05 March, 2019

விவிலியத்தேடல் : ஒத்தமை நற்செய்தி – முடங்கியவருக்கு முழு விடுதலை 2

Scripture Illustration - Romans 8:19

பூமியில் புதுமை - "படைப்பே பேராவலோடு காத்திருக்கிறது"

"நாம் கடவுளின் குழந்தைகளாக வாழ்வதற்கு தவறும்போது, நமது அயலவரையும் ஏனைய படைப்புக்களையும் அழிக்கும் வண்ணம் நாம் நடந்துகொள்கிறோம். அனைத்தையும், நம் மனம் போன போக்கில் பயன்படுத்தமுடியும் என்று எண்ணும்போது, நம்மை நாமே அழித்துக்கொள்கிறோம்" என்ற எச்சரிக்கையை, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இவ்வாண்டு வெளியிட்டுள்ள தவக்காலச் செய்தியில் பதிவு செய்துள்ளார்.
மார்ச் 6, இப்புதனன்று நாம் துவங்கியுள்ள தவக்காலத்திற்கென்று திருத்தந்தை வெளியிட்டுள்ள செய்தி, தவக்காலத்தையும், படைப்பையும், சுற்றுச்சூழலையும் இணைத்து, கருத்துக்களை வழங்கியுள்ளது. "கடவுளின் மக்கள் வெளிப்படுவதைக் காண்பதற்காகப் படைப்பே பேராவலோடு காத்திருக்கிறது" (உரோமையர் 8:19) என்ற விவிலியக் கூற்றை தலைப்பாகக் கொண்டுள்ள இச்செய்தி, படைப்பின் மீட்பு, பாவத்தின் அழிவு சக்தி, மனவருத்தம் மற்றும் மன்னிப்பின் நலமளிக்கும் சக்தி என்ற மூன்று பகுதிகளைக் கொண்டுள்ளது.
இம்மூன்று பகுதிகளில், 'பாவத்தின் அழிவு சக்தி' என்ற பகுதியில், பாவத்தின் காரணமாக, படைப்பின் மீது மனிதர்கள் கொணரும் அழிவுகளைக் குறித்து, திருத்தந்தை கூறியுள்ள கருத்துக்களில் ஒரு சில இதோ:
"பாவத்தினால், இறைவனோடு கொண்டுள்ள உறவில் விரிசல் ஏற்படுவதுபோல், சுற்றுச்சூழலுடன் நாம் கொள்ளவேண்டிய உறவிலும் விரிசல் உருவாகும்போது, பூங்கா, புதர் மண்டிக்கிடக்கும் காடாக மாறுகிறது. (காண்க. தொ.நூ. 3:17-18)
"படைப்பின் கடவுளாக, மனிதர், தங்களையேக் காணும் வண்ணம், பாவம் அவர்களை வழி நடத்துகிறது. இதனால், படைப்பின் முழுமையான அதிகாரம் தங்களுக்கு உண்டு என்ற எண்ணத்தில், படைப்பனைத்தையும் தங்களது சுயநலனுக்கென மனிதர் பயன்படுத்துகின்றனர்.
"அன்பை அடிப்படையாகக் கொண்ட இறைவனின் சட்டத்தை, மனிதர் கைவிடும்போது, வலுவற்றோர் மீது வலிமை கொண்டோரின் சட்டம் வெளிப்படுகிறது. இது, படைப்பையும், பிறரையும், சுற்றுச்சூழலையும் சுரண்டுவதற்கு மனிதரை இட்டுச் செல்கிறது."

