28 July, 2020

விவிலியத்தேடல்: லூக்கா நற்செய்தி – கைம்பெண்ணுக்கு கருணைப் பரிசு 2



Smoke from the incense sticks

விதையாகும் கதைகள் : கடவுளுக்கும் கரி பூசும் சுயநலம்

பக்தர் ஒருவர், ஒவ்வொருநாளும் கோவிலுக்குச் செல்வார். கோவிலில் வைக்கப்பட்டிருந்த பல தெய்வங்களில், அவர் மனதுக்குப் பிடித்த ஒரு தெய்வத்தை மட்டும் தினமும் தொழுதுவிட்டுத் திரும்புவார். தான் வாங்கிச்செல்லும் ஊதுபத்திகளை, அந்தத் தெய்வத்திற்கு முன் கொளுத்தி வைத்து வணங்குவார்.
ஒவ்வொருநாளும், அவ்வாறு வணங்கும்போது, அவருக்குள் ஒரு சிறு நெருடல் உருவாகும். தனக்குப் பிடித்த தெய்வத்திற்கென்று தான் கொளுத்தி வைக்கும் ஊதுபத்திகளின் நறுமணப்புகை, மற்ற தெய்வங்களுக்கும் செல்கிறதே என்று, பக்தருக்குள் இலேசான எரிச்சல் உண்டாகும்.
தன் நெருடலையும், எரிச்சலையும் சமாளிக்க, அவர் ஒரு வழியைக் கண்டுபிடித்தார். அடுத்த நாள், அவர், ஊதுபத்திகளைக் கொளுத்தி வைத்தபோது, அந்தப் புகை, தன் தெய்வத்தை மட்டும் சென்று சேரவேண்டும் என்ற எண்ணத்துடன், அந்த ஊதுபத்திகளை சுற்றி, ஒரு குழாயையும் பொருத்தி வைத்தார். அவர் எதிர்பார்த்தவாறே, நறுமணப்புகை, நேராக, அவரது தெய்வத்தை மட்டுமே சேர்ந்தது. பக்தருக்கு பெரும் திருப்தி. இவ்வாறு அவர் தொடர்ந்து செய்து வந்ததால், நாளடைவில், அந்தப் புகையால், அவருக்குப் பிடித்தமான தெய்வத்தின் முகம் கறுத்துப்போனது.
தெய்வ வழிபாட்டிலும், தான், தனது என்ற குறுகிய வட்டங்களை வரையும் சுயநலம் புகுந்தால், கடவுளின் முகத்தில் நாம் கரி பூசிவிடக்கூடும், எச்சரிக்கை! இறைவனின் பெயரால் நாம் எழுப்பிவரும் தடுப்புச் சுவர்களை தகர்த்தெறிந்தால் மட்டுமே, உண்மை இறைவனை நம்மால் வழிபடமுடியும்.

Jesus meeting the widow of Nain


லூக்கா நற்செய்தி கைம்பெண்ணுக்கு கருணைப் பரிசு 2

2016ம் ஆண்டு, கத்தோலிக்கத் திருஅவையில், இரக்கத்தின் சிறப்பு யூபிலி சிறப்பிக்கப்பட்ட வேளையில், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் வழங்கிய புதன் மறைக்கல்வி உரை ஒன்றில், நயீன் ஊரைச்சேர்ந்த கைம்பெண்ணின் மகனை இயேசு உயிர்ப்பித்த புதுமையை மையப்படுத்திப் பேசினார். இப்புதுமையில் புதைந்துகிடக்கும் சில நுணுக்கமான விடயங்களை, தனக்கே உரிய பாணியில் திருத்தந்தை விளக்கிக் கூறினார். அன்று, அவர் வழங்கிய ஒரு சில எண்ணங்களை, இன்றையத் தேடலில் நாம் மீண்டும் அசைபோட முயல்வோம்.

இறந்த ஒருவருக்கு, இயேசு, மீண்டும் உயிர்தரும் புதுமை, நான்கு நற்செய்திகளில், மூன்று முறை மட்டுமே இடம்பெற்றுள்ளது. தொழுகைக்கூடத் தலைவர் யாயீரின் மகளுக்கு உயிர்தரும் புதுமை (மத்தேயு 9:18-26; மாற்கு 5:21-43; லூக்கா 8:40-56), மார்த்தா, மரியா ஆகியோரின் சகோதரரான இலாசருக்கு உயிர்தரும் புதுமை (யோவான் 11:1-44), மற்றும், நாம் தற்போது தேடலை மேற்கொண்டுள்ள நயீன் ஊரைச்சேர்ந்த கைம்பெண்ணின் மகனுக்கு இயேசு உயிர்தரும் புதுமை (லூக்கா 7:11-17).

