Showing posts with label Bible - Miracles - Synoptics - Deaf and speech impeded - Part 1. Show all posts
Showing posts with label Bible - Miracles - Synoptics - Deaf and speech impeded - Part 1. Show all posts

06 May, 2020

விவிலியத்தேடல்: ஒத்தமை நற்செய்தி – காது கேளாதவரும், திக்கிப்பேசுபவரும்... 1


Catholic students donate food parcels to the poor in Bangladesh

விதையாகும் கதைகள் : வாழவைக்கும் வழியறிந்த வறியோர்

பங்குக்கோவிலின் திருநாள் நெருங்கிவந்தது. அந்த ஆண்டு, பங்குப்பேரவை உறுப்பினர்கள் இணைந்து, ஒரு தீர்மானம் எடுத்திருந்தனர். தங்கள் பங்கில், மிகவும் வறுமைப்பட்ட நிலையில் வாழும் பத்து குடும்பங்கள், திருநாளைக் கொண்டாட உதவியாக, அவர்களுக்குத் தேவையானவற்றைக் கொடுக்கவேண்டும் என்பதே, அத்தீர்மானம். புதிய ஆடைகள், உணவுப் பொருள்கள், பரிசுகள் என்று, பலவும் நிரப்பப்பட்ட பத்து அட்டைப் பெட்டிகளை, பங்குப்பேரவை தயாரித்திருந்தது.
திருநாளுக்கு முந்திய நாள், பத்து குடும்பங்களையும் அழைத்து, ஒவ்வொரு குடும்பத்திற்கும் ஓர் அட்டைப் பெட்டியை வழங்கிக் கொண்டிருந்தனர், பங்குப்பேரவை உறுப்பினர்கள். அவ்வேளையில், அங்கு மற்றொரு குடும்பம் வந்து சேர்ந்தது. தாய், தந்தை, ஒரு மகள் என்று மூவர் வந்து சேர்ந்தனர். போரினால் துன்புற்ற பக்கத்து நாட்டிலிருந்து தப்பி ஓடி வந்தவர்கள், இம்மூவரும்.
அவர்களின் வருகையால், அங்கு, சங்கடமானச் சூழல் உருவானது. பங்குப்பேரவை உறுப்பினர்கள், சரியாக, பத்து அட்டைப் பெட்டிகள் மட்டுமே தயார் செய்திருந்தனர். பதினோராவது குடும்பத்தை அவர்கள் எதிர்பார்க்கவில்லை.
அவ்வேளையில், தனக்குரிய அட்டைப் பெட்டியைப் பெற்றுக்கொண்ட ஒரு குடும்பத்தின் தாய், அறைக்கு நடுவேச் சென்றார். தன் பெட்டியில் இருந்த ஒரு துண்டை எடுத்து தரையில் விரித்தார். தன் பெட்டியில் இருந்த ஒரு சிலப் பொருள்களை எடுத்து அத்துண்டின் மீது வைத்தார். ஏனைய ஒன்பது குடும்பங்களைச் சார்ந்தவர்களும், தங்கள் பெட்டிகளிலிருந்து உணவு, உடை என்று, வெவ்வேறு பொருள்களை துண்டின் மேல் வைத்தனர். விரைவில், அங்கு, 11வது குடும்பத்திற்குத் தேவையானப் பொருள்கள் சேர்ந்தன. அப்பொருள்களை துண்டில் மூட்டையாகக் கட்டி, 11வது குடும்பத்திடம் ஒப்படைத்தனர்.
வறியோர் பேறுபெற்றோர், ஏனெனில், வாழவைக்கும் வழிகள் அவர்களுக்குத் தெரியும். கோவிட் 19 தொற்றுக்கிருமியால் உருவாகியுள்ள நெருக்கடிகள், வறியோரை பல வழிகளில் பாதித்து வருவதை அறிவோம். இவர்களுக்கு உதவிகள் வழங்க, மத அமைப்புக்களும், பிறரன்பு அமைப்புக்களும் முயற்சிகள் மேற்கொண்டு வருவதையும் அறிவோம். அவர்களது முயற்சிகளில் நாமும் பங்கேற்கலாமே!

