Vietnam veteran Robert (Bob) Butler Jr.
இமயமாகும் இளமை - 'எல்லாம் சரியாகிவிடும், கவலைப்படாதீர்கள்'
1965ம்
ஆண்டு, வியட்நாம் போரில், நிலத்தடி கண்ணிவெடி ஒன்றில் கால் வைத்ததால், தன் இரு கால்களையும் இழந்தவர் பாப் பட்லர் (Bob Butler) என்ற இளம் இராணுவ வீரர். 'போர் நாயகன்' (War hero)
என்ற பெருமையுடன்,
சக்கர நாற்காலியில் வீடு திரும்பினார் பாப். கால்களை இழந்தாலும், துணிவுடன் வாழ்வை எதிர்கொண்டார். சில ஆண்டுகள்
சென்று, தன் வீரத்தையும், பிறரன்பையும் நிலைநாட்ட,
மீண்டும் ஒரு வாய்ப்பு அவருக்கு உருவானது.
ஒரு நாள்
அவர் தன் வீட்டுத் தோட்டத்தில் சக்கர நாற்காலியில் அமர்ந்திருந்தபோது, அடுத்த வீட்டிலிருந்து ஒரு பெண் அலறுவதைக் கேட்டார். சக்கர நாற்காலியில்
அங்கு வேகமாகச் சென்றார். அங்கு, வீட்டின் பின்புறத்தில் இருந்த
நீச்சல் குளத்திற்கு அருகே நின்றபடி ஓர் இளம் தாய், குளத்தில்
விழுந்துவிட்ட தன் 3வயது மகளைக் காப்பாற்ற முடியாமல் கத்திக் கொண்டிருந்தார். பாப்
பட்லர் உடனே தண்ணீரில் குதித்து, குளத்தின் கீழ் மட்டத்தில் கிடந்த
சிறுமி ஸ்டெஃபனியை (Stephanie) மேலே கொண்டுவந்து, அவருக்குத் தேவையான முதல் உதவிகளைச் செய்தார். "கவலைப் படாதீர்கள், உங்கள் மகள் பிழைத்துக்கொள்வாள்" என்று அந்தத் தாய்க்கு நம்பிக்கை
அளித்தார் பாப். பேச்சு மூச்சற்று, முகமெல்லாம் நீலம் பாய்ந்திருந்த
அச்சிறுமியின் உடலிலிருந்து நீரை அகற்ற அவர் செய்த முயற்சி வெற்றி கண்டது. ஸ்டெஃபனி தன் வாய் வழியாக நீரை வெளியேற்றினார். மீண்டும் மூச்சுவிடத் துவங்கினார்.
தன் மகள்
இறந்துவிட்டதாக எண்ணி, தான் கதறிக்கொண்டிருந்தபோது, அவள் பிழைத்துக் கொள்வாள் என்ற நம்பிக்கை
அவருக்கு மட்டும் எவ்விதம் ஏற்பட்டதென்று, அந்தத் தாய் கேட்டபோது, தனக்கு வியட்நாமில் நிகழ்ந்த விபத்தைக் குறித்துச் சொன்னார்
பாப். "நான் கண்ணிவெடியால் அடிபட்டு கிடந்தபோது, அவ்வழியே வந்த ஒரு வியட்நாம் சிறுமி, என்னை அவர் கிராமத்துக்கு இழுத்துச்சென்றார். போகும் வழியெல்லாம்
அவர் என்னிடம், 'எல்லாம் சரியாகிவிடும், கவலைப்படாதீர்கள்' என்று மட்டுமே சொல்லியபடி என்னை
இழுத்துச்சென்றார். அன்று, அச்சிறுமி தந்த நம்பிக்கைதான் என்னை வாழ வைத்தது" என்று
கூறினார், இளம் வீரர், பாப் பட்லர்.
Christ
speaks with a blind man on the street
புதுமைகள் : பார்வை பெறுதலும், பார்வை குறைதலும் – பகுதி 1
'திறமை உண்டு' (Got Talent) என்ற தலைப்பில், இளையோரின் திறமைகளை மேடையேற்றி, பரிசுகள் வழங்கும் போட்டியொன்று நடைபெற்றுக்கொண்டிருந்தது. அவ்வேளையில், ஓர் இளைஞன், மற்றோர் இளம்பெண்ணை மேடைக்கு நடுவே
அழைத்துவந்தார். அந்த இளம்பெண், கறுப்புக்கண்ணாடி அணிந்திருந்தார்; பார்வைத் திறனற்றோர் பயன்படுத்தும் குச்சியுடன் நடந்துவந்தார்.
போட்டியின் நடுவர்கள் அவர்களிடம், "மன்னிக்கவும். இந்தப் போட்டியில், திறமை குறைவானவர்கள் கலந்துகொள்ளக் கூடாது" என்று கூறினர்.
