Mayday!
Mayday! A Distress Call To Prayer
இமயமாகும் இளமை - "மேடே" அவசர
உதவியும், மே தினமும்
கடல் நடுவே, ஆபத்தில்
சிக்கிய கப்பல்களிலிருந்து அவசர உதவி வேண்டி எழுப்பப்படும் குறியீட்டுச் செய்திக்கு, 'மேடே' (Mayday) என்று பெயர். "மேடே,மேடே,மேடே"
என்று மும்முறை ஒலிக்கும் இச்சொல்லைத் தொடர்ந்து, எந்தக் கப்பல்
எவ்விடத்தில், எவ்வகை ஆபத்தில் சிக்கியுள்ளதென்ற விவரங்கள் ஒலிவடிவத்தில்
தொடரும்.
மே மாதம் முதல் நாள் கொண்டாடப்படும் தொழிலாளர் நாளுக்கு, 'மே டே' (May Day) அதாவது, மே தினம்
என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது. இதற்கு, அகில உலக தொழிலாளர் நாள், தொழில்
நாள், என்று
வேறு சில பெயர்களும் உண்டு.
1886ம் ஆண்டு, மே மாதம் முதல் நாள், அமெரிக்க
ஐக்கிய நாட்டின் சிகாகோ மாநகரில் தொழிலாளர்கள் தங்கள் உரிமைகளுக்காகப் போராடத் துவங்கியதை
இந்நாள் நினைவு கூறுகிறது. குழந்தைத் தொழிலை ஒழிக்கவும், ஒரு நாளில் 16
மணி நேரங்கள் உழைப்பதற்கு கட்டாயப்படுத்தப்பட்ட தொழிலாளர்கள், தங்கள்
பணி நேரத்தை 8 மணி நேரமாக குறைக்கவும், நீதியான ஊதியம் வழங்கவும் கோரி, இந்தப்
போராட்டங்கள் நிகழ்ந்தன. இந்த போராட்டத்தில் ஒரு சில தொழிலாளர்கள் உயிரிழக்க
நேர்ந்தது.
ஒரு சில நாடுகளில், மே தினத்தையும், வசந்தக்
காலத்தையும் இணைத்து விழா கொண்டாடி வருகின்றனர். தொழிலாளர் நாளையும், வசந்த
காலத்தையும் இணைத்து சிந்திக்கும்போது, ஒரு சிலருடைய கூற்றுகள் நினைவில் எழுகின்றன.
"எல்லா மலர்களையும் நீங்கள் வெட்டிவிடலாம், ஆனால், வசந்தம்
வருவதை உங்களால் தடுக்கமுடியாது" என்று சொன்னவர், பாப்லோ நெருடா
(Pablo
Neruda)
"இறைவன் நம்மிடம் விற்பனை செய்யும் ஒவ்வொரு பொருளுக்கும்
நாம் அளிக்கும் விலையே நமது உழைப்பு" என்று சொன்னவர், லியோனார்தோ தா
விஞ்ச்சி (Leonardo da Vinci)
'மே டே' அதாவது 'மே தினம்' என்ற தொழிலாளர்
நாளையும்,
கடல் நடுவே ஆபத்தில் சிக்கியுள்ள கப்பல்கள் பயன்படுத்தும் 'மேடே' எச்சரிக்கை
குறியீட்டையும் இளையோருடன் இணைத்துச் சிந்திக்க முயல்வோம்.
தங்கள் உழைப்பிற்கேற்ற ஊதியம் கிடைக்காமல், இன்றும், அநீதமாகச்
சுரண்டப்படும் இளையோர், விழித்தெழுந்து, தங்கள் உரிமைகளை
நிலைநாட்டும் துணிவும், தெளிவும் பெற, மே தினம், ஓர் அழைப்பாக இருக்கட்டும்!
