30 November, 2016

விவிலியம் : காலமெலாம் வாழும் கருணைக் கருவூலம் - பகுதி – 49

Slow down and enjoy life

இரு வாரங்களுக்கு முன், நவம்பர் 13ம் தேதி, ஜப்பான் நாட்டின், கோரா (Kora) என்ற நகரில், வேகமாக உணவு உண்ணும் போட்டியொன்று நிகழ்ந்தது. 'ஒனிகிரி' (Onigiri) என்றழைக்கப்படும் சோற்று உருண்டைகள் ஐந்தினை, யார் விரைவாக உண்கின்றனர் என்பதே, போட்டி. இப்போட்டியில் பங்கேற்ற 15 பேரில், 28 வயதான ஓர் இளைஞர், 5 உருண்டைகளையும் ஒன்றன்பின் ஒன்றாக வாயில் விரைவாகத் திணித்ததால், மூச்சடைத்து, மயங்கி விழுந்தார். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர், மூன்று நாட்கள் 'கோமா' நிலையில் இருந்து, பின்னர், மரணமடைந்தார்.
வேகமாக உண்ணும் போட்டிகள், அதிகமாக உண்ணும் போட்டிகள் போன்றவை, வளர்ச்சியடைந்ததாகச் சொல்லப்படும் நாடுகளின் பல்வேறு நகரங்களில் அவ்வப்போது நடத்தப்படுகின்றன. இத்தகையப் போட்டிகள், பழைய உரோமையக் கலாச்சாரத்தில் நிகழ்ந்த சில கேவலமானப் பழக்கங்களை நினைவுக்குக் கொணர்கின்றன. நாகரீகத்தின் உச்சியில் இருந்ததாக தங்களையே பறைசாற்றிக்கொண்ட உரோமையர்கள், விருந்து நேரத்தில் வயிறு நிறைய உண்டபின், தாங்கள் உண்டதை வலுக்கட்டாயமாக வெளியேற்றிவிட்டு, மீண்டும் உண்டனர் என்று வரலாறு சொல்கிறது. உரோமையக் கலாச்சாரத்தின் அழிவுக்கு, இத்தகைய வரம்பு மீறிய பழக்கங்கள் காரணமாக இருந்தன என்பது, வரலாற்று ஆய்வாளர்களின் கருத்து.

உண்ணுதல் என்பது, அடிப்படை மனிதத் தேவை. அதனை, நிதானமாக, அமர்ந்து, சுவைத்து, உண்பது, நலனையும், நீண்ட ஆயுளையும் தரும் என்று, நம் முன்னோர் நம்பி வந்தனர்.
உண்பதைப் பற்றிய பாடங்களை, நம்மைச் சுற்றியுள்ள மிருகங்களிடமிருந்து கற்றுக்கொள்ளக் கடமைப்பட்டுள்ளோம். மிருகங்கள், பசித்தால் மட்டுமே உண்ணும். தன் தேவை நிறைவானதும், அவை உண்பதில்லை. உண்ணும்போது, அவை, அவசர, அவசரமாக விழுங்குவதும் கிடையாது. மாடுகள், தாங்கள் உண்டதை மீண்டும் அசைபோடுவதையும் நாம் பார்த்திருக்கிறோம். மனிதர்களாகிய நாம் மட்டுமே, தேவையில்லாதபோது உண்பது, தேவைக்கும் அதிகமாக உண்பது, விரைவாக விழுங்குவது போன்ற பழக்கங்களை வளர்த்துக்கொண்டு, உடல் நலத்தை இழந்து தவிக்கிறோம். நம் தவறான பழக்கங்களை மூலதனமாக்கி, துரித உணவகங்கள் ஊரெங்கும் வளர்ந்துவிட்டன.

உண்பது உட்பட, அனைத்தையும் விரைவாகச் செய்யவேண்டும் என்று வலியுறுத்திவரும் இவ்வுலகப் போக்கிற்கு ஒரு மாற்று அடையாளமாக, ஒரு சில இயக்கங்கள் இவ்வுலகில் உருவாகி வருவது, மனதுக்கு ஆறுதலான செய்தி. அவற்றில் ஒன்றான, 'நிதான உணவு' (Slow Food) என்ற எண்ணத்தை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்ட, 'நிதான இயக்கம்', 'நிதான நகரம்' என்ற முயற்சிகள்.
மெக்டானல்டு (McDonald's) என்றழைக்கப்படும் பன்னாட்டு உணவு நிறுவனம், 1986ம் ஆண்டு, உரோம் நகரின் புகழ்பெற்ற 'இஸ்பானிய சதுக்க'த்தில், ஒரு துரித உணவகத்தைத் (Fast food) திறப்பதற்கு முயன்றபோது, எதிர்ப்புகள் எழுந்தன. இந்த எதிர்ப்புப் போராட்டம் புதுவகையில் வெளிப்பட்டது. இந்தப் போராட்டத்தை முன்னின்று நடத்திய கார்லோ பெத்ரீனி (Carlo Petrini) என்பவர், துரித உணவகம் என்ற கருத்துக்கு மாற்றாக, 'நிதான உணவு' (Slow Food) என்ற இயக்கத்தை உருவாக்கினார்.
நாளடைவில், இந்த இயக்கம், 'நிதான நகரம்' (Cittaslow) என்ற எண்ணமாக உருவெடுத்தது. இயற்கையில் விளையும் உணவு, சுத்தமான காற்று, நீர் என்பன போன்ற 54 அம்சங்களை அடித்தளமாகக் கொண்டு உருவாக்கப்பட்ட இந்நகரங்கள், ஆஸ்திரேலியா முதல், கனடா முடிய, 30க்கும் அதிகமான நாடுகளில் இயங்கி வருகின்றன.

இந்த இயக்கத்தையும், இத்தகைய வாழ்வியலையும் குறித்து, கனடா நாட்டு செய்தித் தொடர்பாளர், கார்ல் ஒனோரே (Carl Honoré) என்பவர், "In Praise of Slowness: Challenging the Cult of Speed" அதாவது, "நிதானத்தின் புகழ்: வேகம் என்ற சடங்கு முறைக்குச் சவால்" என்ற நூலை, 2004ம் ஆண்டு வெளியிட்டார். இந்நூலில் 'நிதான இயக்கம்' (Slow Movement) பற்றி இவர் கூறும் கருத்துக்கள் ஆழமானவை:
"அதிவேகம் சிறந்தது என்ற எண்ணத்திற்கு எதிர்ப்பாக எழுந்துள்ள கலாச்சாரப் புரட்சியே, நிதான இயக்கம். 'நிதானம்' என்றதும், அனைத்தையும் நத்தையைப்போல் மெதுவாகச் செய்வது அல்ல. அனைத்தையும், அவற்றிற்குத் தேவையான, பொருத்தமான வேகத்துடன் செய்வதே, நிதான இயக்கம். நாம் செலவழிக்கும் மணித்துளிகளை, ஓர் எண்ணிக்கையாக மட்டும் காணாமல், அவற்றை சுவைத்து வாழ்வது. செய்வதனைத்தையும் துரிதமாகச் செய்வதற்குப் பதில், செவ்வனே செய்வது. நமது வேலை, உணவு, குழந்தை வளர்ப்பு ஆகிய அனைத்திலும், அளவைவிட, தரத்தை உறுதி செய்வது. இதுவே, நிதான இயக்கம்."

