26 December, 2017

விவிலியத்தேடல் : வேதனை வேள்வியில் யோபு – பகுதி 51


Akash pressmeet about tasmac protest - Oneindia Tamil

பாசமுள்ள பார்வையில் - மதுக்கடை முன், படிக்கும் போராட்டம்


சென்னைக்கருகே, படூர் கிராமத்தில் உள்ள மதுக்கடையை அகற்றவேண்டும் என அரசுக்கு கோரிக்கை வைத்ததோடு, அந்த மதுக்கடை முன்பாக அமர்ந்து, படிக்கும் போராட்டத்தை, 8 வயது சிறுவன் ஆகாஷ் முன்னெடுத்தார். ஏப்ரல் 2017ல் அந்த மதுக்கடையை அரசு மூடிவிட்டது.
''என்னைப் போல பல குழந்தைகள் அந்த மதுக்கடை வழியா போறாங்க. அங்க இருக்குற குளத்தில் அம்மா, அக்கா எல்லாரும் துணி துவைக்கிறாங்க. அங்க மதுக்கடை இருந்துச்சு. அதனால போரட்டம் நடத்தினேன். நான் சொன்னா யாரும் கேட்கமாட்டாங்கனு போலீஸ் சொன்னாங்க. பெரியவங்க சிலரும் சொன்னாங்க. கடையை மூடலைனா நான் வீட்டுக்கு போகமாட்டேன்னு சொன்னேன். என்னோட போரட்டத்தோட விளைவா அந்த கடையை மூடிட்டாங்க'' என மதுவுக்கு எதிராக தான் மேற்கொண்ட போராட்டம் பற்றி விவரித்தபோது, ஆகாஷின் முகத்தில், நிஜமான, நிறைவானப் புன்னகை விரிந்தது.

My Redeemer Lives

வேதனை வேள்வியில் யோபு – பகுதி 51


42 பிரிவுகளைக் கொண்ட யோபு நூலில், 40 பிரிவுகளில், யோபுக்கும், அவரது நண்பர்களுக்கும், இறுதியில், யோபுக்கும், இறைவனுக்கும் இடையே நிகழும் உரையாடல்கள், இடம்பெற்றுள்ளன. யோபுக்கும், அவரது மூன்று நண்பர்களான எலிப்பாசு, பில்தாது, சோப்பார் ஆகியோருக்கும் இடையே மூன்று சுற்று உரையாடல்கள் நிகழ்கின்றன. யோபின் துயரத்தில் பங்கேற்று, அவருக்கு உதவிகள் செய்வதற்கென வந்திருந்த நண்பர்கள், சிறிது, சிறிதாக, யோபின் மீது குற்றம் சுமத்தும் நீதிபதிகளாக மாறுகின்றனர்.

நமது உறவுகள், குறிப்பாக, நம் பெற்றோர், உடன்பிறந்தோர் என்ற உறவுகள், நமக்கு வழங்கப்பட்டுள்ள வரங்கள். இவற்றை நாம் தெரிவு செய்வதில்லை. இதற்கு மாறாக, நமது நண்பர்கள், நாம் தெரிவு செய்யும், தேடி அடையும், வரங்கள். நண்பர்களைப் பற்றி, பல அழகிய கருத்துக்கள் சொல்லப்பட்டுள்ளன. அவற்றில் இரண்டு இதோ:
அமெரிக்க ஐக்கிய நாட்டின் 16வது அரசுத்தலைவராகப் பொறுப்பேற்ற ஆபிரகாம் லிங்கன் அவர்கள், நாட்டில் அடிமைத்தனத்தை ஒழிக்க முற்பட்டார். அவரது முயற்சி, உள்நாட்டுப்போராக உருவெடுத்தபோது, லிங்கன் அவர்களின் படைத்தளபதியாக பணியாற்றியவர், யுலிசெஸ் கிரான்ட் (Ulysses Grant). அமெரிக்க ஐக்கிய நாட்டின் 18வது அரசுத் தலைவராகப் பொறுப்பேற்று, அடிமைத் தனத்தை ஒழிக்க தொடர்ந்து பாடுபட்ட யுலிசெஸ் கிரான்ட் அவர்கள், நண்பர்களைக் குறித்து கூறும் வார்த்தைகள், பொருள் மிக்கவை: "பகைமையின் நெருக்கடிகள் என்னைச் சூழும்போது, என் நண்பராக துணை நிற்பவரை நான் பெரிதும் மதிக்கிறேன். ஒளியோடு, வளமோடு, நான் வாழும் காலத்தில், என்னுடன் சேர்ந்து, வாழ்வைச் சுவைக்க முன்வருபவரைவிட, நான் இருளில் தவிக்கும்போது, அந்த இருளை ஓரளவாகிலும் நீக்க முன்வருபவரையே நான் நம்புகிறேன்."
வால்டர் வின்செல் (Walter Winchell) என்பவர் சொன்ன வார்த்தைகளும், உண்மையான நண்பர்களை அடையாளம் காட்டுகின்றன: "உலகம் முழுவதும் ஒருவரைவிட்டு வெளியேறும் வேளையில், உள்ளே நுழைபவரே, உண்மையான நண்பர்."

