03 July, 2018

விவிலியத்தேடல் : புதுமைகள் – கடல்மீது கடவுள் : பகுதி 2


Thomas Jefferson presenting the Draft
of the Declaration of Independence

இமயமாகும் இளமை தங்களைத் தாமே சுயமாக ஆள விழைவோருக்கு...

ஒவ்வோர் ஆண்டும், ஜூலை 4ம் தேதி, அமெரிக்க ஐக்கிய நாட்டில் சுதந்திர நாள் கொண்டாடப்படுகிறது. பிரிட்டன், மற்றும் ஏனைய நாடுகளிலிருந்து வட அமெரிக்கக் கண்டத்தில் குடியேறிய மக்கள், பிரித்தானிய அரசுக்கு வரி செலுத்தவோ, அந்நாட்டின் அதிகாரத்திற்கு அடிபணியவோ மறுத்து, உருவாக்கிய ஒரு சுதந்திர அறிக்கை, 1776ம் ஆண்டு, ஜூலை 4ம் தேதி வெளியிடப்பட்டது. இதுவே, இவ்விழாவின் அடிப்படை காரணமாக அமைந்தது. இவ்வறிக்கையை உருவாக்கிய குழுவின் தலைவராகப் பணியாற்றிய தாமஸ் ஜெப்பர்சன் (Thomas Jefferson) அவர்கள், 33 வயது நிறைந்த இளைஞர். இவர் பின்னர், அந்நாட்டின் 3வது அரசுத் தலைவராகவும் பணியாற்றினார்.
1826ம் ஆண்டு ஜூலை 4ம் தேதி, சுதந்திர நாளின் 50ம் ஆண்டு நிறைவு விழாவில் கலந்துகொள்ள ஜெப்பர்சன் அவர்களுக்கு அழைப்பு வந்தது. 83 வயது நிறைந்த ஜெப்பர்சன் அவர்கள், அவ்வேளையில் நோயுற்றிருந்ததால், தன்னால் அவ்விழாவில் பங்கேற்க இயலாது என்பதை ஒரு மடல் வழியே கூறியிருந்தார். அம்மடலில், அமெரிக்க ஐக்கிய நாடு எதற்காக உருவாக்கப்பட்டது என்பதை ஒரு சில வரிகளில் தெளிவாக எழுதி அனுப்பினார்:
"தங்கள் மீது சுமத்தப்பட்டத் தளைகளை அறுத்து, தம்மைத்தாமே சுயமாக ஆட்சி செய்ய வேட்கை கொண்டுள்ள எல்லா மனிதர்களுக்கும், இந்நாடு ஓர் அடையாளமாக இருக்கட்டும். மனிதர்களின் சிந்திக்கும் திறன், மற்றும், தங்கள் தனிப்பட்ட எண்ணங்களை வெளிப்படுத்தும் சுதந்திரம் ஆகியவற்றை, இந்த அரசு உலகிற்கு எடுத்துரைக்கட்டும். மனித உரிமைகளைக் குறித்து, இங்குள்ளோரின் கண்கள் திறக்கப்பட்டுள்ளன என்பது நமக்கு வழங்கப்பட்டுள்ள ஓர் ஆசீர்வாதம்" என்று, ஜெப்பர்சன் அவர்கள் இம்மடலில் கூறியிருந்தார். 1826ம் ஆண்டு, ஜூன் 24ம் தேதி ஜெப்பர்சன் அவர்கள் எழுதிய இம்மடலே, அவர் இறுதியாக எழுதிய மடல், ஏனெனில், 10 நாட்கள் சென்று, அதாவது, 1826ம் ஆண்டு, ஜூலை 4ம் தேதி, அமெரிக்க ஐக்கிய நாட்டு சுதந்திர நாளின் பொன்விழாவன்று, ஜெப்பர்சன் அவர்கள் மரணமடைந்தார்.
அமெரிக்க ஐக்கிய நாடு வளம்கொழிக்கும் ஒரு சுதந்திர நாடு என்றும், அதில் நுழைவதே தங்கள் கனவு என்றும் எண்ணியிருக்கும் ஆயிரமாயிரம் இளையோர், அந்நாட்டின் தற்போதைய அரசுத்தலைவர், நாளொன்றுக்கு, வெவ்வேறு அரசாணைகள் இயற்றி வருவதையும், தடுப்புச் சுவர் எழுப்புவதையும், சரியான ஆவணங்கள் இன்றி நாட்டிற்குள் நுழைந்த குடும்பங்களிலிருந்து குழந்தைகளைப் பிரித்து, கூண்டுகளில் அடைத்திருப்பதையும், அமெரிக்க ஐக்கிய நாட்டு சுதந்திர நாளன்று இளையோர் எண்ணிப்பார்க்கக் கடமைப்பட்டுள்ளனர்.