Slow Food Movement History

நிதான உணவு, நிதான நகரம், நிதான இயக்கம் ஆகிய கருத்துக்களை இன்று நாம் சிந்திப்பதற்கு, காரணம் உள்ளது. இந்த விவிலியத்தேடலில் நாம் 'அசைபோட' வந்திருக்கிறோம். துரித உணவை விழுங்கிய வண்ணம், உலகப் பாதையில் விரைவாக ஓடிக்கொண்டிருக்கும் மக்கள் மத்தியில், எவ்வித பரபரப்பும் இன்றி, தான் உண்டதை அசைபோட்டபடி அமர்ந்திருக்கும் மாடு, நம் விவிலியத்தேடலுக்கு ஓர் அடையாளமாக அமைகிறது.
சென்ற ஆண்டு, டிசம்பர் 8ம் தேதி முதல், இவ்வாண்டு நவம்பர் 20ம் தேதி முடிய, நாம் அருள் மிகுந்த, ஓர் அற்புத காலத்தில் பயணித்தோம். சரியாக 349 நாட்கள் நாம் கடந்துவந்த இப்பயணத்தை, 'இரக்கத்தின் சிறப்பு யூபிலி' என்றழைத்தோம். இந்த யூபிலி, ஒரு வரலாற்று நினைவாக மட்டும் இருந்துவிடாமல், நம் வாழ்வில் தொடர்ந்து தாக்கங்களை உருவாக்கும் அருள் மிகுந்த காலமாக மாறவேண்டுமெனில், இந்த ஆண்டு நிகழ்ந்தவற்றை சிறிது அசைபோடுவது பயனளிக்கும். இதை மனதில் கொண்டு, இன்றும், இனி வரும் தேடல்களிலும் 'அசைபோட' முயல்வோம்.

2015ம் ஆண்டு, மார்ச் 13ம் தேதி, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் தலைமைப் பொறுப்பேற்ற 2ம் ஆண்டு நிறைவு பெற்றது. அன்று, புனித பேதுரு பசிலிக்காப் பேராலயத்தில், 'இறைவனுக்கு 24 மணி நேரங்கள்' என்ற சிறப்பு வழிபாட்டு நிகழ்ச்சியை, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் முன்னின்று நடத்தினார். அந்த வழிபாட்டு நிகழ்ச்சியில் அவர் வழங்கிய மறையுரையின் இறுதி சில நிமிடங்களில், ஆனந்த அதிர்ச்சியொன்றை அகில உலக கத்தோலிக்க சமுதாயத்திற்கு வழங்கினார்:
"அன்பு சகோதர, சகோதரிகளே, 'இரக்கத்தின் சாட்சி என்ற மறைப்பணியை, திருஅவை இவ்வுலகில் எவ்விதம் முழுமையாக நிறைவேற்றமுடியும் என்று நான் அடிக்கடி சிந்தித்துள்ளேன். எனவே, இறைவனின் இரக்கத்தை மையப்படுத்தி, சிறப்பு யூபிலி ஒன்றை அறிவிக்க முடிவு செய்துள்ளேன். இது இரக்கத்தின்  ஆண்டாக இருக்கும். இறைவனின் இரக்கத்தை மீண்டும் ஒருமுறை தேடிக் கண்டுபிடிக்கவும், பறைசாற்றவும், இந்த யூபிலி உதவி செய்யும் என்று நம்புகிறேன்."

அற்புதமான இந்த வார்த்தைகளோடு, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் இரக்கத்தின் சிறப்பு யூபிலி ஆண்டினை அறிவித்தார். சென்ற ஆண்டு, டிசம்பர் 8ம் தேதி, அமல அன்னை மரியாவின் பெருவிழாவன்று, இந்த சிறப்பு யூபிலி ஆண்டின் ஆரம்பத் திருப்பலியை, புனித பேதுரு பசிலிக்காப் பேராலய வளாகத்தில் ஆற்றியத் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், திருப்பலியின் இறுதியில், பேராலய முகப்பில் அமைந்துள்ள புனிதக்கதவை திறந்து, இந்த யூபிலி ஆண்டினைத் துவக்கிவைத்தார்.
1965ம் ஆண்டு, டிசம்பர் 8ம் தேதி 2ம் வத்திக்கான் சங்கம் நிறைவுற்றது. அந்நிகழ்வின் 50ம் ஆண்டைக் கொண்டாடும் வகையில், இரக்கத்தின் சிறப்பு யூபிலி ஆண்டு அறிவிக்கப்பட்டது. 2ம் வத்திக்கான் சங்கத்தின் 50ம் ஆண்டு நிறைவை, யூபிலியாகக் கொண்டாடுவது பொருத்தம்தான் என்றாலும், அந்தக் கொண்டாட்டத்திற்கு ஏன் இரக்கத்தின் சிறப்பு யூபிலி என்ற மையக்கருத்தை திருத்தந்தை தேர்ந்தார் என்ற கேள்வி எழுந்தது.

இக்கேள்விக்குப் பதில் தருவதுபோல், 'இரக்கத்தின் முகம்' (Misericordiae Vultus) என்ற பெயரில், இந்த யூபிலி ஆண்டைக் குறித்து வெளியிட்டிருந்த அதிகாரப்பூர்வமான ஆவணத்தில், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இரண்டாம் வத்திக்கான் சங்கத்திற்கும், இரக்கத்திற்கும் உள்ள தொடர்பை, ஆழமாக விளக்கியிருந்தார். திருத்தந்தை வழங்கிய விளக்கம் இதோ:
இரண்டாம் வத்திக்கான் சங்கத்தின் வழியாக, திருஅவை, தன் வரலாற்றில் புதியதோர் அத்தியாயத்தில் அடியெடுத்து வைத்தது. இறைவன், மனிதர்களுக்கு நெருக்கமானவர் என்ற பாணியில் பேச, சங்கத்தின் தந்தையர் தீர்மானித்தனர். அதேவண்ணம், மதில் சுவர்களால் சூழப்பட்டிருந்த கோட்டைபோல் தோன்றிய திருஅவை, அந்நிலையிலிருந்து வெளியேறி, புதிய வழியில் நற்செய்தியைப் பறைசாற்ற வேண்டும் என்றும் சங்கத் தந்தையர் முடிவெடுத்தனர்.

2ம் வத்திக்கான் சங்கம் துவக்கிவைத்த இந்த மாற்றங்களுக்கும், இரக்கத்திற்கும் உள்ள தொடர்பை, சங்கத்தின் துவக்கத்திலும், முடிவிலும் பேசிய இரு திருத்தந்தையரின் வார்த்தைகள் வழியே நினைவு கூர்ந்துள்ளார், திருத்தந்தை பிரான்சிஸ். 2ம் வத்திக்கான் சங்கத்தின் துவக்கத்தில், புனித 23ம் ஜான் கூறிய மனதைத் தொடும் வார்த்தைகள் இதோ:
கிறிஸ்துவின் மணமகளான திருஅவை, தன் கண்டிப்பான கரத்தை உயர்த்துவதற்குப் பதில், இரக்கத்தின் மருந்தைப் பயன்படுத்த விரும்புகிறார். பொறுமை, கனிவு, பரிவு கொண்ட அன்னையாக, அனைவருக்கும், குறிப்பாக, தன்னைவிட்டுப் பிரிந்து சென்ற குழந்தைகளுக்கு, தன்னை வெளிப்படுத்த விரும்புகிறார் என்ற கனிவானச் சொற்களுடன் திருத்தந்தை, புனித 23ம் ஜான் அவர்கள், வத்திக்கான் சங்கத்தைத் துவக்கிவைத்தார். அதே கனிவுடன், சங்கத்தின் இறுதியில் அருளாளர் ஆறாம் பவுல் அவர்கள் இவ்வாறு பேசினார்:
"2ம் வத்திக்கான் சங்கத்தின் தலையாயப் பண்பாக விளங்கியது, பிறரன்பு. நல்ல சமாரியர் என்ற மனநிலையே சங்கத்தின் ஆன்மீகமாக விளங்கியது. திருஅவையும், ஏனையச் சபைகளும் ஒருவர் ஒருவர் மீது கொண்டிருக்கும் பாசமும், மதிப்பும், இச்சங்கத்தில் வெளிப்பட்டன. குற்றங்கள் கடிந்துகொள்ளப்பட்டன; ஆனால், தவறு செய்தவர் மீது, அன்பும், மதிப்பும் காட்டப்பட்டன. நம்மைப் பீடித்துள்ள நோய்களைக் குறித்து, மனம் தளரும் வண்ணம் ஆய்வுகளை மேற்கொள்வதற்குப் பதில், மனதைத் தேற்றும் மருந்துகள் வழங்கப்பட்டன."

