The Sabbath was made for man
ஒய்வு நாளன்று, தொழுகைக்கூடம் ஒன்றில், வலது கை
சூம்பிய ஒருவரை இயேசு குணமாக்கியப் புதுமையை, சென்ற வார விவிலியத் தேடலில் சிந்தித்தோம்.
இயேசு அந்த நன்மையைச் செய்தபோது, அதைப் பார்த்த மறைநூல் வல்லுனரும், பரிசேயரும் இயேசுவின் மீது கோப வெறி கொண்டதாக லூக்கா நற்செய்தியில்
வாசித்தோம். சென்ற வார விவிலியத் தேடலின் இறுதி வரிகளை மீண்டும் நினைவுபடுத்த விரும்புகிறேன்.
ஒரு மனிதர் நல்லது செய்யும்போது, மாலையிட்டு மரியாதை செய்வதற்கு பதிலாக, கோபவெறி கொண்டு இயேசுவை என்ன செய்யலாம் என்று யோசிக்கிறார்களே, இவர்களெல்லாம் மனிதர்கள்தானா? தயவுசெய்து உடனே நீதி இருக்கையில் அமர்ந்து, தீர்ப்பை வாசித்துவிட வேண்டாம். வழக்கு என்று வரும்போது இரு பக்கங்கள்
உண்டல்லவா? இயேசுவின் பக்கம் நியாயம் இருப்பது
வெட்ட வெளிச்சம். ஆனால், அவருக்கு எதிர் பக்கம் இருப்பவர்களுக்கும்
ஏதாவது ஒரு காரணம் இருக்குமே. அடுத்த விவிலியத்தேடலில்
மறை நூல் அறிஞர், பரிசேயர் இவர்கள் பக்கமிருந்து
ஓய்வுநாள் பற்றிய எண்ணங்களை அறிய முயல்வோம். என்று, சென்ற தேடலை நிறைவு செய்தோம்.
இன்று பரிசேயர்களின் பக்கம் நம் எண்ணங்களைத் திருப்புவோம்.
பரிசேயர்களின் பக்கம் தான் என்ன? இயேசு குணமளிக்கிறார், போதிக்கிறார், என்பதெல்லாம், பரிசேயர், மறைநூல் அறிஞர்களுக்குப் பிரச்சனை அல்ல. ஒருவேளை, இயேசுவின் புகழ்
வெகு வேகமாகப் பரவி வந்ததால், கொஞ்சம் பொறாமை இருந்திருக்கும்.
அவர்களது பெரிய பிரச்சனையே, இயேசு, சட்டதிட்டங்களை, சம்பிரதாயங்களை மீறுவதுதான். காலம்,
காலமாகப் போற்றிப் பாதுகாத்து வந்த சம்பிரதாயங்களை மீறுவது மட்டுமல்லாது, அந்த சம்பிரதாயங்களுக்கு மாற்றுப் பாடங்களை இயேசு சொல்லித் தருவதை,
அவர்களால் ஏற்றுக் கொள்ளமுடியவில்லை. அவர்களது கோபத்தையோ அதன் நியாய, அநியாயத்தையோ புரிந்துகொள்வதற்கு முன்னால், அவர்கள் யாரெனப் புரிந்து கொள்ள முயல்வோம். யூதர்கள் மத்தியில்
மதம், மற்றும், கோவில் தொடர்பான அனைத்துப் பணிகளிலும்
ஈடுபட்டவர்கள் - பரிசேயர், சதுசேயர், மறைநூல் அறிஞர். இக்குழுவிலிருந்து, பரிசேயர்களைப் பற்றி மட்டும்
புரிந்துகொள்ள முயல்வோம்.
பரிசேயர்கள் என்றதும், நம் மனதில், வில்லன்களைப் போன்ற உருவங்கள்
நிழலாடலாம். ‘வெளிவேடக்காரர்கள்’ என்று இயேசு இவர்களைச் சாடியது, நம்முள் இத்தகைய உருவத்தைப்
பதித்திருக்கலாம். பரிசேயர்கள் அனைவருக்கும் இந்த முத்திரையைக் குத்தி ஒதுக்கிவிட வேண்டாம்.
