Showing posts with label Bible - Miracles - Feeding 5000 - Part 3. Show all posts
Showing posts with label Bible - Miracles - Feeding 5000 - Part 3. Show all posts

07 June, 2018

விவிலியத்தேடல் : புதுமைகள் – அப்பம் பகிர்ந்தளித்த புதுமை - 3

A boy had five loaves and two fish

யோவான் நற்செய்தியின் 6ம் பிரிவில் 5000த்திற்கும் அதிகமான மக்களுக்கு, இயேசு உணவு வழங்கிய புதுமையில், நம் தேடல் பயணம் தொடர்கிறது. இந்தப் புதுமையை, இருவேறு கண்ணோட்டங்களில் சிந்திக்கலாம். இயேசு, தனி மனிதராய், தனக்கிருந்த அருளைக் கொண்டு, அப்பங்களைப் பலுகச்செய்தார் என்று சிந்திப்பது, ஒரு கண்ணோட்டம். மற்றொரு கண்ணோட்டம், சில விவிலிய ஆய்வாளர்களின் கருத்தாக நம்மை அடைந்துள்ளது. இன்றையத் தேடலில் இந்தக் கண்ணோட்டத்தை சற்று ஆழமாகச் சிந்திப்போம். இந்தக் கண்ணோட்டத்தில் சிந்திக்க, நமக்கு உதவியாக இருப்பது, யோவான் நற்செய்தியில் நாம் காணும் ஒரு குறிப்பு.

இயேசுவைச் சுற்றி, மக்கள் கூடியிருந்த அத்தருணத்தில், உணவைப்பற்றிய பேச்சு எழுந்ததும், ஐந்து அப்பங்களும், இரண்டும் மீன்களும் அங்கிருந்தன என்பதை நான்கு நற்செய்திகளும் குறிப்பிடுகின்றன. ஆனால், யோவான் நற்செய்தியில் மட்டும், அந்த உணவு, ஒரு சிறுவனிடம் இருந்தது என்று குறிப்பாகச் சொல்லப்பட்டுள்ளது. சிறுவன் எதற்காக உணவுகொண்டு வந்திருந்தான்?  அச்சிறுவன், அதை ஏன் இயேசுவிடம் கொணர்ந்தான்? என்ற கேள்விகளை எழுப்புகையில், இப்புதுமையின் இரண்டாவது கண்ணோட்டத்திற்கு நம்மை அழைத்துச் செல்லும் பல எண்ணங்கள் பதிலாகக் கிடைக்கின்றன.

வெளியூர் செல்லும்போது, முன்னேற்பாடாக, உணவு எடுத்துச் செல்லவேண்டும் என்ற எண்ணம், பொதுவாக, சிறுவர், சிறுமியருக்கு உருவாவதில்லை. பயணத்திற்குத் தேவையான உணவைத் தயாரித்து, எடுத்துச்செல்வது, பெற்றோரே. யூதர்கள் மத்தியில், இத்தகைய முன்னேற்பாடுகள் கூடுதலாகவே இருந்தன. காரணம் என்ன?
பல தலைமுறைகளாய், யூதர்கள், அடிமை வாழ்வு வாழ்ந்ததால், உணவின்றி தவித்தவர்கள். எனவே, அவர்கள் வீட்டைவிட்டு வெளியேறும்போது, மடியில் கொஞ்சம் உணவு எடுத்துச்செல்வது அவர்கள் வழக்கம். அன்றும், இயேசுவைத் தேடிச்சென்ற அந்தக் கூட்டத்தில், ஒரு குடும்பம் இருந்தது. தாங்கள் செல்வது எவ்விடம் என்பதை சரியாக அறியாததால், குடும்பத்தலைவி, முன்மதியோடு செயல்பட்டார். குடும்பமாய்ச் சென்ற தங்களுக்குத் தேவையான ஐந்து அப்பங்களையும் இரண்டு மீன்களையும் தயாரித்திருந்தார். அந்த உணவு பொட்டலத்தை, சிறுவன் சுமந்து வந்திருந்தான்.

