Showing posts with label Bible - Miracles - Synoptics - Luke Gospel - Nain widow 3. Show all posts
Showing posts with label Bible - Miracles - Synoptics - Luke Gospel - Nain widow 3. Show all posts

04 August, 2020

விவிலியத்தேடல்: லூக்கா நற்செய்தி – கைம்பெண்ணுக்கு கருணைப் பரிசு 3

 

2018 United States gun violence protests

https://en.wikipedia.org

விதையாகும் கதைகள் : மறுவாழ்வின் வாயிலாகும் மன்னிப்பு

வளர் இளம் பருவத்தினரான ஜோர்டின் (Jordyn Howe) என்ற இளைஞன், தன் தாயோடும், வளர்ப்புத்தந்தையோடும் வாழ்ந்துவந்தார். தன் வளர்ப்புத்தந்தையிடம் இருந்த துப்பாக்கியை, ஒரு நாள், பள்ளிக்கு எடுத்துச்சென்றார், ஜோர்டின். பள்ளியில், தன் நண்பர்கள் குழுவில், ஜோர்டின் அந்தத் துப்பாக்கியை, பெருமையாகக் காட்டிக் கொண்டிருந்தபோது, அதைத் தவறுதலாகச் சுட்டுவிடவே, அவ்வழியே சென்றுகொண்டிருந்த லூர்தெஸ் (Lourdes) என்ற இளம்பெண், குண்டடிப்பட்டு இறந்தார்.

லூர்தெஸின் தாய், ஏடி (Ady Guzman) அவர்கள், செய்தி கேட்டு, நொறுங்கிப் போனார். இளையவர் ஜோர்டின் மீது வழக்கு நடைபெற்றபோது, ஏடி அவர்களும், நீதி மன்றத்தில் அமர்ந்திருந்தார். வழக்கு முடிந்தது. வளர் இளம் பருவக் கைதிகள் மறு சீரமைப்பு மையத்தில், ஜோர்டின் 3 ஆண்டுகள் தங்கவேண்டுமென்று நீதிபதி தீர்ப்பளித்தார்.

உடனே, இறந்த இளம்பெண்ணின் தாய் ஏடி அவர்கள், நீதி மன்றத்தில் எழுந்துநின்று, ஜோர்டினுக்கு வழங்கப்பட்டுள்ள தண்டனைக் காலத்தைக் குறைக்கும்படி, நீதிபதியிடம் மன்றாடினார். நீதி மன்றத்தில் இருந்தோர், அதிர்ச்சியடைந்தனர். அந்த அன்னையின் வேண்டுகோளுக்கிணங்க, இளைஞன் ஜோர்டினின் தண்டனைக்காலம், 3 ஆண்டுகளிலிருந்து, ஓராண்டாகக் குறைக்கப்பட்டது. நீதிமன்றத்திற்கு வெளியே கூடியிருந்த செய்தியாளர்கள், ஏடி அவர்களிடம், இது குறித்து கேட்டபோது, அவர், தான் எடுத்த முடிவைக்கண்டு, தன் மகள் லூர்தெஸ், மிகவும் மகிழ்ந்திருப்பார் என்று மட்டும் கூறிவிட்டு, அங்கிருந்து சென்றார்.

ஓராண்டு தண்டனைக்காலம் முடிந்து திரும்பிவந்த இளையவர் ஜோர்டினும், லூர்தெஸின் தாய் ஏடி அவர்களும் இணைந்து, பல பள்ளிகளுக்குச் சென்று, மாணவர்களுக்கு உரையாற்றினர். துப்பாக்கிக் கலாச்சாரத்தால் விளையும் துன்பங்களை, தங்கள் சொந்த அனுபவங்களிலிருந்து அவர்கள் பகிர்ந்துகொண்டது, பலரது மனங்களைத் தொட்டது.

மன்னிப்பு, மறுவாழ்வுக்கு, மாறுபட்ட வாழ்வுக்கு, அழைத்துச்செல்லும் வாயில்.

