Showing posts with label Bible - Lent - Words on Calvary 7 - I commend my spirit. Show all posts
Showing posts with label Bible - Lent - Words on Calvary 7 - I commend my spirit. Show all posts

07 April, 2020

விவிலியத்தேடல்: சிலுவையில் அறையப்பட்டவரின் அழைப்பு 7


Blessed Engelmar – The Angel of  Dachau
A medical worker treats a coronavirus patient in Rome

விதையாகும் கதைகள் : நோயுற்றோரின் வானதூதர்கள்...

1941ம் ஆண்டு, ஏப்ரல் 21ம் தேதி, எங்கல்மார் உன்செய்திக் (Engelmar Unzeitig) என்ற இளம் அருள்பணியாளரை நாத்சி படையினர் கைது செய்தனர். அவர் செய்த குற்றம் என்ன? ஹிட்லரின் சர்வாதிகார அரசையும், யூதர்கள் கொடுமைப்படுத்தப்பட்டதையும் எதிர்த்து, அருள்பணி எங்கல்மார் அவர்கள் கடுமையாகப் பேசிவந்தார். அதுவும், ஆலயங்களில், வழிபாட்டு நேரங்களில், இவ்வாறு பேசிவந்தார். எனவே, அவர் கைது செய்யப்பட்டு, தாக்ஹாவ் (Dachau) வதைமுகாமுக்கு அனுப்பப்பட்டார். அந்த வதைமுகாமில் 2,700க்கும் மேற்பட்ட அருள்பணியாளர்கள் அடைத்து வைக்கப்பட்டிருந்தனர். எனவே, அந்த வதைமுகாமை, "உலகிலேயே மிகப்பெரிய துறவு மடம்" என்று, ஜெர்மன் படையினர், கேலியாக அழைத்தனர்.
அருள்பணி எங்கல்மார் அவர்கள், அந்த வதைமுகாமில் அடைக்கப்பட்டபோது, அவருக்கு வயது 30. இளையவர் எங்கல்மார் அவர்கள், தன் 18வது வயதில் Marianhill மறைப்பணியாளர்கள் சபையில் சேர்ந்தார். "வேறு யாரும் போக முடியவில்லையெனில், நான் போவேன்" என்ற விருதுவாக்கைக் கொண்ட இத்துறவுச்சபையில், 28வது வயதில் அருள்பணியாளராக திருநிலைப்படுத்தப்பட்ட எங்கல்மார் அவர்கள், ஈராண்டு பணிக்குப் பின், வதைமுகாமில் அடைக்கப்பட்டார்.
அருள்பணியாளருக்கென ஒதுக்கப்பட்டிருந்த தாக்ஹாவ் வதைமுகாமில், பல நாட்கள், அவர்கள் மிகக் கேவலமாக நடத்தப்பட்டனர். ஒருமுறை, புனித வெள்ளியன்று, இயேசு அனுபவித்த கொடுமைகளை அனைவருக்கும் நினைவுறுத்தும் வகையில், பல அருள் பணியாளர்கள், மற்றவர்கள் முன்னிலையில், சித்ரவதைகள் செய்யப்பட்டனர்.
வதைமுகாமில் 'டைபாய்ட்' நோய் பரவியது. அந்நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவிகள் செய்ய, அருள்பணி எங்கல்மார் அவர்கள், தன்னையே அர்ப்பணித்தார். நோயுற்று இறந்தோரை, நல்லடக்கம் செய்தார். தாக்ஹாவ் வதை முகாமின் வானதூதர் என்றழைக்கப்பட்ட அருள்பணி எங்கல்மார் அவர்கள், நோயினால் தாக்கப்பட்டு, 1945ம் ஆண்டு மார்ச் 2ம் தேதி இறையடி சேர்ந்தார்..
இவ்வாண்டு மார்ச் மாதம், இத்தாலி நாடு, கொரோனா தொற்றுக்கிருமியின் தாக்கத்தால் சீர்குலைந்தபோது, இத்தாலியில், நோயுற்றவர் நடுவே பணியாற்றிய பல அருள்பணியாளர்கள், இருபால் துறுவியர், மற்றும், நலப்பணியாளர்கள், இந்த தொற்றுநோயால் பாதிக்கப்பட்டு இறந்தனர். இவர்கள் அனைவருமே, நோயுற்றோரின் வானதூதர்கள்.