உடனே அவ்விளம்பெண் நடுவர்களிடம், "கவலைப்படாதீர்கள். நான் இந்தப்
போட்டியில் கலந்துகொள்ள வரவில்லை. போட்டியில் நடனமாட வந்திருக்கும் என் தம்பியை உற்சாகப்படுத்தவே
வந்துள்ளேன்" என்று கூறிவிட்டு, தன் கையில் வைத்திருந்த கோலின்
உதவியுடன் மேடையைவிட்டு இறங்கி, பார்வையாளர்களின் முதல் வரிசையில்
அமர்ந்தார்.
மேடையில்
நின்ற இளைஞர், இசையைத் துவக்கும்படி கூறவே, இசை ஆரம்பமானது. அடுத்த ஐந்து நிமிடங்கள், அந்த இளைஞர் அற்புதமான ஒரு நடனத்தை வழங்கினார். அவர் நடனமாடி முடித்ததும், பார்வையாளர்களும், நடுவர்கள் மூவரும் ஒருசேர எழுந்துநின்று
கரவொலி எழுப்பினர். அதுவரை முன்வரிசையில் அமர்ந்திருந்த அவ்விளம்பெண், மேடையை நோக்கி ஓடினார். தான் பயன்படுத்திய குச்சியின் உதவியின்றி, அவர் மேடையை நோக்கி, விரைவாக ஓடியது, நடுவர்களையும், பார்வையாளர்களையும் அதிர்ச்சியடையச்
செய்தது.
மேடையேறிச்
சென்ற இளம்பெண், தன் தம்பியை ஆரத்தழுவி, நெற்றியில் முத்தமிட்டார். பின்னர், தான் அணிந்திருந்த கறுப்புக் கண்ணாடியை தம்பிக்கு அணிவித்து, அவர் கையில் அந்தத் தடியையும் கொடுத்தார். அப்போது, அவ்விளைஞர்,
நடுவர்களிடம், "திறமை குறைவானவர்கள் என்று யாரும் கிடையாது.
திறமை மாறுபட்டவர்களே இவ்வுலகில் இருக்கிறோம்" என்று சொல்லிவிட்டு, தன் அக்காவின் கரத்தைப் பற்றியவாறு மேடையிலிருந்து வெளியேறினார்.
திறமை
குறைவானவர்கள் என்பதை யார் தீர்மானம் செய்வது?
அனைத்துப் புலன்களும்
குறையின்றி இருப்பவர்களை, திறமை உடையவர்கள் என்றும், புலன் குறையுள்ளவர்களை, திறமையற்றவர்கள் என்றும் எளிதில் தீர்மானம்
செய்துவிடும் நமக்கு, இன்றைய விவிலியத் தேடல் ஒரு புது பாடத்தைச்
சொல்லித்தர வருகிறது.
பார்வைத்திறன்
உள்ளோர், பார்வைத்திறன் அற்றோர், பார்வைத்திறன் குறைவுடையோர் என்று, நம்மை நாமே பல வழிகளில் முத்திரை குத்திக்கொள்கிறோம். பார்வைத்திறனைப்பற்றி
பாடங்கள் பயில்வதற்கு இந்த விவிலியத் தேடலில் நம் முயற்சிகளைத் துவக்குவோம். நம் முயற்சிகளுக்கு
உதவியாக, யோவான் நற்செய்தி, 9ம் பிரிவில் கூறப்பட்டுள்ள
புதுமையில் நம் தேடல் பயணம் துவங்குகிறது.
நற்செய்தியாளர்
யோவான் பதிவுசெய்துள்ள 7 புதுமைகளில், 6வது புதுமை, பிறவியிலேயே பார்வையற்றவர் பார்வை பெறும் புதுமை. இதுவரை நாம் சிந்தித்த
முதல் 5 புதுமைகள், சராசரியாக, 5 முதல் 20 இறைவாக்கியங்களில்
கூறப்பட்டுள்ளன. ஆனால், 6வது புதுமையும், 7வது புதுமையான, இலாசரை உயிர்பெறச் செய்த புதுமையும், நீளமான பதிவுகளாக இடம்பெற்றுள்ளன. பார்வையற்றவர் பார்வை பெறும்
புதுமை, 9வது பிரிவில் 41 இறைவாக்கியங்களாகவும், இலாசர் உயிர்
பெற்றெழும் புதுமை, 11வது பிரிவில் 44 இறைவாக்கியங்களாகவும்
பதிவு செய்யப்பட்டுள்ளன.
