பாசமுள்ள பார்வையில்... அன்னையரிடம் கற்றுக்கொண்டது அதிகம்
இவ்வாண்டு
புலர்ந்த நாளன்று கொண்டாடப்பட்ட 'மரியா, இறைவனின் தாய்' என்ற திருநாளையொட்டி, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், தன் மறையுரையில்,
மரியன்னைக்கும், அன்னையருக்கும், புகழாரம் சூட்டினார்:
"மரியா
இந்நிகழ்ச்சிகளையெல்லாம் தம் உள்ளத்தில் இருத்திச் சிந்தித்துக் கொண்டிருந்தார்"
(லூக்கா 2:19). தன்னைச் சுற்றி நிகழ்வனவற்றைப் புரிந்துகொண்டு, அவற்றை தனது கட்டுப்பாட்டிற்குள் கொணர மரியா விரும்பவில்லை. அவற்றை
தன் உள்ளத்தில் வைத்து, பாதுகாத்து வந்தார். தனக்குள் இறைமகன்
உருவான வேளையில், அவரது இதயத் துடிப்பை,
செவிமடுத்து
கேட்க அவர் கற்றுக்கொண்டார். இவ்வாறு,
தன் வாழ்விலும், இவ்வுலக வரலாற்றிலும் இறைவனின் இதயத் துடிப்பை உற்றுக்கேட்க பழகிக்கொண்டார்.
மரியா, இறைவனின் தாய், நமது தாய் என்ற திருநாளை புத்தாண்டு
நாளன்று கொண்டாடுவதால், நாம் அனாதைகள் அல்ல, ஒரு தாயின் பிள்ளைகள் என்ற உணர்வைப் பெறுகிறோம். தனிப்பட்டவர்களாய், தான் என்ற அகந்தை கொண்டவர்களாய் வாழும் நோய்க்கு ஒரு சிறந்த மருந்து, அன்னையர். திறந்த மனமின்றி, அக்கறையற்று வாழும் நமக்கு, மருந்தாக விளங்குபவர், அன்னையர்.
அன்னையர்
அற்ற சமுதாயம், குளிர்ந்து, உறைந்துபோன சமுதாயமாகிவிடும்; அன்னையர் அற்ற சமுதாயம், இரக்கமற்ற
சமுதாயமாகிவிடும்; அன்னையர் அற்ற சமுதாயம், செய்வது ஒவ்வொன்றுக்கும் கனக்குப் பார்க்கும் சமுதாயமாகிவிடும்.
ஏனெனில், மிகக் கொடுமையானச் சூழல்களிலும், நிபந்தனையற்ற அன்பையும், பரிவையும்
வெளிப்படுத்துவது, அன்னையரின் உள்ளம். சிறையில் இருப்போர், நோயுற்றிருப்போர்,
போதைப்பொருள்
பழக்கத்தில் சிக்கியிருப்போர் ஆகியோரின் அருகில் எந்நேரமும் காவலில் இருக்கும் அன்னையரிடமிருந்து
நான் அதிகம் கற்றுக்கொண்டேன்.
போரினால்
அனைத்தையும் இழந்து, முகாம்களில் தங்கியிருப்போரிடையே, தன் குழந்தைகளுக்காக தங்கள் வாழ்வை இழக்கும் அன்னையரிடம் நான் கற்றுக்கொண்டது
அதிகம்.
Marshall Clark
with his mother Lara Clark
அரியவகை நோயுற்றவர், ஆசிரியராக...
"அன்பு
நண்பர்களே, இதை நீங்கள் வாசிக்கும்போது, நான் விண்ணகத்தில் இருப்பேன்" என்று ஏழுவயது சிறுவன் எழுதி வைத்த ஒரு
கடிதம், 2016ம் ஆண்டு, நவம்பர் மாதம் இங்கிலாந்தின் சில நாளிதழ்களில் வெளியிடப்பட்டது.
ஏழு வயதான
மார்ஷல் கிளார்க் (Marshall Clark) என்ற சிறுவன், பேட்டன் நோய் (Batten disease) எனப்படும் அரியவகை நோயினால் பாதிக்கப்பட்டவன்.
அவனுக்கு அந்த நோய் உள்ளதென்று 2013ம் ஆண்டு கண்டுபிடிக்கப்பட்டபோது மார்ஷலின்
வயது, நான்கு. அன்றைய நிலவரப்படி, இங்கிலாந்து முழுவதிலும் 24 குழந்தைகள்
மட்டுமே அந்த நோயினால் துன்புற்றனர் என்று ஊடகங்கள் கூறியுள்ளன. மூன்று ஆண்டுகள் இந்த
நோயினால் துன்புற்ற சிறுவன் மார்ஷல், 2016ம் ஆண்டு, அக்டோபர் 29ம் தேதி, இறையடி சேர்ந்தான்.
