Showing posts with label Bible - Synoptics - Common Miracles - Storm and waves 3. Show all posts
Showing posts with label Bible - Synoptics - Common Miracles - Storm and waves 3. Show all posts

11 June, 2019

விவிலியத்தேடல் : ஒத்தமை நற்செய்தி - கடலும், காற்றும், அடிபணிய... 3


Clean up expedition: Everest Summiteers Association

பூமியில் புதுமை – குப்பையைப்பற்றிய தெளிவு தேவை

துணிப்பை பிரசாரகர் என்ற புனைப்பெயருடன் இந்து தமிழ் திசை இணைய இதழில் எழுதிவரும் கிருஷ்ணன் அவர்கள், நாம் தூக்கியெறியும் குப்பையைக் குறித்து பதிவு செய்துள்ள ஒரு கட்டுரையைத் தழுவி எழுந்த சில எண்ணங்கள்...
குப்பையை எங்கே கொட்டுவது? - யாராவது ஒருவரை நிறுத்தி, இந்தக் கேள்வியைக் கேட்டால்... இதெல்லாம் ஒரு கேள்வியா, சாலையின் ஓரத்தில் எங்கு குப்பை சேர்ந்துள்ளதோ, அங்கு கொட்டலாம். குப்பைத் தொட்டியில் கொட்டலாம். வீட்டுக்குப் பக்கத்தில் ஏதாவது காலி மனையில் கொட்டலாம். குளங்களிலோ, ஆற்றிலோ கொட்டலாம். ஊருக்குள் ஓடும், அல்லது தேங்கிக்கிடக்கும் சாக்கடையில் கொட்டலாம்... என்று பல பதில்கள் எழும். நம் கையையும், வீட்டையும் விட்டு குப்பை ஒழிந்தால் போதும் என்பதே, நம்மிடையே பரவலாக காணப்படும் மனநிலை. நாம் அக்கறையின்றி எறியும் குப்பை, நாம் வாழும் சூழலுக்கே பிரச்சனையாக மாறுகிறது.
உலக அதிசயங்களில் ஒன்றாக, இந்தியாவின் பெருமையாக விளங்குவது, எவரெஸ்ட் சிகரம். அச்சிகரத்தை அடைவதற்குச் செல்லும் மனிதர்கள், வழியில் தூக்கியெறியும் குப்பைகளும், மனிதக் கழிவுகளும் இமயமலைப் பகுதியையே ஒரு பெரும் குப்பை மலையாக மாற்றிவருகிறது என்ற கவலை எழுந்துள்ளது. அண்மையில், நேபாள அரசு, இமயமலையில் மேற்கொண்ட ஒரு முயற்சியால், 12 டன் கழிவுகளும், நான்கு சடலங்களும் அகற்றப்பட்டன என்று, சென்ற வாரச் செய்திகள் கூறியுள்ளன.
நாம் தூக்கியெறியும் குப்பை, மக்கக்கூடிய குப்பையாக இருந்தால், பிரச்சனைகள் எழாது. ஆனால், நாம் தூக்கியெறியும் குப்பையில், ஞெகிழியும், நச்சு கலந்த வேதியியல் பொருள்களும் உள்ளன. எனவே, குப்பையைப்பற்றிய தெளிவு, நமக்கும், நம் சந்ததியருக்கும் பெரும் உதவியாக இருக்கும். நாம் தூக்கியெறியும் குப்பையில், கீழ்கண்ட பிரிவுகள் உள்ளன:
மக்கும்தன்மை கொண்ட குப்பை - காய்கறிக் கழிவுகள், உணவு, பழம், இலைகள்...
மறுசுழற்சி செய்யக்கூடிய குப்பை - காகிதம், கண்ணாடி, உலோகங்கள், ஒரு சில வகையான ஞெகிழிப் பொருள்கள்
நச்சுத்தன்மை கொண்ட குப்பை - மருந்துகள், வேதிப்பொருள்கள்
மக்கும்தன்மை கொண்ட குப்பையை, மண்ணுக்கு உரமாக்கலாம்; மறுசுழற்சி செய்யக்கூடியப் பொருள்களை, மீண்டும் பயன்படும் பொருள்களாக்கிவிடலாம். நச்சுத்தன்மை கொண்ட பொருள்களின் நச்சுத்தன்மையை நீக்கியபின், அவற்றை மறுசுழற்சி செய்யலாம். இவை எதிலும் சேராத ஒரு சில பொருள்களையே நாம் தூக்கியெறிய வேண்டும். ஒவ்வொருவரும் பொறுப்புடன் குப்பையை இவ்வாறு கையாண்டால், நம் தெருக்களில் சேரும் குப்பை, நான்கில் ஒரு பங்காகக் குறையும்; நம் நல வாழ்வோ, நான்கு மடங்காக உயரும். (இந்து தமிழ் திசை)

