வே நாட்டின் ஓஸ்லோ நகரில், நொபெல் அமைதி விருது வழங்கப்படும். 1901ம் ஆண்டு முதல், நொபெல் அமைதி விருது வழங்குவதற்கு, டிசம்பர் 10ம் தேதி தெரிவு செய்யப்பட்டுள்ளது. இதே டிசம்பர் 10ம் தேதி, மனித உரிமைகள் நாளை நாம் சிறப்பிக்கின்றோம். அதிலும் குறிப்பாக, மனித உரிமைகளின் அனைத்துலக அறிக்கை (Universal Declaration of Human Rights) வெளியிடப்பட்ட 70வது ஆண்டு நிறைவை, இவ்வாண்டு சிறப்பிக்கின்றோம்.

பல்வேறு நிலைகளில், அளவுகளில், வழிகளில் மீறப்படும் மனித உரிமைகளில், பெண்களுக்கு எதிராக இழைக்கப்படும் மனித உரிமை மீறல்கள், நிச்சயம், முதலான ஓர் இடத்தைப் பெற்றுள்ளது என்பதை நாம் மறுப்பதற்கில்லை. இந்த மனித உரிமை மீறலை, மனித சமுதாயத்தின் கவனத்திற்கு மீண்டும் ஓருமுறை கொணர்ந்த, நாடியா முராட், மற்றும் டென்னிஸ் மக்வெகே இருவருக்காகவும், இறைவன் சன்னதியில் நன்றி கூறுவோம். மனித உரிமைகள், அனைவருக்கும் கிடைக்கும்வண்ணம், இவ்விருவரைப் போல், போராடிவரும் ஆயிரமாயிரம் நல்ல உள்ளங்களுக்காகவும் நாம் இறைவனுக்கு நன்றி கூறுவோம்.

1948ம் ஆண்டு, டிசம்பர் 10ம் தேதி, ஐக்கிய நாடுகள் அவையில் மனித உரிமைகளின் அனைத்துலக அறிக்கை வெளியிடப்பட்டது. 30 விதிமுறைகளை மனித சமுதாயத்தின் கவனத்திற்குக் கொணர்ந்த இந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ள முதல் இரு விதிமுறைகளை (Article) மட்டும் இன்று நினைவுகூருவோம்:
விதிமுறை 1:
"எல்லா மனித உயிர்களும், சுதந்திரமாகவும், சரிசமமான மதிப்புடனும், உரிமைகளோடும் பிறக்கின்றனர். அறிவுத்திறனும், மனசாட்சியும் அவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளன; உடன்பிறந்த உணர்வுடன் ஒருவர் ஒருவருடன் நடந்துகொள்ளவேண்டும்."
விதிமுறை 2:
"இந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ள உரிமைகளும், சுதந்திரங்களும், இனம், நிறம், பாலினம், மொழி, மதம், அரசியல் கொள்கை, நாடு அல்லது சமுதாயம், பிறப்பு என்ற எவ்விதப் பாகுபாடும் இன்றி, அனைவருக்கும் உரியன."

மனித உரிமைகளின் அனைத்துலக அறிக்கை வெளியிடப்பட்டு, 70 ஆண்டுகள் கடந்திருந்தாலும், இனம், நிறம், பாலினம், மதம், நாடு என்று, அனைத்து வழிகளிலும், ஏற்றத்தாழ்வுகளையும், பாகுபாடுகளையும் உருவாக்கி, பல கோடி மக்களின் உரிமைகள், வெளிப்படையாகவும், மறைமுகமாகவும் பறிக்கப்பட்டு வருகின்றன. மனிதர்கள் அனைவரும் சரிசமமான உரிமைகளைப் பெறுவதற்குத் தேவையானச் சூழலை உருவாக்கும் துணிவையும், தெளிவையும் நாம் பெறவேண்டும் என்று, இந்த ஞாயிறு வழிபாட்டில் மன்றாடுவோம்.

மேடு, பள்ளங்களும், ஏற்றத்தாழ்வுகளும் இல்லாத ஒரு பாதையை உருவாக்கி, அப்பாதையில் இறைவனோடு இணைந்து நடக்க, இன்றைய ஞாயிறு வாசகங்கள் நம்மை அழைக்கின்றன. இன்று நாம் சிறப்பிக்கும், திருவருகைக் காலம் 2ம் ஞாயிறை மையப்படுத்திய சிந்தனைகளை, ஒரு கற்பனைக் காட்சியுடன் துவக்குவோம்.

