பாசமுள்ள பார்வையில் - இழப்பின் வலியறிந்தோர்
பேறுபெற்றோர்...
"வெளிச்சம்
வெளியே இல்லை" என்ற கவிதைத் தொகுப்பில் கவிஞர் மு.மேத்தா அவர்கள் எழுதியுள்ள ஒரு
கவிதை இதோ...
சிக்னல்
கண்ணசைத்ததும் பரபரப்போடு பறந்தார்கள்.
பார்வையில்லாத
வயோதிகர் ஒருவர்,
சாலையின்
குறுக்கே, தன்னுடைய ஊன்று கோலையே கண்களாக்கி,
ஊர்ந்து
கொண்டிருந்தார்...
அருகிலிருந்தோர்
அவசரமாய்ப் பறக்க...
பார்வையில்லாத
அவர் பாதியில் திகைக்க...
மாறப்
போகிறேன் என்றது சிக்னல்;
பாயப்
போகிறேன் என்றது பஸ்.
சட்டென்று
வேகமாய் வந்த இளம் பெண்ணொருத்தி,
அவரைக்
கையில் பிடித்து இழுத்தபடி, விரைந்து சாலையைக் கடந்தாள்.
உதவியாய்
அவருடன் நடந்தாள்.
தெருவோரம்
சென்றவள் திரும்பியபோதுதான் தெரிந்தது,
அவளுக்கு
உள்ளதே அந்த ஒரு கைதான் என்று.
Priceless Wisdom
விவிலியத்தேடல் : வேதனை வேள்வியில் யோபு
– பகுதி 27
முனிவர்
ஒருவருடன் வாழ்ந்துவந்த இளம் சீடர், தான் அடைந்துவரும் துன்பங்களைப்
பற்றி எப்போதும் பேசிவந்தார். அவருக்குப் பாடம் கற்பிக்க நினைத்த முனிவர், சீடரிடம், ஒரு கைநிறைய உப்பை எடுத்துவரச் சொன்னார். சீடர் கொண்டுவந்த
உப்பை, ஒரு கிண்ணத்திலிருந்த நீரில் கரைக்கச் சொன்னார்
குரு. அந்த நீரை குடிக்கும்படி சீடரிடம் கூறிய குரு, "நீரின்
சுவை எப்படி இருக்கிறது?" என்று கேட்டார். ஒரு வாய் நீரைச்
சுவைத்த சீடர், அதை வெளியே துப்பிவிட்டு, "வாயில் வைக்கமுடியாத அளவு உப்பு கரிக்கிறது" என்று கூறினார்.
பின்னர்
குரு, தன் சீடரிடம், மீண்டும் ஒரு கைநிறைய உப்பைக்
கொண்டுவரச் சொன்னார். அவர் உப்பைக் கொண்டுவந்ததும், குருவும், சீடரும், அருகிலிருந்த எரிக்கரைக்குச் சென்றனர். தெளிவான அந்த ஏரி
நீரில் உப்பைக் கரைத்துவிடச் சொன்னார் குரு. சீடர் அவ்விதம் செய்தபின், குரு அவரிடம், "இப்போது, ஏரி நீரைச் சுவைத்துப்பார்" என்று கூறினார். சீடர் ஏரி நீரைச்
சுவைத்தபோது, "இந்த நீரின் சுவை எப்படி இருக்கிறது?" என்று குரு கேட்க,
"சுவையாக உள்ளது"
என்று பதிலளித்தார், சீடர். "நீரில் நீ கரைத்த உப்பின்
சுவை தெரியவில்லையா?" என்று கேட்ட குருவிடம், "இல்லவே இல்லை" என்று கூறினார், சீடர்.
அப்போது, குரு, தன் சீடரை ஏரிக்கரையில் அமரச் சொல்லி, தானும் அவரருகே அமர்ந்து, பாடம் சொல்லித்தர
ஆரம்பித்தார். "கையளவு உப்பை கிண்ணத்தில் கரைத்தபோது, அது, கிண்ணத்து நீரை குடிக்கமுடியாத
அளவு செய்துவிட்டது. அதே அளவு உப்பை, நீ ஏரியில் கரைத்தபோது, அது, நீரின் சுவையை மாற்றவில்லை. வாழ்வில்
வரும் துன்பம், நீ கைநிறைய அள்ளிவந்த உப்பைப் போன்றது.
