11 May, 2016

விவிலியம் : காலமெலாம் வாழும் கருணைக் கருவூலம் - பகுதி – 21

Jesus the Healer

அந்த ஊர் பள்ளியில் ஓர் இளம் பெண் புதிதாக வேலைக்குச் சேர்ந்தார். ஒரு வாரம் சென்றபின், பள்ளியின் நிர்வாகி அவரை அழைத்து, கூடுதலாக ஒரு பணியை அவருக்குக் கொடுத்தார். வாரத்தில் ஒரு நாள், அவர் அருகில் இருந்த மருத்துவமனைக்குச் சென்று அங்கு அனுமதிக்கப்பட்டிருக்கும் ஒரு சிறுவனுக்கு கணக்குப் பாடம் சொல்லித் தர வேண்டும் என்பதே அந்தப் பணி. நிர்வாகி சொன்னதற்கு மறுப்பு சொல்ல முடியாமல், அந்தப் பெண் அடுத்த நாள் மருத்துவ மனைக்குச் சென்றார். படுக்கையில் கிடந்த அந்தச் சிறுவனைப் பார்த்ததும் அவருக்குப் பெரும் அதிர்ச்சி.

ஒரு தீ விபத்தினால் உடலெங்கும் வெந்துபோய் படுத்துக் கிடந்தான் அந்தச் சிறுவன். இவனுக்குக் கணக்குப் பாடம் சொல்லித் தர வேண்டுமா என்று அந்த இளம் பெண்ணின் மனம் தடுமாறியது. இருந்தாலும், இவ்வளவு தூரம் வந்துவிட்டோமே என்பதால், அவனுக்கு அரைமணி நேரம் கணக்குப் பாடம் சொல்லித் தந்தார். வேதனையில் முனகிக் கொண்டிருந்த அச்சிறுவன், அவர் சொல்லித் தந்தவற்றைப் புரிந்துகொண்டதுபோல், அவ்வப்போது தலையை ஆட்டினான். தீக்காயங்களுடன் கிடந்த அவனைப் பார்க்கவும் தைரியம் இல்லாமல் எதோ ஒரு வகையில் சமாளித்து, அவனுக்குப் பாடம் சொல்லித் தந்தார், அந்த இளம்பெண். மீண்டும் அடுத்த ஞாயிறு வருவதாகச் சொல்லி புறப்பட்டார். உடலெல்லாம் எரிந்து, உயிருக்குப் போராடிக்கொண்டிருந்த ஒரு சிறுவனுக்குக் கணக்குப் பாடம் சொல்லித் தந்தது, அவருக்கே வேதனையாக இருந்தது. அடுத்த ஞாயிறு, ஏதாவது சாக்குபோக்கு சொல்லி தப்பித்துக்கொள்ளலாம் என்று எண்ணியபடியே இளம்பெண் வீட்டுக்குத் திரும்பினார்.
இருந்தாலும், அடுத்த ஞாயிறு வந்தபோது, அந்த இளம்பெண், சிறுவனைப் பார்க்கப் புறப்பட்டார். அவனுக்குப் பாடம் சொல்லித் தரவில்லையென்றாலும், அவனைப் பார்க்க வேண்டும்போல் தோன்றியது. அவர் அங்கு சென்றபோது, மருத்துவமனை வாசலிலேயே அந்தச் சிறுவனுடைய அம்மா அந்த இளம்பெண்ணைச் சந்தித்தார். "நீங்கள்தான் என் மகனுக்கு போன வாரம் கணக்கு சொல்லித் தந்தீர்களா?" என்று கேட்டார். உயிருக்குப் போராடிக் கொண்டிருக்கும் ஒரு சிறுவனுக்கு, கணக்கு சொல்லித் தந்தது, எவ்வளவு பைத்தியக்காரத்தனமான செயல் என்பதை அந்தத் தாய் தன்னிடம் சொல்லப் போகிறார் என்று எதிர்பார்த்து, அந்த இளம்பெண் பயந்தார். "கணக்குப் பாடம் சொல்லித் தரவேண்டும் என்று மேலிடத்திலிருந்து உத்தரவு வந்ததால்தான் நான் அப்படிச் செய்தேன்..." என்று தயங்கி, தயங்கி அந்த இளம் பெண் சமாதானம் சொல்ல ஆரம்பித்தார்.