Jesus calms the storm

ஒத்தமை நற்செய்தி - கடலும், காற்றும், அடிபணிய... 3

ஜூன் 9, கடந்த ஞாயிறு, நாம் கொண்டாடிய தூய ஆவியாரின் வருகைப் பெருவிழாவை, திருஅவை என்ற குழந்தையின் பிறந்தநாளாகவும் கொண்டாடினோம். குழந்தைப் பிறப்பு என்பது, பொதுவாக, மகிழ்வைக் கொணரும் தருணம். ஆனால், உலகில் பிறக்கும் குழந்தைகள் பலருக்கு, தங்கள் பிறந்த நாளையோ, குழந்தைப் பருவத்தையோ மகிழ்வுடன் கொண்டாட இயலாமல் போகிறது. தங்கள் மகிழ்வைத் தொலைத்த குழந்தைகளை எண்ணிப்பார்க்க, ஜூன் 12, இப்புதனன்று நமக்கு அழைப்பு விடப்பட்டுள்ளது. ஜூன் 12, குழந்தைத் தொழிலை எதிர்க்கும் உலக நாள் கடைபிடிக்கப்படுகிறது. இந்நாளில், நாம் மேற்கொள்ளும் விவிலியத்தேடலில், இயேசு, புயலையும், கடலையும் அடக்கிய புதுமையைச் சிந்திக்க வந்திருப்பது, குழந்தைத் தொழிலாளர்களின் வாழ்வில் வீசும் புயல்களை சிந்திக்க நமக்குக் கிடைத்திருக்கும் கூடுதலான அழைப்பு.

ILO என்றழைக்கப்படும் அகில உலகத் தொழில் நிறுவனம் (International Labour Organisation) ஜூன் 12ம் தேதியை, குழந்தைத் தொழிலை எதிர்க்கும் உலக நாளாக, 2002ம் ஆண்டு அறிவித்தது. மனித வரலாற்றின் ஆரம்பத்திலிருந்தே, குழந்தைகள், குடும்பத்தின் பாரம்பரியத் தொழிலில் ஈடுபடுத்தப்பட்டனர். இது, குழந்தைகள் மேல் சுமத்தப்பட்டத் தொழில் அல்ல. அவரவர் குடும்பத் தொழிலைக் கற்பதே ஒரு கல்வி என்றுகூட சமாதானங்கள் சொல்லப்பட்டன.
தொழில் புரட்சி வந்தபின், அந்தப் புரட்சிக்கு அடித்தளமாக உருவாக்கப்பட்ட இயந்திரங்கள், மனிதர்களை விட முக்கியத்துவம் பெற்றன. அந்த இயந்திரங்களை தொடர்ந்து இயக்குவதற்கு, பெரியவர், சிறியவர் என்று, எல்லாரும், 24 மணி நேரமும், சுழற்சி முறையில், வேலை செய்யவேண்டிய நிர்ப்பந்தம் உருவானது. சிறுவர்கள், தொழிற்சாலைகளில், ஆபத்தானச் சூழல்களில் பணிக்கு அமர்த்தப்பட்டனர். அவர்களில் பலர், அந்த இராட்சத இயந்திரங்களுடன் மேற்கொண்ட போராட்டத்தில், உடல் உறுப்புக்களை இழந்தனர், பல வேளைகளில், உயிரையும் இழந்தனர்.
சிறுமிகள், பெரும் செல்வந்தர்களின் வீடுகளில் பணிக்கு அமர்த்தப்பட்டனர். இரவும் பகலும் தொடர்ந்து உழைக்கவேண்டிய கட்டாயம் இச்சிறுமிகளுக்கு. இவர்களில் பலர், அச்செல்வந்தர்களின் உடல் பசியை, அவர்களுக்குப் பரிமாறும் உணவால் மட்டுமல்ல, தங்கள் உடலாலும் தீர்க்க வேண்டிய கொடுமைகள், இந்த மாளிகைகளில் நிகழ்ந்தன.

