Vintage factory workers
விதையாகும்
கதைகள் : அனைவருக்கும் பாதிப்பு
தன் பாவங்களுக்கு மன்னிப்பு பெறும் நோக்கத்துடன், தொழிலாளி
ஒருவர், ஒப்புரவு அருளடையாளம் பெறுவதற்காக, கோவிலுக்குச்
சென்றார். அங்கு அமர்ந்திருந்த அருள்பணியாளரிடம் சென்று,
"சாமி, நான் வேலை செய்யும் தொழிற்சாலையிலிருந்து ஒரு சுத்தியலைத் திருடிவிட்டேன்.
மற்ற தொழிலாளிகள், இதைவிட பெரிய பொருள்களைத் திருடுவது எனக்குத் தெரியும். நான் சுத்தியலைத்
திருடியதால், அந்த நிறுவனத்திற்கு எவ்வகையிலும் பாதிப்பு இல்லை" என்று
கூறினார் தொழிலாளி.
அந்த அருள்பணியாளர், தொழிலாளியிடம், அவர்
பணிபுரியும் அத்தொழிற்சாலையைப் பற்றி செய்தித்தாளில் தான் படித்த ஒரு விவரத்தைக்
கூறினார். அதாவது, அத்தொழிற்சாலையில், திருடப்படும்
பொருள்களால், ஒவ்வொரு மாதமும், அந்நிறுவனத்திற்கு
50,000 டாலர்கள் இழப்பு ஏற்படுகிறது என்றும், எனவே, ஓராண்டில்,
அந்நிறுவனம், 600,000 டாலர்கள் இழப்பைச் சந்திக்கிறது என்றும்,
அச்செய்தியில் தான் வாசித்ததாக அருள்பணியாளர் கூறினார்.
தொடர்ந்து அவர்,
அத்தொழிலாளியிடம், "இந்த இழப்பை ஈடு செய்ய அந்நிறுவனம், தான்
விற்பனை செய்யும் பொருள்களை கூடுதல் விலைக்கு விற்கவேண்டியுள்ளது. அந்நிறுவனத்தில்
உருவாகும் வாகனங்கள், வீட்டுப் பொருள்கள் அனைத்தும்,
கூடுதல் விலையில் விற்கப்படுகின்றன" என்பதையும் கூறினார். "நீங்கள்
திருடிய சுத்தியலுக்காக, அந்நிறுவனத்தின் பொருள்களை வாங்கும்
அனைவருமே பணம் தரவேண்டியுள்ளது" என்று அருள்பணியாளர் கூறி முடித்தார்.
சமுதாயத்தில் நிகழும் நேர்மை குறைவான செயல் ஒவ்வொன்றுக்கும் உரிய
விலையை, அனைவரும் வழங்கவேண்டியுள்ளது.
But, at your word…
லூக்கா
நற்செய்தி – பெருமளவு மீன்பிடிப்பு புதுமை 3
அந்த சிற்றூரைச் சேர்ந்த இளைஞர் ஒருவர், ஒரு மூங்கில்
கழியையும், கூடையையும் எடுத்துக்கொண்டு, ஊர்
எல்லையில் ஓடிக்கொண்டிருந்த ஓடையில் மீன்பிடிக்கச் சென்றார். சிறிது நேரம் சென்று, அவ்வூரின்
பணக்காரக் குடும்பங்களைச் சேர்ந்த மூன்று இளையோர், அந்த
ஓடைக்கு மீன்பிடிக்க வந்தனர். அவர்கள், விலையுயர்ந்த
மீன்பிடிக்கும் தூண்டில்களுடன் வந்திருந்தனர். மூங்கில் கழியுடன் மீன்பிடிக்க வந்திருந்த
இளைஞனை அவர்கள் கேலிசெய்து, சிரித்துக்கொண்டிருந்தனர்.
ஒருமணி நேரம் சென்றது. அந்த இளைஞன், தன்
மூங்கில் கழியின் உதவியால், பல மீன்களைப் பிடித்து, கூடையில்
நிரப்பிக்கொண்டு, புறப்படத் தயாரானார். பணக்கார இளைஞர்களுக்கோ அதுவரை ஒரு மீன்கூட
அகப்படவில்லை. அவர்கள் அந்த இளைஞனிடம், "மீன்பிடிக்கும்
தூண்டில் கொண்டு எங்களால் மீன்பிடிக்க முடியவில்லை; மூங்கில்
கழிகொண்டு உன்னால் எப்படி மீன்பிடிக்க முடிந்தது?"