Team Hoyt - Boston Marathons

ஒத்தமை நற்செய்தி முடங்கியவருக்கு முழு விடுதலை 2

ஏறத்தாழ இருபது ஆண்டுகளுக்குமுன், சென்னை, லொயோலா கல்லூரியில் படித்துக்கொண்டிருந்த இரு இளம் நண்பர்கள், இன்றைய நம் தேடலை துவக்கி வைக்கின்றனர். இவ்விருவரும், ஒரே வகுப்பில் பயின்று வந்தனர். இருவரில் ஒருவர், நல்ல உடல் நலமும், பலமும் கொண்டவர். மற்றொருவர்போலியோ நோயால், இரு கால்களிலும் சக்தி ஏதுமின்றி, சக்கர நாற்காலியில் வாழ்ந்தவர். நல்ல உடல் நலம் கொண்ட இளையவர், ஒவ்வொரு நாளும், தன் நண்பரை, சக்கர நாற்காலியில் தள்ளியபடி, கல்லூரிக்குள் நுழைவார். அவர்கள் பயின்று வந்த வகுப்பறை, மூன்றாவது மாடியில் இருந்தது. அந்த கட்டடத்தில், 'லிப்ட்' வசதி கிடையாது. தன் நண்பரை சக்கர நாற்காலியில் தள்ளிக்கொண்டு வரும் இளையவர், கட்டடத்தின் வாசலில் சக்கர நாற்காலியை நிறுத்திவிட்டு, தன் நண்பரை ஒரு குழந்தையைப் போல் தன் இரு கரங்களில் தாங்கியபடி, மூன்று மாடிகள் படியில் ஏறுவார். ஒரு நாள் அல்ல, இரு நாள் அல்ல... இந்த அற்புதம், மூன்று ஆண்டுகள் தொடர்ந்தது. அந்த நல்ல உள்ளம் எங்கிருந்தாலும் வாழ்க!

1940ம் ஆண்டு பிறந்த Rick, பிறப்பிலேயே, Cerebral palsy, அதாவது, பெருமூளை வாதம் என்ற நோயினால் தாக்கப்பட்டிருந்தார். அவரது பெற்றோர் தந்த அன்பாலும், ஆதரவாலும், பல்வேறு தடைகளைத் தாண்டி,  Rick அவர்கள், கல்லூரி படிப்பை முடித்து, ஒரு கணனி மையத்தில் பணியாற்றினார். அவருக்கு 37 வயதானபோது, தன்னுடன் பள்ளியில் படித்த நண்பன், விளையாட்டு நேரத்தில் அடிபட்டு, செயலிழந்த நிலையில் கிடந்ததை அறிந்தார். அந்த நண்பனின் அறுவைச் சிகிச்சைக்கு நிதி திரட்டுவதற்கென நடத்தப்பட்ட ஒரு மாரத்தான் போட்டியில் கலந்துகொள்ள விருப்பப்பட்டார், Rick.
மகனின் விருப்பத்தை உணர்ந்த அவரது தந்தை Dick Hoyt அவர்கள், இளையவர் Rickஐ சக்கர நாற்காலியில் வைத்து தள்ளியவண்ணம் அந்த மாரத்தான் ஓட்டத்தை நிறைவு செய்தார். 1977ம் ஆண்டு நடைபெற்ற அந்த முதல் மாரத்தானைத் தொடர்ந்து, தன் மகனை சக்கர நாற்காலியில் வைத்து தள்ளிக்கொண்டே, பல மாரத்தான் போட்டிகளில் ஈடுபட்டு வருகிறார், இராணுவத்திலிருந்து ஓய்வு பெற்ற Dick அவர்கள். குறிப்பாக, மாற்றுத்திறனாளிகளுக்கு நிதி திரட்டும் போட்டிகள் என்றால், மகனை தள்ளியபடியே தந்தை ஓடிவருகிறார். இதுவரை, இவ்விருவரும் 70த்திற்கும் மேற்பட்ட மாரத்தான் போட்டிகள், 90க்கும் மேற்பட்ட பாதி மாரத்தான் போட்டிகள் உட்பட, 1300க்கும் அதிகமான ஒட்டப்பந்தயங்களில் இணைந்து ஓடி, சாதனைகள் நிகழ்த்தியுள்ளனர். தன் தந்தையோடு தான் பங்கேற்கும் போட்டிகளைக் குறித்து ஒருமுறை ஊடகத்திற்குப் பேட்டியளித்த இளையவர் Rick, "மாற்றுத் திறன் ஒரு தடையல்ல என்பதை இவ்வுலகிற்குச் சொல்லவே, நாங்கள் இருவரும், இந்த முயற்சியை மேற்கொண்டு வருகிறோம்" என்று கூறினார்.