இவ்விரு கருத்துகளுக்கும் வடிவம் தருவதுபோல், யோபின் நண்பர்கள், நடந்துகொண்டனர். யோபைச் சூழ்ந்திருந்த, உடைமைகள், உறவுகள், உடல்நலம் என்ற அனைத்தும் அவரைவிட்டு விடைபெற்ற வேளையில், எலிப்பாசு, பில்தாது, சோப்பார் என்ற மூன்று நண்பர்கள், யோபைத் தேடிவந்தனர். யோபின் துயரத்தில் பங்கேற்க, அவர்களும், அவரோடு சேர்ந்து, ஏழு பகலும், ஏழு இரவும், ஒன்றும் பேசாமல், தரையில் அமர்ந்திருந்தனர். அந்த முதல் ஏழு நாட்கள் நிகழ்ந்தவை அனைத்தும், ஆழமான, உண்மையான நட்புக்கு இலக்கணமாய் அமைந்தது. ஏழுநாள்களுக்குப் பின், அவர்கள் மூவரும், நண்பர்கள் என்ற நிலையைக் கடந்து, யோபின் நடத்தையை, வாழ்க்கையைத் தீர்ப்பிடும் நீதிபதிகளாக மாறினர்.

யோபுக்கும் அவரது நண்பர்கள் மூவருக்குமிடையே நிகழ்ந்த வழக்கில், யோபு கூறிய ஒரு சில பதிலுரைகள், ஆழமான மனித உணர்வுகளையும், அவற்றின் வழியே நாம் கற்றுக்கொள்ளக்கூடிய பாடங்களையும் எடுத்துரைக்கின்றன. 7ம் பிரிவின் ஆரம்பத்தில், மண்ணக வாழ்வே ஒரு போராட்டம் என்று யோபு விவரிக்கும் சொற்கள், துன்பத்தில் சிக்கியிருக்கும் எந்த ஒரு மனிதரும் பயன்படுத்தக்கூடிய சொற்களாக, யோபின் உள்ளத்திலிருந்து வெடித்தெழுகின்றன:
யோபு 7: 1,3-4
மண்ணில் வாழ்வது மனிதருக்குப் போரட்டந்தானே?... இன்னல்மிகு இரவுகள் எனக்குப் பங்காயின. படுக்கும்போது எப்போது எழலாம் என்பேன்! இரவோ நீண்டிருக்கும்; விடியும்வரை புரண்டு உழல்வேன்.
துன்பங்கள் நம் வாழ்வை நிரப்பும்போது, நம்மிடமிருந்து முதலில் விடைபெறுவது, உறக்கம் என்பது, நாம் அனுபவத்தில் அறிந்த உண்மை.

தன்னை குற்றவாளியாக்க முயலும் நண்பர்கள் மூவரோடும் பேசுவதால், எந்தப் பயனும் இல்லை என்பதை நன்கு உணர்ந்த யோபு, இறைவனிடமே தான் பேச விழைவதாகக் கூறுகிறார். இறைவன், தன்னைக் கொன்றாலும் பரவாயில்லை, அவரிடமே, நேருக்கு நேர், தன் வழக்கை வாதாட விழைவதாக யோபு கூறும் வார்த்தைகள், ஏலி வீசல் (Elie Weisel) என்ற யூத எழுத்தாளர் உருவாக்கிய ஒரு கதாப்பாத்திரத்தை நினைவுக்குக் கொணர்கின்றன.
நாத்சி வதை முகாமில் துன்புற்ற வீசல் அவர்கள், தன் வதைமுகாம் அனுபவத்தை அடிப்படையாகக் கொண்டு 'The Town Beyond the Wall' என்ற பெயரில், ஒரு நெடுங்கதையை வெளியிட்டார். அக்கதையில் வரும் கதாப்பாத்திரம், தன் வேதனையின் உச்சத்தில் கூறும் வார்த்தைகள் இதோ: "நான் கடவுளைப் பழித்துரைக்க விரும்புகிறேன். ஆனால், முடியவில்லை. அவருக்கெதிராக எழுந்து, என் கரங்களை மடக்கி, உயர்த்தி, அவரைக் குத்துவதுபோல் நிற்கிறேன். பற்களைக் கடித்து, வெறியுடன் கத்த நினைக்கிறேன். ஆனால், என்னையும் மீறி, நான் கத்துவது, கூச்சலிடுவது எல்லாம், செபங்களாக எழுகின்றன". தன் கோபத்தின் உச்சத்திலும் தான் கத்துவது செபமாக ஒலிக்கிறது என்று சொல்லும் அந்தக் கதாப்பாத்திரத்தின் நிலையில் உள்ள யோபு, 13ம் பிரிவில் கூறும் வார்த்தைகள் ஆழமானவை.
யோபு 13: 3,13,15-16
நான் எல்லாம் வல்லவரோடு சொல்லாடுவேன்; கடவுளோடு வழக்காட விழைகின்றேன்... என்னைப் பேசவிடுங்கள்; எனக்கு எது வந்தாலும் வரட்டும்... அவர் என்னைக் கொன்றாலும் கொல்லட்டும்; இருப்பினும், என் வழிகள் குற்றமற்றவை என எடுத்துரைப்பதில் நான் தளரேன். இதுவே எனக்கு மீட்பு ஆகலாம்.

