Showing posts with label Bible - Timeless Treasure of Mercy - 43. Show all posts
Showing posts with label Bible - Timeless Treasure of Mercy - 43. Show all posts

11 October, 2016

விவிலியம் : காலமெலாம் வாழும் கருணைக் கருவூலம் - பகுதி – 43

Jairus begging Jesus to heal his daughter

"இந்த ஜூன் மாதம், இதுவரை இல்லாத அளவு கிறிஸ்துவர்களின் இரத்தம் ஆறாய்ப் பெருகி ஓடும்"... நைஜீரியாவில் உள்ள Boko Haram என்ற ஓர் அடிப்படைவாதக் கும்பல் நான்கு ஆண்டுகளுக்குமுன், விடுத்த எச்சரிக்கை இது. அவர்கள் எச்சரித்தபடியே, குண்டு வெடிப்புக்கள் நிகழ்ந்தன. இரத்தம் சிந்தப்பட்டது. உயிர்கள்... எப்பாவமும் அறியாத உயிர்கள், கொல்லப்பட்டன. கடவுளின் பெயரால், மதங்களின் பெயரால் இவ்வுலகில் சிந்தப்படும் இரத்தத்தைப்போல், வேறு எந்த காரணத்திற்காகவும் அவ்வளவு இரத்தம் சிந்தப்பட்டிருக்காது என்பது, நாம் மறுக்கமுடியாத உண்மை.
நைஜீரியாவில் இரத்தம் சிந்தப்பட்டதை, உயிர்கள் கொல்லப்பட்டதை நாம் செய்தித்தாள்களில் பார்த்தோம். ஆனால், அதே கொடுமைகளின்போது, நைஜீரியாவில் மனித உயிர்களைக் காப்பாற்ற பலர் இரத்ததானம் கட்டாயம் செய்திருப்பர். இவை, எந்த ஊடகத்திலும் பெரிதாகச் சொல்லப்படவில்லை.
அதேபோல், இந்தியாவின் குஜராத் மாநிலத்தில், புஜ் (Bhuj) எனுமிடத்தில் 2001ம் ஆண்டு, சனவரி, 26, குடியரசு நாளன்று ஏற்பட்ட கடுமையான நிலநடுக்கத்தின்போது, இந்துக்களும், இஸ்லாமியரும் வரிசையில் நின்று இரத்ததானம் செய்தனர். இந்துக்கள் இரத்தம், இஸ்லாமியர் உடலிலும், இஸ்லாமியர் இரத்தம், இந்துக்கள் உடலிலும் செலுத்தப்பட்டது. ஆனால், அதே மாநிலத்தில், அடுத்த ஆண்டு, நிகழ்ந்த கலவரங்களில், இந்துக்களும், இஸ்லாமியரும் ஒருவர் ஒருவருடைய இரத்தத்தை வீதிகளில் சிந்தினர். இக்கலவரங்களுக்கு ஊடகங்கள் தந்த கவனம், அங்கு நிகழ்ந்த நல்ல காரியங்களுக்குத் தரப்படவில்லை என்பது கசப்பான உண்மை.
ஊடகங்கள் சொல்லாத, அல்லது சொல்ல மறுக்கும், மறைக்கும் நல்ல செய்திகளை எண்ணிப் பார்க்க, இந்த விவிலியத் தேடலில் ஒரு வாய்ப்பு நமக்கு வழங்கப்பட்டுள்ளது. இரத்தம், உயிர் என்ற இரு இணைபிரியா உண்மைகளைச் சிந்திக்க இந்த விவிலியத் தேடல் வழியாக முயல்வோம்.

விவிலியத்தில், இரத்தம், பொருள்நிறைந்த ஓர் அடையாளம். இஸ்ரயேல் மக்கள், எகிப்தில் அடிமைகளாய் இருந்தபோது, அவர்களை விடுவிக்க, இறைவன், அந்நாட்டின்மேல் பல துயரங்களை அனுப்பினார். அவற்றில் முதல் துயரம்... நைல் நதி இரத்தமாய் மாறியத் துயரம். இந்த இரத்தம், எகிப்து மன்னனையும், மக்களையும் எச்சரித்த இரத்தம். எகிப்திலிருந்து இஸ்ரயேல் மக்கள் கிளம்பிய அந்த இரவில், கதவு நிலைகளில் பூசப்பட்ட செம்மறியின் இரத்தம் ஒரு கேடயமாக, கவசமாக மாறி, அவர்கள் உயிரைக் காத்தது. இவ்விதம் உயிரைப் பறிக்கவும், காக்கவும் இரத்தம் அடையாளமாக இருந்தது.