இரக்கத்தை வலியுறுத்தி, திருத்தந்தையர் இருவரும் கூறிய வார்த்தைகளை தன் ஆவணத்தில் நினைவுகூர்ந்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இந்த இரக்கத்தை, திருஅவை தொடர்ந்து சுவைக்கவும், குறிப்பாக, வன்முறைகளாலும், வெறுப்பாலும் காயப்பட்டு, கதறியழும் மனித குலத்திற்கும், பூமிக் கோளத்திற்கும் இரக்கம், மிக, மிக அவசியமான மருந்து என்பதை மனிதர்களாகிய நாம் உணரவும், இந்த யூபிலி ஆண்டு உதவவேண்டும் என்ற விண்ணப்பத்தை விடுத்தார்.
திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் விழைந்தவாறு, இந்த யூபிலி ஆண்டில், இரக்கம் என்ற எண்ணம், கத்தோலிக்கத் திருஅவையைத் தாண்டி, ஏனைய மதத்தினரையும், உலக அரசுகளையும், அமைப்புக்களையும் தொட்டுள்ளது என்பதை நாம் மனநிறைவோடு அசைபோட்டு பார்த்து, இறைவனுக்கு நன்றி சொல்வோம்.


27 November, 2016

Meeting Peace, peacefully அமைதியாய் அமைதியைச் சந்திக்க...

First Sunday of Advent

The First Sunday of Advent

Recently, some of my friends had sent me via Whatsapp, a picture with a caption. The picture showed a snake displaying its seven-headed hood on a roadside. The caption below the picture said that that snake was found in Honduras and a seven-headed snake is a sign that the end of the world was imminent. On closer look, I could easily find out that the picture was not taken in Honduras, but in India. I made further ‘investigation’ into this picture and found out that this was the ‘cut-and-paste’ work of a person who knew a bit of ‘photo-shop’, but done rather clumsily. What was more disturbing is the fact that this picture has been doing quite a few rounds in the web for the past four to five years with many other captions. This time it was ‘the imminent end’.
With our high-tech communication gadgets and applications, we are flooded with pictures, videos and texts every day. This flood, I am afraid, sweeps us off our feet and we add to this flood without a second thought. When we receive a message, we are keen on sharing it with others immediately without taking time to verify its veracity, source etc. Thus we seem to spread enough unfounded rumours and cause confusions.

When we witness ‘unusual’ events, our curiosity gets tickled more than our reason. We tend to give facile ‘interpretations’ to those events, especially labelling them as symptoms of the ‘end-times’ or ‘doomsday’ and pass them on to others. What is our understanding of the ‘end-times’? This Sunday’s liturgy gives us an opportunity to face this important question with calmness. This Sunday we begin the Advent Season and with that a new liturgical year. The beginning of a liturgical year, paradoxically, talks of the end.

End-times, doomsday… these words flood our minds with doom and destruction. I am not sure when the world would come to an end. It can be tomorrow or after a million years or it may not end at all. But, I am sure that my life, your life, all life will come to an end. How do we look upon this end? Are we just going to vanish into thin air? Or, are we going to meet our Creator? If it is seen as a meeting, then again, we need to ask another question whether this meeting is a joyous expectation or a dreaded encounter.
Great Saints and sages have shown us the way as to how to face this end, how to face one’s death.
Once John Wesley, the co-founder of the Methodists, was asked what he would do if he knew that that was his last day on earth. He replied, "At 4 o'clock I would have some tea. At 6 I would visit Mrs. Brown in the hospital. Then at 7:30 I would conduct a mid-week prayer service. At 10 I would go to bed and would wake up in glory."
Here is an incident from the life of St.Philip Neri. (My friend told me that he had heard the same story attributed to another saint. I guess all saints are of the same mould.): While Philip was playing cards with his friends, one of them asked him what he would do if he knew that his death was imminent. Without any hesitation, Philip told him that he would continue playing cards.
I can well imagine that if Philip had died playing cards, he would simply continue playing cards on the other side of the grave as well. Only his companions would have changed to… God and angles!

Let us beg of God to give us this enlightenment!

Do the final days of the world bring in only doom and destruction? Prophet Isaiah does not think so. Here is the first reading for this Sunday.
Isaiah 2: 2-5
In the last days the mountain of the LORD’s temple will be established as the highest of the mountains; it will be exalted above the hills, and all nations will stream to it.
Many peoples will come and say, “Come, let us go up to the mountain of the LORD, to the temple of the God of Jacob. He will teach us his ways, so that we may walk in his paths.”
The law will go out from Zion, the word of the LORD from Jerusalem.
He will judge between the nations and will settle disputes for many peoples. They will beat their swords into ploughshares and their spears into pruning hooks. Nation will not take up sword against nation, nor will they train for war anymore.
Come, descendants of Jacob, let us walk in the light of the LORD.

The last days can be seen as doom and destruction or as fulfilment. The scene imagined by the Prophet is so comforting and soothing, especially the final verses where he thinks of a world without war. Isn’t this what all of us long for? The situation in most parts of the world is very volatile. Even a small spark is enough to set off a series of wars. Pope Francis, on quite a few occasions have spoken about the ‘third world war’ being fought in bits and pieces all over the world – the worst being in Syria.
Isaiah’s words are very inspiring as well as challenging. He talks of how destructive efforts (war) can be turned into productive efforts (agriculture). Swords into ploughshares… spears into pruning hooks (sickles). If we can convert all the war gadgets into agricultural gadgets…? If there is no more war training that kills, but only training for nourishing life? This is the desire, the challenge expressed by the Prophet. Swords and spears becoming agricultural tools is not a guarantee that war would stop. We have known that even ploughshares and sickles have been used in caste wars in India. Hence, ultimately, it is our will power which will pave way for peace and prosperity for all.

The vision that Isaiah has portrayed is a good beginning for our Advent… the Season in which we look forward to the Coming of Christ. “He comes, comes ever comes.” (Tagore) He comes in various forms and it is up to us to recognise his coming, his presence in our daily life. Last week the Extraordinary Jubilee of Mercy came to a close. Starting from the Pope, many Bishops and Priests have been insisting on the fact that the Jubilee may have ended but not Mercy. The Apostolic Letter of Pope Francis – ‘Misericordia et misera’ speaks of this ‘continuation’ in powerful words:
“… what we have celebrated during the Holy Year, a time rich in mercy, … must continue to be celebrated and lived out in our communities. Mercy cannot become a mere parenthesis in the life of the Church; it constitutes her very existence, through which the profound truths of the Gospel are made manifest and tangible. Everything is revealed in mercy; everything is resolved in the merciful love of the Father.” (MeM 1)

“Mercy cannot become a mere parenthesis in the life of the Church; it constitutes her very existence…” Very powerful words that define the reason for the Church’s existence. Similarly, mercy needs to become the heart-beat of not only the Christian world, but also of the whole world! May the Advent season we have begun envelop the world with mercy! 
Misericordia et misera