நம்பிக்கை என்ற கலங்கரை விளக்கு இல்லாமல், பிரச்சனைகள்
என்ற நடுக்கடலில் தத்தளிக்கும் இளையோர், 'மேடே' என்ற அவசர
உதவிச் செய்திகளை குறிப்பிட்ட நேரத்தில், தகுந்த இடங்களுக்கு அனுப்பி, உதவிகள்
பெறுவார்களாக!
‘At the
pool of Bethesda ’
– Nathan Green
புதுமைகள் – முப்பத்தெட்டு ஆண்டு வேதனையின்
முடிவு - 1
யோவான்
நற்செய்தியின் மூன்றாவது புதுமையில் இன்று நம் தேடல் பயணம் ஆரம்பமாகிறது. முப்பத்தெட்டு
ஆண்டுகளாக நோயுற்றிருந்த ஒருவரை இயேசு குணமாக்கிய புதுமை, யோவான் நற்செய்தியின்
5ம் பிரிவில் கூறப்பட்டுள்ளது. இப்புதுமையை இரு பகுதிகளாக பிரிக்கலாம். 5ம்
பிரிவின் முதல் இறைவாக்கியம் துவங்கி, 9வது இறைவாக்கியம் முடிய இயேசு நோயுற்றவரைக்
குணமாக்கும் நிகழ்வு பதிவாகியுள்ளது. 10வது இறைவாக்கியம் முதல் 18வது இறைவாக்கியம்
முடிய, இப்புதுமை ஓய்வு நாளில் நிகழ்ந்ததால் உருவான பிரச்சனை பதிவு
செய்யப்பட்டுள்ளது.
இப்புதுமையை
விவரிக்கும் முதல் பகுதிக்குச் செவிமடுப்போம்.
யோவான்
5 1-9
யூதர்களின்
திருவிழா ஒன்று வந்தது. இயேசுவும் எருசலேமுக்குச் சென்றார். எருசலேமில் ஆட்டு வாயிலுக்கு
அருகில் ஐந்து மண்டபங்கள் கொண்ட குளம் ஒன்று உண்டு. எபிரேய மொழியில் பெத்சதா என்பது
அதன் பெயர். இம்மண்டபங்களில் உடல்நலமற்றோர், பார்வையற்றோர், கால் ஊனமுற்றோர், முடக்குவாதமுற்றோர் ஆகியோர் திரளாய்ப்படுத்துக்கிடப்பர்.
(இவர்கள் குளத்து நீர் கலங்குவதற்காகக் காத்திருப்பார்கள். ஏனெனில் ஆண்டவரின் தூதர்
சில வேளைகளில் அக்குளத்தினுள் இறங்கித் தண்ணீரைக் கலக்குவார். தண்ணீர் கலங்கியபின்
முதலில் இறங்குபவர் எவ்வித நோயுற்றிருந்தாலும் நலமடைவார்.)
முப்பத்தெட்டு
ஆண்டுகளாய் உடல்நலமற்றிருந்த ஒருவரும் அங்கு இருந்தார். இயேசு அவரைக் கண்டு, நெடுங்காலமாக அவர் அந்நிலையில் இருந்துள்ளதை அறிந்து, "நலம்பெற விரும்புகிறீரா?" என்று அவரிடம் கேட்டார். "ஐயா, தண்ணீர் கலங்கும் போது என்னைக் குளத்தில் இறக்கிவிட ஆள் இல்லை.
நான் போவதற்கு முன் வேறு ஒருவர் இறங்கிவிடுகிறார்" என்று உடல் நலமற்றவர் அவரிடம்
கூறினார். இயேசு அவரிடம்,
"எழுந்து உம்முடைய படுக்கையை எடுத்துக் கொண்டு நடந்து செல்லும்" என்றார்.
உடனே அம்மனிதர் நலமடைந்து தம்முடைய படுக்கையை
எடுத்துக் கொண்டு நடந்தார்.