அந்தத் தாய், இளம்பெண்ணின் கைகளை இறுகப் பற்றிக் கொண்டார். அவர் கண்களில் கண்ணீர் பெருக்கெடுத்தது. "நீங்கள் எவ்வளவு பெரிய உதவி செய்துள்ளீர்கள் என்று உங்களுக்குத் தெரியாது" என்று அந்தத் தாய் சொன்னதும் இளம்பெண்ணுக்கு ஒரே ஆச்சரியம். அந்தத் தாய் தொடர்ந்தார்: "நீங்கள் சென்ற ஞாயிறு வருவதற்கு முன், என் மகன், தான் உயிர் பிழைக்கமாட்டோம் என்று அவனே தீர்மானித்து விட்டான். எனவே, மருந்து சாப்பிட மறுத்தான். ஆனால், நீங்கள் கணக்குப்பாடம் சொல்லித்தந்த நாளிலிருந்து என் மகனிடம் நல்ல மாற்றங்கள் ஏற்பட்டன. 'எனக்கு கணக்குப் பாடம் சொல்லித் தர ஓர் ஆசிரியரை என் பள்ளி அனுப்பியுள்ளது என்றால், நான் கட்டாயம் மீண்டும் பிழைத்தெழுந்து பள்ளிக்குத் திரும்புவேன் என்று என் பள்ளியில் உள்ளவர்கள் நம்புகிறார்கள் என்றுதானே அர்த்தம்!' என்று என் மகன் சொல்ல ஆரம்பித்து விட்டான். நீங்கள் வந்து சென்ற நாளிலிருந்து, தான் பிழைத்துக் கொள்வோம் என்ற அசைக்க முடியாத நம்பிக்கை என் மகனுக்குப் பிறந்துவிட்டது. இந்த ஒரு வாரத்தில் அவனிடம் ஏற்பட்டுள்ள மாற்றங்களைக் கண்டு டாக்டர்களே ஆச்சரியத்தில் இருக்கிறார்கள். எல்லாம் நீங்கள் செய்த அற்புதம்" என்று அந்தத் தாய் கண்ணீரோடு சொல்லச் சொல்ல, அந்த இளம்பெண்ணின் கண்களிலும் கண்ணீர் வழிந்தது.

இந்த இளம் பெண்ணின் அனுபவத்தை இவ்வளவு விவரமாக நான் கூற ஒரு முக்கிய காரணம் உண்டு. அந்தக் காரணம், இயேசுவின் குணமளிக்கும் புதுமைகளுடன் தொடர்புடையது.
நமது நோய்கள் குணமாவதற்குக் காரணங்கள் என்னென்ன? மருந்து, மாத்திரை, மருத்துவ சிகிச்சை இவற்றால் மட்டும் ஒருவர் குணமாக முடியாது. குணம்பெறுவோம் என்ற நம்பிக்கை ஒருவர் மனதில் உதிப்பதுதான், குணம்பெறும் பயணத்தில் அவர் எடுத்துவைக்கும் முதல் அடி.
நற்செய்தியில் நாம் காணும் புதுமைகளில், இயேசுவைத் தேடிவந்து நலமடைந்தோர் பலரைச் சந்திக்கிறோம். நோயுற்றவரை இயேசு தேடிச்சென்று நலம் வழங்கியதையும் காண்கிறோம். இன்றும் இத்தகையப் புதுமைகள் தொடர்ந்து நடைபெறுகின்றன. இறைவனையும், அன்னை மரியாவையும், ஏனையப் புனிதர்களையும் மையப்படுத்திய பல திருத்தலங்களிலும் நலம் பெறும் புதுமைகள் நிகழ்ந்தவண்ணம் உள்ளன. இவை அனைத்திற்கும் அடித்தளமாக இருப்பது, நம்பிக்கை! அந்த நம்பிக்கை, ஒருவர் மனதில் தோன்றுவதற்கு, எத்தனையோ வழிகள் உண்டு. இவற்றில் எதிர்பாராத வழிகளும் பல இருக்கும். தீக்காயங்களுடன் போராடி, மனம் வெறுத்து, மரண வாயிலை நெருங்கிவிட்ட சிறுவனுக்கு, கணக்குப்பாடம் சொல்லித் தரவந்த ஆசிரியர், அவரையும் அறியாமல், குணமாகும் வழியை அச்சிறுவனுக்குக் காட்டவில்லையா? அதுபோல...