இந்த அவலங்கள், எங்கோ எப்போதோ நடந்து முடிந்துவிட்ட கதை, வரலாறு, என்று எண்ணவேண்டாம். இன்றும், இத்தகைய அவலங்கள் தொடர்கின்றன. இதைவிட ஒரு பெரும் கொடுமை, அண்மைய ஆண்டுகளில் அதிகம் வளர்ந்துள்ளது. சிறுவர்களும், சிறுமியரும், போதைப்பொருள் வர்த்தகர்களாகவும், ஆயுதம் ஏந்தும் போர் வீரர்களாகவும் பயன்படுத்தப்படுத்தப்படும் கொடுமை அது.
இத்தகையக் கொடுமைகளால் துன்புறும் குழந்தைத் தொழிலாளர்களின் வாழ்வை அச்சுறுத்தும் புயல்கள் பல. இப்புயல்களை அமைதிப்படுத்தி, இக்குழந்தைகளின் வாழ்வுப் படகை, இயேசு, கரைசேர்க்கவேண்டும் என்ற வேண்டுதலுடன் நம் தேடலைத் தொடர்வோம்.

இப்புதுமையின் இறுதி வரிகள் நம் தேடலை இன்று வழிநடத்துகின்றன:
மாற்கு 4:39-41
இயேசு விழித்தெழுந்து காற்றைக் கடிந்துகொண்டார். கடலை நோக்கி, "இரையாதே, அமைதியாயிரு" என்றார். காற்று அடங்கியது; மிகுந்த அமைதி உண்டாயிற்று. பின் அவர் சீடர்களை நோக்கி, "ஏன் அஞ்சுகிறீர்கள்? உங்களுக்கு இன்னும் நம்பிக்கை இல்லையா?" என்று கேட்டார். அவர்கள் பேரச்சம் கொண்டு, "காற்றும் கடலும் இவருக்குக் கீழ்ப்படிகின்றனவே! இவர் யாரோ!" என்று ஒருவரோடு ஒருவர் பேசிக் கொண்டார்கள்.

புயலை அமைதிப்படுத்தியபின், இயேசு, தன் சீடர்களின் நம்பிக்கையைக் குறித்து கேட்ட கேள்வி, புயலையும், நம்பிக்கையையும் இணைத்து சிந்திக்க ஒரு வாய்ப்பை உருவாக்குகிறது. புயல் வீசும் நேரத்தில், நம் நம்பிக்கை எங்கே போகிறது? ஆழ் மனதில் அதுவும் தூங்கிக்கொண்டிருக்கிறதா? அல்லது, எழுந்து நின்று, ஓலமிட்டு, இறைவனை அழைக்கிறதா? அல்லது, புயல் வரும்போதெல்லாம், நம்பிக்கை, நடுக்கடலில் நம்மைத் தத்தளிக்க விட்டுவிடுகிறதா?

புயல் வீசும் நேரத்தில் நமது நம்பிக்கை எங்கே போகிறது? புயல் வரும் வேளையில் பூவுக்கு சுயம்வரமோ? என்ற திரைப்படப் பாடல் வரிகள் நினைவுக்கு வருகின்றன. புயல் வரும்போது, சுயம்வரம் போன்ற நல்ல காரியங்களைப்பற்றி நினைத்துப் பார்க்கமுடியுமா? முடியும். இந்தப் புயல் ஓய்ந்துவிடும், அமைதி வரும் என்று நம்புகிறவர்கள், சுயம்வரம், திருமணம் என்று திட்டமிட முடியும். ஆனால், புயலை மட்டும் மனதில், பூட்டிவைத்து போராடும்போது, வாழ்க்கையும் புயலோடு சேர்ந்து அடித்துச் செல்லப்படும்.