Pope Francis opens St Peter's Holy Door

https://www.bbc.com

லூக்கா நற்செய்தி கைம்பெண்ணுக்கு கருணைப் பரிசு 3

'கருணையின் நற்செய்தி' என்றழைக்கப்படும் லூக்கா நற்செய்தியில், இயேசுவின் மனிதத்தன்மை, மிக அழகாக, ஆழமாகச் சித்திரிக்கப்பட்டுள்ளது என்பதை அறிவோம். நற்செய்தியாளர் லூக்கா, ஓர் ஓவியர் என்பது, மரபுவழிச் செய்தி. ஓவியருக்கே உரிய மென்மையான மனம் கொண்டு, அவர், இயேசுவின் வாழ்வில் வெளிப்பட்ட மென்மையான நேரங்களை அழகுறத் தீட்டியுள்ளார். அவற்றில் ஒன்று, நயீன் ஊர் கைம்பெண்ணின் மகனுக்கு இயேசு உயிர் தந்த புதுமை.

இயேசுவை மட்டுமல்ல, இன்னும் பலரை, புனித லூக்கா, தன் நற்செய்தியில், அழகாக வெளிச்சமிட்டுக் காட்டியிருக்கிறார். குறிப்பாக, யூத சமுதாயத்தால் ஒதுக்கிவைக்கப்பட்ட ஆயக்காரர், சமாரியர், நோயுற்றோர், பெண்கள், சிறப்பாக, கைம்பெண்கள் ஆகியோருக்கு, அவர் உயர்ந்த மதிப்பளித்துள்ளார்.

நற்செய்தியாளர் லூக்கா, இயேசுவின் பணிவாழ்வை விவரிக்கும்போது, மூன்று கைம்பெண்களைப் பற்றி கூறியுள்ளார். நயீன் நகரக் கைம்பெண் (லூக்கா 7), கோவிலில் காணிக்கை செலுத்தியக் கைம்பெண் (லூக்கா 21) என்ற இருவரை, இயேசுவின் பணிவாழ்வில் இடம்பெற்ற இரு நிகழ்வுகளில், நற்செய்தியாளர் லூக்கா  குறிப்பிட்டுள்ளார். நேர்மையற்ற நடுவரும், கைம்பெண்ணும் என்ற உவமை, (லூக்கா 18) லூக்கா நற்செய்தியில் மட்டும் பதிவாகியுள்ள உவமை.

இம்மூன்று கைம்பெண்களின் வழியே, நற்செய்தியாளர் லூக்கா, உன்னதமான எண்ணங்களைப் பதிவுசெய்துள்ளார். நயீன் நகரக் கைம்பெண், தன் வாழ்வில் அனைத்தையும் இழந்துநின்ற வேளையில், அவரைத்தேடி, இறைமகன் இயேசு வருவதாக, லூக்கா சித்திரித்துள்ளார்.

அவரது நற்செய்தியில் இடம்பெறும் இரண்டாவது கைம்பெண், ‘நேர்மையற்ற நடுவரும், கைம்பெண்ணும்என்ற உவமையில் (லூக்கா 18) கூறப்பட்டுள்ள கைம்பெண். தன் வாழ்வில், அனைத்தையும் அநீதியான வழியில் இழந்ததால், ஒரு தார்மீகப் போராட்டத்தில் ஈடுபடுவதுபோல் இவர் சித்திரிக்கப்பட்டுள்ளார். "மனம் தளராமல் எப்பொழுதும் இறைவனிடம் மன்றாடவேண்டும் என்பதற்கு..." (லூக்கா 18:1) இந்தக் கைம்பெண்ணை, இயேசு ஓர் எடுத்துக்காட்டாகக் கூறுகிறார்.

தன் வாழ்வை இறைவனுக்கு முற்றிலும் காணிக்கையாக்கும் கைம்பெண்ணை இயேசு புகழும் நிகழ்வு, லூக்கா நற்செய்தி, 21ம் பிரிவில் இடம்பெற்றுள்ளது. லூக்கா நற்செய்தியை ஆய்வு செய்துள்ள சில அறிஞர்கள் கூறும் ஒரு கருத்து, கவனத்திற்குரியது. 24 பிரிவுகளைக் கொண்ட லூக்கா நற்செய்தியில், இயேசுவின் பணிவாழ்வு, 3ம் பிரிவில் துவங்கி, 21ம் பிரிவில் முடிவடைகிறது. 3ம் பிரிவுக்கு முன், இயேசுவின் பிறப்பு நிகழ்வுகளும், 21ம் பிரிவுக்குப் பின், இயேசுவின் பாடுகள், மற்றும், உயிர்ப்பு நிகழ்வுகளும் பதிவு செய்யப்பட்டுள்ளன.