யோபு, இறைவனோடு மேற்கொண்டது ஒரு பாசப்போராட்டம். அதைப் புரிந்துகொள்ள, ஒரு கற்பனைக் காட்சி உதவியாக இருக்கும். கிராமத்தில், திருவிழாக் கூட்டங்களில் அவ்வப்போது நாம் காணக்கூடிய ஒரு காட்சியைக் கற்பனை செய்துகொள்வோம்.
சிறுவன் ஒருவன், அப்பாவின் தோள்மீது அமர்ந்து பயணம் செய்துகொண்டிருக்கிறான். அவன் கேட்ட ஏதோ ஒன்று அவனுக்குக் கிடைக்காததால், கோபமும், அழுகையும் அவன் முகத்தில் கொந்தளிக்கின்றன. தன் கோபத்தை வெளிப்படுத்த, அவ்வப்போது, அப்பாவின் தலையில் தன் பிஞ்சுக் கையால் அடித்தவண்ணம் அங்கு அமர்ந்திருக்கிறான். அதேநேரம், அவனது மற்றொரு பிஞ்சுக்கரம், அப்பாவின் தலையை, சுற்றிவளைத்து, கெட்டியாகப் பிடித்துக்கொண்டிருக்கிறது.
ஒரு கையால், அப்பாவின் தலையை, இறுகப் பற்றிக்கொண்டு, மற்றொரு கையால் அவரை அடித்தவண்ணம் அப்பாவின் தோள்மீது அமர்ந்திருக்கும் அச்சிறுவன், நம் விவிலியத் தேடலின் நாயகன் யோபை அழகாகச் சித்திரிக்கிறான். தனக்கு நேர்ந்த துன்பங்களைப் புரிந்துகொள்ள முடியாமல், கோபம், வருத்தம், குழப்பம் என்ற உணர்வுகளுடன் போராடிக்கொண்டிருந்த யோபு, தன் கோபத்தை இறைவன் மீது காட்டினாலும், அவரை, நம்பிக்கையோடு இறுகப் பற்றிக்கொண்டிருந்தார்.

தன் கோபத்தையும், வேதனையையும், பல வழிகளில் வெளிப்படுத்திய யோபு,  19ம் பிரிவின் இறுதிப்பகுதியில் வெளிப்படுத்தும் நம்பிக்கை அறிக்கை, நமக்கு நல்லதொரு பாடமாக அமைகின்றது:
யோபு 19: 25-27
என் மீட்பர் வாழ்கின்றார் என்றும் இறுதியில் மண்மேல் எழுவார் என்றும் நான் அறிவேன். என் தோல் இவ்வாறு அழிக்கப்பட்ட பின், நான் சதையோடு இருக்கும்போதே கடவுளைக் காண்பேன். நானே, அவர் என் பக்கத்தில் நிற்கக் காண்பேன்; என் கண்களே காணும்; வேறு கண்கள் அல்ல; என் நெஞ்சம் அதற்காக ஏங்குகின்றது.
யோபு வெளியிட்ட இந்த நம்பிக்கை அறிக்கை, பல கோடி மக்களுக்கு, பல நூறு ஆண்டுகளாக நம்பிக்கை தந்துள்ளது.

