Showing posts with label The Book of Job - Part 49. Show all posts
Showing posts with label The Book of Job - Part 49. Show all posts

13 December, 2017

விவிலியத்தேடல் : வேதனை வேள்வியில் யோபு – பகுதி 49


Former US First Lady Eleanor Roosevelt with the Human Rights Declartion – 1949
Stanford University Press Blog

Is the United States above the law of human rights?

பாசமுள்ள பார்வையில்: மனித உரிமைகள், நமக்கு மிக அருகில்...

1948ம் ஆண்டு, டிசம்பர் 10ம் தேதி, அதிகாலை, 3 மணிக்கு, பாரிஸ் மாநகரில் கூடியிருந்த ஐக்கிய நாடுகள் அவை, மனித உரிமைகள் அறிக்கையை வெளியிட்டது. அந்த அறிக்கை வெளியிடப்பட்டதைத் தொடர்ந்து, ஐக்கிய நாடுகள் அவைக் கூட்டங்களில், அதுவரை இடம்பெறாத ஒரு நிகழ்வு, அன்று இடம்பெற்றது. அதாவது, அந்த அவையில் கூடியிருந்த அத்தனை உறுப்பினர்களும் ஒரே நேரத்தில் எழுந்து நின்று, கரவொலி எழுப்பினர், ஒரு பெண்மணிக்காக. அந்தப் பெண்மணியின் பெயர், எலெனோர் ரூசவெல்ட் (Eleanor Roosevelt).
1933ம் ஆண்டு முதல், 1945ம் ஆண்டு முடிய, அமெரிக்க அரசுத்தலைவராகப் பணியாற்றிய பிராங்க்ளின் ரூசவெல்ட் (Franklin D. Roosevelt) அவர்களின் மனைவி, எலெனோர் ரூசவெல்ட் அவர்கள், 1945ம் ஆண்டு முதல், 1952ம் ஆண்டு முடிய ஐக்கிய நாடுகள் அவையில் பணியாற்றியபோது, மனித உரிமைகள் அறிக்கையை வடிவமைத்த குழுவுக்குத் தலைவராகப் நியமிக்கப்பட்டார். மனித உரிமைகள் அறிக்கை உருவாக, அவரும், அக்குழுவினரும் மேற்கொண்ட அயராத உழைப்பை உலகம் பாராட்டியது.
மனித உரிமைகள் குறித்து, எலெனோர் ரூசவெல்ட் அவர்கள் கூறியுள்ள கருத்து, மனித உரிமைகள் பற்றிய நம் சிந்தனைகளுக்கு சவாலாக அமைகின்றது: "மனித உரிமைகள் எங்கிருந்து துவங்குகின்றன? மிகச் சிறிய இடங்களில், நமக்கு மிக அருகில், இவை துவங்குகின்றன. இந்த இடங்கள் நமக்கு மிக அருகில் இருப்பதால், உலக வரைப்படத்தில் இவை இடம் பெறுவதில்லை... நமக்கு நெருக்கமான இந்த இடங்களில், மனித உரிமைகளுக்கு அர்த்தம் இல்லையெனில், உலகில் வேறெங்கும் இந்த உரிமைகளுக்கு அர்த்தம் இருக்காது. நமக்கு மிக அருகில், நம்மைச் சுற்றி, இந்த உரிமைகளை நிலைநாட்ட, நாம் இணைந்து முயற்சிகள் மேற்கொள்ளவில்லையெனில், பரந்துவிரிந்த உலகில் மனித உரிமைகள் முன்னேற்றம் அடையாது."
மனித உரிமைகள் அறிக்கை வெளியானதன் 70ம் ஆண்டை, டிசம்பர் 10ம் தேதி துவங்கியுள்ளோம்.

