Showing posts with label Bible - Timeless Treasure of Mercy - 46. Show all posts
Showing posts with label Bible - Timeless Treasure of Mercy - 46. Show all posts

08 November, 2016

விவிலியம் : காலமெலாம் வாழும் கருணைக் கருவூலம் - பகுதி – 46

Cornerstone Rehab
A sign sits on Wayne Williams' front lawn in Sedalia – Photo - KRCG

அமெரிக்க ஐக்கிய நாட்டில், மிசூரி மாநிலத்தின் செடாலியா (Sedalia) என்ற ஊரில், ஒரு வீட்டிற்கு முன் வைக்கப்பட்டிருந்த அறிவிப்பு பலகையில் பின்வரும் வார்த்தைகள் காணப்பட்டன: "22 வயதான ஜெசிக்கா வில்லியம்ஸ், ஹெராயின் போதைப்பொருள் காரணமாக, 2016, பிப்ரவரி 10ம் தேதி, இங்கு காலமானார். செடாலியாவில் ஹெராயின் நடமாட்டம் உள்ளது; அதைப்பற்றி நாம் மௌனம் காத்தால், எங்கள் மகளைப்போல், இன்னும் பலரை அது கொன்றுவிடும். இதைப்பற்றிப் பேசுங்கள்"
இளம்பெண் ஜெசிக்காவின் மரணத்தைக் குறித்து வைக்கப்பட்ட அந்த அறிவிப்பு, செடாலியா நகரில் ஹெராயின் நடமாட்டத்தைக் குறைத்திருக்குமா என்பது தெரியவில்லை. ஆனால், தங்கள் மௌனத்தால், தங்கள் மகளின் மரணத்திற்கு, தாங்களும் காரணமாக இருந்தோம் என்று, அவரது குடும்பத்தினர், அவ்வறிக்கையில் மறைமுகமாகக் கூறியிருப்பது, நம்மைச் சிந்திக்கத் தூண்டுகிறது.
குடும்பத்தில் ஒருவர், போதைப்பொருள் பழக்கத்திற்கு அடிமையாகியுள்ளார் என்பதை, வீட்டிலுள்ள அனைவரும், வெளி உலகத்திற்குத் தெரிந்துவிடாமல் பாதுகாத்து வருவர். ஒருவேளை, ஜெசிக்காவின் குடும்பத்தினர் இதைப்பற்றிப் பேசியிருந்தால், இன்னும் சிலர், தங்கள் குடும்பத்திலும் இந்தப் பிரச்சனை உள்ளதென்று பேசியிருப்பர். தங்கள் பிரச்சனைக்குக் காரணமான போதைப்பொருள், தங்கள் பகுதியில் நடமாடி வருகிறது என்பதை பலரும் அறிந்து, அதைத் தடுக்க முயன்றிருப்பர்.

குடும்பத்தில் ஒருவர் நோயுற்றால், குறிப்பாக, ஒருவர் நீண்ட காலமாக நோயுற்றால், அவர்களைப்பற்றி அக்கம்பக்கத்தில் உள்ளவர்களோடு, உறவுகளோடு பேசி, ஆறுதல் தேடுவோம். ஆனால், ஒரு சில நோய்களைப்பற்றி பேசுவதற்குத் தயங்குவோம். எடுத்துக்காட்டாக, குடும்பத்தில் ஒருவருக்கு தொழுநோய் உள்ளதென்பதை யாரிடமும் சொல்லமாட்டோம். அந்த நோய், படிப்படியாக முற்றுகையில், பிறருக்குத் தெரியவரும். அதேபோல், குடும்பத்தில் ஒருவருக்கு, குறிப்பாக, இளவயதுள்ள ஒருவருக்கு, வலிப்பு நோய் இருப்பதை யாரிடமும் வெளிப்படுத்த மாட்டோம். அவர், என்றாவது ஒருநாள், வீட்டுக்கு வெளியே, அந்த நோயின் காரணமாகத் துன்புற நேர்ந்தால், அவ்வேளையில், அதுவரை மூடிவைத்த இரகசியம், வெளியே வந்துவிடும்.