Jesus walking on the water

புதுமைகள் கடல்மீது கடவுள் : பகுதி 2

இயேசு கடல்மீது நடந்துசென்ற புதுமையில் நாம் பயிலக்கூடிய கூடுதலானப் பாடங்களை இத்தேடலில் புரிந்துகொள்ள முயல்வோம். யோவான் நற்செய்தி 6ம் பிரிவில் (யோவான் 6:16-21) காணப்படும் இப்புதுமையில் பதிவு செய்யப்பட்டுள்ள ஒரு சில சொற்றொடர்கள் நமக்குத் தேவையானப் பாடங்களைப் புகட்டுகின்றன. 'ஏற்கனவே இருட்டிவிட்டது', 'பெருங்காற்று வீசிற்று' 'கடல் பொங்கி எழுந்தது' 'இயேசு கடல்மீது வருவதைக் கண்டு அஞ்சினார்கள்' ஆகியக் கூற்றுகள், நம் தேடலை இன்று வழிநடத்துகின்றன.
மனிதர்களாகிய நாம் அனைவரும்  அச்சம் என்ற உணர்வுக்கு, அவ்வப்போது, அல்லது, அடிக்கடி உள்ளாகிறோம். நம் அச்சத்தை கூடுதலாக்கும் ஒரு சில காரணிகளை யோவான் நற்செய்தியில் காண்கிறோம்.

முதல் காரணி - இருள். பகல் பொழுதில் வீசும் புயலையும், எழும் அலைகளையும் ஓரளவு எதிர்கொள்ளும் பக்குவம் பெற்றுள்ள நாம், அதே புயலும், அலைகளும், இருளில் நிகழும்போது, கூடுதல் அச்சம் கொள்கிறோம்; செய்வதறியாது திகைத்துப் போகிறோம். பொதுவாகவே, பகல் நேரத்தில் நமக்குள் கலக்கங்களை உருவாக்கும் ஒரு சில எண்ணங்கள், இரவில் எழுந்தால், அவை, நம் உறக்கத்தை விரட்டியடித்து, கூடுதலாக நம்மை அச்சமுறச் செய்வதை உணர்ந்துள்ளோம்.

இருள் சூழ்ந்த நேரங்களில் நம்மைச் சுற்றி நிகழ்வனவற்றை முழுமையாகவும், தெளிவாகவும் பார்க்கமுடியாமல் போவதாலேயே, நம் அச்சம் கூடுகிறது. வெளி உலகில் இருள் நமக்குள் உருவாக்கும் அச்சத்தைப் போலவே, நம், உள்ளத்தில் உருவாகும் இருளும், புயலும் நம் அச்சத்தை அதிகமாக்குகின்றன. மனதளவில் புயல் வீசும் வேளையில், அனைத்து கோணங்களையும் சரிவரப் பார்க்க முடியாததால், அல்லது, பார்க்க மறுப்பதால், நம் அச்சம் கூடுதலாகிறது. வெளி உலகிலும், உள்ளங்களிலும் இருள்சூழும் வேளைகளில்,  நாம் மேற்கொள்ளவேண்டிய மிக அவசியமான முயற்சி, "இருளைப் பழிப்பதைவிட, ஒளியை ஏற்றுதல்". இந்த ஒளியை ஏற்றுவதற்கு, இறைவனே நம்மைத் தேடி வரக்கூடும். அவ்வாறு நம்மைத் தேடிவரும் இறைவனை அடையாளம் கண்டுகொள்ள நாம் உள்ளொளி பெற்றிருக்கவேண்டும்.

நம் அச்சத்தைக் கூடுதலாக்கும் இரண்டாவது காரணி, நம்பிக்கையுள்ள ஒருவர் நம்மருகே இல்லாத நிலை. பெரும் காற்றையும், பொங்கியெழும் அலைகளையும் சீடர்கள் சந்தித்த வேளையில், அவர்களுடன் இயேசு இல்லை என்று நற்செய்தியாளர் யோவான் கூறியுள்ளார். இயேசு அவர்களுடன் இருந்திருந்தால், இவ்வளவு அச்சம் உருவாகியிருக்காது. நம்பிக்கைக்குரியவர் ஒருவர் நம்முடன் பயணித்தால், அச்சம் விலகிப்போகும் என்பதை, ஒரு சிறு நிகழ்வு வழியே புரிந்துகொள்ள முயல்வோம்.