முதல் இரு புதுமைகளில், நோயுற்றவர் அல்லது, இறந்தவர் சார்பில், இயேசுவிடம் விண்ணப்பங்கள் விடுக்கப்பட்டன. நயீன் ஊரிலோ, யாருடைய விண்ணப்பமும் இன்றி, இயேசு, தானாகவே முன்வந்து, இப்புதுமையைச் செய்கிறார். உயிர் தருதல் என்பது, மிக அரிதான, அற்புதமான புதுமைதான். இருப்பினும், அதைவிட, இப்புதுமையின் இதயத் துடிப்பாக விளங்குவது, அந்தக் கைம்பெண் மீது இயேசு காட்டிய பரிவு என்ற கருத்துடன், திருத்தந்தை, தன் மறைக்கல்வி உரையைத் துவக்கினார். நற்செய்தியாளர் லூக்கா, இப்புதுமையில் பல நுணுக்கங்களைப் பதிவு செய்துள்ளார் என்று கூறியத் திருத்தந்தை, இப்புதுமையின் அறிமுகப் பகுதியில் கூறப்பட்டுள்ள இரு வேறுபட்ட கூட்டத்தினரைக் குறித்து அழகாக விவரித்தார்:

"நயீன் என்ற சிறு நகரத்தின் வாயிலில், இரு குழுக்களைச் சேர்ந்தவர்கள், எதிரெதிரே வந்தனர். இவ்விரு குழுவினரும், ஒருவருக்கொருவர் அறிமுகமானவர்கள் அல்ல. அவர்களிடையே, பொதுவான விடயங்கள் எதுவும் கிடையாது. சீடரும், பெருந்திரளான மக்களும்’ (லூக்கா 7:11) இயேசுவைப் பின்தொடர்ந்து, ஊருக்குள் செல்ல முற்பட்டனர்; ஊருக்குள்ளிருந்து வந்தவர்கள், உயிரற்ற ஓர் இளைஞனை சுமந்தவண்ணம், கைம்பெண்ணான அவரது தாயுடன் நடந்து வந்தனர்" என்று திருத்தந்தை, இச்சூழலை விவரித்தார்.

இவ்விரு கூட்டத்தினரும் எதிரெதிர் திசைகளில் வந்தது மட்டுமல்ல, அவர்களின் மனநிலையும் எதிரெதிர் துருவங்களாய் இருந்தன. இதைப் புரிந்துகொள்ள, நம் நினைவுகளைச் சிறிது பின்னோக்கி நகர்த்துவோம். லூக்கா நற்செய்தி, 7ம் பிரிவில், 11 முதல் 17 முடிய உள்ள 7 இறைவாக்கியங்களில், கைம்பெண்ணின் மகன் உயிர் பெறும் புதுமை சொல்லப்பட்டுள்ளது. அதற்கு முன்னதாக, 7ம் பிரிவின் முதல் பத்து இறைவாக்கியங்களில், நூற்றுவர் தலைவரின் பணியாளர் குணமடைந்த புதுமை சொல்லப்பட்டுள்ளது.

அந்தப் புதுமை முடிந்த கையோடு, இயேசுவுடன், சீடரும், பெருந்திரளான மக்களும் நயீன் நகருக்குச் சென்றனர் என்ற கோணத்தில் கற்பனை செய்துபார்த்தால், இயேசுவைச் சூழ்ந்து சென்ற கூட்டத்தில் இருந்தவர்களின் மனநிலையைப் புரிந்துகொள்ளலாம். சீடர்களும், சூழ இருந்தவர்களும், நூற்றுவர் தலைவரின் பணியாளர் குணமடைந்த புதுமையைப்பற்றி பெருமையாகப் பேசியவாறே, அந்நகரின் வாயிலை அடைந்திருக்க வேண்டும். உரோமையப் படைத்தளபதி ஒருவரே, இயேசுவின் சக்தியை உணர்ந்துவிட்டார் என்று, தங்களுக்குள் பேசியபடி வந்த அக்கூட்டத்தினரின் உள்ளமெல்லாம் பெருமையால் நிறைந்திருக்கும்; எனவே, அவர்கள் தலை நிமிர்ந்து, ஊரை நோக்கி நடந்து சென்றிருக்கவேண்டும்.

இதற்கு முற்றிலும் மாறாக, ஊருக்குள்ளிருந்து வந்த கூட்டத்திலோ, வெறுமையும், வேதனையும் நிறைந்திருந்தன. அவர்கள் மெளனமாக, துயரத்துடன், தலையைத் தாழ்த்தியபடி நடந்து வந்திருக்கவேண்டும்.

