05 October, 2016

விவிலியம் : காலமெலாம் வாழும் கருணைக் கருவூலம் - பகுதி – 42

A man with the body of his infant after the child was pulled from the rubble of destroyed buildings in Aleppo 
Credit: Ameer Alhalbi/Agence France-Presse — Getty Images
(NY Times, Sep.27, 2016)

நொபெல் விருது வென்றவர்களின் பெயர்கள், அக்டோபர் 3, இத்திங்கள் முதல், அறிவிக்கப்பட்டு வருகின்றன. அக்டோபர் 7ம் தேதி, உலக அமைதிக்கென உருவாக்கப்பட்டுள்ள நொபெல் விருது யாருக்கு என்பது தெரியவரும். இந்தப் பின்னணியில், செய்தியாளர் ஒருவர், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களிடம் கேள்வி ஒன்றை எழுப்பினார். அக்டோபர் 2, இஞ்ஞாயிறன்று, அசர்பைஜான் நாட்டிலிருந்து உரோம் நகருக்குத் திரும்பிக்கொண்டிருந்த விமானப்பயணத்தில், திருத்தந்தை, வழக்கம்போல், பத்திரிகையாளர்களுடன் மனம் திறந்த உரையாடலை மேற்கொண்டார். அப்போது ஒருவர், "உலக அமைதி விருது அக்டோபர் 7ம் தேதி அறிவிக்கப்படவுள்ளது. உங்கள் கருத்தின்படி, இந்த விருது யாருக்கு வழங்கப்படவேண்டும் என்று எதிர்பார்க்கிறீர்கள்?" என்று கேட்டார். அவருக்கு மறுமொழியாக, போர்களை உருவாக்குவதற்கும், போர்க்கருவிகளை விற்பனை செய்வதற்கும் என்றே பலர் இவ்வுலகில் வாழ்ந்து வருகின்றனர். அமைதியை உருவாக்கவும் பலர் தங்கள் வாழ்வை அர்ப்பணித்துள்ளனர். அமைதிக்காக உழைக்கும் பல ஆயிரம் நல்ல உள்ளங்களில் யாரைத் தெரிவு செய்வதென்பது கடினமான ஒன்று  என்று பதிலளித்தத் திருத்தந்தை, அதே மூச்சில், அமைதியிழந்து தவிப்போரைக் குறித்துப் பேசினார்: அமைதி விருது குறித்து எண்ணிப்பார்க்கும்போது, போரினால் உயிரிழக்கும் பல்லாயிரம் குழந்தைகளை நாம் நினைத்துப் பார்க்கவேண்டும். குழந்தைகளும், குடிமக்களும் இறக்கும்படி தாக்குதல்களை நிகழ்த்துவது, உண்மையிலேயே கொடிய பாவம் என்று திருத்தந்தை வேதனையுடன் பேசினார்.

திருத்தந்தை இவ்வாறு கூறியது, சிரியா நாட்டில் நிகழ்ந்துவரும் கொடுமை என்பதை யாரும் புரிந்துகொள்ள முடியும். சிரியா அரசு, இரஷ்யாவின் உதவியுடன், கடந்த 10 நாட்களாக அங்கு மேற்கொண்டு வரும் தாக்குதல்களில், 100க்கும் அதிகமான குழந்தைகள் இறந்துள்ளனர் என்று ஊடகங்கள் கூறி வருகின்றன. "அலெப்போவில் ஏன் இவ்வளவு அதிகமாக குழந்தைகள் கொல்லப்படுகின்றனர்" (Why So Many Children Are Being Killed in Aleppo) என்ற செய்திக் கட்டுரை, செப்டம்பர் 27ம் தேதி, நியூ யார்க் டைம்ஸ் என்ற நாளிதழின் வலைத்தளத்தில் வெளியாகியிருந்தது. அந்தக் கட்டுரையில், வெளியிடப்பட்டுள்ள புகைப்படங்கள், நம் உள்ளங்களை கீறி, காயப்படுத்துகின்றன. குண்டுகளால் தாக்கப்பட்ட மக்கள் குடியிருப்புக்களில், கட்டட இடிபாடுகளுக்கு நடுவிலிருந்து, உயிரற்று, அல்லது, அரை உயிரும், கால் உயிருமாக வெளியே கொணரப்படும் குழந்தைகளின் படங்கள் வெளியாகியுள்ளன. அலெப்போ நகரில் தங்கியுள்ள 2,50,000 மக்களில், 1,00,000 குழந்தைகள் உள்ளனர் என்று இச்செய்தியில் கூறப்பட்டுள்ளது.