5ம்
பிரிவின் அறிமுக வரிகளில், நற்செய்தியாளர் யோவான், இப்புதுமை நிகழந்த இடத்தையும், சூழலையும்
ஒரு சில விவரங்களோடு வர்ணிக்கிறார். 'யூதர்களின் திருவிழா', 'ஆட்டு வாயில்' 'பெத்சதா' என்ற குளம் என்று இங்கு கூறப்பட்டுள்ள விவரங்கள் நம் கவனத்தை ஈர்க்கின்றன.
யோவான் நற்செய்தியில் பல்வேறு இடங்களில் திருவிழாக்களைப் பற்றிய குறிப்புகள் இடம்பெற்றுள்ளன.
இப்புதுமையின் துவக்கத்தில், 'யூதர்களின் திருவிழா ஒன்று' என பொதுப்படையாகக் கூறும் யோவான், 6ம் பிரிவில், 'யூதருடைய பாஸ்கா விழா'வையும் (யோவான் 6:4), 7ம் பிரிவில், 'யூதரின் கூடார விழா'வையும் (யோவான் 7:2) குறிப்பிட்டுள்ளார்.
அடுத்து
நம் கவனத்தை ஈர்ப்பது, 'ஆட்டு வாயில்' என்ற சொற்றொடர். எருசலேம் நகரம்
மதில்களால் சூழப்பட்ட ஒரு நகரம். இந்த மதில்களில் அமைக்கப்பட்டுள்ள பத்து வாயில்களைப்
பற்றி, இறைவாக்கினர் நெகேமியா நூலின் 3ம் பிரிவில்
விவரங்கள் கூறப்பட்டுள்ளன. ஆட்டு வாயில், மீன் வாயில், பழைய வாயில், பள்ளத்தாக்கு வாயில், குப்பைமேடு வாயில், ஊருணி வாயில், தண்ணீர் வாயில், குதிரை வாயில், கீழ்வாயில், கணக்கர் வாயில் என்ற இந்த பத்து
வாயில்களில், யோவான் நற்செய்தியில் கூறப்பட்டுள்ள 'ஆட்டு வாயில்' கூடுதலாகப் புகழ்பெற்றது.
எருசலேம்
கோவிலில் பலியிடப்பட்ட ஆடுகள், இந்த வாயில் வழியே கொண்டுசெல்லப்பட்டதால், இதற்கு 'ஆட்டு வாயில்' என்ற பெயர் சூட்டப்பட்டது. இந்த வாயில் வழியே இயேசு எருசலேமுக்குள்
நுழைந்தார் என்று நற்செய்தியாளர் யோவான் குறிப்பிடுவது, பொருள் பொதிந்த ஒரு கூற்றாக விளங்குகிறது. திருமுழுக்கு யோவான்
இயேசுவை அறிமுகப்படுத்துவதற்கு, "இதோ! கடவுளின் ஆட்டுக்குட்டி"
(யோவான்
1:36) என்ற
சொற்களைக் கூறினார் என, தன் நற்செய்தியின் முதல் பிரிவில்
கூறிய யோவான், இப்போது மீண்டும் அந்த எண்ணத்தை வலியுறுத்தும்
வண்ணம், 'ஆட்டு வாயில்' வழியே இயேசு எருசலேம் நகருக்குள் சென்றதை பதிவு செய்துள்ளார். இயேசுவும், எருசலேமில் தன்னையே பலியாகத் தரப்போவதை யோவான் மறைமுகமாகச் சுட்டிக்காட்டுகிறார்.
பலியாகப்போகும் ஆட்டுக்குட்டியாக இயேசுவை உருவகித்து, இறைவாக்கினர் எசாயா கூறிய சொற்கள் நினைவில் நிழலாடுகின்றன:
எசாயா
53: 7-8
அவர்
ஒடுக்கப்பட்டார்; சிறுமைப்படுத்தப்பட்டார்; ஆயினும், அவர் தம் வாயைத் திறக்கவில்லை; அடிப்பதற்கு இழுத்துச் செல்லப்பட்ட ஆட்டுக்குட்டிபோலும் உரோமம் கத்தரிப்போர்
முன்னிலையில் கத்தாத செம்மறி போலும் அவர் தம் வாயைத் திறவாதிருந்தார். அவர் கைது செய்யப்பட்டு, தீர்ப்பிடப்பட்டு, இழுத்துச் செல்லப்பட்டார்.