இஸ்ரயேல் மக்களைப் பொருத்தவரை, உயிர்களுக்கெல்லாம் ஊற்றான இறைவனுக்கு மட்டுமே இரத்தம் சொந்தமாக வேண்டும். எனவே, அவருக்கு அளிக்கப்படும் பலிகளில் மட்டுமே இரத்தம் சிந்தப்பட வேண்டும். மற்ற வழிகளில் சிந்தப்படும் இரத்தம், நமக்கு எதிராக இறைவனிடம் முறையிடும். தொடக்க நூல் 4ம் பிரிவில், காயின், ஆபேலைக் கொன்றதும், இறைவன் காயினிடம் சொன்ன வார்த்தைகள்:  நீ என்ன செய்துவிட்டாய்! உன் சகோதரனின் இரத்தத்தின் குரல் மண்ணிலிருந்து என்னை நோக்கிக் கதறிக் கொண்டிருக்கிறது. (தொ.நூ. 4: 10)  சிந்தப்படும் மிருகங்களின் இரத்தம், இறைவனுக்கு உகந்த பலியாக மாறும். ஆனால், சிந்தப்படும் மனிதர்களின் இரத்தம் நமக்குப் பழியாக மாறும்.
இரத்தத்தைப்பற்றி இஸ்ரயேல் மக்கள் கொண்டிருந்த மற்றொரு முக்கியமான எண்ணம்... இரத்தம் உடலில் இருக்கும்வரை அது உயர்வாக, வாழ்வாகக் கருதப்பட்டது. நோயின் காரணமாக, உடலிலிருந்து இரத்தம் வெளியேறினால், அந்த இரத்தம் களங்கமென்று, தீட்டென்று கருதப்பட்டது. இந்த எண்ணத்தை மையப்படுத்திய ஒரு புதுமையை இன்றைய விவிலியத் தேடலில் நாம் சிந்திக்க வந்திருக்கிறோம்.

மத்தேயு, மாற்கு, லூக்கா ஆகிய மூன்று நற்செய்திகளிலும் சொல்லப்பட்டுள்ள இந்நிகழ்வில், இரு புதுமைகள் நிகழ்கின்றன. மூன்று நற்செய்தியாளர்களும், இவ்விரு புதுமைகளை இணைத்து சொல்லியிருப்பதற்கு ஒரு முக்கிய காரணம் இருப்பதாக நாம் புரிந்துகொள்ளலாம். அது நமது வாழ்க்கைக்கும் தேவையான ஒரு முக்கிய பாடம். அதாவது, இறைவனைப் பொருத்தவரை, மையங்கள் ஓரமாகும், ஓரங்கள் மையமாகும் என்பதே, நாம் கற்றுக்கொள்ள வேண்டிய பாடம். இந்த எண்ணத்தை சிறிது ஆழமாகச் சிந்திப்பது, பயனளிக்கும்.

கெரசேனர் பகுதியிலிருந்து விரட்டப்பட்டு படகேறி புறப்பட்ட இயேசுவுக்கு, மறுகரையில் வரவேற்பு கிடைத்தது. வரவேற்கக் கூடியிருந்த கூட்டத்தை விலக்கிக்கொண்டு, தொழுகைக்கூடத்தின் தலைவன் யாயிர், இயேசுவை அணுகினார். இறக்கும் நிலையில் இருந்த தன் மகளைக் காக்கும்படி வேண்டி, அவர் இயேசுவின் கால்களில் விழுந்தார் என்று இப்புதுமையின் ஆரம்ப வரிகள் சொல்கின்றன. இது சாதாரண செய்தி அல்ல, தலைப்புச் செய்தி.
நமது ஊடகங்கள் அன்று இருந்திருந்தால், இந்நிகழ்வைப் பலவாறாகத் திரித்துச் சொல்லியிருக்கும். ஒரு சிறுமி சாகக்கிடக்கிறார் என்ற முக்கிய செய்தியைவிட, தொழுகைக் கூடத் தலைவன் யாயிர், இயேசுவின் கால்களில் விழுந்தார் என்ற செய்தியைப் பெரிதுபடுத்தி, அதை முதல் பக்க படமாக வெளியிட்டு, யார் பெரியவர் என்ற விவாதத்தைக் கிளறியிருக்கும்.

