Showing posts with label Bible - Synoptics - Common Miracles - Gerasene demoniac 3. Show all posts
Showing posts with label Bible - Synoptics - Common Miracles - Gerasene demoniac 3. Show all posts

02 July, 2019

விவிலியத்தேடல்: ஒத்தமை நற்செய்தி – கல்லறை மனிதரைக் காத்த இறைவன் - 3


Straw Bale Homes and Passive Solar Design

பூமியில் புதுமை – புவி வெப்பமயமாதலுக்கு நம் வீடுகளும் காரணம்

புவி வெப்பமயமாதல், மற்றும் தண்ணீர் தட்டுப்பாடு ஆகிய பிரச்சனைகளுக்கு, நாம் கட்டும் வீடுகளும் ஒரு காரணம் என்ற புதிரானக் கூற்றுடன் துவங்கி, வியக்க வைக்கும் மாற்று வீடுகள் குறித்து, நியாஸ் அகமது என்பவர், பிபிசி தமிழ் இணையத்தில், வழங்கியுள்ள விளக்கங்கள் நம்மைச் சிந்திக்க வைக்கின்றன. அவர் வழங்கிய எண்ணங்களில் சில இதோ:
வீடு கட்ட நாம் பயன்படுத்தும் சிமெண்ட், மற்றும், செங்கற்கள், அதிக அளவில் கரியமில வாயுவை வெளிப்படுத்துவதால், நாம் வாழும் வீடுகள், புவி வெப்பமயமாதலுக்கு ஒரு வகையில் காரணமாகின்றன என்கிறார்கள், சுழலியலாளர்கள்.
உலகளவில் உற்பத்தியாகும் சிமெண்ட் மற்றும் செங்கற்கள் ஆசியாவில்தான், அதிகளவு பயன்படுத்தப்படுகின்றன. செங்கல் சூளைகளுக்காக அதிகளவில் மரங்கள் வெட்டப்படுகின்றன.
சிமெண்ட், செங்கல் இல்லாமல், அல்லது, அவற்றை குறைவாக பயன்படுத்தி, வீடுகளைக் கட்டும் முயற்சிகள் உலகெங்கும் நடந்துவருகின்றன. சூழலியல் செயற்பாட்டாளர், பியூஷ் மனுஷ் அவர்கள், "வீடுகள் எப்படி கட்ட வேண்டுமென்பதை நாம் பழங்குடியினரிடம்தான் கற்றுக்கொள்ள வேண்டும். இயற்கையாக என்ன பொருள் கிடைக்கிறதோ, அதனைக் கொண்டு மட்டுமே அவர்கள் வீடு கட்டுவார்கள். காற்றோட்டமான, வெளிச்சம் புகும் வீடுகள் அவர்களுடையது" என்று கூறுகிறார்.
நகரத்தில் அத்தகைய வீடுகளை கட்டுவதில் சில இடர்பாடுகள் உள்ளன என்று கூறும் பியூஷ் மனுஷ் அவர்கள், சிமெண்ட், மண், செங்கல், இரும்புகளை பயன்படுத்தாத மாற்று வீடுகள் இப்போதைய உடனடி தேவை என்றும், இதற்குத் தேவையான தொழில்நுட்பத்தில், அரசு அதிக அளவு முதலீடு செய்யவேண்டும் என்றும் வலியுறுத்துகிறார்.
"வீடு என்பது வாழ்க்கை முறையைச் சார்ந்தது. எப்படிப்பட்ட வாழ்க்கையை வாழ்கிறோம், நம் அடுத்த தலைமுறைக்கு என்ன விட்டுச் செல்கிறோம் என்பதற்கான சாட்சி, நாம் வாழும் வீடுகள். அவை, இயற்கையுடன் இயைந்ததாக இருக்கவேண்டும்" என்கிறார் கேரளாவின் வயநாடு பகுதியை சேர்ந்த சிவராஜ். மூங்கில் பயன்பாட்டை பரவலாக்க 'உறவு' எனும் அமைப்பை நடந்தி வரும் சிவராஜ் அவர்கள், மூங்கில் வீடுகள் கட்டுவது தொடர்பாக பயிற்சியும் அளிக்கிறார்.
தான் வாழும் பகுதியில் என்ன மூலப் பொருட்கள் கிடைக்கிறதோ, அவற்றைக் கொண்டு கட்டுவதுதான் நிலத்திற்கு ஏற்ற வீடு என்கிறார், தருமபுரியைச் சேர்ந்த செயற்பாட்டாளர் சுரேஷ்.
களிமண், அவர் வாழும் பகுதியில் கிடைக்கும் கற்கள், சுடாத செங்கற்கள் கொண்டு வீடு கட்டியிருக்கும் சுரேஷ் அவர்கள், "காற்று, வெளிச்சம் அதிகம் புகுவதாக வீடுகள் இருக்கவேண்டும். இயற்கை வழங்கும் வெளிச்சத்தைப் பயன்படுத்திக்கொண்டாலே, மின்சார பயன்பாட்டைத் தவிர்க்கலாம். மின்சார பயன்பாடு குறைந்தால், நிலக்கரி பயன்பாடு குறையும். பருவநிலை மாற்றத்தில் அது செலுத்தும் தாக்கமும் குறையும்" என்கிறார். (பிபிசி தமிழ்)