துன்பம் வரும்போது, உன் உள்ளத்தை, கிண்ணம் போல குறுக்கிவிட்டால், வாழ்வு கசந்துபோகும்; உன் உள்ளத்தை ஏரியாக விரிவடையச் செய்தால், உன் துன்பம், சுவடு தெரியாமல் கரைந்துபோகும். நீ ஏரியாக மாறவேண்டும்"
என்று குரு அறிவுரை வழங்கினார்.
மனிதராயப்
பிறந்த அனைவரும் சந்திக்கும் ஒரு முக்கிய அனுபவம், துன்பம்.
இதை, கடுமையான தண்டனையாகக் கருதுவோர், குறைகூறியே வாழ்வைக் கழிக்கவேண்டியிருக்கும்.
இதற்கு மாறாக, நம்மை அடையும் துன்பங்களை, கல்விக்கூடமாகக் காண்போர்,
இப்பள்ளியில், உன்னதமான உண்மைகளைக் கற்றுக்கொள்ளக்கூடும். நம் ஒவ்வொருவரையும்
வந்தடையும் துயரங்கள், ஒரே வடிவிலும், அளவிலும் வந்தாலும், அவற்றை எவ்விதம் எதிர்கொள்கிறோம்
என்பதைப் பொருத்து, பின்விளைவுகள் இருக்கும். ஓர் உருவகத்தின்
வழியே இதைப் புரிந்துகொள்ள முயல்வோம்.
கண்ணாடி, பஞ்சு, தோல், உலோகம் என்று, நான்கு வகை பொருள்களை எண்ணிப்பார்ப்போம்.
இந்த நான்கு பொருள்களையும் ஒரு சுத்தியல் கொண்டு அடிக்கும்போது, கண்ணாடி, உடைந்துபோகிறது; பஞ்சு, அதே அடியால் மிருதுவாகிறது; தோல், உறுதிப்படுகிறது; உலோகம், கடினமாகிறது. விழும் அடி ஒன்றுதான்
என்றாலும், அதன் விளைவுகள் வெவ்வேறு வகையில் அமைகின்றன.
துன்பம், அல்லது, பிரச்சனை
என்ற சுத்தியல், நம் வாழ்வைத் தாக்கும்போது, நம் மனங்கள் கண்ணாடியா, பஞ்சா, தோலா, அல்லது, உலோகமா என்பதைப் பொருத்து,
பின்விளைவுகள் இருக்கும்.
கண்ணாடிபோல
நம் உள்ளங்கள் நொறுங்கிவிடக் கூடாது என்பதே, நம் அனைவரின் விருப்பம். எனவே, நம் பிரச்சனைகளுக்கு, போராட்டங்களுக்குத் தீர்வுகாண, பல வழிகளை நாம் மேற்கொள்கிறோம். நம் பிரச்சனை, துன்பம் இவற்றை, தனித்து சிந்தித்து, தீர்வு காண முயல்கிறோம். பல வேளைகளில், நம் பிரச்சனை, துன்பம் இவற்றின் பாரத்தால், தெளிவாகச் சிந்திக்க இயலாதபோது, அடுத்தவர்
உதவியை, குறிப்பாக, நம் உறவுகள், நண்பர்கள் உதவியை நாடி, தீர்வு காண முயல்கிறோம். இறுதியில், நமக்குத் தீர்வு தருவதற்கு,
இறைவனை நாடுகிறோம்.
இந்த மூன்று வழிகளையும், யோபு தன் வாழ்வில் மேற்கொண்டதை
நாம் காண்கிறோம்.