ஒருவேளை, இயேசுவின் காலத்திலும் இந்தக் கேள்வி எழுந்திருக்கும்... யாருக்கு? இயேசுவுக்கா? யாயிருக்கா? இல்லை. குழந்தையின் நலனில் அக்கறை கொண்ட யாயிருக்கும், இயேசுவுக்கும் இந்த எண்ணமே எழுந்திருக்காது. இவ்விருவரையும் சுற்றி இருந்தவர்களுக்கு அக்கேள்வி எழுந்திருக்கும். தொழுகைக் கூடத்தின் தலைவன் இயேசுவின் கால்களில் விழுந்தார் என்ற செய்தி, காட்டுத் தீபோல் எருசலேம்வரை பரவி, மதத்தலைவர்களை ஆத்திரப்பட வைத்திருக்கும்.
யாயிர், தன் தேவையைச் சொன்னதும், இயேசு புறப்பட்டார். 'பெருந்திரளான மக்கள் அவரை நெருக்கிக்கொண்டே பின்தொடர்ந்தனர்' - மாற்கு 5:24 என்று நற்செய்தி சொல்கிறது. இந்த ஊர்வலமும் முக்கியச் செய்திதான். ஆனால், இதுவரை தலைப்புச் செய்திகள் என்று நாம் சிந்தித்தது எதுவும் இந்த இரட்டைப்புதுமைகளின் முக்கியச் செய்தியாகவில்லை. பார்ப்பதற்கு மையமாகத் தெரியும் இவை அனைத்தும் ஓரங்களாகி விட்டன. ஓர் ஓரத்தில் ஆரம்பித்த கதை, மையமாக மாறியது. அதுதான்... பன்னிரு ஆண்டுகளாய் இரத்தப்போக்கினால் துன்புற்ற பெண் குணமடையும் அந்தப் புதுமை. அந்தப் பெண்ணை, நற்செய்தியாளர் மாற்கு இவ்வாறு அறிமுகப்படுத்துகிறார்:
மாற்கு 5:25-26
பன்னிரு ஆண்டுகளாய் இரத்தப் போக்கினால் வருந்திய பெண் ஒருவர் அங்கு இருந்தார். அவர் மருத்துவர் பலரிடம் தமக்கு உள்ளதெல்லாம் செலவழித்தும் ஒரு பயனும் அடையாமல் மிகவும் துன்பப்பட்டவர். அவர் நிலைமை வர வர மிகவும் கேடுற்றது.

உடலளவில் அடைந்த துன்பங்களைவிட, குடும்பத்தாலும், சமுதாயத்தாலும் ஒதுக்கிவைக்கப்பட்ட துன்பம், அப்பெண்ணை மிகவும் வேதனைப்படுத்தியிருக்கும். அவரை யாரும் தொடக்கூடாது, அவர் யாரையும், எதையும் தொடக்கூடாது. அவர் தொட்டதெல்லாம் தீட்டுப்பட்டதென ஒதுக்கிவைக்கப்பட்டன. குடும்பத்திலும், சமுதாயத்திலும் நிகழும் வைபவங்களில் அவர் கலந்துகொள்ளக் கூடாது. கோவிலுக்குப் போகக்கூடாது, சமைக்கக் கூடாது, வீட்டு வேலைகள் செய்யக்கூடாது, தன் குழந்தைகளைத் தூக்கக்கூடாது... இவ்வாறு, அவர் மீது சுமத்தப்பட்ட தடைகள், ஏறத்தாழ அவரை உயிரோடு சமாதியில் வைத்தன. ஒரு நடைப்பிணமாக அவர் வாழ்ந்தார்.
இந்தக் கொடுமை, ஒரு சில நாட்கள் நீடித்தத் துன்பம் அல்ல. 12 ஆண்டுகள், அதாவது, 144 மாதங்கள், 4383 நாட்களாக நீடித்தக் கொடுமை இது. இந்தக் கொடுமையிலிருந்து விடுதலைபெற அவர் தன்னிடம் இருந்த செல்வத்தையெல்லாம் மருத்துவர்களுக்கு கொடுத்துவிட்டார் என்றும், நாளுக்கு நாள் அவரது நிலை மேலும் மோசமாகி வந்ததென்றும் நற்செய்தியாளர் மாற்கு குறிப்பிடுகிறார்.