கிறிஸ்மஸ் அலங்காரங்களுடன் மின்னும் ஒரு கடைவீதியில் நாம் நடந்து செல்வதாகக் கற்பனை செய்துகொள்வோம். அங்கே... "இறுதிநாள் நெருங்கியுள்ளது ஆண்டவருக்காக வழியை ஆயத்தமாக்குங்கள்; அவருக்காக பாதையைச் செம்மையாக்குங்கள்" என்ற குரல் ஒரு பக்கம் ஒலிக்கிறது. "இன்றே இறுதிநாள்... தள்ளுபடி விற்பனையில் பொருள்களை அள்ளிச்செல்லுங்கள்" என்று வேறொரு குரல் மறுபக்கம் ஒலிக்கிறது. இவ்விரு குரல்களுக்கும் போட்டி வந்தால், எந்தக் குரல் வெல்லும் என்பது எல்லாருக்கும் தெரிந்த விஷயம். தள்ளுபடி விற்பனை பற்றி எழும் குரல், ஆன்மீக தயாரிப்புக்கு அழைப்பு விடுக்கும் அந்தக் குரலை முற்றிலும் அடக்கிவிட்டு, முன்னே வந்து நிற்கும். அந்த வர்த்தகக் குரல் வரும் திசை நோக்கி, முட்டி மோதிக்கொண்டு, கூட்டம் அலைமோதும்.

பெருநகரங்களில், கடைவீதிகள், அடுக்குமாடி கட்டிடங்களாய் மாறி உள்ளன. இத்தகையக் கடைவீதிகளுக்கு Shopping Mall என்று பெயரிட்டிருக்கிறோம். அமெரிக்காவின் Shopping Mall ஒன்றில் நிகழ்ந்ததாகச் சொல்லப்படும் ஒரு நிகழ்வு இது:

அந்த Mallல் கிறிஸ்மஸ் வியாபாரம் வெற்றிகரமாக நடந்துகொண்டிருந்தது. பொருட்கள் வாங்கிக் களைத்துப் போனவர்கள் இளைப்பாறுவதற்கு, அந்த Mallன் ஒரு பகுதியில் தனியிடம் ஒதுக்கப்பட்டிருந்தது. அவ்விடத்தில் அமர்ந்திருந்த ஒருவர், அங்கு பொருள்கள் வாங்கியவர்களிடமும், வாங்க வந்திருப்பவர்களிடமும் வலியச்சென்று பேச ஆரம்பித்தார். அவர் மிகவும் கண்ணியமாக, கனிவாகப் பேசியதால், அவர் சொன்னதை மக்கள் கேட்டனர். அவர் அங்கு அமர்ந்திருந்தவர்களிடம் ஒரு சில கேள்விகள் மட்டும் கேட்டார்: "ஏன் இவ்வளவு செலவு செய்கிறீர்கள்? கிறிஸ்மசுக்கு இத்தனை பரிசுகள் வாங்கத்தான் வேண்டுமா? நீங்கள் செலவு செய்யும் பணத்தில் பாதியை ஏழைகளோடு பகிர்ந்துகொண்டால், உங்கள் கிறிஸ்மஸ் இன்னும் மகிழ்வாக இருக்காதா? நீங்கள் பல நாட்களாக மன்னிக்க முடியாமல் கஷ்டப்படும் ஒருவரைத் தேடிச்சென்று, அவருடன் ஒப்புரவனால், அதைவிட சிறந்த கிறிஸ்மஸ் கொண்டாட்டம் இருக்க முடியுமா? இந்தக் கடைகளில் காணப்படும் கிறிஸ்மஸ் மகிழ்ச்சி உங்களுக்குச் செயற்கையாக தெரியவில்லையா?" என்று, அவர், ஒவ்வொருவரிடமும் ஒவ்வொரு வகையில் கேள்விகளை எழுப்பினார்.

