Showing posts with label Bible - Timeless Treasure of Mercy - 34. Show all posts
Showing posts with label Bible - Timeless Treasure of Mercy - 34. Show all posts

09 August, 2016

விவிலியம் : காலமெலாம் வாழும் கருணைக் கருவூலம் - பகுதி – 34

The Resurrection of the Widow's Son at Nain,
Illustration by James Jacques Joseph Tissot

'கருணையின் நற்செய்தி' என்று அழைக்கப்படும் லூக்கா நற்செய்தியில், இயேசுவின் மனிதத்தன்மை, மிக அழகாக, ஆழமாகச் சித்திரிக்கப்பட்டுள்ளது. நற்செய்தியாளர் லூக்கா ஓர் ஓவியர் என்பது, மரபுவழிச் செய்தி. ஓவியருக்கே உரிய மென்மையான மனம் கொண்டு, அவர், இயேசுவின் வாழ்வில் வெளிப்பட்ட மென்மையான நேரங்களை அழகுறத் தீட்டியுள்ளார். அவற்றில் ஒன்று, நயீன் நகரத்து கைம்பெண்ணின் மகனுக்கு இயேசு உயிர் தந்த புதுமை.
இயேசுவை மட்டுமல்ல, இன்னும் பலரை, நற்செய்தியாளர் லூக்கா, அழகாக வெளிச்சமிட்டு காட்டியிருக்கிறார். குறிப்பாக, யூத சமுதாயத்தால் ஒதுக்கி வைக்கப்பட்ட ஆயக்காரர்கள், சமாரியர், பாவிகள், நோயுற்றோர், பெண்கள், சிறப்பாக, கைம்பெண்கள் ஆகியோருக்கு, அவர் தகுந்த மதிப்பளித்துள்ளார். இயேசு ஆற்றிய புதுமைகளிலும், கூறிய உவமைகளிலும் இவர்கள் முக்கியத்துவம் பெற்றுள்ளனர். நயீன் நகர  கைம்பெண்ணுக்கு முக்கியத்துவம் கொடுத்து சொல்லப்பட்டுள்ள புதுமையில் நம் தேடல்பயணம் தொடர்கிறது.

நற்செய்தியாளர் லூக்கா, இயேசுவின் பணிவாழ்வை விவரிக்கும்போது, மூன்று கைம்பெண்களைப் பற்றி கூறியுள்ளார். நயீன் நகரக் கைம்பெண் (லூக்கா 7), கோவிலில் காணிக்கை செலுத்தியக் கைம்பெண் (லூக்கா 21) என்ற இருவர், இயேசுவின் பணிவாழ்வில் இடம்பெற்றவர்கள். நேர்மையற்ற நடுவரும், கைம்பெண்ணும் என்ற உவமை, (லூக்கா 18) லூக்கா நற்செய்தியில் மட்டும் பதிவாகியுள்ள உவமை.
இம்மூன்று கைம்பெண்களின் வழியே, நற்செய்தியாளர் லூக்கா, உன்னதமான எண்ணங்களைப் பதிவு செய்துள்ளார். நயீன் நகரக் கைம்பெண், தன் வாழ்வில் அனைத்தையும் இழந்தவராகச் சித்திரிக்கப்பட்டுள்ளார். அவரைத் தேடி, இறைமகன் இயேசு வருகிறார்.
நற்செய்தியாளர் லூக்கா குறிப்பிடும் இரண்டாவது கைம்பெண், ‘நேர்மையற்ற நடுவரும், கைம்பெண்ணும்என்ற உவமையில் (லூக்கா 18) இடம்பெறும் கைம்பெண். தன் வாழ்வில் அனைத்தையும் அநீதியான வழியில் இழந்ததால், ஒரு தார்மீகப் போராட்டத்தில் ஈடுபடுவதுபோல் இவர் சித்திரிக்கப்பட்டுள்ளார். "மனம் தளராமல் எப்பொழுதும் இறைவனிடம் மன்றாடவேண்டும் என்பதற்கு..." (லூக்கா 18:1) இந்தக் கைம்பெண்ணை, இயேசு ஓர் எடுத்துக்காட்டாகக் கூறுகிறார்.
தன் வாழ்வை இறைவனுக்கு முற்றிலும் காணிக்கையாக்கும் கைம்பெண்ணை இயேசு புகழும் நிகழ்வு, லூக்கா நற்செய்தி, 21ம் பிரிவில் இடம்பெற்றுள்ளது. லூக்கா நற்செய்தியை ஆய்வு செய்துள்ள சில அறிஞர்கள் கூறும் ஒரு கருத்து, கவனத்திற்குரியது. 24 பிரிவுகளைக் கொண்ட லூக்கா நற்செய்தியில், இயேசுவின் பணிவாழ்வு, 3ம் பிரிவில் துவங்கி, 21ம் பிரிவில் முடிவடைகிறது. 3ம் பிரிவுக்கு முன், இயேசுவின் பிறப்பு நிகழ்வுகளும், 21ம் பிரிவுக்குப் பின், இயேசுவின் பாடுகள், மற்றும், உயிர்ப்பு நிகழ்வுகளும் பதிவு செய்யப்பட்டுள்ளன.
இயேசுவின் பணிவாழ்வின் ஆரம்பத்தில், அதாவது, 3ம் பிரிவில், திருமுழுக்கு யோவானைப் பற்றி கூறும் நற்செய்தியாளர் லூக்கா, அவரது பணிவாழ்வின் இறுதியில், 21ம் பிரிவில், காணிக்கை செலுத்தும் கைம்பெண்ணைப் பற்றி கூறியுள்ளார். திருமுழுக்கு யோவானும், காணிக்கை செலுத்தியக் கைம்பெண்ணும் தங்கள் வாழ்வை இறைவனுக்கு முற்றிலும் கையளித்த உன்னத அடையாளங்கள் என்பதால், இவ்விருவரையும், இயேசுவின் பணிவாழ்வுக்கு முன்னுரையாகவும், முடிவுரையாகவும் லூக்கா வைத்துள்ளார் என்று விவிலிய ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டுகின்றனர். இவ்விதம், மூன்று கைம்பெண்கள் வழியாக, லூக்கா, உன்னத கருத்துக்களை தன் நற்செய்தியில் பதித்துள்ளார்.