பரிசேயர்கள், அடிப்படையில் நல்லவர்கள். கடவுளின் கட்டளைகளையும், மோசே தந்த வழிமுறைகளையும் மிக நுணுக்கமாக, துல்லியமாகக் கடைபிடித்தவர்கள்... மக்களும் அதைக் கடைபிடிக்க வேண்டும்
என ஆர்வம் கொண்டவர்கள். அவர்களைப் பொருத்தவரை,
கடவுள், அவரது ஆலயம், அவரது கட்டளைகள், தலைமுறை தலைமுறையாய் கடைபிடிக்கப்பட்ட சாத்திரங்கள், சம்பிரதாயங்கள், இவை அனைத்தும் முக்கியமானவை, இன்றியமாயதவை, எள்ளளவும் தவறாமல், பிசகாமல் வாழ்வில் கடைபிடிக்கப்பட வேண்டியவை... அவர்கள் வளர்ந்ததெல்லாம்
இப்படிப்பட்ட ஒரு பின்னணியில். எனவே, கட்டளைகள், விதிமுறைகள், சடங்குகள், சாத்திரங்கள்.... இவையே அவர்களது வாழ்வாக மாறிவிட்டன.
இறைவன் தந்த கட்டளைகளிலேயே மிக முக்கியமென அவர்கள் கருதி
வந்தது, ஒய்வு நாள் கட்டளையே. இதைப்பற்றி விடுதலைப் பயண நூல் கூறுவது இதுதான்:
விடுதலைப்பயணம் 20/1, 8-11
கடவுள் அருளிய வார்த்தைகள் இவையே: ஓய்வு
நாளைத் தூயதாகக் கடைப்பிடிப்பதில் கருத்தாயிரு. ஆறு நாள்கள் நீ உழைத்து உன் அனைத்து
வேலையையும் செய்வாய். ஏழாம் நாளோ உன் கடவுளாகிய ஆண்டவருக்கான ஓய்வு நாள். எனவே அன்று
நீயும் உன் மகனும் மகளும் உன் அடிமையும் அடிமைப்பெண்ணும் உன் கால்நடைகளும் உன் நகர்களுக்குள்
இருக்கும் அன்னியனும் யாதொரு வேலையும் செய்ய வேண்டாம். ஏனெனில், ஆண்டவர் ஆறு நாள்களில் விண்ணுலகையும், மண்ணுலகையும், கடலையும், அவற்றிலுள்ள அனைத்தையும் படைத்து ஏழாம் நாளில் ஓய்ந்திருந்தார். இவ்வாறு ஆண்டவர்
ஓய்வு நாளுக்கு ஆசிவழங்கி அதனைப் புனிதப்படுத்தினார்.
ஒய்வு நாளைப் பற்றி மோசே இவ்வளவுத் தெளிவாகக் கூறியுள்ள இந்தக் கட்டளையை மீறும் பலரை பார்த்து கோபமுற்றனர்,
பரிசேயர்கள். ஒய்வு நாள் என்றால் என்ன, அன்று செய்யகூடிய, செய்யக்கூடாத வேலைகள் எவை... என்று மக்களுக்கு பல விளக்கங்கள் தந்தனர்.
நாளடைவில், இந்த விளக்கங்களே சட்டதிட்டங்களாக மாறின. ஒய்வு நாளில் என்ன செய்யலாம், என்ன செய்யக்கூடாதென்பதை விளக்க, இவர்கள் தந்த எடுத்துக்காட்டுக்கள்,
பெரியதொரு பட்டியலாக நீண்டன. ஒய்வு நாளில் சமைக்கக் கூடாது, பொருள்களைச் சேகரிக்கக் கூடாது, எதையாவது
கைதவறி கீழே போட்டுவிட்டால், குனிந்து எடுக்கக் கூடாது, பயணம் செய்யக் கூடாது, பாரம் சுமக்கக் கூடாது... இப்படி
‘கூடாது’ என்ற இந்தப் பட்டியல் நீளமானது.
ஒய்வு நாள் குறித்த விளக்கங்களில், பரிசேயர், சதுசேயர், மறைநூல் வல்லுநர் இவர்களுக்கிடையே
பற்பல சர்ச்சைகள் எழுந்தன. எடுத்துக்காட்டாக,
ஒய்வு நாளில் எவ்வளவு
பாரம் சுமக்கலாம் என்ற கேள்விக்கு, காரசாரமான விவாதங்கள் மேற்கொள்ளப்பட்டன.
இறுதியில், ஒரு முடிவு எடுக்கப்பட்டது: காய்ந்துபோன அத்திப் பழம் ஒன்று, எவ்வளவு எடையோ, அதுவே ஓய்வுநாளில் சுமக்க அனுமதிக்கப்படும் எடை. அதற்கு மேல் பாரமான
எதையும் எடுக்கவோ, சுமக்கவோ கூடாது என்பதே அந்த முடிவு. இதேபோல், எவ்வளவு தூரம் நடக்கலாம்,
எவ்வளவு உண்ணலாம், குடிக்கலாம்.... என்று மிகவும் நுணுக்கமான விதிமுறைகள் பல
விதிக்கப்பட்டன. மோசே வழியாக இறைவன் கொடுத்த ஒய்வு நாள் பற்றிய கட்டளையைச் சுற்றி,
அடுக்கிவைக்கப்பட்ட இந்த விளக்கங்கள், அந்த அடிப்படை கட்டளையையே மறைத்துவிட்டன.