And they brought to him a man who was deaf and had an impediment in his speech

ஒத்தமை நற்செய்தி  காது கேளாதவரும், திக்கிப்பேசுபவரும்... 1

ஏனைய மூன்று நற்செய்திகளிலும் இடம்பெறாமல், மத்தேயு நற்செய்தியில் மட்டுமே இடம்பெற்றிருந்த இரு தனித்துவமானப் புதுமைகளை சென்ற விவிலியத்தேடலில் சிந்தித்தோம். அதேவண்ணம், மாற்கு நற்செய்தியில் மட்டுமே பதிவாகியிருக்கும் இரு தனித்துவமானப் புதுமைகளில், இன்று, நம் தேடல் பயணம் துவங்குகிறது.
இவ்விரு புதுமைகளும், குணமளிக்கும் புதுமைகள். "காது கேளாதவரும் திக்கிப்பேசுபவருமான ஒருவரை"யும் (மாற். 7:32), "பார்வையற்ற ஒருவரை"யும் (மாற். 8:22), இயேசு குணமாக்கும் புதுமைகள், மாற்கு நற்செய்தியில் மட்டுமே பதிவாகியுள்ளன. இவ்விரு புதுமைகளையும், நற்செய்தியாளர் மாற்கு, ஏறத்தாழ, ஒரே விதமாக அறிமுகம் செய்திருப்பது, நம் கவனத்தை முதலில் ஈர்க்கிறது:
காது கேளாதவரும் திக்கிப்பேசுபவருமான ஒருவரை, சிலர், இயேசுவிடம் கொண்டு வந்து, அவர்மீது கைவைத்துக் குணமாக்குமாறு அவரை வேண்டிக்கொண்டனர் (மாற்கு 7:32) என்று 7ம் பிரிவிலும், அப்பொழுது சிலர் பார்வையற்ற ஒருவரை இயேசுவிடம் கொண்டுவந்து, அவரைத் தொடும்படி வேண்டினர் (மாற்கு 8:22) என்று 8ம் பிரிவிலும் நாம் வாசிக்கிறோம்.

நலம் பெறவேண்டிய தேவையில் இருந்த இரு மனிதரை, மற்றவர்கள் இயேசுவிடம் அழைத்து வந்ததோடு, அம்மனிதர்கள் சார்பில் அவர்கள் இயேசுவிடம் விண்ணப்பித்தனர் என்ற விவரங்களை இந்த அறிமுக வரிகளில் வாசிக்கிறோம். சென்ற விவிலியத் தேடலில், பார்வையற்ற இருவர் இயேசுவைத் தேடிவந்து குணம் பெற்றனர் என்பதையும், பேய்பிடித்து பேச்சிழந்த ஒருவரை மற்றவர்கள் இயேசுவிடம் கொண்டுவந்தனர் என்பதையும் சிந்தித்த வேளையில், நோயுற்ற நிலையிலோ, அல்லது, உடலளவில் குறைகளுடன் வாழும் நிலையிலோ இருக்கும் ஒருவருக்குத் துணையாக, மற்றொருவர் இருப்பது, எவ்வளவு தூரம் ஆறுதலும், ஆற்றலும் தரும் என்பதை சிந்தித்தோம். அதே எண்ணத்தை, இவ்விரு புதுமைகளின் அறிமுக வரிகள் நமக்கு மீண்டும் நினைவுறுத்துகின்றன.