திருவருகைக் காலம் முதல் ஞாயிறு

சில நாட்களுக்கு முன், Whatsapp வழியே, சில நண்பர்கள், ஒரு படத்தையும், அத்துடன், ஓர் எச்சரிக்கையையும் பகிர்ந்துகொண்டனர். ஏழு தலைகள் கொண்ட பாம்பு ஒன்று, சாலையோரத்தில் படமெடுத்து ஆடுவது போன்று, அந்தப் படம் அமைந்திருந்தது. படத்திற்கு அடியில், அந்தப் பாம்பு, ஹொண்டுராஸ் நாட்டில் காணப்பட்டதாகவும், ஏழு தலை நாகம், உலக முடிவுக்கு ஓர் அறிகுறி என்றும் எச்சரிக்கை விடப்பட்டிருந்தது. அந்தப் படத்தையும், எச்சரிக்கையையும் சிறிது ஆழமாக ஆய்வு செய்தால், அவற்றில் உள்ள தவறுகள் வெளிச்சமாகும். அந்தப்படம், ஹொண்டுராஸில் அல்ல, இந்தியாவில் எடுக்கப்பட்டது என்பதும், கம்ப்யூட்டர் நுணுக்கங்கள் தெரிந்த ஒருவர், படமெடுத்து ஆடும் ஒரு பாம்பின் தலையை, ஏழுமுறை வெட்டி ஒட்டி, அந்தப் படத்தை உருவாக்கியுள்ளார் என்பதும், புரியும். இதில், மற்றொரு வருத்தமான அம்சம் என்னெவெனில், இந்தப் படம், கடந்த நான்கு, அல்லது, ஐந்து ஆண்டுகள், நம் சமூக வலைத்தளங்களில், பல்வேறு காரணங்களுக்காக, மீண்டும், மீண்டும் தோன்றி, பரபரப்பை உண்டாக்கி வருகிறது.
பிரமிக்கத்தக்க தொழில் நுட்பங்களால், நம்மிடையே தகவல் பரிமாற்றங்கள் தாறுமாறாகப் பெருகிவிட்டன. நம்மை வந்தடையும் ஒரு தகவலை உள்வாங்கி, அதில் உள்ள உண்மையை, அதனால் விளையும் நன்மை, அல்லது, தீமையைக் குறித்து சிறிதும் சிந்திக்காமல், அதை உடனே மற்றவர்களோடு பகிர்ந்துகொள்ளவேண்டும் என்ற வேகமே, நம்மிடம் அதிகம் உள்ளதோ என்ற கவலை எழுகிறது. இத்தகையத் துரிதப் பரிமாற்றங்களால், வதந்திகளும், குழப்பங்களுமே அதிகம் உருவாகின்றன என்பதையும் மறுக்கமுடியாது.

"உலகம் முடியப் போகிறது" என்ற வதந்தி, இதுவரை பலமுறை தோன்றி மறைந்துள்ளது. இறுதியாக நாம் இந்த வதந்தியை, 2012ம் ஆண்டு கேட்டோம். 2012ம் ஆண்டு, டிசம்பர் மாதம் துவங்கியதும், உலக முடிவைப் பற்றிய பல செய்திகள் உலவி வந்தன. தென் அமெரிக்காவின் பழமைவாய்ந்த மாயன் கலாச்சார நாள்காட்டியின்படி, 21-12-2012 என்ற எண்ணிக்கை கொண்ட நாளன்றுஅதாவது, 2012ம் ஆண்டு டிசம்பர் மாதம் 21ம் தேதி உலகம் முடியும் என்று சொல்லப்பட்டிருந்ததாக வதந்திகள் உலவியதால், இந்தப் பரபரப்பு உருவானது. 21-12-2012 வந்தது, போனது. உலகம் இன்னும் இயங்கிக் கொண்டிருக்கிறது. கடந்த 4 ஆண்டுகளாக உறங்கிக்கிடந்த உலகமுடிவு என்ற வதந்தி, மீண்டும் இந்த ஏழு தலைப் பாம்பின் வழியே விழித்தெழுந்துள்ளது என்பதை எண்ணும்போது, இத்தகைய வதந்திகளை ஏன் பரப்புகிறோம் என்பதை ஆய்வு செய்யக் கடமைப்பட்டுள்ளோம்.

நம்மைச்சுற்றி, இயற்கையில், அல்லது, அரசியல், மதம், சமுதாயம் இவற்றில் உண்டாகும் பல எதிர்பாராத நிகழ்வுகளை, உலக முடிவின் அடையாளங்கள் என்று, எளிதில் முடிவு கட்டிவிடுகிறோம். இறுதி காலத்தைப்பற்றி நாம் பகிர்ந்துகொள்ளும் கருத்துக்கள், பொதுவாக, பரபரப்பையும், அச்சத்தையும் உருவாக்கும் கருத்துக்களாகவே உள்ளன. உலக முடிவு, இறுதிக்காலம், மானிட மகனின் இரண்டாம் வருகை ஆகியவை நமக்குள் எவ்வகை உணர்வுகளை எழுப்புகின்றன? எவ்வகை உண்மைகளைச் சொல்லித்தருகின்றன? என்பதைச் சீர்தூக்கிப் பார்க்க, இந்த ஞாயிறு, தகுந்ததொரு தருணமாக அமைந்துள்ளது.
இன்று, திருவருகைக் காலத்தின் முதல் ஞாயிறு. ஒவ்வோர் ஆண்டும், திருவருகைக் காலத்துடன், ஒரு புதிய வழிபாட்டு ஆண்டைத் துவக்குகிறோம். திருவருகைக் காலம் என்றதுமே, கிறிஸ்மஸ் விழாவுக்கான ஏற்பாடுகள், களைகட்டத் துவங்கிவிடும். திருஅவை கொண்டாடும் அனைத்து விழாக்களிலுமே, கிறிஸ்மஸ் விழா, தனியிடம் பெறுகிறது; ஏராளமான மகிழ்வைக் கொணர்கிறது. கிறிஸ்துவ உலகையும் தாண்டி, உலகில் பெரும் தாக்கத்தை உருவாக்கும் விழா இது என்று சொன்னால், மிகையல்ல. குழந்தை வடிவில் நம் இறைவன் வருவார் என்று எதிர்பார்த்துக் காத்திருக்கும் திருவருகைக் காலத்தின் முதல் ஞாயிறன்று, உலகின் முடிவில் இறைவன் மீண்டும் வருவதை நினைவுறுத்தும் நற்செய்தி நமக்குத் தரப்பட்டுள்ளது.

உலக முடிவைப் பற்றி நம்மால் தீர்மானமாக ஒன்றும் சொல்லமுடியாது. அது நாளையே வரலாம், இன்னும் பல கோடி ஆண்டுகள் சென்று வரலாம், அல்லது, வராமலேயேப் போகலாம். ஆனால், நம் ஒவ்வொருவரின் தனிப்பட்ட உலக வாழ்வு முடியும் என்பது, திண்ணமான உண்மை. இந்த முடிவும், எப்போது வரும் என்பது, நிச்சயமற்ற ஒன்று. உலகின் முடிவு, அல்லது, நமது வாழ்வின் முடிவு என்பதைக் குறித்த நம் கண்ணோட்டம் என்ன?
எல்லாம் முடிந்துவிடும், எல்லாம் அழிந்துவிடும் என்ற கோணத்தில் சிந்தித்தால், மனதில் வெறுமை உணர்வுகள் மேலோங்கும், வாழ்வதில் பொருளே இல்லை என்ற சலிப்பு உருவாகும். உலக முடிவில் அல்லது வாழ்வின் முடிவில் நாம் இறைவனைச் சந்திக்கச் செல்கிறோம் என்ற எண்ணம், எதிர்பார்ப்பை உருவாக்கலாம். நாம் சந்திக்கச் செல்வது, நமது அன்புத் தந்தையை, தாயை, அல்லது உற்ற நண்பரை என்ற கண்ணோட்டம் இருந்தால், இச்சந்திப்பை ஆவலுடன் எதிர்பார்ப்போம். நாம் சந்திக்கப் போவது, நம்மைத் தீர்ப்பிடவிருக்கும் ஒரு நீதிபதியை என்ற கண்ணோட்டம் இருந்தால், இச்சந்திப்பு, பயத்தையும், கலக்கத்தையும் உருவாக்கும்.