விமானம் ஒன்று ஏறத்தாழ 50,000 அடி உயரத்தில் பறந்துகொண்டிருந்தபோது, திடீரென அதிர்ந்தது; ஒரு பக்கமாகச் சாய்ந்தது. விமானத்தின் இயந்திரம் பழுதடைந்துவிட்டதாக, அதன் ஓர் இறக்கை சிறிது உடைந்துவிட்டதாக, பயணிகள் மத்தியில் வதந்திகள் பரவியதால், அவர்களது அச்சம் கூடியது. ஒரு சிலர், கண்களை இறுக மூடிக்கொண்டு, இருக்கையைக் கெட்டியாகப் பிடித்தபடி அமர்ந்திருந்தனர். வேறு சிலர், தங்களுக்குத் தெரிந்த செபங்களையெல்லாம் சொல்ல ஆரம்பித்தனர். இன்னும் பலர், தங்கள் கைப்பேசி வழியே செய்திகள் அனுப்ப முயன்றனர். இந்த நிலை பல நிமிடங்கள் நீடித்ததால், விமானப் பணியாளர்கள் நடுவிலும் கலக்கம் ஏற்பட்டது. ஏறத்தாழ விமானத்தில் இருந்த அனைவரையுமே அச்சம் ஆட்கொண்டது... ஒரே ஒருவரைத் தவிர... ஆம், விமானத்தில் பயணம் செய்த பத்து வயது சிறுமி ஒருவர், எவ்வித பயமுமின்றி, ஒரு கார்ட்டூன் புத்தகத்தை வாசித்துக் கொண்டிருந்தார். அச்சிறுமி, பெரியவர்கள் யாருடைய துணையுமின்றி, தனியே பயணம் செய்தார் என்பது தெளிவாகத் தெரிந்தது. அருகில் அமர்ந்திருந்த பெரியவர், அச்சிறுமியிடம், "உனக்குப் பயமாக இல்லையா?" என்று கேட்டார். அதற்கு அச்சிறுமி ஒரு புன்முறுவலுடன், "எனக்குப் பயமே இல்லை... ஏன்னா, எங்க அப்பாதான் இந்த விமானத்தை ஓட்டுகிறார்" என்று பதில் சொன்னார். அனைவரையும் அச்சுறுத்திய ஒரு சூழலில், தன் தந்தையின் மீது அச்சிறுமி கொண்டிருந்த அளவற்ற நம்பிக்கை, அச்சிறுமியின் அச்சத்தை அறவே நீக்கியது.

நம் அச்சத்தைக் கூடுதலாக்கும் மூன்றாவது காரணி – நாம் எடுக்கும் முயற்சிகளில் முன்னேற்றம் எதுவும் தென்படாத நிலை. ஏறத்தாழ இரவு முழுவதும் சீடர்கள் தங்கள் படகை ஒட்டிச் சென்றாலும், அவர்களால் வெகு தூரம் செல்ல இயலவில்லை. அவர்கள் கடலில் ஐந்து அல்லது ஆறு கிலோ மீட்டர் தூரமே பயணித்தனர் (யோவான் 6:19) என்று கூறப்பட்டுள்ளது. வாழ்க்கைப் பிரச்சனைகளில் முன்னேற்றம் எதுவும் தெரியாதபோது, நம் அச்சம் கூடுதலாகும், விரக்தியும் கூடும். பல வேளைகளில், போராட்டங்கள் தொடரும்போது, நாம் எழுப்பும் வேண்டுதல்களுக்கு பதில் ஏதும் கிடைக்காததுபோல் நாம் உணர்ந்திருக்கிறோம், அல்லவா? நம் வேண்டுதல்களுக்கும் அவற்றின் விளைவுகளுக்கும் உள்ள தொடர்பைப் புரிந்துகொள்ள பின்வரும் கதை உதவும்.