பார்வையற்ற ஒருவரை, மற்றவர்கள் இயேசுவிடம் அழைத்துவந்ததை நம்மால் புரிந்துகொள்ள முடிகிறது. ஆனால், காது கேளாத, பேச்சுத்திறன் குறைந்த ஒருவர், இயேசுவிடம் அவராகவே வந்திருக்கலாமே, அவரை ஏன் மற்றவர்கள் இயேசுவிடம் கொண்டுவரவேண்டும், என்று எண்ணிப்பார்க்கத் தோன்றுகிறது. அவர் அத்தகைய முயற்சியை மேற்கொள்ளாமல் போனதற்கு, சமுதாயம் அவரை எவ்விதம் நடத்தியது என்பது, ஒரு முக்கிய காரணமாக இருந்திருக்கவேண்டும். இந்தக் காட்சி, கேட்கும் திறனும், பேசும் திறனும் இல்லாததால், மனித சமுதாயத்தில் வேதனைகளைச் சந்தித்துவரும் மனிதர்களைப்பற்றி சிந்தித்துப் பார்க்க நம்மைத் தூண்டுகிறது.

நாம் அனைவருமே, கேட்கும் திறனுடன் பிறந்து, அதன் பயனாக, பேசும் திறனையும் வளர்த்துக்கொள்கிறோம். ஒரு சிலர், கேட்கும் திறனின்றி பிறப்பதால், பேசும் திறனையும் வளர்த்துக்கொள்ள இயலாமல் போகிறது.
கேட்கும் திறனற்ற 2 மாதக் குழந்தையொன்று, தன் தாயின் குரலை முதல் முறையாகக் கேட்கும்போது, அக்குழந்தையின் முகத்தில் தோன்றும் புன்னகையும், அழுகையும் அழகான ஒரு காணொளிப் பதிவாக, மூன்று ஆண்டுகளுக்குமுன், சமூக வலைத்தளங்களில் வலம்வந்தது. 2017ம் ஆண்டு அக்டோபர் மாதம், யூடியுப்பில் வெளியான அந்த ஒரு நிமிட 'வீடியோ'வை, இதுவரை 4 கோடிக்கும் அதிகமான மக்கள் கண்டுள்ளனர். கிறிஸ்டி (Christie Keane) என்ற இளம்பெண்ணுக்கு பிறந்த அழகான பெண் குழந்தை சார்லட் (Charlotte), கேட்கும் திறனின்றி பிறந்தாள். இரண்டு மாதங்கள் சென்று, கேட்பதற்கு உதவும் கருவியொன்று, குழந்தையின் காதில் பொருத்தப்பட்டது. அதைத் தொடர்ந்து, குழந்தை சார்லட், தன் தாயின் குரலை முதல்முறை கேட்டதும், மகிழ்வு, அழுகை என்ற உணர்வுகளை வெளிப்படுத்தும் அந்த வீடியோ, காண்போரின் உள்ளத்தைத் தொடுகிறது. குழந்தையின் இதயத்தில் அன்பு அதிர்வுகளை உருவாக்க, தாயின் குரல் மிகவும் முக்கியமாகத் தேவைப்படுகிறது என்பதை, இந்த வீடியோ, தெளிவாகப் பறைசாற்றுகிறது.

கேட்கும் திறனின்றி பிறந்த குழந்தை சார்லட், முதல் இரு மாதங்கள், பசி வந்த வேளையில் அழுதாள்; மற்ற நேரங்களில், வேறு எவ்வித உணர்வையும் வெளிப்படுத்தாமல் வாழ்ந்தாள் என்று, இளம்தாய் கிறிஸ்டி கூறுகிறார். இரண்டு மாதங்களுக்குப்பின், கேட்க உதவும் கருவி பொருத்தப்பட்டு, தாயின் குரலைக் கேட்ட அன்றுதான், தன் குழந்தையின் முகத்தில் புன்சிரிப்பையும், இன்னும் சில உணர்வுகளையும் காணமுடிந்தது என்று, கிறிஸ்டி அவர்கள், ஆனந்த கண்ணீர் வடித்தவண்ணம் கூறினார்.