நமக்குத் தெரியாத ஒருவரைச் சந்திக்கச் செல்லும் நேரங்களில், நாம் நடந்துகொள்ளும் விதம், நாம் மற்ற நேரங்களில் நடந்துகொள்ளும் விதத்தைவிட வித்தியாசமாக இருக்கும். அதுவும், நாம் சந்திக்கச் செல்வது, மிக முக்கியமான ஒருவர் என்றால், மிகவும் கவனமாக நடந்துகொள்வோம். குழந்தைகளிடமும், வயதானவர்களிடமும் இந்த மாற்றங்கள் இருக்காது. அதேபோல், ஆன்மீகத்தில் அதிகம் வளர்ந்தவர்களிடமும் இந்த மாற்றங்கள் இருக்காது. யார் பார்த்தாலும், பார்க்காமல் போனாலும் சரி. அவர்கள் எந்நேரத்திலும் உண்மையான ஈடுபாட்டுடன் ஒவ்வொரு நாள் செயல்களையும் செய்வர். நேரத்திற்குத் தக்கதுபோல், தன்னைச் சூழ்ந்திருப்போருக்குத் தகுந்ததுபோல், வாழ்வை மாற்றிக்கொள்ளாமல் வாழ்ந்த பல உயர்ந்த மனிதர்களின் வாழ்க்கை, நமக்குப் பாடமாக அமையவேண்டும்.

நகைச்சுவை உணர்வுடன் எப்போதும் வாழ்ந்ததாகச் சொல்லப்படும் புனித பிலிப் நேரி, ஒருநாள், நண்பர்களுடன் சீட்டு விளையாடிக் கொண்டிருந்தார். அப்போது சாவைப் பற்றிய பேச்சு அங்கு எழுந்தது. நண்பர்களில் ஒருவர் பிலிப்பிடம், "பிலிப், இதோ, அடுத்த நிமிடமே நீ இறக்கப் போகிறாய் என்று தெரிந்தால், என்ன செய்வாய்?" என்று கேட்டார். பிலிப் ஒரு நிமிடம் சிந்தித்தார். பின்னர் தன் நண்பரிடம், "தொடர்ந்து சீட்டு விளையாடிக் கொண்டிருப்பேன்" என்றார்.

மரணத்தை, பயங்கரமான ஒரு மாற்றமாக, முடிவாகப் பார்ப்பவர்கள், அதைக் கண்டு பயப்பட வேண்டியிருக்கும். காரணம்? அவர்களது வாழ்வுக்கும், சாவுக்கும் இடையே ஏகப்பட்ட முரண்பாடுகள் இருக்கலாம். இந்த முரண்பாடுகளை எல்லாம் சரிசெய்துவிட்டு, மரணத்தைச் சந்திக்க அவர்களுக்கு அதிக நேரம் தேவைப்படுகிறது. ஆனால், வாழ்வு முழுவதையும், நல்லவிதமாக, பொறுப்புணர்வுடன் வாழ்பவர்களுக்கு, வாழ்ந்தவர்களுக்கு சாவு எவ்வகையிலும் பயத்தை உண்டாக்காது என்பதற்கு, புனித பிலிப் நேரி அவர்கள், நல்லதோர் எடுத்துக்காட்டு.
சாவின் வழியாக, தன்னைச் சந்திக்கப்போவது அல்லது தான் சென்றடையப்போவது இறைவன்தான் என்பதை ஆழமாக உணர்ந்தபின், பயம், பரபரப்பு எல்லாம் ஏன்? தேவையில்லையே. புனித பிலிப் நேரியைப் பொருத்தவரை, நாம் இப்படி கற்பனை செய்து பார்க்கலாம். நண்பர் சொன்னதுபோலவே, சீட்டு விளையாடிக் கொண்டிருக்கும்போது அவருக்கு சாவு நேரிட்டால், மறு வாழ்வில், அந்த இறைவனோடு, தன் விளையாட்டைத் தொடர்ந்திருப்பார், பிலிப்.

ஜான் வெஸ்லி என்பவர், 18ம் நூற்றாண்டில் வாழ்ந்த ஒரு மேதை. கிறிஸ்தவ வாழ்வு என்பது, பொறுப்புடன் சரியானக் கணக்கை இறைவனிடம் ஒப்படைக்கும் ஒரு பணி என்ற எண்ணத்தை, இங்கிலாந்து மக்கள் மத்தியில் விதைத்தவர் இவர். இன்று உங்கள் வாழ்வின் கடைசி நாள் என்றால் நீங்கள் என்ன செய்வீர்கள்?” என்று இவரிடம் ஒருவர் கேட்டபோது, இவர் சொன்ன பதில் இதுதான்: "மாலை நான்கு மணிக்கு, நான் வழக்கம்போல் தேநீர் அருந்துவேன், 6 மணிக்கு, நோயுற்றிருக்கும் திருமதி பிரவுன் அவர்களை மருத்துவமனையில் பார்க்கச் செல்வேன், 8 மணிக்கு, என் மாலை செபங்களைச் சொல்வேன், இரவு உணவுக்குப் பின், வழக்கம்போல் படுக்கச் செல்வேன்... விழித்தெழும்போது, என் இறைவன் முகத்தில் விழிப்பேன்" என்று சொன்னாராம்.

புனித பிலிப் நேரியைப் போல், ஜான் வெஸ்லியைப் போல், மனதில் எவ்வித அச்சமுமின்றி, அமைதியாக மரணத்தைச் சந்திக்கும் பக்குவம், ஒரு நாளில் உருவாகும் மனநிலை அல்ல. வாழ்நாளெல்லாம் ஒருவர் பழக்கப்படுத்தும் மனநிலை அது. இத்தகைய நிலையை அடைந்தவர்கள், தங்கள் தனிப்பட்ட வாழ்வில் ஆழ்ந்த அமைதியை உணர்ந்தவர்கள். அமைதியை, தங்கள் உயிர் மூச்சாகக் கொண்டு வாழ்பவர்கள் இவ்வுலகில் பெருகினால், நாம் இன்று ஏங்கித் தவிக்கும் அமைதி, உலகெங்கும் நிறையும்.

அமைதி நிறைந்த உலகை ஒரு கனவாக, கற்பனையாகக் கண்டவர், இறைவாக்கினர் எசாயா. அவரது கற்பனை வரிகள், இந்த ஞாயிறன்று, நமது முதல் வாசகமாக ஒலிக்கின்றன. இறைவாக்கினர் எசாயா கண்ட கனவு, நம் உள்ளத்திலும் நம்பிக்கையை உருவாக்கட்டும்.
எசாயா 2 : 4-5
அவர்கள் தங்கள் வாள்களைக் கலப்பைக் கொழுக்களாகவும் தங்கள் ஈட்டிகளைக் கருக்கரிவாள்களாகவும் அடித்துக் கொள்வார்கள், ஓர் இனத்திற்கு எதிராக மற்றோர் இனம் வாள் எடுக்காது: அவர்கள் இனி ஒருபோதும் போர்ப்பயிற்சி பெறமாட்டார்கள். யாக்கோபின் குடும்பத்தாரே, வாருங்கள் நாம் ஆண்டவரின் ஒளியில் நடப்போம்.