மாலை ஆனதும், பசி வயிற்றைக் கிள்ள ஆரம்பித்தது. அங்கிருந்த பல யூதர்களிடம் உணவுப் பொட்டலங்கள் இருந்தன. ஆனால், யார் முதலில் பிரிப்பது? பிரித்தால், பகிர வேண்டுமே என்ற எண்ணங்கள் அங்கு வலம் வந்தன! இயேசுவின் படிப்பினைகளில் பகிர்வைப் பற்றி பேசினார் சரிதான். ஆனால் எப்படி இத்தனை பேருக்குப் பகிரமுடியும்? நமக்கெனக் கொண்டுவந்திருப்பதைக் கொடுத்துவிட்டால், நாம் என்ன செய்வது? இந்தக் கேள்விகளில் பெரியவர்களும், ஏன், சொல்லப்போனால், இயேசுவின் சீடர்களும் முழ்கியிருந்தார்கள். மக்கள் கூட்டத்தை அனுப்பிவிடுவது நல்லது என்று சீடர்கள் சிந்தித்தனர், அவ்வாறே இயேசுவிடம் கூறினர் என்பதை, மத்தேயு, மாற்கு, லூக்கா ஆகிய மூன்று நற்செய்தியாளர்களும் குறிப்பிட்டுள்ளனர். (மத். 14:15; மாற். 6:35; லூக். 9:12) நல்லவேளை, குழந்தைகளின் எண்ண ஓட்டங்கள், பெரியவர்களின் எண்ண ஓட்டங்களைப் போல் இல்லாததால், அந்தப் புதுமை நிகழ வாய்ப்பு உருவானது.

மக்களுக்கு உணவளிப்பது பற்றி இயேசு சீடர்களிடம் பேசுவதைக் கேட்ட ஒரு சிறுவன், அம்மா தன்னிடம் கொடுத்திருந்த ஐந்து அப்பங்களையும் இரண்டு மீன்களையும் இயேசுவிடம் கொண்டு வந்து கொடுத்தான். பின்விளைவுகளைச் சிறிதும் கணக்கு பார்க்காமல், கள்ளம் கபடமற்ற ஒரு புன்னகையுடன் அச்சிறுவன் இயேசுவிடம் வந்து, தன்னிடம் உள்ளதையெல்லாம் பெருமையுடன் தந்ததை, நாம் கற்பனை செய்து பார்க்கலாம். அந்தக் குழந்தையின் செயலால் தூண்டப்பட்ட மற்றவர்களும், தாங்கள் கொண்டுவந்திருந்த உணவைப் பகிர்ந்துகொள்ள ஆரம்பித்தனர். ஆரம்பமானது, ஓர் அற்புத விருந்து.

அங்கு நிகழ்ந்த பகிர்வைப் புரிந்துகொள்ள, இரயில் பயணங்களைப் பற்றி சிந்தித்துப் பார்க்கலாம். நம் அனைவருக்கும் இந்த அனுபவம் இருந்திருக்கும். இரயிலில் பயணம் செய்யும்பொழுது, உணவுநேரம் வந்ததும், ஒரு சின்ன தயக்கம் உருவாகும். எல்லாரிடமும் உணவு இருந்தாலும், யார் முதலில் உணவு பொட்டலத்தைப் பிரிப்பது என்ற சின்ன தயக்கம். ஒருவர் ஆரம்பித்ததும், மற்றவர்களும் அரம்பிப்பார்கள். இதில் சில சமயங்களில் இன்னும் என்ன அழகு என்றால், ஒருவர் தன் உணவில் கொஞ்சம் மற்றவரோடு பகிர ஆரம்பித்ததும், எல்லாரும் கொஞ்சம் கொஞ்சம் பகிர்ந்து கொள்வர். அவரவர் கொண்டு வந்திருந்த உணவை விட, இன்னும் அதிக சுவையுள்ள விருந்து அங்கு நடக்கும். ஒரு சில வேளைகளில், நம்முடன் பயணம் செய்யும் ஓரிருவர் உணவு கொணரவில்லை என்றாலும், அவர்களுக்கும் உணவு பகிர்ந்து தரப்படும். இத்தகைய இரயில் விருந்துகள் குறைந்துவருவது, நம் கலாச்சார வறுமைக்கு மற்றுமோர் அடையாளம்.