“Into your hands…”

சிலுவையில் அறையப்பட்டவரின் அழைப்பு 7

கொரோனா தொற்றுக்கிருமியின் கோரப்பிடியில் சிக்கி, ஆயிரக்கணக்கானோர் இறந்துள்ளனர், இன்னும் பல்லாயிரம் பேர் நோயுற்று, உயிருக்குப் போராடிக்கொண்டிருக்கின்றனர். இவர்களில் எத்தனை பேர், தங்கள் இல்லங்களில், குடும்பத்தினர் சூழ இருந்தபோது இறந்தனர் என்றும், எத்தனை பேர், தங்கள் குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும், சரியான முறையில் விடைபகர்ந்து சென்றனர் என்றும் தெரியாது. அத்தகைய வாய்ப்பை, இந்த தொற்றுக்கிருமி உருவாக்கித் தரவில்லை.
போர்க்களங்களிலும், இயற்கைப் பேரிடர்களிலும் இறப்போர், சிறைக்கைதிகள், குறிப்பாக, மரணதண்டனை பெற்ற கைதிகளுக்கு, இதையொத்த நிலை உருவாவதை அறிவோம். இறக்கும் வேளையில், யாரிடமும், எதையும் சொல்லமுடியாமல் இறக்கும் இவர்களைப்பற்றி எண்ணும் வேளையில், நம் நினைவு, கல்வாரி நோக்கிச் செல்கிறது. அங்கு, மரணதண்டனை பெற்று, சிலுவையில் தொங்கிக்கொண்டிருந்த இயேசு, தன் இறுதி எண்ணங்களை, சூழ நின்றவர்களுடன் பகிர்ந்துகொண்டதை, இந்த தவக்காலத்தின் விவிலியத் தேடல்களில் சிந்தித்து வந்துள்ளோம். இயேசு கூறிய இறுதி வாக்கியங்கள், இன்றையத் தேடலுடன் நிறைவு பெறுகின்றன.

ஓர் அருள்பணியாளர் என்ற முறையில், ஒரு சிலரது வாழ்வின் இறுதிக் கட்டத்தில் ஆன்மீக அளவில் உதவிகள் செய்திருக்கிறேன். ஒரு முறை, 80 வயதைத் தாண்டிய ஒருவரை அவரது இறுதி நேரத்தில் சந்திக்கவேண்டிய சூழ்நிலை உருவானது. நான் அவர் வீட்டுக்குச் சென்றபோது, அவர் ஏற்கனவே சுயநினைவை இழந்திருந்தார். மிகக் கடினப்பட்டு மூச்சு விட்டுக்கொண்டிருந்தார். நான் அவர் தலை மீது கரங்களை வைத்து வேண்டினேன். சிறிது நேரம் கழித்து, அவரது உயிர் பிரிந்தது.
அப்போது, சூழ இருந்தவர்கள், "நீங்க வந்து கை வைச்சு செபிக்கணும்னு அவர் காத்திருந்தது போல இருந்துச்சு..." என்று சொன்னார்கள். அவர் ஏறக்குறைய மூன்று நாட்கள் சுயநினைவை இழந்திருந்தார், கடைசி ஒரு நாள் மூச்சு இழுத்துக்கொண்டிருந்தது என்றெல்லாம் அறிந்தேன். அவரது இறுதி சடங்குகள் முடிந்து, நான் என் அறைக்கு வந்து, அதைப்பற்றி சிந்தித்தேன். இறக்கும் நிலையில் உள்ளவர்கள், இறுதி நேரத்தில் சந்திக்கும் போராட்டம் பற்றி சிந்தித்தேன். என் இந்த போராட்டம்? ஒரு வேளை, இறுதி நேரத்தில் எதையாவது சொல்ல நினைத்தார்களோ? அந்த இறுதி மூச்சு போகுமுன் அவர்கள் மனம், சிந்தனை இவற்றில் எந்த விதமான எண்ணங்கள் இருந்திருக்கும்? யாராலும் கண்டுபிடிக்க முடியாது.

பொதுவாகவே, எதையாவது சொல்லவந்துவிட்டு, சூழ்நிலையால், அதைச் சொல்ல முடியாமல் போகும்போது, அந்த வார்த்தைகள், தொண்டைக் குழிக்குள் சிக்கிக் கொண்டதாகச் சொல்கிறோம் இல்லையா? அப்படி வார்த்தைகள், எண்ணங்கள் தொண்டைக்குள் அல்லது சிந்தைக்குள் சிக்கிக் கொள்ளும்போது, அதுவும் வாழ்வின் இறுதிக் கட்டத்தில் அப்படி சிக்கிக் கொள்ளும்போது, அந்த உயிர் பிரிவதற்கு போராடுகிறது என்று நாம் எண்ணுகிறோம். இல்லையா? அதற்கு மாறாக, வாழ்வின் எல்லா பிரச்சனைகளையும் தீர்த்து விட்டவர்கள், எல்லா வகையிலும் ஒரு நிறைவைக் கண்டவர்கள், எந்த வித ஏக்கமும் இல்லாமல், இறுதி நேரத்தை எதிர் பார்ப்பவர்கள், அமைதியாக உலகை விட்டுப் பிரிவதையும் நாம் பார்த்திருக்கிறோம்.