3ம் பிரிவில், இயேசு, தன் திருமுழுக்குடன் பணிவாழ்வைத் துவக்கும் நேரத்தில், திருமுழுக்கு யோவானைப்பற்றி கூறும் நற்செய்தியாளர் லூக்கா, அவரது பணிவாழ்வின் இறுதியில், 21ம் பிரிவில், காணிக்கை செலுத்தும் கைம்பெண்ணைப்பற்றி கூறியுள்ளார். திருமுழுக்கு யோவானும், காணிக்கை செலுத்தியக் கைம்பெண்ணும், தங்கள் வாழ்வை இறைவனுக்கு முற்றிலும் கையளித்த, உன்னத அடையாளங்கள் என்பதால், இவ்விருவரையும், இயேசுவின் பணிவாழ்வுக்கு, முன்னுரையாகவும், முடிவுரையாகவும், லூக்கா வைத்துள்ளார் என்று, விவிலிய ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டுகின்றனர். இவ்விதம், மூன்று கைம்பெண்கள் வழியாக, லூக்கா, உன்னத கருத்துக்களை தன் நற்செய்தியில் பதித்துள்ளார்.

நயீன் ஊரைச்சேர்ந்த கைம்பெண்ணின் மகனுக்கு இயேசு உயிர்தரும் புதுமையில் நம் தேடலைத் தொடர்வோம். கத்தோலிக்கத் திருஅவையில், இரக்கத்தின் சிறப்பு யூபிலி சிறப்பிக்கப்பட்ட 2016ம் ஆண்டு, ஆகஸ்ட் மாதம், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் வழங்கிய புதன் மறைக்கல்வி உரையில், இந்தப் புதுமையை மையப்படுத்திப் பேசினார். அந்த உரையின் ஒரு சில எண்ணங்களை சென்ற விவிலியத் தேடலில் நாம் நினைவு கூர்ந்தோம். இன்று, அதே மறைக்கல்வி உரையில், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், 'நயீன் நகர வாயிலை' யூபிலி ஆண்டுகளில் திருஅவையில் பயன்படுத்தப்படும் 'புனிதக் கதவு'டன் ஒப்புமைப்படுத்தி, கூறிய அழகான எண்ணங்களை, புரிந்துகொள்ள முயல்வோம்.

யூபிலி ஆண்டுகளில் பயன்படுத்தப்படும் புனிதக் கதவுகளைப்பற்றிய நம் எண்ணங்களை, முதலில் புதுப்பித்துக்கொள்வோம். திருஅவை வரலாற்றில், யூபிலி ஆண்டுகள் சிறப்பிக்கப்பட்ட வேளைகளில், உரோம் நகரில் உள்ள நான்கு பெருங்கோவில்களிலும் நிறுவப்பட்டுள்ள சிறப்பான புனிதக் கதவுகள் திறக்கப்பட்டன. அக்கதவுகள் வழியே நுழைவோர், பாவமன்னிப்பையும், முழுமையான அருள் நலன்களையும் பெறுவர் என்று கூறப்பட்டது. யூபிலி ஆண்டுகளில் மட்டும் திறக்கப்படும் இந்தப் புனிதக் கதவுகள், ஏனைய ஆண்டுகளில், மூடப்பட்டு கிடக்கும். இந்த நான்கு பெருங்கோவில்கள் அன்றி, பின்னர், ஒரு சில முக்கியமான திருத்தலங்களின் ஆலயங்களிலும், புனிதக் கதவுகள் வரையறுக்கப்பட்டன.