இவ்விரு
புதுமைகளும் நீளமான பதிவுகளாக கூறப்பட்டுள்ளதற்கு ஒரு முக்கிய காரணம் உண்டு. அதாவது, இவ்விரு புதுமைகளும், வெறும் நிகழ்வுகளாக மட்டும் கூறப்படவில்லை, மாறாக, அவற்றின் வழியே, ஒளி, பார்வை, வாழ்வு, உயிர்ப்பு ஆகிய மறையுண்மைகள் குறித்து, இயேசு கூறும் படிப்பினைகளையும் இணைத்து, இவ்விரு புதுமைகளும், சொல்லப்பட்டிருப்பதால், இவை இரண்டும், இறையியல் பாடங்களாக
நம்மை அடைந்துள்ளன.
யோவான்
நற்செய்தியில் காணப்படும் 7 புதுமைகளில், 4 புதுமைகள், உடலுக்கு நலமும், உயிரும் வழங்கும் புதுமைகள். இவற்றில்
இரண்டு, விண்ணப்பங்களின் அடிப்படையில் இடம்பெறும்
புதுமைகள். அரச அலுவலர் மகன் குணம் பெறும் புதுமையும், இலாசர் உயிர் பெற்று எழும் புதுமையும், விண்ணப்பங்களின் அடிப்படையில், இயேசு ஆற்றியப் புதுமைகள். மற்ற
இரு புதுமைகளோ, யாருடைய விண்ணப்பமும் இன்றி, இயேசு தானாகவே முன்வந்து நிகழ்த்தும் புதுமைகள். பெத்சதா குளத்தருகே, 38 ஆண்டுகள் நோயுற்றிருந்த ஒருவரை இயேசு தேடிச்சென்று குணமாக்கியதை, 5ம் பிரிவில் காண்கிறோம். அதேவண்ணம், பிறவியிலேயே பார்வையற்ற ஒருவரை, இயேசு, தானாகவே முன்வந்து குணமாக்குவதை, 9ம் பிரிவில் நாம் வாசிக்கிறோம்.
இவ்விரு
புதுமைகளில், இன்னும் இரு ஒப்புமைகளையும் நாம் காணலாம். ஒன்று, இவ்விரு புதுமைகளும், ஒய்வு நாளில் நிகழ்ந்தன என்பதால், அதன் எதிரொலியாக, இயேசுவைக் குறித்து கண்டனங்கள்
எழுவதைக் காண்கிறோம். இரண்டாவதாக, இவ்விரு புதுமைகளோடு, இரு குளங்கள் இணைக்கப்பட்டுள்ளன. 38 ஆண்டுகள் நோயுற்றிருந்தவர்,
'பெத்சதா' குளத்தருகே கிடந்தார் என்று கூறப்பட்டுள்ளது.
பார்வையற்றவரை குணமாக்கும்போது, அவரை, "சிலோவாம் குளத்திற்குப் போய்க் கண்களைக்
கழுவும்படி" (யோவான் 9:7) இயேசு கூறுவதைக் காண்கிறோம்.
'பெத்சதா' என்ற எபிரேயப்
பெயர், 'பெத் ஹெஸ்தா' (Beth hesda) என்ற இரு சொற்களை இணைத்து உருவானப் பெயர். 'பெத் ஹெஸ்தா' என்றால், 'இரக்கத்தின் இல்லம்', அல்லது, 'அருளின் இல்லம்' என்று பொருள். "சிலோவாம்
என்பதற்கு 'அனுப்பப்பட்டவர்' என்பது பொருள்" (யோவான் 9:7) என்று நற்செய்தியாளரே விளக்கம் அளித்துள்ளார்.
மக்கள் எதிர்பார்த்து காத்திருந்த 'மெசியா' அதாவது, 'அனுப்பப்பட்டவர்' இயேசுவே என்பதை நினைவுறுத்த, நற்செய்தியாளர்
யோவான் 'சிலோவாம்' குளத்தைப்பற்றி இப்புதுமையில் குறிப்பிடுகிறார்.
பிறவியிலேயே
பார்வையற்ற ஒருவருக்கு இயேசு பார்வை வழங்கும் இந்தப் புதுமை, 9ம் பிரிவின் முதல் ஏழு
இறைவாக்கியங்களில் நிறைவடைகிறது. ஆனால், அப்புதுமையைத் தொடர்ந்து 34 இறைவாக்கியங்கள்
வழியாக, நற்செய்தியாளர் யோவான், உடலிலும், உள்ளத்திலும், பார்வை பெறுவது, அல்லது, இழப்பது என்பன குறித்து ஓர் இறையியல் பாடமே நடத்துகிறார்.