இறைவாக்கினர் எசாயா சொல்லும் வார்த்தைகளைக் கேட்கும்போது, இத்தகைய உலகம், கற்பனையாக, கனவாக மட்டுமே இருக்கமுடியும். நனவாக மாறவே முடியாது என்று, நம்மில் பலர் தீர்மானித்து விடுகிறோம். எனவே, இப்படி ஒரு உலகை நினைத்துப்பார்த்து, ஏக்கப் பெருமூச்சு விடலாம், அல்லது ஒரு விரக்திச் சிரிப்பு சிரிக்கலாம். நமது ஏக்கத்திற்கும், விரக்திக்கும் காரணம் உள்ளது. எசாயாவின் கனவில், போர் கருவிகள் விவசாயக் கருவிகளாக மாறுகின்றன. நாம் வாழும் சூழலில், விவசாயக் கருவிகள், போர் கருவிகளாக மாறி வருகின்றன. பயிர்களை அறுவடை செய்யும் அரிவாள், உயிர்களை அறுவடை செய்யும் கொடூரம் நடந்து வருகிறது.

மனிதர்கள் கண்டுபிடித்த அனைத்துக் கருவிகளையும் கொண்டு ஆக்கவும் முடியும், அழிக்கவும் முடியும். அழிவை மட்டுமே முன்னிறுத்தும் செயல்கள் பெருகி வருவதைப் பார்க்கும்போது, கலிகாலம், முடிவுகாலம் ஆரம்பித்து விட்டதோ என்றும் புலம்புகிறோம்.
முடிவு என்றாலே, அழிவுதானா? இல்லை. முடிவு, இறுதி என்பனவற்றை அழிவு என்று பார்க்கலாம், அல்லது நிறைவு என்ற கோணத்திலும் சிந்திக்கலாம். அது நம் கண்ணோட்டத்தைப் பொருத்தது. தகுந்த கண்ணோட்டம், நமது எண்ணங்களை மட்டுமல்ல, நமது வாழ்வையே மாற்றும் சக்திபெற்றது.

இரண்டாம் உலகப் போரின்போது நிறுவப்பட்ட நாத்சி வதை முகாம்களைப் பற்றி ஆயிரமாயிரம் கதைகள், திரைப்படங்கள் வெளிவந்துள்ளன. Jacob the Liar, அதாவது, ‘பொய்சொல்லும் ஜேக்கப் என்ற திரைப்படம், தனி ஒருவரின் மாறுபட்ட கண்ணோட்டம், எப்படி, அவரைச் சுற்றியிருப்பவர்களையும் மாற்றுகிறது என்பதைக் காட்டும் ஓர் அழகியத் திரைப்படம்.
யூத இனத்தைச் சார்ந்த ஜேக்கப் என்ற ஒரு கடைக்காரர், ஜெர்மானியர்களால் பிடிபட்டு, நாத்சி வதை முகாமில் சேர்க்கப்படுகிறார். அவர் அந்த முகாமில் சேரும்போது, அங்கு, பலர், தற்கொலை செய்துகொண்டனர் என்பதை அறிகிறார். அவர், விளையாட்டாக ஒரு நாள், ரேடியோவில் தான் கேட்டதாக ஒரு செய்தியைக் கூறுகிறார். அதாவது, இன்னும் சில நாட்களில், ஜெர்மானியப் படைகள் தோற்கடிக்கப்படும் என்ற செய்தி அது. அந்த ரேடியோ எங்கு உள்ளதெனக் கேட்கும் எல்லாரிடமும், அது ஒரு பெரிய இரகசியம் என்று மட்டும் கூறுகிறார். ஜேக்கப் கூறும் செய்திகள், பலருக்கு நம்பிக்கை தருவதால், அவர் இருந்த முகாமில் தற்கொலைகள் நின்று போகின்றன. ஜெர்மானிய அதிகாரிகள் அந்த ரேடியோ பற்றி கேள்விப்பட்டு, ஜேக்கப்பைப் பிடித்துச்சென்று, சித்ரவதை செய்கின்றனர். இறுதியில் ஜேக்கப் கொல்லப்படுகிறார். ஆனால், அவர் கற்பனையில் உருவாக்கிய அந்த ரேடியோ, அதன் வழியாகச் சொன்ன நம்பிக்கை தரும் செய்திகள் பலரையும் சாவிலிருந்து காப்பாற்றுகின்றன.

சென்ற ஞாயிறன்று இரக்கத்தின் சிறப்பு யூபிலி ஆண்டை அதிகாரப் பூர்வமாக நிறைவு செய்தோம். யூபிலி ஆண்டு நிறைவுற்றாலும், இரக்கம் நம் வாழ்விலும், திருஅவை வாழ்விலும் தொடரவேண்டும் என்ற எண்ணத்தை, திருத்தந்தை, ஆயர்கள், அருள்பணியாளர்கள் ஆகிய அனைவரும் வலியுறுத்தி வருகின்றனர். இந்த யூபிலி ஆண்டின் இறுதியில், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் வெளியிட்ட, "இரக்கமும் இழிநிலையும்" (Misericordia et misera) என்ற திருத்தூது மடலின் துவக்கத்தில், திருத்தந்தை கூறும் வார்த்தைகள், இந்த எண்ணத்தை உள்ளத்தில் ஆழப் பதிக்கின்றன.
இரக்கம் நிறைந்து வழிந்த காலமாக அமைந்த இந்தப் புனித ஆண்டு, தொடர்ந்து நம் சமுதாயத்தில் கொண்டாடப்படவேண்டும். திருஅவை வாழ்வில், இரக்கம், ஓர் அடைப்புக்குறிக்குள் சிக்கிக்கொண்ட இடைச்செருகலாக மாறிவிட முடியாது. நற்செய்தியின் ஆழமான உண்மைகளை வெளிப்படுத்தி, திருஅவையின் உயிர் துடிப்பாக இரக்கம் உள்ளது.

நம் ஒவ்வொருவர் வாழ்விலும் இரக்கம், ஓர் இடைச்செருகலாக இல்லாமல், இடைவிடாது தொடரவேண்டும், இவ்வுலகமே இரக்கத்தால் நிறைந்து வழியவேண்டும், இரக்கமே நாம் சுவாசிக்கும் மூச்சாக மாறவேண்டும் என்ற செபங்கள், இத்திருவருகைக் காலம் முழுவதும் நம்மிடமிருந்து எழட்டும்.