புல்லைப் பற்றிய ஓர் ஆங்கில கவிதை, நாம் எவ்வாறு நம்பிக்கையில் வேரூன்ற முடியும் என்பதைக் கூறுகிறது. கதை வடிவில் கூறப்பட்டுள்ள இக்கவிதையின் சுருக்கம் இதோ... அண்ணனும் தம்பியும் வீதியில் நடந்து போய்கொண்டிருந்தபோது, திடீரென தம்பிக்கு ஒரு கேள்வி எழுந்தது. "தைரியம் என்றால் என்ன?" என்று அண்ணனிடம் கேட்டான். அண்ணன், தனக்குத் தெரிந்த வகையில் விளக்கம் கூறினான். புலி, சிறுத்தை, யானை என்று தனக்குத் தெரிந்த மிருகங்களை அடையாளம் காட்டி, தைரியத்தை விளக்கப்பார்த்தான், அண்ணன். தம்பிக்கு விளங்கவில்லை என்பதை அவன் முகம் காட்டியது. அவர்கள் நடந்து சென்ற பாதையில், யாரோ ஒருவர், புல்தரை ஒன்றை எரித்து விட்டிருந்தார். முற்றிலும் எரிந்து சாம்பலான அந்தப் புல்தரையின் நடுவில், ஒரு சின்னப் புல் மட்டும், தலைநிமிர்ந்து நின்றது. அண்ணன் தம்பியிடம் அந்த புல்லைக் காட்டி, "தம்பி, இதுதான் தைரியம்" என்றான்.
கவிதை வடிவில் கூறப்பட்டுள்ள கதை இதோடு முடிகிறது. தம்பிக்கு விளங்கியதா இல்லையா என்பதெல்லாம் நமது கவலை இல்லை. இக்கவிதையில் சித்திரிக்கப்பட்டுள்ள காட்சி நமக்கு முக்கியம். முற்றிலும் எரிந்து சாம்பலான ஒரு புல்தரையின் நடுவே, தலைநிமிர்ந்து நிற்கும் புல், நமக்கு ஒரு பாடம். தன்னைச் சுற்றி எல்லாமே அழிந்தாலும், அந்த அழிவில் கலந்து மறைந்து போகாமல், தலைநிமிர்ந்து நிற்கும் புல்லை, ஆங்கிலக் கவிஞர், தைரியத்தின் அடையாளமாகக் கூறினார். நாம், அதே அடையாளத்தை, நம்பிக்கை என்று கூறலாம். புயல் வரும் வேளையில் பூவுக்கு சுயம்வரம் நடத்துவதும் இதுபோன்ற நம்பிக்கை தரும் செயல்தானே!

2004ம் ஆண்டு, டிசம்பர் 26, கிறிஸ்து பிறப்புப் பெருவிழாவுக்கு அடுத்தநாள் ஞாயிறு, திருக்குடும்பத் திருநாளன்று, ஆசிய நாடுகளின் கடற்கரை நகரங்கள் பலவற்றை சுனாமி தாக்கியது. அந்தப் பேரழிவின் நடுவிலும் எத்தனையோ விசுவாச அறிக்கைகள் வெளியாயின. கடவுள், மதம் என்ற பின்னணிகள் ஏதுமின்றி பார்த்தாலும், அந்நேரத்தில் நடந்த பல அற்புதங்கள், மனித சமுதாயத்தின் மேல், நமது நம்பிக்கையை வளர்க்கும் விசுவாச அறிக்கைகளாக வெளிவந்தன. அப்படி வந்த விசுவாச அறிக்கைகளில் ஒன்று இதோ...

