14 February, 2017

விவிலியத்தேடல் : வேதனை வேள்வியில் யோபு – பகுதி 7

Theodicy on Trial

2004ம் ஆண்டு, தமிழகக் கடற்கரைப் பகுதிகளைத் தாக்கிய சுனாமி, நம் நினைவுகளில் இன்னும் பதிந்திருக்குமென்று நினைக்கிறேன். கிறிஸ்மஸ் பெருவிழாவுக்கு அடுத்த நாள், டிசம்பர் 26, ஞாயிறு, திருக்குடும்பத் திருநாளன்று, வேளாங்கண்ணி திருத்தலத்தில், திருப்பலியை முடித்துவிட்டு கடற்கரைக்குச் சென்ற பல குடும்பங்களை, அந்த சுனாமி கடலோடு அடித்துச்சென்றது. திருத்தலம் சென்றவர்களுக்கு ஏன் இந்தக் கொடூரம்? திருத்தலங்களுக்குச் செல்லும் பலர், சாலை விபத்தால், நெரிசலால், இன்னும் பல காரணங்களால் உயிரிழப்பதைப்பற்றி கேள்விப்படும்போது, நம்மில் பல கேள்விகள் எழுகின்றன. பொதுவாகவே, துன்பங்களின் உச்சியில், கடவுளைத் தேடுவோம். அதுவும் புனிதத் தலங்களில் நடக்கும் விபரீதங்களுக்கு, கடவுள் கட்டாயம் பதில் சொல்ல வேண்டுமென பெரிதும் எதிர்பார்ப்போம். நாம் எதிர்பார்த்த பதில்கள் வராத நேரங்களில், நாமே சில விளக்கங்களைத் தருவோம்.

சுனாமி முடிந்து பல மாதங்கள் ஆனபின், என் நண்பர் ஒருவர், வேளாங்கண்ணியில் அன்று நடந்ததைப்பற்றி என்னிடம் பேசிக்கொண்டிருந்தார். ஞாயிற்றுக் கிழமைகளில், வேளாங்கண்ணியில், பல மொழிகளில் திருப்பலிகள் தொடர்ந்து நடந்தவண்ணம் இருக்கும். ஒரு மொழிக்கானத் திருப்பலி முடிந்தது. அந்த மொழியைச் சேர்ந்தவர்கள், கடற்கரைக்குச் சென்றனர். மற்றொரு மொழிக்கான திருப்பலி ஆரம்பமானது. அந்த நேரத்தில் சுனாமி தாக்கியது. ஒரு மொழி பேசுபவர்களைக் கோவிலுக்குள் அழைத்துச்சென்ற இறைவன், ஏன் வேறொரு மொழி பேசுபவர்களைக் கடற்கரைக்கு அழைத்துச் சென்றார்? என்ற கேள்வியை என் நண்பர் எழுப்பினார். நண்பரின் இந்தக் கூற்றை, இந்தக் கேள்வியைக் கேட்டு, எனக்குள் வருத்தமும், சிறிது எரிச்சலும் எழுந்தன. மொழிவாரியாக, கடவுள், பாகுபாடுகள் பார்க்கிறவரா? கடவுள் மேல் இப்படியெல்லாம் பழிகள் சுமத்த வேண்டுமா? நம் மனித அறிவைக்கொண்டு புரிந்து கொள்ளமுடியாத நிகழ்வுகளில், கடவுளைப் புகுத்திவிடுகிறோம்.