என்று கேட்டனர். அந்த இளைஞன் அவர்களைப் பார்த்து,
"என் குடும்பத்தினருக்குத் தேவையான உணவுக்காக நான் மீன்பிடித்தேன்; நீங்களோ, பொழுதுபோக்கிற்காக
மீன்பிடித்துக் கொண்டிருக்கிறீர்கள்" என்று சொல்லிவிட்டு, தன்
இல்லம் நோக்கிச் சென்றார்.
பொழுது போக்கிற்காக மீன் பிடிப்பவர்களைவிட, உணவுக்காக, வாழ்வுக்காக
மீன்பிடிக்கும்போது, இன்னும் கூடுதல் வெற்றியடைய வழி உண்டு. ஆனால், அதிலும், ஒவ்வொரு
நாளும் வெற்றியடைவது உறுதி அல்ல.
இளமை முதல், கெனசரேத்து
ஏரியில், மீன்பிடிப்பதை தன் வாழ்வாகக் கொண்டிருந்த சீமோன், சில
நாள்கள் வெற்றியோடும், வேறு சில நாள்கள், தோல்வியோடும், கரைக்குத்
திரும்பியிருப்பார். இயேசுவைச் சந்திப்பதற்கு முந்திய இரவு, தோல்வியைச்
சந்தித்துத் திரும்பியிருந்தார், சீமோன்.
மீன்கள் எதுவும்
கிடைக்காத அந்த இரவைத் தொடர்ந்து, "மீனவர் படகைவிட்டு இறங்கி, வலைகளை அலசிக்கொண்டிருந்தனர்" (லூக்கா
5:2) என்ற கூற்றை
நற்செய்தியாளர் லூக்கா பதிவுசெய்துள்ளார். ஒன்றுமே கிடைக்காத அந்த வலைகளை மீனவர்கள்
அலசிக்கொண்டிருந்தபோது, கடந்த இரவு முழுவதும் அவர்கள் மேற்கொண்ட வீணான உழைப்பை, அந்த வலைகள்
மீண்டும், மீண்டும் அவர்களுக்கு நினைவுறுத்தியிருக்கும். ஒருவேளை, அந்த வலையில், மீன்கள் சிக்கியிருக்கவேண்டிய
இடத்தில், குப்பைகள் சிக்கியிருந்த்தால், அவர்கள் வலைகளை அலசவேண்டியிருந்தது.
நம் வாழ்விலும், நாம் மேற்கொண்ட முயற்சிகள், அவற்றிற்கு ஈடான பலனைத் தராமல், குப்பைகள் போன்ற ஏனைய பிரச்சனைகளைக் கொணர்ந்த
நேரங்களை நாம் அறிவோம். அத்தகைய ஒரு மனநிலையில், சீமோனும், அவரது நண்பர்களும் வலைகளை அலசிக்கொண்டிருந்தனர்.
அவ்வேளையில், அவரிடம், இயேசு, ஒரு
சவாலை விடுக்கிறார். பகல் வேளையில், ஏரியின்
ஆழத்திற்குச் சென்று மீன்பிடிக்கச் சொல்கிறார். இரவு நேரத்தில், மீன்பிடித்துப்
பழகிப்போனவர், சீமோன். அதுவும், ஏரியின்
ஆழமான பகுதியில் அல்லாமல், ஆழம் குறைவானப் பகுதிகளிலேயே மீன்கள்
கிடைக்கும் என்பதை, சீமோனும், அவருடன் இருந்த தொழிலாளர்களும், அனுபவம்
வழியே கற்று வைத்திருந்தனர். அனுபவத்தில் அவர்கள் கற்றுவைத்திருந்த அனைத்துப்
பாடங்களையும் புரட்டிப்போடும் வண்ணம், இயேசுவின்
அழைப்பு வந்து சேர்ந்தது. பகல் வேளையில், ஏரியின்
ஆழத்திற்குச் சென்று மீன்பிடிக்க இயேசு சீமோனை அழைத்தார்.
இயேசு தந்த ஆலோசனைக்கு, சீமோன்
பலவழிகளில் பதில் சொல்லியிருக்கலாம். மீன்பிடிப்பதைக் குறித்தும், கெனசரேத்து
ஏரியைக் குறித்தும் இயேசுவுக்கு ஒன்றும் தெரியாது என்று சீமோன் நினைத்திருந்தால், அவரது
ஆலோசனையை, ஒரு நகைச்சுவை துணுக்கு என்று கருதி, அவரும், உடனிருந்தோரும்
கேலி செய்திருக்கலாம்.
அல்லது, முந்திய இரவு அடைந்த தோல்வியால், சீமோன், உச்சக்கட்ட
எரிச்சலில் இருந்திருந்தால், இயேசுவை, தன்
படகிலிருந்து இறங்கிச் செல்லுமாறு கூறியிருக்கலாம்.