முன்பின் அறிமுகம் இல்லாத இவ்விரு கூட்டத்தினரும், மாறுபட்ட மனநிலைகளுடன் இருந்ததால், ஒருவரையொருவர் கடந்து சென்றிருக்கவேண்டும் என்று இச்சூழலை விவரித்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், அத்தகையச் சூழலில், இயேசு ஒரு மாற்றத்தைக் கொணர்ந்தார் என்பதை, தன் புதன் மறைக்கல்வி உரையில் சுட்டிக்காட்டினார். கைம்பெண்ணான தாயைக் கண்டு, பரிவுகொண்டு, "அழாதீர்" என்று முதலில் அவரைத் தேற்றிய இயேசு, பின்னர், தன் புதுமையை ஆற்றினார். இஸ்ரயேல் சமுதாயத்தில் ஒரு கைம்பெண்ணின் நிலை என்ன என்பதை, நன்கு உணர்ந்திருந்த இயேசு, இப்புதுமையை, எவ்வித அழைப்போ, விண்ணப்பமோ இன்றி ஆற்றினார்.

யூத சமுதாயத்தில், பொதுவாகவே, பெண்கள் குடிமக்களுக்குரிய உரிமைகள் அதிகமின்றி வாழ்ந்தனர். அதிலும், கைம்பெண்கள், இன்னும் பரிதாபமான நிலையில் வாழ்ந்துவந்தனர். நிலம், வீடு, சொத்து என்று, எவ்வித உரிமையும் இன்றி, ஒரு பெண்ணின் வாழ்வு, கணவரைச் சார்ந்தே அமைந்திருந்தது. எனவே, கணவனின் மறைவுக்குப்பின், சமுதாயத்தின் கருணையால் வாழவேண்டிய நிலைக்கு கைம்பெண்கள் தள்ளப்பட்டனர். இவ்வாறு, சமுதாயத்தின் கீழ்மட்டத்திற்குத் தள்ளப்பட்டிருந்த, கைம்பெண்களின் நம்பிக்கையாக தான் இருப்பதாக, இறைவாக்கினர்கள் வழியே இறைவன் கூறியுள்ளார்:
எரேமியா 49:11
ஆண்டவர் கூறுவது இதுவே: "அனாதைகளைப்பற்றிக் கவலை கொள்ளாதே. நான் அவர்களை வாழவைப்பேன். உன் விதவைகள் என்னில் நம்பிக்கை வைக்கட்டும்."
அத்துடன், கைம்பெண்களுக்கு எதிராக தீங்கிழைப்போருக்கு இறைவனே நீதி வழங்குவார் என்று, விவிலியத்தின் பல இடங்களில் எச்சரிக்கைகள் ஒலிக்கின்றன. இதோ, இரு எடுத்துக்காட்டுகள்:
விடுதலைப் பயணம் 22:22-23
விதவை, அனாதை யாருக்கும் நீ தீங்கிழைக்காதே. நீ அவர்களுக்குக் கடுமையாகத் தீங்கிழைத்து அவர்கள் என்னை நோக்கி அழுது முறையிட்டால், நான் அவர்கள் அழுகுரலுக்குச் செவிசாய்ப்பேன்.
மலாக்கி 3:5
அப்போது, “சூனியக்காரர், விபசாரிகள், பொய்யாணையிடுவோர், கூலிக்காரருக்குக் கூலி கொடுக்காத வம்பர், கைம்பெண்ணையும் அனாதைகளையும் கொடுமைப்படுத்துவோர், அன்னியரின் வழக்கைப் புரட்டுவோர், எனக்கு அஞ்சி நடக்காதோர் ஆகிய அனைவர்க்கும் எதிராகச் சான்று பகர்ந்து தண்டனைத் தீர்ப்பு வழங்க நான் விரைந்து வருவேன்,” என்கிறார் படைகளின் ஆண்டவர்.
இஸ்ரயேல் மக்கள், வேற்றுநாட்டில் அடிமைகளாய் இருந்ததை மறவாமல் வாழவேண்டும் என்று, கடவுள் அவர்களுக்கு பலமுறை நினைவுறுத்தி வந்தார். அடிமைத்தனத்தால் துன்புற்ற அம்மக்கள், வாழ்வின் ஆதாரங்களை இழந்தோரை ஆதரிக்கவேண்டும் என்றும் அறிவுறுத்தி வந்தார்:
எசாயா 1:17
நன்மை செய்யக் கற்றுக்கொள்ளுங்கள்; நீதியை நாடித் தேடுங்கள்; ஒடுக்கப்பட்டோருக்கு உதவி செய்யுங்கள்; திக்கற்றோருக்கு நீதி வழங்குங்கள்; கைம் பெண்ணுக்காக வழக்காடுங்கள்.