இந்தப்
புதுமையின் அறிமுக வரிகளில், “எருசலேமில் ஆட்டு வாயிலுக்கு அருகில்
ஐந்து மண்டபங்கள் கொண்ட குளம் ஒன்று உண்டு. எபிரேய மொழியில் பெத்சதா என்பது
அதன் பெயர்” என்று யோவான் விவரித்துள்ளார். 'பெத்சதா' என்ற எபிரேயப் பெயர், 'பெத் ஹெஸ்தா' (Beth hesda) என்ற இரு சொற்களை இணைத்து உருவானப்
பெயர். 'பெத் ஹெஸ்தா' என்றால், 'இரக்கத்தின் இல்லம்', அல்லது, 'அருளின் இல்லம்' என்று பொருள்.
ஐந்து
மண்டபங்கள் கொண்ட 'பெத்சதா' குளத்தில்
உள்ள நீர், நோய்களைக் குணமாக்கும் சக்தி பெற்றது என்பது, அன்று நிலவிவந்த ஒரு நம்பிக்கை. குறிப்பாக, "ஆண்டவரின் தூதர் சில வேளைகளில் அக்குளத்தினுள்
இறங்கித் தண்ணீரைக் கலக்குவார். தண்ணீர் கலங்கியபின் முதலில் இறங்குபவர் எவ்வித நோயுற்றிருந்தாலும்
நலமடைவார்" (யோவான் 5:3-4) என்ற நம்பிக்கை இருந்ததால், அக்குளத்தைச் சுற்றி நூற்றுக்கணக்கான மக்கள் காத்திருந்தனர் என்று
யோவான் இச்சூழலை விவரிக்கின்றார். இவ்வரிகளை வாசிக்கும்போது, லூர்து நகர், அன்னை மரியாவின்
திருத்தலம், வேளாங்கண்ணி, ஆரோக்கிய அன்னை திருத்தலம்
ஆகியவை நினைவில் நிழலாடுகின்றன. இத்திருத்தலங்களில் உள்ள தண்ணீர், குணமளிக்கும் சக்தி
பெற்றது என்ற நம்பிக்கையுடன் ஆயிரமாயிரம் மக்கள், நோயுற்றோரை
இத்திருத்தலங்களுக்கு அழைத்துச் செல்வது, இன்றும் நிகழும் பழக்கம்.
குணமளிக்கும்
சக்தி கொண்ட நீருள்ள 'பெத்சதா' குளத்தருகே
இயேசு சென்றார். அக்குளத்தைச் சுற்றி கூடியிருந்த நோயுற்றோரைக் கண்டதும், இயேசுவின் உள்ளம் கட்டாயம் வேதனையுற்றிருக்கும். புகழையும், பெருமையையும் இயேசு தேடியிருந்தால், அங்கிருந்த அனைவரையும் ஒரே நொடியில் இயேசு குணமாக்கியிருக்கலாம்.
“இனி இந்தக் குளத்தை நாடி யாரும் வரத்தேவையில்லை. எல்லாரும்
நலமுடன் வீடு திரும்புங்கள்” என்று இயேசு அறிவித்திருந்தால், அன்று எருசலேமில் ஒரு பெரும் அற்புதம் உருவாகியிருக்கும். அதற்குப்பின், இயேசுவைத் தொடரும் மக்களின் கூட்டம் கட்டுக்கடங்காமல் சென்றிருக்கும்.
உலகப்
புகழைத் தேடுவோரின் இத்தகைய வழிகளுக்கு நேர் மாறாகச் சிந்திக்கும் மனம் கொண்டவர் இயேசு.