நயீன் நகர கைம்பெண் நிகழ்வில் நம் தேடலைத் தொடர்வோம். 'நயீன்' என்ற எபிரேயச் சொல்லுக்கு, 'பசுமையான' அல்லது, 'அழகான' என்பது பொருள். தன் கணவனுடனும், மகனுடனும் வாழ்ந்தபோது, பசுமையாக, அழகாக இருந்த இப்பெண்ணின் வாழ்வு, கணவனையும், மகனையும் இழந்தபின், பசுமையும், அழகும் இழந்த வாழ்வாக, ஒரு சுடுகாடாக மாறிவிட்டது. 'அழகு' என்ற பொருள் கொண்ட அந்த ஊரில் இனி அப்பெண் வாழ்வதில் பொருளில்லை. இந்த மாற்றத்தைச் சுட்டிக்காட்ட, நயீன் நகரின் வாயிலில், அதாவது 'அழகு' நகருக்கு வெளியே, சுடுகாட்டை நோக்கிச் செல்லும் வழியில், இந்நிகழ்வை, பதிவு செய்துள்ளார், லூக்கா. அவ்வேளையில், அங்கு வந்த இயேசு, அந்த கைம்பெண்ணின் வாழ்வில், பசுமையையும், அழகையும் மீண்டும் புகுத்தி, அவரை 'அழகு' நகருக்குள் தன் மகனோடு மீண்டும் அனுப்பிவைக்கிறார்.

இப்புதுமையை இயேசு ஆரம்பித்த விதமே, நம் கவனத்தை ஈர்க்கிறது. இயேசு ஆற்றியப் புதுமைகள், மந்திரக்கோல் கொண்டு செய்யப்பட்ட மாய வித்தைகள் அல்ல. மக்களுக்கு நம்பிக்கை தந்த அரும் செயல்கள் அவை. குறிப்பாக, நலமளிக்கும் புதுமைகளில், இயேசு, வெறும் உடல் நலத்தை மட்டும் வழங்கவில்லை, மாறாக, நலம் பெறுவோர் உள்ளமும், நலம் பெறும்படி அவர் உதவி செய்தார். தனி நபர் மட்டும் நலம் பெறுவது போதாது, சூழ இருந்த சமுதாயமும் நலம் பெறவேண்டும் என்பதற்காக, இயேசு, சில அதிர்ச்சி வைத்தியங்களையும் மேற்கொண்டார். நயீன் கைம்பெண்ணின் இறந்த மகனை  உயிர்ப்பித்த புதுமையை, ஓர் அதிர்ச்சி வைத்தியத்தோடு அவர் துவங்குகிறார். அவரது அதிர்ச்சி வைத்தியம், இறந்தவரின் உடல் வைக்கப்பட்டிருந்த பாடையைத் தொட்டதில் ஆரம்பமானது.