நாம் புரிந்துகொள்ள கடினமான உண்மைகளில் ஒன்று, மாசற்றவர்கள் அனுபவிக்கும் துன்பங்கள். நல்லவர்களுக்கு வரும் துயரங்களை விளக்க, மதங்களும், கலாச்சாரங்களும், பல்வேறு வழிகளில் முயன்று வருகின்றன. பழம்பெரும் கிரேக்க, உரோமானிய கலாச்சாரங்களில், தேவர்கள், மனிதர்களை பகடைக்காய்களாக, அல்லது, கைப்பாவைகளாக பயன்படுத்துவதே, மனித துன்பங்களுக்குக் காரணமெனக் கூறப்பட்டுள்ளது. "சிறுவர்கள் வைத்து விளையாடும் பூச்சிகளைப்போல், நாம் கடவுளர்களின் கைகளில் இருக்கிறோம்; அவர்கள் தங்கள் விருப்பம்போல் நம்மைக் கொல்கின்றனர்" என்ற வரிகள், ஷேக்ஸ்பியர் எழுதியுள்ள 'கிங் லியர்' (King Lear) என்ற நாடகத்தில் இடம்பெற்றுள்ளன.

நாம் சிந்தித்துவரும் யோபு நூலில், நீதிமானாகிய யோபுக்கு வந்த துயரங்களுக்குக் காரணம் தேடிய இந்நூலின் ஆசிரியர், இறைவனுக்கும், சாத்தானுக்கும் இடையே நிகழ்ந்த ஒரு போட்டியாக, ஏறத்தாழ ஒரு விளையாட்டாக, அதைச் சித்திரித்துள்ளார். இறைவனுக்கும், சாத்தானுக்கும் இடையே நிகழும் இப்போட்டி போலவே, இந்திய மரபில், அரிச்சந்திரன் கதையிலும், போட்டியொன்று இடம்பெறுவதை நாம் அறிவோம். அரிச்சந்திரன் நெறிதவறாதவர் என்று, இந்திரன் சபையில், வசிட்டர் கூறுகிறார். விசுவாமித்திரர் மறுக்கிறார். அரிச்சந்திரனைச் சத்தியம் தவறச் செய்கிறேன் என சபதம் செய்யும் விசுவாமித்திரர், செயலில் இறங்குகிறார்.

"இதோ! யோபுக்குரியவையெல்லாம் உன் கையிலே; அவன்மீது மட்டும் கை வைக்காதே"(யோபு 1:12) என்று, இறைவன் அனுமதி தந்ததும், சாத்தான் செயலில் இறங்குகிறான். யோபின் உடைமைகள், பணியாளர்கள், இறுதியில் புதல்வர், புதல்வியர் அனைத்தையும் சாத்தான் அழிக்கிறான். இந்த அழிவுகள், ஒன்றன்பின் ஒன்றாக, நான்கு செய்திகளாக, யோபை வந்தடைகின்றன.
இந்த நான்கு செய்திகளையும் ஆய்வு செய்யும்போது, அவை, மனிதர்களாலும், இயற்கையாலும் மாறி, மாறி வந்துசேர்ந்த அழிவுகள் என்பது தெளிவாகிறது. முதல் அழிவு, செபாயர் இனத்தவரால் உருவானது; இரண்டாவது அழிவு, 'விண்ணிலிருந்து விழுந்த நெருப்பு', அதாவது, மின்னல் வடிவில் வந்து சேர்ந்தது என்பதை உணர்கிறோம். மூன்றாவது அழிவு, கல்தேயரின் தாக்குதலால் வந்தது. இறுதியில், யோபின் புதல்வர், புதல்வியரின் மரணம் பற்றிய செய்தி, பெருங்காற்று பாலை நிலத்திலிருந்து வீசி, வீட்டின் நான்கு மூலைகளிலும் தாக்கியது. வீடு இளைஞர்கள் மேல் இடிந்து விழ, அவர்களும் மடிந்துவிட்டனர் (யோபு 1:19) என்ற வடிவில் யோபை அடைகிறது.