Lessons from the Book of Job

வேதனை வேள்வியில் யோபு – பகுதி 49

அந்த இளம் தம்பதியருக்குப் பெண் குழந்தை பிறந்தபோது, அளவற்ற மகிழ்வில் நிறைந்தனர். குழந்தை ஆண்ட்ரியாவைச் சுற்றி, அவ்விருவரின் உலகம் இயங்கிவந்தது. ஆண்ட்ரியாவுக்கு நான்கு வயதானபோது, அரியவகை நோய் ஒன்று குழந்தையைத் தாக்கவே, பெற்றோர் இருவரும் நிலைகுலைந்து போயினர். மிகச் சிறந்த மருத்துவர், மருந்துகள் எதனாலும் ஆண்ட்ரியாவைக் குணமாக்க இயலவில்லை. ஐந்து வயதே நிறைந்த ஆண்ட்ரியா இறந்ததும், இளம் தம்பதியர் முற்றிலும் நொறுங்கிப்போயினர். உறவுகள், நண்பர்கள் யாரையும் சந்திக்க விரும்பாமல், வீட்டுக்குள்ளேயே அடைபட்டுக் கிடந்தனர். அவர்கள் இருவரின் வாழ்க்கை, கண்ணீரில் கரைந்தது.
ஒருநாள், அந்த இளம் தாய், தான் விண்ணகத்தில் இருப்பதுபோல் கனவொன்று கண்டார். அங்கு, கண்ணைப்பறிக்கும் வெண்ணிற உடையணிந்த குழந்தைகள், எரியும் மெழுகு திரிகளை ஏந்தியவண்ணம், இறைவனின் அரியணைக்கு முன் சென்றனர். அந்த வரிசையில் ஆண்ட்ரியாவைக் கண்டதும், இளம் தாய் ஓடோடிச் சென்று, தன் மகளை அணைத்துக்கொண்டார். ஆண்ட்ரியாவின் கரங்களில் இருந்த மெழுகுதிரி எரியாமல் இருந்ததைக் கவனித்த தாய், குழந்தையிடம் காரணம் கேட்டார். ஆண்ட்ரியா அவரிடம், "அம்மா, இங்குள்ள வானதூதர்கள் என் மெழுகுதிரியை மீண்டும், மீண்டும் ஏற்றிவைக்கின்றனர். ஆனால், நீயும், அப்பாவும் சிந்தும் கண்ணீரால், என் மெழுகுதிரி அணைந்துபோகிறது" என்று கூறினாள்.
கனவிலிருந்து விழித்தெழுந்த இளம்தாய், தன் கணவரிடம் அதைப்பற்றிக் கூறினார். தங்கள் கண்ணீரால் ஆண்ட்ரியாவின் மெழுகுதிரியை இனியும் தொடர்ந்து அணைக்கப்போவதில்லை என்று இருவரும் முடிவெடுத்தனர். தங்கள் மகளின் இழப்பை, நம்பிக்கையுடன் ஏற்றுக்கொண்டு, வாழ்வைத் தொடர தீர்மானித்தனர்.

துன்பம் என்ற சுழலில் சிக்கித் தவிப்பதற்குப் பதில், அந்தச் சுழலிலிருந்து வெளியேறி, வாழ்வை, நம்பிக்கையோடு தொடர்வதற்கு உதவும் கதைகளில் இதுவும் ஒன்று. துன்பம் என்ற புதிருக்கு, எளிதான, தெளிவான, திட்டவட்டமான பதில்கள் கிடையாது. ஆனால், துன்பம் என்ற பள்ளிக்கூடம் சொல்லித்தரக்கூடிய பாடங்கள் பல உள்ளன. அவற்றைப் பயில்வதற்கு, நாம் கடந்த ஓராண்டளவாய் யோபு நூலில் நம் தேடல்களை மேற்கொண்டு வருகிறோம்.
துன்பம், இழப்பு, போராட்டம் ஆகியவற்றை எதிர்கொள்ளும் வேளையில், நாம் என்ன செய்யக்கூடும் என்பதை, யோபு நூல் விளக்குகிறது. இந்நூலிலிருந்து நாம் கற்றுக்கொள்ளக்கூடிய பாடங்களை, மறையுரையாளரும், எழுத்தாளருமான ஜான் ஆக்வின் (John Ogwyn) அவர்கள் விளக்கியுள்ளார்.

முதல் பாடம் - கடவுள் அறிவார்.

காரணம் ஏதுமின்றி, தன் வாழ்வில் நிகழந்த வேதனை அனுபவங்களை புரிந்துகொள்ள இயலாமல் யோபு திணறியபோது, அவை அனைத்தையும் கடவுள் அறிந்திருந்தார். கடவுள் அனைத்தையும் அறிந்தவர் என்ற உண்மை, விவிலியத்தில் பல இடங்களில் கூறப்பட்டுள்ளன. இந்த பாடத்தை தன் சீடர்களுக்குச் சொல்லித்தர விரும்பிய இயேசு, சிட்டுக்குருவிகளையும், நம் தலைமுடியையும் எடுத்துக்காட்டுகளாக வழங்கியுள்ளார்:
லூக்கா 12:6-7
இரண்டு காசுக்கு ஐந்து சிட்டுக்குருவிகள் விற்பதில்லையா? எனினும் அவற்றில் ஒன்றையும் கடவுள் மறப்பதில்லையே. உங்கள் தலைமுடி எல்லாம் கூட எண்ணப்பட்டிருக்கின்றன.