அக்டோபர் 2ம் தேதி, கடந்த ஞாயிறன்று, மகாத்மா காந்தி அவர்கள் பிறந்த நாளை, வன்முறையற்ற உலக நாளாக நாம் சிறப்பித்தோம். அக்டோபர் 4, இச்செவ்வாயன்று, "அமைதியின் தூதனாய் என்னை மாற்றும்" என்ற உயர்ந்ததொரு செபத்தை இவ்வுலகிற்குத் தந்த அசிசி நகர் புனித பிரான்சிஸ் அவர்களின் திருநாளைக் கொண்டாடினோம். அர்த்தமுள்ள இவ்விரு நாட்களையும் சிறப்பித்த நாம், வன்முறையால் உருவாகும் விளைவுகளைச் சிந்திக்க இந்த விவிலியத் தேடலில் முயல்வோம். கடந்த இரு வாரங்களாக, சிரியா நாட்டின் அலெப்போ நகரின் கொடுமைகளை நம் விவிலியத் தேடலில் பகிர்ந்து வந்துள்ள நாம், இன்று, கனத்த இதயத்தோடு மீண்டும் அலெப்போ நகருக்குச் செல்கிறோம்.

இவ்வாண்டு, ஆகஸ்ட் மாதம், தொலைக்காட்சியிலும், செய்தித் தாள்களிலும் வெளியான ஒரு சிறுவனின் படம் நம் கவனத்தை ஈர்த்திருக்கும், இதயத்தைக் கனமாக்கியிருக்கும். சிரியா நாட்டின் அலெப்போ நகரைச் சேர்ந்த 5 வயதான, Omran Daqneesh என்ற சிறுவன், ஓர் ஆம்புலன்ஸ் வண்டியின் இருக்கையில் அமர்ந்திருந்த படம் அது. அவனது தலைமுதல் கால்வரை தூசியும், சாம்பலும் மண்டிக்கிடந்தன. அவன் முகத்தில் பாதிக்குமேல் இரத்தக் கறை. ஆகஸ்ட் 17ம் தேதி, அலெப்போ நகரில் ஏற்பட்ட தாக்குதலில், ஒம்ரான் அடிபட்டபோது, அவனது அண்ணன், 11 வயது நிறைந்த Ali Daqneesh கொல்லப்பட்டான் என்று அச்செய்தியில் கூறப்பட்டிருந்தது. எவ்வித உணர்ச்சியும் இன்றி, எங்கோ பார்த்தபடி அமர்ந்திருந்த சிறுவன் ஒம்ரான், வன்முறையில் நாளுக்கு நாள் மூழ்கிவரும் இவ்வுலகை உலுக்கி எழுப்பும் அடையாளமாக இருக்கிறான். ஒரு வார்த்தையும் பேசாத அவனது முகம், பல ஆயிரம் கேள்விகளை நம்மிடம் கேட்கின்றது.

சிறுவன் ஒம்ரானைக் காட்டும் இக்காணொளிச் செய்தியில், ஓரிடத்தில், நம் உள்ளம் அதிகமாகக் காயப்படுகின்றது. ஆம்புலன்ஸ் வண்டியில் அமர்ந்திருந்த ஒம்ரான், தன் முகத்தில் வடிந்துகொண்டிருந்த இரத்தத்தை இடது கையால் துடைத்து, தன் உள்ளங்கையைப் பார்த்தான். பின்னர், ஒரு குழந்தைக்கே உரிய சுதந்திரத்துடன், அந்த இரத்தத்தை தான் அமர்ந்திருந்த இருக்கையில் துடைத்தான். பொதுவாக, ஐஸ்கிரீம் அல்லது சாக்லேட் என்று எதையாவது சாப்பிடும் குழந்தை, தன் கையில் பட்ட ஐஸ்கிரீம் அல்லது, சாக்லேட்டை, தான் அமர்ந்திருக்கும் இருக்கையில் துடைப்பதைப் பார்த்திருக்கிறோம். அதே போன்றதொரு செயலை, இந்தக் காணொளியிலும் நாம் காண்கிறோம். ஆனால், ஒரே ஒரு வேறுபாடு. சிறுவன் ஒம்ரான் துடைத்தது, ஐஸ்கிரீம் அல்ல, சாக்லேட் அல்ல, அவனுடைய இரத்தம். அச்சிறுவன் அவ்விதம் செய்தது, நம் உள்ளத்தை கீறி, இரணமாக்குகிறது. தன் இரத்தத்தை தானே காணும் அக்குழந்தையின் மனதில் என்ன தோன்றியிருக்கும் என்று எண்ணிப்பார்க்க முடியவில்லை. ஒம்ரானைப்போல் அடிபட்டு, இரத்தம் சிந்தும் இலட்சக்கணக்கான குழந்தைகளின் இரத்தத்தைத் துடைக்கவோ, நிறுத்தவோ வழியின்றி தவிக்கும் இன்றைய உலகின் இயலாமையை எண்ணி வேதனைப்பட வேண்டியுள்ளது. உலகின் வன்முறைகளால் பெருக்கெடுத்தோடும் இரத்த வெள்ளத்தை நிறுத்த முடியாமல் தவிக்கும் நாம், இச்சூழலில், இரத்தம் தொடர்பான ஒரு புதுமையை, குறிப்பாக, இரத்தப் போக்கினால் துன்புற்ற ஒரு பெண்ணின் துயர் துடைத்து, அவரது இரத்தப்போக்கை நிறுத்திய இயேசுவின் புதுமையை இன்றைய நம் தேடலில் சிந்திக்க வந்திருக்கிறோம்.

