Showing posts with label The Book of Job - Part 41. Show all posts
Showing posts with label The Book of Job - Part 41. Show all posts

11 October, 2017

விவிலியத்தேடல் : வேதனை வேள்வியில் யோபு – பகுதி 41

Father forgive them…

யோபு, தான் அனுபவித்த துன்பங்களுக்கு காரணம் தெரியாமல், அத்துன்பங்கள் எங்கிருந்து, யாரிடமிருந்து வந்தன என்பதை அறியாமல் தவித்தார். அவரது துன்பங்களுக்கு அவரே காரணம் என்று, அவரது நண்பர்கள் அவரை திசை திருப்ப முயன்றனர். யோபோ, அவர்களது சொல்லை நம்பாமல், தன் துன்பங்களுக்குக் காரணம் தேடிக்கொண்டிருந்தார். ஒருசில வேளைகளில், இறைவனே தன்னை இவ்வாறு துன்புறுத்துகிறார் என்றும் கூறிவந்தார்.
இதற்கு மாறாக, தன் துன்பங்களுக்குக் காரணம் யார் என்பது இயேசுவுக்குத் தெளிவாகத் தெரிந்தது. இருப்பினும், அவர்கள் செய்வதை அறியாமையில் செய்கின்றனர் என்ற காரணத்தைச் சொல்லி, அவர்களுக்காக இறைவனிடம் மன்றாடுகிறார், இயேசு. தன் கண்முன்னே, அதுவும், தனக்கே கொடுமைகள் நிகழ்வதை அறிந்தும், அதற்குக் காரணமானவர்கள், அறியாமல் செய்கின்றனர் என்று இயேசு கூறுவதைப் புரிந்துகொள்வது கடினமாக உள்ளது. இருப்பினும், முயற்சி செய்வோம். நமது முயற்சியை ஒரு கற்பனை நிகழ்வுடன் துவக்குவோம்.

வீட்டிலிருந்த, சிறிய, அழகானப் பளிங்குச்சிலை ஒன்று உடைந்துவிட்டது என்று கற்பனை செய்துகொள்வோம். இது விபத்தா? தவறா? குற்றமா? அல்லது மன்னிக்க முடியாத மாபெரும் குற்றமா?... வழக்கை ஆரம்பிப்போம். பளிங்குச் சிலை உடைந்தது ஒரு நிகழ்வு. அதை விபத்தாக, குற்றமாக, இன்னும் பலவாறாகப் பார்ப்பதற்கு, பின்னணி தேவை. அதைவிட, எந்த கண்ணோட்டத்தில் அந்த நிகழ்வைப் பார்க்கிறோம் என்பதும் முக்கியமான ஓர் அம்சம்.

உடைந்தது எப்படிப்பட்ட சிலை? சந்தையில், குறைந்த விலைககு வாங்கப்பட்டதா? அல்லது, நமது தந்தையோ, உறவினரோ, அயல் நாட்டிலிருந்து வாங்கித் தந்த பரிசா? அல்லது, பல ஆண்டுகளாய், வீட்டில் பாதுகாக்கப்பட்டு வரும் பாரம்பரியச் சொத்தா? அல்லது, நாம் தினமும் செபங்கள் செய்வதற்கு, நம் வீட்டில் வைக்கப்பட்டுள்ள திரு உருவமா? உடைந்தது எது என்ற ஒரு கேள்விக்கே இத்தனை கோணங்கள் இருந்தால், இன்னும் மற்ற கேள்விகளையும் ஆராய வேண்டும். வழக்கைத் தொடர்வோம்.
உடைத்தது யார்? நம் வீட்டின் செல்லப் பிள்ளையா? வீட்டுக்கே பெரியவரா? அல்லது வீட்டில் பணி செய்யும் ஒருவரா?
எப்படி உடைந்தது? தவறுதலாக, கவனக்குறைவாக, தட்டிவிடப்பட்டதா? அல்லது, பலமுறை அதைப்பற்றி எச்சரிக்கைகள் கொடுத்தும், அவற்றை சட்டை செய்யாததால் ஏற்பட்டதா? அல்லது கோபத்தில் வேண்டுமென்றே அது உடைக்கப்பட்டதா?