2016ம் ஆண்டு, இரக்கத்தின் சிறப்பு யூபிலி கொண்டாடப்பட்ட வேளையில், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், உலகெங்கிலும் உள்ள ஒவ்வொரு மறைமாவட்டத்திலும், குறிக்கப்பட்ட ஆலயங்களில், புனிதக் கதவுகள் திறக்கப்படும்வண்ணம் ஒரு புதிய வழிமுறையை அறிவித்தார். அதுமட்டுமல்லாமல், பிறரன்புப் பணிகளில் ஈடுபட்டுள்ள நிறுவனங்களில் உள்ள சிற்றாலயங்களிலும், சிறைச்சாலைகளில் உள்ள சிற்றாலயங்களிலும், புனிதக் கதவுகள் திறக்கப்படுவதற்கு, திருத்தந்தை உத்தரவு அளித்தார்.

திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இரக்கத்தின் சிறப்பு யூபிலி ஆண்டில், புனிதக் கதவை, இரக்கத்தின் கதவு என்று அடிக்கடி குறிப்பிட்டு வந்தார். ஒவ்வொரு புனிதக் கதவும் திறக்கப்படும் வேளையில், அதன் வழியே, இறைவனின் இரக்கம் மக்களை நோக்கி பாய்ந்துவரும் என்பதை அவர் நினைவுறுத்தி வந்தார். இந்தக் கருத்தை வலியுறுத்தும்வண்ணம், நயீன் நகர வாயில் அருகே, இயேசுவின் இரக்கம் வெளிப்பட்டதால், அந்த நகரத்தின் வாயிலை, புனிதக் கதவுடன் ஒப்பிட்டுப் பேசினார்:

"இந்த யூபிலியின்போது, திருப்பயணிகள், புனிதக் கதவை, இரக்கத்தின் கதவை கடந்து செல்லும்போது, நயீன் நகர வாயிலில் நிகழ்ந்ததை (லூக்கா 7:11-17) நினைவில் கொள்வது நல்லது. கண்ணீரோடு தன்னைக் கடந்துசென்ற தாயை இயேசு கண்டதும், அந்தத் தாய், அவரது உள்ளத்திற்குள் நுழைந்துவிட்டார்! ஒவ்வொருவரும் புனிதக் கதவருகே செல்லும்போது, அவரவர் வாழ்வைச் சுமந்து செல்கிறோம். அந்த வாழ்வின் மகிழ்வுகள், துயரங்கள், திட்டங்கள், தோல்விகள், ஐயங்கள், அச்சங்கள் அனைத்தையும், இறைவனின் கருணைக்குமுன் சமர்பிக்கச் செல்கிறோம். புனிதக் கதவருகே, ஆண்டவர், நம் ஒவ்வொருவரையும் சந்திக்க வருகிறார். 'அழாதீர்' (லூக்கா 7:13) என்ற ஆறுதல்தரும் சொல்லை, நம் ஒவ்வொருவரிடமும் கூறுகிறார்.

மனித குலத்தின் வலியும், கடவுளின் கருணையும் சந்திக்கும் கதவு இது. இதை நாம் எப்போதும் நினைவில் கொள்வோம். இக்கதவை நாம் கடந்து, இறைவனிடம் செல்லும்போது, நயீன் நகர இளைஞனிடம் சொன்னதுபோல், 'நான் உனக்குச் சொல்கிறேன், எழுந்திடு' (லூக்கா 7:14) என்று, நம் அனைவரிடமும் இறைவன் சொல்கிறார்.

எழுந்து நிற்பதெற்கென்று இறைவன் நம்மைப் படைத்தார். 'ஆனால், நான் அடிக்கடி வீழ்கிறேனே!' என்று நாம் நினைக்கலாம். இயேசு நம்மிடம் எப்போதும் சொல்வது இதுதான்: 'எழுந்திடு! முன்னே செல்!' நாம் புனிதக் கதவைக் கடந்து செல்லும்போது, இயேசு கூறும் 'எழுந்திடு' என்ற கட்டளைக்குச் செவிமடுப்போம். அந்தச் சொல் நம்மை, சாவிலிருந்து வாழ்வுக்கு அழைத்துச்செல்லும்"

இவ்வாறு, நயீன் நகர வாயிலையும், புனிதக் கதவையும் இணைத்து, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் வழங்கிய எண்ணங்கள், அவர் அன்று வழங்கிய புதன் மறைக்கல்வி உரையின் சிகரமாக அமைந்தன.