அவர் சொல்வதில் இருந்த உண்மைகளை உணர்ந்த பலரும், தலையசைத்தனர். பொருள்கள் வாங்க வந்த ஒரு சிலர், மீண்டும் திரும்பிச்சென்றனர். வேறு சிலர், தாங்கள் புதுப்பிக்க விரும்பிய உறவுகளுக்காக, புதிய பரிசுப் பொருள்கள் வாங்கிச்சென்றனர். இன்னும் ஒரு சிலர், அந்த Mallல் நேரத்தைச் செலவிடுவதற்குப் பதில், அருகிலிருந்த ஒரு கோவிலுக்குச் சென்று, அமைதியாக நேரத்தைச் செலவிட்டனர்.

Mallல் உள்ள கடைகளின் உரிமையாளர்கள், இந்த மனிதரைப்பற்றிக் கேள்விப்பட்டனர். அந்த Mallன் காவலாளிகளிடம் சொல்லி அந்த மனிதர் மீண்டும் அந்த Mallக்குள் நுழையாதவாறு தடுத்தனர். அந்த மனிதரை ஏன் அவர்கள் தடைசெய்தனர் என்ற கேள்வி எழுந்தபோது, "அவர் நமது கிறிஸ்மஸ் மகிழ்ச்சியைக் கெடுத்துக் கொண்டிருக்கிறார்" என்று பதில் சொன்னார்கள். "அவர் எங்கள் கிறிஸ்மஸ் மகிழ்ச்சியைக் கெடுத்தார்" என்று, அந்த வியாபாரிகள் தங்களைப்பற்றி மட்டும் சொல்லாமல், "அவர் நமது கிறிஸ்மஸ் மகிழ்ச்சியைக் கெடுத்துக் கொண்டிருக்கிறார்" என்று, மக்களையும் தங்களோடு இணைத்துக்கொண்டு, அவர்கள் சார்பாகப் பேசினர். இது, வர்த்தகர்கள் படித்து, பழகி வைத்துள்ள வியாபாரத் தந்திரம். நமக்கும் சேர்த்து சிந்திப்பது, முடிவெடுப்பது என்று பல வழிகளிலும் வியாபாரிகள் நம்மை ஒரு மாய வலையில் கட்டிப்போட்டு வைத்துள்ளனர்.

வியாபாரிகள் விரித்த வலைகளில் மக்கள் சிக்காமல் இருக்கும் நோக்கத்துடன், Mallல் அமர்ந்து கேள்விகள் எழுப்பிய அந்த மனிதர், மக்களின் கிறிஸ்மஸ் மகிழ்ச்சியை கெடுத்தாரா, அல்லது கிறிஸ்மஸ் மகிழ்ச்சிக்குப் புதியத் தெளிவுகளை தந்தாரா என்பது, நாம் சிந்திக்கவேண்டிய கேள்வி.
கிறிஸ்மஸ் மகிழ்ச்சி என்றால் என்ன, இவ்விழாவை எவ்விதம் கொண்டாடுவது என்ற கேள்விகளுக்கு வியாபாரிகள் 'ரெடிமேட்' பதில்களை வைத்திருக்கின்றனர். அந்தப் பதில்களை, எண்ணங்களை, நம்மீது திணிப்பதில், வெற்றியும் பெறுகின்றனர். வியாபாரிகள் தயாரித்து வைத்திருக்கும் 'ரெடிமேட்' எண்ணங்களுக்குப் பின்னணியில், அவர்களது சுயநலம் ஒளிந்திருப்பதை எளிதில் உணரலாம். ஆனால், Mallக்கு வந்த மக்களிடம் கேள்விகள் எழுப்பிய மனிதரோ, எவ்வித சுயநலமும் இல்லாமல், கிறிஸ்மஸ் விழா, இன்னும் அர்த்தமுள்ள வகையில் கொண்டாடப்படவேண்டும் என்ற எண்ணத்தில், தன் கேள்விகளைப் பகிர்ந்துகொண்டார். Shopping Mall என்ற மாய வலையில் சிக்கியிருந்த மனிதர்களை விழித்தெழச் செய்த இந்த மனிதர், இயேசுவின் வழியைத் தயார் செய்வதற்கு வந்த திருமுழுக்கு யோவானை நமக்கு நினைவுபடுத்துகிறார்.