துன்பம்
என்ற பள்ளியில், உன்னதமான பல உண்மைகளைக் கற்றுக்கொண்ட யோபுடன்
பயணம் மேற்கொண்டுவரும் நாம், இந்நூலின் 28ம் பிரிவில் நம் தேடல்
முயற்சிகளை இன்று தொடர்கிறோம். 28ம் பிரிவில், 'ஞானத்தின்
மேன்மை' என்ற தலைப்பில், இடம்பெற்றுள்ள கவிதை, யோபின் சொற்கள் அல்ல, மாறாக,
அவை, யோபு நூல் ஆசிரியரின் எண்ணங்கள் என்பது,
பல விவிலிய ஆய்வாளர்களின்
கருத்து. 28 இறைச்சொற்றொடர்கள் கொண்ட இக்கவிதையின் முதல் 11 இறைச்சொற்றொடர்களில், சுரங்கங்கள் தூண்டுவதில் மனிதர்கள் மேற்கொண்ட கடுமையான முயற்சிகள்
சித்திரிக்கப்பட்டுள்ளன. வெள்ளி, பொன், இரும்பு, செம்பு என்ற உலோகங்களைத் தேடி, பூமியின் ஆழத்திற்குச் செல்லும் மனிதர்களைப்பற்றி, முதல் 11 இறைச்சொற்றொடர்களில் விவரிக்கும் இக்கவிதையின் ஆசிரியர், 12ம் இறைச்சொற்றொடரில், ஞானம், அறிவு என்ற
கருத்துக்களை அறிமுகப்படுத்துகிறார்:
யோபு
28: 12
ஞானம்
எங்கே கண்டெடுக்கப்படும்? அறிவின் உறைவிடம் எங்கேயுள்ளது?
சுரங்கம்
தோண்டும் முயற்சிகளைப் பற்றி பேசும் ஆசிரியர்,
திடீரென, ஞானம், அறிவு இவற்றைக்குறித்துப் பேசுவதற்குக்
காரணம் என்ன என்ற கேள்வி நமக்குள் எழலாம். அடுத்துவரும் வரிகளில் இதற்குரிய பதிலை நாம்
காண்கிறோம். கடுமையான பல இன்னல்களைத் தாங்கி,
சுரங்கங்களில் உலோகங்களைத்
தேடும் மனிதர்கள், விலையுயர்ந்த பல உலோகங்களைக் காட்டிலும்
மிக உயர்ந்ததாகக் கருதப்படும் ஞானத்தின் மதிப்பை உணராமல் வாழ்கின்றனர் என்பதை
ஆசிரியர் அழகாகக் கூறியுள்ளார்:
யோபு
28: 13அ,15-19
மனிதர்
அதன் மதிப்பை உணரார்... தங்கத்தைக் கொடுத்து அதைப் பெறமுடியாது; வெள்ளியால் அதன் விலையை நிறுக்க இயலாது. ஓபீர்த் தங்கமும்
கோமேதகமும் அரிய நீலமணியும் அதற்கு மதிப்பாகா! பொன்னும் பளிங்கும் அதற்கு நிகராகா; பசும்பொன் கலன்களும் பண்டமாற்றாகா. மணியும் பவளமும் அதற்கு
இணையில்லை; மதிப்பினில் முத்தினை ஞானம் விஞ்சும்.
எத்தியோப்பிய புட்பராகம் அதற்கு இணையல்ல; பத்தரை மாற்றுத் தங்கமும் அதற்கு நிகரல்ல.
தங்கம், வெள்ளி, ஓபீர்த் தங்கம், கோமேதகம், நீலமணி, பசும்பொன், மணி, பவளம், முத்து, புட்பராகம், பத்தரை மாற்றுத் தங்கம்... என்று, இக்கவிதையின் ஆசிரியர் கூறும் அரியவகை உலோகங்களின் பட்டியலைக் கேட்கும்போது, இவற்றின் மொத்த மதிப்பு எத்தனை கோடி ரூபாய் இருக்கும் என்று கணக்கிடக்கூடிய
மனநிலையோடு இவ்வரிகளை நாம் கேட்டிருந்தால், நாமும், உண்மை ஞானத்தின் மதிப்பை
உணராதவர்கள் என்ற உண்மையைப் புரிந்துகொள்ளவேண்டும்.
பணத்தால்
மதிப்பிடக்கூடிய தங்கம், பொன், வைரம் ஆகிய அனைத்து பொருள்களையும்விட, ஒருவர் அடைந்துள்ள ஞானம் அல்லது, அறிவொளி
மிக உயர்ந்தது என்பதைக் கூறும் கதை இதோ:
காட்டில்
முனிவர் ஒருவர் ஆழ்நிலை தியானத்தில் அமர்ந்திருந்தபோது, அருகிலிருந்த ஊரிலிருந்து ஒரு விவசாயி அவரிடம் ஓடிவந்தார். மேல்மூச்சு, கீழ்மூச்சு வாங்கியபடி, விவசாயி, அம்முனிவரிடம், "அந்தக் கல்... அந்த விலையுயர்ந்த
கல்லை எனக்கு தயவுசெய்து கொடுங்கள்" என்று கெஞ்சிக் கேட்டார். முனிவர் அவரிடம், "எந்தக் கல்?" என்று கேட்டார்.