இந்தக் காணொளியைக் கண்டபோது, புகழ்பெற்ற கத்தோலிக்க இறையியலாளர் Hans Urs von Balthasar அவர்கள், கூறிய ஓர் எண்ணம் மனதில் தோன்றியது. Balthasar அவர்கள் எழுதிய "Love Alone is Credible", அதாவது, "அன்பு ஒன்றே நம்பத்தகுந்தது" என்ற நூலில், இறைவனுக்கும், நமக்கும் இடையே நிலவும் அன்புப் பிணைப்பை, தாய்க்கும், குழந்தைக்கும் இடையே படிப்படியாக உருவாகும் பிணைப்பைக்கொண்டு விளக்குகிறார். "பல நாட்களாக, வாரங்களாக, தாய், தன் குழந்தையைப் பார்த்து புன்னகைத்து வருகிறார். அந்த முயற்சியின் பலனாக, அக்குழந்தை, தாயைப் பார்த்து, பதிலுக்குப் புன்னகை செய்கிறது. தாயின் தொடர் முயற்சிகள், அக்குழந்தையின் மனதில் அன்பைத் தூண்டிவிடுகின்றன."

தனக்குள்ளேயே சுகம் கண்டு, தன் சிறிய உலகத்திற்குள் வாழவிழையும் அக்குழந்தையை, வெளி உலகிற்கு அழைத்துவருவது, தாயின் அன்பு மொழிகள். அந்த மொழி, புரிந்துகொள்ளக்கூடிய சொல்லாகவோ, பாடலாகவோ இருக்கலாம், அல்லது, புரிந்துகொள்ள இயலாத வெறும் அன்புப் பிதற்றல்களாகவும் இருக்கலாம். குழந்தை, தன் வாழ்வில், முதலில் கேட்டு பழகிக்கொள்ளும் மொழி, தாயின் மொழி. எனவேதான், நாம் 'தாய்மொழி' என்ற பதத்தைப் பயன்படுத்துகிறோம். ஒலிவடிவில், தாயிடமிருந்து வரும் அதிர்வுகளை உள்வாங்கி வளரும் குழந்தை, அன்பைச் சுவைத்து வளரும். கேட்கும் திறனின்றி பிறக்கும் குழந்தைகளோ, தாயின் குரலைக் கேட்கமுடியாமல் போவதால், அக்குழந்தையின் வளர்ச்சியிலும் குறை ஏற்படுகின்றது.

நற்செய்தியாளர் மாற்கு அறிமுகம் செய்துவைத்துள்ள இந்த மனிதர், பிறப்பில் கேட்கும் திறனைப் பெற்றிருந்து, அதனை ஏதோ ஒரு சூழலில் இழந்ததால், அந்த அதிர்ச்சியில், அவரது பேசும் திறனிலும் மாற்றங்கள் வந்திருக்க வேண்டும். எனவேதான், அவரை, பேசும் திறனற்றவர் என்று அறிமுகம் செய்யாமல், 'திக்கிப் பேசுபவராக' இருந்தார் என்ற சொற்களில், மாற்கு அறிமுகப்படுத்தியுள்ளார் என்று, ஒரு சில விவிலிய விரிவுரையாளர்கள் கூறுகின்றனர்.

கேட்கும் திறனுடன் பிறந்து, பின்னர் அதனை இழக்கும் குழந்தை, தனக்கு என்ன நிகழ்ந்தது என்பதை அறியாமல், தடுமாறும். அதேவேளையில், அக்குழந்தையைச் சுற்றியுள்ள சமுதாயம், அக்குழந்தையின் உள்ளத்தைக் காயப்படுத்தும் முறையில் நடந்துகொள்வதால், அக்குழந்தை, குழுக்களிலிருந்து, சமுதாயத்திலிருந்து விலகிவாழ கற்றுக்கொள்கிறது. அப்படி வாழ்ந்த ஒருவரை, அவரது உண்மையான நண்பர்கள் அல்லது உறவுகள் இயேசுவிடம் கொண்டு வந்தனர் என்பதை நாம் புரிந்துகொள்கிறோம்.