திருமுழுக்கு யோவான் நம் நகரங்களில் உள்ள கடைவீதிகளுக்கு இன்று வந்தால், மனதைப் பாதிக்கும் கேள்விகள் எழுப்பியிருப்பார். திருமுழுக்கு யோவான் ஒரு தீப்பிழம்பாக இருந்ததால், இன்னும் ஒரு படி மேலேச் சென்று, அந்தக் கடைகளில் இருந்தோரையும் தங்கள் சுயநல வழியிலிருந்து மாறி, ஆண்டவருக்காக வழியை ஆயத்தமாக்குங்கள்; அவருக்காக பாதையைச் செம்மையாக்குங்கள் (லூக்கா 3: 4) என்று அவர்களையும் இறைவன் வழிக்கு அழைத்து வந்திருப்பார்.

சுயநலக் கலப்படம் எதுவும் இல்லாமல், அந்த Mall மனிதரோ, அல்லது திருமுழுக்கு யோவானோ, கிறிஸ்மஸ் என்றால் என்ன, அதை எப்படிக் கொண்டாடுவது, என்று சொல்லித்தருவதைக் கேட்கப் போகிறோமா? அல்லது, சுயநல இலாபங்களுக்காக, நமது விழாக்கள் மீது, வேறுபட்ட அர்த்தங்களைத் திணிக்கும் வியாபாரிகள் சொல்லித் தருவதைக் கேட்கப் போகிறோமா? "ஆண்டவருக்காக வழியை ஆயத்தமாக்குங்கள்; அவருக்காக பாதையைச் செம்மையாக்குங்கள்" என்று, திருமுழுக்கு யோவானைப் போல், நம் ஆன்மீகத் தயாரிப்புகளை நினைவுறுத்துவோரின் குரலைக் கேட்கப் போகிறோமா? அல்லது, "இன்றே கடைசி நாள்... தள்ளுபடி விற்பனையில் பொருள்களை அள்ளிச் செல்லுங்கள்" என்று வியாபாரிகள் எழுப்பும் குரலைக் கேட்கப் போகிறோமா?Tuesday, December 4, 2018

விவிலியத்தேடல் : யோவான் நற்செய்தி புதுமைகள், மீள்பார்வை – 1


Mr N.Vasantha Kumar

இமயமாகும் இளமை - கஜாபுயல் அழிவில் நம்பிக்கை தந்த வசந்தகுமார்

தமிழகத்தின் டெல்டா மாவட்டங்களை, கஜா புயல் புரட்டிப்போட்டு, ஏறத்தாழ 20 நாள்களாகிவிட்டன. இந்தத் துயரில் இருந்து மக்கள் மீண்டெழ, பல்வேறு அடிப்படைத் தேவைகளை நிறைவேற்றிய தன்னார்வலர்கள், போற்றுதலுக்கு உரியவர்கள். அரசு செய்யவேண்டிய உதவிகளை, தன்னார்வலர்கள், தனித்தனியாகவோ, குழுக்களாகவோ செய்து, மக்கள் மனதில் இடம்பிடித்துள்ளனர். எதிர்காலமே கேள்விக்குறியாகி நின்றவர்களுக்கு, துயரில் இருந்து மீளமுடியும் என்ற நம்பிக்கை அளித்தவர்கள், இந்தத் தன்னார்வலர்கள் தான். அந்த நம்பிக்கை முகங்களில் முக்கியமான ஒருவர், ந.வசந்தகுமார்.
தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணத்தைச் சேர்ந்தவர், ந.வசந்தகுமார். முழுநேர புகைப்படக் கலைஞரான இவர், முதலில், புயலால் பாதிக்கப்பட்ட இடங்களுக்கு நேரடியாகச் சென்று, கள நிலவரத்தை அறிந்துகொண்டார். அந்நிலவரங்களை தன் கேமராவில் பதிவு செய்துகொண்டே சென்றவருக்கு, ஒரு கட்டத்துக்கு மேல், புகைப்படம் எடுக்க மனம் வரவில்லை. அந்த அளவுக்கு, புயலின் பாதிப்பு அவர் மனதைப் பாதித்திருக்கிறது.
கேமராவைத் தூரமாக வைத்துவிட்டு உடனடியாகக் களத்தில் இறங்கினார், வசந்தகுமார். ஃபேஸ்புக், தெரிந்த நண்பர்கள் வழியே, நிவாரணப் பொருட்களைத் திரட்ட ஆரம்பித்தார். அவ்வேளையில், நிறைய பேர் நிவாரணப் பொருட்கள் திரட்டியதால், அவர் எதிர்பார்த்த அளவுக்குப் பொருட்கள் சேரவில்லை. இருந்தாலும் அவர் மனம் தளர்ந்துவிடவில்லை.
அட்டைப் பெட்டியை உண்டியலாக்கி, சிறுவர்களுடன் வீடு வீடாக ஏறி, இறங்கினார்,  வசந்தகுமார். அவருக்கு உதவும் நோக்கத்துடன், கும்பகோணம் மாரத்தான் குழுவினர், 12 மணி நேரம் தொடர் ஓட்டம் ஓடி, நிதி, மற்றும், பொருட்களைச் சேகரித்துத் தந்தனர். ட்யூஷன் படிக்கும் மாணவர்கள் ஒன்று சேர்ந்து, 500 ரூபாய் அனுப்பி வைத்தது கண்டு, மனம் நெகிழ்ந்திருக்கிறார், வசந்தகுமார்.
வேதாரண்யத்தைச் சுற்றியுள்ள பல கிராமங்களில் வாழும் 440 குடும்பங்களுக்கு, வசந்தகுமார் வழியே உதவிகள் சென்று சேர்ந்தன. அரசு எந்த உதவியுமே செய்யாத நிலையில், எங்களுக்காக, எங்கிருந்தோ பொருட்களை சேகரித்துக் கொண்டு வந்த உங்களை, உயிருள்ளவரை மறக்கமாட்டோம் என, அம்மக்கள், கண்ணீருடன், வசந்தகுமார் அவர்களை, கையெடுத்துக் கும்பிட்டுள்ளனர். (தி இந்து)