"நேற்றிரவு கடவுள் என் கனவில் தோன்றினார்.
'ஊருக்கருகே காட்டில் அமர்ந்திருக்கும் முனிவரிடம் விலையுயர்ந்த
ஒரு கல் உள்ளது. அதை நீ பெற்றுக்கொண்டால், வாழ்நாளெல்லாம் மகிழ்வுடன் வாழ்வாய்' என கடவுள் கனவில் என்னிடம் சொன்னார்" என்று அந்த விவசாயி கூறினார்.
முனிவர்
தன் பையில் சிறிது நேரம் தேடியபின், மின்னும் ஒளியுடன் கூடிய பெரிய
வைரக்கல் ஒன்றை வெளியில் எடுத்து, "கடவுள் இதைப்பற்றித்தான் சொல்லியிருப்பார்.
இதை நான் நடுக்காட்டில் நேற்று கண்டெடுத்தேன். இதோ, இதை எடுத்துச்செல்லுங்கள்"
என்று விவசாயி கரங்களில் அதைக் கொடுத்தார்.
அதைப்
பெற்றுக்கொண்ட விவசாயி, மட்டற்ற மகிழ்வுடன் வீடு திரும்பினார். ஆனால், அன்றிரவு முழுவதும்
அவரால் உறங்க முடியவில்லை. மறுநாள் அதிகாலையில் அவர் வைரக்கல்லை எடுத்துக்கொண்டு, மீண்டும் காட்டுக்கு ஓடினார். முனிவரைப் பார்த்ததும், அவர் பாதங்களில் வீழ்ந்து,
"ஐயா, இதோ, நீங்கள் தந்த வைரம். இதை உங்களிடமே
தந்துவிடுகிறேன். ஆனால், நீங்கள் எனக்கு மற்றொன்றைத் தரவேண்டும்.
இந்த வைரத்தை, எவ்வித தயக்கமும் இல்லாமல் எனக்குத் தருவதற்கு நீங்கள் பெற்றிருக்கும்
அந்த மனநிலையை எனக்குத் தரவேண்டும்" என்று அந்த விவசாயி மன்றாடிக் கேட்டார்.
மற்றவர்
வாழ்வை வளமாக்க, தன்னிடம் இருந்த விலையுயர்ந்த வைரத்தை வழங்கிய
அந்த முனிவரின் உள்ளம், ஞானம் அடைந்த உள்ளம். வைரத்தைவிட
விலையுயர்ந்த அந்த ஞானத்தைக் கண்டுபிடிப்பது எளிதல்ல. மனிதர்களாகிய நாம் எளிதில் கண்டுபிடிக்க
இயலாத இந்த ஞானம் இருக்கும் இடத்தையும், அங்கு செல்லக்கூடிய வழியையும் அறிந்தவர்
கடவுள் என்று யோபு நூல் ஆசிரியர் கூறுகிறார்:
யோபு
28: 20, 23
எங்கிருந்து
வருகிறது ஞானம்? எங்குள்ளது அறிவின் உறைவிடம்? ... அதன் வழியைத் தெரிந்தவர் கடவுள்; அதன் இடத்தை அறிந்தவரும் அவரே!
மனிதர்களுக்கு
வழங்கப்பட்டுள்ள மிக உயர்ந்த சக்திகளான, தெரிந்துகொள்ளுதல், அறிந்துகொள்ளுதல், புரிந்துகொள்ளுதல் என்பவை, நம் அறிவுத்திறனின் பல்வேறு பரிமாணங்கள். இவற்றை, ஞானம், அறிவு என்ற இரு சொற்களால் விவிலியம்
விவரிக்கின்றது. ஞானம், அறிவு ஆகிய இந்த உயர்ந்த உண்மைகளின்
பரிமாணங்களை, விவிலியத்தின் பல நூல்கள் பகர்கின்றன. இவற்றை நமது அடுத்தத் தேடலில் தொடர்ந்து
சிந்திப்போம்.
No comments:
Post a Comment