Ignatius
wounded at the Battle of Pamplona
இமயமாகும் இளமை - நினைத்ததை நிறைவேற்றும்
"நெருப்பானவர்"
ஸ்பெயின்
நாட்டில், பாம்பலோனா கோட்டையைக் காப்பாற்ற, 28 வயதான இளம் வீரர் இனிகோ முழு மூச்சுடன்
போராடினார். பிரெஞ்சு படையினரின் பீரங்கி குண்டு அவரது கால்களைச் சிதைத்தது. அவர் காட்டிய
வீரத்தையும், விசுவாசத்தையும் கண்ட பிரெஞ்சு வீரர்கள், போர் கைதியான அவரை மரியாதையுடன் நடத்தினர். கால்களைச் சிதைத்த பீரங்கி
குண்டு, அவரை மரணத்தின் வாயிலுக்கு அழைத்துச் சென்றது.
இறக்கும் நிலையில் இருப்போருக்கு வழங்கப்பட்ட அருளடையாளத்தை பெற்ற இளையவர் இனிகோ, அற்புதமாகக்
குணமடைந்தார்.
அவரது
காலில் செய்யப்பட்ட அறுவைச் சிகிச்சையில், ஓர் எலும்பு சரியாகப் பொருத்தப்படவில்லை.
மீண்டும் அரசவைக்குச் செல்லும்போது, இறுக்கமான கால் சட்டையும், இறுக்கமான காலணிகளும் அணியும் வேளையில், கால் எலும்பு கோணலாக இருப்பது வெளியே தெரியும் என்பதை இளையவர் இனிகோ
உணர்ந்தார். எனவே, மீண்டும் ஓர் அறுவைச் சிகிச்சைக்குத் தன்னையே
உட்படுத்திக்கொண்டார்.
மயக்க
மருந்துகள் ஏதுமின்றி நடைபெற்ற அந்த அறுவைச் சிகிச்சையில், அவரது கால் எலும்பு மீண்டும் முறிக்கப்பட்டு, இணைக்கப்பட்டது. தன்
வெளித்தோற்றத்தில், எவ்விதக் குறையும் இருக்கக்கூடாது என்பது மட்டுமே அவரது ஒரே
எண்ணமாக இருந்ததால், தான் எண்ணியதை நிறைவேற்ற, எத்தனை வேதனைகளையும் சந்திக்க அவர் தயாராக
இருந்தார். நினைத்ததை நிறைவேற்றும் தீர்க்கமானச் சிந்தனை, இளையவர் இனிகோவின்
வாழ்வில், வேறு வழிகளில் உதவியாக இருந்தது. அரசவை வாழ்வையும், உலக வாழ்வையும் முற்றிலும் துறந்து, 'இறைவனின் அதிமிக மகிமைக்காக' உழைக்க அவர் எடுத்த தீர்மானம், ஒரு துறவு சபையை உருவாக்கியது.
பல்வேறு
தடைகளையும், எதிர்ப்புக்களையும் தாண்டி, தன் 49வது வயதில், இயேசு சபையை நிறுவினார், இக்னேசியஸ். அச்சபையின் தலைவராக 15 ஆண்டுகள்
பணியாற்றி, 1556ம் ஆண்டு, ஜூலை 31ம் தேதி, தன் 64வது வயதில் இறைவனடி சேர்ந்தார்.
"நெருப்பானவர்" (the fiery one) என்று பொருள்படும் ‘இக்னேசியஸ்’ என்ற இயற்பெயர் கொண்ட இப்புனிதர், நினைத்ததை நிறைவேற்றிய நெருப்பாக
வாழ்ந்தவர். லொயோலாவின் புனித இக்னேசியஸ் திருநாள், ஒவ்வோர்
ஆண்டும், ஜூலை 31ம் தேதி கொண்டாடப்படுகிறது.
