Mr N.Vasantha Kumar
இமயமாகும் இளமை - ‘கஜா’ புயல் அழிவில்
நம்பிக்கை தந்த வசந்தகுமார்
தமிழகத்தின்
டெல்டா மாவட்டங்களை, ‘கஜா’ புயல் புரட்டிப்போட்டு, ஏறத்தாழ 20 நாள்களாகிவிட்டன. இந்தத் துயரில்
இருந்து மக்கள் மீண்டெழ, பல்வேறு அடிப்படைத் தேவைகளை நிறைவேற்றிய
தன்னார்வலர்கள், போற்றுதலுக்கு உரியவர்கள். அரசு செய்யவேண்டிய
உதவிகளை, தன்னார்வலர்கள், தனித்தனியாகவோ, குழுக்களாகவோ செய்து, மக்கள் மனதில்
இடம்பிடித்துள்ளனர். எதிர்காலமே கேள்விக்குறியாகி நின்றவர்களுக்கு, துயரில் இருந்து மீளமுடியும் என்ற நம்பிக்கை அளித்தவர்கள், இந்தத்
தன்னார்வலர்கள் தான். அந்த நம்பிக்கை முகங்களில் முக்கியமான ஒருவர், ந.வசந்தகுமார்.
தஞ்சாவூர்
மாவட்டம், கும்பகோணத்தைச் சேர்ந்தவர், ந.வசந்தகுமார். முழுநேர புகைப்படக் கலைஞரான இவர், முதலில், புயலால் பாதிக்கப்பட்ட இடங்களுக்கு நேரடியாகச் சென்று,
கள நிலவரத்தை அறிந்துகொண்டார். அந்நிலவரங்களை தன் கேமராவில் பதிவு செய்துகொண்டே சென்றவருக்கு, ஒரு கட்டத்துக்கு மேல், புகைப்படம் எடுக்க மனம் வரவில்லை. அந்த
அளவுக்கு, புயலின் பாதிப்பு அவர் மனதைப் பாதித்திருக்கிறது.
கேமராவைத்
தூரமாக வைத்துவிட்டு உடனடியாகக் களத்தில் இறங்கினார், வசந்தகுமார். ஃபேஸ்புக், தெரிந்த நண்பர்கள் வழியே, நிவாரணப் பொருட்களைத் திரட்ட ஆரம்பித்தார்.
அவ்வேளையில், நிறைய பேர் நிவாரணப் பொருட்கள் திரட்டியதால், அவர் எதிர்பார்த்த அளவுக்குப் பொருட்கள் சேரவில்லை. இருந்தாலும்
அவர் மனம் தளர்ந்துவிடவில்லை.
அட்டைப்
பெட்டியை உண்டியலாக்கி, சிறுவர்களுடன் வீடு வீடாக ஏறி, இறங்கினார், வசந்தகுமார்.
அவருக்கு உதவும் நோக்கத்துடன், கும்பகோணம் மாரத்தான் குழுவினர், 12 மணி நேரம் தொடர் ஓட்டம் ஓடி, நிதி, மற்றும், பொருட்களைச் சேகரித்துத்
தந்தனர். ட்யூஷன் படிக்கும் மாணவர்கள் ஒன்று சேர்ந்து, 500 ரூபாய் அனுப்பி வைத்தது
கண்டு, மனம் நெகிழ்ந்திருக்கிறார், வசந்தகுமார்.