அன்னியரை, அனாதைகளை, கைம்பெண்களை பரிவுடன் நடத்தவேண்டும் என்று, மோசே வழியே இறைவன் கட்டளையிட்டார். அந்தப் பரிவின் ஒரு வெளிப்பாடாக, அறுவடை நேரத்தில், நிலத்தின் உரிமையாளர், தன் நிலத்தையோ, திராட்சைத் தோட்டத்தையோ முழுக்க, முழுக்க அறுவடை செய்யக்கூடாது என்று, சட்டம் இயற்றப்பட்டது. காரணம், நிலத்திலோ, தோட்டத்திலோ அறுவடைக்குப்பின் விழுந்து கிடக்கும் தானியங்களும், பழங்களும் அன்னியருக்கு, அனாதைகளுக்கு, கைம்பெண்களுக்கு விட்டுவைக்கப்பட வேண்டும் என்று காரணமும் சொல்லப்பட்டது.
இணைச்சட்டம் 24: 19-22
உன் வயலில், விளைச்சல் அறுவடை செய்யும்போது, அரிக்கட்டினை மறந்து வயலிலே விட்டுவந்தால், அதை எடுக்கத் திரும்பிப் போகாதே. அதை அன்னியருக்கும் அனாதைக்கும் கைம்பெண்ணுக்கும் விட்டுவிடு. அப்போது நீ மேற்கொள்ளும் செயல்கள் அனைத்திலும் உன் கடவுளாகிய ஆண்டவர் உனக்கு ஆசி வழங்குவார். நீ உன் ஒலிவ மரத்தை அடித்து உதிர்க்கும்போது, உதிராததைப் பறிக்காதே. அதை அன்னியருக்கும் அனாதைக்கும் கைம்பெண்ணுக்கும் விட்டுவிடு. நீ உன் திராட்சைத் தோட்டக் கனிகளைச் சேகரித்தபின், பொறுக்காமல் கிடப்பதை எடுக்கச் செல்லாதே. அதை அன்னியருக்கும் அனாதைக்கும் கைம்பெண்ணுக்கும் விட்டுவிடு. எகிப்து நாட்டில் நீ அடிமையாய் இருந்ததை நினைவிலிருத்தி, இவற்றைச் செய்யும்படி, நான் உனக்குக் கட்டளையிடுகிறேன்.

யூத சமுதாயத்தால் கடைநிலைக்குத் தள்ளப்பட்டிருந்த நயீன் கைம்பெண்ணுக்கு இருந்த ஒரே நம்பிக்கையான அவரது மகன், இதோ, பிணமாக எடுத்துச் செல்லப்படுகிறார். தான் பெற்ற பிள்ளையைப் புதைப்பதுதான், பெற்றோருக்குப் பெரும் வேதனை, பெரும் தண்டனை. தான் பெற்ற பிள்ளை, சாகும் நிலையில் இருக்கும்போது, எத்தனை பெற்றோர், அந்தப் பிள்ளைக்குப் பதிலாக, தங்கள் உயிரை எடுத்துகொள்ளுமாறு இறைவனிடம் வேண்டுவதை நாம் பார்த்திருக்கிறோம்.
நயீன் கைம்பெண்ணும் இப்படி வேண்டியிருப்பார். தன் ஒரே மகனைக் காப்பாற்ற, சாவோடு போராடியிருப்பார். அவரது வேண்டுதல்கள், போராட்டங்கள் எல்லாம் தோல்வியடைந்து, இப்போது அப்பெண், வாழ்வின் விளிம்புக்கு, விரக்தியின் எல்லைக்குத் தள்ளப்பட்டிருந்தார். மகனது அடக்கத்தை முடித்துவிட்டு, தன் வாழ்வையும் முடித்துக்கொள்ளலாம் என்ற எண்ணத்துடன், ஒரு நடைபிணமாக, அந்த சவ ஊர்வலத்தில், நடந்து சென்றிருக்கலாம், அந்தக் கைம்பெண். அவ்வேளையில், அவரது வாழ்வில் இயேசு நுழைகிறார்.

கொரோனா தொற்றுக்கிருமியின் கொள்ளைநோய் காலத்தில், எதிர்காலத்தைக் குறித்த பல பாரமான கேள்விகளால் மனம் தளர்ந்து, தங்கள் உயிரை மாய்த்துக்கொண்ட இளையோரைக் குறித்து நாம் அவ்வப்போது செய்திகளைக் கேட்டுவருகிறோம். இதுபோன்ற பல்வேறு காரணங்களால், தங்கள் உறவுகளை இழந்து, தனித்து விடப்பட்டுள்ள கைம்பெண்களை இவ்வேளையில் எண்ணிப்பார்ப்போம். நயீன் கைம்பெண்ணின் வாழ்வில் இயேசு குறுக்கிட்டதுபோல், அவர்கள் வாழ்விலும் இறைவன் குறுக்கிட்டு, நம்பிக்கையை வளர்க்கவேண்டும் என்ற வேண்டுதலுடன், இன்றையத் தேடலை நாம் நிறைவு செய்வோம்.

No comments:

Post a Comment