வாழ்வில் இத்தகைய உண்மை நிகழ்வுகளை நாம் அனைவரும் சந்தித்திருக்கிறோம். நம்மில் ஒரு சிலர், இத்தகைய உன்னத நிகழ்வுகளில் பங்கு பெற்றுள்ளோம். மாற்றுத் திறனுடையோருக்கு பல ஆண்டுகள் உதவிவரும், பெற்றோர், உறவினர், நண்பர்கள் ஆகியோருக்கு நன்றி கூறி இன்றையத் தேடலை துவக்குகிறோம். இத்தகைய நல்லவர்கள் இவ்வுலகில் நடமாடுவதால்தான், இன்றளவும், மனித சமுதாயம் தலைநிமிர்ந்து வாழ முடிகிறது. இந்த உன்னத உள்ளங்களின் வரிசையில், இன்று நாம் நால்வரை எண்ணிப் பார்க்க முயல்வோம். இந்த நால்வரை, நற்செய்தியாளர் மாற்கு இவ்வாறு அறிமுகம் செய்து வைக்கிறார்:
மாற்கு 2: 1-4

சில நாள்களுக்குப்பின் இயேசு மீண்டும் கப்பர்நாகுமுக்குச் சென்றார். அவர் வீட்டில் இருக்கிறார் என்னும் செய்தி பரவிற்று. பலர் வந்து கூடவே, வீட்டு வாயிலருகிலும் இடமில்லாமல் போயிற்று. அவர் அவர்களுக்கு இறைவார்த்தையை எடுத்துரைத்துக் கொண்டிருந்தார். அப்போது முடக்குவாதமுற்ற ஒருவரை நால்வர் சுமந்து அவரிடம் கொண்டுவந்தனர். மக்கள் திரண்டிருந்த காரணத்தால் அவரை இயேசுவுக்கு முன் கொண்டுவர இயலவில்லை. எனவே அவர் இருந்த இடத்திற்கு மேலே, வீட்டின் கூரையை உடைத்துத் திறப்பு உண்டாக்கி, முடக்குவாதமுற்றவரைப் படுக்கையோடு கீழே இறக்கினர்.

Dancing on the ceiling

இந்த நான்கு நண்பர்களும் வெறும் ஆர்வக் கோளாறு காரணமாக அங்கு வரவில்லை. ஒரு தீர்மானத்தோடு வந்திருந்தனர். பல ஆண்டுகளாய் செயலிழந்து படுக்கையில் முடங்கியிருக்கும் தங்கள் நண்பனுக்கு விடுதலை பெற்றுத்தரும் முயற்சியில், அவர்கள் ஈடுபட்டிருந்தனர். தங்கள் நண்பனின் அவலமான நிலையைக் கண்டு, இதுதான் அவனது விதி என்று தீர்ப்பெழுதி, அவன் வாழ்வையும், தங்கள் நம்பிக்கையையும் மூடிவிடாமல், அவனுக்கு என்றாவது ஒரு நாள், ஏதாவது ஒரு வழியில், நல்லது நடக்கும் என்று, நம்பிக்கையோடு இருந்தவர்கள், இந்த நண்பர்கள். இயேசுவைப்பற்றி கேள்விப்பட்டனர். தங்கள் நண்பனை அவரிடம் கொண்டு வந்தனர்.