வேதாரண்யத்தைச்
சுற்றியுள்ள பல கிராமங்களில் வாழும் 440 குடும்பங்களுக்கு, வசந்தகுமார் வழியே உதவிகள்
சென்று சேர்ந்தன. “அரசு எந்த உதவியுமே செய்யாத நிலையில், எங்களுக்காக, எங்கிருந்தோ பொருட்களை சேகரித்துக் கொண்டு வந்த உங்களை,
உயிருள்ளவரை மறக்கமாட்டோம்” என, அம்மக்கள், கண்ணீருடன், வசந்தகுமார்
அவர்களை, கையெடுத்துக் கும்பிட்டுள்ளனர். (தி இந்து)
7 Signs of
Jesus in John’s Gospel
யோவான் நற்செய்தி புதுமைகள்,
மீள்பார்வை – 1
இவ்வாண்டின்
துவக்கத்தில், நாம், இயேசுவின்
புதுமைகளில் நம் தேடல் பயணத்தைத் துவக்கினோம். 46 வாரங்களாக நடைபெற்ற இந்தத் தேடல்
பயணத்தில், யோவான் நற்செய்தியில் பதிவு செய்யப்பட்டுள்ள
புதுமைகளில் மட்டும் நாம் கவனம் செலுத்தினோம். நற்செய்தியாளர் யோவான் பதிவு செய்துள்ள
7 புதுமைகளில் கடந்த 44 வாரங்களாக, தேடல் பயணம் மேற்கொண்டு வந்த நாம், இப்போது, அப்புதுமைகளில் ஒரு மீள்பார்வை
மேற்கொள்கிறோம்.
இயேசு
ஆற்றியப் புதுமைகளை, நற்செய்தியாளர் யோவான், 'அரும் அடையாளங்கள்' என்று குறிப்பிட்டுள்ளார். இந்த அரும் அடையாளங்களை, தான் பதிவு
செய்ததற்கு காரணம், மக்களிடையே நம்பிக்கையை வளர்ப்பதற்கு என்று, புனித யோவான், தன் நற்செய்தியின் இறுதியில் கூறியுள்ளார்:
யோவான்
20: 30-31
வேறு
பல அரும் அடையாளங்களையும் இயேசு தம் சீடர்கள் முன்னிலையில் செய்தார். அவையெல்லாம் இந்நூலில்
எழுதப்படவில்லை. இயேசுவே இறைமகனாகிய மெசியா என நீங்கள் நம்புவதற்காகவும், நம்பி, அவர் பெயரால் வாழ்வு பெறுவதற்காகவுமே, இந்நூலில் உள்ளவை
எழுதப்பெற்றுள்ளன.
நம்பிக்கை, மற்றும், வாழ்வை, மக்கள் பெறவேண்டும்
என்ற நோக்கத்துடன் எழுதப்பட்ட இந்த நற்செய்தி,
"நம்பிக்கையின்
நூல்" என்று
அழைக்கப்படுகிறது. 21 பிரிவுகளைக் கொண்ட யோவான் நற்செய்தியை, விவிலிய ஆய்வாளர்கள், இரு பகுதிகளாகப் பிரித்துள்ளனர்.
முதல் 11 பிரிவுகள், "அரும் அடையாளங்களின் நூல்" என்றும், 12 முதல், 20ம் பிரிவு முடிய உள்ள 9 பிரிவுகள்,
"மகிமையின் நூல்" என்றும் அழைக்கப்படுகின்றன. 21ம் பிரிவு, ஒரு பிற்சேர்க்கை
என்பது, பலராலும் ஏற்றுக்கொள்ளப்பட்ட கருத்து.
"அரும் அடையாளங்களின் நூலில்"
முதலில் பதிவு செய்யப்பட்டுள்ள நிகழ்வு, கானா திருமணத்தில் இயேசு தண்ணீரை
இரசமாக மாற்றிய புதுமை. யோவான் நற்செய்தியில் மட்டுமே பதிவாகியுள்ள ஒரு தனிப்பட்ட புதுமை
இது. இப்புதுமையில் இரு அம்சங்கள் கவனத்திற்குரியவை என்று, Blair Van Dyke என்ற பேராசிரியர் கூறியுள்ளார்.
முதல்
அம்சம் - படைக்கப்பட்ட பொருள்கள் மீது இயேசு கொண்டுள்ள அதிகாரம். தண்ணீரை, திராட்சை இரசமாக மாற்றும் வல்லமை கொண்ட இயேசு, மரத்தை, பாறையாகவும், பாறையை, தண்ணீராகவும், தண்ணீரை, திராட்சை இரசமாகவும் மாற்றும் வல்லமை
பெற்றவர் என்பதை, நற்செய்தியாளர் யோவான் நமக்கு உணர்த்துகிறார்.