22 November, 2016

விவிலியம் : காலமெலாம் வாழும் கருணைக் கருவூலம் - பகுதி – 48

Pope: Opening the Holy Door in Bangui Cathedral

Pope closes the Holy Door of St Peter’s Basilica

நவம்பர் 20, இஞ்ஞாயிறு, காலை பத்துமணிக்கு, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், புனித பேதுரு பசிலிக்காப் பேராலயத்தின் முகப்பில் அமைந்துள்ள புனிதக் கதவை மூடி, இரக்கத்தின் சிறப்பு யூபிலி ஆண்டை நிறைவுக்குக் கொணர்ந்தார். அதற்கு முந்தைய ஞாயிறு, நவம்பர் 13ம் தேதி, உலகெங்கும், இந்த யூபிலி ஆண்டையொட்டி திறக்கப்பட்டிருந்த 12,000த்திற்கும் அதிகமான புனிதக் கதவுகள் மூடப்பட்டன.
திருஅவை வரலாற்றில், இதுவரை இடம்பெற்ற யூபிலி ஆண்டுகளில், உரோம் நகரில் எழுப்பப்பட்டுள்ள 4 பசிலிக்காப் பேராலயங்களில் அமைந்துள்ளக் கதவுகளே, புனிதக் கதவுகளாகக் கருதப்பட்டு வந்தன. இவையன்றி, புகழ்பெற்ற திருத்தலங்களில், யூபிலி நிகழ்வுகள் கொண்டாடப்பட்டபோது, அத்திருத்தலங்களின் கதவுகள், புனிதக் கதவுகளாக அறிவிக்கப்பட்டன.
எடுத்துக்காட்டாக, ‘பங்குத் தந்தையரின் பாதுகாவலர் என்று போற்றப்படும் புனித ஜான் மரிய வியான்னி அவர்களின் பெயரில், பிரான்ஸ் நாட்டின் ஆர்ஸ் நகரில் திருத்தலம் உருவாக்கப்பட்டுள்ளது. 2009ம் ஆண்டு, புனித வியான்னி அவர்கள் இறந்ததன் 150ம் ஆண்டு நிறைவு என்பதால், அவ்வாண்டினை, ‘அருள்பணியாளர்களின் ஆண்டு என்று திருத்தந்தை 16ம் பெனடிக்ட் அவர்கள் அறிவித்தார். அத்துடன், அவ்வாண்டில், ஆர்ஸ் நகர் திருத்தலத்தின் கதவுகளை, புனிதக் கதவுகள் என்றும் அவர் அறிவித்திருந்தார்.
கனடா நாட்டின் Quebec நகரில், வட அமெரிக்கக் கண்டத்தின் முதல் கிறிஸ்தவ ஆலயம் என்று வழங்கப்படும் Notre-Dame பசிலிக்காவின் 350ம் ஆண்டு நிறைவு, 2013ம் ஆண்டு கொண்டாடப்பட்டது. அவ்வேளையில், அந்த பசிலிக்காவில் புனிதக்கதவைத் திறப்பதற்கு திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் உத்தரவு வழங்கினார்.

கத்தோலிக்க உலகெங்கும் உள்ள ஆயிரக்கணக்கான ஆலயங்களில், விரல் விட்டு எண்ணக்கூடிய வெகு சில ஆலயங்கள் மட்டுமே, புனிதக் கதவுகள் குறிக்கப்பட்ட ஆலயங்கள் என்ற சிறப்பைப் பெற்றுள்ளன. இரக்கத்தின் சிறப்பு யூபிலி ஆண்டில், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், புனிதக் கதவுகள் பற்றிய எண்ணத்தில் ஒரு மாற்றத்தை அறிமுகப்படுத்தினார்.
இதுவரை நடைபெற்ற யூபிலி ஆண்டுகளில், புனிதக் கதவுகளை நாடி, மக்கள், ஆயிரமாயிரம் மைல்கள் பயணம் செய்து, உரோம் நகருக்கு செல்வதே வழக்கமாக இருந்தது. இரக்கத்தின் சிறப்பு யூபிலி ஆண்டில், அந்தந்த நாடுகளில், மக்கள் வாழும் பகுதிகளில் உள்ள பல கோவில்களில், புனிதக் கதவுகள் திறக்கப்படும் என்று, திருத்தந்தை அறிவித்தார்.

இறைவனைத் தேடி மக்கள் கூட்டம், கூட்டமாக உரோம் நகர் நோக்கி வருவதற்குப் பதில், மக்களைத் தேடி, அவர்கள் வாழும் பகுதிகளுக்கு, இறைவன் வருகிறார், அதுவும், தன் இரக்கத்தை வழங்க வருகிறார் என்பதை உணர்த்தவே, உலகெங்கும் புனிதக் கதவுகள் திறக்கப்பட்டன. பேராலயங்கள், திருத்தலங்கள் போன்ற புனித இடங்களில் மட்டுமல்லாமல், பிறரன்புப் பணிமனைகள், மக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள, விமானநிலையங்கள் போன்ற இடங்களிலும் புனிதக் கதவுகள் திறக்கப்பட்டன.
சிறப்பாக, இந்த யூபிலி ஆண்டு இரக்கத்தை மையப்படுத்தியது என்பதால், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், சில குறிப்பிட்ட குழுவினரை மனதில் வைத்து, புனிதக் கதவுகளை அவர்களுக்கு நெருக்கமாகக் கொணர்ந்தார். நோயினாலும், வயது முதிர்ச்சியாலும் வெளியில் செல்லமுடியாதவர்கள் வாழும் இல்லங்களிலும், தங்கள் சுதந்திரத்தை இழந்த கைதிகள் வாழும் சிறைகளின் சிற்றாயலங்களிலும் புனிதக்கதவுகள் திறக்கப்பட்டன.

இதுவரை, திருஅவையில் கொண்டாடப்பட்ட யூபிலி ஆண்டுகள் அனைத்தும், முதல் முதலாக, புனித பேதுரு பசிலிக்காப் பேராலயத்தின் புனிதக்கதவைத் திறக்கும் திருவழிபாட்டு நிகழ்வுடன் ஆரம்பமாயின. அதன் வழியே, கத்தோலிக்க உலகின் ஆன்மீகத் தலைநகர், வத்திக்கான் என்பதை, இச்சடங்கு நிலைநாட்டியது. இந்தப் பாரம்பரியத்திலிருந்து விலகி, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இரக்கத்தின் சிறப்பு யூபிலி ஆண்டின் முதல் புனிதக் கதவை, மத்திய ஆப்ரிக்கக் குடியரசின் தலைநகர், பாங்கியில், 2015ம் ஆண்டு, நவம்பர் 29ம் தேதி திறந்துவைத்தார். அதுமட்டுமல்ல, பாங்கியை, கத்தோலிக்க உலகின் ஆன்மீகத் தலைநகரம் என்றும் குறிப்பிட்டார்.

Notre-Dame, என்ற பெயரில் உயர்ந்து நிற்கும், பாங்கி பேராலயத்தின் புனிதக் கதவைத் திறப்பதற்கு முன், திருத்தந்தை வழங்கிய ஒரு சில எண்ணங்கள் இதோ: "தந்தையாம் இறைவனின் இரக்கத்தை இவ்வுலகிற்குக் கொணரும் ஆன்மீகத் தலைநகராக பாங்கி இன்று மாறியுள்ளது.
இரக்கத்தின் புனித ஆண்டு, உலகெங்கும் துவங்குவதற்குக் குறிக்கப்பட்ட நேரத்திற்கு முன்னதாகவே ஆப்ரிக்காவில் ஆரம்பமாகிறது. புரிந்துகொள்ளுதல் இல்லாததாலும், வெறுப்பினாலும், அமைதி இழந்து தவிக்கும் ஆப்ரிக்க பூமியில், பல நாடுகள், போர் என்ற சிலுவையைச் சுமந்து துன்புறுகின்றன.
பாங்கியிலும், மத்திய ஆப்ரிக்கக் குடியரசிலும், போரின் துயரங்களை அனுபவித்துவரும் அனைத்து நாடுகளிலும், அமைதி வரவேண்டும் என்ற வேண்டுதலோடு, இந்தப் புனித ஆண்டை இங்கு துவங்குகிறோம்" என்று திருத்தந்தை தன் மறையுரையில் கூறினார்.