தங்கள் நண்பனை எருசலேம் கோவிலுக்கு எடுத்துச்சென்று, இறைவனிடம் வேண்டலாம் என்று, பலமுறை, அவர்கள் எண்ணியிருக்கக்கூடும். ஆனால், நோயுற்ற ஒருவர், எருசலேம் கோவிலுக்குள் நுழையமுடியாது என்பதால், அவர்கள், அந்தத் திட்டத்தைக் கைவிட்டிருக்கவேண்டும். இறைவனின் அருள் பெற்றவர் என்று ஊர் முழுவதும் பேசப்பட்டுவரும் இயேசுவிடம் சென்றால், தங்கள் நண்பனுக்கு விடுதலை கிடைக்கும் என்ற நம்பிக்கையுடன் அவர்கள் தங்கள் நண்பனைச் சுமந்து அங்கு வந்தனர்.

வந்த இடத்தில் ஒரு பெரும் தடங்கல். இயேசு இருந்த வீட்டில் அதிக கும்பல். அந்த கும்பலில், அமர்ந்திருந்த பரிசேயரையும் திருச்சட்ட ஆசிரியர்களையும் கண்ட நண்பர்கள் தயங்கி நின்றனர். அவர்களைக் கடந்து, தங்கள் நண்பனை, கட்டிலோடு, வீட்டினுள் இருந்த இயேசுவிடம் கொண்டு போவதென்பது மிகவும் ஆபத்தானது. காரணம்? நோயாளி, கடவுளின் சாபம் பெற்றவன், அவனைத் தொட்டாலோ, அல்லது, அவன், தங்களைத் தொட்டாலோ, தாங்கள் தீட்டு பெறுவோம் என்பதை மக்கள் மனங்களில் ஆழப்பதித்தவர்கள் பரிசேயர்கள். எனவே, நோயுற்ற ஒருவன் கூட்டத்திற்குள் வந்துவிட்டான், அதுவும் தங்களைத் தீட்டுப்படுத்திவிட்டான் என்பதைக் கண்டுபிடித்தால், அவனுக்குரிய தண்டனை வழங்குவதில் அவர்கள் குறியாய் இருப்பர் என்பதை அந்த நான்கு நண்பர்களும் நன்கு அறிந்திருந்தனர்.

பரிசேயர்களின் சித்திரவதைக்கு உள்ளாக்காமல், தங்கள் நண்பனை இயேசுவிடம் கொண்டு சேர்ப்பது எப்படி என்று கொஞ்ச நேரம் குழம்பினர், அந்நால்வரும்.. திடீரென தோன்றியது அந்த ஒளி, ஒரு புது பாதை தெரிந்தது. இயேசு நின்ற இடத்திற்கு மேலிருந்த கூரையைப் பிரித்து, தங்கள் நண்பனை இயேசுவுக்கு முன்பு இறக்கினார்கள். இவர்களது நம்பிக்கையை, ஒரு வெறி என்று கூட சொல்லலாம்.

கட்டிலோடு வீட்டின் கூரை மீது நால்வர் ஏறியது, ஓடுகளைப் பிரித்தது என்று, அவர்கள் செய்தது அனைத்தும், மிகவும் ஆபத்தான செயல்கள். இயேசு போதித்துக்கொண்டிருந்த வீடு ஒரு மாளிகை அல்ல, எளிய வீடு. அந்த வீட்டுக் கூரையின் மீது நான்கு, ஐந்து பேர் ஏறினால், கூரை முழுவதும் உடைந்துவிடும் ஆபத்து இருந்தது. வீட்டின் கூரை முழுவதும் உடைந்திருந்தால்... கீழே இருந்த பலருக்கும், இயேசுவுக்கும் சேர்த்து, ஆபத்து வந்திருக்கும். இப்படி பல வகையிலும் ஆபத்து நிறைந்த செயலை அவர்கள் செய்தனர். இந்தக் கோணத்தில் சிந்திக்கும்போது, இதை நம்பிக்கை வெறி என்று சொல்லத் தோன்றுகிறது.