கட்டளைகளை மறைக்கும் அளவிற்கு குவிக்கப்பட்ட
விளக்கங்களைப் புரிந்துகொள்ள, திருநாட்களில்,
ஊர்வலத்தில் இறைவன், அல்லது புனிதர்களின் திருஉருவைத் தேரில் ஏற்றிச்செல்லும் நிகழ்வை
எண்ணிப்பார்க்கலாம். அந்தத் தேரை, பூக்களாலும், கண்ணைப்பறிக்கும் விளக்குகளாலும் அலங்காரம்
செய்வோம். பல சமயங்களில், இந்த விளக்குகளும்,
பூக்களும் அந்த திருஉருவத்தையே
மறைத்துவிடும். சில வேளைகளில், இந்த அலங்காரங்களைச்
செய்தவர்கள், அல்லது நிதி உதவி செய்தவர்கள் ஆகியோரின்
பெயர்கள், தேரில் பெரிதாக எழுதப்படும். இறைவனை விட, புனிதர்களை விட, பூக்களும்,
அலங்காரமும், அவற்றைச் செய்தவர்களும் முக்கியமாகி விடுவதில்லையா? அதேபோல்தான் இதுவும். இறைவன் தந்த ஒய்வு நாள் கட்டளையை விட, அதற்கு சொல்லப்பட்ட விளக்கங்களும், அந்த விளக்கங்களைத்
தந்தவர்களும் முக்கியமாகிப் போனதால்,
கடவுள் தந்த ஒய்வு
நாள் கட்டளைகளின் உண்மைப் பொருளை பரிசேயர்கள் மறந்துவிட்டனர். அவ்வண்ணமே
மக்களுக்கும் சொல்லித் தந்தனர். இதைத்தான் இயேசு கடுமையாக எதிர்த்தார்.
பரிசேயர்களின் படிப்பினைகளை இயேசு எதிர்த்ததற்கு மற்றொரு
காரணம், கடவுளை விட, சட்டதிட்டங்களுக்கு அவர்கள் தந்த அளவுகடந்த மதிப்பு. மனிதர்களோ, அவர்கள் வாழ்வோ பாதிக்கப்பட்டாலும் பரவாயில்லை; சட்டங்கள் காப்பாற்றப்பட வேண்டுமென அவர்கள் சொன்னது... அதாவது, சட்டங்களைத் தந்த கடவுளுக்கு இணையாக, சில சமயம் கடவுளுக்கும் மேலாக, சட்டங்களையேக்
கடவுளாக்கியது மதியற்ற செயல். இதை இயேசு உணர்ந்திருந்தார். பரிசேயரை உணரவைக்க முயன்றார்.
தேவைக்கும் அதிகமாக, சட்டங்களுக்கு, சாத்திர,
சம்பிரதாயங்களுக்கு முதலிடம் தருவதால், நாம் எப்படி சிறைபடுவோம் என்பதைக்
கூறும் ஒரு கதை. எல்லாருக்கும் தெரிந்த கதை இது. மீண்டும் நினைவுபடுத்திக் கொள்வது
நலம் தரும்.
துறவிகள் மடம் ஒன்றில், அனைவரும்
பூஜைக்கு அமர்ந்தனர். அந்த மடத்திற்கு புதிதாக வந்து சேர்ந்த ஒரு பூனை, பூஜை நேரத்தில் அங்குமிங்கும் ஓடிக்கொண்டிருந்தது. எனவே, பூஜை
நேரத்தில், அந்தப் பூனையை, ஒரு தூணில் கட்டிவைக்கச் சொன்னார், பெரிய குரு. இப்படி சில
நாட்கள் பூனை கட்டப்பட்டது, பூஜை நடந்தது. ஒரு மாதம் கழித்து, பூஜை ஆரம்பிக்கப் போகும் நேரத்தில், பூனையைக் காணவில்லை. சீடர்கள், மடம் எங்கும் தேடி, பூனையைக் கண்டுபிடித்து, கொண்டுவந்து, தூணில் கட்டிவைத்துவிட்டு,
பூஜையை ஆரம்பித்தனர்.
பூனை இல்லாமல் பூஜை இல்லை என்ற சூழல் உருவாக ஆரம்பித்தது.