The Gerasene Demoniac by Sebastian Bourdon (1653)

ஒத்தமை நற்செய்தி கல்லறை மனிதரைக் காத்த இறைவன் - 3

பேய் பிடித்த மனிதரை, கெரசேனர் பகுதியில், இயேசு குணமாக்கிய புதுமையில் நம் தேடல் பயணம் தொடர்கிறது. அம்மனிதரை, நற்செய்தியாளர் மாற்கு, அறிமுகம் செய்து வைக்கும் வரிகளில் கூறப்பட்ட "கல்லறைகளே அம்மனிதரின் உறைவிடம்" என்ற சொற்கள், நம் தேடலை, சென்ற வாரம் வழிநடத்தின. அம்மனிதர் கல்லறைகளில் தன்னைத் தானே வதைத்துக்கொண்டு வாழ்ந்த வாழ்வை நற்செய்தியாளர் மாற்கு, இவ்வாறு விவரிக்கிறார்:
மாற்கு நற்செய்தி 5: 3-5
அவரை எவராலும் ஒருபொழுதும் சங்கிலியால்கூடக் கட்டி வைக்க முடியவில்லை. ஏனெனில், அவரைப் பல முறை விலங்குகளாலும் சங்கிலிகளாலும் கட்டியிருந்தும் அவர் சங்கிலிகளை உடைத்து விலங்குகளைத் தகர்த்து எறிந்தார். எவராலும் அவரை அடக்க இயலவில்லை. அவர் இரவு பகலாய் எந்நேரமும் கல்லறைகளிலும் மலைகளிலும் கூச்சலிட்டுக் கொண்டிருந்தார்; தம்மையே கற்களால் காயப்படுத்தி வந்தார்.

'பேய் பிடித்தல்' அல்லது, 'தீய ஆவியால் ஆட்கொள்ளப்படுதல்' என்ற சொற்றொடர்களை நாம் பயன்படுத்துகிறோம். அத்தகைய நிலையை, ஓரிரவில், அல்லது, ஒரே நாளில், யாரும் அடைவதில்லை என்பதை நாம் அறிவோம். சிறிது, சிறிதாக, ஒருவரின் எண்ணங்கள், மனம், ஆன்மா ஆகியவற்றை, தீய ஆவி, தன் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவருகிறது.
'பேய்', அல்லது, 'தீய ஆவி', மனிதர்கள் நடுவே மேற்கொள்ளும் முயற்சிகளை விவரிக்கும் ஒரு நூல் 1942ம் ஆண்டு வெளியானது. 'The Screwtape Letters' என்ற பெயருடன் வெளியான அந்நூலை உருவாக்கியவர், ஆங்கில இலக்கியத்திலும், இறையியலிலும் ஆழ்ந்த புலமை பெற்ற C.S.Lewis அவர்கள். மக்களை தன் கட்டுப்பாட்டிற்குள் கொணர்வதில் அனுபவம் மிகுந்த Screwtape என்ற வயது முதிர்ந்த பேய், தன் உறவினரான, Wormwood என்ற இளம் பேய்க்கு எழுதும் கடிதங்களாக, இந்நூல் உருவாக்கப்பட்டுள்ளது.