தலைக்கு மேலே வெள்ளம் போனபிறகு, சாண் என்ன, முழம் என்ன என்ற வரிகள் நினைவிருக்கலாம். நம்பிக்கை இழக்கச் செய்யும் இந்த வரிகளை, மற்றொரு கோணத்தில் சிந்திப்போம். தலைக்குமேல் போய்விட்ட வெள்ளத்தில் தத்தளிக்கும்போதுகரை தெரிந்தால், எஞ்சியிருக்கும் வலிமையை எல்லாம் திரட்டி, கரையை அடைய மாட்டோமா? அப்படித்தான் இந்த நண்பர்களும்.... பல ஆண்டுகளாய், பற்பல வெள்ளங்களைச் சந்தித்தவர்கள் இவர்கள். இதோ கரை நெருங்கிவிட்டது. கூரை நெருங்கி விட்டது என்றும் சொல்லலாம். இந்த நேரத்தில் பின்வாங்கக் கூடாது. எப்படியாவது இயேசுவுக்கு முன்னால் தங்கள் நண்பனைக் கொண்டு செல்லவேண்டும் என்ற வெறியுடன் அவர்கள் தங்கள் நண்பனை இயேசுவுக்குமுன் கொண்டு சென்றனர்.

"கொடுக்கிற தெய்வம் கூரையைப் பொத்துக்கொண்டு கொடுக்கும்" என்ற பழமொழியைப் பயன்படுத்துகிறோம். இந்த நிகழ்வில், கூரைக்கடியில் நின்ற தெய்வம் கொடுப்பார் என்ற நம்பிக்கையுடன் அந்த நால்வரும், கூரையைப் பிரித்தனர். ஆங்கிலத்திலும், "thorugh the roof" அதாவது, 'கூரையைப் பொத்துக்கொண்டு' என்ற சொற்றொடர் பயன்படுத்தப்படுகிறது. பொருள்களின் விலை மிக அதிகமாகும்போது, அல்லது, நிலைமை கட்டுக்கடங்காமல் செல்லும்போது, "thorugh the roof" என்ற சொல்லாடல் பயன்படுத்தப்படுகிறது. இந்தப் புதுமையிலோ, முடக்குவாதத்தால் கட்டிப் போடப்பட்டிருந்த தங்கள் நண்பனை, இயேசு விடுவிப்பார் என்ற நம்பிக்கையுடன் இந்த நால்வரும் 'கூரையைப் பொத்துக்கொண்டு' தங்கள் நண்பனை, இயேசுவுக்கு முன் சமர்ப்பித்தனர்.

எத்தகையைச் சூழலிலும், குறிப்பாக, அது, எதிர்மறை விளைவுகள் கொண்ட சூழல் என்றால், அதுதான் விதி என்று முடங்கிவிடாமல், அடுத்த முயற்சியை எடுக்கவேண்டும். எடுக்கும் முயற்சிகளுக்கு தடைகள் வரும்போது, புதிய முயற்சிகளைச் சிந்திக்கவேண்டும். அந்த முயற்சிகள், இதுவரை யாரும் மேற்கொள்ளாத, ஆபத்தான முயற்சிகள் என்றாலும், இறைவன் மீது நம்பிக்கை கொண்டு, அம்முயற்சிகளைத் தொடர வேண்டும் என்ற பல்வேறு பாடங்களை, நான்கு நண்பர்களும் நமக்கு இன்று சொல்லித் தருகின்றனர். நண்பர்களின் இந்த முயற்சிக்கு இயேசு பதில் மொழியாக ஆற்றிய புதுமையையும், அதற்கு, சூழ இருந்தோரிடம் உண்டான மாற்றங்களையும் நாம் அடுத்தத் தேடலில் சிந்திப்போம்.

நாம் இந்த புதனன்று துவங்கும் தவக்காலம், நன்மைகளை நோக்கி முயற்சிகளை மேற்கொள்ள நம்மை அழைக்கும் காலம். நம்முடன், நம் அயலவரையும் ஆண்டவரிடம் சுமந்து செல்ல நாம் அழைக்கப்பட்டுள்ளோம். நமது தவக்காலப் பயணத்தில், இந்த நான்கு நண்பர்களைப் போல், நாம் நம்பிக்கையுடன் முன்னேற, இறைவனின் அருளை இறைஞ்சுவோம்.



No comments:

Post a Comment