7 Signs of Jesus in John’s Gospel

யோவான் நற்செய்தி புதுமைகள், மீள்பார்வை 1

இவ்வாண்டின் துவக்கத்தில், நாம், இயேசுவின் புதுமைகளில் நம் தேடல் பயணத்தைத் துவக்கினோம். 46 வாரங்களாக நடைபெற்ற இந்தத் தேடல் பயணத்தில், யோவான் நற்செய்தியில் பதிவு செய்யப்பட்டுள்ள புதுமைகளில் மட்டும் நாம் கவனம் செலுத்தினோம். நற்செய்தியாளர் யோவான் பதிவு செய்துள்ள 7 புதுமைகளில் கடந்த 44 வாரங்களாக, தேடல் பயணம் மேற்கொண்டு வந்த நாம், இப்போது, அப்புதுமைகளில் ஒரு மீள்பார்வை மேற்கொள்கிறோம்.
இயேசு ஆற்றியப் புதுமைகளை, நற்செய்தியாளர் யோவான், 'அரும் அடையாளங்கள்' என்று குறிப்பிட்டுள்ளார். இந்த அரும் அடையாளங்களை, தான் பதிவு செய்ததற்கு காரணம், மக்களிடையே நம்பிக்கையை வளர்ப்பதற்கு என்று, புனித யோவான், தன் நற்செய்தியின் இறுதியில் கூறியுள்ளார்:
யோவான் 20: 30-31
வேறு பல அரும் அடையாளங்களையும் இயேசு தம் சீடர்கள் முன்னிலையில் செய்தார். அவையெல்லாம் இந்நூலில் எழுதப்படவில்லை. இயேசுவே இறைமகனாகிய மெசியா என நீங்கள் நம்புவதற்காகவும், நம்பி, அவர் பெயரால் வாழ்வு பெறுவதற்காகவுமே, இந்நூலில் உள்ளவை எழுதப்பெற்றுள்ளன.
நம்பிக்கை, மற்றும், வாழ்வை, மக்கள் பெறவேண்டும் என்ற நோக்கத்துடன் எழுதப்பட்ட இந்த நற்செய்தி, "நம்பிக்கையின் நூல்" என்று அழைக்கப்படுகிறது. 21 பிரிவுகளைக் கொண்ட யோவான் நற்செய்தியை, விவிலிய ஆய்வாளர்கள், இரு பகுதிகளாகப் பிரித்துள்ளனர். முதல் 11 பிரிவுகள், "அரும் அடையாளங்களின் நூல்" என்றும், 12 முதல், 20ம் பிரிவு முடிய உள்ள 9 பிரிவுகள், "மகிமையின் நூல்" என்றும் அழைக்கப்படுகின்றன. 21ம் பிரிவு, ஒரு பிற்சேர்க்கை என்பது, பலராலும் ஏற்றுக்கொள்ளப்பட்ட கருத்து.

