Showing posts with label The Book of Job - Part 29. Show all posts
Showing posts with label The Book of Job - Part 29. Show all posts

19 July, 2017

விவிலியத்தேடல் : வேதனை வேள்வியில் யோபு – பகுதி 29


Care for the elderly


பாசமுள்ள பார்வையில் ஒருவர் மற்றொருவருக்கு வானதூதர்!

முதியோர் இல்லம் ஒன்றில் தன்னார்வப்பணியாளராகச் சேர்ந்த ஓர் இளம்பெண், தன் அனுபவத்தைப் பகிர்ந்துகொள்கிறார்:
அந்த முதியவரைக் காண நான் சென்றபோது, அவரது அறை இருளில் மூழ்கியிருந்தது. அவர் உறங்கியிருக்கக்கூடும் என்றெண்ணியவாறு கட்டிலை நெருங்கியபோது, அவர் விழித்திருப்பது தெரிந்தது. அத்துடன், அவரது உடல் நடுங்கிக் கொண்டிருந்தது, முகத்தில் மிகுந்த கலவரம் காணப்பட்டது. அவரது கரங்களைப் பற்றி, அமைதிப்படுத்த முயன்றேன். ஐந்து நிமிடம் சென்று, அவர் சிறிது கண்ணயர்ந்ததும், அவ்வறையைவிட்டு வெளியேறினேன்.
இரு நாள்கள் சென்று மீண்டும் நான் அவரைக் காணச் சென்றபோது, அந்த அறை முழுவதும் வெளிச்சமாக இருந்தது. அந்த முதியவரின் மகள் கட்டிலருகே அமர்ந்திருந்தார். முதியவரும் தெளிவான முகத்துடன், என்னைப் பார்த்து சிரித்தார். இரு நாள்களுக்கு முன் நான் அங்கு வந்து சென்றதையும், ஒருவேளை அவருக்கு அது நினைவிருக்காது என்றும் நான் சொன்னேன். உடனே, அந்த முதியவர், "உங்களை எனக்கு நன்றாக நினைவிருக்கிறது. நீங்கள்தான், இருள்சூழ்ந்த என் உலகில் நம்பிக்கையைக் கொண்டுவந்த வானதூதர்" என்று கூறினார். அவர் சொன்னதை நான் நம்பவில்லை என்பதை புரிந்துகொண்ட அவர், அன்று நான் உடுத்தியிருந்த உடை, நான் அவரைக் காணச் சென்ற நேரம், அவரிடம் சொன்ன ஒருசில வார்த்தைகள், ஆகியவற்றைத் துல்லியமாகக் கூறினார். எனக்கு ஒரே ஆச்சரியம்.
நான் அன்று செய்ததெல்லாம், ஐந்து நிமிடங்கள் அவர் கரங்களைப் பற்றியிருந்தது ஒன்றுதான். இருந்தாலும், நான் அவரை, சாவின் வாசலிலிருந்து மீண்டும் வாழ்வுக்கு அழைத்து வந்தேன் என்றெல்லாம் அவர் கூறினார். அந்த 5 நிமிட அனுபவம் இவ்வளவு ஆழமான பாதிப்பை உருவாக்கும் என்று நான் கனவிலும் நினைக்கவில்லை. அன்று முதல், வாழ்வை, நான் காணும் கண்ணோட்டம் மாறியது.
இது நடந்து, இப்போது, 25 ஆண்டுகள் ஆகிவிட்டன. இருப்பினும், அந்த முதியவரின் நினைவு எனக்குள் நேர்மறையான மாற்றங்களை இன்றும் உருவாக்கி வருகிறது. அவரது வாழ்வில் நுழைந்த வானதூதர் என்று அவர் என்னைப்பற்றிக் கூறினார். ஆனால், அவர், என் வாழ்வில் நுழைந்த வானதூதர் என்பதை, நான் முழுமையாக நம்புகிறேன்.