கொடியப் பழக்கங்களுக்கு அடிமையான ஒருவரோடு, அல்லது, நோயுற்ற ஒருவரோடு குடும்பத்தினர் மேற்கொள்ளும் போராட்டங்களை, மாற்கு நற்செய்தி 9ம் பிரிவில் கூறப்பட்டுள்ள புதுமை, நமக்கு நினைவுபடுத்துகின்றது. இயேசு வாழ்ந்த காலத்தில், வலிப்பு நோய் உள்ளவரை, தீய ஆவி பீடித்த ஒருவராக இஸ்ரயேல் மக்கள் எண்ணி வந்தனர். குழந்தைப்பருவம் முதல் இந்த நோய் உள்ளதென்பதை உணர்ந்த அந்தப் பெற்றோர், அதைத் தீர்ப்பதற்கு பல வழிகளில் முயன்று, தோற்றுப்போயிருக்க வேண்டும். இப்போது, அச்சிறுவனின் தந்தை இயேசுவைத் தேடி வந்துள்ளார். அச்சிறுவனை தன்னிடம் கொணரும்படி இயேசு கூறியதும், அங்கு நிகழ்ந்ததை நற்செய்தியாளர் மாற்கு இவ்விதம் விவரிக்கிறார்:
மாற்கு 9:19-22
அவனை என்னிடம் கொண்டுவாருங்கள்என்று இயேசு கூறினார். அவர்கள் அவனை அவரிடம் கொண்டுவந்தார்கள். அவரைக் கண்டவுடன் அந்த ஆவி அவனுக்கு வலிப்பு உண்டாக்க, அவன் தரையில் விழுந்து புரண்டான்; வாயில் நுரை தள்ளியது. அவர் அவனுடைய தந்தையைப் பார்த்து, “இது இவனுக்கு வந்து எவ்வளவு காலமாயிற்று?” என்று கேட்டார். அதற்கு அவர், “குழந்தைப் பருவத்திலிருந்து இது இருந்துவருகிறது. இவனை ஒழித்துவிடத் தீயிலும் தண்ணீரிலும் பலமுறை அந்த ஆவி இவனைத் தள்ளியதுண்டுஎன்றார்.

தன் மகனின் நிலையை ஊரார் முன்னிலையில் இயேசுவிடம் விளக்கியபோது, அத்தந்தையின் உள்ளம் வெகுவாகக் காயப்பட்டிருக்க வேண்டும். இந்த விளக்கங்களுக்குப் பிறகு, அவர் இயேசுவிடம் எழுப்பும் ஒரு வேண்டுதல், நம் உள்ளங்களைத் தொடுகிறது. தன் மகன் குணம்பெறவேண்டுமென்று அந்தத் தந்தை மேற்கொண்ட பல முயற்சிகள் தோல்வியடைந்தால், மனம் சோர்ந்துபோயிருந்த தந்தை, தயக்கத்துடன் எழுப்பும் அவ்வேண்டுதலும், அதற்கு இயேசு கூறிய பதிலும் நம்மைச் சிந்திக்கத் தூண்டுகின்றன.
மாற்கு 9:22-24
சிறுவனின் தந்தை உம்மால் ஏதாவது செய்ய இயலுமானால் எங்கள்மீது பரிவு கொண்டு எங்களுக்கு உதவி செய்யும்என்றார். இயேசு அவரை நோக்கி, “இயலுமானாலா? நம்புகிறவருக்கு எல்லாம் நிகழும்என்றார். உடனே அச்சிறுவனின் தந்தை, “நான் நம்புகிறேன். என் நம்பிக்கையின்மை நீங்க உதவும்என்று கதறினார்.

உள்ளத்தை உருக்கும் ஒரு காட்சி இது. பொதுவாக, ஆண்கள் அழக்கூடாது, அதுவும் போது இடங்களில், பலருக்கு முன் அழக்கூடாது என்பது, பல நாடுகளில் நிலவிவரும் வழக்கு. இங்கு நாம் சந்திக்கும் தந்தை, கூட்டத்தின் முன்னால் கதறி அழுகிறார். தன் மகனைக் காப்பாற்ற அவர் மேற்கொண்ட போராட்டங்கள், அதுவரைக் கண்ட தோல்விகள், எல்லாவற்றையும் உள்ளத்தில் போட்டு பூட்டிவைத்து, ஒருவேளை, இரவில், தனிமையில், அவர் அழுதிருக்கக்கூடும். அவ்விதம் தேக்கி வைத்த உணர்வுகளெல்லாம் மடைதிறந்து கொட்டுகின்றன, இயேசுவுக்கு முன். அவர் உள்ளத்தின் காயங்களெல்லாம் இயேசுவுக்கு முன்னால் திறக்கப்படுகின்றன.

