Showing posts with label Bible - Book of Psalms - Psalm 15.2. Show all posts
Showing posts with label Bible - Book of Psalms - Psalm 15.2. Show all posts

20 July, 2021

விவிலியத்தேடல்: திருப்பாடல் 15 – இறைவனோடு குடியிருப்போர் 2

 
Isaiah 52:7 - Beautiful feet

"ஆண்டவரே, உம் கூடாரத்தில் தங்கிடத் தகுதியுள்ளவர் யார்? உம் திருமலையில் குடியிருப்பவர் யார்?" (திருப்பாடல் 15:1) இவ்விரு கேள்விகளுடன் துவங்கும் 15ம் திருப்பாடலில் நம் தேடல் பயணத்தை சென்றவாரம் துவங்கினோம், இன்று தொடர்கிறோம். இக்கேள்விகளை எழுப்பிய தாவீது, அவற்றிற்குரிய பதிலை, அடுத்த 4 இறைவாக்கியங்களில் வழங்கியுள்ளார். இந்த நான்கு இறைவாக்கியங்களில், அவர் பட்டியலிடும் பல பண்புகளின் சுருக்கத்தை, நாம் 2ம் இறைவாக்கியத்தில் இவ்வாறு காண்கிறோம்: மாசற்றவராய் நடப்போரே! — இன்னோர் நேரியவற்றைச் செய்வர்; உளமார உண்மை பேசுபவர் (திருப்பாடல் 15:2)

மாசற்ற நடத்தை, நேரிய செயல்கள், உளமார உண்மை பேசுதல் என்ற மூன்று பண்புகள், இறைவனை நெருங்கிச் செல்லவும், அவருடன் வாழவும் தேவையான பண்புகள் என்று தாவீது கூறியுள்ளார். இந்த மூன்று அம்சங்களையும், கெவின் ஜோன்ஸ் (Kevin Jones) என்ற விவிலிய விரிவுரையாளர், கால்கள், கரங்கள், இதயம், வாய் ஆகிய உறுப்புக்களுடன் அடையாளப்படுத்தி, தன் விரிவுரையை வழங்கியுள்ளார்.

மாசற்ற வழிகளில் நடப்பவர்களின் கால்கள், தங்களுக்கு முன் வாழ்ந்த நல்லார் வகுத்த பாதைகளில் நடைபோடுவதோடு நிறுத்திவிடுவதில்லை. அவர்களது வாழ்வில் குறுக்கிடும் பாதைகள், கோணல்மாணலாக இருந்தாலும், அவை, தூய்மையற்ற பாதைகளாக இருந்தாலும், அவற்றை, தூய்மையான, நேரான வழியாக மாற்றி, அவற்றில் பயணிக்கின்றனர். அத்துடன், அவர்களைப் பின்தொடரும் மற்றவர்கள், நேரிய வழிகளில் பயணிக்கவும் உதவுகின்றனர் என்று, ஜோன்ஸ் அவர்கள் கூறியுள்ளார்.

நம்மில் பலர், சில வேளைகளில், மாசற்ற வழிகளில் நடப்பதையும், வேறுசில வேளைகளில், இவ்வுலகம் காட்டும் வழிகளில் நடப்பதையும், மாறி, மாறி, தெரிவுசெய்கிறோம். உலக வழிகளோடு நாம் கொள்ளும் சமரச முயற்சிகளைக் குறித்து, திருத்தூதரான புனித பவுல், கொரிந்தியருக்கு எழுதிய 2ம் திருமுகத்தில் வெப்பமான சில கேள்விகளை எழுப்பியுள்ளார்:
2 கொரிந்தியர் 6 14-15
நம்பிக்கை கொண்டிராதவரோடு உங்களைப் பிணைத்துக்கொள்ளவேண்டாம். இறைவனுக்கு ஏற்புடைய நெறிக்கு, நெறிகேட்டோடு என்ன உறவு? ஒளிக்கு இருளோடு என்ன பங்கு? கிறிஸ்துவுக்கும் சாத்தானுக்கும் என்ன உடன்பாடு? நம்பிக்கை கொண்டோர்க்கு நம்பிக்கை கொண்டிராதவரோடு என்ன தொடர்பு?
இத்தகைய சமரசங்கள் இன்றி, மாசற்றவராய் நடப்போர், எத்தனை துன்பங்கள் வந்தாலும், தங்கள் வழியிலிருந்து விலகாமல், மற்றவர்களையும் நல்வழிக்கு அழைத்துச் செல்லும் சக்தி பெற்றுள்ளனர்.