மனிதன் என்ற நிலையில், இயற்கையின் அனைத்து விதிகளுக்கும்
இயேசு உட்பட்டவர் என்றாலும், அந்த விதிகளை, தேவைப்பட்ட நேரத்தில் மாற்றுவதற்கும், அவரிடம் வல்லமை இருந்தது
என்பதே, இப்புதுமையில் நாம் புரிந்துகொள்ளும் முதல்
அம்சம்.
இரண்டாவது
அம்சம் - காலத்தின்மீது இயேசு கொண்டிருந்த அதிகாரம். பொதுவாக, திராட்சை இரசத்தை உருவாக்க,
பல ஆண்டுகள் தேவைப்படும்.
திராட்சை செடியை நட்டு, அது கோடியாக வளர்ந்து, கனிகள் தருவதற்கு, குறைந்தது, மூன்றாண்டுகள் ஆகும். அந்த கனிகளைப் பறித்து, சாறாகப் பிழிந்து, அதை திராட்சை இரசமாக மாற்றுவதற்கு, குறைந்தது, 3 மாதங்கள் தேவைப்படும். மிக உயர்ந்த,
தரமான, திராட்சை இரசத்தை உருவாக்க, பல ஆண்டுகள் தேவைப்படும்.
எனவே, திராட்சைச் செடியில் துவங்கி, உயர்ந்த,
தரமான, திராட்சை இரசம் உருவாக, குறைந்தது, 4 முதல், 40 ஆண்டுகள் வரையிலும் கூட ஆகலாம்.
ஆனால், கானா திருமணத்தில், இயேசு, நல்ல, உயர்தரமான திராட்சை இரசத்தை, சில நொடிகளில் உருவாக்கினார். 40 ஆண்டுகளில்
உருவாகும் திராட்சை இரசத்தை, சில நொடிகளில் உருவாக்கியதால், காலத்தின் மீது இயேசுவுக்கு இருந்த அதிகாரம் தெளிவாகிறது.
காலத்தை
அளக்க நாம் பயன்படுத்தும், நொடி, நிமிடம், மணி, நாள், வாரம், மாதம், ஆண்டு என்ற அளவுகள், காலத்தைக் கடந்த கடவுளுக்கு இல்லை.
இந்த எண்ணத்தை, திருத்தூதர் பேதுரு, தன் திருமுகத்தில் மிக அழகாகக் குறிப்பிட்டுள்ளார்:
பேதுரு
எழுதிய இரண்டாம் திருமுகம் 3:8
அன்பார்ந்தவர்களே, நீங்கள் ஒன்றை மறந்துவிடவேண்டாம். ஆண்டவரின் பார்வையில் ஒருநாள்,
ஆயிரம் ஆண்டுகள் போலவும், ஆயிரம் ஆண்டுகள், ஒருநாள் போலவும்
இருக்கின்றன.
திருத்தூதர்
பேதுரு இவ்வாறு கூறிய வேளையில், அவர் உள்ளத்தில், திருப்பாடல்
90ல் கூறப்பட்டுள்ள வரிகள் எதிரொலித்திருக்கும்:
திருப்பாடல்
90:4
ஆயிரம்
ஆண்டுகள், உம் பார்வையில் கடந்துபோன நேற்றைய
நாள் போலவும், இரவின் ஒரு சாமம் போலவும் உள்ளன.
