04 May, 2021

விவிலியத்தேடல்: திருப்பாடல் 8 – இறை மாட்சியும் மானிட மேன்மையும் 2

David the shepherd

படிப்பதில் அக்கறைகாட்டாத குழந்தைகளிடம், "நீ ஒழுங்காப் படிக்கலன்னா, ஆடு மாடு மேய்க்கத்தான் போகணும்" என்ற எச்சரிக்கை விடப்படுவதை நாம் அறிவோம். படித்தவர்கள் பயன்படுத்தும் இந்த எச்சரிக்கையில், ஆடு, மாடு மேய்ப்பதற்கு அதிக அறிவு தேவையில்லை என்ற ஏளனம் வெளிப்படுகிறது.
ஏளனத்தை புறந்தள்ளிவிட்டு, உண்மையிலேயே சிந்தித்துப்பார்த்தால், ஆடு, மாடுகளை மேய்க்கும் தொழிலுக்குத் தேவையான நுணுக்கங்கள், நம்மை வியப்பில் ஆழ்த்தும். ஆடுகளை மேய்ப்பதற்கும், மாடுகளை மேய்ப்பதற்கும் பல வேறுபாடுகள் உண்டு. ஓர் அடிப்படை வேறுபாடு என்ன தெரியுமா? மாடுகளை மேய்ப்பவர் அவற்றின் பின்னே சென்று விரட்டவேண்டும். ஆடுகளை மேய்ப்பவர், அவற்றின் முன்னே சென்று வழிநடத்தவேண்டும்.

ஆடுகள் மேய்ப்பதில் ஆர்வம் கொண்டிருந்த இளைஞன் தாவீது, மேய்க்கும் தொழிலின் நுணுக்கங்களை அறிவதில் ஆர்வம் கொண்டிருந்ததைப்போலவே, தன்னைச் சுற்றியிருந்த இயற்கையிலும் ஆர்வம் கொண்டிருந்தார். அதன் எதிரொலியை, நாம், திருப்பாடல்களில் கேட்கிறோம். பகலில் பூவுலகின் அழகையும், இரவில் விண்மீன்கள் ஒளிர்ந்த வானத்தின் அழகையும் கண்டு இரசித்த தாவீது, அந்த அழகை உருவாக்கிய கலைஞனாகிய இறைவனை, ஆண்டவரே! எங்கள் தலைவரே! உமது பெயர் உலகெங்கும் எவ்வளவு மேன்மையாய் விளங்குகின்றது! உமது மாட்சி வானங்களுக்கு மேலாகவும் உயர்ந்துள்ளது(திருப்பாடல் 8:1) என்று, 8ம் திருப்பாடலின் ஆரம்பத்தில், புகழ்ந்து பாடுகிறார்.
இவ்வரிகளைக் கூறிய அதே மூச்சில் அவர், இறைவனின் படைப்பையும், வான்வெளி அதிசயங்களையும் கண்டுமகிழ, குழந்தைகளின் உள்ளம் தேவை என்பதை, இத்திருப்பாடலின் அடுத்தவரியில் கூறியுள்ளார்: பாலகரின் மழலையிலும் குழந்தைகளின் மொழியிலும் வலிமையை உறுதிப்படுத்தி உம் பகைவரை ஒடுக்கினீர் (திருப்பாடல் 8:2)

குழந்தைகளின் மழலை மொழியில் இறைவனின் புகழ் ஒலித்தது என்று மட்டும் கூறாமல், இந்தப் புகழ் ஒலியைக் கொண்டு, இறைவன், பகைவரை ஒடுக்கினார் என்று திருப்பாடலின் ஆசிரியர் கூறுவது, நம்மைச் சிந்திக்கத் தூண்டுகிறது. குழந்தைகளின் புகழ்மொழியால், பகைவர் ஒடுக்கப்பட்டனர் என்று, தாவீது கூறும் இக்கருத்தை, இயேசு, மதத்தலைவர்களிடம், நினைவுபடுத்திய நிகழ்வு, நம் நினைவில் நிழலாடுகிறது.