அந்தப் பெண் கூட்டத்தில் இருந்தார். அவர் முண்டியடித்து, முன்னேறிக் கொண்டிருந்தார்.
ஒரு பெண், நோயுள்ள பெண், அதுவும் இரத்தப்போக்கு நோயுள்ள பெண் கூட்டத்தில் இருந்தாரா? அநியாயம்! அக்கிரமம்! அலங்கோலம்! அபச்சாரம்!..
இரத்தப்போக்கு நோயுள்ள பெண் சமூகத்தினின்று விலக்கி வைக்கப்பட வேண்டும் என்பது இஸ்ராயலர்களின் விதி. ஆனால், இவரோ கூட்டத்தின் மத்தியில் முண்டியடித்து முன்னேறிக் கொண்டிருந்தார். அவர் மனமெங்கும் ஒரே மந்திரம்: "நான் அவர் ஆடையைத் தொட்டாலே நலம் பெறுவேன்." (மாற்கு 5:28)

அந்தப் பெண்ணுக்குத் தெரியும்... இயேசுவுக்கு முன்னால் சட்டங்களும், சம்பிரதாயங்களும் சாம்பலாகிப்போகும் என்று அவருக்குத் தெரியும். வேலிகள் கட்டுதல், வேறுபாடுகள் காட்டுதல், விலக்கிவைத்தல் போன்ற இதயமற்ற போலிச்சட்டங்கள் இயேசுவிடம் பொசுங்கிப்போகும் என்று அவருக்கு நன்றாகத் தெரியும். அந்தத் துணிவில்தான் அவர் முன்னேறிக் கொண்டிருந்தார்.
இருந்தாலும் அவருக்குள் ஒரு சின்ன பயம். முன்னுக்கு வந்து, முகமுகமாய்ப் பார்த்து, இயேசுவிடம் நலம் வேண்டிக்கேட்க ஒரு சின்ன பயம். அவருடைய பயம், இயேசுவைப்பற்றி அல்ல. அவரைச் சுற்றியிருந்த சமூகத்தைப்பற்றி... முக்கியமாக இயேசுவைச் சுற்றியிருந்த ஆண் வர்க்கத்தைப்பற்றி.
கூட்டத்தில், அந்த குழப்பத்தின் மத்தியில் இயேசுவை அணுகுவதைத் தவிர வேறு வழி அந்தப் பெண்ணுக்குத் தெரியவில்லை. கூட்டத்தில் நுழைந்தார், இயேசுவை அணுகினார். அவர்மீது தான் வளர்த்திருந்த நம்பிக்கையை எல்லாம் திரட்டி, அவரது ஆடையின் விளிம்பைத் தொட்டார். குணம்பெற்றார்.
"அவரது ஆடையின் ஓரங்கள் போதும் எனக்கு. குணம் பெற்றதும் கூட்டத்திலிருந்து நழுவிவிடலாம்" என்று வந்த பெண்ணை, இயேசு ஓரங்களிலேயே விட்டுவிட்டுப் போயிருக்கலாம். விளம்பரங்களை விரும்பாத இயேசு, வழியில் நடந்த புதுமையைப் பெரிதுபடுத்தாமல் போயிருக்கலாம். ஆனால், அவருக்கு வேறு எண்ணங்கள் இருந்தன. சமுதாயத்தின் ஓரங்களில், விளிம்புகளில் உள்ளவர்களை, மையத்திற்குக் கொண்டுவரும் கலை, இயேசுவுக்கு நன்கு தெரிந்தக் கலை. கூட்டத்தில் குணமானப் பெண், கூட்டத்தையும் குணமாக்கவேண்டும் என்று இயேசு எண்ணினார். அந்தப் பெண்ணின் வழியே, சுற்றியிருந்த கூட்டத்தை இயேசு குணமாக்கியதை நாம் அடுத்தவாரம் சிந்திப்போம்.