சுனாமியில், தன் குழந்தைகள் மூவரையும் சேர்த்து, தன் குடும்பத்தில் பத்து பேரை இழந்த பரமேஸ்வரன், சூடாமணி தம்பதியரைப் பற்றி கேள்விப்பட்டிருப்பீர்கள். டிசம்பர் 26, பரமேஸ்வரனின் பிறந்த நாள். நாகப்பட்டினம் கடற்கரையில் அதைக் கொண்டாடிக் கொண்டிருந்தபோது வந்த சுனாமி, அவரது மூன்று குழந்தைகளையும் மற்ற உறவினர்களையும் கடலுக்கு இரையாக்கியது. குழந்தைகளை இழந்த பரமேஸ்வரன் - சூடாமணி தம்பதியர், நம்பிக்கை இழந்து, வெறுப்பைச் சுமந்து வாழவில்லை. மாறாக, ஒரு சுயம்வரத்தை ஆரம்பித்தார்கள்... சுயம்வரம் என்பது மனதுக்குப் பிடித்தவர்களைத் தேர்ந்தெடுப்பதுதானே! அந்த சுனாமியில் தங்கள் பிள்ளைகளை இழந்த பரமேஸ்வரன், சூடாமணி தம்பதியர், அதே சுனாமியால் தங்கள் பெற்றோரை இழந்து தவித்த 16 அனாதை குழந்தைகளைத் தத்தெடுத்து வளர்த்து வருகின்றனர்.

சுனாமி, பரமேஸ்வரன், சூடாமணி குடும்பத்தை அழித்தாலும், அவர்களது மனித நேயத்தை அழித்துவிடவில்லை. குழந்தைகளின் மதம், இனம், இவற்றையெல்லாம் கடந்து, மனிதநேயம் என்ற அடிப்படையில் மட்டுமே குழந்தைகளைத் தத்தெடுத்தார்கள். 3 வயது முதல் 16 வயது வரை உள்ள 16 பேரைத் தத்தெடுத்து வளர்த்து வருகின்றனர். நம்பிக்கை இழந்து தவித்த அந்த குழந்தைகளுக்கும்இளையோருக்கும் நம்பிக்கை தந்தனர். அதுமட்டுமல்ல, மனித குலத்தின் மேல் நமக்குள்ள நம்பிக்கையை வளர்த்திருக்கின்றனர், பரமேஸ்வரன், சூடாமணி தம்பதியர்.

புயலுக்கு முன்னும், புயலுக்கு பின்னும் அமைதி வரும் என்று கேள்விப்பட்டிருக்கிறோம். பரமேஸ்வரனுக்கும், சூடாமணிக்கும், புயலுக்கு நடுவிலிருந்து அமைதி வந்தது. நம்பிக்கை வந்தது.
புயலுக்கு நடுவே, நமது நம்பிக்கை எங்கே போகிறது? சிந்தித்துப் பார்க்கவேண்டும். அந்தப் புயல் நடுவில் இறைவன் இருக்கிறார் என்ற நம்பிக்கை நமக்குத் தேவை. ஒருவேளை, அவர் உறங்கிப் போனதுபோல் தெரிந்தாலும், அவர் அங்கே இருக்கிறார் என்பதே, ஒரு பெரும் நிம்மதியைத் தரும். இறைவன் எழுந்ததும், புயல் தூங்கிவிடும். இறைவன் எழுவார்; புயலை அடக்குவார்.
புயல்நேரங்களிலும் நல்லவை நடக்கும் என்ற நம்பிக்கையை வளர்த்துக்கொள்வோம். புயல்நேரங்களிலும் மனம் தளராமல், நல்லவற்றையேத் தேர்ந்தெடுக்கும் சுயம்வரத்தை நடத்துவோம்.

உலகில் வீசும் வன்முறைப் புயல்களால் புலம்பெயர்ந்துள்ள குடும்பங்களுக்காக, அதிலும் குறிப்பாக, தாய், தந்தை என்ற ஆணிவேர்கள் அகற்றப்பட்டு, காய்ந்த சருகுகள் போல புயலில் சிக்கித்தவிக்கும் பல்லாயிரம் குழந்தைத் தொழிலாளர்களுக்காக இன்று இறைவனிடம் உருக்கமான வேண்டுதல்களை எழுப்புவோம்.