கானா
திருமண விருந்தில் நிகழ்ந்த புதுமைக்கு அடுத்ததாக, அரச அலுவலர்
மகனை இயேசு குணமாக்கும் புதுமை இடம்பெற்றுள்ளது. கானாவில் நிகழ்ந்த முதல் அரும்
அடையாளத்தில், பொருள்கள் மீதும், காலத்தின் மீதும் தன் அதிகாரத்தை வெளிப்படுத்திய இயேசு, அரச அலுவலர் மகனை குணமாக்கும் புதுமையின் வழியே, தூரத்தின்
மீது தான் கொண்டிருந்த அதிகாரத்தை வெளிப்படுத்துகிறார். இயேசுவின்
வார்த்தைகளில் விளங்கிய சக்தி, கப்பர்நாகும் ஊருக்கும், கானாவுக்கும் இடையே உள்ள 25 கி.மீ. தூரத்தைக் கடந்துசென்றது. "நீர் புறப்பட்டுப்போம். உம் மகன் பிழைத்துக்
கொள்வான்" (யோவான் 4:50) என்று இயேசு கூறிய அந்த நொடியில், அலுவலரின் மகன்
பிழைத்தெழுந்தான் என்பதை இப்புதுமையில் காண்கிறோம் (யோவான் 4:52-53).
இப்புதுமை
வழியே நாம் கற்றுக்கொள்ளக்கூடிய முக்கியமான பாடம் ஒன்று உள்ளது. அதுதான், அரச அலுவலரிடம்
படிப்படியாக வளர்ந்த நம்பிக்கை என்ற பாடம். அவரது நம்பிக்கையின் வளர்ச்சியை மூன்று
படிகளாக நாம் புரிந்துகொள்ள முயல்வோம்.
தன்
மகன் சாகும் நிலையிலிருந்ததால், அவனைக் குணமாக்கும் பல வழிகளை, அரச அலுவலர்,
பதைபதைப்புடன், தீவிரமாக, துரிதமாகத் தேடிக்கொண்டிருந்தார். அவர் தேடிய பல்வேறு
வழிகளிலும் தீர்வு கிடைக்காமல், அவரது நம்பிக்கை, நாளுக்கு நாள் குறைந்துவந்தது.
அவ்வேளையில், அவர், இயேசுவைப்பற்றி கேள்விப்பட்டார். வெள்ளத்தில் அடித்துச்
செல்லப்படும் ஒருவருக்கு, அந்த நீரில் மிதந்து வரும் எந்த ஒரு பொருளும், தன்னைக்
காக்க வந்த படகு போலத் தெரியுமல்லவா? அத்தகைய நிலையில், இருந்த அரச அலுவலர், இயேசுவைப்பற்றிக்
கேள்விப்படுகிறார். எருசலேமிலும், கானாவிலும் இயேசு ஆற்றிய அரும்
அடையாளங்களை நேரில் கண்டவர்கள், அந்த அலுவலரிடம் அவற்றைப்பற்றி
கூறியிருக்கலாம். அவர்கள் கூறியவற்றை நம்பி,
அரச அலுவலர், கப்பர்நாகுமிலிருந்து,
கானாவுக்கு விரைந்து செல்கிறார். மற்றவர்கள் கூறும் கருத்துக்களை நம்பி,
முயற்சிகளை மேற்கொள்வது, நம்பிக்கையின் முதல் படி.
அரச
அலுவலர், கானாவில், இயேசுவைச் சந்தித்த வேளையில், இயேசு, புதுமைகள் எதையும், அவர்
கண்முன் நிகழ்த்தவில்லை. இருப்பினும், இயேசுவைச் சந்தித்ததும், அரச அலுவலர்
உள்ளத்தில் நம்பிக்கை பிறந்திருக்கவேண்டும். முன்பின் அறிமுகம் இல்லாத ஒருவரைக்
கண்டதும், அவர் மீது நமக்கு உருவாகும் நல்லெண்ணங்கள், நம்பிக்கையின் இரண்டாவது
படி.