எந்த ஒரு நிகழ்வுக்கும் பின்னணியில் பல கோணங்கள் உள்ளன. ஒவ்வொரு கோணமும் ஒரு கண்ணோட்டமாகும். அந்தக் கண்ணோட்டத்தைப் பொருத்து, அந்த நிகழ்வு, ஒரு விபத்தா, தவறா, குற்றமா, என்பதெல்லாம் முடிவாகும்.
விபத்து என்றால், மன்னிப்பது எளிதாகும். தவறு என்றால், குற்றம் என்றால், பெரும் குற்றம் என்றால், மன்னிப்பது கடினமாகும். நிகழ்வின் தீவிரம் எவ்வளவுக்கெவ்வளவு அதிகமாகிறதோ, அவ்வளவுக்கவ்வளவு மன்னிப்பது கடினமாகும். இந்த தீவிரத்தைக் கூட்டுவதும், குறைப்பதும் எது? நிகழ்வு அல்ல. அதனைக் காணும் கண்ணோட்டம். கண்ணோட்டம் மாறினால், மன்னிப்பு எளிதாகும். மன்னிப்பு எளிதானால், வாழ்வு நலமாகும்.

இந்த வழக்கை ஆரம்பித்ததே, தீர்ப்பு சொல்வதற்கு அல்ல. வாழ்வில் நடக்கும் எந்த ஒரு நிகழ்வையும், சரியான கண்ணோட்டத்துடன் காணும் மனமிருந்தால், மன்னிக்கமுடியும் என்பதைப் புரிந்துகொள்ள.
ஒரு சிலை உடையும்போதே இத்தனை சிக்கல்கள் இருக்கும்போது, மனம் உடைந்து போகும்போது, இன்னும் எத்தனை சிக்கல்கள் எழும்? நம் மனதை உடையவிடுவதும், உடையாமல் பாதுகாப்பதும், நம் கைகளில், நம் கண்ணோட்டத்தில் உள்ளன.

நமது வழக்கை மீண்டும் எடுத்துக்கொள்வோம். நம் குடும்பத்தின் கள்ளம் கபடமற்ற குழந்தை ஒன்று, தவழ்ந்து சென்று, அந்தப் பளிங்குச் சிலையை  உடைத்துவிட்டதென வைத்துக்கொள்வோம். உடைத்தது மட்டுமல்ல, அந்தச் சிலை உடைந்த சப்தத்தில், குழந்தை வீரிட்டு அழுகிறது, அல்லது அந்த சிலை உடைந்தபோது அதன் ஒரு துண்டு குழந்தையைக் காயப்படுத்தி விடுகிறது. உடைந்த சிலையை விட, அழுகின்ற குழந்தை, அல்லது காயப்பட்ட குழந்தை நம் முழு கவனத்தைப் பெறுமல்லவா?
இந்த மாற்றம் எப்படி ஏற்பட்டது? சிலை உடைந்தது, குழந்தை அறியாமல் செய்துவிட்ட ஒரு விபத்து என்ற கண்ணோட்டத்தால் மாற்றம் ஏற்பட்டது; சிலையை விட, குழந்தை நமக்கு முக்கியமாகிப் போனதால் மாற்றம் ஏற்பட்டது. தவறு, மன்னிப்பு என்ற எண்ணங்களையெல்லாம் கடந்து, அழுகின்ற குழந்தையை வாரி அணைக்கவேண்டும் என்ற பாசமும், அன்பும், மற்ற எண்ணங்களை, உணர்வுகளை புறந்தள்ளி விடுகின்றனவே! அது ஓர் அழகிய மாற்றம்!