Jesus and
the person born blind – John 9
புதுமைகள் : பார்வை பெறுதலும், இழத்தலும் – பகுதி 4
ஜூலை
27, கடந்த வெள்ளியன்று ஏற்பட்ட முழுமையான சந்திரக் கிரகணம், உலகின் அனைத்து நாடுகளிலும் காணப்பட்டது. 100 நிமிடங்களுக்கு மேலாக
நீடித்த அந்த கிரகணத்தைக் குறித்து அறிவியல் விளக்கங்கள் வழங்கப்பட்டன. இந்த விளக்கங்கள்
போதாதென்று, ஒவ்வொரு நாட்டிலும் பாரம்பரியக் கதைகளும், விளக்கங்களும் வலம்வந்தன. இந்த விளக்கங்களோடு ஒரு சில
மூடநம்பிக்கைகளும் கலந்து வெளிவந்தன.
சந்திர
கிரகணத்தின்போது, குடும்பத்தின் தலைமகன் ஒருவரை பலிகொடுத்தால், நினைத்தது
அனைத்தும் நிறைவேறும் என்று மந்திரவாதி ஒருவர் கூறியதைக் கேட்டு, இந்தியாவின் ஆந்திர
மாநிலம், கிருஷ்ணா மாவட்டம், எலவந்தல் கிராமத்தில், சந்திரக்
கிரகண இரவன்று, தலைமகனாய்ப் பிறந்த தங்கள் நண்பனை நரபலி
கொடுக்க இளையோர் குழுவொன்று முயன்றது என்ற செய்தி, நம்மை அதிர்ச்சிக்கு உள்ளாக்குகிறது.
அறிவியலில் வளர்ந்துவிட்டாலும், இத்தகைய விபரீதமான மூட நம்பிக்கைகள்
நம்மிடையே இன்னும் உலவி வருவதைக் கண்டு வேதனையடைகிறோம்.
நம்மைச்
சுற்றி நிகழும் அனைத்திற்கும் காரண, காரியங்களைத் தேடுவது, மனித இயல்பு. காரண, காரியங்கள், தெளிவாக, வெளிப்படையாகத் தெரியாதபோது, நாமே அவற்றை
உருவாக்கவும் முயல்கிறோம். அவ்வாறு, நாம் உருவாக்கும் கருத்துக்கள், பலவேளைகளில்
மூடநம்பிக்கைகளை நம்மீது திணிக்கின்றன. குறிப்பாக, துயரமான நிகழ்வுகளைக் காணும்போது, நாம் தேடும் காரணங்கள், மூடநம்பிக்கை சார்ந்த கேள்விகளாக
மாறுகின்றன. அத்தகையதொரு கேள்வி, சீடர்களிடமிருந்து எழுந்தது.
"ரபி, இவர் பார்வையற்றவராய்ப் பிறக்கக்காரணம் இவர் செய்த பாவமா? இவர் பெற்றோர் செய்த பாவமா?" (யோவான் 9:2) என்று சீடர்கள் கேட்ட கேள்வியில், அச்சீடர்கள், தங்கள் எண்ணங்களில், ஏற்கனவே எழுதி வைத்திருந்த தீர்ப்புகளும்
மறைந்திருந்தன. சீடர்களைப் பொருத்தவரை, பார்வையற்றவர் தன்
முன்பிறவியில் பாவம் செய்திருக்கவேண்டும், அல்லது, அவரது பெற்றோர் பாவம் செய்திருக்கவேண்டும் என்ற தீர்ப்புகள் எழுதப்பட்டிருந்தன.
இந்தக் கேள்வியை இன்னும் ஆழமாகச் சிந்தித்தால்,
மக்கள் படும் துன்பங்கள்,
இறைவன் வழங்கும் தண்டனைகளே என்ற தீர்ப்பையும் சீடர்கள் வழங்கியிருந்தனர்.