மரம், அல்லது உலோகத்தால் செய்யப்பட்டு, கல்லாலும், மண்ணாலும் உருவான சுவர்களில் பதிக்கப்பட்டதே புனிதக்கதவு என்ற ஒரு கருத்து, நம்மிடையே நிலவி வந்தது. நாம் தற்போது நிறைவுசெய்துள்ள யூபிலி ஆண்டில், புனிதக்கதவைக் குறித்து புதியக் கருத்துக்கள் உருவாகியுள்ளதைக் காணமுடிகிறது. புனிதக் கதவை ஓர் உயிரற்ற பொருளாக கருதிவந்த நிலையிலிருந்து மாறி, புனிதக் கதவு என்பது மக்களை இறையருளால் நிரப்பும் ஒரு வாசல் என்ற நிலைக்கு மாற, இரக்கத்தின் யூபிலி ஆண்டு உதவியது. எடுத்துக்காட்டாக, இவ்வாண்டு, இத்தாலியில் நிலநடுக்கம் உருவான வேளையில், புனிதக்கதவு திறக்கப்பட்ட சில ஆலயங்கள் இடிந்து விழுந்தன. எனவே, மக்களின் வழிபாட்டிற்கென்று தற்காலிகக் கூடாரங்கள் அமைக்கப்பட்டபோது, அந்தக் கூடாரங்களில், தற்காலிகமாக, புனிதக் கதவுகளும் அமைக்கப்பட்டன. இச்செய்தியைக் கேட்கும்போது, பழைய ஏற்பாட்டு காலத்தில், கூடாரங்களில் மக்களோடு மக்களாக வாழ விழைந்த இறைவனை எண்ணிப்பார்க்கத் தோன்றுகிறது.

"நான் கேதுரு மரத்தாலான அரண்மனையில் வாழ்கிறேன். ஆனால், ஆண்டவரின் உடன்படிக்கைப் பேழையோ திரைக்கூடாரத்தில் இருக்கிறதே" என்று மன்னன் தாவீது இறைவாக்கினர் நாத்தானிடம் மனம் நொந்து கூறினார். இதற்கு பதில் மொழியாக, ஆண்டவர் கூறிய அற்புதமானச் சொற்கள், குறிப்பேடு முதல் நூலில் இவ்வாறு பதிவு செய்யப்பட்டுள்ளன:
1 குறிப்பேடு 17:3-6
அன்றிரவு கடவுளின் வாக்கு நாத்தானுக்கு அருளப்பட்டது: "என் ஊழியனாகிய தாவீதிடம் சென்று சொல்; 'ஆண்டவர் கூறுவது இதுவே; நான் தங்கியிருப்பதற்கான கோவிலை நீ கட்ட வேண்டாம். இஸ்ரயேலரை விடுவித்த நாளிலிருந்து இன்றுவரை நான் எந்தக் கோவிலிலும் தங்கியதில்லை; நான் என்றுமே திருக்கூடாரத்தில் இருந்து, ஒரு கூடாரத்தைவிட்டு மற்றொரு கூடாரத்துக்கு மாறி வந்துள்ளேன். இஸ்ரயேல் மக்கள் அனைவரோடும் நான் பயணம் செய்த நாள்களிலும், அவர்களை வழிநடத்த நான் ஏற்படுத்திய எந்த ஒரு விடுதலைத் தலைவரிடமும், எனக்குக் கேதுரு மரத்தால் ஏன் ஒரு கோவிலைக் கட்டவில்லை எனக் கேட்டேனா?'
மக்கள் கூடிவாழும் இடங்களில் இறைவனும் அவர்களுடன் தங்கியிருப்பார், அதுவே அவரது உறைவிடம், அங்கு புனிதக்கதவுகளும் தானாகவே உருவாகும் என்ற எண்ணம், இந்த யூபிலி ஆண்டில் பல்வேறு வழிகளில் உணர்த்தப்பட்டது.
எடுத்துக்காட்டாக, ஜூலை மாத இறுதியில், போலந்து நாட்டின் கிரக்கோவ் நகரில், உலக இளையோர் நாள் கொண்டாடப்பட்டது. அவ்வேளையில், ஜூலை 30, சனிக்கிழமை மாலை 7 மணிக்கு, கிரக்கோவின் புறநகர் பகுதியில் அமைந்திருந்த இரக்கத்தின் வளாகத்தை வாகனத்தில் வலம்வந்தத் திருத்தந்தை, அந்த வளாகத்தில், கதவுகள் ஏதுமின்றி, வெறும் கதவு நிலையுடன் அமைக்கப்பட்டிருந்த புனித வாசல் வழியே இளையோர் பிரதிநிதிகள் ஆறுபேருடன், நுழைந்தார். இதைத் தொடர்ந்து, உலக இளையோர் நாள் கொண்டாட்டங்களின் ஒரு முக்கிய நிகழ்வான, திருவிழிப்பு வழிபாடு துவங்கியது. பல இலட்சம் இளையோர் கூடியிருந்த அந்தச் சதுக்கத்தில் புனித வாசல் அமைக்கப்பட்டிருந்தது, இறைவன், மனிதர்களோடு வாழ விழைபவர் என்பதை, ஆணித்தரமாக அறிவித்து நின்றது.

நவம்பர் 20, ஞாயிறு திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், புனிதக் கதவை மூடிய அந்த நிகழ்வில், மரக்கதவுகளையும், மனக்கதவுகளையும் இணைத்துப் பேசினார்.
புனிதக் கதவு மூடப்பட்டாலும், கிறிஸ்துவின் இதயம் என்ற புனிதக் கதவு, எப்போதும் நமக்காகத் திறந்தே உள்ளது. காயமுற்ற அவரது விலாவிலிருந்து, இரக்கம், ஆறுதல், நம்பிக்கை, ஆகியவை, காலம் முடிவுறும் வரையிலும் வெளியாகும் என்று தன் மறையுரையின் இறுதியில் கூறினார்.

நவம்பர் 13, கடந்த ஞாயிறன்று, உலகெங்கிலுமுள்ள புனிதக் கதவுகள் மூடப்பட்ட நாளிலும், இதையொத்த கருத்துக்களைப் பகிர்ந்துகொண்டார் திருத்தந்தை. அன்று, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், வத்திக்கானுக்கு வருகை தந்திருந்த சிறப்பு விருந்தினர்களுடன் யூபிலியைக் கொண்டாடினார். சமுதாயத்தால் ஒதுக்கப்பட்டோருக்கென புனித பேதுரு பசிலிக்காப் பேராலயத்தில் திருப்பலி நிகழ்த்தியத் திருத்தந்தை, தன் மறையுரையின் இறுதியில் இவ்வாறு கூறினார்: "இன்று, உலகெங்கும் உள்ள பேராயலங்களிலும், புனிதத் தலங்களிலும் இரக்கத்தின் கதவுகள் மூடப்படுகின்றன. இவ்வேளையில், நம்மைக் கூர்ந்து நோக்கும் இறைவனையும், நம்மிடம் ஏதோ எதிர்பார்க்கும் அயலவரையும் கண்களைத் திறந்து காணும் வரத்திற்காக வேண்டுவோம். அன்பு ஒருபோதும் அழியாது (1 கொரி. 13:8) என்ற உறுதியை அளிக்கும் இரக்கத்தின் இறைவனை நம்பிக்கையோடு காண்போம்.
சமுதாயத்தால் மறக்கப்பட்ட, ஒதுக்கப்பட்ட சகோதர, சகோதரிகளை, நம் வாசலில் கிடக்கும் 'இலாசர்களை'க் காண்பதற்கு நம் கண்களைத் திறப்போம். அவர்களைப் பெரிதாகக் காட்டும்வண்ணம், திருஅவையின் பூதக்கண்ணாடி அவர்கள் பக்கம் திருப்பப்பட்டுள்ளது.

இரக்கத்தின் சிறப்பு யூபிலி ஆண்டு நிறைவுற்றாலும், புனிதக் கதவுகள் மூடப்பட்டாலும், இரக்கம் நம் இதயத்துடிப்பாக மாறவேண்டும் என்றும், நம் இதயக்கதவுகள் எப்போதும் திறந்தே இருக்கவேண்டும் என்றும் இரக்கத்தின் ஊற்றான இறைவனை இறைஞ்சுவோம்.