சில ஆண்டுகள் கழித்து, அந்தப் பூனை
இறந்தது. கதை இதோடு முடிந்திருந்தால், நன்றாக இருந்திருக்கும். ஆனால், இல்லை. இறந்தப் பூனையைப் போல் இன்னொரு பூனையை வாங்கி வர, அல்லது,
தேடிக் கண்டுபிடிக்க, சீடர்கள் புறப்பட்டுச் சென்றனர். புதுப் பூனை, இறந்த பூனையைப் போலவே வெள்ளையாக இருக்க வேண்டும், அதன் கழுத்தில் ஒரு கருப்பு வட்டம் இருக்க வேண்டும் என்ற
நுணுக்கங்களை மனதில் கொண்டு இந்தத் தேடல் வேட்டை நடந்தது. தீவிர முயற்சிகள் எடுத்து,
பூனையைக் கண்டுபிடித்தனர் சீடர்கள். அதை மடத்திற்குக் கொண்டுவந்து, முந்தையப் பூனை
கட்டப்பட்ட அதே தூணில் கட்டி, பின்னர் பூஜைக்கு அமர்ந்தனர்.
பூஜைக்குத் தடையாக இருந்ததால் கட்டப்பட்ட பூனை, பூஜைக்கு முக்கியமாகத் தேவைப்பட்டது. பூனை இல்லாமல் பூஜை இல்லை
என்ற சூழ்நிலை உருவானது. பூனையா? பூஜையா? என்ற விவாதம் எழுந்தால்,
பூஜையைவிட, பூனை முக்கியம்
என்ற முடிவு எடுக்கப்படும். பூஜைகளை மறக்கச் செய்யும் அளவு, பூனைகளைத் தொழுவது ஆபத்து என்று இயேசு சொல்லிப் பார்த்தார். பூனையை
மறந்துவிட்டு, பூஜையில் கவனம் செலுத்துங்கள் என்று இயேசு
வலியுறுத்திக் கூறினார்; தான் சொன்னதைச் செயலிலும் காட்டினார்.
கடவுள் தந்த ஒய்வு நாள், மனிதருக்கு நலம் தரும் வழிகளைச்
சொல்லித்தர ஏற்படுத்தப்பட்டது. எப்போதும் வேலை,
வேலை என்று அலைய வேண்டாம்.
அதனால், உடல் நலம், மன நலம், குடும்ப நலம் எல்லாம் கெடும். வேலை, சம்பாதிக்கும் பணம் இவற்றைவிட இன்னும் மேலான விழுமியங்கள் வாழ்க்கையில்
உள்ளன. இந்த மேலானவற்றைத் தேடி கண்டுபிடிக்க, வேலையை விட்டு வெளியே வாருங்கள்... ஓய்வேடுங்கள்...
இறைவனை, பிறரை, குடும்பத்தை
நினைத்துப் பார்க்க ஒய்வு நாள் தேவை.
இதுதான் ஒய்வு நாளைப் பற்றி இறைவன் சொல்லித்தர விரும்பிய
முக்கிய பாடம். ஆனால், ஒய்வு நாளைப் பற்றி சொன்ன கடவுளையே
மறந்துவிட்டு, ஒய்வு நாளை வழிபட ஆரம்பித்த பரிசேயர்கள், மனிதரின் தேவைகள், நலக்குறைவு இவற்றிற்கும் மேலாக, ஒய்வு நாளை வழிபட
ஆரம்பித்தது, இயேசுவை அதிகமாய் பாதித்திருக்க வேண்டும். எனவேதான் அவர், ஒய்வு நாள் விதிகளை மீறினார். அதுவும், தொழுகைக்கூடத்தில், ஒய்வு
நாள் விதிகளை மீறி, மனிதர்களுக்கு நலம் அளித்தார்.
சட்டங்கள், சாத்திர, சம்பிரதாயங்கள்... ஏன்... பலிகளையும்விட, இறைவன், இரக்கத்தை விரும்புகிறார்
என்று இறைவாக்கினர் ஓசேயா கூறிய வார்த்தைகளை,
இயேசு மீண்டும் மக்களுக்கும், மதத் தலைவர்களுக்கும் நினைவுறுத்தும் வண்ணம் நடந்துகொண்டது, இந்தப் புதுமையில் வெளியாகியுள்ளது. பலியைவிட, இரக்கம் நிறைந்த மனமே சிறந்தது என்பதை உணர்வதற்கு இரக்கத்தின் யூபிலி
நமக்கு மீண்டும் ஓர் அழைப்பை விடுக்கிறது:
இறைவாக்கினர் ஓசேயா 6: 6
உண்மையாகவே நான் விரும்புவது பலியை அல்ல, இரக்கத்தையே விரும்புகின்றேன்; எரிபலிகளைவிட, கடவுளை அறியும் அறிவையே நான் விரும்புகின்றேன்.
No comments:
Post a Comment