"எனக்கு நிகழ்வதை யாராலும் புரிந்துகொள்ள முடியாது" என்பது, துயரங்களில் சிக்கியிருப்போர் அடிக்கடி கூறும் ஒரு கருத்து. ஆயினும், துன்பங்களை மனமுவந்து ஏற்றுக்கொண்ட இயேசு, நம் துயரங்களைப் புரிந்துகொள்ளும் ஆற்றலும், பக்குவமும் பெற்றுள்ளார் என்று, எபிரேயருக்கு எழுதப்பட்ட திருமுகத்தில் கூறப்பட்டுள்ளது:
எபிரேயர் 4: 15-16
ஏனெனில், நம் தலைமைக் குரு நம்முடைய வலுவின்மையைக் கண்டு இரக்கம் காட்ட இயலாதவர் அல்ல; மாறாக, எல்லா வகையிலும் நம்மைப்போலச் சோதிக்கப்பட்டவர்; எனினும் பாவம் செய்யாதவர். எனவே, நாம் இரக்கத்தைப் பெறவும், ஏற்ற வேளையில் உதவக்கூடிய அருளைக் கண்டடையவும், அருள் நிறைந்த இறை அரியணையைத் துணிவுடன் அணுகிச் செல்வோமாக.

2வது பாடம் - கடவுள் நம் துன்பங்களுக்கு எல்லை வகுக்கின்றார்.

யோபின் வாழ்வில் துயரங்களை உருவாக்க சாத்தான் முன்வந்தபோது, இறைவன் சாத்தானுக்கு எல்லைகள் வகுத்தார். யோபின் உடைமைகளை அழிக்கும் சாத்தான், யோபைத் தொடக்கூடாது என்று இறைவன் முதலில் கூறினார். ஆண்டவர் சாத்தானிடம், "இதோ! அவனுக்குரியவையெல்லாம் உன் கையிலே; அவன்மீது மட்டும் கை வைக்காதே" என்றார். (யோபு 1:12)
தன் உடமைகளையும், புதல்வர், புதல்வியரையும் இழந்தாலும், இவை அனைத்திலும் யோபு பாவம் செய்யவுமில்லை; கடவுள் மீது குற்றஞ்சாட்டவும் இல்லை (யோபு 1:22) என்பது தெளிவானதும், சாத்தான், யோபின் உடல்மீது அடுத்தகட்டத் தாக்குதல்களை மேற்கொள்ள துணிந்தபோது, ஆண்டவர் சாத்தானை நோக்கி, "இதோ! அவன் உன் கையிலே! அவன் உயிரை மட்டும் விட்டுவை"  (யோபு 2:6) என்று கட்டளையிட்டார்.
நம் ஒவ்வொருவருக்கும் வரும் துன்பங்களின் அளவு, காலம் அனைத்தும் ஆண்டவருக்குத் தெரிந்ததே!

3வது பாடம் - 'ஏன்' என்பது, புரியாத புதிர்.

யோபு நூல் முழுவதும் 'ஏன்' என்ற கேள்வி பல வடிவங்களில் வலம்வருவதை நாம் உணர்கிறோம். யோபின் நண்பர்களான எலிப்பாசு, பில்தாது, சோப்பார் ஆகிய மூவரும், யோபு ஏன் துன்புறுகிறார் என்ற கேள்விக்கு, அவர்களாகவே ஒரு பதிலைத் தீர்மானித்துக் கொண்டதோடு, அந்தப் பதிலை யோபு ஏற்றுக்கொள்ள வேண்டுமென்றும் வற்புறுத்துவதை, யோபுக்கும், நண்பர்களுக்கும் இடையே நிகழ்ந்த மூன்று சுற்று உரையாடல்களில், அதாவது, யோபு நூல் 4ம் பிரிவு முதல் 31ம் பிரிவு முடிய உள்ள 28 பிரிவுகளில், நாம் காண்கிறோம்.
இறுதியில், யோபைச் சந்திக்கவரும் இறைவன், யோபு எழுப்பிவந்த 'ஏன்' என்ற கேள்விக்கு விடையளிக்காமல், தான் யோபுடன் இருப்பதை மட்டும் அவருக்கு உணர்த்துகிறார். இறைவனின் இந்த பதில், யோபுக்கு நிறைவான நம்பிக்கையைத் தருகிறது. யோபு நூலில் நாம் கற்றுக்கொள்ளக்கூடிய அடுத்த முக்கியமானப் பாடம் இதுதான்.