இறந்த உடலைத் தொடுவது, ஒருவரைத் தீட்டுப்படுத்தும் என்பது, இஸ்ரயேல் சட்டங்களில் ஒன்று:
எண்ணிக்கை 19:11-13
மனிதப் பிணத்தைத் தொடுபவன் எவனும் ஏழு நாள்களுக்குத் தீட்டுப்பட்டிருப்பான்.  மூன்றாம் நாளிலும் ஏழாம் நாளிலும் அவன் தன்னைத் தண்ணீரால் தூய்மையாக்கிக் கொள்வான்; இங்ஙனம் அவன் தூய்மையாயிருப்பான்;... இறந்துபட்ட எந்த ஒரு மனிதனின் உடலைத் தொட்டபின், தன்னைத் தூய்மைப்படுத்திக் கொள்ளாதவன் எவனோ அவன் ஆண்டவரின் திருஉறைவிடத்தைத் தீட்டுப்படுத்துகிறான்; அந்த ஆள் இஸ்ரயேலிடமிருந்து விலக்கப்பட வேண்டும்.

இறந்தவர் உடலைத் தொடுவதால் உருவாகும் பாதிப்புக்கள், அழுத்தந்திருத்தமாகச் சொல்லப்பட்டுள்ளன. அதிலும் சிறப்பாக, இறைவனின் பணிக்கென குறிக்கப்பட்டுள்ள குருக்கள் இவ்விதம் தீட்டுப்படாமல் தங்களைக் காத்துக்கொள்ள வேண்டும் என்பது இன்னும் தெளிவாகக் கூறப்பட்டுள்ளது.
லேவியர் 21: 1,10-11
ஆண்டவர் மோசேயிடம் கூறியது; "ஆரோனின் புதல்வரான குருக்களுக்குச் சொல்; அவர்களுள் எவனும் தன் இனத்தாரில் இறந்துபோன ஒருவராலே தன்னைத் தீட்டப்படுத்த வேண்டாம்.... தலையில் திருப்பொழிவு எண்ணெய் வார்க்கப்பட்டு குருத்துவ உடை அணிந்துள்ள தலைமைக் குருவாகிய உன் சகோதரன், தன் தலையை மூடிக் கொள்ள வேண்டும்;... எந்தப் பிணமானாலும் அது தந்தையுடையதாயினும் தாயுடையதாயினும் அதன் அருகில் சென்று அவன் தன்னைத் தீட்டுப்படுத்திக் கொள்ள வேண்டாம்.

இறைவனின் பணிக்கென இவ்வுலகிற்கு வந்த இயேசு, இந்த விதிமுறையை மீறுகிறார். அவரை ஒரு போதகர் என்று மக்கள் ஏற்றுக்கொண்ட சூழலில், அவர் இவ்விதியை மீறுகிறார். பலிகளைவிட, இரக்கத்தை அதிகம் விரும்பும் இறைவன், (ஓசேயா 6: 6; மத்தேயு  9:13) சட்டதிட்டங்களை விட, இரக்கத்தை அதிகம் விரும்புவார் என்பதை நன்கு உணர்ந்த இயேசு, எவ்விதத் தயக்கமும் இன்றி, இறந்த இளைஞன் வைக்கப்பட்டிருந்த பாடையைத் தொட்டார்.
அவர் அவ்வாறு செய்தது, இயேசுவின் சீடர்களையும் சேர்த்து, சூழ இருந்தோர் அனைவரையும் அதிர்ச்சியடையச் செய்திருக்க வேண்டும். ஆயினும், அந்தத் தொடுதலைத் தொடர்ந்து அங்கு நிகழ்ந்த புதுமை, அந்த அதிர்ச்சியை, ஆனந்தமாக மாற்றியது. இந்நிகழ்வை, நற்செய்தியாளர் லூக்கா இவ்விதம் விவரித்துள்ளார்:
லூக்கா 7:14-17
இயேசு அருகில் சென்று பாடையைத் தொட்டார். அதைத் தூக்கிச் சென்றவர்கள் நின்றார்கள். அப்பொழுது அவர், "இளைஞனே, நான் உனக்குச் சொல்கிறேன், எழுந்திடு" என்றார். இறந்தவர் எழுந்து உட்கார்ந்து பேசத் தொடங்கினார். இயேசு அவரை அவர் தாயிடம் ஒப்படைத்தார். அனைவரும் அச்சமுற்று, "நம்மிடையே பெரிய இறைவாக்கினர் ஒருவர் தோன்றியிருக்கிறார். கடவுள் தம் மக்களைத் தேடி வந்திருக்கிறார்" என்று சொல்லிக் கடவுளைப் போற்றிப் புகழ்ந்தனர்.

