25 July, 2017

விவிலியத்தேடல் : வேதனை வேள்வியில் யோபு – பகுதி 30

Paid in full with one glass of milk

பாசமுள்ள பார்வையில் - ஒரு 'டம்ளர்' பாலைக்கொண்டு...

சிறுவன் ஒருவன், தன் படிப்புச் செலவுக்குப் பணம் சேர்க்க, ஞாயிற்றுக் கிழமைகளில் வீடு, வீடாகச் சென்று பொருள்கள் விற்றுவந்தான். அன்றும் அவ்வாறே அவன் சென்றபோது, யாரும் அவனிடம் பொருள்கள் வாங்கவில்லை. வெயில் சுட்டெரித்தது. களைப்பாகவும், பசியாகவும் இருந்தது. படிப்பை நிறுத்திவிடலாம் என்று நினைத்தபடி, அருகிலிருந்த ஒரு வீட்டின் கதவைத் தட்டினான். இளம் பெண்ணொருவர் வெளியே வந்ததும், அவரிடம், "குடிக்க கொஞ்சம் தண்ணீர் கிடைக்குமா?" என்று கேட்டான். சிறுவன் இருந்த நிலையைப் பார்த்த அந்த இளம் பெண், உள்ளே சென்று, ஒரு பெரிய 'டம்ளர்' நிறைய பால் கொண்டுவந்து கொடுத்தார். சிறுவன், அதை, ஒரு சொட்டு விடாமல் குடித்து முடித்துவிட்டு, "நான் உங்களுக்கு எவ்வளவு தரவேண்டும்?" என்று கேட்டான். அப்பெண்ணோ, "ஒன்றுமில்லை. அன்பாகச் செய்யும் உதவிக்கு விலை எதுவும் கிடையாது என்று எங்கள் அம்மா சொல்லித்தந்திருக்கிறார்கள்" என்று கூறினார். ஹாவர்ட் கெல்லி (Howard Kelly) என்ற அச்சிறுவன், அப்பெண்ணுக்கு நன்றி சொல்லிவிட்டு, அந்த வீட்டைவிட்டுக் கிளம்பியபோது, அவன் உடலில் புது சக்தி பிறந்ததைப் போல் உணர்ந்தான். அவனுக்கு, இறைவன் மீதும், மனிதர்கள் மீதும் நம்பிக்கை பிறந்தது. தன் படிப்பை எப்படியும் தொடர்வது என்ற உறுதியும் பிறந்தது.
ஆண்டுகள் உருண்டோடின. அந்த இளம்பெண், விவரிக்கமுடியாத ஓர் அரிய நோயினால் துன்புற்றார். அவருக்குத் தேவையான மருத்துவ உதவிகள், அவர் இருந்த ஊரில் இல்லையென்பதால், அருகிலிருந்த நகருக்கு அவர் எடுத்துச் செல்லப்பட்டார். அங்கிருந்த ஒரு பெரிய மருத்துவமனையில், ஹாவர்ட் கெல்லி, மருத்துவராகப் பணியாற்றிவந்தார். அவரிடம் அப்பெண்ணின் மருத்துவ 'ரிப்போர்ட்' கொடுக்கப்பட்டது. மருத்துவர் கெல்லி, அந்த ஊரின் பெயரைப் பார்த்ததும், அந்தப் பெண்ணைச் சந்திக்கச் சென்றார். அவர்தான் தனக்கு ஒரு 'டம்ளர்' பால் கொடுத்தவர் என்பதை, டாக்டர் கெல்லி புரிந்துகொண்டார். ஆனால், அப்பெண்ணுக்கு, டாக்டரை அடையாளம் தெரியவில்லை.
டாக்டர் கெல்லி தீவிர முயற்சிகள் எடுத்து, அப்பெண்ணைக் குணமாக்கினார். அப்பெண்ணின் மருத்துவச் செலவுக்குரிய 'பில்'லைத் தனக்கு அனுப்பி வைக்குமாறு கூறினார். 'பில்' வந்ததும், அதில் சில வார்த்தைகளை எழுதி, அப்பெண் இருந்த அறைக்கு 'பில்'லை அனுப்பி வைத்தார், டாக்டர் கெல்லி. 'பில்'லைப் பார்க்கத் தயங்கினார், அப்பெண். தன் வாழ்நாளெல்லாம் உழைத்தாலும், அந்த 'பில்' தொகையை தன்னால் கட்டமுடியாது என்று அவருக்குத் தெரியும். மனதை, ஓரளவு திடப்படுத்திக்கொண்டு, 'பில்'லைப் பார்த்தார். அந்தத் தொகை உண்மையிலேயே பெரிய தொகைதான். ஆனால், அந்தத் தொகைக்கருகே, "இந்த 'பில்' தொகை முழுவதும் கட்டப்பட்டுவிட்டது, ஒரு 'டம்ளர்' பாலைக்கொண்டு" என்று எழுதப்பட்டிருந்தது.

