Pope: Opening
the Holy Door in Bangui
Cathedral
Pope closes
the Holy Door of St Peter’s Basilica
நவம்பர்
20, இஞ்ஞாயிறு, காலை பத்துமணிக்கு, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், புனித பேதுரு
பசிலிக்காப் பேராலயத்தின் முகப்பில் அமைந்துள்ள புனிதக் கதவை மூடி, இரக்கத்தின் சிறப்பு யூபிலி ஆண்டை நிறைவுக்குக் கொணர்ந்தார். அதற்கு
முந்தைய ஞாயிறு, நவம்பர் 13ம் தேதி, உலகெங்கும், இந்த யூபிலி ஆண்டையொட்டி திறக்கப்பட்டிருந்த 12,000த்திற்கும் அதிகமான புனிதக் கதவுகள் மூடப்பட்டன.
திருஅவை
வரலாற்றில், இதுவரை இடம்பெற்ற யூபிலி ஆண்டுகளில், உரோம் நகரில்
எழுப்பப்பட்டுள்ள 4 பசிலிக்காப் பேராலயங்களில் அமைந்துள்ளக் கதவுகளே, புனிதக் கதவுகளாகக்
கருதப்பட்டு வந்தன. இவையன்றி, புகழ்பெற்ற திருத்தலங்களில், யூபிலி நிகழ்வுகள் கொண்டாடப்பட்டபோது, அத்திருத்தலங்களின் கதவுகள், புனிதக்
கதவுகளாக அறிவிக்கப்பட்டன.
எடுத்துக்காட்டாக, ‘பங்குத் தந்தையரின் பாதுகாவலர்’ என்று போற்றப்படும்
புனித ஜான் மரிய வியான்னி அவர்களின் பெயரில், பிரான்ஸ் நாட்டின் ஆர்ஸ் நகரில் திருத்தலம்
உருவாக்கப்பட்டுள்ளது. 2009ம் ஆண்டு, புனித வியான்னி அவர்கள் இறந்ததன்
150ம் ஆண்டு நிறைவு என்பதால், அவ்வாண்டினை, ‘அருள்பணியாளர்களின் ஆண்டு’ என்று திருத்தந்தை 16ம் பெனடிக்ட் அவர்கள் அறிவித்தார். அத்துடன், அவ்வாண்டில், ஆர்ஸ் நகர் திருத்தலத்தின் கதவுகளை, புனிதக் கதவுகள் என்றும் அவர் அறிவித்திருந்தார்.
கனடா
நாட்டின் Quebec நகரில், வட அமெரிக்கக் கண்டத்தின் முதல்
கிறிஸ்தவ ஆலயம் என்று வழங்கப்படும் Notre-Dame பசிலிக்காவின் 350ம் ஆண்டு நிறைவு, 2013ம் ஆண்டு கொண்டாடப்பட்டது. அவ்வேளையில், அந்த பசிலிக்காவில் புனிதக்கதவைத் திறப்பதற்கு திருத்தந்தை பிரான்சிஸ்
அவர்கள் உத்தரவு வழங்கினார்.
கத்தோலிக்க
உலகெங்கும் உள்ள ஆயிரக்கணக்கான ஆலயங்களில், விரல் விட்டு எண்ணக்கூடிய வெகு
சில ஆலயங்கள் மட்டுமே, புனிதக் கதவுகள் குறிக்கப்பட்ட ஆலயங்கள் என்ற சிறப்பைப் பெற்றுள்ளன.
இரக்கத்தின் சிறப்பு யூபிலி ஆண்டில், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், புனிதக் கதவுகள் பற்றிய எண்ணத்தில் ஒரு மாற்றத்தை அறிமுகப்படுத்தினார்.
இதுவரை
நடைபெற்ற யூபிலி ஆண்டுகளில், புனிதக் கதவுகளை நாடி, மக்கள்,
ஆயிரமாயிரம் மைல்கள் பயணம் செய்து, உரோம் நகருக்கு செல்வதே
வழக்கமாக இருந்தது. இரக்கத்தின் சிறப்பு யூபிலி ஆண்டில், அந்தந்த நாடுகளில், மக்கள் வாழும் பகுதிகளில் உள்ள பல கோவில்களில்,
புனிதக் கதவுகள் திறக்கப்படும் என்று, திருத்தந்தை அறிவித்தார்.