அல்லது, நாம் சென்ற வாரம் சிந்தித்ததைப்போல், இயேசு
கூறும் ஆலோசனை சாத்தியமற்றது என்பதை, அவரிடம்
பக்குவமாக எடுத்துச் சொல்லியிருக்கலாம்.
இத்தகைய வழிகளில் பதிலளிக்காமல், சீமோன்
மறுமொழியாக, “ஐயா, இரவு
முழுவதும் நாங்கள் பாடுபட்டு உழைத்தும் ஒன்றும் கிடைக்கவில்லை; ஆயினும்
உமது சொற்படியே வலைகளைப் போடுகிறேன்” என்றார் (லூக்கா
5:5) என்ற சொற்களை நற்செய்தியாளர் லூக்கா
பதிவு செய்துள்ளார்.
சீமோன் கூறிய மறுமொழியை, இரு
பகுதிகளாகப் பிரித்து பொருள் தேட முயல்வோம். “ஐயா, இரவு
முழுவதும் நாங்கள் பாடுபட்டு உழைத்தும் ஒன்றும் கிடைக்கவில்லை”
என்ற முதல் பகுதியில், சீமோன், தன் உண்மை நிலையை, மூடி
மறைக்காமல், மிகைப்படுத்தாமல் எடுத்துரைக்கிறார்.
'பாடுபட்டு உழைத்தும் ஒன்றும் கிடைக்கவில்லை' என்ற
கூற்றை, நாமும் பலமுறை கூறியிருக்கிறோம், அல்லது, நம் உறவினர்களும், நண்பர்களும்
சொல்லக் கேட்டிருக்கிறோம். ‘ஒன்றும்
கிடைக்கவில்லை’ என்று சீமோன் கூறுவது, கானா
திருமணத்தில், கூறப்பட்ட ஒரு கூற்றை, நினைவுக்குக் கொணர்கிறது.
கானா திருமண விருந்தில், பந்தியில் பரிமாற 'திராட்சை
இரசம் இல்லை' என்று, அன்னை மரியா, இயேசுவிடம்
கூறினார். தன் மகனிடம் சென்று, "திராட்சை
இரசம் தீர்ந்துவிட்டது" (யோவான் 2:3) என்று
அவர் கூறியதை, அழகானதொரு செபம் என்று, ஆன்மீக வழிகாட்டிகள் கூறியுள்ளனர். ‘இரசம்
தீர்ந்துவிட்டது’ என்பது, சாதாரணமான, எதார்த்தமான
ஒரு கூற்று. அதை செபம் என்ற கோணத்தில் எண்ணிப்பார்க்க நாம் தயங்கலாம்.
ஆனால், ஆழமாகச் சிந்தித்தால், இது
ஓர் அழகிய செபம் என்பதைப் புரிந்துகொள்ளலாம். செபம் என்றதும், இது
வேண்டும், அது வேண்டும் என்ற நீண்ட பட்டியல் ஒன்று நம் உள்ளத்தில் விரியும்.
இல்லையா? கடவுளிடம் நீண்ட பட்டியல்களை அனுப்புவதற்கு பதில், உள்ளத்தைத்
திறந்து வைப்பது, நம் உண்மை நிலையை, இயலாமையைச் சொல்வது, ஆகியவை, இன்னும் அழகான
செபங்கள். அத்தகைய செபத்தைச் சொல்வது, அவ்வளவு எளிதல்ல. அப்படி ஒரு செபத்தைச்
சொல்வதற்கு, ஆழ்ந்த நம்பிக்கை வேண்டும்.
அத்தகைய நம்பிக்கையை, அன்று, கானா
திருமண விருந்தில் மரியா வெளிப்படுத்தினார். பந்தியில் பரிமாற திராட்சை இரசம்
இல்லை என்று தன் மகனிடம் கூறிய அன்னை மரியாவுக்கு, தன்
மகன், இந்தப் பிரச்சனையை எப்படியாவது தீர்த்து வைப்பார் என்பதில் அசைக்கமுடியாத
நம்பிக்கை இருந்தது. எனவே அவர் அருகில் இருந்த பணியாளரை நோக்கி, “அவர்
உங்களுக்குச் சொல்வதெல்லாம் செய்யுங்கள்” (யோவான்
2:5) என்றார்.
இதையொத்த ஒரு நம்பிக்கையை, சீமோன், அன்று
கெனசரேத்து ஏரியிலும் வெளியிட்டார். சீமோன் கூறிய மறுமொழியின் இரண்டாம் பகுதியில், "ஆயினும், உமது
சொற்படியே வலைகளைப் போடுகிறேன்" (லூக்கா
5:5) என்ற சொற்கள் வழியே, அவரது
நம்பிக்கையை வெளிப்படுத்தினார்.