இதே போன்றதோர் அனுபவம், இயேசுவைச் சுற்றி அன்று நடந்திருக்க வேண்டும். ஒரு சிறுவன் ஆரம்பித்த பகிர்வு, ஒரு பெரிய விருந்தை ஆரம்பித்து வைத்தது. அந்த பகிர்வு தந்த மகிழ்வில், அங்கு இருந்தவர்களுக்கு பாதிவயிறு நிறைந்திருக்க வேண்டும். எனவேதான், அவர்கள் உண்டதுபோக, மீதியை 12 கூடைகளில் சீடர்கள் நிறைத்ததாக நான்கு நற்செய்திகளும் கூறுகின்றன. இயேசு அன்று நிகழ்த்தியது ஒரு பகிர்வின் புதுமை. இது இரண்டாவது கண்ணோட்டம்.

தனியொருவராய் இயேசு அப்பங்களைப் பலுகச்செய்தார் என்று எண்ணிப்பார்ப்பது புதுமைதான். ஆனால், இயேசு, தன் அற்புதச் சக்தியைக் கொண்டு அப்பங்களைப் பலுகச் செய்தார் என்பதைவிட, தன் படிப்பினைகளால், மக்கள் மனதை மாற்றி, அவர்களைப் பகிரச்செய்தார் என்பதை, மாபெரும் ஒரு புதுமையாகப் பார்க்கலாம்.

பகிர்வு மனப்பான்மையை உருவாக்குவது மிகக் கடினமானது என்பதை, கடந்த நூற்றாண்டு வாழ்ந்த புகழ்பெற்ற மனநல மருத்துவர், கார்ல் மென்னிஞ்ஜர் (Karl Menninger) என்பவர், ஓர் எடுத்துக்காட்டுடன் கூறியுள்ளார்.
கார்ல் மென்னிஞ்ஜர் அவர்களைத் தேடி ஒரு செல்வந்தர் வந்தார். என்னதான் முயன்றாலும் தன்னால் மகிழ்வாக வாழமுடியவில்லை என்று அந்தச் செல்வந்தர் சொன்னபோது, மென்னிஞ்ஜர் அவரிடம், "நீங்கள் சேர்த்துவைத்துள்ள செல்வத்தைக் கொண்டு என்ன செய்கிறீர்கள்?" என்று கேட்டார். அச்செல்வந்தர் ஒரு பெருமூச்சுடன், "ம்... என்ன செய்வது? என் சொத்துக்களைப்பற்றி கவலைப் பட்டுக்கொண்டே இருப்பதைத் தவிர வேறு என்ன செய்யமுடியும்?" என்று சொன்னார். "இவ்விதம் கவலைப்படுவதில் நீங்கள் இன்பம் காண்கிறீர்களா?" என்று மென்னிஞ்ஜர் அவரிடம் கேட்டதும், "இல்லவே, இல்லை... ஆனால், அதேநேரம், என் சொத்தில் ஒரு சிறு பகுதியையும் பிறருக்குத் தருவது என்று நினைத்தாலே, பயத்தில் உறைந்து போகிறேன்" என்று பதில் சொன்னார் செல்வந்தர்.
இந்த எடுத்துக்காட்டைக் கூறும், மருத்துவர் மென்னிஞ்ஜர் அவர்கள், மிக ஆழமான ஓர் எண்ணத்தை வெளிப்படுத்தினார்: “Money-giving is a very good criterion of a person's mental health. Generous people are rarely mentally ill people.” "தன்னிடம் உள்ள பணத்தை எவ்வளவு தூரம் ஒருவர் பிறருக்கு அளிக்கிறார் என்பதை வைத்து, அவரது மனநிலை எவ்வளவு நலமாக உள்ளது என்பதை அறிந்துகொள்ளலாம். தாராள மனதுடையவர்கள் மனநோய்க்கு உள்ளாவதில்லை".