அந்த நம்பிக்கை இல்லாதபோது, குணம் பெறுவது கடினமாகிப் போகிறது. பலவேளைகளில், இயலாமலும் போகிறது. நம்பிக்கையற்ற நிலையில், நமக்குள் உருவாகும் மன அழுத்தங்களை, யோபு நூலில் இவ்வாறு வாசிக்கிறோம்.
யோபு 7: 1, 3-4, 6-7
மண்ணில் வாழ்வது மனிதருக்குப் போரட்டந்தானே?... இன்னல்மிகு இரவுகள் எனக்குப் பங்காயின. படுக்கும்போது எப்போது எழலாம் என்பேன்! இரவோ நீண்டிருக்கும்; விடியும்வரை புரண்டு உழல்வேன். என் நாள்கள் தறியின் ஓடுகட்டையினும் விரைந்தோடுகின்றன; அவை நம்பிக்கையின்றி முடிவடைகின்றன. என் உயிர் வெறுங்காற்றே என்பதை நினைவுகூருவீர்; என் கண்கள் மீண்டும் நன்மையைக் காணா.

இப்போது நாம் கேட்ட இந்த வரிகளை, நம்மில் பலர், பலவிதங்களில் சொல்லியிருக்கிறோம். துன்பங்கள் நம் வாழ்வை நிரப்பும்போது, நம்மிடமிருந்து முதலில் விடைபெறுவன உணவும், உறக்கமும். இன்னல்மிகு இரவுகள் எனக்குப் பங்காயின. படுக்கும்போது எப்போது எழலாம் என்பேன்! இரவோ நீண்டிருக்கும்; விடியும்வரை புரண்டு உழல்வேன். என்ற யோபுவின் வார்த்தைகள் நமது உள்ளத்தின் உணர்வுகளை எதிரொலிப்பதாய் உள்ளன.
துன்பச் சூறாவளி நம்மைத் தாக்கும்போது, வேரோடு பிடுங்கப்பட்ட மரத்தைப்போல... சுழல்காற்றில் சிக்கிய ஒரு சருகைப் போல... புயலில் சிக்கியப் படகைப் போல... என்றெல்லாம் நாம் நம்மையே உருவகப்படுத்திக் கொள்கிறோம். துன்பங்களால் நிலைகுலைந்து அலைபாயும் வாழ்வை யோபுவும் ஓர் உருவகத்தால் கூறியுள்ளார். என் நாள்கள் தறியின் ஓடுகட்டையினும் விரைந்தோடுகின்றன; அவை நம்பிக்கையின்றி முடிவடைகின்றன என்று கூறியுள்ளார்.

உருவகங்களில் நாம் பேசிக் கொண்டிருப்பதால், மற்றுமோர் உருவகத்தையும் எண்ணிப் பார்க்கலாம். துன்பம், புதைமணலைப் போன்றது. புதைமணலில் சிக்கியவர்கள், அந்தப் புதைமணலிலேயே தங்கள் கவனம் முழுவதையும் செலுத்தி, அங்கேயே தங்கி, போராடிக் கொண்டிருந்தால் அந்தப் புதைமணலுக்குள் இன்னும் ஆழமாகப் புதைந்துபோகும் ஆபத்து உண்டு. புதைமணலில் இருந்து நாம் கரையேற வேண்டுமெனில், உறுதியான ஓர் இடத்தில் உள்ள மற்றவரின் உதவி நமக்கு வேண்டும். அவர், நமது கரத்தைப் பற்றி, நம்மை மேலே இழுத்தால், நாம் அங்கிருந்து வெளியேற முடியும்.

புதைமணலில் சிக்கியிருந்த யோபுவின் நம்பிக்கையற்ற கதறலைக் கேட்டோம். ஆனால், யோபு அங்கேயே தங்கிவிடவில்லை. இறைவன் மீது அவர் கொண்ட நம்பிக்கை, அவரைப் புதைமணலிலிருந்து விடுவித்து, உறுதியான பாறையின் மீது நிறுத்தியது என்பதை நாம் அறிவோம். யோபுவைப் போல, இறைவன் மீது அசையாத நம்பிக்கை கொள்ள, இரக்கத்தின் நற்செய்தி என்றழைக்கப்படும் லூக்கா நற்செய்தி நமக்கு அழைப்பு விடுக்கிறது. இந்த நற்செய்தியில் பதிவாகியுள்ள, நலமளிக்கும் புதுமைகளை, கடந்த சில வாரங்கள் சிந்தித்து வருகிறோம்.