இயேசு, எருசலேம் நகருக்குள் நுழைந்த வேளையில், மக்கள், குறிப்பாக, குழந்தைகள் எழுப்பிய 'ஓசன்னா' வாழ்த்தொலி, அதிகாரவர்க்கத்திற்கு அச்சத்தை உருவாக்கியது. அதைத் தொடர்ந்து, இயேசு, எருசலேம் கோவிலைத் தூய்மைப்படுத்திய வேளையில், மதத் தலைவர்கள் இன்னும் பேரதிர்ச்சி அடைந்தனர். இதைத் தொடர்ந்து, அங்கு நிகழ்ந்ததை, நற்செய்தியாளர் மத்தேயு இவ்வாறு விவிரித்துள்ளார்:
மத்தேயு 21:14-16
பின்பு பார்வையற்றோரும் கால் ஊனமுற்றோரும் கோவிலுக்குள் இருந்த அவரை அணுகினர். இயேசு அவர்களைக் குணமாக்கினார். அவர் வியத்தகு செயல்கள் செய்வதையும் "தாவீதின் மகனுக்கு ஓசன்னா" என்று கோவிலுக்குள் சிறு பிள்ளைகள் ஆர்ப்பரிப்பதையும் கண்டு தலைமைக் குருக்களும், மறைநூல் அறிஞர்களும் கோபம் அடைந்தனர். அவர்கள் அவரிடம், "இவர்கள் சொல்வது கேட்கிறதா?" என, இயேசு அவர்களிடம், "ஆம்! "பாலகரின் மழலையிலும் குழந்தைகளின் மொழியிலும் உம்மைப் புகழ ஏற்பாடு செய்தீர்" என்று ஒருபோதும் மறைநூலில் படித்ததில்லையா?" என்று கேட்டார்.

மறைநூலின் 8ம் திருப்பாடலில், கூறப்பட்டுள்ள சொற்களை, மதத்தலைவர்கள் தொழுகைக்கூடங்களிலும், எருசலேம் ஆலயத்திலும் பலமுறை பயன்படுத்தியிருப்பர். இருப்பினும், அச்சொற்களின் முழுப்பொருளை அவர்கள் புரிந்துகொண்டனரா என்பது சந்தேகம்தான். அன்றும், இயேசு, அத்திருப்பாடலின் பொருளை அவர்களுக்குச் சுட்டிக்காட்டியபின், அவர்கள் உணர்ந்திருப்பார்களா என்பது சந்தகமே. அகந்தையில் வாழும் உள்ளங்கள், ஆண்டவனை உண்மையிலேயே புகழமுடியுமா என்பது கேள்விக்குறியே.

குழந்தைகளுக்குரிய பணிவான மனதை வளர்த்துக்கொள்வதால், வாழ்வின் ஆழமான உண்மைகளை உய்த்துணரலாம். இந்த எண்ணத்தைப் புரிந்துகொள்ள, அமெரிக்க அரசுத் தலைவராய் இருந்த Franklin Roosevelt அவர்களைப்பற்றி சொல்லப்படும் ஒரு கதை உதவியாக இருக்கும். அரசுத் தலைவர் Roosevelt அவர்களும், அவரது நெருங்கிய நண்பர் ஒருவரும், ஒருநாள், வெள்ளைமாளிகையில் சந்தித்து, நாள்முழுவதும், உலகின் பல பிரச்சனைகளைப்பற்றிப் பேசினார்கள். இரவு, அவர்கள் உறங்கச்செல்வதற்கு முன், அரசுத்தலைவர் Roosevelt அவர்கள், தன் நண்பரிடம், "வாருங்கள் நாம் தோட்டத்திற்குச் சென்று, விண்மீன்களைச் சிறிதுநேரம் பார்த்துவிட்டு வருவோம்" என்றார். Roosevelt அவர்கள், இவ்வாறு கூறியதன் காரணத்தை, நண்பரால் புரிந்துகொள்ள முடியவில்லை. இருந்தாலும், அவர் உடன் சென்றார். அவர்கள் தோட்டத்தில் நின்று, தெளிவாகத் தெரிந்த வானத்தையும் அங்கு கண்சிமிட்டிய விண்மீன்களையும் பார்த்தனர். ஒரு சில நிமிடங்கள் அமைதியாக விண்மீன்களைப் பார்த்தபின், Roosevelt அவர்கள், தன் நண்பரிடம், "சரி, நாம் எவ்வளவு சிறியவர்கள் என்பது இப்போது புரிகிறது. வாருங்கள், உறங்கச்செல்வோம்" என்று சொன்னார்.