காது கேளாதவரும் திக்கிப்பேசுபவருமான ஒருவரை, சிலர், இயேசுவிடம் கொண்டு வந்து, அவர்மீது கைவைத்துக் குணமாக்குமாறு அவரை வேண்டிக்கொண்டனர் (மாற்கு 7:32) என்று கூறும் அறிமுக வரிகளில், இஸ்ரயேல் சமுதாயத்தைப்பற்றிய ஒரு விமர்சனமும் வெளியாவதைக் காண்கிறோம். குறையுள்ள அந்த மனிதரை, இயேசுவிடம், மற்றவர்கள் கொண்டு வந்தனரேயன்றி, அம்மனிதர் தானாகவே இயேசுவிடம் வரவில்லை. தன் குறைகளைப் பார்த்து, தன்னை, ஒரு பாவி என்றும், கடவுளின் தண்டனையை அனுபவிப்பவர் என்றும், முத்திரை குத்திய யூத மதப் போதகர்கள் மேல், அவர் வெறுப்பை வளர்த்திருக்கவேண்டும். இயேசுவையும், அத்தகையப் போதகர்களில் ஒருவராக நினைத்து, அவரை அணுக, அவர் தயங்கியிருக்க வேண்டும். தயக்கம், குழப்பம், தன் மீது தனக்கே ஏற்பட்ட வெறுப்பு என்று பல சிறைகளை உருவாக்கி, அவற்றில், தன்னையே பூட்டிக்கொண்டவர், இந்த நோயாளி.

அவருடைய ஒரு சில நண்பர்கள், அல்லது, உறவினர், அவருக்கு நல்லது நடக்க வேண்டும் என்ற எண்ணத்தில், இயேசுவிடம் அவரைக் கொண்டுவந்தனர். முடக்குவாதத்தால் கட்டிலிலேயே முடங்கிப்போன ஒருவரை, அவரது நண்பர்கள், இயேசுவிடம் கொணர்ந்ததை (லூக்கா 5: 18-25) நாம் ஏற்கனவே சிந்தித்தோம். இயேசு போதித்துகொண்டிருந்த வீட்டின் கூரையைப் பிரித்து, அவருடைய நண்பர்கள், முடக்குவாதமுற்ற தங்கள் நண்பனை இயேசுவின் சன்னிதியில் சேர்த்தனர். அவர்களுடைய நம்பிக்கையைக் கண்டு (லூக்.5:20), இயேசு, முடக்குவாதமுற்றவரைக் குணமாக்கினார் என்பதையும் அந்தப் புதுமையின் தேடலில் நாம் புரிந்துகொண்டோம்.

நோயுற்றோரை குணமாக்குவது ஓர் அற்புதம் என்றால், அவர்களை, மனிதர்களாக மதித்து நடத்துவது, வேறொருவகையில் ஓர் அற்புதம்தான். அவர்கள் குணமாகவில்லை எனினும், தாங்களும் மதிப்பிற்குரிய மனிதர்கள் என்ற ஓர் உணர்வை அவர்கள் பெறுவதே, ஓர் அற்புதம்தான்.
தமிழ்நாட்டில், ஒரு கல்லூரியில், இத்தகைய ஓர் அற்புதம், தினம், தினம் நிகழ்ந்தது. போலியோ நோயினால் கால்கள் இரண்டிலும் சக்தி இழந்த ஓர் இளைஞனை, அவரது நண்பர், தினமும், சக்கர நாற்காலியில் தள்ளிக்கொண்டு வருவார். அவர்களுக்கு வகுப்புகள் நடந்த கட்டடத்தில், லிப்ட் வசதி இல்லாததால், இந்த நண்பன், அவரை, குழந்தையைப் போல் இரு கரங்களிலும் தூக்கிக்கொண்டு, இரண்டு மாடிகள் ஏறுவார், இறங்குவார். ஒரு நாள் அல்ல, இரு நாள் அல்ல... இந்த அற்புதம், மூன்று ஆண்டுகள் தொடர்ந்து நடந்தது. அந்த நல்ல உள்ளம் எங்கிருந்தாலும் வாழ்க!

காது கேளாதவரும் திக்கிப்பேசுபவருமான அம்மனிதரைக் குணமாக்க, இயேசு பின்பற்றிய வழிகள், ஒருசில பாடங்களைச் சொல்லித்தருகின்றன. அவற்றை நாம் அடுத்தத் தேடலில் சிந்திப்போம்.