Job appeals to God directly

வேதனை வேள்வியில் யோபு – பகுதி 30

யோபுக்கும், அவரது நண்பர்கள் மூவருக்கும் இடையே நடைபெறும் வழக்கு, இறுதி நிலையை அடைந்துள்ள நிலையில், மீண்டும் ஒருமுறை, நாம் இந்த வழக்கில் இன்று கலந்துகொள்கிறோம். நீதி மன்றங்களில் நாம் காணும் வழக்குகளுக்கும், இந்த வழக்கிற்கும் உள்ள ஒரு முக்கிய வேறுபாடு, இந்த வழக்கில், நீதிபதியாக வீற்றிருக்கவேண்டிய இறைவன், இன்னும் அவர்கள் முன்பு தோன்றவில்லை என்பது.
மற்றொரு வேறுபாடு, 29ம் பிரிவு முதல், 31ம் பிரிவு முடிய, யோபு வழங்கும் இறுதி வாதங்களில் கூறப்படும் கருத்துக்கள். பொதுவாக, நீதி மன்றங்களில், வழக்கறிஞர்கள், தங்கள் வாதங்களை மாறி, மாறி, சமர்ப்பித்தபின், இறுதியாக, தங்கள் கருத்துக்களைத் தொகுத்து வழங்கி, 'தேட்ஸ் ஆல் யுவர் ஆனர்' என்று முடிப்பர் என்பதை அறிவோம். இந்த இறுதி வாதங்களில், தங்கள் பக்கம் இருக்கும் நியாயத்தையும், நன்மைகளையும், எதிர் தரப்பில் இருக்கும் குறைகளையும், வெளிச்சமிட்டுக் காட்டுவது, வழக்கறிஞர்களின் வேலை.

யோபு வழங்கும் இறுதி வாதத்தில், ஒரு மாறுதலைக் காண்கிறோம். அவர், தான் வாழ்வில் பெற்ற நன்மைகளைத் தொகுத்து, 29ம் பிரிவில் தந்துள்ளார். அதை, சென்ற வாரம் நாம் சிந்தித்தோம். 30ம் பிரிவிலோ, தனக்கு நேர்ந்த துன்பங்களை அவர் பட்டியலிட்டுள்ளார். அவர் இந்தக் துன்பங்களை அடைந்ததற்கு காரணமே, அவர் செய்த பாவத்தின் விளைவு என்பது, எதிர் தரப்பு வழக்கறிஞர்களான யோபின் நண்பர்கள், மாறி, மாறி முன்வைத்த வாதம். அந்த வாதத்திற்கு வலிமை சேர்ப்பதுபோல், யோபு மீண்டும் தன் துன்பங்களை பட்டியலிட்டுள்ளார். ஒரு நீதி மன்றத்தில் இவ்வாறு நிகழ்ந்திருந்தால், யோபு, தன் வழக்கை கட்டாயம் இழந்திருப்பார். ஆனால், யோபு, தன் வழக்கை, இறைவன் முன் வைக்கிறோம் என்ற நம்பிக்கையில், தன் துன்பங்களை, தயக்கமின்றி பட்டியலிட்டுள்ளார்.