அறியாமல் நடந்துவிட்டதாய் நாம் உணரும் ஒரு நிகழ்வுக்கு மன்னிப்பளிப்பது எளிது. ஆனால், மனசாட்சியே இல்லாமல், திட்டமிட்டு, குற்றம் புரிவோரைச் சந்திக்கும்போது... மன்னிக்க முடியாமல் கஷ்டப்படுகிறோம். இந்தச் சூழலிலும் நம் மன்னிப்பை எப்படி எளிதாக்க முடியும் என்பதுதான், அன்று கல்வாரியில் இயேசு சொல்லித்தந்த பாடம்.

'தந்தையே, இவர்களை மன்னியும். ஏனெனில் தாங்கள் செய்வது என்னவென்று இவர்களுக்குத் தெரியவில்லை' (லூக்கா 23: 34) என்று இயேசு கூறும் இந்த அற்புத சொற்களை நாம் அடிக்கடி கேட்டுவிட்டதால், இச்சொற்களை, இயேசு, சிலுவையிலிருந்து, மிக அமைதியாக, சர்வ சாதாரணமாக, சொன்னதுபோல் உணரும் ஆபத்து உண்டு. ஆனால், இந்த வார்த்தைகள் ஒவ்வொன்றையும் சொல்வதற்கு, இயேசு, உடலளவில், மரண வேதனை அடைந்திருப்பார். அதேபோல், உள்ளத்தளவிலும், இந்த வார்த்தைகளைச் சொல்லும் உன்னத நிலைக்கு வருவதற்கு, மனிதர் என்ற முறையில், இயேசு, மிகவும் போராடியிருப்பார். அந்த போராட்டத்தின் இறுதியில், இயேசு கொண்ட கண்ணோட்டம், அதன் விளைவாய் அவர் எடுத்த முடிவு, அந்த விண்ணப்பமாய் தந்தையை நோக்கி எழுகிறது. தாங்கள் செய்வது என்னவென்று இவர்களுக்குத் தெரியவில்லை என்று சொல்கிறார்.

தெளிவாகத் திட்டமிட்டு செய்த குற்றத்தை, 'தெரியாமல் செய்ததாக' எப்படி இயேசுவால் கூறமுடிந்தது? இயேசு விண்ணகத் தந்தையிடம் போய் சொல்கிறாரா? குற்றங்களை மூடி மறைக்கிறாரா? நம் இல்லங்களில் இதையொத்த ஒரு சம்பவம் அடிக்கடி நடக்கும். தவறு செய்துவிட்ட மகனுக்காக, மகளுக்காக அப்பாவிடம் பேசும் அம்மாக்களை நினைத்துப் பார்க்கலாம். அந்தத் தவறை மூடி மறைக்கவோ, அல்லது வேறுவிதமாகச் சொல்லவோ, எத்தனை வழிகளில் அவர்கள் முற்படுவார்கள்இயேசு, யூத குருக்களின், உரோமையப் படைவீரர்களின் குற்றங்களை இறைவனிடம் சொல்வதை, இப்படி ஒரு கண்ணோட்டத்தில் பார்க்கலாம். பரிந்து பேசுவது என்று இதற்கு நாம் பெயரிடுகிறோம். இயேசு சொல்வது பொய் என்று சொல்வதற்குப் பதில், பரிவினால், அன்பினால் எழுந்த வித்தியாசமான ஒரு கண்ணோட்டம் என்று சொல்லலாம்.