கடவுளின் கருணை, என்றும், எப்போதும், நம்மைத் தேடிவருகிறது, அதை அணுகிச்செல்ல நாம்தான் தயங்குகிறோம் என்பது, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், அடிக்கடி கூறிவரும் மந்திரம் என்பதை அனைவரும் அறிவோம். இந்த அன்பு மந்திரத்தின் உட்பொருளை, புனிதக் கதவு என்ற எண்ணத்திலும் வெளிப்படுத்த விரும்பினார், திருத்தந்தை. எனவே, புனிதக் கதவை நாடி வர இயலாதவர்களை, புனிதக் கதவு தேடிவரும் என்பதை, இரக்கத்தின் சிறப்பு யூபிலி ஆண்டிற்கென வெளியிட்ட மடல்களில், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் கூறியுள்ளார். உடல்நலமின்றி மருத்துவமனைகளில் இருப்போர், வயதில் முதிர்ந்தோர், சிறைகளில் அடைபட்டிருப்போர் ஆகியோர் வாழும் இடங்களில், புனிதக் கதவுகள் நிறுவப்படவேண்டும் என்று, திருத்தந்தை கேட்டுக்கொண்டார்.

மேலும், இரக்கத்தின் சிறப்பு யூபிலி சிறப்பிக்கப்பட்ட 2016ம் ஆண்டு, ஜூலை மாத இறுதி வாரம், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், உலக இளையோர் நாள் நிகழ்வுகளில் கலந்துகொள்ள, போலந்து நாட்டிற்குச் சென்றபோது, அங்கு, 'புனிதக் கதவு' என்ற எண்ணத்திற்கு, மற்றொரு புதிய கண்ணோட்டம் தரப்பட்டதை நாம் உணர்ந்தோம்.

போலந்து நாட்டின் கிரக்கோவ் நகருக்கருகே, பல இலட்சம் இளையோர் கலந்துகொள்ளும் வகையில், 'இரக்கத்தின் திறந்தவெளி அரங்கம்' ஒன்று உருவாக்கப்பட்டிருந்தது. இந்த திறந்த வெளி அரங்கத்திற்குள் நுழைபவர்கள், இறைவனின் இரக்கத்திற்குள் நுழையவேண்டும் என்ற கருத்துடன், இவ்வரங்கத்தில், புனிதக் கதவொன்று, தற்காலிகமாக அமைக்கப்பட்டிருந்தது. இளையோர் நாள் நிகழ்வுகளின் முக்கிய நிகழ்வான திருவிழிப்பு வழிபாட்டில் கலந்துகொள்ள அங்கு சென்ற திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், உலகின் பல்வேறு நாடுகளிலிருந்து தெரிவு செய்யப்பட்டிருந்த இளையோர் சிலருடன், கரங்களைக் கோர்த்தபடி, அப்புனிதக் கதவைக் கடந்துசென்றார்.

ஆலயங்கள், பிறரன்பு இல்லங்கள், சிறைச்சாலைகள், மருத்துவமனைகள், முதியோர் இல்லங்கள் ஆகியவற்றில் மட்டுமல்ல, நம்பிக்கையுடன் மக்கள் கூடிவரும் இடங்கள் அனைத்திலும் புனிதக் கதவுகள், இரக்கத்தின் கதவுகள் திறந்திருக்கும் என்பதை, 2016ம் ஆண்டின் உலக இளையோர் நாள் நிகழ்வுகள், உலகிற்குப் பறைசாற்றின.

நயீன் நகர வாயிலையும், புனிதக் கதவையும் இணைத்து, திருத்தந்தை வழங்கிய ஆழமானக் கருத்துக்கள், நம்மைச் சுற்றி புனிதக் கதவுகள் எப்போதும் திறந்துள்ளன என்ற ஆறுதலைத் தருகின்றன. இப்புதுமையை, இயேசு நிகழ்த்திய முறையையும், உயிர்பெற்ற இளைஞனை தாயிடம் ஒப்படைத்த நிகழ்வையும், அடுத்தத் தேடலில் சிந்திப்போம்.