"அரும் அடையாளங்களின் நூலில்" முதலில் பதிவு செய்யப்பட்டுள்ள நிகழ்வு, கானா திருமணத்தில் இயேசு தண்ணீரை இரசமாக மாற்றிய புதுமை. யோவான் நற்செய்தியில் மட்டுமே பதிவாகியுள்ள ஒரு தனிப்பட்ட புதுமை இது. இப்புதுமையில் இரு அம்சங்கள் கவனத்திற்குரியவை என்று, Blair Van Dyke என்ற பேராசிரியர் கூறியுள்ளார்.
முதல் அம்சம் - படைக்கப்பட்ட பொருள்கள் மீது இயேசு கொண்டுள்ள அதிகாரம். தண்ணீரை, திராட்சை இரசமாக மாற்றும் வல்லமை கொண்ட இயேசு, மரத்தை, பாறையாகவும், பாறையை, தண்ணீராகவும், தண்ணீரை, திராட்சை இரசமாகவும் மாற்றும் வல்லமை பெற்றவர் என்பதை, நற்செய்தியாளர் யோவான் நமக்கு உணர்த்துகிறார். மனிதன் என்ற நிலையில், இயற்கையின் அனைத்து விதிகளுக்கும் இயேசு உட்பட்டவர் என்றாலும், அந்த விதிகளை, தேவைப்பட்ட நேரத்தில் மாற்றுவதற்கும், அவரிடம் வல்லமை இருந்தது என்பதே, இப்புதுமையில் நாம் புரிந்துகொள்ளும் முதல் அம்சம்.

இரண்டாவது அம்சம் - காலத்தின்மீது இயேசு கொண்டிருந்த அதிகாரம். பொதுவாக, திராட்சை இரசத்தை உருவாக்க, பல ஆண்டுகள் தேவைப்படும். திராட்சை செடியை நட்டு, அது கோடியாக வளர்ந்து, கனிகள் தருவதற்கு, குறைந்தது, மூன்றாண்டுகள் ஆகும். அந்த கனிகளைப் பறித்து, சாறாகப் பிழிந்து, அதை திராட்சை இரசமாக மாற்றுவதற்கு, குறைந்தது, 3 மாதங்கள் தேவைப்படும். மிக உயர்ந்த, தரமான, திராட்சை இரசத்தை உருவாக்க, பல ஆண்டுகள் தேவைப்படும்.
எனவே, திராட்சைச் செடியில் துவங்கி, உயர்ந்த, தரமான, திராட்சை இரசம் உருவாக, குறைந்தது, 4 முதல், 40 ஆண்டுகள் வரையிலும் கூட ஆகலாம். ஆனால், கானா திருமணத்தில், இயேசு, நல்ல, உயர்தரமான திராட்சை இரசத்தை, சில நொடிகளில் உருவாக்கினார். 40 ஆண்டுகளில் உருவாகும் திராட்சை இரசத்தை, சில நொடிகளில் உருவாக்கியதால், காலத்தின் மீது இயேசுவுக்கு இருந்த அதிகாரம் தெளிவாகிறது.
காலத்தை அளக்க நாம் பயன்படுத்தும், நொடி, நிமிடம், மணி, நாள், வாரம், மாதம், ஆண்டு என்ற அளவுகள், காலத்தைக் கடந்த கடவுளுக்கு இல்லை. இந்த எண்ணத்தை, திருத்தூதர் பேதுரு, தன் திருமுகத்தில் மிக அழகாகக் குறிப்பிட்டுள்ளார்:
பேதுரு எழுதிய இரண்டாம் திருமுகம் 3:8
அன்பார்ந்தவர்களே, நீங்கள் ஒன்றை மறந்துவிடவேண்டாம். ஆண்டவரின் பார்வையில் ஒருநாள், ஆயிரம் ஆண்டுகள் போலவும், ஆயிரம் ஆண்டுகள், ஒருநாள் போலவும் இருக்கின்றன.
திருத்தூதர் பேதுரு இவ்வாறு கூறிய வேளையில், அவர் உள்ளத்தில், திருப்பாடல் 90ல் கூறப்பட்டுள்ள வரிகள் எதிரொலித்திருக்கும்:
திருப்பாடல் 90:4
ஆயிரம் ஆண்டுகள், உம் பார்வையில் கடந்துபோன நேற்றைய நாள் போலவும், இரவின் ஒரு சாமம் போலவும் உள்ளன.