யோபின் புதல்வர், புதல்வியரின் மரணம் குறித்துப் பேசும், யூத மத குரு, ஹெரால்டு குஷ்னர் அவர்கள், ஒரு மகனை இழப்பது எவ்வளவு பெரும் துன்பம் என்பதை, தான் வாழ்வில் நேரடியாக உணர்ந்தவர் என்பதைச் சுட்டிக்காட்டுகிறார். இஸ்ரயேல் மக்கள் மத்தியில் நிலவிவந்த நம்பிக்கையின்படி, குழந்தைகள், பெற்றோரின் தொடர்ச்சியாகக் கருதப்பட்டனர். எனவே, பெற்றோரைத் தண்டிக்க விரும்பினால், குழந்தைகளைத் தண்டிப்பது ஏற்றுக்கொள்ளப்பட்ட கருத்தாக இருந்ததென்று கூறும் குஷ்னர் அவர்கள், இதற்கு ஓர் உருவகத்தையும் பயன்படுத்துகிறார். ஒருவரது கரங்கள் செய்த தவறுக்கு தண்டனையாக, அவர் முதுகில் கசையடி விழுவதுபோல், பெற்றோர் செய்த தவறுக்கு, பிள்ளைகள் தண்டிக்கப்படுவது கருதப்பட்டது.

மனிதர்களின் தாக்குதல், இயற்கையின் சீற்றம் என்ற வழிகளில் யோபுவின் வாழ்வில் இழப்புகள் உருவானதுபோல், நாமும், வாழ்வில், அடுத்தவரின் செயல்களால், அல்லது, இயற்கையின் விளைவால் இழப்புக்களை உணர்ந்துள்ளோம்.
இவ்வேளையில், தமிழ்நாட்டு மக்கள் ஒட்டுமொத்தமாக சந்தித்துள்ள இழப்புக்களை நம் மனங்கள் அசைபோடுகின்றன. சென்ற ஆண்டு, வரலாறு காணாத பெருவெள்ளத்தையும், இவ்வாண்டு வார்தா புயலையும் தமிழக மக்கள் சந்தித்தனர். இயற்கையின் இடர்கள் போதாதென்று, மத்திய அரசு கொணர்ந்த பணத் தட்டுப்பாடு, மாநில முதலமைச்சரின் மர்ம மரணம், தங்கள் அறவழிப் போராட்டத்தால் உலகை வியக்கவைத்த தமிழக இளையோர் மீது, காரணம் ஏதுமின்றி, காவல்துறையினர் மேற்கொண்ட கண்மூடித்தனமான வன்முறை, கடந்த சில நாட்களாக தொடரும் அரசியல் குழப்பம், கச்சா எண்ணெய் கடலில் கலப்பு என்று, தமிழக மக்களை வதைக்கும் துயரங்கள், மனிதர்களால் உருவான கொடுமைகள். இயற்கை இடர்களுக்கு எளிதில் விடைகள் கிடைக்காது என்பதை நாம் அறிவோம். ஆனால், மனிதர்களால் விளைந்துள்ள துயரங்களுக்கும் விடைகள் கிடைக்காமல் தமிழகம் நிலைகுலைந்திருப்பது, ஏற்றுக்கொள்ள முடியாத அவலம்.

இயற்கை வழியாகவும், மனிதர்கள் வழியாகவும், தன் உடைமைகளையும், உறவுகளையும் இழந்த யோபு, அத்துயரங்கள் நடுவிலும், "பாவம் செய்யவுமில்லை; கடவுள்மீது குற்றஞ்சாட்டவும் இல்லை" (யோபு 1:22) என்று முதல் பிரிவு நிறைவடைகிறது. யோபிடம் காணப்பட்ட இந்த உறுதி, இறைவனை பெருமையடையச் செய்கிறது, சாத்தானையோ, அடுத்த திட்டம் தீட்ட வைக்கிறது.
முதல் பிரிவில் சொல்லப்பட்டதுபோலவே, 2ம் பிரிவின் துவக்கத்திலும், இறைவன், தெய்வப் புதல்வர்களோடு இருந்த வேளையில், சாத்தான் அங்கு வந்து நின்றான். நேர்மையாளரான தன் ஊழியன் யோபைப் பற்றி சாத்தானிடம் பெருமையுடன் பேசினார், இறைவன். அங்கு தொடர்ந்து நிகழ்ந்ததை நாம் 2ம் பிரிவில் இவ்விதம் வாசிக்கிறோம்:

யோபு 2: 3-7
அப்போது ஆண்டவர் சாத்தானிடம், "என் ஊழியன் யோபைப் பார்த்தாயா? ... காரணமின்றி அவனை அழிக்க நீ என்னை அவனுக்கு எதிராகத் தூண்டிவிட்ட போதிலும், அவன் தன் மாசின்மையில் உறுதியாக நிலைத்துள்ளான்" என்றார்.
சாத்தான் மறுமொழியாக ஆண்டவரிடம், "தோலுக்குத் தோல்; எவரும் தம் உயிருக்காகத் தமக்கு உள்ளதெல்லாம் கொடுப்பார். உமது கையை நீட்டி அவனுடைய எலும்பு, சதைமீது கைவையும். அப்போது அவன் உம் முகத்திற்கு நேராகவே உம்மை இழித்துரைப்பது உறுதி" என்றான்.
ஆண்டவர் சாத்தானை நோக்கி, "இதோ! அவன் உன் கையிலே! அவன் "உயிரை மட்டும் விட்டுவை" என்றார்.
சாத்தானும் ஆண்டவரின் முன்னின்று புறப்பட்டுப் போனான். அவன் யோபை உள்ளங்கால் முதல் உச்சந்தலைவரை எரியும் புண்களால் வாட்டி வதைத்தான்.

"உள்ளங்கால் முதல் உச்சந்தலைவரை" கொடிய துன்பத்தை அனுபவிக்கும் யோபுவிடம் அவரது மனைவி, இறைவனைப் பழிக்கத் தூண்டுகிறார். அவருக்கு யோபு கூறும் பதில் உன்னத எண்ணங்களை விதைக்கின்றன:
யோபு 2:9-10
அப்போது அவரின் மனைவி அவரிடம், "இன்னுமா மாசின்மையில் நிலைத்திருக்கிறீர்! கடவுளைப் பழித்து மடிவதுதானே?" என்றாள். ஆனால் அவர் அவளிடம், "நீ அறிவற்ற பெண்போல் பேசுகிறாய்! நன்மையைக் கடவுளிடமிருந்து பெற்ற நாம் ஏன் தீமையைப் பெறக்கூடாது?" என்றார். இவை அனைத்திலும் யோபு தம் வாயால் பாவம் செய்யவில்லை.

தன் உடமைகள், உறவுகள் அனைத்தையும் இழந்த வேளையில், "ஆண்டவர் அளித்தார்; ஆண்டவர் எடுத்துக்கொண்டார். ஆண்டவரது பெயர் போற்றப்பெறுக!" (யோபு 1: 21) என்ற உன்னத வார்த்தைகளைச் சொன்ன யோபு, தன் உடலில் வேதனையை அனுபவித்த வேளையில், "நன்மையைக் கடவுளிடமிருந்து பெற்ற நாம், ஏன் தீமையைப் பெறக்கூடாது?" (யோபு 2:10) என்ற கேள்வியின் வழியே, துயரங்களை ஏற்றுக்கொள்வதற்கு, உயர்ந்ததோர் கண்ணோட்டத்தை வழங்கியுள்ளார்.
யோபின் மனைவியை எளிதில் அமைதிப்படுத்திய யோபு, அடுத்ததாக, எலிப்பாசு, பில்தாது, சோப்பார் என்ற தன் மூன்று நண்பர்களைச் சந்திக்கிறார். இச்சந்திப்பில் பரிமாறப்படும் எண்ணங்கள், யோபு நூலின் ஒரு முக்கிய பகுதியாக அமைந்துள்ளது. இந்தப் பகுதியில் நம் தேடல் பயணம் இனி தொடரும்.


No comments:

Post a Comment