மாசற்ற வழியில் நடப்போர் தீமையோடு சமரசம் செய்யமாட்டார்கள் என்பதை சிந்திக்கும் இவ்வேளையில், அருள்பணி ஸ்டான் சுவாமி மீண்டும் நம் நினைவுகளில் நிழலாடுகிறார். ஒடுக்கப்பட்ட பழங்குடியினருக்காகவும், தலித் மக்களுக்காகவும், நீதியின் வழியில் போராடிவந்த அருள்பணி ஸ்டான் அவர்களுக்கு, நடுவண் அரசின் தவறான வழிகளுடன் சமரசம் செய்துகொள்ளவோ, அல்லது, அரசியல் தலைவர்கள் செய்யும் அநீதிகளைக் கண்டு கண்களை மூடிக்கொள்ளவோ, பல வழிகளில், மறைமுகமாகவோ, நேரடியாகவோ, சோதனைகள் சுழன்று வந்தன. இருப்பினும், அவர், தன் நேரிய வழியிலிருந்து சற்றும் விலகிச்செல்லவில்லை.

அருள்பணி ஸ்டான் அவர்கள் கைது செய்யப்படுவதற்கு சில நாள்களுக்கு முன், அவர் பதிவுசெய்த ஒரு காணொளியில், தன்னை எவ்வழியிலாவது கைது செய்வதற்கு அரசு பின்பற்றிவரும் அநீதியான வழிமுறைகளைப்பற்றி, தன் கருத்துக்களை, தெளிவாகப் பதிவுசெய்துள்ளார்: "எனக்கு நிகழ்ந்துகொண்டிருப்பது, எனக்கு மட்டும் நிகழ்வது அல்ல. இது, இந்தியா முழுவதும் மேற்கொள்ளப்பட்டு வரும் ஒரு வழிமுறை. தற்போது ஆட்சியில் இருக்கும் சக்திக்கு எதிராக குரல் எழுப்பியதால், கேள்விகள் கேட்டதால், முற்போக்குச் சிந்தனையாளர்கள், வழக்கறிஞர்கள், எழுத்தாளர்கள், மனித உரிமை செயல்பாட்டாளர்கள், மாணவர்தலைவர்கள் சிறைப்படுத்தப்பட்டுள்ளனர் என்பதை அனைவரும் அறிவோம். இந்த அடக்குமுறைக்கு நாம் அனைவருமே உட்படுத்தப்பட்டுள்ளோம். இந்த அடக்குமுறைக்கு உள்ளானவர்களில் ஒருவனாக நானும் இருப்பதில் ஒரு வகையில், மகிழ்ச்சியடைகிறேன். நான் அமைதியான ஒரு பார்வையாளன் அல்ல, இந்த அரசியல் விளையாட்டின் ஒரு பகுதியாகிவிட்டேன். அதற்கான விலையைக் கொடுக்க தயாராக இருக்கிறேன்" என்று அருள்பணி ஸ்டான் அவர்கள் கூறினார்.