Job praying to God

வேதனை வேள்வியில் யோபு – பகுதி 29

நம் கற்பனையின் உதவியுடன், வழக்காடு மன்றம் ஒன்றில் நுழைவோம். அங்கு நடைபெறும் வழக்கில், வாதாடும் வழக்கறிஞர்கள், மாறி, மாறி, தங்கள் வாதங்களை முன்வைக்கின்றனர். அவ்விரு வழக்கறிஞர்களும், நீதிபதியின் முன் இறுதியாக ஒரு முறை தங்கள் சார்பில் உள்ள கருத்துக்களைத் தொகுத்து வழங்கியபின், 'தேட்ஸ் ஆல் யுவர் ஆனர்', அதாவது, 'மாண்புக்குரிய நீதிபதி அவர்களே, நான் சொல்ல விரும்பும் அனைத்தும் இதுதான்" என்று கூறி முடிக்கின்றனர்.
நாம் விவிலியத் தேடலை மேற்கொண்டுள்ள யோபு நூலிலும் வழக்கு ஒன்று நடைபெற்று வருகிறது, ஒரு சில மாற்றங்களுடன். இங்கு, வழக்கறிஞர்களுக்குப் பதிலாக, யோபு ஒரு புறமும், அவரது நண்பர்களான, எலிப்பாசு, பில்தாது, சோப்பார் என்ற மூவரும் இணைந்து, மறுபுறமும் இருந்து, இந்த வழக்கை நடத்தி வருகின்றனர். நீதிபதியாக இருக்கவேண்டிய இறைவன், இதுவரை இந்த நீதிமன்றத்திற்கு வரவில்லை.

இறைவன் அங்கில்லை என்பதை, தங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்திக்கொண்டு, மூன்று நண்பர்களும், இறைவனையும், அவரது எண்ணங்களையும் அறிந்தவர்கள்போல் யோபின் மீது பழிகளைச் சுமத்தி, அவர்களே தீர்ப்பையும் எழுத முயன்றனர். யோபு தன் குற்றங்களை ஒப்புக்கொள்ளவேண்டுமென்று வற்புறுத்தினர். யோபோ, அந்த மூவருக்கும் பதில் கூறுவதோடு தன் வாதங்களை நிறுத்திக்கொள்ளவில்லை. கடவுளை தன்னால் காணமுடியவில்லையெனினும், யோபு அவரிடம் தொடர்ந்து பேசி வந்தார்.
யோபு நூல், 29 முதல், 31 முடிய உள்ள இந்த மூன்று பிரிவுகளில், யோபு தன் வாதங்களை இறுதி முறையாகக் கூறி, 'தேட்ஸ் ஆல் யுவர் ஆனர்', என்று முடிப்பதுபோல் இம்மூன்று பிரிவுகள் அமைந்துள்ளன. இதற்குப்பின், 32ம் பிரிவு முதல், இந்நூலின் இறுதிப் பிரிவான 42 முடிய உள்ள 11 பிரிவுகளில், யோபு பேசுவது, 7 இறைச்சொற்றொடர்கள் மட்டுமே. யோபின் நண்பர்களோ இந்நூலின் இறுதிவரை எதுவும் பேசவில்லை.

தன் இறுதி வாதத்தை, யோபு, பசுமையான நினைவுகளுடன் துவங்குகிறார்:
யோபு 29: 1-5
யோபு இன்னும் தொடர்ந்து பேசிய உரை: காண்பேனா முன்னைய திங்கள்களை; கடவுள் என்னைக் கண்காணித்த நாள்களை! அப்போது அவர் விளக்கு என் தலைமீது ஒளிவீசிற்று; அவரது ஒளியால் இருளில் நான் நடந்தேன். அப்போது என் இளமையின் நாள்களில் நான் இருந்தேன்; கடவுளின் கருணை என் குடிசை மீது இருந்தது. அன்று வல்லவர் என்னோடு இருந்தார்; என் மக்கள் என்னைச் சூழ்ந்திருந்தனர்.
தன் இல்லம் முழுவதும் இறைவனின் ஆசீரால் நிறைந்திருந்தது என்பதை இவ்வரிகளில் மனநிறைவோடு கூறும் யோபு, ஊருக்குள் தான் பெற்ற மரியாதையையும் அசைபோடுகிறார்:
யோபு 29: 7-9
நகர வாயிலுக்கு நான் செல்கையிலும், பொது மன்றத்தில் என் இருக்கையில் அமர்கையிலும், என்னைக் கண்டதும் இளைஞர் ஒதுங்கிக்கொள்வர்; முதிர்ந்த வயதினர் எழுந்து நிற்பர். உயர்குடி மக்கள் தம் பேச்சை நிறுத்துவர்; கைகட்டி, வாய்பொத்தி வாளாவிருப்பர்.