கானா திருமண விருந்தில் நிகழ்ந்த புதுமைக்கு அடுத்ததாக, அரச அலுவலர் மகனை இயேசு குணமாக்கும் புதுமை இடம்பெற்றுள்ளது. கானாவில் நிகழ்ந்த முதல் அரும் அடையாளத்தில், பொருள்கள் மீதும், காலத்தின் மீதும் தன் அதிகாரத்தை வெளிப்படுத்திய இயேசு, அரச அலுவலர் மகனை குணமாக்கும் புதுமையின் வழியே, தூரத்தின் மீது தான் கொண்டிருந்த அதிகாரத்தை வெளிப்படுத்துகிறார். இயேசுவின் வார்த்தைகளில் விளங்கிய சக்தி, கப்பர்நாகும் ஊருக்கும், கானாவுக்கும் இடையே உள்ள 25 கி.மீ. தூரத்தைக் கடந்துசென்றது. "நீர் புறப்பட்டுப்போம். உம் மகன் பிழைத்துக் கொள்வான்" (யோவான் 4:50) என்று இயேசு கூறிய அந்த நொடியில், அலுவலரின் மகன் பிழைத்தெழுந்தான் என்பதை இப்புதுமையில் காண்கிறோம் (யோவான் 4:52-53).

இப்புதுமை வழியே நாம் கற்றுக்கொள்ளக்கூடிய முக்கியமான பாடம் ஒன்று உள்ளது. அதுதான், அரச அலுவலரிடம் படிப்படியாக வளர்ந்த நம்பிக்கை என்ற பாடம். அவரது நம்பிக்கையின் வளர்ச்சியை மூன்று படிகளாக நாம் புரிந்துகொள்ள முயல்வோம்.
தன் மகன் சாகும் நிலையிலிருந்ததால், அவனைக் குணமாக்கும் பல வழிகளை, அரச அலுவலர், பதைபதைப்புடன், தீவிரமாக, துரிதமாகத் தேடிக்கொண்டிருந்தார். அவர் தேடிய பல்வேறு வழிகளிலும் தீர்வு கிடைக்காமல், அவரது நம்பிக்கை, நாளுக்கு நாள் குறைந்துவந்தது. அவ்வேளையில், அவர், இயேசுவைப்பற்றி கேள்விப்பட்டார். வெள்ளத்தில் அடித்துச் செல்லப்படும் ஒருவருக்கு, அந்த நீரில் மிதந்து வரும் எந்த ஒரு பொருளும், தன்னைக் காக்க வந்த படகு போலத் தெரியுமல்லவா? அத்தகைய நிலையில், இருந்த அரச அலுவலர், இயேசுவைப்பற்றிக் கேள்விப்படுகிறார். எருசலேமிலும், கானாவிலும் இயேசு ஆற்றிய அரும் அடையாளங்களை நேரில் கண்டவர்கள், அந்த அலுவலரிடம் அவற்றைப்பற்றி கூறியிருக்கலாம். அவர்கள் கூறியவற்றை நம்பி, அரச அலுவலர், கப்பர்நாகுமிலிருந்து, கானாவுக்கு விரைந்து செல்கிறார். மற்றவர்கள் கூறும் கருத்துக்களை நம்பி, முயற்சிகளை மேற்கொள்வது, நம்பிக்கையின் முதல் படி.
அரச அலுவலர், கானாவில், இயேசுவைச் சந்தித்த வேளையில், இயேசு, புதுமைகள் எதையும், அவர் கண்முன் நிகழ்த்தவில்லை. இருப்பினும், இயேசுவைச் சந்தித்ததும், அரச அலுவலர் உள்ளத்தில் நம்பிக்கை பிறந்திருக்கவேண்டும். முன்பின் அறிமுகம் இல்லாத ஒருவரைக் கண்டதும், அவர் மீது நமக்கு உருவாகும் நல்லெண்ணங்கள், நம்பிக்கையின் இரண்டாவது படி.