தன் சொந்த ஊரில் புறக்கணிப்பை உணர்ந்த இயேசு, கப்பர்நாகூம் சென்றார். அங்கு, தீய ஆவியால் அலைக்கழிக்கப்பட்ட ஒருவரை, ஒய்வு நாளில், தொழுகைக் கூடத்தில், குணமாக்கினார். இதுவே, லூக்கா நற்செய்தியில் பதிவாகியுள்ள முதல் புதுமை. இந்தப் புதுமையைத் தொடர்ந்து, லூக்கா நற்செய்தியில் நாம் வாசிக்கும் வரிகள் இவை:
லூக்கா 4 38-40
பின்பு இயேசு தொழுகைக் கூடத்தைவிட்டு, சீமோன் வீட்டிற்குள் சென்றார். சீமோனின் மாமியார் கடுங்காய்ச்சலால் துன்புற்ற நிலையில் இருந்தார். அவர்கள் அவருக்காக இயேசுவிடம் வேண்டினார்கள். இயேசு அவரருகில் நின்று, காய்ச்சலைக் கடிந்துகொள்ள அது அவரைவிட்டு நீங்கிற்று. உடனே அவர் எழுந்து அவர்களுக்குப் பணிவிடை செய்தார். கதிரவன் மறையும் நேரத்தில், எல்லாரும் தங்களிடையே பற்பல பிணிகளால் நலம் குன்றி இருந்தோரை அவரிடம் கூட்டிவந்தார்கள். அவர் ஒவ்வொருவர்மேலும் தம் கைகளை வைத்து அவர்களைக் குணமாக்கினார்.

இன்றைய நற்செய்தியில், "கதிரவன் மறையும் நேரத்தில், எல்லாரும் தங்களிடையே பற்பல பிணிகளால் நலம் குன்றி இருந்தோரை அவரிடம் கூட்டி வந்தார்கள்" என்ற சொற்களை வாசித்தபோது, என் மனம், மே 5ம் தேதி, வியாழன் மாலையில், வத்திக்கான் புனித பேதுரு பசிலிக்கா பேராலயத்தில் நிகழ்ந்த மாலை வழிபாட்டை அசைபோட்டது. "கண்ணீரைத் துடையுங்கள்" என்ற பெயரில் நடைபெற்ற அந்த மாலை வழிபாடு, பற்பல பிணிகளால் நலம் குன்றி இருந்தோர் பலரின் கண்ணீரைத் துடைக்கும் ஒரு நிகழ்வாக அமைந்தது. இரக்கத்தின் சிறப்பு யூபிலி ஆண்டின் ஒரு சிறப்பு நிகழ்வாக நடைபெற்ற இந்த மாலை வழிபாட்டைப் பற்றி, நம் அடுத்தத் தேடலில் சிந்திப்போம்.

இன்றையத் தேடலின் இறுதியில், நாம் இறைவனிடம் இரு வரங்களுக்காக மன்றாடுவோம்.
குணம் பெறவேண்டும் என்ற நிலையில் நாம் இருந்தால், அல்லது நமது நெருங்கிய உறவுகள் இருந்தால், நாம் குணம் பெறுவோம், அவர்கள் குணம் பெறுவார்கள் என்ற நம்பிக்கை நமக்குள் வளர வேண்டும் என்று முதலில் மன்றாடுவோம்.
இரண்டாவது, தீயில் வெந்து கிடந்த அந்தச் சிறுவன் குணமாவதற்கு, உதவிகள் செய்கிறோம் என்பதே தெரியாமல் உதவி செய்த அந்த இளம்பெண்ணைப் போல, எவ்வித எதிர்பார்ப்பும் இல்லாமல் பிறருக்கு நன்மைகள் செய்வதற்கு நாம் முன்வர வேண்டும் என்று செபிப்போம்.



No comments:

Post a Comment