இறைவனைத்
தேடி மக்கள் கூட்டம், கூட்டமாக உரோம் நகர் நோக்கி வருவதற்குப்
பதில், மக்களைத் தேடி, அவர்கள் வாழும் பகுதிகளுக்கு,
இறைவன் வருகிறார், அதுவும், தன் இரக்கத்தை வழங்க வருகிறார் என்பதை உணர்த்தவே, உலகெங்கும் புனிதக் கதவுகள் திறக்கப்பட்டன. பேராலயங்கள், திருத்தலங்கள் போன்ற புனித இடங்களில் மட்டுமல்லாமல், பிறரன்புப் பணிமனைகள், மக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள,
விமானநிலையங்கள் போன்ற இடங்களிலும் புனிதக் கதவுகள் திறக்கப்பட்டன.
சிறப்பாக, இந்த யூபிலி ஆண்டு இரக்கத்தை மையப்படுத்தியது என்பதால், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், சில குறிப்பிட்ட குழுவினரை மனதில்
வைத்து, புனிதக் கதவுகளை அவர்களுக்கு நெருக்கமாகக்
கொணர்ந்தார். நோயினாலும், வயது முதிர்ச்சியாலும் வெளியில்
செல்லமுடியாதவர்கள் வாழும் இல்லங்களிலும், தங்கள் சுதந்திரத்தை இழந்த கைதிகள்
வாழும் சிறைகளின் சிற்றாயலங்களிலும் புனிதக்கதவுகள் திறக்கப்பட்டன.
இதுவரை, திருஅவையில் கொண்டாடப்பட்ட யூபிலி ஆண்டுகள் அனைத்தும், முதல் முதலாக, புனித பேதுரு பசிலிக்காப் பேராலயத்தின்
புனிதக்கதவைத் திறக்கும் திருவழிபாட்டு நிகழ்வுடன் ஆரம்பமாயின. அதன் வழியே, கத்தோலிக்க உலகின் ஆன்மீகத் தலைநகர், வத்திக்கான் என்பதை, இச்சடங்கு நிலைநாட்டியது. இந்தப் பாரம்பரியத்திலிருந்து விலகி, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இரக்கத்தின்
சிறப்பு யூபிலி ஆண்டின் முதல் புனிதக் கதவை,
மத்திய ஆப்ரிக்கக்
குடியரசின் தலைநகர், பாங்கியில், 2015ம் ஆண்டு, நவம்பர் 29ம் தேதி திறந்துவைத்தார்.
அதுமட்டுமல்ல, பாங்கியை, கத்தோலிக்க உலகின் ஆன்மீகத் தலைநகரம் என்றும் குறிப்பிட்டார்.
Notre-Dame, என்ற பெயரில் உயர்ந்து நிற்கும், பாங்கி பேராலயத்தின்
புனிதக் கதவைத் திறப்பதற்கு முன், திருத்தந்தை வழங்கிய ஒரு சில எண்ணங்கள்
இதோ: "தந்தையாம் இறைவனின் இரக்கத்தை இவ்வுலகிற்குக் கொணரும் ஆன்மீகத் தலைநகராக
பாங்கி இன்று மாறியுள்ளது.
இரக்கத்தின்
புனித ஆண்டு, உலகெங்கும் துவங்குவதற்குக் குறிக்கப்பட்ட
நேரத்திற்கு முன்னதாகவே ஆப்ரிக்காவில் ஆரம்பமாகிறது. புரிந்துகொள்ளுதல் இல்லாததாலும், வெறுப்பினாலும், அமைதி இழந்து தவிக்கும் ஆப்ரிக்க பூமியில், பல நாடுகள், போர் என்ற சிலுவையைச் சுமந்து துன்புறுகின்றன.
பாங்கியிலும், மத்திய ஆப்ரிக்கக் குடியரசிலும், போரின் துயரங்களை அனுபவித்துவரும் அனைத்து நாடுகளிலும், அமைதி வரவேண்டும் என்ற வேண்டுதலோடு, இந்தப் புனித ஆண்டை இங்கு துவங்குகிறோம்" என்று திருத்தந்தை தன்
மறையுரையில் கூறினார்.