உண்மை பேசுவோருக்கு அரிச்சந்திரனையும், வாரி வழங்குவோருக்கு பாரியையும் எடுத்துக்காட்டாகக் கூறுவதுபோல், பொறுமையுள்ளோருக்கு, யோபை ஒரு தலைசிறந்த எடுத்துக்காட்டாக, இலக்கணமாக நாம் சுட்டிக்காட்டி வருகிறோம். ஆனால், யோபிடம், பொறுமை அதிகம் காணப்பட்டதாகத் தெரியவில்லை. அதற்குப் பதிலாக, தான் நேரிய உள்ளம் கொண்டவர் என்றும், தன்னை வதைப்பது இறைவனே என்றாலும், அவரிடம் தன் நம்பிக்கை குறையவில்லை என்றும் யோபு கூறுவதை நாம் இந்நூலில் அடிக்கடி கேட்டுவருகிறோம். எனவே, யோபை, பொறுமையுள்ளோருக்கு, ஓர் எடுத்துக்காட்டாகச் சிந்திப்பதற்குப்பதில், நேரிய உள்ளமும், வாய்மையும் கொண்டோருக்கு, இறைவன் மீது அசைக்கமுடியாத நம்பிக்கை கொண்டோருக்கு, ஓர் எடுத்துக்காட்டாக நாம் சிந்திக்கலாம்.

தன் நண்பர்களோடு மேற்கொண்ட வழக்கின் இறுதியில், தான் குற்றமற்றவர் என்பதை மீண்டும் ஒருமுறை வலியுறுத்தி, யோபு தன் வாதங்களைக் கோர்வையாகத் தொகுத்து வழங்கி, 'தேட்ஸ் ஆல் யுவர் ஆனர்' என்று கூறி முடிக்கிறார். யோபு தொகுத்து வழங்கும் இறுதி வாதங்களை, யூத மத குரு ஹெரால்டு குஷ்னர் அவர்கள், கற்பனை செய்து, தன் சொந்த வார்த்தைகளில் அழகாக விவரித்துள்ளார்:
"நான் இறைவனிடம் மன்றாடிக் கேட்டுவிட்டேன். நான் மாசற்றவன் என்பதை பல வழிகளில் அறிக்கையிட்டுவிட்டேன். இறைவன் இவ்வாறு செய்வதற்கு காரணத்தையாவது சொல்லவேண்டும் என்று கேட்டுவிட்டேன். ஆனால், இதுவரை இறைவனிடமிருந்து எந்த பதிலும் இல்லை. எனவே, இனி நான் கெஞ்சப் போவதில்லை. இறைவனின் பெயரால், மீண்டும் நான் கூறுகிறேன். நான் மாசற்றவன். இறைவனுக்கோ, வேறு யாருக்கோ எதிராக நான் எதுவும் செய்யவில்லை. நான் சொல்வது பொய் என்றால், என் இறைவன் இங்கு நேரில் வந்து எனக்கெதிராகச் சாட்சி சொல்லட்டும். அவ்வாறு அவரால் சாட்சி சொல்ல முடியவில்லையென்றால், நான் மாசற்றவன் என்பதைச் சொல்வதற்காகிலும் இறைவன் இங்கு வரட்டும்" என்று சவால் விடும் வண்ணம், யோபு தன் வாதங்களை முடிக்கிறார். அவர் விரும்பிக் கேட்டதுபோலவே, இறைவன் அங்கு வருகிறார். தன்னைச் சந்திக்க வந்த இறைவனிடம், யோபு சரணடைகிறார். இறைவன் யோபை மீண்டும் ஒருமுறை இன்னும் கூடுதலாக, நிறைவாக ஆசீர்வதிக்கிறார். இவ்வாறு, யோபு நூல் நிறைவு பெறுகிறது.

அத்தனை அழிவுகளின் நடுவிலும் ஆண்டவரை முழுமையாக நம்பிய யோபின் முழு வாழ்வையும், இறைவாக்கினர் அபக்கூக்கு நூலில் காணப்படும் இறுதி வரிகளில் சுருக்கிச் சொல்லிவிடலாம். காலத்தால் அழியாத இந்த நம்பிக்கை வரிகள் யோபு நூலில் நாம் மேற்கொண்டு வந்த தேடலை நிறைவு செய்கின்றன:
அபக்கூக்கு 3:17-19
அத்திமரம் துளிர்த்து அரும்பாமல் போயினும்,
திராட்சைக் கொடிகள் கனி தராவிடினும்,
ஒலிவ மரங்கள் பயனற்றுப் போயினும்,
வயல்களில் தானியம் விளையாவிடினும்,
கிடையில் ஆடுகள் யாவும் அழிந்து போயினும்,
தொழுவங்களில் மாடுகள் இல்லாது போயினும்,
நான் ஆண்டவரில் களிகூர்வேன்.
என் மீட்பரான கடவுளில் மகிழ்ச்சியுறுவேன்.
ஆண்டவராகிய என் தலைவரே என் வலிமை.
அவர்... உயர்ந்த இடங்களுக்கு என்னை நடத்திச் செல்வார்.


No comments:

Post a Comment