அமெரிக்க அரசுத்தலைவராக இருந்ததால், இவ்வுலகம் முழுவதையும், தானே சுமப்பதுபோல், Roosevelt அவர்கள் உணர்வதற்கு வாய்ப்புக்கள் அதிகம் இருந்தன. ஆனால், இரவில், உறங்கச்செல்வதற்கு முன், அவர் மேற்கொண்ட இந்த சிறு பழக்கத்தின் வழியே, தன்னைப்பற்றிய உண்மையை அவரால் உணரமுடிந்தது. மேலோட்டமாகப் பார்த்தால், அரசுத்தலைவர் Roosevelt அவர்கள் செய்தது, குழந்தைத்தனமான ஒரு செயலாக நமக்குத் தெரியலாம். ஆனால், பரந்து விரிந்த வானத்தை, ஒருசில நிமிடங்கள், ஆழ்நிலை தியான உணர்வுடன் பார்த்தது, Roosevelt அவர்களுக்கு, அவரது உண்மை நிலையை, தெளிவாக உணர்த்தியிருக்கவேண்டும். அத்தகைய மனநிலையோடு Roosevelt அவர்கள் உறங்கச்சென்றது, அவர் தனக்குத்தானே கற்றுத்தந்த ஓர் அழகியப் பாடம்.

கடவுளுக்கு முன், அவரது அளவற்ற படைப்புக்கு முன், நாம் யார் என்பதை உணர்ந்தால், அவரை நம் அறிவுக்குள் அடக்கிவிடும் முயற்சிகளும், அடக்கிவிட முடியும் என்ற மமதை நிறைந்தக் கனவுகளும் விலகி, உண்மைக் கடவுளை உய்த்துணர முடியும். அத்தகைய ஒரு மனநிலையில், தாவீது கூறும் சொற்கள், 8ம் திருப்பாடலில் இடம்பெற்றுள்ள. வானங்களைக் கடந்து, இறைவனின் பெயர் மாட்சியுடன் விளங்குகிறது என்பதை முதல் வரியில் கூறிய தாவீது, தொடர்ந்து, உமது கைவேலைப்பாடாகிய வானத்தையும் அதில் நீர் பொருத்தியுள்ள நிலாவையும் விண்மீன்களையும் நான் நோக்கும்போது, மனிதரை நீர் நினைவில் கொள்வதற்கு அவர்கள் யார்? மனிதப் பிறவிகளை நீர் ஒருபொருட்டாக எண்ணுவதற்கு அவர்கள் எம்மாத்திரம்? (தி.பா. 8:3-4) என்று, தன்னிலை உணர்ந்து கூறுகிறார்.
தாவீது இயற்றிய இத்திருப்பாடலின் வரிகளை, அரசுத்தலைவர் Roosevelt அவர்கள், வழிபாட்டில், பாடல்களாக பலமுறை கேட்டிருக்கவேண்டும். அதன் விளைவாக, அவர், இறைவனின் அளவற்ற மாட்சியையும், தன் உண்மை நிலையையும் புரிந்துகொண்டவராக வாழ்ந்துவந்தார்.

இறைவனின் மேன்மைக்கு முன், மனிதர்கள் ஒன்றுமில்லை என்பதைக் கூறும் அதே மூச்சில், தாவீது, மனிதப்படைப்பை வியந்துபேசுகிறார்: மனிதப் பிறவிகளை, கடவுளாகிய உமக்குச் சற்றே சிறியவர் ஆக்கியுள்ளீர்; மாட்சியையும் மேன்மையையும் அவர்களுக்கு முடியாகச் சூட்டியுள்ளீர். (தி.பா. 8:5)

பரந்து விரிந்த வான்வெளியின் அழகைப் புரிந்துகொள்ள, விவிலிய விரிவுரையாளர் Steven Cole அவர்களின் எண்ணங்கள், சென்ற விவிலியத்தேடலில், நமக்கு உதவியாக இருந்தன. 8ம் திருப்பாடலையொட்டி, Cole அவர்கள் வழங்கியுள்ள அவ்விரிவுரையில், மனிதப்படைப்பைக் குறித்தும் அழகான எண்ணங்களைப் பதிவுசெய்துள்ளார். ஒவ்வொரு குழந்தையின் படைப்பிலும், இறைவனின் புதுமை தொடர்கிறது என்பதை Cole அவர்கள் அழகுற விவரித்துள்ளார்.