இத்தகைய ஒரு நிறைவோடு, அமைதியோடு, இயேசு, இவ்வுலக வாழ்விலிருந்து, விடைபெற்றுச் சென்றார். அவர் சிலுவையில் சொன்ன இறுதிச் சொற்கள்: "எல்லாம் நிறைவேறிற்று." (யோவான் 19: 30) என்பதும், "தந்தையே, உம் கையில் என் உயிரை ஒப்படைக்கிறேன்." (லூக்கா 23: 46) என்பதும். ஆனால், இந்த அமைதியான, நிறைவான முடிவுக்கு வருவதற்கு முன், சிலுவையில் அவரும் போராடினார்.
யோவான், லூக்கா இருவரும் இயேசுவின் இறப்பு இவ்வளவு அமைதியாக இருந்ததென்று குறிப்பிடும்போது, மத்தேயு, மாற்கு இருவரும், இயேசு உரக்கக் கத்தி உயிர் நீத்தார் என்று கூறியுள்ளனர். (மத். 27:50, மாற். 15:37)  இயேசு இறுதியாகச் சிலுவையில் சொன்னதாக இவர்கள் இருவரும் குறிப்பது, போராட்டத்தின் உச்சியில் ஓர் உள்ளம் கதறிச் சொல்லும் வார்த்தைகள்: "எலோயி, எலோயி, லெமா சபக்தானி?... என் இறைவா, என் இறைவா, ஏன் என்னைக் கைவிட்டீர்?" (மத். 27: 46 மாற். 15: 34)
நான்கு நற்செய்திகளையும் ஒரு சேரப் பார்க்கும்போது, முழுமையான ஒரு காட்சி நமக்குக் கிடைக்கிறது. இயேசுவும், சிலுவையில் அறையப்பட்டிருந்த வேளையில், தடுமாறினார், போராடினார்; தந்தையை நோக்கி "ஏன் என்னைக் கைவிட்டீர்?" என்று கதறினார். ஆனால், இறுதி நேரத்தில், தன் பணி முழுமை பெற்றது, என்ற திருப்தியுடன் அவர் விடைபெற்றார். சாகும் நேரத்தில், இப்படி ஒரு அமைதியை, நிறைவை அடைவதற்கு, பல நிலைகளைக் கடந்து வரவேண்டும்.

புற்றுநோய் முற்றிய நிலையில், தங்கள் இறுதி நாட்களை எண்ணிக்கொண்டிருந்த நோயாளிகளுக்கு, பல ஆண்டுகள் பணியாற்றிய Elizabeth Kubler Ross என்ற மனநல மருத்துவர், 1969ல் எழுதிய “On Death and Dying” என்ற நூல் 50 ஆண்டுகள் கழிந்து, இன்றும் பலராலும் போற்றப்படுகிறது. மரணத்திற்காக காத்திருக்கும் இவர்களை வாழ்வின் இறுதிநிலையில் இருக்கும் நோயாளிகள் என்று சொல்கிறோம். இந்நிலையில் உள்ள பல நூறு நோயாளிகளைச் சந்தித்து, மரணத்தை எதிர்கொள்ள அவர்கள் நிகழ்த்தும் போராட்டங்களை அறிந்து, அவர்களுக்குப் பல ஆண்டுகள் உதவிய பின், எலிசபெத் அவர்கள் தன் அனுபவங்களைத் தொகுத்து எழுதிய நூல் இது. மரணம் நிச்சயம் என்பது தெரிந்த அந்த நேரத்திலிருந்து, நோயாளிகள் மேற்கொள்ளும் இறுதிப் பயணத்தை, அவர், ஐந்து நிலைகளில் விளக்கியுள்ளார். அந்த ஐந்து நிலைகள் நம் சிந்தனைகளுக்கு உதவும்.