பார்வையற்று
பிறந்ததால், ஏற்கனவே துன்பத்தில் வாழ்ந்த ஒருவரை, மேலும் துன்புறுத்தும் வண்ணம், சீடர்கள், அவரை நோக்கி, தங்கள் கண்டன
விரல்களைச் சுட்டிக்காட்டினர். இயேசுவோ, சீடர்களின் கண்டனப் பார்வைகளை, பார்வையற்றவர் பக்கமிருந்து விலக்கி, மேல்நோக்கித் திருப்பினார். சீடர்களின் கவனத்தை, கடவுள் மீது திருப்பினார். அவர்களது கண்ணோட்டங்களை மாற்றும் வண்ணம்
இயேசு அவர்களுக்குப் பதில் தருகிறார். "இவர் செய்த பாவமும் அல்ல; இவர் பெற்றோர் செய்த பாவமும் அல்ல; கடவுளின் செயல் இவர் வழியாக வெளிப்படும்பொருட்டே இப்படிப்
பிறந்தார். பகலாய் இருக்கும் வரை என்னை அனுப்பியவரின் செயலை நாம் செய்ய வேண்டியிருக்கிறது.
இரவு வருகிறது; அப்போது யாரும் செயலாற்ற இயலாது.
நான் உலகில் இருக்கும்வரை நானே உலகின் ஒளி" (யோவான் 9: 3-5) என்று இயேசு, தெளிவாக,
திட்டவட்டமாகக் கூறுகிறார்.
இயேசுவின்
இக்கூற்றினை மேலோட்டமாகக் காணும்போது, கூடுதல் பிரச்சனைகளை உணர்கின்றோம்.
"கடவுளின் செயல் இவர் வழியாக வெளிப்படும்பொருட்டே
இப்படிப் பிறந்தார்" என்று இயேசு கூறும் சொற்கள், கடவுளை, மேன்மேலும், இரக்கமற்றவராகச் சித்திரிக்கின்றன. 'தன் அற்புதமானச் செயல்கள் வெளிப்படுவதற்காக, கடவுள், இம்மனிதரை,
பிறவியிலேயே
பார்வையற்றவராகப் பிறக்கச் செய்தார்' என்ற கொடூரமானக் கருத்தை, இயேசுவின் கூற்று வெளிப்படுத்துவதுபோல்
உள்ளது.
இயேசுவின்
இக்கூற்று, பல விவிலிய ஆய்வாளர்களையும், விரிவுரையாளர்களையும் சிந்திக்கத் தூண்டியுள்ளது. அவர்கள் தங்கள்
ஆய்வுகளின் வழியே தொகுத்துக் கூறியுள்ளவற்றைப் புரிந்துகொள்ள முயல்வோம். இக்கூற்றின்
முழுப்பொருளைப் புரிந்துகொள்வதற்கு, நற்செய்திகள் எழுதப்பட்ட மொழி, அவை எழுதப்பட்ட முறை ஆகியவற்றை ஓரளவு புரிந்துகொள்ளவேண்டும்.
புதிய
ஏற்பாட்டின் அனைத்து நூல்களும், கிரேக்க மொழியில், கையெழுத்து வடிவத்தில்
எழுதப்பட்டன. இந்தக் கையெழுத்து வடிவங்களில்,
சொற்கள் அனைத்தும்,
கோர்வையாக, எவ்வித இடைவெளியும் இல்லாமல், முற்றுப்புள்ளி, கால்புள்ளி போன்ற குறியீடுகள் ஏதுமின்றி
எழுதப்பட்டன.
இந்தக்
கையெழுத்து வடிவங்களை, பிற மொழிகளில் மொழிபெயர்த்தவர்கள், அந்தந்த மொழியில் புரிந்துகொள்ளும் வகையில், கால்புள்ளி, முற்றுப்புள்ளி ஆகிய குறியீடுகளை
புகுத்தினர். சிலர், தாங்கள் கூறுவதை இன்னும் தெளிவாக்கும்
முயற்சியில், சொற்களை முன்னும், பின்னுமாக மாற்றியுள்ளனர்;
வேறு சிலர், கூடுதலாக சில சொற்களையும் இணைத்துள்ளனர்.
இவ்விதம்
பல நூற்றாண்டுகளாக உருவான பல்வேறு மாற்றங்களை, விவிலியம் முழுவதும் காணலாம். யோவான்
நற்செய்தி, 9ம் பிரிவில், இயேசு தன் சீடர்களுக்குக் கூறம் பதிலுரையில் இத்தகைய
மாற்றங்கள் இடம்பெற்றுள்ளன என்று விவிலிய விரிவுரையாளர்கள் விளக்கம் அளித்துள்ளனர்.