உரோமையப் படைவீரர்கள், யூத மதத் தலைவர்கள் பக்கமிருந்து, இந்த சிலுவைத் தண்டனையைப் பார்க்க முயற்சி செய்வோம். தாங்கள் சித்ரவதை செய்பவர், தாங்கள் சிலுவையில் அறைந்துள்ளவர் கடவுள் என்று தெரிந்திருந்தால், உரோமைய வீரர்கள், அல்லது யூத மதத் தலைவர்கள் இப்படி செய்திருப்பார்களா? ஒரு கடவுளை, கடவுளின் மகனைக் கொல்வதற்கு யாருமே தயங்குவார்கள். ஆனால், இந்த ஆள், கடவுளாக அவர்கள் கண்களுக்குத் தெரியவில்லை. இயேசு, சாதாரணமான, ரொம்ப, ரொம்ப சாதாரணமான மனிதனாக, ஒரு தொழிலாளியாகத்தான் அவர்கள் கண்களுக்குத் தெரிந்தார். அந்த சாதாரண ஆள், தங்கள் அரசுக்கு எதிராகக் கிளம்பிவிட்டார் என்று உரோமையர்கள் நினைத்தனர். தாங்கள், இதுவரை, கட்டிக்காத்த யூத மத சட்ட திட்டங்களை எல்லாம் கேள்விக்குறியாக்கி, தாங்கள் வணங்கிவந்த யாவேயின் இலக்கணத்தையே மாற்ற முயல்கிறார் இந்த இளைஞன் என்று, யூத மதத் தலைவர்கள் நினைத்தனர். எனவே, தங்கள் அரசு அழிந்துவிடக்கூடாது என்ற வெறியில், தங்கள் சட்ட திட்டங்கள் மாறிவிடக்கூடாது என்ற மத வெறியில், இயேசு என்ற பிரச்சனையை, முளையிலேயே கிள்ளிவிட அவர்கள் எடுத்த முயற்சிதான், இந்த சிலுவை தண்டனை. அந்த வெறி, அவர்களது அறிவுக்கண்களை மறைத்துவிட்டது என்பதை முற்றிலும் உணர்ந்த இயேசு, தெரியாமல் செய்கிறார்கள் என்று, தந்தையிடம் விண்ணப்பம் தருகிறார். இது பொய் அல்ல. வேறொரு கண்ணோட்டம்.

இதையொத்த ஒரு சூழல், யோபின் வாழ்விலும் நிகழ்கிறது. யோபின் நண்பர்கள், எலிப்பாசு, பில்தாது, சோப்பார், ஆகிய மூவரும் உரோமையப் படைவீரர்களைப்போல், யூதமத குருக்களைப்போல் தங்கள் கண்ணோட்டத்திலிருந்து சிறிதளவும் மாறாமல், யோபை குற்றவாளி என்று தீர்ப்பளித்து, அவரை, மனதளவில் சித்ரவதை செய்தனர். இறுதியில், ஆண்டவர் அவர்களைக் கடிந்துகொண்டார். அது மட்டுமல்ல, அவர்கள் மீண்டும் இறைவனின் நல்லுறவைப் பெறுவதற்கு, யோபுவின் வேண்டுதல் தேவை என்பதை இறைவன் அவர்களுக்கு உணர்த்தினார்.
யோபு 42: 7-8
ஆண்டவர் எலிப்பாசைப் பார்த்துக் கூறியது; "உன்மீதும், உன் இரு நண்பர்கள் மீதும் எனக்குச் சினம் பற்றி எரிகிறது. ஏனெனில் என் ஊழியன் யோபு போன்று நீங்கள் என்னைப்பற்றிச் சரியாகப் பேசவில்லை. ஆகவே இப்பொழுது, ஏழு காளைகளையும், ஏழு ஆட்டுக் கிடாய்களையும் நீங்கள் எடுத்துக் கொள்ளுங்கள்; என் ஊழியன் யோபிடம் செல்லுங்கள்; உங்களுக்காக எரிபலியை ஒப்புக்கொடுங்கள். என் ஊழியன் யோபு உங்களுக்காக மன்றாடும் பொழுது, நானும் அவன் விண்ணப்பத்தை ஏற்றுக்கொள்வேன். என் ஊழியன் யோபு போன்று என்னைப் பற்றிச் சரியாகப் பேசாத உங்கள் மடமைக்கு ஏற்றவாறு செய்யாது விடுவேன்".