நம்பிக்கையின்
முதலிரு படிகளையும் அரச அலுவலர் கடந்திருந்தாலும், அவருடைய நம்பிக்கை இன்னும்
அரைகுறையாகவே இருந்தது. எனவேதான், அரச அலுவலர், இயேசுவை, தன்னுடன் கப்பர்நாகும் வந்து,
தன் மகனைக் குணமாக்கவேண்டும் என்று விண்ணப்பிக்கிறார். இயேசு நேரடியாக வந்தால்
மட்டுமே, தன் மகனுக்குக் குணம் கிடைக்கும் என்று, அரச அலுவலர் நினைத்ததில் ஆச்சரியம்
ஒன்றுமில்லை.
பொதுவாக, குணமளிக்கும் புதுமைகளில், அப்புதுமையைச் செய்பவர், நோயுற்றவரைத் தொடவேண்டும், அல்லது, நோயுற்றவருக்கு முன் நின்று, ஒரு மந்திரத்தைச் சொல்லவேண்டும், அல்லது, தன் சக்தி அடங்கிய ஒரு பொருளை அனுப்பி, அதை நோயாளிமீது
வைக்கும்படி சொல்லவேண்டும். இவைகளே, குணமாக்கும் வழிகள் என்பது, அன்றும், இன்றும் நிலவிவரும்
பொதுவான நம்பிக்கை. அந்த நம்பிக்கையின் அடிப்படையில், அரச அலுவலர், இயேசுவை, தன் இல்லத்திற்கு
வரும்படி அழைக்கிறார். அதுவும், அவர் விடுத்த வேண்டுதலில், அவசரமும், பரிதவிப்பும் கலந்து ஒலிக்கின்றன: "ஐயா, என் மகன் இறக்குமுன் வாரும்" (யோவான் 4:49) என்று, அவர், இயேசுவை
வற்புறுத்தி அழைக்கிறார்.
பொதுவாக, தன்னை நாடி வருபவர்கள் கேட்பதை, கேட்டபடியே
செய்வது, இயேசுவின் வழக்கம். ஆனால், இந்நிகழ்வில், அரச அலுவலர், தன் வீட்டுக்கு வரும்படி
இயேசுவை அழைத்தபோது, அவருடன் செல்லாமல், "நீர் புறப்பட்டுப்போம். உம் மகன் பிழைத்துக்
கொள்வான்" என்று சொல்லி அனுப்புகிறார். இங்கு, நாம் அரச அலுவலரின் நம்பிக்கையில்
உருவாகும் மூன்றாவது படியைக் காணலாம். முன்பின் அறிமுகம் இல்லாத இயேசு, தன்னிடம் கூறியச்
சொற்களை நம்பி, அரச அலுவலர், தன் இல்லத்திற்குப் புறப்பட்டுச் செல்கிறாரே, அது,
நம்பிக்கையின் மிக உயர்ந்த நிலை.
கானா
திருமண விருந்தில், இயேசுவை முன்பின் பார்த்திராத பணியாளர்கள், அவர் சொற்களைக் கேட்டு, அவர்மீது முழு நம்பிக்கை வைத்து, முழுமனதுடன்,
தொட்டிகளை, விளிம்புவரை தண்ணீரால் நிரப்பினர் என்பதைக் கண்டோம். நம்பிக்கையுடன்
அப்பணியாளர்கள் தண்ணீரை நிரப்பிய அந்த வேளையில், தண்ணீர், திராட்சை இரசமாக மாறிய
புதுமை நிகழ்ந்திருக்கவேண்டும் என்று சிந்தித்தோம். அதேபோல், இயேசுவை முன்பின் பார்த்திராத அரச அலுவலர், "நீர் புறப்பட்டுப்போம். உம் மகன் பிழைத்துக்
கொள்வான்" என்று இயேசு சொன்னதை நம்பி புறப்பட்ட அந்த நொடியில், அவரது மகன் நலமடைந்தான்.
இயேசுவின்
சொற்கள், புதுமைகளை ஆற்றும் வல்லமை கொண்டது என்பதை நம்பிய கானா திருமணப் பணியாளர்களும், அரச அலுவலரும், நமக்கு, நம்பிக்கை பாடங்களைச் சொல்லித் தருவார்களாக.
No comments:
Post a Comment