மொழிபெயர்ப்பு முயற்சிகளால் உருவான மாற்றங்களை நீக்கிவிட்டு, முதல் வடிவத்தில் இயேசு கூறிச் சொற்களை இணைத்துப் பார்த்தால், அவை பின்வருமாறு இருக்கும் என்று ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.
"இவர் செய்த பாவமும் அல்ல; இவர் பெற்றோர் செய்த பாவமும் அல்ல; கடவுளின் செயல் இவர் வழியாக வெளிப்படும்பொருட்டு, என்னை அனுப்பியவரின்
செயலை, பகலாய் இருக்கும் வரை, நாம் செய்ய வேண்டியிருக்கிறது" என்பதை, இயேசு கூறும் பதிலாகக்
காணும்போது, நமக்கு கூடுதல் தெளிவு பிறக்கிறது.
கேள்வி
கேட்ட சீடர்களிடம் இயேசு கூறிய பதிலை நாம் எளிதான சொற்களில், இவ்வாறு கூறலாம்: “இவருக்கு ஏற்பட்டுள்ள துன்பம்,
யாரால், எதனால் ஏற்பட்டதென்று ஆய்வு செய்வது
முக்கியமல்ல. பார்வையற்ற அவர் பார்வை பெற வேண்டும். அதன் வழியாக, கடவுளின் செயல் வெளிப்பட
வேண்டும். அதற்கான வழியைச் சிந்திப்போம்” என்பதே, இயேசு சீடர்களுக்குத் தந்த பதில்.
துன்பங்களுக்கு
நாம் தரக்கூடிய பதில், இயேசுவின் இந்தப் பதிலைப்போல் அமைந்தால், துன்பங்களை எதிர்கொள்ளும் பக்குவத்தை நாம் பயிலமுடியும். இதையொத்த
எண்ணங்களை, யூத மத குரு ஹெரால்டு குஷ்னர் அவர்கள்,
தான் வெளியிட்டுள்ள நூல்களில் பலமுறை
கூறியுள்ளார். அவரைப்
பொருத்தவரை, கடவுள் துன்பங்களை தருவதில்லை, ஆனால், துன்பங்களை எதிர்கொள்ளும் பக்குவத்தை, சக்தியை அவர் தருகிறார் என்பதை, குஷ்னர்
அவர்கள் கூறிவருகிறார்.
அவர்,
2015ம் ஆண்டு, "Nine Essential
Things I've Learned About Life", அதாவது, "வாழ்வைப்பற்றி நான் கற்றுக்கொண்ட
ஒன்பது அவசியமான விடயங்கள்" என்ற தலைப்பில் ஒரு நூலை வெளியிட்டார். இந்நூலின் மூன்றாம் பிரிவு, "God
Does Not Send the Problem; God Sends Us the Strength to Deal with the
Problem", அதாவது, "கடவுள் பிரச்சனைகளை அனுப்புவதில்லை; பிரச்சனைகளைச் சமாளிக்கும் சக்தியை கடவுள் அனுப்புகிறார்" என்று தலைப்பிடப்பட்டுள்ளது.
குஷ்னர் அவர்கள், 1981ம் ஆண்டு, வெளியிட்ட “நல்லவர்களுக்கு பொல்லாதவை நிகழும்போது” என்ற நூலிலும் இக்கருத்தை, சில எடுத்துக்காட்டுகளுடன்
கூறியுள்ளார். ஒருவருக்கு ஏற்படும் மாரடைப்பை - ஹார்ட் அட்டாக்கை - எடுத்துக்காட்டாகத் தந்து, அதற்கு விளக்கமும்
சொல்கிறார் குஷ்னர். அவரது விளக்கமும், இயேசு தன் சீடர்களுக்குத்
தந்த பதிலும், ஒரே சிந்தனையோட்டத்தில் இருப்பதை நாம் உணரலாம்.