சிறுவன்
மார்ஷல் எழுதிய அந்த மடலை வாசித்தால், அவன், இறையடி சேர்ந்தான் என்று சொல்வதற்குப்பதில், அவன் இறைவனின் மடியில் சென்று அமர்ந்தான் என்று சொல்லத் தோன்றுகிறது.
விண்ணகத்தைப் பற்றி, அத்துணை மகிழ்வான எண்ணங்களை, அவன் தன் மடலில் எழுதி வைத்துள்ளான். அவனை, அவ்விதம் சிந்திக்க உதவியவர்கள், அவனுடைய
அம்மாவும், பாட்டியும்...
சிறுவன்
மார்ஷல் எழுதிய மடலின் ஒரு பகுதி இதோ: "இதுதான் என்னுடைய இறுதிச் செய்தி. ஏனெனில், இதை நீங்கள் வாசிக்கும்போது, நான் விண்ணகத்தில் இருப்பேன். அங்கு நான் அனுபவிக்கப்போகும் அற்புதமான
விடயங்களைப் பற்றி பாட்டி என்னிடம் சொன்னார்கள். அங்குள்ள ஆயிரமாயிரம் சறுக்குகளில்
நான் விளையாடுவேன்; ஸ்டிராபெரி பழத்தையும், கேக் அனைத்தையும் என் விருப்பம்போல் சாப்பிடுவேன். வலியேதும் இல்லாமல்
ஓடியாடி விளையாடுவேன்...
பேட்டன்
வியாதி உடையவர்களில், நான்தான் துணிச்சல் மிகுந்த பையன்
என்று பாட்டி சொன்னார்கள். இவ்வுலகில் என்னை விளையாட அனுமதிக்காத இவ்வுடலிலிருந்து
எனக்கு விடுதலை கிடைத்துவிடும். நான் விரும்பிய அனைத்தையும் என்னால் செய்ய முடியும்..."
சிறுவன்
மார்ஷல் விட்டுச்சென்ற மடலை வாசிக்கும்போது,
நம் உள்ளங்களில் மகிழ்வும், வேதனையும் ஒருசேர எழுகின்றன. அரியவகை நோயுடன் மார்ஷல் மூன்று ஆண்டுகள்
போராடியபோதும், மரணத்தை நெருங்கியபோதும், அவனுடைய அம்மா, லாரா (Lara) அவர்களும், பாட்டி, எல்சி (Elsie) அவர்களும், சொல்லித்தந்தவை, அமைதியாக இவ்வுலகைவிட்டு விடைபெற்றுச்
செல்ல, மார்ஷலுக்கு பெரும் உதவியாக இருந்தன.
விண்ணகம், சறுக்கு விளையாட்டுக்கள்,
இனிமையான பழங்கள், கேக்குகள் இவற்றால் நிறைந்திருக்கும் என்ற பாணியில், சிறுவன் மார்ஷல் உள்ளத்தில் எண்ணங்களை விதைத்த, அவனுடைய அம்மா, பாட்டி இவர்களது முயற்சி, தவறானது என்று சொல்வதற்கும் நம்மிடையே பலர் இருக்கலாம். அந்த பிஞ்சு
உள்ளத்தில் தவறான கற்பனைகளை வளர்த்து, அச்சிறுவனுக்கு ‘மூளைச்சலவை’ (Brainwash) செய்தனர்,
அவ்விரு பெண்களும்
என்று குறை கூறலாம். ஆற, அமர சிந்தித்தால், நம்மை துன்பங்கள், போராட்டங்கள் சூழும் வேளையில், பல வழிகளில் விளக்கம் தேடுகிறோம். தீர்வுகள் காண முயல்கிறோம். வயதில்
வளர்ந்துவிட்ட நாம் மேற்கொள்ளும் அத்தகைய முயற்சிகளை, யாரும் 'மூளைச்சலவை' என்று ஒதுக்கிவிடுவதில்லை. அதேவண்ணம், அச்சிறுவனுக்குப் புரியும்வகையில் அவனது துன்பத்திற்கு தீர்வுசொன்ன
அம்மாவையும், பாட்டியையும் குறைசொல்வது சரியல்ல என்பதை
நாம் உணரவேண்டும்.