19ம் நூற்றாண்டில் (1834-1892) வாழ்ந்த
Charles
Haddon Spurgeon என்ற புகழ்பெற்ற பாப்டிஸ்ட் மறையுரையாளர், "உமது
சொற்படியே" என்று சீமோன் கூறிய சொற்றொடரை மையப்படுத்தி
வழங்கியுள்ள கருத்துக்கள் அழகானவை. "உமது சொற்படியே" என்ற சொற்களை
அடித்தளமாகக் கொண்டு, தங்கள் வாழ்வை கட்டியெழுப்பிய பல உன்னத மனிதரை நாம்
விவிலியத்தில் சந்திக்கிறோம் என்று கூறிய Spurgeon அவர்கள், அந்தப்
பட்டியலை, நோவாவிடமிருந்து துவக்குகிறார்.
வெள்ளப்பெருக்கு வரும், எனவே, உன்னையும், உன்
குடும்பத்தினரையும் காப்பாற்றிக்கொள்ள ஒரு பேழையைச் செய்துகொள் (காண்க. தொ.நூ. 6:4)
என்று கடவுள் சொன்னதைக் கேட்டு, நோவா
பேழையைச் செய்தார். வெள்ளத்தின் அறிகுறி அறவே இல்லாத வறண்ட பூமி மீது, மழையின்
அறிகுறியே தெரியாத வானத்தின் கீழ், நோவா
அந்தப் பேழையைச் செய்தபோது, சூழ
இருந்தோர் அவரை மதியிழந்தவர் என்று கேலி செய்திருக்கவேண்டும். ஆனால், நோவா, 'கடவுள்
சொற்படியே' செயல்பட்டார்.
ஆபிரகாம், தான் பிறந்து வளர்ந்த நாட்டைவிட்டு, கடவுள்
காண்பித்த நாட்டுக்குச் சென்றபோது, அவருக்கு
வயது 75 (காண்க. தொ.நூ. 12:1-14). அவரது
ஒரே மகனை தனக்குப் பலியிடுமாறு கடவுள் கூறவே, அவரது
சொற்படியே ஈசாக்கைப் பலியிடச் செல்லும் ஆபிரகாமை தொடக்க நூலில் சந்திக்கிறோம் (காண்க.
தொ.நூ. 22:1-4).
கடவுளின் சொற்படியே செயலாற்றிய மோசே, கடலைப்
பிளந்து, மக்களை வழிநடத்திச் சென்றதையும், பாறையிலிருந்து
நீர் பெருகச் செய்ததையும், விடுதலைப்பயண நூலில் வாசிக்கிறோம்.
கடவுளின் சொற்படி யோசுவா செயலாற்றியதால், எரிகோ
நகரின் சுவர்கள் இடிந்து விழுந்தன (காண்க. யோசுவா 6:20).
Spurgeon அவர்கள்
கூறியுள்ள இந்தப் பட்டியலில், சிம்சோன், இறைவாக்கினர்கள்
என்று பலரைக் குறிப்பிட்டுள்ளார்.
இப்பட்டியலின் மகுடமாக, நாம்
அன்னை மரியாவை எண்ணிப்பார்க்கலாம். மனித அளவுகோல்களின்படி, நம்பமுடியாத,
ஏற்றுக்கொள்ளமுடியாத முறையில் தான் இறைவனின் தாயாகப்போவதை அறிந்த இளம்பெண் மரியா, “நான்
ஆண்டவரின் அடிமை; உம்சொற்படியே
எனக்கு நிகழட்டும்” (லூக்கா 1:38) என்று
கூறியதை, நற்செய்தியாளர் லூக்கா பதிவு செய்துள்ளார்.
தங்கள் வாழ்வின் பல்வேறு தருணங்களில், இயலாத, முடியாத
சூழல்களிலும், இறைவனின் சொற்படியே செயல்பட்ட உன்னத மனிதர்களின் வரிசையில், சீமோனும், அன்று, கெனசரேத்து
ஏரியில், இயேசுவிடம், "ஆயினும், உமது
சொற்படியே வலைகளைப் போடுகிறேன்" (லூக்கா
5:5) என்று கூறினார்.
இயேசுவின் மீது நம்பிக்கைகொண்டு அவரது சொற்படியே சீமோன் செயல்பட்டதால்,
கெனசரேத்து ஏரியில் நிகழ்ந்த பெருந்திரளான மீன்பிடிப்பையும், அதைக் கண்டதும், சீமோனிடம்
உருவான பதிலிறுப்பையும் நாம் அடுத்தத் தேடலில் சிந்திப்போம்.
No comments:
Post a Comment