இறந்தோரைத் தொடுவது, ஒருவரைத் தீட்டுப்படுத்தும் என்ற சட்டத்தை, தங்கள் வசதிக்காக தீவிரமாக்கிக்கொண்ட குருக்களையும், லேவியர்களையும் 'நல்ல சமாரியர் உவமை'யில், மக்கள் முன் இயேசு கொணர்ந்தார். இந்த உவமையில் கள்வர் கையில் அகப்பட்டு, அடிபட்டவர், குற்றுயிராய் கிடந்தார் என்பதை இயேசு தெளிவாகக் கூறுகிறார். (லூக்கா 10:30)
மோசே தந்த சட்டங்களும், அதன் விளக்கங்களும் 'Mitzvot' என்ற தொகுப்பாக, யூதர்களிடையே பின்பற்றப்பட்டன. Mitzvot கட்டளைகளின்படி, ஒருவர் உயிருக்குப் போராடிக் கொண்டிருக்கும்போது, அவருக்கு உதவுவது மிக மிக முக்கியம் என்றும், அதேபோல், அனாதையாகக் கிடக்கும் ஓர் உடலை அடக்கம் செய்வது, யூதர்களின் Mitzvot கட்டளைகளின் ஒரு பகுதி என்றும் Klyne Snodgrass என்ற விவிலிய ஆய்வாளர் கூறியுள்ளார்.
இறைவன் மோசே வழியாகத் தந்த சட்டங்களை முழுமையாகப் புரிந்துகொள்ள மறுத்து, தங்களுக்குத் தேவையானவற்றை மட்டும், அல்லது, சாதகமானவற்றை மட்டும் பின்பற்றி வாழ்ந்த குருவையும், லேவியரையும் 'நல்ல சமாரியர் உவமை'யில் எதிர்மறையான கோணத்தில் சித்திரித்த இயேசு, அடிபட்டவரைத் தொட்டு, தூக்கி, பராமரித்த நல்ல சமாரியரை வெகு சிறந்த கோணத்தில் நமக்குமுன் படைக்கிறார். அது மட்டுமல்ல, நல்ல சமாரியரைப்போலவே நாம் அனைவரும் செயல்படவேண்டும் (லூக்கா 10:37) என்று உவமையின் இறுதியில் வலியுறுத்திச் சொல்கிறார் இயேசு.

நோயுற்றோரைத் தொடுவது ஒருவரைத் தீட்டுப்படுத்தும் என்று எழுதப்பட்டிருந்த சட்டங்களை இயேசு மீறினார் என்பதை, நற்செய்தியில் பலமுறை காண்கிறோம். ஒரு வார்த்தை சொன்னாலும் போதும், ஊழியர் நலம் பெறுவார் என்று, நூற்றுவர் தலைவர் சொன்ன நம்பிக்கை வார்த்தைகளுக்கு மதிப்பு கொடுத்து, இயேசு, நூற்றுவர் தலைவர் இல்லம் செல்லாமலேயே, தன் வார்த்தையின் வல்லமையால் அந்த ஊழியருக்கு குணமளித்தார். அதைத் தொடர்ந்து, நயீன் ஊருக்குள் நுழைந்த இயேசு, அங்கும், தன் வார்த்தையின் வலிமை கொண்டு குணமாக்கியிருக்கலாம். இருப்பினும், அவர், இம்முறை, தன் வார்த்தைகளாலும், தொடுதலாலும் கைம்பெண்ணின் இளம் மகனை குணமாக்குகிறார்.
நலமிழந்து, ஏறத்தாழ உயிரற்ற பிணமாக வலம்வரும் இன்றைய உலகை, இயேசு தன் வார்த்தையாலும், தொடுதலாலும் குணமாக்க வேண்டும் என்று மன்றாடுவோம். இந்தப் புதுமையை எவ்வித அழைப்போ, வேண்டுதலோ இன்றி இயேசு தானாகவே முன்வந்து செய்தார் என்பதைக் காணும்போது, நம் வாழ்வில் தானாகவே நிகழும் புதுமைகளை எண்ணிப் பார்க்க அழைக்கப்படுகிறோம். இந்த அழைப்பை ஏற்று, வாழ்வில் இறைவன் குறுக்கிடும்போது நிகழும் அற்புதங்களை அசைபோட, அடுத்தத் தேடலில் முயல்வோம்.