மார்ஷலுக்குக்
கிடைத்த இந்த உதவி, பேட்டன் நோயினால் துன்புற்ற ஏனைய குழந்தைகளுக்குக்
கிடைத்திருக்குமா என்று நம்மைச் சிந்திக்க வைக்கிறது. இந்த அரியவகை நோய் தங்கள் குழந்தையைத்
தாக்கியுள்ளது என்பதை அறிந்த பெற்றோரும், உற்றாரும், 'எங்களுக்கு ஏன் இத்துன்பம்?'
என்ற கேள்வியை எழுப்பியிருப்பர்.
இந்தக் கேள்வி உருவாக்கும் போராட்டத்தை அவர்கள் நோயுற்றக் குழந்தைக்கும் ஊட்டி, அக்குழந்தையின் வாழ்வை ஒரு நரகமாக மாற்றியிருக்கக்கூடும். சிறுவன்
மார்ஷலின் இல்லத்திலோ, நரகத்திற்குப் பதில், விண்ணகத்தை உருவாக்கும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன.
உடலிலுள்ள
நரம்பு மண்டலத்தை படிப்படியாகச் செயலிழக்கச் செய்யும் பேட்டன் நோயினால், சிறுவன் மார்ஷல் தன் உறுப்புக்களைப் பயன்படுத்தும் கட்டுப்பாட்டை
ஒவ்வொன்றாக இழந்தபோது, மனம் தளராமல், இறுதிவரை போராடினான். "அவன் தன் நடக்கும் திறனை
இழந்தபோது, ஒரு நாளில், 40 அல்லது 50 முறை கீழே விழுவான். எனினும், அவன், ஒவ்வொரு முறையும், யாரையும், எதையும் குறை சொல்லாமல், சலிப்பின்றி எழுந்து நடக்க முயன்றான்" என்று மார்ஷலின் பாட்டி எல்சி
அவர்கள் கூறினார்.
தனக்கு
மட்டும் ஏன் இந்த நோய் வரவேண்டும்? தன்னை ஏன் இறைவன் இவ்விதம் சோதிக்கிறார்? அல்லது, தண்டிக்கிறார்? என்ற பாணியில், சிறுவன் மார்ஷல் அம்மாவிடமும், பாட்டியிடமும்
கேள்விகள் கேட்டிருப்பான். அவனது கேள்விகளை,
போராட்டங்களை பெரிதாக்கி, அவன் துன்பத்தைக் கூட்டுவதற்குப் பதில், அடுத்து என்ன செய்யமுடியும், இவ்வுலகைத்
தாண்டி, மறு உலகில் என்ன செய்யப்போகிறோம் என்ற எண்ணங்களை
அச்சிறுவனுக்கு ஊட்டி வளர்த்த அம்மா லாராவையும், பாட்டி எல்சியையும்
பாராட்டாமல் இருக்கமுடியாது.
மரணத்திற்குப்பின்
மறுவாழ்வு உண்டு, அந்த மறுவாழ்வு, விண்ணகத்தில் தொடரும் என்ற நம்பிக்கைகள், அவ்விரு பெண்களின் உள்ளங்களில் ஆழமாக வேரூன்றியிருந்ததால், அந்த நம்பிக்கையை, சிறுவன் மார்ஷலுக்கு அவர்களால்
வழங்கமுடிந்தது. அச்சிறுவனுக்குச் சொல்லித்தந்த பாடங்கள், அவ்விருவரும் தங்களுக்குத் தாங்களே சொல்லித்தந்த பாடங்கள் என்றால், அது முற்றிலும் உண்மை.
சிறுவன்
மார்ஷல் போலவே, அரியவகை நோயினால் பாதிக்கப்பட்ட மற்றொரு
சிறுவன், ஆரோன். அவனது தந்தை, ஒரு யூத மத குரு. அவரும் அரியவகை நோயினால் பாதிக்கப்பட்ட தன் மகனிடம்
பல உண்மைகளைச் சொல்லித் தந்திருக்க வேண்டும். துன்பம் ஏன்? குழந்தைகள் ஏன் துன்புற வேண்டும்? என்ற கேள்விகளுக்கு அந்த யூத மத குரு தேடிய பதில்களை, பல நூல்களாக அவர் வெளியிட்டுள்ளார்.