வீட்டிலும், நாட்டிலும், தான் அடைந்திருந்த மதிப்பையும், அதற்குக் காரணமாக இருந்த தனது நற்செயல்களையும், 29ம் பிரிவில் அசைபோட்ட யோபு, 30ம் பிரிவை, "ஆனால்" என்ற சொல்லுடன் துவக்குகிறார். நமது பேச்சு வழக்கில், "ஆனால்" என்ற சொல்லை ஒருவர் பயன்படுத்தும்போது, அவர் அதுவரை கூறிவந்த கருத்துக்களுக்கு மாறுபட்ட கருத்தைச் சொல்லப்போகிறார் என்பதை நாம் புரிந்துகொள்ளலாம். அத்தகைய ஒரு மாற்றம் இங்கு நிகழ்கிறது. 29ம் பிரிவில் ஒலித்த மகிழ்வுப் பாடலுக்கு முற்றிலும் எதிராக, 30ம் பிரிவில், யோபின் புலம்பலைக் கேட்க, 'ஆனால்' என்ற அந்த சொல் நம்மை தயார் செய்கிறது.
யோபு 30: 1 அ
ஆனால், இன்று என்னை, என்னைவிட இளையோர் ஏளனம் செய்கின்றனர்

தன்னைக்கண்டு மரியாதையுடன் ஒதுங்கிச் சென்ற இளையோர், (யோபு 29:8) இப்போது தன்னை ஏளனம் செய்யுமளவு துணிவு கொண்டுள்ளனர் என்பதை, யோபு, தன் முதல் புலம்பலாகக் குறிப்பிடுகிறார். இதைத் தொடர்ந்து, தன்னை ஏளனம் செய்யும் இளையோர் எப்படிப்பட்டவர்கள் என்று யோபு விவரிப்பது, நம் கவனத்தை ஈர்க்கிறது. தான் வளமுடன், நலமுடன் வாழ்ந்தபோது, தனக்குச் சொந்தமான ஆட்டு மந்தையைக் காப்பதற்கு தான் வைத்திருந்த நாய்களைவிட, இவ்விளையோரின் தந்தையர் தாழ்ந்தவர் என்று யோபு கூறும் ஒப்பீட்டைக் கேட்கும்போது, அவரது உள்ளத்தில் பொங்கியெழும் ஆத்திரத்தையும், வேதனையையும் புரிந்துகொள்கிறோம்.
யோபு 30: 1
இன்று என்னை, என்னைவிட இளையோர் ஏளனம் செய்கின்றனர்; அவர்களின் தந்தையரை என் மந்தையின் நாய்களோடு இருத்தவும் உடன்பட்டிரேன்.
என்று ஆரம்பமாகும் யோபின் ஆத்திரமும், வேதனையும், 30ம் பிரிவு முழுவதும் வெடித்துச் சிதறுகின்றன.

இந்த அறிமுக வரிகளைத் தொடர்ந்து, 30ம் பிரிவின் 2 முதல் 8 முடிய உள்ள இறைச்சொற்றொடர்கள், தான் மதிப்புடன் வாழ்ந்தபோது, இந்த இளையோரின் குடும்பங்கள் வாழ்ந்துவந்த இழிநிலையைச் சித்திரிக்கின்றன:
யோபு 30: 3,7
அவர்கள் பட்டினியாலும் பசியாலும் மெலிந்தனர்; வறண்டு, இருண்டு அழிந்த பாலைக்கு ஓடினர்... புதர்களின் நடுவில் அவர்கள் கத்துவர்; முட்செடியின் அடியில் முடங்கிக் கிடப்பர்.
மனித சமுதாயத்தில் மற்றவர்களுக்கு இணையாக வாழவும் தகுதியற்றவர்களாக இருந்த இத்தகையோரின் ஏளனத்திற்கு தான் உள்ளானதை எண்ணி, யோபு மனமுடைந்து பேசுகிறார்:
யோபு 30: 9-10
இப்பொழுதோ, அவர்களுக்கு நான் வசைப்பாட்டு ஆனேன்... என்னை அவர்கள் அருவருக்கின்றனர்; என்னைவிட்டு விலகிப் போகின்றனர்; என்முன் காறித் துப்பவும் அவர்கள் தயங்கவில்லை.