தனி மனிதருக்குள் எவ்விதம் இடம்பிடிப்பது, பிடித்த இடத்தை எவ்விதம் தக்கவைத்துக் கொள்வது, பேய்க்கும், கடவுளுக்கும் இடையே எழும் போட்டிகளை எவ்விதம் சமாளிப்பது என்ற பல கருத்துக்கள், 31 கடிதங்களாக, இந்நூலில் இடம்பெற்றுள்ளன. கடவுள் நம்பிக்கையற்ற ஒருவரைக் குறித்து தன் முதல் கடிதத்தில், Screwtape எழுதும் எண்ணங்கள் இதோ:
"மனிதர்கள் சாதாரண விடயங்களுக்கு எவ்விதம் எளிதில் அடிமையாகின்றனர் என்பது உனக்குத் தெரியாது. ஓர் எடுத்துக்காட்டுடன் விளக்குகிறேன். என்னுடைய நோயாளிகளில் ஒருவர், பிரித்தானிய அருங்காட்சியகத்தில் பணிபுரிந்தவர், கடவுள் மறுப்புக் கொள்கையை மிகத் தீவிரமாகப் பின்பற்றியவர். ஒருநாள், அவர், அருங்காட்சியகத்தில் எதையோ வாசித்துக் கொண்டிருந்தபோது, அவரது எண்ணங்கள், தவறான வழியில் செல்வதை நான் உணர்ந்தேன். என்னுடைய 20 ஆண்டு முயற்சிகள் முடிவுக்கு வருவதைப்போல் தெரிந்தது. அந்நேரத்தில், அவருடைய எண்ணங்கள் தவறு என்ற விவாதத்தை அவருடன் மேற்கொள்வதற்கு நான் தயாராக இல்லை. அதற்கு மாறாக, அவர், மதிய உணவுக்குச் செல்லும் நேரம் வந்துவிட்டது என்பதை மட்டும் அவருக்கு உணர்த்தினேன். அவ்வேளையில், நம் எதிரியான கடவுளும் அங்கிருந்தார். அவர், அம்மனிதரிடம், தன் சிந்தனைகளைத் தொடர்வது, மதிய உணவைவிட முக்கியம் என்பதை உணர்த்த முயன்றார். நானும் விடாமல், அம்மனிதரிடம், மதிய உணவை முடித்தபின் அவர் தன் சிந்தனைகளைத் தொடரலாம் என்று திரும்பத் திரும்பக் கூறி, இறுதியில் வெற்றியடைந்தேன்" என்று கூறும் வயது முதிர்ந்த Screwtape பேய், மதிய உணவுக்குச் சென்றவர் மனதில், அவரது சிந்தனைத் தொடரைச் சிதறடிக்கும் வேறு பல 'சாதாரண' எண்ணங்களைப் புகுத்தியதையும் இம்மடலில் குறிப்பிட்டுள்ளார். 'சாதாரண விடயங்களை' மனிதர் மனங்களில் எவ்வாறு புகுத்துவது என்பது, பேய்கள் கற்றுக்கொள்ள வேண்டிய ஒரு முக்கியக் கலை என்று இந்நூலின் முதல் மடலில் கூறப்பட்டுள்ளது.

மனித எண்ணங்களை, மனதை, உன்னத சிந்தனைகளிலிருந்து திசை திருப்ப, 'சாதாரண' விடயங்களால் உள்ளங்களை நிறைத்துவிடும் பேய்களின் தந்திரங்களுக்கு நாம் அனைவருமே பலியாகிவிடுகிறோம். சில வேளைகளில், 'சாதாரண விடயங்கள்' வழியே நம் உள்ளங்களில் குடியேறும் தீய ஆவிகள், தொடர்ந்து, பல தவறான, தீய எண்ணங்களையும் 'சாதாரண' விடயங்களாக மாற்றிவிடுகின்றன. அவ்வேளைகளில், இறைவன் தூய ஆவியார் வழியே வழங்கும் எண்ணங்களுக்கு இடம் தராமல், இறைவனை விட மேலாக சிந்திக்க நம்மால் கூடும் என்ற மமதையில், நம் சிந்திக்கும் சக்தி மீது அதிக நம்பிக்கை கொள்கிறோம். உண்மையில், இதுவும், தீய ஆவியின் தந்திரங்கள் என்பதைப் புரிந்துகொள்ளாமல், அதன் ஆலோசனைகளைத் தொடர்ந்தால், விரைவில், பல பேய்கள் நமக்குள் குடியேறிவிடும்.

நாம் தொடர்ந்து கவனமாக இல்லாவிடில், நம் உள்ளங்களில் தீய ஆவிகள் கூட்டுக் குடித்தனம் நடத்தும் என்பதை, இயேசு, ஓர் எச்சரிக்கையாக விடுத்துள்ளார்:
லூக்கா 11: 14-15
ஒரு நாள் இயேசு பேச்சிழந்த ஒருவரிடமிருந்து பேயை ஓட்டினார். பேய் வெளியேறவே, பேச்சற்ற அவர் பேசினார். கூட்டத்தினர் வியந்து நின்றனர். அவர்களுள் சிலர், "பேய்களின் தலைவனாகிய பெயல்செபூலைக் கொண்டே இவன் பேய்களை ஓட்டுகிறான்" என்றனர்.
பேய்களின் சக்தியால் செயலாற்றுகிறார் என்று குறை கூறியவர்களுடன் மேற்கொண்ட ஓர் உரையாடலில், இயேசு பின்வரும் எச்சரிக்கையை மக்களுக்கு வழங்கினார்:
லூக்கா 11: 24-26
இயேசு அவர்களை நோக்கி, "ஒருவரைவிட்டு வெளியேறுகின்ற தீய ஆவி வறண்ட இடங்களில் அலைந்து திரிந்து இளைப்பாற இடம்தேடும். இடம் கண்டுபிடிக்க முடியாமல், ‘நான் விட்டுவந்த எனது வீட்டுக்குத் திரும்பிப் போவேன் எனச் சொல்லும். திரும்பி வந்து அவ்வீடு கூட்டி அழகு படுத்தப்பட்டிருப்பதைக் காணும். மீண்டும் சென்று தன்னைவிடப் பொல்லாத வேறு ஏழு ஆவிகளை அழைத்து வந்து அவருள் புகுந்து அங்கே குடியிருக்கும். அவருடைய பின்னைய நிலைமை முன்னைய நிலைமையை விடக் கேடுள்ளதாகும்" என்று கூறினார்.
இதே நிகழ்வையும், இதே எச்சரிக்கையையும் தன் நற்செய்தியில் பதிவு செய்யும் மத்தேயு, இறுதியில், "இத்தலைமுறைக்கும் இவ்வாறே நிகழும்" (மத்தேயு 12:45) என்று, இயேசு விடுக்கும் ஒரு கூடுதல் எச்சரிக்கையை இணைத்துள்ளார்.