மத்தேயு, மாற்கு, லூக்கா ஆகிய மூன்று நற்செய்திகளிலும் சொல்லப்பட்டுள்ள இப்பகுதியில், இரு புதுமைகள் நிகழ்கின்றன. மேலோட்டமாகப் பார்க்கும்போது, எவ்விதத் தொடர்பும் இல்லாத இருவேறு புதுமைகளை நற்செய்தியாளர்கள் இணைத்துள்ளதைப் போல் தோன்றலாம். ஆனால், ஆழமாகச் சிந்திக்கும்போது, அழகான ஒப்புமைகளும், வேற்றுமைகளும் வெளியாகும்.
இருபெண்கள் குணமடைகின்றனர்... நோயுள்ள ஒரு பெண்ணும், ஒரு சிறுமியும் இயேசுவால் குணம் பெறுகின்றனர். நோயுள்ள அந்தப் பெண், பன்னிரு ஆண்டுகளாய் இரத்தப்போக்கினால் தன் உயிரைக் கொஞ்சம், கொஞ்சமாய் இழந்து வருபவர். சிறுமியோ, பன்னிரு ஆண்டுகளாய் சுகமாக, மகிழ்வாக வாழ்ந்து, திடீரென உயிர் இழந்தவர். இரத்தப்போக்கு நோயுள்ள பெண், தானே வலியவந்து, இயேசுவைத் தொடுகிறார். அதுவும், யாருக்கும் தெரியாமல் கூட்டத்தோடு, கூட்டமாய் வந்து, அவரது ஆடையின் விளிம்புகளைத் தொடுகிறார். குணமடைகிறார். உயிரிழந்த சிறுமியையோ, இயேசு தொட்டு உயிரளிக்கிறார். 'இரத்தப் போக்குடைய பெண் நலம் பெறுதலும், சிறுமி உயிர்த்தெழுதலும்' என்ற தலைப்பில் பதிவு செய்யப்பட்டுள்ள இவ்விரு புதுமைகளின் ஆரம்ப வரிகளை, லூக்கா நற்செய்தியிலிருந்து கேட்போம்:
லூக்கா 8: 40
இயேசு திரும்பி வந்தபோது அங்கே திரண்டு அவருக்காகக் காத்திருந்த மக்கள் அவரை வரவேற்றனர்.

இந்த வரிகளை வாசிக்கும்போது, இயேசுவுக்குக் கிடைத்த வரவேற்பு நம் கவனத்தை முதலில் ஈர்க்கிறது. கெரசேனர் பகுதி மக்கள் இயேசுவை தங்கள் பகுதியைவிட்டுப் போய்விடுமாறு கூறியதற்கு நேர் மாறாக, கடலின் மறுகரையில் இருந்தவர்கள் அவருக்கு வரவேற்பளித்தனர். துரத்தியடிக்கப்படுவதும், வரவேற்கப்படுவதும் இயேசு அடிக்கடி சந்தித்த அனுபவங்கள். அவரைப் பொருத்தவரை, வரவேற்கப்பட்டாலும் சரி, விரட்டியடிக்கப்பட்டாலும் சரி, தனது நலன்களை வழங்குவது ஒன்றையே அவர் தன் வாழ்வின் குறிக்கோளாகக் கொண்டிருந்தார்.
இந்த வரவேற்பைத் தொடர்ந்து, அங்கு நிகழ்ந்ததை, நற்செய்தியாளர் லூக்கா இவ்விதம் பதிவு செய்துள்ளார்:
லூக்கா 8: 41-42
அப்போது தொழுகைக்கூடத் தலைவர் ஒருவர் இயேசுவிடம் வந்தார். அவர் பெயர் யாயிர். அவர் இயேசுவின் காலில் விழுந்து தம்முடைய வீட்டிற்கு வருமாறு வேண்டினார். ஏனெனில் பன்னிரண்டு வயதுடைய அவருடைய ஒரே மகள் சாகும் தறுவாயிலிருந்தாள்.

இயேசுவுக்கும், யூத மதத் தலைவர்களுக்கும் இருந்த உறவு, பொதுவாக, எதிரும், புதிருமானதாகவே இருந்துள்ளது. இத்தகையைச் சூழலில், இயேசுவுக்கும், தொழுகைக்கூடத் தலைவர், யாயிருக்கும் இடையே நாம் இங்கு காணும் உறவு மிகவும் வேறுபட்டதாக உள்ளது.
யாயிர் விடுத்த அழைப்பை ஏற்று இயேசு அவர் வீடுநோக்கிப் புறப்படுகிறார். வழியில் மற்றொரு புதுமை நிகழ்கிறது. இவ்விரு புதுமைகளையும் இணைத்து சிந்திக்க அடுத்த வாரம் முயல்வோம். அக்டோபர் 4 கொண்டாடப்படும் அசிசி நகர் புனித பிரான்சிஸ் பரிந்துரையோடு நாம் அனைவரும் அமைதியின் தூதர்களாக மாறும் வரம் வேண்டுவோம்.



No comments:

Post a Comment