தாராள மனதுடையோர் பேறுபெற்றோர்; ஏனெனில், அவர்கள் நோயின்றி வாழ்வர். இதற்கு மாறாக, தன்னைச் சுற்றி செல்வத்தைக் குவித்துவைக்க, வாழ்நாள் முழுவதும் உழைப்பவர்கள், நோய்களையும் கூடவே குவித்து வைக்கின்றனர். இது நாம் அனைவரும் அறிந்த உண்மை. இத்தகையோரில் ஒருவரை 'அறிவற்ற செல்வன்' உவமையில் (லூக்கா 12: 13-21) நாம் சந்திக்கிறோம். அவரை இறைவன், 'அறிவிலியே' என்று அழைக்கிறார்.

தங்களைச் சுற்றி தன்னலக் கோட்டைகளை எழுப்பி, அவற்றில் தேவைக்கு அதிகமாக செல்வங்களைக் குவிப்பவர்கள், நரகத்தை உருவாக்குகின்றனர். அந்த நரகத்தில் தங்களையேப் புதைத்துக்கொண்டு, அதை, விண்ணகம் என்று, தவறாகக் கற்பனை செய்து வாழும் செல்வர்கள், பரிதாபத்திற்குரியவர்கள். அவர்களை 'அறிவிலிகள்' என்று அழைப்பதற்குப் பதில், வேறு எவ்விதம் அழைப்பது?

அறிவற்றச் செல்வனை இந்தப் பொய்யான விண்ணகத்தில் பூட்டியது எது? அவர் நிலத்தில் விளைந்த அறுவடை. இறைவன் தந்த நிலம் என்ற இயற்கைக் கொடை, அந்நிலத்தில் தங்கள் வியர்வையையும், இரத்தத்தையும் சிந்தி உழைத்த ஏழை மக்கள், ஆகிய அடிப்படை உண்மைகள் இணைந்ததால், அச்செல்வனின் இல்லம் அறுவடை பொருள்களால் நிறைந்தது. வீட்டை அடைந்த விளைபொருள்கள் மட்டுமே செல்வனின் கண்களையும் கருத்தையும் நிறைத்தனவே தவிர, அந்த அறுவடையின் அடிப்படை உண்மைகள் அவர் கண்களில் படவில்லை, எண்ணத்தில் தோன்றவில்லை.

அறுவடைப் பொருள்கள் செல்வனின் வீடு  வந்த சேர்ந்த காட்சியைச் சிறிது கற்பனை செய்துபார்ப்போம். தானிய மூட்டைகளை, தங்கள் முதுகில் சுமந்து வந்து, வீடு சேர்த்த தொழிலாளிகள், மீண்டும் நிமிர்ந்து செல்லவும் வலுவின்றி திரும்பியிருக்கக் கூடும். செல்வனின் களஞ்சியங்களை தானியங்களால் நிரப்பிய அவர்கள், தங்கள் வயிற்றை நிரப்பமுடியாமல், அந்த செல்வனின் வீட்டுக்குமுன், பட்டினியில் மயங்கி விழுந்திருக்கக்கூடும். அந்த ஊழியர்களின் ஊர்வலம் தன் கண்முன் நடந்ததைக் கண்டும், காண மறுத்தச் செல்வன், அவர்கள் கொண்டுவந்து சேர்த்த தானியங்களை மட்டுமே பார்க்கிறார். குவிந்துள்ள தானியங்களைப் பகிர்ந்து தருவதற்கு மறுத்து, அவற்றை இன்னும் பதுக்கி வைப்பதற்கு, தன் களஞ்சியங்களை இடித்து, பெரிதாக்கத் திட்டமிடுகிறார். மனித உழைப்பில் விளைந்த தானியங்கள், மனிதர்களைவிட அதிக மதிப்பு பெறுகின்றன என்பதை இந்த உவமை வழியே நாம் உணரும்போது, சில ஆண்டுகளுக்கு முன் நம் நாளிதழ்களில் வெளியான சில தலைப்புச் செய்திகள் நம் உள்ளங்களை முள்ளென கீறுகின்றன.
இச்செய்திகளையும், அவை நமக்குச் சொல்லித்தரும் பாடங்களையும் அடுத்தத் தேடலில் கற்றுக்கொள்ள முயல்வோம்.