இயேசு ஒரு சராசரி மந்திரவாதியாக இருந்திருந்தால், 'உம்மால் இயலுமானால் எங்களுக்கு உதவி செய்யும்' என்று அந்தத் தந்தை கூறியதை, தன் மந்திரச் சக்திக்கு விடுக்கப்பட்ட ஒரு சவாலாகக் கருதி, தன் மந்திரசக்தியைத் தாறுமாறாகப் பயன்படுத்தியிருப்பார். ஆனால், இயேசு மந்திரவாதி அல்ல, மக்களின் பிணிதீர்க்க வந்த மனுமகன். எனவே, தன் சக்தி மீது சாய்ந்து நின்ற அந்தத் தந்தையை, அவர் கொண்டிருந்த நம்பிக்கையின் மீது சாயும்படி செய்கிறார்: "இயலுமானாலா? நம்புகிறவருக்கு எல்லாம் நிகழும்" என்று அந்தத் தந்தைக்கு உறுதி அளிக்கிறார். மகன் குணமாகும் அந்நேரத்தில், தந்தையும் குணமாகிறார். தான் இத்தனை ஆண்டுகளாக நம்பிவந்த இறைவன் தன்னை கைவிடவில்லை என்ற புத்துணர்வுடன், நலமடைந்த தன் மகனை அணைத்தபடி தந்தை இல்லம் திரும்புகிறார்.

இந்தத் தந்தை, தன் மகனது குறையை விளக்கும் வரிகள், அழிவைத் தேடிக்கொள்ளும் பல பழக்கங்களுக்கு அடிமையாகிப் போன இளையோரைப் பற்றி சிந்திக்க நமக்கொரு வாய்ப்பைத் தருகின்றன. போதைப்பொருள்களுக்கு அடிமையாவது, பணம் படைத்தவர்கள் மட்டுமென்று நாம் எண்ணியிருந்த காலம் உண்டு. ஆனால், இப்பழக்கம், மனித சமுதாயத்தில், ஏழை, பணக்காரர் என்ற எல்லா நிலையினரிடையேயும், எல்லா வயதினரிடையேயும் இருப்பது, அதிர்ச்சி தரும் உண்மை. குறிப்பாக, அண்மைய சில ஆண்டுகளாக, பள்ளிச் சிறுவர்கள் நடுவே, போதைப்பொருள் பயன்பாடு அதிகரித்துள்ளது என்பது, நம்மை நிலைகுலையைச் செய்துள்ள உண்மை. இதைவிட இன்னும் கொடுமையான ஓர் உண்மை என்னெவெனில், சிறுவர் சிறுமியர் விரும்பிச் சாப்பிடும் மிட்டாய்களில் போதைதரும் பொருள்கள் கலக்கப்பட்டுள்ளன என்பதுதான்.
இவ்வாண்டு (2016) ஜூலை மாதம் 5ம் தேதி வெளியான ஒரு செய்தியில், சென்னையில், போதைப்பொருள் கலந்த மிட்டாய்கள் பள்ளிச் சிறுவர்கள் மத்தியில் விற்கப்பட்டன என்றும், இந்த மிட்டாய்கள் பீஹார் மாநிலத்தில் செய்யப்பட்டு, சென்னைக்கு இறக்குமதியாயின என்றும் கூறப்பட்டது. இதில், இன்னும் வேதனையான ஒரு பின்னணி என்னவெனில், இதேபோன்ற மிட்டாய்கள் ஐந்து வருடங்களுக்கு முன்பு ஒருமுறை கைப்பற்றப்பட்டன என்றும், அவ்வேளையில், தகுந்த நடவடிக்கை எதுவும் எடுக்காமல் அந்த வழக்கு முடிக்கப்பட்டது என்றும் அச்செய்தியில் கூறப்பட்டுள்ளது.