4வது பாடம் - துயரங்கள் நடுவே வெளியாகும் நம்பிக்கை.

தனக்கு நேர்ந்த துன்பங்களைக் குறித்து, யோபு, இந்நூலில் அடிக்கடி குறிப்பிட்டாலும், 19ம் பிரிவில் அவர் உருவகங்களைப் பயன்படுத்தி தன் துன்பத்தின் ஆழத்தை வெளிப்படுத்துகிறார். தன் "வழியை அடைத்தார், பாதையை இருளாக்கினார், மணிமுடியை தலையினின்று அகற்றினார், எல்லாப் பக்கமும் இடித்துத் தகர்த்தார்" (யோபு 19: 7-12) என்று, யோபு பட்டியலிடும் இவ்வரிகளில், அவரது வேதனையின் ஆழம் வெளிப்படுகிறது.
தனக்கு உண்டான தோல் நோயால், தன் குடும்பத்திலிருந்து தான் எவ்வளவு தூரம் வெறுத்து ஒதுக்கப்பட்டார் என்பதையும் 19ம் பிரிவில், யோபு, வெளிப்படையாகக் கூறுகிறார். உடன்பிறந்தோர், உற்றார், நண்பர், பணியாளர் அனைவரும் தன்னைவிட்டு அகன்று சென்றதைப் பற்றி யோபு விவரிக்கும் வார்த்தைகள், வாசிப்போரின் மனதில் காயங்களை உருவாக்குகின்றன:
யோபு நூல் 19: 17,19-20
என் மனைவிக்கு என் மூச்சு வீச்சம் ஆயிற்று; என் தாயின் பிள்ளைகளுக்கு நாற்றம் ஆனேன். என் உயிர் நண்பர் எல்லாரும் என்னை வெறுத்தனர்; என் அன்புக்குரியவராய் இருந்தோரும் எனக்கெதிராக மாறினர். நான் வெறும் எலும்பும் தோலும் ஆனேன்.

பல்வேறு இழப்புக்களை அனுபவித்தது போதாதென்று, தனிமை உணர்வும் தன்னை வாட்டுகிறது என்று கூறும் யோபு, தன் மீது இரக்கம் காட்டுமாறு, நண்பர்களிடம் கெஞ்சுகிறார்:
யோபு 19: 21-22
என் மேல் இரங்குங்கள்; என் நண்பர்காள்! என் மேல் இரக்கம் கொள்ளுங்கள்; ஏனெனில் கடவுளின் கை என்னைத் தண்டித்தது. இறைவனைப் போல் நீங்களும் என்னை விரட்டுவது ஏன்? என் சதையை நீங்கள் குதறியது போதாதா?

19ம் பிரிவின் ஆரம்பத்திலிருந்து 22ம் இறைச்சொற்றொடர் முடிய, வேதனைக் கதறலை, பல வழிகளில் வெளிப்படுத்திய யோபிடம், ஒரு திடீர் மாறுதல் உருவாகிறது. யோபு வெளிப்படுத்தும் நம்பிக்கை அறிக்கை, நம்மை வியப்பில் ஆழ்த்துகின்றது:
யோபு 19: 25-27
என் மீட்பர் வாழ்கின்றார் என்றும் இறுதியில் மண்மேல் எழுவார் என்றும் நான் அறிவேன். என் தோல் இவ்வாறு அழிக்கப்பட்ட பின், நான் சதையோடு இருக்கும்போதே கடவுளைக் காண்பேன். நானே, அவர் என் பக்கத்தில் நிற்கக் காண்பேன்; என் கண்களே காணும்; வேறு கண்கள் அல்ல; என் நெஞ்சம் அதற்காக ஏங்குகின்றது.

தன் கண்கள் இறைவனைக் காணும் என்று யோபு வெளியிட்ட இந்த நம்பிக்கை, இந்நூலின் இறுதியில் உண்மையாகிறது. உம்மைப்பற்றிக் காதால் மட்டுமே கேள்விப்பட்டேன்; ஆனால் இப்பொழுது, என் கண்களே உம்மைக் காண்கின்றன (யோபு 42:5) என்று கூறும் யோபு, இறைவனிடம் முழுமையாகச் சரணடைகிறார். துயரங்கள் நடுவே வெளியாகும் அத்தகைய நம்பிக்கை, நம் வாழ்விலும் வளர்வதற்கு இறையருளை வேண்டுவோம்.