ஊராரின் ஏளனம், யோபை ஏன் இவ்வளவுதூரம் பாதித்தது என்பதைப் புரிந்துகொள்ள, யோபு வாழ்ந்த காலத்தில் நிலவியச் சூழலை, கருத்தில் கொள்வது பயனளிக்கும் என்று, யூத மத குரு ஹெரால்டு குஷ்னர் (Harold Kushner) அவர்கள், யோபைக் குறித்து எழுதியுள்ள தன் நூலில் குறிப்பிட்டுள்ளார். யோபு வாழ்ந்த காலத்தில், சமுதாயத்தில் ஒருவர் பெற்ற மதிப்பு அரியதொரு சொத்தாகக் கருதப்பட்டது. இன்றும், பல நாடுகளில், பாரம்பரியத்தில் ஊறியுள்ள இடங்களில், ஒருவரது 'கௌரவம்' மிக உயர்ந்த நிலை வகிக்கிறதை நாம் உணர்வோம். அந்த 'கௌரவத்தை' இழப்பதற்குப் பதில், ஒருவர் தன் உயிரையும் இழக்கத் துணிவதை நாம் அறிவோம். அதேபோல், குடும்ப கௌரவத்தைக் குலைக்கும் வண்ணம் நடந்துகொள்பவரை கொலை செய்துவிட்டு, அதை, 'கௌரவக் கொலை' என்று கூறுவதையும் நாம் அறிவோம். இந்தப் பின்புலத்திலிருந்து பார்க்கும்போது, யோபு, தன்னை பிறர் மதிக்கவில்லை என்பதை பெரும் புலம்பலாக வெளிப்படுத்தும்போது, அதை நம்மால் புரிந்துகொள்ள முடிகிறது.

இன்று நிலவும் பொது வாழ்வில், குறிப்பாக அரசியல் உலகில், ஒருவர் பேரும் புகழும் பெறுவதை முதல்தரமானச் சொத்தாகக் கருதுவதற்குப் பதில், அவர் குவித்து வைத்திருக்கும் பணமே முதல்தரச் சொத்தாகக் கருதப்படுகிறது. பணம் இருந்தால், பேரும் புகழும் பெறமுடியும் என்று நம்பும் காலம் இது. குற்றங்களில் பிடிபட்டு ஒருவர் தன் பேரையும் புகழையும் இழந்தாலும், அவற்றை, பணத்தைக் கொண்டு வாங்கிவிடலாம் என்ற துணிவில், அரசியல்வாதிகளின் நடத்தை, நாளுக்குநாள் நெறிகெட்டு வருவதைக் காண்கிறோம்.

ஊராரின் ஏளனத்திற்கு, குறிப்பாக, தான் வளர்க்கும் நாய்களுக்கு இணையாக நிற்கவும் தகுதியற்றோரின் ஏளனத்திற்கு, தான் உள்ளாகிவிட்டோமே என்று யோபு புலம்புவது, அவரது தன்னிரக்கத்தை (Self pity) வெளிப்படுத்துகிறது என்று, ஹெரால்டு குஷ்னர் அவர்கள், தன் நூலில் குறிப்பிட்டுள்ளார். அடுத்தவர் என்ன சொல்வார் என்பதில் கவலை கொள்ளும் மனிதர்கள், வரலாற்றில் எப்போதுமே வாழ்ந்து வந்துள்ளனர் என்பதற்கு, யோபு மற்றுமோர் எடுத்துக்காட்டு. யோபின் சுய மதிப்பு, எவ்வளவு தூரம், மற்றவரைச் சார்ந்திருந்தது என்பதை, குஷ்னர் அவர்கள், தன் நூலில் விளக்குகிறார்.