உறங்கிக் கொண்டிருந்த அந்த இளைஞனின் அறை ஒளி வெள்ளத்தில் நிறைந்தது. கண் விழித்த அவன் முன் கடவுள் நின்றார். "மகனே, உனக்கு ஒரு தனிப்பட்ட பணியைத் தருகிறேன். உன் வீட்டுக்கு முன் உள்ள பாறையை முழு வல்லமையோடு நீ தள்ள வேண்டும்" என்று சொன்னபின், கடவுள் மறைந்துபோனார்.
அடுத்தநாள் காலை, அந்த இளைஞன் தன் வீட்டுக்கு முன் இருந்தப் பாறையை, தன் முழு வல்லமையோடு தள்ளினான். அது கொஞ்சமும் அசையவில்லை. பல மணி நேர போராட்டத்திற்குப் பின், அடுத்த நாள் தொடரலாம் என்று விட்டுவிட்டான்.
அடுத்த நாள், அதற்கடுத்த நாள் என்று ஒருமாதமாக இந்த முயற்சியைத் தொடர்ந்தான் அந்த இளைஞன். பாறை இருந்த இடத்தை விட்டு நகர மறுத்தது.
"கடவுளே, ஒரு பயனுமற்ற இந்தப் பணியை ஏன் எனக்குக் கொடுத்தீர்?" என்று இளைஞன் முறையிட்டான். "மகனே, உன் கரங்கள், உன் தோள், உன் கால்கள்... உன் உடல் முழுவதையும் ஒரு முறை பார். உன் கேள்விக்கு பதில் கிடைக்கும்" என்றார் கடவுள்.
இளைஞன் தன்னையே ஒரு முறை பார்த்தான். அவன் உடல் முழுவதும், ஒவ்வொரு அங்கமும் வலுவடைந்து, முறுக்கேறி, ஏறக்குறைய அந்த பாறையைப் போல் உறுதியாக இருந்தது.
"பாறையைத் தள்ளுவது மட்டுமே உனக்குக் கொடுக்கப்பட்ட பணி. அதை அசைக்கவோ, இடம் பெயர்க்கவோ நான் சொல்லவில்லை. பாறையை இடம் பெயர்ப்பதை விட, அந்தப் பாறையைப் போல் நீ உறுதி பெறவேண்டும் என்பதற்காகவே நான் உனக்கு இந்தப் பணியைக் கொடுத்தேன்." என்றார் கடவுள்.

தள்ளுதல் என்று பொருள்படும் PUSH என்ற ஆங்கில வார்த்தையில் நான்கு எழுத்துக்கள் உள்ளன. ஒவ்வொன்றையும் ஒரு வார்த்தையின் முதல் எழுத்தாக எண்ணிப் பார்க்கும்போது, PUSH என்ற வார்த்தையை Pray Until Something Happens என்ற 4 சொற்களாக விரிவாக்கலாம். அதாவது, ஏதாவதொன்று நடக்கும் வரை செபம் செய்.

காற்றோடும், அலைகளோடும் போராடி, சீடர்கள், அச்சத்தில் ஆழ்ந்துகொண்டிருந்த சூழலில், இயேசு கடல்மீது நடந்து வந்தார். அவர் நினைத்திருந்தால், காற்றையும், கடலையும், கரையில் நின்றபடியே அமைதிப்படுத்தியிருக்கலாம். ஆனால், இயேசு, அதைவிட சிறந்ததொரு வழியைத் தெரிவுசெய்தார். புயலோடும், அலைகளோடும் போராடிக்கொண்டிருந்த சீடர்களுடன் தன்னையே இணைத்துக்கொள்ளும் வண்ணம் அவர் கடல் மீது நடந்து வந்தார்.

சீடர்களின் எண்ணங்கள் அனைத்தையும் காற்றும், கடலும் நிறைத்துவிட்டதால், தங்களை நோக்கி நடந்துவந்த இயேசுவை அவர்களால் அடையாளம் கண்டுகொள்ள இயலவில்லை. தங்கள் படகை நெருங்கிவந்த இயேசுவைக் கண்டு சீடர்கள் அஞ்சினார்கள் (யோவான் 6:19) என்று நற்செய்தியாளர் யோவான் குறிப்பிடுகின்றார். இதே நிகழ்வைப் பதிவுசெய்துள்ள மத்தேயு மாற்கு ஆகிய இரு நற்செய்தியாளர்களும், இயேசுவை ஒரு பேய் என்று கூறுமளவு சீடர்களை அச்சம் ஆட்டிப்படைத்தது என்று குறிப்பிடுகின்றனர் (மத். 14:26; மாற். 6:49). நம் வாழ்விலும் அச்சம் அதிகமாகும்போது, இயேசுவை அடையாளம் கண்டுகொள்ள தவறுகிறோம். அல்லது, அவரை தவறான வழிகளில் அடையாளம் கண்டுகொள்கிறோம்.

புயலில் சிக்கியுள்ள நம்மை நோக்கி நடந்துவரும் இயேசுவை நாம் சரிவர அடையாளம் கண்டுகொள்ளவும், இருளும், புயலும் சூழ்ந்தாலும், இயேசு நம்முடன் இருக்கிறார் என்ற நம்பிக்கையில் நாளும் வளரவும், இறையருளை இறைஞ்சுவோம்.


No comments:

Post a Comment