ஒருவர், தன் வீட்டிலும், நாட்டிலும் மதிப்புடன் நடத்தப்பட்டால், அதுவே, அவர் பெறக்கூடிய உண்மையான ஆசீராக இருக்கும். ஊரிலும், நாட்டிலும் புகழ்பெற்று வாழும் பலர், வீட்டில் அமைதியின்றி, உண்மையான மதிப்பின்றி வாழ்வது, வரலாற்றிலும், இன்றைய நடைமுறை உலகிலும், நாம் காணும் உண்மை. வீட்டுக்குள் உண்மையான மதிப்பின்றி, வெளி உலகில் ஒருவர் பெறும் மதிப்பு, அவரிடமுள்ள செல்வம், பதவி, அதிகாரம் என்ற வெளி அடையாளங்களுக்கு வழங்கப்படும் போலி மதிப்பே தவிர, அவரது குணநலன்களின் அடிப்படையில், அவருக்குத் தரப்படும் உண்மை மதிப்பு அல்ல. ஊருக்குள் நல்லவர்போல் நடித்து, பேரும், புகழும் பெறும் சிலர், வீட்டுக்குள் தங்கள் சுய உருவத்தைக் காட்டுவதும், அதனால், வீட்டிற்குள், அவர்கள் மதிப்பிழந்து வாழ்வதும் நமக்குத் தெரிந்த உண்மைகள்.

இன்னும் சிலர், ஊருக்குள் முகமூடி அணிந்து வாழ்வதுபோலவே, வீட்டிற்குள்ளும் முகமூடியணிந்து வாழும் சூழல்கள் எழலாம். ஆனால், அவர்கள் கண்ணாடி முன் நின்று தங்களையே காணும்போது, கண்ணாடியில் தெரியும் தன் உண்மை பிம்பத்திற்கு பதில் சொல்ல வேண்டியிருக்கும். கண்ணாடி முன் நிற்கும்போதும், அவர்களால், முகமூடி அணிந்து, நல்லவர் போல் நடிக்கமுடியுமா என்பது சந்தேகம்தான்.
Peter Dale Wimbrow என்பவர் எழுதிய, "The Man in the Glass" அதாவது, 'கண்ணாடியில் உள்ள மனிதர்' என்ற கவிதையிலிருந்து ஒரு சில வரிகள், இந்த உண்மையை நமக்குச் சொல்லித்தருகின்றன:
உன் விருப்பங்களை அடையும் போராட்டத்தில் நீ வென்றதால்,
இவ்வுலகம் உன்னை மன்னனென முடி சூட்டி மகிழலாம்.
அவ்வேளையில், உன் கண்ணாடி முன் நின்று,
அங்கு தோன்றுபவர், உன்னைப்பற்றி என்ன சொல்கிறார் என்று கேள்.

இவ்வுலகில் உள்ள அனைவரையும் நீ ஏமாற்றி,
அவர்களிடம் பாராட்டுக்களைப் பெற்றிருக்கலாம்.
ஆனால், உனக்கு உரித்தான, உண்மையான பாராட்டைத் தரக்கூடியவர்,
கண்ணாடியில் உனக்குமுன் நிற்பவர்மட்டுமே!

வீட்டிலும், நாட்டிலும், ஒருவர் உண்மையான மதிப்பைப் பெறவேண்டுமெனில், கண்ணாடிக்கு முன்பு அவர் நிற்கும் வேளையில், அங்கு தெரிபவர், அவர் மீது உண்மையான மதிப்பு கொண்டவராக இருக்கவேண்டும். ஒருவர், தன்னுடைய செல்வம், அதிகாரம், பட்டம், பதவி இவற்றைக் கொண்டு தேடிக்கொள்ளும் மதிப்பைவிட, அவருடைய நற்பண்புகளைக் கொண்டு தேடிக்கொள்ளும் மதிப்பே உண்மையானதாக, நிலையானதாக இருக்கும். தனக்கு வந்து சேர்ந்த மதிப்பிற்கு, யோபு கூறும் காரணங்கள், இந்த உண்மையைத் தெளிவாக்குகின்றன:
யோபு 29: 12-17, 24-25
என்னைக் கேட்ட செவி, என்னை வாழ்த்தியது; என்னைப் பார்த்த கண் எனக்குச் சான்று பகர்ந்தது. ஏனெனில், கதறிய ஏழைகளை நான் காப்பாற்றினேன்; தந்தை இல்லார்க்கு உதவினேன். அழிய இருந்தோர் எனக்கு ஆசி வழங்கினர்; கைம்பெண்டிர்தம் உள்ளத்தைக் களிப்பால் பாடச் செய்தேன். அறத்தை அணிந்தேன்; அது என் ஆடையாயிற்று. நீதி எனக்கு மேலாடையும் பாகையும் ஆயிற்று. பார்வையற்றோர்க்குக் கண் ஆனேன்; காலூனமுற்றோர்க்குக் கால் ஆனேன். ஏழைகளுக்கு நான் தந்தையாக இருந்தேன்; அறிமுகமற்றோரின் வழக்குகளுக்காக வாதிட்டேன். கொடியவரின் பற்களை உடைத்தேன்; அவரின் பற்களுக்கு இரையானவரை விடுவித்தேன்... நம்பிக்கை இழந்தோரை என் புன்முறுவல் தேற்றியது; என் முகப்பொலிவு உரமூட்டியது. நானே அவர்களுக்கு வழியைக் காட்டினேன்; தலைவனாய்த் திகழ்ந்தேன்; வீரர் நடுவே வேந்தனைப்போல் வாழ்ந்தேன்; அழுகின்றவர்க்கு ஆறுதல் அளிப்பவன் போல் இருந்தேன்.