புகழின் உச்சியில் யோபு வாழ்ந்தபோது, அவர், தன்னிடமிருந்த செல்வங்களிலும், நற்பண்புகளிலும் நிறைவு கண்டதைக் காட்டிலும், மற்றவர் தனக்கு வழங்கிய மரியாதைக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்தார்; அதில் அதிக நிறைவு கண்டார். எனவே, அவர், தன் செல்வம், புதல்வர், புதல்வியர், உடல்நலம் அனைத்தையும் இழந்தபோது அடைந்த துன்பத்தைவிட, மக்களின் மதிப்பை இழந்துவிட்டோம் என்பதே, அவரை, பெரும் வேதனைக்கு உள்ளாக்கியது என்று, குஷ்னர் அவர்கள் குறிப்பிட்டுள்ளார்.

மற்றவர்களின் மதிப்பை மையப்படுத்தி யோபு அடைந்துள்ள இந்த வேதனை நிலையை விளக்க, குஷ்னர் அவர்கள் பயன்படுத்தும் ஓர் உருவகம், அழகான ஓர் உண்மையை நம் அனைவருக்கும் கற்றுத்தருகிறது.
16ம் நூற்றாண்டில், முகம்பார்க்கும் கண்ணாடிகள், தொழிற்சாலைகளில், பெருமளவில் உற்பத்தி செய்யப்பட்டபோது, மக்களின் தினசரி வாழ்வில் கண்ணாடிகள் முக்கிய மாற்றங்களைக் கொணர்ந்தன. அதுவரை, மக்கள், தங்கள் தோற்றம் எப்படியிருக்கும் என்பதை முழுமையாக உணராமல் வாழ்ந்தனர். ஒவ்வொருவரும், தன் சுய உருவம் (Self-image) பற்றி கொண்டிருந்த மதிப்பீடு, அடுத்தவர் தங்களைப் பார்க்கும் பார்வை வழியே வந்தது. தன்னைப் பார்ப்பவர்களின் முகங்களில் தெரியும் விருப்பு, வெறுப்பு, மதிப்பு, அல்லது, ஏளனம் இவற்றைக்கொண்டே ஒருவரது சுய மதிப்பு அளவிடப்பட்டது.
முகம்பார்க்கும் கண்ணாடிகள் அறிமுகமானபின், தங்கள் முகத்தை, உடலை அவர்கள் கண்ணாடியில் கண்டபோது, தங்களைப்பற்றி இன்னும் சற்று தெளிவான மதிப்பை ஒவ்வொருவரும் பெற்றனர் என்று கூறும் ஹெரால்டு குஷ்னர் அவர்கள், முகம்பார்க்கும் கண்ணாடிகள் இல்லாத காலத்தில் யோபு வாழ்ந்ததால், அடுத்தவர் தன்மீது காட்டிய மதிப்பைக் கொண்டு, தன் சுய மதிப்பை அவர் அளந்தார் என்பதில் ஆச்சரியம் ஏதுமில்லையே என்று விளக்குகிறார்.

முகம் பார்க்கும் கண்ணாடி முதல், நம்மை நாமே படமாகப் பதிவு செய்யும் 'செல்ஃபி' வரை, நான், எனது, என்றே நமது உலகம் சுழன்று வந்தாலும், அடுத்தவர் நம்மைப்பற்றி என்ன நினைக்கிறார் என்பதற்கு நாம் தரும் முக்கியத்துவம், இன்னும் நம் வாழ்வில் உயர்ந்ததோர் இடத்தைப் பிடித்துள்ளது என்பதை நம்மால் மறுக்க இயலாது.
தன்னை இவ்வுலகம் மதிக்கவில்லை என்று புலம்பும் யோபு, தனது செல்வம், பெருமை, உடல்நலம் அனைத்தையும் படிப்படியாக இழந்ததை, 30ம் பிரிவில் விவரிக்கும் வரிகள், நம் உள்ளத்தை பாதிக்கின்றன. இவ்வரிகளில் புதைந்திருக்கும் வேதனையையும், அதன் எதிரொலிபோல், விவிலியத்தின் வேறு நூல்களில் நாம் காணும் பகுதிகளையும், அடுத்தவாரம் புரிந்துகொள்ள முயல்வோம்.


No comments:

Post a Comment