மரம், அல்லது உலோகத்தால் செய்யப்பட்டு, கல்லாலும், மண்ணாலும் உருவான சுவர்களில் பதிக்கப்பட்டதே புனிதக்கதவு என்ற ஒரு
கருத்து, நம்மிடையே நிலவி வந்தது. நாம் தற்போது நிறைவுசெய்துள்ள யூபிலி ஆண்டில், புனிதக்கதவைக்
குறித்து புதியக் கருத்துக்கள் உருவாகியுள்ளதைக் காணமுடிகிறது. புனிதக் கதவை ஓர் உயிரற்ற
பொருளாக கருதிவந்த நிலையிலிருந்து மாறி, புனிதக் கதவு என்பது மக்களை இறையருளால்
நிரப்பும் ஒரு வாசல் என்ற நிலைக்கு மாற, இரக்கத்தின் யூபிலி ஆண்டு உதவியது. எடுத்துக்காட்டாக, இவ்வாண்டு, இத்தாலியில் நிலநடுக்கம் உருவான
வேளையில், புனிதக்கதவு திறக்கப்பட்ட சில ஆலயங்கள்
இடிந்து விழுந்தன. எனவே, மக்களின் வழிபாட்டிற்கென்று தற்காலிகக்
கூடாரங்கள் அமைக்கப்பட்டபோது, அந்தக் கூடாரங்களில், தற்காலிகமாக, புனிதக் கதவுகளும் அமைக்கப்பட்டன. இச்செய்தியைக் கேட்கும்போது, பழைய ஏற்பாட்டு காலத்தில்,
கூடாரங்களில்
மக்களோடு மக்களாக வாழ விழைந்த இறைவனை எண்ணிப்பார்க்கத் தோன்றுகிறது.
"நான்
கேதுரு மரத்தாலான அரண்மனையில் வாழ்கிறேன். ஆனால், ஆண்டவரின்
உடன்படிக்கைப் பேழையோ திரைக்கூடாரத்தில் இருக்கிறதே" என்று மன்னன் தாவீது இறைவாக்கினர்
நாத்தானிடம் மனம் நொந்து கூறினார். இதற்கு பதில் மொழியாக, ஆண்டவர் கூறிய அற்புதமானச் சொற்கள், குறிப்பேடு முதல் நூலில் இவ்வாறு பதிவு செய்யப்பட்டுள்ளன:
1
குறிப்பேடு 17:3-6
அன்றிரவு
கடவுளின் வாக்கு நாத்தானுக்கு அருளப்பட்டது: "என் ஊழியனாகிய தாவீதிடம் சென்று சொல்; 'ஆண்டவர் கூறுவது இதுவே; நான் தங்கியிருப்பதற்கான கோவிலை நீ கட்ட வேண்டாம். இஸ்ரயேலரை
விடுவித்த நாளிலிருந்து இன்றுவரை நான் எந்தக் கோவிலிலும் தங்கியதில்லை; நான் என்றுமே திருக்கூடாரத்தில் இருந்து, ஒரு கூடாரத்தைவிட்டு மற்றொரு கூடாரத்துக்கு மாறி வந்துள்ளேன்.
இஸ்ரயேல் மக்கள் அனைவரோடும் நான் பயணம் செய்த நாள்களிலும், அவர்களை வழிநடத்த நான் ஏற்படுத்திய எந்த ஒரு விடுதலைத் தலைவரிடமும், எனக்குக் கேதுரு மரத்தால் ஏன் ஒரு கோவிலைக் கட்டவில்லை எனக்
கேட்டேனா?'
மக்கள்
கூடிவாழும் இடங்களில் இறைவனும் அவர்களுடன் தங்கியிருப்பார், அதுவே அவரது உறைவிடம், அங்கு புனிதக்கதவுகளும் தானாகவே
உருவாகும் என்ற எண்ணம், இந்த யூபிலி ஆண்டில் பல்வேறு வழிகளில்
உணர்த்தப்பட்டது.