எனவே, அவர், அன்று, அங்கிருந்த நூற்றுக்கணக்கான நோயாளிகளில் ஒருவரிடம் மட்டும் செல்கிறார்.
காரணம், அம்மனிதர் முப்பத்தெட்டு ஆண்டுகளாக நோயுற்றிருந்தார்.
அதுமட்டுமல்ல, அவருக்கு உதவிகள் செய்ய யாரும் இல்லாத நிலையில்
அவர் அங்கு கிடந்தார்.
38
ஆண்டுகள் என்ற
எண்ணிக்கையைச் சற்று கற்பனை செய்து பார்ப்போம். இயேசு இவ்வுலகில் வாழ்ந்தது 33 ஆண்டுகள்
என்பது, பொதுவானக் கருத்து. எனவே, இந்த மனிதர், இயேசு பிறப்பதற்கு முன்னதாகவே, பெத்சதா
குளத்தருகே விடப்பட்டார் என்பதை உணர்கிறோம்.
38 ஆண்டுகள், அதாவது, 13,870க்கும் மேற்பட்ட நாள்கள், அம்மனிதர்
அந்தக் குளத்தருகே கிடத்தப்பட்டிருந்தார். உதவிக்கு யாரும் இல்லை என்று கூறப்பட்டிருப்பதால், அவர் படுத்திருந்த இடமே,
அவரது உறைவிடமாக மாறியிருக்க
வேண்டும். அங்கிருந்தபடியே, அக்குளத்தில் சலனங்கள் ஏற்படுவதை
அவர் ஆயிரமாயிரம் முறைகள் பார்த்திருக்கக் கூடும். அந்த சலனங்களைத் தொடர்ந்து, குளத்தில் முதலில் இறங்கிய பல நூறு பேர் குணமடைந்து வெளியேறியதையும்
அவர் பார்த்திருப்பார். ஒவ்வொரு முறையும் ஒருவர் குணம் பெறும் வேளையில், அடுத்து அதுபோல் தனக்கும் நிகழும் என்ற எதிர்பார்ப்புடன், நம்பிக்கையுடன் அவர் அங்கு 38 ஆண்டுகளைக் கழித்தார்.
அவரது
நெடுங்கால நோயை இயேசு அறிந்திருந்தார் என்ற குறிப்பை நற்செய்தியாளர் யோவான் வழங்குகிறார்.
அந்த 38 ஆண்டுகளில், அவர் நம்பிக்கை இழக்காமல் காத்திருந்ததையும்
இயேசு அறிந்திருக்கவேண்டும். எனவே, நலம் பெறவேண்டும் என்ற ஒரே நோக்கத்துடன்
அக்குளத்தைச் சுற்றி காத்திருந்த நூற்றுக்கணக்கான நோயாளிகளில், இயேசு அவரிடம் சென்றார். "நலம்பெற விரும்புகிறீரா?" என்று அவரிடம் கேட்டார்.
38 ஆண்டுகளாக
நோயுற்று படுத்திருக்கும் ஒருவரிடம், "நலம்பெற விரும்புகிறீரா?" என்று இயேசு கேட்பது, ஆச்சரியமாக உள்ளது. பசியுடன் சோர்ந்து
கிடக்கும் ஒருவரிடம் சென்று, "சாப்பிட விரும்புகிறீரா?" என்று கேட்பதைப்போல் இக்கேள்வி அமைந்துள்ளது. இயேசு இவ்விதம் கேட்டது, ஒரு சில விரிவுரையாளர்களின் சிந்தனைகளைத் தூண்டியுள்ளது. இவர்கள்
கூறும் விளக்கங்களையும், இயேசுவின் இக்கேள்விக்கு நோயாளி
அளித்த பதிலையும், இந்த உரையாடலைத் தொடர்ந்து நிகழ்ந்த புதுமையையும், நாம் அடுத்தத்
தேடலில் சிந்திப்போம்.
No comments:
Post a Comment