ஹெரால்டு குஷ்னர் (Harold Kushner) என்ற யூத மத குருவின் முதல் மகன் ஆரோன். அமெரிக்க ஐக்கிய நாட்டில், 1963ம் ஆண்டு பிறந்த ஆரோன்,
எட்டு மாதக் குழந்தையாக
இருந்தபோது, அவனுக்கு, 'progeria' எனப்படும் அரியவகை நோய் இருப்பதாகக் கண்டுபிடிக்கப்பட்டது.
பல இலட்சம்
குழந்தைகளில் ஒருவருக்கு மட்டுமே வரக்கூடிய இந்த அரியவகை நோயினால், அக்குழந்தை வளர்ச்சி குன்றி, விரைவில்
வயது முதிர்ந்தவரைப் போல் மாறிவிடும். பொதுவாக,
அக்குழந்தை, வளர் இளம் பருவத்தில் இறந்துவிடும். ஆரோனுக்கு 14 வயது நடந்தபோது
அவனை இழந்த ஹெரால்டு குஷ்னர் அவர்கள், தனக்குள் எழுந்த கேள்விகளுக்கு
விடைதேடும் நோக்கத்தில், "When Bad Things Happen to Good People" அதாவது, "நல்லவர்களுக்குப்
பொல்லாதவை நிகழும்போது" என்ற நூலை வெளியி்ட்டார். 1977ம் ஆண்டு, ஆரோன் இறந்தபின், தனக்குள் எழுந்த கேள்விகள், போராட்டங்கள் இவற்றைத் தொகுத்து, நான்கு ஆண்டுகள் கழித்து, 1981ம் ஆண்டு ஹெரால்டு குஷ்னர் அவர்கள்
வெளியிட்ட இந்நூல், பல கோடி மக்களின்
மதிப்பை பெற்றது.
இதைத் தொடர்ந்து, அவர் இன்னும்
சில நூல்களை வெளியிட்டார். அவற்றில் ஒன்று, திருப்பாடல்
23ஐ மையப்படுத்தி, 'ஆண்டவர்
என் ஆயர்' என்ற தலைப்பில், அவர் எழுதிய நூல். 23ம் திருப்பாடலின்
குணமளிக்கும் ஞானம் என்ற உபதலைப்புடன் வெளியான இந்நூல், 2001ம் ஆண்டு அமெரிக்க
ஐக்கிய நாட்டில் நடைபெற்ற வர்த்தக கோபுர தாக்குதல்களால் ஏழுந்த கேள்விகளுக்கு விடை
தேட முயன்றது. 2003ம் ஆண்டு வெளியான இந்நூலை அடிப்படையாகக் கொண்டு, நாம் ஏழு ஆண்டுகளுக்கு முன் திருப்பாடல்
23ல் நம் தேடல்களை மேற்கொண்டது நினைவிருக்கலாம்.
The Book of
Job by Harold Kushner
ஐந்தாண்டுகளுக்கு முன், அதாவது, 2012ம்
ஆண்டு, ஹெரால்டு
குஷ்னர் அவர்கள், மீண்டும், துன்பத்தின்
பொருள்தேடி, 'The Book of Job' அதாவது, 'யோபு நூல்' என்ற தலைப்பில்
நூல் ஒன்றை வெளியிட்டுள்ளார். இந்த நூலுக்கு அவர் அளித்துள்ள உப தலைப்பு நம் கவனத்தை
ஈர்க்கிறது. "When Bad
Things Happen to Good People" அதாவது, "நல்லவர்களுக்குப் பொல்லாதவை நிகழும்போது"
என்று தன் முதல் நூலுக்குப் பெயரிட்ட ஹெரால்டு குஷ்னர் அவர்கள், "When Bad Things
Happened to a Good Person" அதாவது, 'நல்லவர்
ஒருவருக்கு பொல்லாதவை நிகழ்ந்தபோது' என்று தலைப்பிட்டுள்ளார்.
நல்லவர் ஒருவருக்கு நிகழும் கொடுமைகளை, மனித துன்பத்தின்
ஆணிவேரை புரிந்துகொள்ள, யோபு நூலில் நாம் மேற்கொள்ளும் தேடல் பயணம், உதவியாக
இருக்கும். இப்பயணத்திற்கு அடித்தளமாக, ஹெரால்டு குஷ்னர் அவர்கள் எழுதியுள்ள இந்நூல்
அமையும். நம் தேடல் பயணத்தை பொருளுள்ளதாக மாற்ற உதவும், யூத மத குரு ஹெரால்டு
குஷ்னர் அவர்களுக்கு நன்றி கூறி, நம் பயணத்தைக் துவங்குவோம்.
This comment has been removed by a blog administrator.
ReplyDelete