புற்று நோய், தன் மரணத்திற்கு நாள் குறித்து விட்டது என்பதை உணர்ந்தவர்கள் முதலில் மறுப்பு நிலையில் இருப்பதாக எலிசபெத் அவர்கள் கூறுகிறார். இப்படி இருக்காது, நடக்காது, அதுவும் எனக்கு இப்படி நடக்காது என்றெல்லாம் இவர்கள் அந்த செய்தியை ஏற்க மறுப்பார்கள்.
இரண்டாம் நிலையில் கோபம் எழும். ஏன் எனக்கு? நான் என்ன செய்தேன்? இது அநியாயம் என்று கோபப்படுவார்கள்.
மூன்றாம் நிலையில் பேரம் பேசுவார்கள். கடவுளோடு, வாழ்க்கையோடு பேரங்கள் நடக்கும். என் மகளின் கல்யாணம் வரைக்கும் என்னை வாழவைத்துவிடு... எனக்குக் குணமானால், உன்னுடைய கோவிலுக்கு நடந்தே வருகிறேன் எனக்குக் குணமானால், எக்காரணத்தைக் கொண்டும் மது அருந்தமாட்டேன் என் சொத்தெல்லாம் எடுத்துக் கொள். எனக்கு நலம் தா... என்பன போன்ற பேரங்கள் நிகழும் நிலை இது.
நான்காம் நிலை - ஆழ்ந்த வருத்தத்தில் மூழ்குதல். எதிலும் பற்றற்ற, எல்லாரையும், எல்லாவற்றையும் விட்டு விட்டு ஒதுங்கும் நிலை.
ஐந்தாம் நிலை - தன் சாவை, முடிவை ஏற்கும் நிலை. சாவு நிச்சயம் என்பது தெரிந்து விட்டது. அதை எப்படி சந்திப்பது எனக் கற்றுக்கொள்ள ஆசைப்படுகிறேன்என்று சொல்லும் அளவுக்குப் பக்குவம் பெறுவது, இந்த இறுதி நிலையில் என்று, எலிசபெத் அவர்கள் கூறியுள்ளார்.

எல்லா நோயாளிகளும், எல்லா நிலைகளையும் வரிசையாகக் கடக்கவேண்டும் என்றில்லை. ஒரு சிலர், ஒன்றிரண்டு நிலைகளிலேயே இறந்துபோகும் வாய்ப்புண்டு. ஒரு சிலர், முதல் நிலைக்குப்பின், ஐந்தாம் நிலைக்கு, நேரடியாகச் செல்லும் பக்குவமும் பெறுகிறார்கள். எல்லாரும் இறுதி நிலையை அடைந்தபின்னரே இறக்கின்றனர் என்றும் சொல்லமுடியாது... இது போன்ற கருத்துக்களை, எலிசபெத் அவர்கள் தன் நூலில் குறிப்பிட்டுள்ளார்.

எலிசபெத் அவர்கள் கூறியுள்ள இந்த ஐந்து நிலைகள், முதலில், மரணத்தை எதிர்கொள்ளும் நோயாளிகளுக்கு மட்டுமே பயன்பட்டது. ஆனால், வாழ்வின் பல்வேறு இழப்புகளிலும், இந்த நிலைகளை, ஒவ்வொருவரும் உணர்கிறோம் என்று எலிசபெத் அவர்கள் கூறியுள்ளார். நமக்கு நெருங்கிய ஒருவர் இறக்கும்போது அந்த இழப்பை முதலில் ஏற்க மறுக்கிறோம், பின்னர் கோபப்படுகிறோம்... இப்படி அந்த இழப்பை ஏற்றுக் கொள்வதற்கு முன் வெவ்வேறு நிலைகளை கடக்க வேண்டியுள்ளது. இதைப்போலவே, நமக்கு ஏற்படும் பொருள் இழப்பு அல்லது நம் நெருங்கிய உறவினர் அல்லது நண்பர் பிரிவது... என்று, எல்லா இழப்புகளிலும், இந்த நிலைகளை நாம் உணரமுடியும். எனவேதான், எலிசபெத் அவர்கள் எழுதிய இந்நூல், இன்னும் பலருக்கு, பல இழப்புகளில் உதவியாக உள்ளது.

இயேசு, சிலுவையில், அத்தனை போராட்டங்களையும் தாண்டி, 5ஆம் நிலையை அடைந்து தன் உயிரை நம்பிக்கையோடு இறைவனிடம் ஒப்படைத்தார். அவர் விண்ணகம் சென்றதை, நாம் இப்படி கற்பனை செய்து பார்க்கலாம். வீட்டைத் திறந்து வைத்து, வாசலுக்கு வந்து, வழிமேல் விழி வைத்துக் காத்திருக்கும் ஒரு தாயை, தந்தையைச் சந்தித்து, அவர்கள் அணைப்பில் தன்னையே முழுவதும் கரைத்துக் கொள்ளும் குழந்தையைப் போல், இயேசு, தன் வானகத்தந்தையின் வீட்டை அடைந்தார். "தந்தையே, உம் கையில் என் உயிரை ஒப்படைக்கிறேன்" என்று வாயார, மனதார சொல்லி உயிர் நீத்தார்.

வாழ்க்கையில் சந்திக்கும் பல இழப்புகளின்போது, அவற்றை சரியான வகையில் ஏற்றுக்கொள்ளும் பக்குவம் பெறவும், நமது இறுதி நேரம் வரும்போது, நிறைவாக, அமைதியாக, இவ்வுலகை விட்டு விடைபெற்றுச் செல்லும் விதமாக, நம் வாழ்க்கை அமையவும், சிலுவையில், அமைதியாய், உலகினின்று விடைபெற்ற இயேசு, நமக்கு, இந்த புனித வாரத்தில் பாடங்களைச் சொல்லித்தர வேண்டுவோம்.