இயேசு, தான் வாழ்ந்த காலத்தவருக்கு மட்டுமல்ல, ஒவ்வோரு தலைமுறைக்கும் இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளார். இவ்வெச்சரிக்கையைக் கேட்கும்போது, இன்றைய தலைமுறையை ஆட்டிப்படைக்கும் தீய ஆவிகளை எண்ணிப்பார்க்க நாம் அழைக்கப்படுகிறோம். ஆனால், அவை தீய ஆவிகள் என்பதையும் அறிய முடியாதவண்ணம், பல்வேறு வேடங்களில் நம்மை அடைகின்றன. இதனை, புனித பவுல் அடியார் கொரிந்தியருக்கு எழுதிய 2ம் திருமுகத்தில் ஓர் எச்சரிக்கையாக விடுக்கிறார்:
2 கொரி. 11: 12-15
எங்களைப் போன்று பணியாற்றுவதாகக் காட்டித் தம் பணியில் பெருமையடைய சிலர் வாய்ப்புத் தேடுகின்றனர்... இத்தகையோர் போலித் திருத்தூதர்; வஞ்சக வேலையாள்கள்; கிறிஸ்துவின் திருத்தூதராக நடிப்பவர்கள். இதில் வியப்பு என்ன? சாத்தான் கூட ஒளியைச் சார்ந்த தூதனாக நடிக்கிறானே? ஆகவே அவனுடைய தொண்டர்கள் கடவுளுக்கு ஏற்புடையவர்களாக நடிப்பதில் வியப்பு ஒன்றுமில்லை.

ஒளியின் தூதனாக தோற்றமளிக்கும் சாத்தானைக் குறித்து பேசும் சில புனிதர்கள், சாத்தான், ஒளியின் தூதனாக நம் உள்ளங்களில் நுழைந்தாலும், அது, நம்மை விட்டு பிரிந்துசெல்லும் வேளையிலாவது, அதன் வாலைக்கொண்டு, அதன் உண்மை அடையாளத்தைக் கண்டுகொள்ள வேண்டும், இல்லையெனில் நமக்கு அது, ஆன்மீக ஆபத்தாக முடியும் என்ற எச்சரிக்கையை வழங்கியுள்ளனர்.

தீய ஆவிகளால் வதைக்கப்பட்டு கல்லைறைகளில் வாழ்ந்து வந்த மனிதர், இயேசுவைச் சந்திக்கிறார். தீய ஆவிகளால் ஆட்டிப்படைக்கப்படும் ஒருவரை வாழ்க்கையில் சந்தித்தபோதெல்லாம் அந்த ஆளைவிட்டு, அந்த இடத்தை விட்டு தூரமாய் சென்றுவிட வேண்டும் என்ற எண்ணமே நம் மனதில் மேலோங்கி இருக்கும்.
பொதுவாகவே, தீய சக்தி எந்த வடிவத்தில் வந்தாலும் அந்த சக்திக்கு முன் நமது முதல் பதில்? ஓட்டம், அந்த இடத்தை விட்டு விலகுதல். துஷ்டனைக் கண்டால் தூர விலகு என்று, சிறுவயது முதல் சொல்லித் தரப்படும் பழமொழி, தப்பித்துச் செல்லும் வழியைக் காட்டுகிறது. தீய சக்தியைச் சந்தித்ததும், நம் விசுவாசம் விடைபெற்று போய்விடுகிறது. தீய சக்திகளுக்கு முன்னால் துணிந்து நிற்கமுடியாமல் பின் வாங்குவது, அந்த சக்திகளுக்கு நாம் தரும் முதல் வெற்றி.

தீய சக்தியை இயேசு சந்தித்தபோது, அவருடைய பதில் என்ன என்பதை நம் அடுத்தத் தேடலில் சிந்திப்போம்.