Kamaraj – 114th Birthday

வீட்டிற்குள் நிறைவான ஆசீரையும், ஊருக்குள் மதிப்பும் பெற்றிருந்த யோபைப்பற்றி எண்ணிப்பார்க்கும்போது, ஒரு சில உன்னதத் தலைவர்களின் வாழ்வுக் குறிப்புகள், நம் நினைவில் வலம்வருகின்றன. அவர்களில் ஒருவர், கறுப்புக்காந்தி என்றும் கர்மவீரர் என்றும் புகழப்படும் காமராஜ் அவர்கள். அண்மையில், அதாவது, ஜூலை 15, கடந்த சனிக்கிழமையன்று, காமராஜ் அவர்களின் 114வது பிறந்தநாளை நினைவுகூர்ந்தோம். காமராஜ் அவர்களின் வாழ்வில் நிகழ்ந்தவை, நம்மை ஆச்சரியத்தில் ஆழ்த்துகின்றன. 'இப்படியும் ஒரு தலைவர், இந்தியாவில் வாழ்ந்தாரா?' என்று வியந்து கேட்குமளவு, அவர், வீட்டிலும், நாட்டிலும் அப்பழுக்கற்ற முறையில் வாழ்ந்தார்.

உன்னத பண்புகள் கொண்ட காமராஜ் அவர்கள், தன் வாழ்வின் இறுதி நாள்களில், அன்றைய அரசியல் தலைவர்களின் நெறிபிறழ்ந்த செயல்களால் மனம் நொந்துப் போனார். தலைவர்களின் தன்னலப்போக்கு, காமராஜ் அவர்களின் இதயத்தை பாரமாக அழுத்தியிருக்கவேண்டும். எனவே, 1975ம் ஆண்டு, காந்தி பிறந்த நாளான, அக்டோபர் 2ம் தேதி, அவரது இதயத்துடிப்பு அடங்கியது. பொதுவாக, எந்த ஒரு தலைவரைப்பற்றியும் சிந்திக்கும்போது, அவரது எண்ணங்கள், அடுத்த தலைமுறைக்கு, கூற்றுகளாக, மேற்கோள்களாக விட்டுச் செல்லப்படும். காமராஜ் அவர்கள், அத்தகைய கூற்றுகளை அதிகமாக விட்டுச் செல்லவில்லை. 'சொல்லுதல் யார்க்கும் எளிய அரியவாம் சொல்லிய வண்ணம் செயல்' என்ற வள்ளுவரின் கூற்றுக்கேற்ப, காமராஜ் அவர்கள், சொற்களைவிட, செயல்கள் வழியே, தன் முத்திரையை இவ்வுலகில் பதித்துச் சென்றார். எனவேதான் அவரை, 'கர்மவீரர்' என்று வரலாறு புகழ்கிறது.

தன் வீடு பார்க்காமல், வாழ்வு பார்க்காமல், நாடு முன்னேற, நாளும் உழைத்த காமராஜரைப் போன்ற ஒரு தலைவரை, இந்த நாடு பார்த்ததுண்டா என்ற கேள்வி எழுகிறது. இனியொரு தலைவர் இவ்விதம் பிறக்கமாட்டாரா என்ற ஏக்கத்தை எழுப்பும்வண்ணம் வாழ்ந்த காமராஜ் அவர்களின் வாழ்வு, நாட்டிற்கு நல்லது செய்யவிழையும் இளையோருக்கு தூண்டுதலாக இருக்கவேண்டும் என்று இறைவனை மன்றாடுவோம்.