மருத்துவராகவும், எழுத்தாளராகவும் விளங்கும் Geoffrey Simmons அவர்கள் எழுதிய "Billions of Missing Links" என்ற நூலில், தாயின் உதரத்திலிருந்து, ஒரு குழந்தை வெளியேறும் தருணத்தில் நிகழும் விந்தைகளை விளக்கிக்கூறியுள்ளார். இந்த விளக்கத்தின் சுருக்கத்தை, Cole அவர்கள், 8ம் திருப்பாடலின் விரிவுரையில் இவ்வாறு பதிவு செய்துள்ளார்:
கருவுற்ற ஒன்பதாம் மாதத்தில், குழந்தையின் மூளையிலிருந்து புறப்படும் ஒரு தூது, தன் தாயின் உதரத்திற்கு சொல்லும் செய்தி: 'நேரமாகிவிட்டது. நான் புறப்படத் தயார்!'. குழந்தையின் இதயம், நுரையீரல், உணவுப்பாதையின் கூட்டமைப்பு, நரம்பு மண்டலம், மூளை ஆகிய அனைத்தும், இனி தாங்கள் தனித்து இயங்கமுடியும் என்ற செய்தியை உணர்த்துகின்றன. குழந்தையின் மண்டையோடு மட்டும் இன்னும் முழுமையாக, இறுக்கமான முறையில் பொருத்தப்படாமல் உள்ளது. தாயின் பிறப்பு உறுப்பின் வழியே குழந்தையின் தலை வெளியேறுவதற்கு ஏற்ற வகையில், அவ்வாறு பொருத்தப்படாமல் இருக்கும் மண்டையோடு, சுருங்கி விரியும் வண்ணம் அமைந்துள்ளது.
தாயின் உதரத்திலிருந்து வெளியேறும் வரை, குழந்தை தானாகவே சுவாசிப்பதில்லை. அது, வெளியேறுவதற்கு முன்னர், அன்னையின் உதரத்தில் சுவாசிக்க ஆரம்பித்தால், மூச்சடைத்துப்போகும்; வெளியேறியபின், தாமதமாகச் சுவாசித்தால், மூளைப்பகுதி பாதிக்கப்படும். தாயிடமிருந்து பிரிந்து, இவ்வுலகில் அடியெடுத்துவைக்கும் குழந்தைக்கு, தாயின் உடலிலிருந்து ஊட்டச்சத்து, தொப்புள்கொடி வழியே, இறுதியாக ஒருமுறை அனுப்பப்படுகிறது. இவ்வாறு, அனைத்து வியப்பான அம்சங்களும் இணைந்து, ஒரு புதிய உயிரை இவ்வுலகிற்கு கொணரும் புதுமையைப் புரிகின்றன.

குழந்தைப் பிறப்பைக் குறித்து, மருத்துவர் Simmons அவர்கள் தொகுத்துள்ள விவரங்களை, இவ்வாறு சுருக்கிக்கூறும் விவிலிய விரிவுரையாளர் Cole அவர்கள், இறுதியில், "பிறக்கும் ஒவ்வொரு குழந்தையும் எழுப்பும் அழுகுரல், உண்மையிலேயே, இறைவனின் சக்தியை அறிக்கையிடும் குரல்" என்று தன் விரிவுரையில் வலியுறுத்திக் கூறியுள்ளார்.

இவ்வாறு, இறைவன், தன்னைவிட, 'சற்றே சிறியவராக' உருவாக்கும் மனிதர்களை, படைப்பு அனைத்திற்கும் பொறுப்பாளராக நியமித்துள்ளார் என்பதை, தாவீது, 8ம் திருப்பாடலின் அடுத்த வரிகளில் விவரித்துக் கூறியுள்ளார். படைப்பின் மீது, மனிதர்களாகிய நமக்குத் தரப்பட்டுள்ள இப்பொறுப்பை, நாம் எவ்விதம் செயல்படுத்தியுள்ளோம் என்பதை, அடுத்தத் தேடலில் சிந்திப்போம்.


No comments:

Post a Comment