இப்புதுமையின் முதல் பகுதி, அதாவது, இயேசுவுக்கும், சீடருக்கும்,
நடக்கும் ஒரு சிறு உரையாடல், அதைத் தொடர்ந்து பார்வையற்றவர்
குணமாவது என்ற இரு எண்ணங்களைக் கூறுகின்றன:
யோவான்
9: 1-7
இயேசு
சென்றுகொண்டிருக்கும்போது பிறவியிலேயே பார்வையற்ற ஒருவரைக் கண்டார். “ரபி,
இவர்
பார்வையற்றவராய்ப் பிறக்கக்காரணம் இவர் செய்த பாவமா? இவர் பெற்றோர் செய்த பாவமா?” என்று இயேசுவின் சீடர்கள் அவரிடம் கேட்டார்கள். அவர் மறுமொழியாக, “இவர் செய்த பாவமும் அல்ல; இவர் பெற்றோர் செய்த பாவமும் அல்ல; கடவுளின் செயல் இவர் வழியாக வெளிப்படும்பொருட்டே இப்படிப்
பிறந்தார். பகலாய் இருக்கும் வரை என்னை அனுப்பியவரின் செயலை நாம் செய்ய வேண்டியிருக்கிறது.
இரவு வருகிறது; அப்போது யாரும் செயலாற்ற இயலாது.
நான் உலகில் இருக்கும்வரை நானே உலகின் ஒளி” என்றார். இவ்வாறு கூறியபின் அவர் தரையில் உமிழ்ந்து, உமிழ்நீரால் சேறு உண்டாக்கி, அச்சேற்றைப் பார்வையற்றவருடைய கண்களில் பூசி, “நீர் சிலோவாம் குளத்துக்குப் போய்க் கண்களைக் கழுவும்” என்றார். சிலோவாம் என்பதற்கு ‘அனுப்பப்பட்டவர்’
என்பது
பொருள். அவரும் போய்க் கழுவிப் பார்வை பெற்றுத் திரும்பி வந்தார்.
இயேசுவும்
சீடர்களும் நடந்து செல்லும்போது, பார்வையற்ற அந்த மனிதரைப் பார்க்கின்றனர்.
சீடர்களிடமிருந்து கேள்விகள் எழுகின்றன. உடலளவில் குறையுள்ள ஒருவரைப் பார்த்ததும், நம் மனதில் "ஐயோ, பாவம்" என்ற எண்ணம், உணர்வு எழும். நாம் பயன்படுத்தும் 'பாவம்' என்ற அந்தச் சொல், பரிதாப உணர்வுகளை, அல்லது, இரக்கத்தை வெளிப்படுத்தும் சொல். ஆனால், தமிழில் 'பாவம்' என்ற சொல்லுக்குள், மற்றொரு பொருளும் புதைந்திருக்கிறது. அதுதான்...
நாமோ, பிறரோ புரியும் தவறு.
யாருடைய
பாவமோ, இவர் இந்த நிலைக்கு வந்துவிட்டார் என்ற
கேள்வியைச் சீடர்கள் இயேசுவிடம் கேட்டார்கள். “ரபி,
இவர்
பார்வையற்றவராய்ப் பிறக்கக்காரணம், இவர் செய்த பாவமா? இவர் பெற்றோர் செய்த பாவமா?” - யோவான் 9: 2 என்று சீடர்கள் எழுப்பும் இக்கேள்வி, மனிதகுலத்தை வாட்டியெடுக்கும் ஒரு முக்கியமான ஐயத்தை வெளிச்சத்திற்குக்
கொணர்கிறது.
ஏன் துன்பம்? அதுவும் மாசற்றவர்கள் ஏன் துன்பப்பட வேண்டும்? என்ற கேள்விகள் மனிதகுலத்தை எப்போதும் வதைத்து வரும்
கேள்விகள் என்பதை நாம் நன்கு அறிவோம்.
துன்பம் என்பது ஒரு
பெரும் மறையுண்மை. அவ்வளவு எளிதாக அதற்கு விளக்கம் சொல்வது முடியாது.
"இவ்வுலகம்
துன்பத்தால் நிறைந்திருந்தாலும், அதை மேற்கொள்ளும் செயல்களும் இவ்வுலகில்
நிறைந்துள்ளன" என்று சொன்னவர், ஹெலன் கெல்லர் என்ற உன்னதப் பெண்மணி.
பார்க்கும் திறன், கேட்கும் திறன், பேசும் திறன் இவை எதுவும் இல்லாமல், தன் வாழ்வில் உன்னத சிகரங்களை அடைந்த ஹெலன் கெல்லர் அவர்கள், ஏன் துன்பம் என்ற கேள்விக்கு, தன் வாழ்வின் வழியே பதில் சொல்லியிருக்கிறார்.
ஏன் துன்பம்
என்ற இந்தக் கேள்விக்கு தகுந்ததொரு பதிலை, அடுத்த வாரம் விவிலியத் தேடலில் இணைந்து
தேடுவோம்.
No comments:
Post a Comment