தான் பணியாற்றிவந்த பகுதியில், அநீதிகள் பெருகியிருந்தாலும், அங்கு தன் பாதங்களை பதித்து, அப்பகுதியை தூய்மையாக்க, அருள்பணி ஸ்டான் சுவாமி அவர்கள் முயன்றார். இன்று அவர், இந்திய அடித்தட்டு மக்களின் வரலாற்றில் தன் பாதங்களைப் பதித்துச் சென்றுள்ளார். புனிதமற்ற இடங்களையும் புனிதமாக்கும் சக்திபெற்றது நல்லாரின் பாதம். நல்வாழ்வை, அல்லது, நற்செய்தியைக் கொணர்வோரின் பாதங்கள் எவ்வளவு அழகானவை என்பதை, இறைவாக்கினர் எசாயா இவ்வாறு வியந்து கூறியுள்ளார்:
எசாயா 52:7
"நற்செய்தியை அறிவிக்கவும், நல்வாழ்வைப் பலப்படுத்தவும் நலம்தரும் செய்தியை உரைக்கவும், விடுதலையைப் பறைசாற்றவும்... வருவோனின் பாதங்கள், மலைகள்மேல் எத்துணை அழகாய் இருக்கின்றன!"

நன்னெறியில் நடப்போர் 'நேரியவற்றைச் செய்வர்' (திபா 15:2) என்று திருப்பாடல் ஆசிரியர் கூறியுள்ளதை, விவிலிய விரிவுரையாளர் ஜோன்ஸ் அவர்கள், 'கரங்கள்' என்ற உடல் உறுப்புடன் இணைத்து விளக்கமளித்துள்ளார். நாம் கடவுளின் கரங்களால் உருவாக்கப்பட்டவர்கள் என்பதால், நமது கரங்களும், உன்னதமானவற்றை செய்வதற்குமட்டுமே உருவாக்கப்பட்டுள்ளன என்பதை, திருத்தூதரான புனித பவுல், எபேசியருக்கு எழுதிய திருமுகத்தில் இவ்வாறு கூறியுள்ளார்:
எபேசியர் 2:10
நாம் கடவுளின் கைவேலைப்பாடு; நற்செயல்கள் புரிவதற்கென்றே கிறிஸ்து இயேசு வழியாய்ப் படைக்கப்பட்டிருக்கிறோம். இவ்வாறு நற்செயல்கள் புரிந்து வாழும்படி கடவுள் முன்கூட்டியே ஏற்பாடு செய்திருக்கிறார்.

மாசற்றவராய் நடந்து, நேரியவற்றைச் செய்வோர், 'உளமார உண்மை பேசுவர்' (திபா 15:2) என்பது, 15ம் திருப்பாடலில் கூறப்பட்டுள்ள மூன்றாவது பண்பு. இதைக் குறித்துக்காட்ட, விவிலிய விரிவுரையாளர் ஜோன்ஸ் அவர்கள் 'இதயம்' மற்றும் 'வாய்' என்ற அடையாளங்களைப் பயன்படுத்தியுள்ளார். நல்லார் பேசும் உண்மைகள், வெறும் வாய் வார்த்தைகளாக பேசப்படும் உண்மையல்ல, அவை உளமாரப் பேசப்படும் உண்மை என்று தாவீது சிறப்பாகக் குறிப்பிட்டுள்ளார். இதே எண்ணத்தை, "உள்ளத்தின் நிறைவையே வாய் பேசும்" (மத்தேயு 12:34) என்ற சொற்களில், இயேசுவும், தெளிவாகக் கூறியுள்ளார்.