தன்னை வதைத்த நண்பர்கள் மூவருக்காகவும் யோபு ஆண்டவரிடம் செபித்தது, அவ்வளவு எளிதான செயல் அல்ல. இருப்பினும், யோபு அதை முழு மனதோடு செய்தார். யோபும், அவரது நண்பர்களும், ஒருவர் ஒருவரோடு ஒப்புரவு அடைந்து, இறுதியில் இறைவனோடும் ஒப்புரவு அடைந்ததும், யோபின் வாழ்வு முழுமையடைகிறது.
யோபு 42 10
யோபு தம் நண்பர்களுக்காக மன்றாடின பிறகு, ஆண்டவர் செல்வங்களையெல்லாம் மீண்டும் நல்கினார். மேலும் அவர் யோபுக்கு இருந்தனவற்றை எல்லாம் இரண்டு மடங்கு ஆக்கினார்.

மன்னிப்பு நம் இயல்பாகவே மாறவேண்டும் என்ற கருத்தை வலியுறுத்தும் வண்ணம் பலர் சொன்ன கருத்துக்களில், நம் உள்ளங்களில் ஆழமாய்ப் பதிபவை, Mark Twain அவர்கள் சொன்ன அறுபுதமான வார்த்தைகள்: “Forgiveness is the fragrance that the violet sheds on the heel that has crushed it.” அதாவது, தன்னை மிதித்த கால்களில், தன் நறுமணத்தை மலர் பதிக்கிறதே; அதுவே மன்னிப்பு.
நம்மைச் சுற்றியுள்ள இயற்கையில் இதுபோல் பல நூறு உதாரணங்களைக் காணலாம். தன்னைக் கசக்கிப் பிழிபவர் கையில் இனியச் சாராய் மாறுகிறதே கரும்பு... அதுவே மன்னிப்பு. தன்னைச் சுட்டெரித்தாலும் நறுமணம் தருகிறதே சந்தனம்... அதுவே மன்னிப்பு. தங்களை வெட்டுகிறார்கள், விறகாய் எரிக்கிறார்கள் என்பதற்காக மரங்கள் நிழல் தர மறுக்கின்றனவா? இல்லையே. கலீல் கிப்ரான் என்ற கவிஞர் சொன்ன வரிகள் நினைவுக்கு வருகின்றன: கொடுப்பதே மரத்தின் இயல்பு, அழகு. நிழல் கொடுக்க, கனி கொடுக்க, ஒரு மரம் மறுத்தால், அதன் இயல்பு மாறிவிடும், அது இறந்துவிடும்.

இயற்கையில் இப்படி ஒவ்வொன்றும் தங்கள் இன்னல்களைப் பெரிதுபடுத்தாமல் கொடுப்பதையே தங்கள் இயல்பாக ஆக்கிக் கொள்ளும்போது, மனித இயல்பு மட்டும், என் நேரத்திற்கு ஒன்றாய் மாறுகிறது?
வாழ்வில் அன்பையும், மகிழ்வையும் நிறைவாய் உணர்வதைவிட வேறு ஓர் உயர்ந்த இயல்பு, நிறைவு மனிதற்குக் கிடைப்பது அரிது. அந்த நிறைவை அடைவதற்கு அடித்தளம், மன்னிப்பு. மன்னிப்பு தருவதும், பெறுவதும் முழு மனித நிறைவுக்கு நம்மை இட்டுச் செல்லும்.
அசிசி நகர் புனித பிரான்சிஸ் உருவாக்கிய அமைதியின் கருவியாய் என்னை மாற்றும் என்ற அந்த அற்புத செபத்தின் ஒரு பகுதியோடு, நம் சிந்தனைகளை நிறைவு செய்வோம்.
"மன்னிப்பதாலேயே, மன்னிப்பு பெறுகிறோம்.
கொடுப்பதாலேயே பெறுகிறோம்.
இறப்பதாலேயே நிறைவாழ்வில் பிறக்கிறோம்."