எடுத்துக்காட்டாக, ஜூலை மாத இறுதியில், போலந்து நாட்டின் கிரக்கோவ் நகரில், உலக இளையோர் நாள் கொண்டாடப்பட்டது. அவ்வேளையில், ஜூலை 30, சனிக்கிழமை மாலை 7 மணிக்கு, கிரக்கோவின் புறநகர் பகுதியில் அமைந்திருந்த இரக்கத்தின் வளாகத்தை
வாகனத்தில் வலம்வந்தத் திருத்தந்தை, அந்த வளாகத்தில், கதவுகள் ஏதுமின்றி, வெறும் கதவு நிலையுடன் அமைக்கப்பட்டிருந்த புனித வாசல் வழியே இளையோர்
பிரதிநிதிகள் ஆறுபேருடன், நுழைந்தார். இதைத் தொடர்ந்து, உலக இளையோர் நாள் கொண்டாட்டங்களின் ஒரு முக்கிய நிகழ்வான, திருவிழிப்பு வழிபாடு துவங்கியது. பல இலட்சம் இளையோர் கூடியிருந்த
அந்தச் சதுக்கத்தில் புனித வாசல் அமைக்கப்பட்டிருந்தது, இறைவன், மனிதர்களோடு வாழ விழைபவர் என்பதை, ஆணித்தரமாக அறிவித்து நின்றது.
நவம்பர்
20, ஞாயிறு திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், புனிதக் கதவை மூடிய அந்த நிகழ்வில், மரக்கதவுகளையும், மனக்கதவுகளையும் இணைத்துப் பேசினார்.
“புனிதக் கதவு மூடப்பட்டாலும், கிறிஸ்துவின் இதயம் என்ற புனிதக் கதவு, எப்போதும் நமக்காகத் திறந்தே உள்ளது. காயமுற்ற அவரது விலாவிலிருந்து,
இரக்கம், ஆறுதல், நம்பிக்கை, ஆகியவை, காலம் முடிவுறும் வரையிலும் வெளியாகும்” என்று தன் மறையுரையின் இறுதியில் கூறினார்.
நவம்பர்
13, கடந்த ஞாயிறன்று, உலகெங்கிலுமுள்ள புனிதக் கதவுகள்
மூடப்பட்ட நாளிலும், இதையொத்த கருத்துக்களைப் பகிர்ந்துகொண்டார் திருத்தந்தை.
அன்று, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், வத்திக்கானுக்கு வருகை தந்திருந்த சிறப்பு விருந்தினர்களுடன் யூபிலியைக்
கொண்டாடினார். சமுதாயத்தால் ஒதுக்கப்பட்டோருக்கென புனித பேதுரு பசிலிக்காப் பேராலயத்தில்
திருப்பலி நிகழ்த்தியத் திருத்தந்தை, தன் மறையுரையின் இறுதியில்
இவ்வாறு கூறினார்: "இன்று, உலகெங்கும் உள்ள பேராயலங்களிலும், புனிதத் தலங்களிலும் இரக்கத்தின் கதவுகள் மூடப்படுகின்றன. இவ்வேளையில், நம்மைக் கூர்ந்து நோக்கும் இறைவனையும், நம்மிடம் ஏதோ எதிர்பார்க்கும் அயலவரையும் கண்களைத் திறந்து காணும்
வரத்திற்காக வேண்டுவோம். ‘அன்பு ஒருபோதும் அழியாது’ (1 கொரி. 13:8) என்ற உறுதியை அளிக்கும் இரக்கத்தின் இறைவனை நம்பிக்கையோடு காண்போம்.
சமுதாயத்தால்
மறக்கப்பட்ட, ஒதுக்கப்பட்ட சகோதர, சகோதரிகளை, நம் வாசலில் கிடக்கும் 'இலாசர்களை'க் காண்பதற்கு நம் கண்களைத் திறப்போம். அவர்களைப் பெரிதாகக்
காட்டும்வண்ணம், திருஅவையின் பூதக்கண்ணாடி அவர்கள் பக்கம் திருப்பப்பட்டுள்ளது.”
இரக்கத்தின்
சிறப்பு யூபிலி ஆண்டு நிறைவுற்றாலும், புனிதக் கதவுகள் மூடப்பட்டாலும், இரக்கம்
நம் இதயத்துடிப்பாக மாறவேண்டும் என்றும், நம் இதயக்கதவுகள் எப்போதும் திறந்தே
இருக்கவேண்டும் என்றும் இரக்கத்தின் ஊற்றான இறைவனை இறைஞ்சுவோம்.
No comments:
Post a Comment