வெறும் வாய்ச் சொல்லால் கடவுளைப் புகழ்ந்துவிட்டு, உள்ளத்தளவில் அவரிடமிருந்து விலகி இருந்தோரை, இறைவாக்கினர் எசாயா இவ்வாறு விவரிக்கிறார்:
எசாயா 29:13
என் தலைவர் கூறுவது இதுவே: வாய்ச் சொல்லால் இம்மக்கள் என்னை அணுகுகின்றனர்; உதட்டினால் என்னைப் போற்றுகின்றனர்; அவர்கள் உள்ளமோ என்னை விட்டுத் தொலையில் இருக்கிறது; அவர்களது இறையச்சம் மனனம் செய்த வெறும் மனித கட்டளையைச் சார்ந்ததே!
உதட்டினால் இறைவனைப் போற்றும் வேளையில், உள்ளத்தால் அவரிடமிருந்து விலகியிருக்கும் பரிசேயர்களின் வெளிவேடத்தைக் குறித்து இயேசு பேசியபோது, இறைவாக்கினர் எசாயாவின் இக்கூற்றை, மீண்டும் நினைவுறுத்தினார் என்பதை அறிவோம். (காண்க. மத். 15:7-9)

இறைவனின் கூடாரத்தில் தங்கவும், அவரது திருமலையில் குடியிருக்கவும் தகுதியுள்ளவர்களின் சொல், செயல், வாழ்க்கைமுறை எவ்வாறு அமையும் என்பதை, 15ம் திருப்பாடலின் 2ம் இறைவாக்கியத்தில் கூறிய தாவீது, தொடர்ந்து, 3,4,5 ஆகிய இறைவாக்கியங்களில் கூறுவதை, 2ம் இறைவாக்கியத்தின் விளக்கமாக நாம் காணலாம். இந்த மூன்று இறைவாக்கியங்களில் தாவீது கூறும் 8 பண்புகளை பட்டியலிடுவோம்:
தம் நாவினால் புறங்கூறார்;
தம் தோழருக்குத் தீங்கிழையார்;
தம் அடுத்தவரைப் பழித்துரையார்.
நெறிதவறி நடப்போரை இழிவாகக் கருதுவர்;
ஆண்டவருக்கு அஞ்சுவோரை உயர்வாக மதிப்பர்;
தமக்குத் துன்பம் வந்தாலும், கொடுத்த வாக்குறுதியை மீறார்;
தம் பணத்தை வட்டிக்குக் கொடார்;
மாசற்றவருக்கு எதிராகக் கையூட்டுப் பெறார்

நல்லாரின் பண்புகளை இவ்வாறு விளக்கிக்கூறும் தாவீது, இறுதியில், "இவ்வாறு நடப்போர் என்றும் நிலைத்திருப்பர்" (திருப்பாடல் 15:5) என்ற ஆசிமொழியுடன், 15ம் திருப்பாடலை நிறைவு செய்கிறார்.

ஆண்டவரின் கூடாரத்திலும், அவரது திருமலையிலும் தங்கியிருக்க தகுதியுள்ளவர் யார் என்ற கேள்வியை எழுப்பி, அதற்கு விடையாக, தாவீது வ்ழங்கியுள்ள பண்புகளின் பட்டியலைக் காணும்போது ஒரு முக்கிய கேள்வி எழுகிறது. ஆண்டவரோடு தங்குவோரின் பண்புகளைக் கூறும்போது, கடவுள் பக்தி, இடைவிடாத செபம், போன்ற பண்புகளை தாவீது குறிப்பிடாமல் இருப்பது ஏன் என்ற கேள்வி எழுகிறது. உன்னதமான மனிதத்தன்மையோடு வாழ்ந்தாலே போதும், நாம் இறைவனோடு வாழமுடியும் என்பதை, இத்திருப்பாடல் நமக்கு உணர்த்துகிறது.

இரண்டாம் நூற்றாண்டில் வாழ்ந்த இறையியல் மேதை புனித இரேனியுஸ் (Irenaeus) அவர்கள், கிறிஸ்தவ வாழ்வின் சாரம் என்ன என்பதைக் கூற the glory of God is a human being fully alive!” அதாவது, "ஒரு மனிதப் பிறவி முழுமையாக வாழ்வதே இறைவனின் மகிமை" என்று கூறினார். அந்த புகழ்பெற்ற எண்ணத்தை, நாம், 15ம் திருப்பாடலில், மீண்டும் ஒருமுறை உணர்ந்துள்ளோம்.