நம்பிக்கையின் முதலிரு படிகளையும் அரச அலுவலர் கடந்திருந்தாலும், அவருடைய நம்பிக்கை இன்னும் அரைகுறையாகவே இருந்தது. எனவேதான், அரச அலுவலர், இயேசுவை, தன்னுடன் கப்பர்நாகும் வந்து, தன் மகனைக் குணமாக்கவேண்டும் என்று விண்ணப்பிக்கிறார். இயேசு நேரடியாக வந்தால் மட்டுமே, தன் மகனுக்குக் குணம் கிடைக்கும் என்று, அரச அலுவலர் நினைத்ததில் ஆச்சரியம் ஒன்றுமில்லை.
பொதுவாக, குணமளிக்கும் புதுமைகளில், அப்புதுமையைச் செய்பவர், நோயுற்றவரைத் தொடவேண்டும், அல்லது, நோயுற்றவருக்கு முன் நின்று, ஒரு மந்திரத்தைச் சொல்லவேண்டும், அல்லது, தன் சக்தி அடங்கிய ஒரு பொருளை அனுப்பி, அதை நோயாளிமீது வைக்கும்படி சொல்லவேண்டும். இவைகளே, குணமாக்கும் வழிகள் என்பது, அன்றும், இன்றும் நிலவிவரும் பொதுவான நம்பிக்கை. அந்த நம்பிக்கையின் அடிப்படையில், அரச அலுவலர், இயேசுவை, தன் இல்லத்திற்கு வரும்படி அழைக்கிறார். அதுவும், அவர் விடுத்த வேண்டுதலில், அவசரமும், பரிதவிப்பும் கலந்து ஒலிக்கின்றன: "ஐயா, என் மகன் இறக்குமுன் வாரும்" (யோவான் 4:49) என்று, அவர், இயேசுவை வற்புறுத்தி அழைக்கிறார்.

பொதுவாக, தன்னை நாடி வருபவர்கள் கேட்பதை, கேட்டபடியே செய்வது, இயேசுவின் வழக்கம். ஆனால், இந்நிகழ்வில், அரச அலுவலர், தன் வீட்டுக்கு வரும்படி இயேசுவை அழைத்தபோது, அவருடன் செல்லாமல், "நீர் புறப்பட்டுப்போம். உம் மகன் பிழைத்துக் கொள்வான்" என்று சொல்லி அனுப்புகிறார். இங்கு, நாம் அரச அலுவலரின் நம்பிக்கையில் உருவாகும் மூன்றாவது படியைக் காணலாம். முன்பின் அறிமுகம் இல்லாத இயேசு, தன்னிடம் கூறியச் சொற்களை நம்பி, அரச அலுவலர், தன் இல்லத்திற்குப் புறப்பட்டுச் செல்கிறாரே, அது, நம்பிக்கையின் மிக உயர்ந்த நிலை.

கானா திருமண விருந்தில், இயேசுவை முன்பின் பார்த்திராத பணியாளர்கள், அவர் சொற்களைக் கேட்டு, அவர்மீது முழு நம்பிக்கை வைத்து, முழுமனதுடன், தொட்டிகளை, விளிம்புவரை தண்ணீரால் நிரப்பினர் என்பதைக் கண்டோம். நம்பிக்கையுடன் அப்பணியாளர்கள் தண்ணீரை நிரப்பிய அந்த வேளையில், தண்ணீர், திராட்சை இரசமாக மாறிய புதுமை நிகழ்ந்திருக்கவேண்டும் என்று சிந்தித்தோம். அதேபோல், இயேசுவை முன்பின் பார்த்திராத அரச அலுவலர், "நீர் புறப்பட்டுப்போம். உம் மகன் பிழைத்துக் கொள்வான்" என்று இயேசு சொன்னதை நம்பி புறப்பட்ட அந்த நொடியில், அவரது மகன் நலமடைந்தான்.
இயேசுவின் சொற்கள், புதுமைகளை ஆற்றும் வல்லமை கொண்டது என்பதை நம்பிய கானா திருமணப் பணியாளர்களும், அரச அலுவலரும், நமக்கு, நம்பிக்கை பாடங்களைச் சொல்லித் தருவார்களாக.