ஒரு பெரிய
நிறுவனத்தில் பணி புரியும் ஒருவருக்கு திடீரென மாரடைப்பு ஏற்படுகிறது. மருத்துவ ரீதியில்
இந்த மாரடைப்பு உண்டானதற்கு காரணங்கள் கண்டுபிடிக்கப்பட்டு, அவற்றிற்கான தீர்வுகளும்
தரப்படுகின்றன. அவர் குணமடைகிறார். அதே நேரத்தில், அவரது மனதிலும், அவரது குடும்பத்தினரின் மனங்களிலும் பல்வேறு கேள்விகள் எழுகின்றன.
எல்லாக் கேள்விகளையும் கூட்டி, கழித்து, வடிகட்டும்போது, இறுதியில் ஒரு கேள்வி அவர்களைச் சுற்றிச்
சுற்றி வருகிறது. “கடவுள் ஏன் இந்த மாரடைப்பைக் கொடுத்தார்?” என்பதுதான் அக்கேள்வி. இக்கேள்வியை, குஷ்னர் அவர்கள் எழுப்புகிறார்.
பதிலும் சொல்கிறார்.
அவருக்கு
வந்த மாரடைப்பு, கடவுளிடமிருந்து வரவில்லை. மாறாக, அந்த மாரடைப்பு கொடுத்த அதிர்ச்சியில்,
அவர் வாழ்க்கையில் மாற்றங்கள் உருவானால், அந்த மாற்றங்கள்,
கடவுளிடமிருந்து வந்தன என்று சொல்லலாம். மாரடைப்புக்கு உள்ளானவர், சிகரெட், மது, ஆகியவற்றைப் பயன்படுத்துபவராக இருந்தால், அவற்றை
நிறுத்த அவர் எடுத்த முடிவு, தன் வேலையை மட்டுமே நினைத்து வாழ்ந்தவர், தன் நலம், தன் குடும்பம் இவற்றை நினைக்க தீர்மானித்தது...
போன்ற மாற்றங்கள் கடவுளிடமிருந்து வந்தன.
ஏனெனில்,
இந்த ஒரு நிகழ்வால், அவருக்கு வாழ்வின் மையத்தை இறைவன் காட்டியுள்ளார்.
வாழ்வில் எது முக்கியம், எது முக்கியமில்லை என்பதை, இந்த
மாரடைப்பு தந்த அதிர்ச்சி, அவருக்குச் சொல்லித்தந்துள்ளது. “கடவுள் ஏன் இந்த மாரடைப்பைக் கொடுத்தார்?” என்ற கேள்வியிலேயே அவரும் அவரது குடும்பமும் தங்கிவிட்டால், வாழ்க்கையை, பொருளுள்ள முறையில் தொடர்ந்திருக்க முடியாது. ஏன் என்ற
விளக்கம் தேடும் கேள்விகளை ஒதுக்கி வைத்து விட்டு, அடுத்து
என்ன செய்து வாழ்வை மேம்படுத்தலாம் என்று சிந்திப்பது நல்லது. அதுதான், அத்துன்பத்திற்கு
அவர்கள் தரக்கூடிய ஆக்கப்பூர்வமான ஒரு தீர்வு.
யாருடைய
பாவம் என்று கேள்வி கேட்ட சீடர்களிடமும் இயேசுவின் பதில் இந்தப் பாணியில் தான் அமைந்தது.
“பார்வையற்றவருக்கு ஏற்பட்டுள்ள துன்பம்,
யாரால், எதனால் ஏற்பட்டதென்று ஆய்வு செய்வது
முக்கியமல்ல. பார்வையற்ற அவர் பார்வை பெற வேண்டும். அதன் வழியாக, கடவுளின் செயல் வெளிப்பட
வேண்டும். அதற்கான வழியைச் சிந்திப்போம்” என்று
கூறி, இயேசு செயலில் இறங்கினார். அவருக்குப் பார்வை
அளித்தார். இப்புதுமையில் நம் தேடலைத் தொடர்வோம்.