மதுவுக்கும், போதை பொருள்களுக்கும் அடிமையாகி வாழ்வைத் தொலைத்துவிட்ட பல இளையோரை மீண்டும் வாழ்வுக்குக் கொண்டுவரப் போராடும் பெற்றோர், குடும்பத்தினர் எல்லாரையும் பெருமையோடு இப்போது நினைத்துப் பார்ப்போம்.
அந்த மறு வாழ்வு மையங்களில் உடல் விறைத்து, வாயில் நுரை தள்ளி படுத்திருக்கும் மகனுக்கு, அல்லது, மகளுக்கு அருகே, இரவும் பகலும் கண் விழித்து, தவமிருக்கும் பெற்றோரை, அல்லது, வாழ்க்கைத் துணையைப் பார்த்து, விசுவாசப் பாடங்களை நாம் கற்றுக்கொள்ள வேண்டும். இந்த மறு வாழ்வு மையங்களில் மேற்கொள்ளப்படும் முயற்சிகள் ஒரு நாள், இரு நாளில் முடியும் கதையல்ல. பல வாரங்கள், பல மாதங்கள் நடக்கும் சிலுவைப் பாதை.
இந்த மறுவாழ்வு மையங்களில் இளையோரும், அவர்களது குடும்பங்களும் மேற்கொள்ளும் முயற்சிகளைக் கண்டு எல்லாரும் மகிழ்வடையப் போவதில்லை. முக்கியமாக, இவர்களுக்கு, போதைப்பொருள்களை வழங்கி வரும் வியாபாரிகள், இந்த மறு வாழ்வு முயற்சிகளுக்கு எதிரிகள்.
2009ம் ஆண்டு, செப்டம்பர் மாதத் துவக்கத்தில் மெக்ஸிகோவின் புறநகர் பகுதியில் நடந்த ஒரு சம்பவம் நம்மை நிலை குலையச் செய்கிறது. நம் விசுவாசத்திற்கு மீண்டும் ஒரு சவாலைத் தருகிறது. மெக்சிகோ நகருக்கருகே, ஒரு மறுவாழ்வு மையத்தில், ஒரு நாள் பட்டப்பகலில், துப்பாக்கி ஏந்திய இரண்டு அல்லது மூன்று பேர் நுழைந்தனர். போதைப் பழக்கத்திலிருந்து விடுதலை பெற முயற்சிகளை மேற்கொண்டிருந்த 17 இளைஞர்களை அந்த மையத்தின் வாசலுக்கு இழுத்துச் சென்றனர். வரிசையாக அவர்களை நிறுத்தி, ஒருவர் பின் ஒருவராகச் சுட்டுக்கொன்றனர். போதைப் பழக்கத்திலிருந்து விடுதலை பெற விழைந்தவர்களுக்கு, இவர்கள், நிரந்தர விடுதலை தந்துவிட்ட வெறியில் மறைந்து விட்டனர். காவல் துறையினர் கொலையாளிகளைக் கண்டுபிடிக்கவில்லை என்று, அடுத்தநாள் செய்தித்தாள்கள் கூறின. அவர்கள் இதுவரை கண்டுபிடிக்கப்பட்டிருப்பார்களா என்பது, பெரிய கேள்விக்குறியே!

போதைப்பொருள் வியாபாரம் இன்று உலகத்தில் பல இலட்சம் கோடி டாலர்கள் மூலதனத்துடன் நடத்தப்பட்டு வருகிறது. அரசு அதிகாரிகளின் ஆதரவுடன் நடக்கும் இந்தத் தொழிலால் அழியும் குடும்பங்களின் கதறல்களை இன்றைய விவிலியத் தேடலில் ஓரளவு கேட்க முயன்றோம். "நான் நம்புகிறேன். என் நம்பிக்கையின்மை நீங்க உதவும்" என்று சிறுவனின் தந்தை எழுப்பிய கதறலைப்போல், இந்த உள்ளங்கள் எழுப்பும் கதறல்கள், கட்டாயம், அந்த விண்ணகக் கதவுகளைத் திறக்கும். இப்புதுமையின் இறுதி வரிகள் இதோ:
மாற்கு 9: 26-27
தீய ஆவி அலறி, அவனுக்கு மிகுந்த வலிப்பு உண்டாக்கி, வெளியேறியது. அச்சிறுவன் செத்தவன் போலானான். ஆகவே அவர்களுள் பலர், “அவன் இறந்துவிட்டான்என்றனர். இயேசு அவன் கையைப் பிடித்துத் தூக்கிவிட்டார். அவனும் எழுந்தான்.
போதைப்பொருள் பயன்பாட்டினாலும், நோயினாலும் வாழ்வை இழந்துவரும் பலர், உலகின் கண்களுக்கு இறந்தவர்கள்போல் தெரிந்தாலும், இறைவன் அவர்களைத் தொட்டு, தூக்கி நிறுத்தி, மறுவாழ்வு வழங்குவார் என்று, இரக்கத்தின் யூபிலி ஆண்டில் நம்பிக்கை கொள்வோம்.